மூன்று தலைமுறை-84
அன்று ஞாயிற்றுக்கிழமை. அன்றுதான் மெரினா பீச்சுக்கு போக விசுவும், ராகினியும் திட்டமிட்டிருந்தார்கள். மாலை 4 மணிக்கு தி. நகர் பஸ் ஸ்டாண்டில் விசுவும் ராகினியும் பஸ் பிடித்து,நாலே முக்காலுக்கு மெரினா பீச்சின் நுழைவாசலை அடைந்தார்கள். சரியாக 5 மணிக்கு மேகி வந்தாள். மூவரும் கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தார்கள். கொஞ்ச தூரம் நடந்ததும் சரியான இடத்தை பார்த்து மூவரும் அமர்ந்து கொண்டார்கள். மாலை நேர கடல் காற்று உடலையும்,மனதையும் வருடிச் சென்றது. மேகியிடம் விசு அவள் போன ட்ரிப்பை பற்றி கேட்டான்.மிகவும் நன்றாக இருந்ததாகவும் சுதாகர் எல்லா இடத்தையும் பற்றி மிக விளக்கமாக எடுத்துச் சொன்னதாகவும் கூறினாள் மேகி. சுதாகர் பெயரை சொல்லும் போது அவள் கண்ணில் ஒரு மின்னல் தெரிவதை விசு பார்க்க தவறவில்லை. பின்னர் விசு, ராகினியையும், மேகியையும் பார்த்து "நான் கடல் அலைகளில் காலை நனைத்து விட்டு வருகிறேன். நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள்" என்று கூறி கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஏற்கனவே விசுவும், ராகினியும்
போட்டிருந்த பிளானில் இது முதல் கட்டம்.ராகினி மேகியை பார்த்து "என்ன மேகி. எப்போது கல்யாணம் செய்து கொள்வதாக இருக்கிறாய்"என்று கேட்டாள்.அதற்கு மேகி "செய்து கொள்ளலாம். ஆனால் சரியான பையன் கிடைப்பானா என்று பயமாக இருக்கிறது" என்றாள்.
"என்ன மாதிரி பையனே நீ மனதில் நினைத்து இருக்கிறாய் என்று கூற முடியுமா" என்று கேட்டாள் ராகினி. "மிகவும் நட்பாக எல்லோரிடமும் பழகுவனாகவும், எளிமையாக பேசுபனாகவும் இருக்கவேண்டும். பணம் படைத்தவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தென்னிந்தியா கலாசாரத்தில் ஊறியவனாக இருக்க வேண்டும்" என்றாள் மேகி.
"அப்படி என்றால் நீ ஒரு இந்தியனைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள் ராகினி. அதற்கு மேகி "அதில் என்ன இருக்கிறது. என்னை நன்றாக பார்த்து கொள்ள கூடியவனாக இருந்தால் எனக்கு ப்ராப்ளம் இருக்காது.
மேலும் அவன் என்னுடைய தாய் தந்தை இருவரையும் எங்களுடனே இருக்க அனுமதிக்க வேண்டும்.அதேபோல் அவனுடைய தாய் தந்தையரையும் நான் வைத்து பராமரிப்பேன். இன் ஷார்ட் திருமணம் முடிந்ததும் ஒரு கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றாள்.இதைக்
கேட்ட ராகினி "சபாஷ்.இதுபோன்று உன் எண்ணத்திற்கேற்ப பையன் கிடைக்க வேண்டுமே என்று தான் எனக்கு கவலையாக இருக்கிறது" என்றாள்.பிறகு நேராக விஷயத்துக்கு வர எண்ணிய ராகினி மேகியை பார்த்து "சுதாகரை பற்றி நீ என்ன நினைக்கிறாய்" என்று கேட்டாள்.திடீரென ராகினி சுதாகர் பெயரை சொன்னதை கேட்டு திடுக்கிட்ட மேகி ராகினியிடம் "சுதாகரை பற்றி நான் நினைக்க என்ன இருக்கிறது" என்றாள். "இல்லை. இல்லை.நீ சொன்ன குவாலிபிகேஷன் எல்லாம் சுதாகரிடம் இருக்கிறது என்று நினைக்கிறாயா" என்றாள் ராகினி. இதற்கு மேகி பதில் சொல்லவில்லை. தலையை குனிந்து கொண்டாள். "மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாமா" என்றாள் ராகினி. கன்னம் சிவந்த மேகி
" எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆமாம் இதை தெரிந்து கொள்ளத்தான் கணவனும் மனைவியும் என்னை பீச்சுக்கு வர வழித்தீர்கள் போலிருக்கிறது" என்று கூறி முகத்தில் பொய் கோபம் காட்டினாள் மேகி. ராகினி மேகியிடம் "இப்போது நான் நேராக உன்னிடம் சப்ஜெக்ட்டுக்கு வந்துவிடுகிறேன். சுதாகர் உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்றால் நீ அவனை ஏற்றுக்கொள்வாயா"
என்று கேட்டாள். இதற்கு மேகி"இனிப்பு கிடைத்தால் வேண்டாம் என நான்சொல்வேனா?" என்று பட்டவர்த்தனமாக கூறினாள். ராகினி
"நீ சுதாகரை கல்யாணம் செய்து கொண்டால் அவனை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று விடுவாயா அல்லது இந்தியாவிலேயே இருப்பாயா" என்று கேட்க, மேகி
"ராகினி. என் அப்பாவிற்கு மட்டுமில்லாமல் அம்மாவுக்கும்,எனக்கும் இப்போது இந்தியா பைத்தியம் பிடித்து விட்டது.என் அப்பா இருக்குமிடத்தில் தான் என் அம்மாவும் இருப்பாள். என் பெற்றோர்கள் இங்கு இருக்கும் போது என்னுடைய உட்பீயும் இந்தியராக இருக்கும் பட்சத்தில் நான் ஏன் அமெரிக்காவில் வசிக்க நினைக்க வேண்டும்?" என்று கூறினாள்.
இவர்கள் இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது விசு இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். அவர்கள் இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டு
" இருவரும் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்" என்று கேட்டான். ராகினி
"நாங்கள் சம வயதுடைய பெண்கள். எங்களுக்கு பேசிக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும்.அதை உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்க முடியுமா?"என்று கேட்டாள்.அதைக் கேட்ட விசு "தங்கைக்கும், அவள் நாத்தனாருக்கு பேச நிறைய விஷயங்கள் இருக்கலாம்.அது பற்றி கேட்க எனக்கேது உரிமை" என்று நக்கலாக சொன்னான். மேகி "நாத்தனார்"என்றால் என்ன உறவு. மறந்துவிட்டேன்" என்று கேட்க விசு நாத்தனார் என்றால் என்ன உறவு என விளக்கினான்.
சிறிது நேரம் கடற்காற்றை அனுபவித்த பின்னர் மூவரும் கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலை ஒரு கை பார்த்துவிட்டு தான் கிளம்பினார்கள். மேகி வீட்டுக்கு போவதற்கு ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு, விசுவும் ராகினியும் பஸ் பிடித்து தி.நகர் சென்று அங்கிருந்து வீட்டுக்குச் சென்றார்கள். பஸ்ஸில் போய்க்கொண்டிரருந்தபோது தனக்கும் மேகிக்கு நடந்த சம்பாஷணையை முழுவதும் ஒரு வரி விடாமல் ராகினி ஒப்பித்தாள்.அதை கேட்ட விசு சந்தோஷ மிகுதியால் லேசாக விசில் அடிக்க ஆரம்பித்தான். வீட்டிற்கு சென்ற பிறகு வில்லியம்ஸ் க்கு போன் செய்து "மேகி வந்துவிட்டாளா?" என்று கேட்டான் விசு. அவள் வந்து ஒரு அரைமணி ஆகிறது என்ற வில்லியம்ஸ் சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் "என்ன விஷயம் பாசிட்டிவா" என்று மெல்லிய குரலில் கேட்டார். அருகில் மேகி இருக்கலாம். அதனால் தான் அவர் பூடகமாக கேட்கிறார் என்று நினைத்துக்கொண்ட விசு "எஸ்" என்று கூறினான்.பிறகு மீண்டும் அவரிடம் "மேற் கொண்டு என்னசெய்யலாமம் என்பதை நாளைக்கு நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்று கூறினான்.
மூன்று தலைமுறை-85
விசு திங்கட்கிழமை வேலையில் சேர்ந்தான்.அந்த வாரம் புதன் கிழமை லீவு எடுத்துக்கொண்டு ஆத்மாதானை பார்க்க ஆத்ம நாதனுடைய பேங்குக்கு கிளம்பினான்.
அவர் பேங்கிற்கு சென்று அங்கு முகப்பில் இருந்த "ஒருவரிடம் ஆத்மனாதன் சாரை பார்க்க வேண்டும்"என கூறினான்.விசுவை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. "நீங்கள் யாரென்று நான் அவருக்கு சொல்லட்டும்"என்று அவர் கேட்க "விசு என்று கூறுங்கள்" என்று சொன்னான். அந்த மனிதர் ஆத்மனாதன் கேபினுக்குள் நுழைந்து "சார். உங்களை பார்க்க வேண்டும் என்று விசு என்ற ஒருவர் வந்திருக்கிறார்" என்றார்.
"என்னப்பா இப்படி சொல்கிறாய். அவர் என் மாப்பிள்ளை அப்பா. உனக்கு தெரியாதா" என்று கூறி விட்டு பரபரப்பாக எழுந்து வெளியே வந்த ஆத்மநாதன் விசுவை பார்த்து "வாங்க.வாங்க.என்ன திடீர்னு.ஒரு போன் அடிச்சு இருக்கப்படாதா" என்றார். "பரவாயில்லை மாமா. நான் உங்களை சும்மா தான் பார்க்கலாம் என்று வந்தேன்"என்றான். அவனை அழைத்துக்கொண்டு தன் கேபினில் நுழைந்தார். ஆத்மநாதன்
" என்ன இந்த பக்கம்" என்று கூறிவிட்டு "என்ன சாப்பிடுகிறீர்கள். கோல்டா வேண்டுமா. அல்லது காப்பி வருவழைக்கட்டுமா" என்றார்.
"அதெல்லாம் அப்புறம்.நான் ஒரு முக்கியமான விஷயமாக உங்களிடம் பேச வந்திருக்கிறேன்" என்று கூறினான் விசு. ஆத்மனாதனுக்கு
ராகினி ஏதாவது ஏடாகூடமாக நடந்த கொண்டிருப்பாளோ என்று பயம் பிடித்துக்கொண்டது. விசு "உங்கள் முகத்தை பார்த்தால் நீங்கள் மிகவும் கவலையாக இருப்பதாக தெரிகிறது.அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை" என்ற விசு பின்பு வில்லியம்ஸ் தன்னிடம் சுதாகர்,மேகி மேட்டரைப்பற்றி கூறியதும், ராகினி மேகி பேசியது பற்றியும் விவரித்தான். சுதாகரைப் பற்றி விவரங்கள் தர முடியுமா என்று கேட்டான்.அதற்கவர் "சுதாகருக்கு கிட்டத்தட்ட 29 வயது ஆகிறது.நல்ல பையன்.கெட்ட வழக்கங்கள் ஏதுமற்றவன்.வேலையில் மிகவும் கெட்டிக்காரன்.தற்சமயம் ஆபிசர் கிரேட்பிரமோஷன் கிடைத்துள்ளது. சீர்காழி சொந்த ஊர். சிறுவயதிலேயே அவனது அப்பா தவறிவிட்டார். அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை.அம்மா என்றால் அவனுக்கு உயிர்" என்று கூறினார்.பின்பு விசு "நீங்கள் என்ன நெனைக்றேள் மாமா. அவன் மேகியை கல்யாணம் செய்வதற்கு ஒத்துக் கொள்வானா. அவனுக்கு இதில் விருப்பம் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறினான். "இருங்கள். நான் சுதாகர் சீட்டில் இருக்கிறானா என்று பார்த்துவிட்டு அவனை கூப்பிடுகிறேன்" என்று கூறினார் ஆத்மனாதன். பிறகு அவர் ஆபீஸ் ப்யூனை கூப்பிட்டு "சுதாகர் சார் சீட்டில் இருந்தா என்னை கொஞ்சம் பார்க்க வரச் சொல்" என்றார்.அடுத்த மூன்று நிமிடங்களில் அவருடைய அறை கதவு தட்டப்பட்டது. "நான் உள்ளே வரலாமா" என்று கேட்டுக்கொண்டே சுதாகர் உள்ளே நுழைந்தான்.விசுவை பார்த்தவுடன்"என்ன ஆச்சரியம் .விசு சார் வந்து இருக்கிறார். எப்படி இருக்கிறீர்கள் விசு சார்" என்று கேட்டான் சுதாகர். விசு எழுந்து சுதாகரின் கையை குலுக்கி "நான் நன்றாக இருக்கிறேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்டான். "நீங்கள் தான் பார்க்கிறீர்களே. நான் நன்றாகவே இருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினான் சுதாகர். ஆத்மனாதன்
" சுதாகர்.உட்கார். கொஞ்சம் பேசவேண்டும்" என்றார்.சுதாகருக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது. மாமனாரும், மாப்பிள்ளையும் உட்கார்ந்து கொண்டு தன்னிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார்களே என்ன விஷயமாக இருக்குமோ என்று நினைத்தான். விசு சுதாகரை பார்த்து " என்ன சுதாகர் .சவுத் இந்தியா ட்ரிப் மிகவும் பிரமாதமாக இருந்தது என்று எல்லோரும் சொல்கிறார்கள்" என்றான். "ஆமாம் சார்.வில்லியம் சார் குடும்பம் அதை மிகவும் ரசித்தார்கள்" என்றான்."மேகி கூட உங்களுடைய உதவியை மிகவும் பாராட்டினாளாமே" என்று விசு கூறும்போது மேகி என்ற சொன்னபோது கொஞ்சம் அழுத்த கொடுத்தான். மேகியின் பெயரை கேட்ட போது சுதாகர் முகத்தில் சிறு சலனம் தெரிந்தது.விசு உடனே சுதாகரை பார்த்து"சுதாகர். நீங்கள் மேகியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டான். "என்ன சார் இப்படி கேட்கிறீர்கள். மேகியுடன் ஒரு வாரம் சும்மா பழகி இருக்கிறேன். அவ்வளவு தான். மிக நல்ல பெண் .இந்திய கலாசாரத்தை மிகவும் மதிக்கிறார்இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். அழகான,அறிவுள்ள பெண். இந்த பெண்ணை மணப்பவன் மிகவும் பாக்கியசாலி என்று தான் நான் நினைக்கிறேன்" என்றான் சுதாகர். இதைக்கேட்ட விசு மெதுவாக "அந்த பாக்கியசாலி நீங்களாக இருக்க முடியுமா சுதாகர்" என்று கேட்டான். சுதாகருக்கு திக்பிரமை பிடித்தது போல் ஆகிவிட்டது. "என்ன விசு சார் திடீரென்று இப்படி கேட்கிறீர்கள்.எனக்கும் அவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்" என்றான் சுதாகர்.விசு அவனிடம்" சுதாகர் ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்.மேகிக்கு உங்கள் பால் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. உங்களுக்கும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருப்பதாக தெரிகிறது.அப்படி இருந்தால் மேற்கொண்டு நாம் இதைப் பற்றி சிந்திக்கலாம்" என்றான்.
"நடக்க முடியாததை சிந்தித்து என்ன சார் பிரயோஜனம்.என் சூழ்நிலையை பார்க்க வேண்டாமா.என் அம்மா இதற்கு ஒத்துக் கொள்வாளா என்று தெரியவில்லை" என்றான்.ஆத்மநாதன் இடைமறித்து "இதில் உனக்கு சம்மதமா சொல்லு.உன் அம்மாவை சம்மதிக்க வைப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். "எல்லோர் பிராப்ளத்தையும் சரி செய்யும் உன் பிராப்ளத்தை நான் சரி செய்ய மாட்டேனா"என்றார் ஆத்மநாதன். கடைசியாக சுதாகர் பிடி கொடுத்து "என் அம்மா ஓ.கே சொன்னால் எனக்கு ஓ.கே சார்" என்றான்.
No comments:
Post a Comment