Saturday, March 28, 2020

ஆசார்யா கொடுத்த அழுகல் பழம்

"கடவுளின் குரல்" -  தொகுப்பு: ஆர்.கே. லிங்கேசன்  

26 /12 /2019  குமுதம் இதழிலிருந்து... 

""ஆசார்யா கொடுத்த அழுகல் பழம்!""

கனிவுடன் பக்தர்களுக்கு அருளும் காஞ்சிமகான், தன்னை நாடிவரும் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை அவர்கள் சொல்லி வேண்டினாலும் சொல்லாமலே போனாலும் அன்போடு அனுகிரஹம் செய்த அனுபவங்கள் எத்தனை எத்தனையோ!

அவர் நடத்தும் ஒவ்வொரு திருவிளையாடலிலும் புரியாத விஷயமும் இருக்கும், புரியும்படியான எளிய விஷயமும் இருக்கும்.  எதைப் பற்றியும் யோசிக்காமல், எல்லாம் அவர் செயலே என்று நம்புகிறவர்களுக்கு வேண்டுதல் பலிக்கும்; வேண்டியவை கிடைக்கும்.

அந்த வகையில் திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும் மழலைச் செல்வத்தை மடிசுமக்கும் பாக்கியம் கிட்டாமல் வருந்திய ஒரு தம்பதியருக்கு அந்த மகான் அருளிய அனுகிரஹ அருளாடல் இது.

ஒரு சமயம் மகான், ஸ்ரீமடத்தில் இருந்தபோது, திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்த பிறகும் குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியர் மகானை தரிசிக்க வந்தனர்.

வரிசையில் வந்து பெரியவா முன் நின்ற அவர்கள் கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகியது. அமைதியாக அவர்களைப் பார்த்தார் மகான்.   கொஞ்ச நேரத்தில் கேவல் அழுகை நின்று, தங்கள் தேவை என்ன என்பதை மகானிடம் சொன்னார்கள் அவர்கள்.

குழந்தையில்லாக் குறையை அவர்கள் சொல்லக் கேட்டதும் குணக்குன்றான காஞ்சி மகான், அமைதியாக தன் அருகே நின்ற அணுக்கத் தொண்டரைப் பார்த்தார். கொஞ்சம் தள்ளி இருந்த பழத்தட்டு ஒன்றை அருகே நகர்த்தச் சொன்னார்.  பக்கத்தில் பழத்தட்டு நகர்த்தப்பட்டதும், அதில் இருந்த கணிகளுள் இரண்டு கொய்யாக்களை எடுத்தார். அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

வேறு எதுவும் சொல்லவில்லை மகான். ஆனால், மகான் பழங்களைத் தந்ததையே அவர் தங்களுக்கு அனுகிரஹம் செய்துவிட்டார் என்பதற்கு அடையாளமாக எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள் தம்பதியர்.

மிகுந்த பயபக்தியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்ற அந்தப் பெண், பழங்களைச் சாப்பிட எடுத்தபோது ஒன்று கொஞ்சம் காயாக மறுநாள் சாப்பிடலாம் என்ற நிலையிலும் மற்றொன்று சற்று அழுகலாகவும் இருந்தது. இரண்டையும் கைகளில் வைத்துக் கொண்டு யோசித்தவர், முதலில் அழுகலை விலக்கிவிட்டு நல்ல பழத்தை மட்டும் சாப்பிடலாம் என்று நினைத்தார்.

ஆனால் நடமாடும் தெய்வமான மகான் கொடுத்த கனிகளை அத்தனை எளிதாக அலட்சியப்படுத்த மனம் வரவில்லை அவளுக்கு. "பழம் எப்படி இருந்தாலும் அதைக் கொடுத்தவர் கருணைக் கடல்  அல்லவா?  அவர் அறியாமலா இப்படித் தந்திருப்பார்? ஆகவே இந்த இரண்டையும் சாப்பிடுவதுதான் சரி!" என்ற முடிவுக்கு வந்தார். முதலில் சற்று பாதித்த நிலையில் இருந்த அழுகலான பழத்தைச் சாப்பிட்டார்.  மற்றொன்றை மறுநாள் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார். 

ஆனால், அதன் பிறகு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பழத்தைத் தின்ற சிறிது நேரத்துக்குப் பிறகு அவருக்கு வயிறு கலக்கத் தொடங்கியது. தொடர்ந்து வயிற்றிலிருந்த அழுக்குகள் பலமுறை வெளிவந்தன. உடல் பலவீனமடைந்து அந்தப் பெண் கொஞ்சம் ஆடிப் போனார். அந்த அழுகல் பழம் காரணமாக இருக்கலாம் என்று தெரிந்தபோதிலும் மகாபெரியவர் தன்னைக் காப்பாற்றுவார் என்று பரிபூரணமாக நம்பினார்.  ஒரு வழியாக அன்று இரவு அவரது பிரச்னை தீர்ந்தது. நிம்மதியாக உறங்கி எழுந்தவர், மறுநாள் முதல் வேலையாக நீராடி சுவாமி கும்பிட்டுவிட்டு, மகான் தந்த இரண்டாவது பழத்தை எடுத்து உண்டார். 

பரமாசார்யா பிரசாதமாகத் தந்த பழத்தை உண்டால் குழந்தை உண்டாகும் என்ற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. விரைவிலேயே கர்ப்பமானார்.  தனக்குத் தாயாகும் பேறு கிட்ட அனுகிரஹம் செய்த மகாபெரியாவாள் படத்தின் முன் நின்று வணங்கினாள்.   குழந்தையே பிறக்காது என டாக்டர்கள் அனைவரும் தீர்மானமாக சொல்லிவிட்ட நிலையில் மகாபெரியவாளின் கருணை பழங்களின் வழியாக மருந்தாக வேலை செய்தது; என் வயிறு நிறைந்தது என்று நினைத்தபோது அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. 'மகான் தந்த இரண்டு பழங்களில் அழுகிய பழம், தன் உடலில் இருந்த கோளாறைக் கிளறிவிட்டு, அதை வெளியே தள்ள உதவியிருக்கிறது. பிறகே தனக்குத் தாய்மைப் பேறு வாய்த்திருக்கிறது!'  அப்போது அவளுக்குத் தோன்றியது சத்தியம் என்பதை உறுதி செய்வதை போல் நடந்தது ஒரு நிகழ்வு. அதுதான் இந்த சம்பவத்தின் உச்சம். 

சில மாதங்களுக்குப் பிறகு கருத்தாங்கிய வயிறோடு, காஞ்சி மகானை தரிசிக்கச் சென்றார்  அந்தப் பெண்மணி. அப்போது மகான், அவளைக்  கருணையோடு பார்த்தார். "பரவாயில்லையே அழுகின பழத்தையும் தூக்கிப்போடாம சாப்பிட்டுட்டே போலிருக்கே!" என்று கேட்க சிலிர்த்துப் போனார் அந்தப் பெண்மணி. 

எல்லாவற்றையும் அருகே இருந்து பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள், அழுகிய பழம் கூட அந்த மகானின் திருக்கரங்கள் பட்டதால் அருமருந்தாகியிருப்பதை அறிந்து பரவசப் பெருக்கோடு அவர் பாதம் பணிந்தனர்!            

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏

No comments:

Post a Comment