“தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!”
அதுக்கு என்ன அர்த்தம்?” மஹா பெரியவா கேள்வி.
(மேலோட்டமாக பதில் சொன்ன “ஶிரோமணி” பட்டம் பெற்ற பண்டிதர்கள், நாலைந்து வித்வான்களுக்கு
மஹா பெரியவாளின் அற்புத விளக்கம்)
ஒருநாள் மஹா பெரியவாளை தர்ஶனம் செய்ய, “ஶிரோமணி” பட்டம் பெற்ற பண்டிதர்கள், நாலைந்து வித்வான்கள் ஆகியோர் வந்தார்கள்.
மஹா பெரியவா ஶாஸ்த்ர விஷயங்களை அவர்களுடன் ஸம்பாஷித்துக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில்…
”இங்க வரவால்லாம் நமஸ்காரம் பண்ணினா, நா…திருப்பி 'நாராயண, நாராயண' ன்னு சொல்லி ஆஸிர்வாதம் பண்றேன். நா….ஸன்யாஸி! ஆனா, ஸம்ஸாரிகள்… நீங்கள்ளாம் என்ன சொல்லி ஆஸிர்வாதம் பண்ணுவேள்?”
“தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!” ன்னு சொல்லுவோம்….. பெரியவா”
“ஸெரி…. அதுக்கு என்ன அர்த்தம்?”
“ரொம்ப நாள், தீர்க்கமான ஆயுஸ்ஸோட, ஸௌக்யமா இருன்னு அர்த்தம்”
அங்கிருந்த எல்லா வித்வான்களிடமும் வரிஸையாக கேட்டார்.
“அதே அர்த்தந்தான்…”
எல்லோருமே ஆமோதித்தனர்.
மஹா பெரியவா கொஞ்ச நேரம் மௌனமா இருந்துவிட்டு, ஒரு அழகான புன்னகையோடு,
” நீங்க அத்தன பேரும் சொன்ன அர்த்தம்…. தப்பு !”
பண்டிதர்களுக்கு தூக்கி வாரி போட்டது!
அது எப்படி? ஏதோ கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட இதற்கு அர்த்தம் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஸுலபமான சொல்! அது எப்படி தப்பாகும்! ஒன்றும் புரியவில்லை.
“நானே சொல்லட்டா?”
“பெரியவாதான் எங்களுக்கும் சொல்லணும்…”
எல்லோரும் காதை தீட்டிக் கொண்டார்கள்.
“இருபத்தேழு யோகங்கள்ள, ஒரு யோகத்தோட பேர் 'ஆயுஷ்மான்'! பதினோரு கரணங்கள்ள ஒரு கரணம் 'பவ'ங்கறது! வார நாட்கள்ள 'ஸௌம்யவாஸரம்' ன்னு புதன் கிழமை ! …..
……..இந்த மூணும், அதாவது, ‘புதன்’ கெழமைல ‘ஆயுஷ்மான்’ யோகமும், ‘பவ’ கரணமும் சேர்ந்து வந்தாக்க… அந்த நாள், ரொம்ப ஸ்லாக்யமா சொல்லபட்டிருக்கு. அதுனால, 'ஆயுஷ்மான் பவ, ஸௌம்ய'..ன்னு இந்த மூணும் கூடி வந்தா… என்னென்ன நல்ல பலன்கள் கெடைக்குமோ, அதெல்லாம் ஒனக்கு கெடைக்கட்டும்னு ஆஸிர்வாதம் பண்றேன்!…னு அர்த்தம்”
அத்தனை வித்வான்களும் ஒரே நேரத்தில், தண்டம்போல் மஹா பெரியவா ஶரணத்தில் விழுந்தனர். நாலைந்து ஶிரோன்மணிகள், அஞ்சாறு வித்யா வாசஸ்பதிகள் இருந்தும், கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருந்த இத்தனை எளிய வாழ்த்துக்கு, இவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்தை காட்டிக்கொடுத்த அந்த “ஞான மேரு”வின் முன் ஆத்மஸமர்ப்பணம் பண்ணுவதை விட வேறென்ன செய்யமுடியும்?
இதைத்தான் தமிழில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று சொல்லுவார்களோ! புதன் கிழமையோடு இந்த யோகமும், கரணமும் சேர்ந்து அமையும் நல்ல நாள் அரிது என்பதாலோ!
ஶிரோன்மணிகளுக்கென ஒரு வகை பாடம்; செல்லப் பிள்ளைக்கு வேறு மாதிரியான பாடம் நடத்தினார் நம் மஹா பெரியவா!
நாம்… ஶிரோன்மணிகளாக வேண்டாம்….. என்றுமே நம் மஹா பெரியவாளுக்கு செல்லக் குழந்தைகளாகவே இருப்போம்…… மனஸில் எந்த கல்மிஷமும் இல்லாமல்!
No comments:
Post a Comment