Tuesday, July 4, 2023

மூன்று தலைமுறை 86 - 87

 மூன்று தலைமுறை-86

வீட்டிற்கு வந்த விசு வில்லியம்ஸுக்கு  போன் செய்து தான் ஆத்மநாதனை பார்த்துவிட்டு வந்ததையும்,சுதாகரிடம் தானும் ஆத்மனாதனும் பேசிய விவரத்தையும் கூறினான். வில்லியம்ஸ் நடந்ததை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டார்.

இனி தான் தைரியமாக மேகியிடம்  இந்த விஷயத்தை பற்றி பேச ஆரம்பிக்கப் போவதாக கூறினார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை 3 மணிக்கு ஆத்மநாதனும், சுந்தரியும் ஸ்கூட்டரில் சுதாகர் இருந்த மயிலாப்பூருக்கு சென்றார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் சுதாகர் அவர்களை பார்த்து "வாங்கோ" என கூப்பிட்டான். அவனுக்கு அவர்கள் இருவரும் வரப்போவது முன் கூட்டியே தெரியும். அவன் அம்மாவுக்கும் தெரியாது. அவர்களை பார்த்ததும் சுதாகரின் அம்மா "என்ன தம்பதி சமேதராக பெருமாளும், தாயாரும் மாறி வந்திருக்கேங்கோ. வாங்க. வாங்க"என்றாள் ஆத்மநாதன் அங்கிருந்த ஒரு சேரில் அமர,சுந்தரி  மாமியுடன் பேச பாயில் அமர்ந்து கொண்டாள். ஆத்மானாதனிடம் சுதாகர் "சார் தோ கடை வரைக்கும் போய்ட்டு வந்துட்றேன்" என்று கூறி விட்டு சென்றான். ஆத்மநாதன் சுதாகரின் அம்மாவிடம்"என்ன மாமி. எப்படி இருக்கீங்க" என்று கேட்டார்.அதற்கு மாமி "என்னத்த சொல்லறது. நீங்க தான் பாத்துண்டு இருக்கேளே. வயசாயிடுத்து. என்னால் தனியா ஒண்ணும் பண்ண முடியல . ஒரு பெண் பிள்ள கூட   இருந்தால் சரியா இருக்கும். நானும் நிறைய ஜாதகத்தை பார்த்துட்டேன்.இவனுக்கு  ஒண்ணும் தகய மாட்டேங்றது. பெருமாள் என் கஷ்டத்தை பார்த்து இன்னும் கண்டுக்காம இருக்கான்" என்று புலம்பித் தள்ளினாள். ஆத்மநாதன் "கவலைப்படாதீங்க மாமி. பெருமாள் உங்கள் ப்ராப்ளத்தை சரி பண்ண ஆரம்பித்துவிட்டார் நினைக்கிறேன்" என்று கூறினார் .மாமி வாயெல்லாம் பல்லாக "அப்படியா .என்ன விஷயம் சொல்லுங்கோ" என்றாள்  படபடப்புடன்."சுதாகர் கல்யாண விஷயமாக தான் பேச வந்திருக்கிறேன்" என்று ஆரம்பித்த ஆத்மநாதன் நான் சொல்லவந்தது அனைத்தையும் சொல்லி முடித்தார்.இதைக் கேட்டவுடன் மாமிக்கு மிகவும் கோபம் வந்தது .ஆத்மனாதன் சுதாகர் மேலுள்ள அதிகாரி என்பதால் கோபத்தை காட்டிக் கொள்ள முடியாமல் "என்ன நீங்க சொல்றேள். தெரிஞ்சுதான் பேசறேளா? ஒரு  வெள்ளைக்காரி இந்தாத்துக்கு  மாட்டு பொண்ணா வறதா?இது அடுக்குமா.இந்த அன்யாயத்துக்கு நீங்களும் உடந்தையா" என்று பொரிந்து தள்ளினாள்.ஆத்மனாதன் இதை கேட்டு அசரவில்லை.அவர்  மறுபடியும் அவளிடம்  மேகியைப்பற்றியும் அவளது  பெற்றோரைப்பற்றியும் விவரமாக எடுத்துச் சொன்னார்.மாமியை ஒரே செஷனில் கன்வின்ஸ்  செய்ய முடியும் என்று அவருக்கு தோன்றவில்லை. விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

"சரி மாமி.யோசித்து வெய்யுங்கோ. நாங்கள் போய்ட்டு வறோம்"என்று தம்பதிகள்  கிளம்பினார்கள் "இதல யோசிக்கிறதுக்கு  என்ன இருக்கு சொல்லுங்கோ" என்ற மாமி "காபி போடறேன்.சாப்டூட்டு போங்கோ" என்றாள்."ஆத்மனாதன்"ஆத்லேந்து கிளம்பச்சே காபி சாப்டூட்டு தான் வறோம்"என்றார்.பின்னர் மாமி சுந்தரியைப் பார்த்து "பூஜை ரூம்ல குங்குமம் இருக்கு. இட்டுண்டு போம்மா" என்று கூறினாள்.இரு வரும் வீடு திரும்பினார்கள். அவர்கள்  போய்விட்டார்கள் என்று தெரிந்தவுடன் சுதாகர் வெளியிலிருந்து உள்ளே வந்தான்.அவனை  பார்த்த அவன் அம்மா பிலு பிலுவென்று  பிடித்துக்கொண்டாள்.

"நண்ணா  இருக்குடா சுதா.இந்த பிராமணன் என்ன  சொல்லீட்டு  போறார் ,நோக்கு தெரியுமோ" என்று விவரத்தை கூறி "இதெல்லாம் நண்ணாவா இருக்கு" என்று கேட்டாள். "அவசரப்படாதே. கொஞ்சம் நிதானமா யோசிக்கலாம். நீயும் நிறைய பெண்கள்  ஜாதகத்தை பார்த்துட்ட. எனக்கு ஒண்ணும்  சரியாக அமையல.இந்தப் பெண் வெள்ளைக்கார பெண் என்பதால் இவளை வேண்டாம் என்று டக்குன்னு சொல்ல வேண்டாம்.கொஞ்சம்   யோசித்து நிதானமாக முடிவு எடுக்கலாம் "என்று கூறினான். அவனுக்கு தெரியும் அடித்து துவைத்தால்  கல்லும் கரையும் என. ஆபீஸில் எத்தனை பிராபளங்களை சால்வ் செய்திருக்கிறான்.

இந்த  பிராப்ளத்தையும் சரி செய்ய முடியும் என்று  நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஒருவேளை இது கொஞ்சம் அதிகமாக டைம் எடுக்கும் என்று நினைத்தான்.

மூன்று தலைமுறை- 87

ஆத்மநாதன்,விசு, சுதாகர் மூவரும்  மீண்டும் ஒருமுறை கூடி பேசினார்கள். சுதாகர் அம்மாவை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தார்கள். அதன்படி வில்லியம்ஸ் குடும்பத்தினர் ஜானின் வீட்டை விட்டு வெளியே வந்து மயிலாப்பூரில் சுதாகர் வீட்டுக்கு அருகில் ஒரு ப்ளாட்டை எடுத்துக்கொண்டு குடி வருவது என்றும், பின்பு மேகி நம்முடைய பழக்க வழக்கங்களையும், சமையல் முறைகளையும் மாமியிடம்  கற்றுக்கொள்ள வரும்படி செய்ய வேண்டும் என்றும் திட்டம் போட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமா இந்த நெருக்கத்தினால் மாமி படிந்து விடுவாள் என்பது அவர்கள் எண்ணம்.அதன்படி சுதாகர் வீட்டிற்கு எதிர்த்த  வீட்டு மாடியில் உள்ள ப்ளேட்டில்  வில்லியம்ஸ் குடும்பத்துடன் குடி வந்தார். இரண்டு நாள் கழித்து சுதாகர் தன் அம்மாவிடம் "நான் சொல்வதை நீ கொஞ்சம் பொறுமையாக கேட்க வேண்டும்" என்றான்."சொல்லு சுதா கேட்கிறேன்" என்றாள் மாமி."ஆத்மநாதன் சார் சொன்ன  என்ற அந்த வெள்ளைக்கார பெண் எதித்த  வீட்டுக்கே குடி வந்து இருக்கா" என்று சொல்லி அம்மாவை உற்றுநோக்கினான். சுதாகர் அந்த மாமியின் முகத்தில் கிலி தெரிந்தது.மாமி சமாளித்ததுக்கொண்டு "சரி அதுக்கு என்ன இப்போ" என்றாள்.

" இல்லம்மா. அந்த பொண்ணு உன்கிட்ட கொஞ்சம் நம்ப பழக்க வழக்கத்தையும், சமையலையும்  கத்துக்க ஆசைப்படறாள்" என்றான்.

"தோ பார்  சுதா. நீ சொல்றதெல்லாம் பாத்தா உனக்கு அந்த பொண்ணு மேல இஷ்டம்  இருக்குன்னு நெனைக்கிறேன். அப்படின்னா  அதை இப்பவே  சொல்லிடு.நான் எங்கேயாவது  போய் தனியாக இருந்துக்கிறேன்" என்று கடுகடுத்தாள் மாமி.உடனே சுதாகர் தன் அம்மாவின் கைகளைப் பிடித்து கொண்டு "அம்மா நான்,நீ வளர்த்த பையன். உன்ன மீறிக்கொண்டு நான் எதுவும் செய்ய மாட்டேன் .அவ உன்கிட்ட வந்து எல்லாத்தையும்  கத்துகட்டம்.அவ எப்படி பழகரா  பாரு.உனக்கு புடிச்சிருந்து நீ சரின்னா நான் அவளை பண்ணிக்கிறேன். இல்லேன்னா உன் வார்த்தையை மீறி நான் நடந்துக்கமாட்டேன்.  இது சத்தியம்" என்று கூறினான். மாமி கொஞ்சம் சமாதானமடைந்தாள். "சரிப்பா உன் இஷ்டம்"என்று கூறியவள்"சரி. சரி .அவளை வர சொல்லு பாக்கலாம்" என்று கூறினாள். "ஆனா சுதா.அந்த பொண்ணு பாஷை நேக்கு புரியாது.நான் பேசறது அவளுக்கு புரியாது. அவ என்கிட்ட என்ன கத்துக்க போறேன்னு நேக்கு தெரியலயடா. இதெல்லாம் தேவையாடா "என்று மறுபடியும் மாமி என்கிற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தது. "இல்லை அம்மா.அந்த பொண்ணு ரொம்ப சாமர்த்தியசாலி.நீ சொல்வதை ஜாடையிலேயே அவளை தெரிந்து கொண்டு விடுவாள்"என்று அவளை சமாதானப்படுத்தினான் சுதாகர்.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மேகி சுதாகர் வீட்டுக்கு புடவையில் உள்ளே நுழைந்தாள். நெற்றியில் மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தில் குங்குமப்பொட்டு,

தலை நிறைய  மல்லிகைப்பூ  வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே வந்த மேகியை பார்த்து மாமி ஒரு நிமிஷம்  ஆடித்தான் போய் விட்டாள்.

பெண் சித்திரத்தில் வரைந்தது மாதிரி இவ்வளவு அழகா இருக்கா.சுதாகர் பிடிச்சாலும் புளியங்கொம்பைத்தான் பிடிச்சிருக்கான் என்று மனதுக்குள் நினைத்த மாமி மேகியை பார்த்து

" வா" என்று  கூறுவதா வேண்டாமா  என்று புரியாமல் நின்றாள்.கிடு கிடுவென மேகி பிராமணப்பெண்ணைப்போல மாமிக்கு நமஸ்காரம் செய்தாள்.

"எழுந்துக்கோம்மா" என்றாள் மாமி.கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தன் வீட்டு பழக்கத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள் மாமி. பூஜை அறையை சுத்தம் செய்வது, சாமி விளக்கேற்றுவது, சமையல் செய்யும்போது கூட இருந்து பார்ப்பது,பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற சில காரியங்களை வெகு சுறுசுறுப்பாக கற்றுக்கொண்டாள் மேகி.சில நடைமுறைகள் விளங்காத போது  சுதாகரிடமோ,ராகினிக்கு போன் செய்தோ கேட்டு தெரிந்து கொள்வாள்.அடுத்த இரண்டு நாட்களில் மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது.அந்த வருடம் அசாத்ய குளிர்

(இதே போல் எல்லா வருஷமும் சொல்கிறோமோ?) விடியற்காலை எழுந்து மாமி மாதவப் பெருமாள்  கோவிலுக்கு சென்று சேவித்து  வரலானாள்.  அவள் கோவிலிலிருந்து வந்தவுடன்,புதிதாக வாங்கிய  டேப் ரெக்கார்டரில்  எம்.எல்.வி பாடிய திருப்பாவையை பிளே பண்ண  ஆரம்பித்தாள் மேகி.இது சுதாகருடைய பிளான். இதனால் மனதில்  சந்தோஷம் இருந்தாலும் அதை மாமி  வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்தாள்.இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக விடியற்காலை கோவிலுக்கு சென்ற மாமிக்கு,மூன்றாம் நாள் கோவிலிலிருந்த வந்தவுடன்   உடம்பு நடுங்க ஆரம்பித்தது. ஜுரம் வந்து விட்டது. மாமிக்கு குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்ல. படுத்த படுக்கையாய் ஆனாள்.முணுக ஆரம்பித்தாள்.உடல் முழுக்க வலி.

No comments:

Post a Comment