சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில். இக்கோயில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாம் நந்தி வர்ம பல்லவ அரசினால் நிர்மாணிக்கப்பட்டது. வியாசர் உள்ளிட்ட மா முனிவர்கள் இங்குத் தவம் செய்து வரம் பெற்ற தலமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்ட தலமாக மாதவரம் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நின்று திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார் இங்குள்ள உற்சவர் கரிவரதராஜ பெருமாள் என்றும் தாயார் கனகவல்லி என்று திருப்பெயருடனும் உள்ளார்.
இத்தல உற்சவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது. காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளையும், திருப்பதி சென்று சீனிவாசன் பெருமாளையும் தரிசிக்க முடியாதவர்களுக்கு இரண்டாம் நந்தி வர்ம பல்லவ அரசனால் இவ்வாலையம் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கு ஆண்டாள், இராமானுஜர், சுதர்சனார், நரசிம்மர், தன்வந்திரி பகவான், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் சன்னதிகளும் உள்ளன. ஆலயத்தின் முன்பு 21 அடி உயரத்தில் சுதைச் சிற்ப ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்குள்ள பெருமானின் தரிசிப்பதற்கு முன்பு சுதைச் சிற்ப ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும்.
பின்னர் ஆழ்வார்கள், ஆச்சாரியார்களான சேவை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோர் வணங்கி ஆண்டாள் கனகவல்லி தாயாரை வழிபட்ட பின்பே கரிவரதராஜ பெருமாளை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இக்கோயிலில் வைகாசி அஸ்தி நட்சத்திரம் முடியும் முன் பத்து நாட்கள் விழா நடைபெறும். தை, ஆடி வெள்ளிக்கிழமை, திருமஞ்சனம் ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி, பங்குனி, உத்திர திருக்கல்யாணம், தமிழ் வருடப் பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, கருட சேவை ,மாசி மக தீர்த்தவாரி போன்றவை விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment