Wednesday, November 21, 2018

பஞ்ச த்வாரகா பகுதி 1

கண்ணன் காலடி பட்ட பஞ்ச் த்வாரகா பயணம் பகுதி 1
முதுமை எட்டிப்பார்க்கத்தொடங்கும் முன் நம் பாரதபூமியின் இதிகாச மாந்தர்கள் உலவிய ,ஆழ்வார் நாயன்மார் காலடி பட்ட ,இடங்களையும் இயற்கையின் அதியற்புத காட்சிகளையும் நிசப்தம் பூத்த பள்ளத்தாக்குகள்,பனிபடர்ந்த மலைகள் ,சுழித்தோடும் ஆறுகள் என ஆடுகள் போல் பயணக்குழுவினரின் பின் செல்லாது தனியே அனுபவிப்பதும், அனுபவங்களை பகிர்நது கொள்வதும் இனிய அனுபவம்
இனி....
கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்*

ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும்*

நாட்டிற்றலைப்பழியெய்தி உங்கள்நன்மையழிந்துதலையிடாதே*

சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கென்னையுய்த்திடுமின்.

இது ஆழ்வாரின் ஆவல்
அத்தகைய த்வாரகையை நாம் காண வேண்டாமா?

பஞ்ச் துவாரகா....  ஆங்கில Punch அல்ல! ஹிந்தி பஞ்ச்! அதாவது ஐந்து....  ஐந்து துவாரகைகள் – துவாரகா Beyt துவாரகா,டாகோர் ஶ்ரீநாத் ,கங்ரோலி ஆகிய ஐந்து இடங்களே பஞ்ச் துவாரகா என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்தில் மூன்று குஜராத் மாநிலத்திலும் ஸ்ரீநாத்ஜி கங்ரோலி ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்ளன.  பெரும்பாலானவர்கள் இந்த பஞ்ச் துவாரகா பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கடினமான பயணம் – ஒவ்வொரு இடத்திற்கும் இடையிலான தொலைவு சற்றே அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இப்பயணத்தை குறைந்த செலவில் (ஒருவருக்கு அதிக பட்சம் 8000/செலவில் )எளிமையான முறையில் மேற்கொள்ள எனது அனுபவம் உதவுமானால் நான் பாக்வானாவேன்
சென்னையிலிருந்து அகமதாபாத் செல்ல நவஜீவன் எக்ஸ்பிரஸ். தினமும் காலை 9.30 புறப்படுகிறது. சீனியர் டிக்கட் 600/ .மறுநாள் மாலை 6 மணிக்கு ஆமதாபாத். ஆனால் முதலில் டாகோர் த்வாரகாவை தரிசிக்க முடிவு செய்து மாமி அக்கா அத்திம்பேர்
கொண்ட எங்கள் நால்வர் குழு முன்னதாக ஆனந்த் ரயில் நிலையத்திலேயே மாலை 4 மணிக்கு இறங்கிக்கொண்டோம் அங்கிருந்து 250 ரூபாயில் ஆட்டோவில் பயணித்து டாகோர் த்வாரகா மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தோம் (30 கிமீ) . கோயில் அருகில் நிறைய தர்மசாலா எனப்படும் விடுதிகள் உடன் 500 க்கு கட்டிலுடன் நான்கு பேர் தங்கும் அறை கிடைத்தது.
கிராமிய சூழலில் அமைந்திருக்கும் அழகான கோவில்.  அஹமதாபாத் நகரிலிருந்து மும்பை செல்லும் NE-1 [National Expressway-1] வழியாகச் சென்றால் இங்கே சுலபமாகச் சென்றடைய முடியும். துவாரகாவில் வந்து வழிபடமுடியாத வயதானவருக்காக கிருஷ்ணபகவான் கோவில் கொண்டதாக ஒரு கதையும் உண்டு! இங்கே விசேஷமாக தங்கத்தில் துலாபாரம் இருக்கிறது.
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை திரை போட்டு கண்ணனை விதவிதமாக அலங்கரித்து தரிசிக்க விசாலமான ஹாலில் கிடைக்கிறது. கோயிலை சுற்றி நிறைய ஸ்வீட் கடைகள். கோயிலின் கட்டுப்பாட்டிலுள்ள உணவு விடுதியில் ரூ 35/ க்கு unlimited meals. பக்தியால் மனமும் பயணக்களைப்பின் பின்னர் வயிறும் நிறைகிறது.
          தொடரும்