Friday, November 2, 2018

திருவரங்கத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ( ஆடி 18)

திருவரங்கத்தில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ( ஆடி 18) கொண்டாடப்படும் விதம்

நித்தியப்படி பகலில் ஏற்பட்ட பொங்கல் பெரிய அவசரம் என்ற இரண்டுகால திருவாராதனங்களையும் தளிகையையும் கண்டருளி காலையில் புறப்பட்டு, வழிநடை இளகல் உபயங்களை அமுது செய்துகொண்டு மத்தியானம் பெருமாள் தென்திருக்காவேரிக்கு எழுந்தருளுவார். அங்கு திருவாராதனம், தளிகை நிவேதனம் - முதலியவை ஆனபிறகு தாலிப் பொட்டையும் கூரைப் புடவையையும் நம்பெருமாள் திருமுன்பே வெள்ளித் தட்டில் வைத்தெடுத்துக் கொண்டு, யானைமேல் முதலில் ஸ்தாநீகரும், பின்னால் சாமரத்தோடு ஊழியக்காரரும், பிரஸாதத்தோடு பின்னால் நாச்சியார் பரிகரமும், திருப்பணியாரத்தோடு பின்னால் பணியாரக் காரருமாய்ப் புறப்பட்டுப் பிரவாஹத்திலிறங்கி, காவேரித் தாயாருக்கு தாலிப்பொட்டு கூரைப்புடவை, பிரஸாதம், திருப்பணியாரங்களை ஸமர்ப்பித்துத் திரும்புவார்கள். இரவு பெருமாள் புறப்பட்டு கொல்லம்பட்டரைத் தெரு  வழியாய் எழுந்தருளி வெளியாண்டாள் ஸந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு ஸந்நிதிக்கு எழுந்தருளுவார்.

ஆண்டாள் மாலை மாற்றல் வி்பரம்

நம்பெருமாள் ஆண்டாளுக்கு எதிரில் நிற்க, ஆண்டாளுடைய மாலையைக் களைந்து முதலில் நம்பெரு மாளுக்கு சாற்ற நம்பெருமாளுடைய மாலையையும் கஸ்தூரித் திருமண்காப்பு, சந்தனம் ஆண்டாளுக்கு  சாற்றுவது. ஆண்டாள் சூடிக் கொடுத்த நாய்ச்சியாராகையால் அவள் சூடிக்கொடுப்பதைப் நம்பெருமாள் சாற்றிக்கொண்டு பிறகு தன்னுடைய மாலையை அவளுக்கு சாற்றுகிறார். 

ஆண்டாள் தவிர மற்றை நாச்சியார்களில் மாலையைப் நம்பெருமாள் சாற்றிக்கொள்வதில்லை.  ஸ்ரீ ரங்க நாய்ச்சியார், உறையூர் நாய்ச்சியார்களுக்கு நம்பெருமாள் மாலை சாற்றுவ துண்டேயன்றி அவர்களுடைய மாலையைப் நம் பெருமாள் சாற்றிக்கொள்ளமாட்டார். மற்றை நாய்ச்சியார் களின் மாலையையும் நம்பெருமாள் சாற்றிக் கொண்டால் அவர்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்பட்ட பெருமை வெளிப்படாது.

ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று பெரியபெருமாளுக்குத் தைலம் சாற்றியதால் திருவடி சேவை கிடையாது. இன்று முதல் திருவடி சேவை உண்டு.

இந்த உத்ஸவத்திற்கு ‘கங்கோத்பத்தி’ உத்ஸவம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உத்ஸவத்தைப் பற்றிய குறிப்புகள் ஸ்ரீப்ரச்ந ஸம்ஹிதை 43-ம் அத்யாயத்தில் காணப் படுகின்றன. ஸ்ரீயினுடைய ப்ரச்சங்களுக்கு (கேள்விகளுக்கு) பகவான் சொல்லும் உத்தரமாயிருப்பதால் இந்தக் கிரந்தத்துக்கு ஸ்ரீப்ரச்ந ஸம்ஹிதையெனப் பெயராயிற்று.

நன்றி: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ