Friday, November 2, 2018

இமயத்தின் மடியில் பகுதி 13

venkatesan v: 😎இமயத்தின் மடியில் ...பத்ரி நோக்கி பகுதி 13..

சமோலியிலிருந்து  ஜோஷிமட் நோக்கி  ஜீபபில் பயணிக்க ஆரம்பித்தோம் .இங்கிருந்தே பத்ரி செல்லும் ஆபத்தான பாதை தொடங்குகிறது.மலைச்சாரல்கள்; பனிச்சிகரங்கள்; அடர்ந்த காடுகள்; மெல்லிய கீற்றுகளாக மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள்; சிற்றோடைகள்; சில இடங்களில் நிதானமாகவும், சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் ஓடிவரும் ஆறுகள்; வளைந்து நெளிந்து போகும் சாலை; பயணிப்பதற்குச் சவாலாக இருக்கும் மண்சரிவு மிகுந்த ஆபத்தான இடங்கள்; சில இடங்களில் பனிப்பாறைகளுக்கு அடியிலிருந்து ஊற்றெடுத்து வரும் நீர்; என்று அருமையான இயற்கைக் காட்சிகள்

சில இடங்களில் நீர்வீழ்ச்சிகள் சாலையிலும் குறுக்கிட்டு செல்கின்றன. அவ்விடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் எதிர் எதிரில் வாகனங்கள் சந்திக்கும்போது இருபக்கத்து ஓட்டுனர்களுக்கும் நல்ல புரிதல் ஏற்படுவது அவசியம். அதற்கு ஏற்றார்போல் இந்த அபாயம் மிகுந்த சாலையில் ஓட்டும் ஓட்டுனர்கள் நிதானமாகவும், ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடனும், மிகவும் திறமையாகவும் ஓட்டுகிறார்கள். இப்பாதையில் அடிக்கடி பயணம் செய்யும் அனுபவம் வாய்ந்த பஸ், லாரி மற்றும் டிராவல்ஸ் கம்பெனி ஓட்டுனர்கள் நன்றாகச் சமாளித்து ஓட்டுகிறார்கள். ஆனால் அனுபவம் இல்லாமல் வருகின்ற ஓட்டுனர்கள் திணறித்தான் போகிறார்கள்.

நீர் வீழ்ச்சி குறுக்கிடும் ஓரிடத்தில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவர்கள் பாடு பெரும்பாடாகிவிட்டது. நீரினால் நிலம் அரிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வெறும் கூழாங்கற்களே இருந்தன. அந்தக் கூழாங்கற்கள் மீது இரு சக்கர வாகனங்கள் வழுக்கிக்கொண்டு விழுகின்றன. இறங்கித் தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. கூழாங்கற்களின் மேல் தள்ளுவதும் மிகவும் சிரமம். ஆகவே மிகவும் திணறிப்போனார்கள்.

சாலை செப்பனிடும் பணி நடந்துகொண்டிருந்த ஓரிடத்தில் மேடும் பள்ளமுமாக இருந்த சாலையின் மேல் தகரங்களை வரிசையாக வைத்து சற்றே சமன் படுத்தியிருந்தார்கள். அந்தத் தகரங்களின் மேல்தான் வாகனங்கள் செல்ல .வேண்டும்.

இங்குதான் எங்கோ பதனன்று மண் சரிவு ஏற்பட்டு 15000 பேர் சிக்கியதாக மகள் சொன்ன செய்தி அடி வயிற்றில் அமிலம் வார்க்க பத்ரி நாராயணனை ப்ரார்த்திக்கத் தொடங்கினேன்.இடையில் சென்ற முறை குளித்த கருட தீர்த்தம் வருகிறது.இப்போது வற்றியுள்ளது.5 மணிக்கு ஜோஷிமட் அடைந்தோம் வானத்து சூரியன் மலை அடுக்குகளில் மறையத்துவங்கும் கண்கொள்ளாக்காட்சி. இன்று அமர்ரான அப்துல் ரஹ்மான் கவிதை நினைவில் வருகிறது.வானத்துச்சூரியன்
வர்ணங்களின் தலைவன்
அதனால்தான்
அந்தி மயானத்தில்
அவன் சிதையின் அருகே
அத்தனை நிறங்களின் அனுதாபக்கூட்டம்.😩
உடன் தங்க நல்ல இடமும் குளிக்க வெந்நீரும் கிடைத்தது.2 கிமீ தூரத்தில் உள்ள பாடல் பெற்ற நரசிம்மர் கோயில் சென்றோம். 2000 கிமீக்கு அப்பால் இமயத்தின் உயரத்தில் நம் தென்கோடி தமிழில் திருமங்கையாழ்வாரின் பாசுரம் எழுதியிருப்பதைப்பார்த்து மனம் சிலிர்த்தது.வேறு எந்த மொழி மாநில பக்தரும் ஏற இயலாத அக்காலத்தில் ஆழ்வாரும் இராமானுஜரும் கேரளத்து சங்கர்ரும் கடும் சிரமங்களுக்கிடையில் வந்து மங்களாசாசனம் செய்ததை நினைத்து நாங்கள் பட்ட துயரெலாம் தூசென உணர்ந்து இறை உணர்வினில் கரைந்தோம்.

பக்தர்கள் எம்பெருமானிடமும், எம்பெருமான் பக்தர்களிடமும் அன்பு (ப்ரீதி) செய்யும் இடம் ஆகையால் 'திருப்பிருதி’ என்றும் அழைக்கப்படுகிறது ஜோஷிமட். இந்த திருத்தலத்தை 10 பாசுரங்களால் போற்றிப்  பாடியிருக்கிறார் திருமங்கையாழ்வார். அதில் முதல் 9 பாசுரங்கள் 'பிருதி சென்றடை நெஞ்சே’ என முடிகிறது.

ஜோஷிமட் என்பதை ஜோதிமட் எனவும் சொல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,150 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பத்ரிநாத் உள்பட பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் செல்லும் ஆரம்ப வாயிலாகவும் இது விளங்குகிறது.

ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட பீடங்களில் இதுவும் ஒன்று. ஜோஷிமட் ஆரம்பத்தில் 'கார்திகேயபுரா’ என்றே அழைக்கப்பட்டு இருக்கிறது.

பத்ரிநாத்துக்குச் செல்லும் பாதை தினமும் மாலை 4:30 மணியுடன் மூடப்பட்டு விடும். அதன்பிறகு இங்கே வந்து சேருபவர்கள், ஜோஷிமட்டில் தங்கியாக வேண்டும். வ

இங்கே இருக்கும் நரசிம்மர் மற்றும் வாசுதேவர் ஆலயங்கள் ஆதிசங்கரரால் கட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து மடத்தை ஸ்தாபித்திருக்கிறார் ஆதிசங்கரர். அவர், இங்கே ஒரு முசுக்கொட்டை மரத்தடியில் தவம் இருந்ததாகவும், அதன் பின்னர் ஞானம் பெற்று சங்கரபாஷ்யத்தை இயற்றியதாகவும் சொல்கிறார்கள்.

சிலர், ரிஷிகேஷில் இருந்து 190 கி.மீ. தூரத்தில், நந்தாகினி ஆறும் அலகநந்தா ஆறும் சங்கமிக்கும் நந்தப் பிரயாகையே திருப்பிருதி என்று சொல்கிறார்கள். நந்தப் பிரயாகையில் கோபாலனுக்குக் கோயில் ஒன்று இருக்கிறது.

பத்ரிநாத்துக்கும் வடக்கே இமயத்தில் வேறு எங்கோ திருப்பிருதி இருக்கிறது என்ற இன்னொரு கருத்தும் நிலவுகிறது.

ஜோஷிமட்டுக்கு 10 கி.மீ. தூரத்தில் தபோவனம் இருக்கிறது. இங்கே இயற்கையான வெந்நீர் ஊற்று உண்டு. தௌலிகங்கா என்னும் ஆற்றை இங்கிருந்து கண்டு மகிழலாம். இங்கிருந்து ஒளலி என்னும் இடத்துக்குச் செல்ல அமைக்கப்பட்டு இருக்கும் ரோப், ஆசியாவிலேயே மிகப் பெரியது.

ஜோஷிமட்டின் தெற்கில் திரிசூல் மலையும், வடமேற்கில் பத்ரி சிகரமும், வடக்கில் காமத் என்ற சிகரமும் பனிபோர்த்திக் காணப்படுகின்றன. கண்வ மகரிஷி இந்த க்ஷேத்திரத்தில் வசித்திருக்கிறார்.

ஸ்ரீபத்ரிநாராயணர் ஆதிசங்கரரின் கனவில் தோன்றி, தமக்கு இங்கே ஓர் ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டதாகவும், அதன்படியே ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் தலபுராணம் சொல்கிறது.

ஜோஷிமட்டில் நரசிம்மர் ஆலயமும் வாசுதேவர் ஆலயமும் புகழ்பெற்றவை. நரசிம்மர் ஆலயத்தில் இருக்கும் விக்கிரகம் பற்றி விசித்திரமான கருத்து ஒன்று நிலவுகிறது.

இந்த திருவுருவின் வலது கரம் நூலிழை அளவுக்கு மெலிந்து இருக்கிறதாம். அது ஒருநாள் முறியும் என்றும், அப்போது பத்ரிநாத் போகும் வழியில் இருக்கும் ஜெய் மற்றும் விஜய் என்னும் இரு மலைகள் இணையும் என்றும், பத்ரிநாதர் ஆலயத்தில் இருக்கும் மூலவர் மறைந்து, ஜோஷிமட்டுக்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் பவிஷ்ய பத்ரி என்னும் இடத்தில் கருநிற சாளக்ராமக் கல்லால் ஆன வடிவில் தோன்றுவார் என்றும் உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.

பத்ரிநாதர் ஆலயம் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படும்போது, பத்ரிநாதரின் திருவுருவம் நரசிம்மர் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இங்கே பத்ரி நாராயணரின் திருவுருவம் ஆராதிக்கப்படுகிறது.

நரசிம்மர் சாளக்ராமக் கல்லால் உருப்பெற்றிருக்கிறார். நரசிம்மர் நடுவிலும், அவருக்கு வலப் பக்கத்தில் பத்ரி நாராயணர், குபேரர், சண்டிதேவி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இடப்பக்கம் கருடர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர், விநாயகர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கருவறையை, 'நரசிம்மத்வார்’ என்கிறார்கள்.

இந்த நரசிம்மர் ஆலயத்துக்கு மிக அருகிலேயே வாசுதேவர் ஆலயம் இருக்கிறது. இங்கே கருவறையில் வாசுதேவர் என்ற திருநாமத்தோடு, சதுர்புஜங்களோடு நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஊர்வசிதேவி ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். நடனமாடும் விநாயகர், பிரம்மா, இந்திரன், சந்திரன் விக்கிரகங்களும் இருக்கின்றன.நரசிம்மரை தரிசித்த பின் சங்கர மடம் சென்றோம்.அங்கு ஜோஷிமட் சங்கராச்சாரியார் தவம் செய்த குகையும் ஸ்படிக லிங்கமும் தரிசித்தோம்.🙏🏾🙏🏾நான் முன்னரே ஒரு ஓட்டலில் இட்லி தோசா கிடைக்கும் என எழுதி வைத்திருந்தை சொல்லி அங்கு செல்லலாம் என்றேன்.இவரோ வழியில் பார்த்த சீக்கிய கல்சாவில் இன்று இரவு விருந்து வித்யாசமாய் சாப்பிடலாம் ( திருவாதிரைக்களி போல ஒன்று சூடாகத்தருவார்கள) என அழைத்துச்சென்றார். ஆனால் அதே சப்பாத்தி. இரண்டு கைகளை ஏந்தி வாங்கிக்கொள்ள வேண்டும். கடைசியில் அங்கு தயார் செய்வதும் தட்டுக்களை கழுவுவதும் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் இறைத்தொண்டாக செய்கிறார்கள் .முன்னாள் ஜனாதிபதி ஜயில்சிங் கூட ப்ராயச்சித்தமாக தட்டுக்களை கழுவினார் இங்கு சாப்பிட்டது நம் பாக்கியம் என்றெல்லாம் சொல்லி என் இட்லி கனவைக் கலைத்தார்.நாளை பத்ரி நாராயணனின் தரிசனம் எளிதாய் கிடைக்குமா?. பத்ரி சின்ன ஜீயர் மடத்தில் அரிசி சாதம் கிடைக்குமா என்ற கனவுகளுடன் உறங்கச்சென்றோம்.😄😄🙏🏾