மூன்று தலைமுறை- 100
By N Krishnamurthy
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அனைவரும் லேட்டாக எழுந்திருந்தார்கள்.
பல் துலக்கி காபி சாப்பிட்டார்கள்.சித்தி இன்று என்ன சமைக்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது சதாசிவம் "சச்சு இன்னிக்கு ஏன் நம்ப மகாதேவ ஐயர் மெஸ்ஸுக்கு இவாளை அழச்சிண்டு போப்டாது" என்று கேட்டார்.சித்தி
"ரொம்ப நல்ல ஐடியான்னா. அப்படியே பண்ணிடலாம்" என்று கூறினாள். அவளுக்கு அன்று காலை சமையல் கிடையாது என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தது.காலையில் லைட்டாக பிரட் சாப்பிட்டார்கள்.கிட்டத்தட்ட 10 1/2 மணி அளவில் சதாசிவம் அவர்களை அவருடைய ஃபியட் காரில் ஏழாவது கிராஸில் இருந்த மகாதேவ ஐயர் மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றார். கல்லாவில் உட்கார்ந்திருந்த மஹாதேவ அய்யர் சதாசிவத்தை பார்த்து "என்ன ஓய். சதாசிவம்.ரொம்ப நாளாச்சு பாத்து. இப்பதான் வழி தெரிஞ்சிதா உமக்கு" என்று உரிமையுடன் கேட்டார்.
"என்ன கெஸ்ட்டெல்லாம் கூப்டுண்டு வந்து இருக்கீங்க போலிருக்கு ." என்றார். சதாசிவம் அவரிடம் "இது என் மச்சினி பொண்ணு.பக்கத்தில் இருக்கிறது அவ ஆத்துகார்.இப்பதான் புதுசா கல்யாணம் ஆச்சு.மெட்ராஸில் இருக்கா. பெங்களூருக்கு வந்து இருக்கா.நம்ப மெஸ் சாப்பாடு நண்ணா இருக்கும்னு சொல்லி அவாள கூட்டிண்டு வந்திருக்கேன்.என்ன நான் சொல்றது சரிதானே"என்று கூறினார்.மகாதேவ ஐயர் பதிலுக்கு "அப்படித்தான் எல்லோரும் பேசிக்றா"என்றவர் மகனைப் பார்த்து'முரளி. எல்லோருக்கும் இலை போடு' என்றார். 10 1/2 மணியே ஆயிருந்ததால் அதிக கூட்டம் இல்லை .அனைவருக்கும் இலை போடப்பட்டது.முரளியும்,மஹாதேவ அய்யரும் சேர்ந்தே கேட்டு கேட்டு பரிமாறினார்கள்.சாப்பாடு வீட்டு சாப்பாட்டை விட மிகவும் ருசியாக இருந்தது. வெண்டைக்காய் சாம்பார், வாழைக்காய் எரிசேரி, பச்சை பட்டாணி போட்ட முட்டைகோஸ் கறி,உளுந்து அப்பளாம், தக்காளி ரசம், பால் பாயசம்,கெட்டி பசுந்தயிர் என்று மெனு அமர்க்களமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் விசு மஹாதேவ அய்யரை பார்த்து" டேஸ்ட் மிகவும் பிரமாதமாக இருந்தது மாமா" என்று கூறினான். அதைக்கேட்ட மகாதேவ ஐயர் "நீங்களெல்லாம் விரும்பி சாப்பிட்டால் அதுவே நேக்கு போறும்" என்றார். சித்தப்பா ஐந்து சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து மகாதேவ அய்யரிடம் கொடுத்துவிட்டு "நாங்கள் விடை பெத்துக்றோம்" என்று கூறினார்."ஆஹா.பேஷா போயிட்டு வாங்கோ.அடிக்கடி வந்திண்டிருங்கோ.
எங்களை மறந்துட வேண்டாம் "என்றார் மகாதேவ அய்யர். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொண்டார்கள். சாயங்காலம் 5 மணிக்கு கிளம்பி அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்கும், சங்கர மடத்துக்கும் சென்று வந்தார்கள். கிளம்புவதற்கு முன்னால் விசுவும், ராகினியும் சித்தி,சித்தப்பாவை நமஸ்காரம் செய்தார்கள்.சித்தி சித்தப்பா இருவரும் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்தார்கள். மறக்காமல் 500 ரூபாய் பணமும் தாம்பூலத்தில் வைத்திருந்தார்கள். ராகினி ராமகிருஷ்ணனிடம் "ராம்கி. ஒழுங்கா படிக்கணம்"என்று கூறி அவனிடம் இருநூறு ரூபாய் கொடுத்தாள்."எதுக்கு குழந்தைகிட்ட பணத்தை கொடுக்கறே"என்றாள் சித்தி. "இருக்கட்டும்.அவனுக்கு ட்ரஸ் வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன். டைம் இல்லை" என்றாள் ராகினி
இரவு ஒன்பதரை மணிக்கு மெட்ராஸ் மெயிலில் விசு ரிசர்வ் செய்திருந்தான். ஸ்டேஷனுக்கு சச்சு, சதாசிவம் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் வந்திருந்தார்கள். விசு கம்பார்ட்மெண்டை கண்டுபிடிக்க,அதில் விசு,ராகினி ஏறி அமர்ந்தார்கள்.ட்ரெயின் கிளம்ப அரை மணி இருந்தது. அவர்கள் அருகில் அமர்ந்து கொண்ட சதாசிவம் தம்பதிகள் விசுவையும், ராகினியையும் பார்த்து "நீங்க ரெண்டு பேரும் வந்து இருந்தது ரொம்ப சந்தோஷம். அமெரிக்கா போறதுக்கு முன்னாடி சான்ஸ் கிடைச்சா மறுபடியும் நாலஞ்சு நாள் இருக்க மாதிரி வரணும்" என்று கூறினார்கள். ரயிலுக்கு க்ரீன் சிக்னல் போட்டதும் மூவரும் இறங்கிக்கொண்டார்கள்.ரயில் கிளம்பி வேகம் எடுக்க ஆரம்பித்தது.ராகினி சீக்கிரமே தூங்க ஆரம்பித்தாள்.கவலை நெஞ்சை அழுத்தியதால் விசு நெடு நேரம் தூங்கவில்லை.
வண்டி ஜோலார் பேட்டையை விட்டவுடன் உறக்கம் கண்களில் படர விசு படுத்தான். திங்கட்கிழமை காலை சரியாக ஐந்தரை மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷனை அடைந்தது மெட்ராஸ் மெயில். அங்கிருந்து பார்க் ஸ்டேஷன் போய்,சப் அர்பன் ட்ரெயின் பிடித்து மாம்பலம் செல்வதற்குள் மணி ஏழே கால் ஆகி விட்டது .விசு உடனே குளித்துவிட்டு, சந்தியா வந்தனம் செய்தான். பிரக்பாஸ்ட் முடித்து ஐ.ஐ.டி க்கு செல்வதற்கு ஆயத்தம் ஆனான் .
மூன்று தலைமுறை -101
விசு ஐ.ஐ.டி யில் அவனுடைய ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மாலை இரண்டு மணிக்கு ஒரு டெலிபோன் கால் வந்தது. ஆத்மநாதன் தான் போன் பண்ணியிருந்தார்.
"என்ன மாப்பிள்ளை.எப்படி இருந்தது பெங்களூர் எல்லாம். செமினார் நல்லபடியா போச்சா" என்றெல்லாம் கேட்டார் ."ஆமாம். மாமா .செமினார் சிறப்பா இருந்தது. சித்தி,சித்தப்பா ரொம்ப நண்ணா கவனிச்சிண்டா" என்று சொன்னான் விசு. ஆத்மநாதன்"ராகினி எல்லா விஷயத்தையும் சொன்னாள் மாப்பிள்ளை.கேட்க கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்களை மாப்பிள்ளையா அடஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு. யாருக்கும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம் இது.இதை மிஸ் பண்ணாம நீங்க இருக்கணும்னு கேட்டுக்றேன்"என்றார். விசுவுக்கு ஷாக்கடிச்ச மாதிரி இருந்தது.அதற்குள் எப்படி இவருக்கு நியூஸ் போய்விட்டது என்று யோசித்தான்.அனேகமாக ராகினி தான் வீட்டு டெலிபோன் மூலமாக சொல்லியிருக்க வேண்டும்.அப்படி சொல்லி இருந்தால் வீட்டில் எல்லோருக்கும் விஷயம் தெரிந்து இருக்கும்.இது என்னடா புது தொல்லை.அப்பா, அம்மாவிடம் மெதுவாக யோசித்து கூற வேண்டுமென்று இருந்தோமே. இப்படி போட்டு உடைத்து விட்டாளே ராகினி என்று அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது."சரி மாமா.நான் யோசிக்கிறேன். யோசித்து தான் இது முடிவு செய்யணும்" என்று கூறினான். ஆத்மநாதன் "இதல யோசிக்க ஒண்ணுமே இல்லை மாப்பிள்ளை. உங்கள் நிலையில் வேறு யாராக இருந்தாலும் உடனே இதற்கு ஒத்துக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்." சரி மாமா. நான் பாக்கிறேன்" என்று கூறி போனை வைத்து விட்டான். சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் காபி கொண்டு வந்த ராகினியிடம் விசு தனிமையில் "உன் அப்பாவிடம் விஷயத்தை சொல்லீட்டே போலிருக்கு" என்றான்."ஆமாம்"என்றாள் ராகினி."அப்போது நம் ஆத்தில் எல்லோருக்கும் தெரியுமா" என்றான் விசு. "நான் என்ன அவ்வளவு பெரிய முட்டாளா.ஆத்துலேந்து போன் பண்ணல. பக்கத்தில் உள்ள நாடார் கடைக்கு சென்று அங்கிருந்து தான் அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறினேன்" .இதைக்கேட்ட விசு நிம்மதி பெருமூச்சு விட்டான். பரவாயில்லை.இந்த மட்டிலும் புத்திசாலித்தனமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாள் என்று சந்தோஷப்பட்டான்.
அடுத்த சில நாட்களில் வீட்டில் சொல்ல துணிவு இல்லாமல் மனதுக்குள்ளே விஷயத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தான்.
விசு.காஞ்சிவரம் போயிருந்தபோது மகா பெரியவா அவனிடம் சூசகமாக "இங்கேயே இருக்கப் போகிறாயா. அல்லது அமெரிக்கா சென்று விடுவாயா" என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதிலைக்கேட்டு மகா பெரியவா"எல்லாம் ஆண்டவன் சித்தம்" என்று தெரிவித்ததை யோசித்துப் பார்த்தான்.என்ன தீர்க்கதரிசி அவர் என நினைத்தான். அந்த வாரம் முழுவதும் அப்படியே கழிந்தது.
பஞ்சு மட்டும் விசு பெங்களூர் திரும்பியதிலிருந்து அவன் முகம் வாட்டமாக இருப்பதை பார்த்தார்.அவனே விஷயத்தை கூறும் வரை அவனிடம் கேட்பதில்லை என தீர்மானித்தார்.விசு இது விஷயமாக வில்லியம்ஸிடம் ஆலோசிக்கலாமென்றால் அவரும் தற்சமயம் இந்தியாவில் இல்லை. "சரி, கணேசனிடம் இது குறித்து நாளை பேசலாம்" என்று விசு மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
No comments:
Post a Comment