Tuesday, March 31, 2020

மஹா பெரியவா அற்புதங்கள் - 22

மஹா பெரியவா அற்புதங்கள் - 22

பெரியவா அனுக்ரஹம் - ''சார்  போஸ்ட்''.

படுத்துக்கொண்டிருந்த  தாத்தா எழுந்து போய்  கதவைத் திறந்தார். வெயில் தஹித்துக்கொண்டிருக்கிறது.  ஜூன் முடியும் நேரத்திலும்  கோடைவெயில் போல் கொளுத்தியது. டொப் என்று எங்கேயோ ஒரு ட்ரான்ஸ்பார்மர் வெடித்து நெருப்புபொறி புகை. அதைத் தொடர்ந்து  மின்சாரம் செத்து விட்டது. வெயிலில் மின் விசிறியும் இல்லை. என்றும் உதவும் பனை ஓலை விசிறி பக்கத்திலேயே வைத்திருந்தார் தாத்தா. அதால்  காற்று வீசிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தார்.  பனை ஓலை விசிறி அனலைத்தான் அவர் மேல் வீசியது. அப்போது தான் வாசலில் ''சார்  போஸ்ட்.''

அந்த பேட்டை  போஸ்ட்மேன் ராமானுஜம்  அடுத்த மாதம் ரிடையர்  ஆகவேண்டும்.  மூச்சைப் பிடித்துக்கொண்டு  தபால் பட்டுவாடா பண்ணிக்கொண்டிருந்தார்.  எந்த கெட்ட பெயர், கம்ப்ளைன்ட் இல்லாமல்  வேலை  ஒய்வு பெற முயற்சிப்பவர்.  வெயில் அவரைப் பிழிந்தது அவரது காகி சட்டையின்  வியர்வையில்  தெரிந்தது. வழுக்கை மண்டை வியர்வையில் பளபளத்தது.

'வாங்கோ ராமானுஜம்.  வேலை முடிஞ்சுடுத்தா?''
.  
''இல்லே மாமா. இன்னும் 17 இடம் போகவேண்டும். எப்படியும்  4.30ஆகிவிடும்.  அப்பறம் ஆபீஸ்  போய்  கணக்கு ஒபாடைத்துவிட்டு  வீடு போக  6 மணி  ஆயிடுறது. பல்லைக் கடிச்சிண்டு  இன்னும் ஒரு திருப்பாவை காலம்.  (முப்பது நாள் என்கிறார்) ஒட்டிட்டா, அப்புறம் இந்த  வெயிலில் சுத்தல் கிடையாது.  ஆனால்  வரும்படிக்கு எதாவது  வழி பண்ணிக்கணும். பெருமாள் என்ன நினைச்சுண்டிருக்காரோ. எப்படி படி அளப்பாரோ தெரியல. பெரியவா  அனுக்ரஹம் இருந்தா கடைசிகாலமாவது  கொஞ்சம் சுகமா  தள்ளணும் என்று  அபிலாஷை''
.
''ஒரு அரைமணி உக்காந்துட்டு போங்கோ.  மோர்  தரேன். இருங்கோ உச்சி படைபடைக்கிற வெயிலில் வந்திருக்கிறேள்''

ஒரு லோட்டா நீர் மோர் சில்லுன்னு குடித்த ராமானுஜம் ''வயத்துக்கு குளிர்ச்சியா இருந்துது மாமா. மனசுக்கு  குளிர்ச்சியா  பெரியவா பத்தி ஒரு விஷயம் சொல்லுங்கோ கேட்டுட்டு தெம்பா  வேலையை முடிக்கிறேன்.''

''சொல்றேனே.  அதைவிட  வேறென்ன  பாக்கியம் எனக்கு.''

பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! கண் பார்வை மங்கல். உச்சி வெயிலில் தண்ணி லாரி கூட  மேலே ஏற  வரும்போது தான் சற்று நிழல் மாதிரி  புகைமண்டலமா தெரியும்.  அவருக்கு  ஒரு ஏக்கம். ரொம்ப நாளா ஒரு ஆசையும் கூட.  காஞ்சிபுரம்  வந்தபோது ஒரு தடவை பெரியவா தரிசனத்துக்கு மணிக்கணக்கா காத்திருந்து பெரியவா கண்லேயும்  பட்டுட்டார்.  அருகே சென்று  நின்று  அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம்.   அவரது  கண்பார்வை குறை,  பக்கத்துல இருக்கிறவா சொல்றது அவருக்கு கேக்கலை என்று எல்லாம்  பெரியவா நொடியிலே தெரிஞ்சுண்டுட்டா. ''

'என்ன?'' என்று  ஜாடையா கேட்டா பெரியவா. 

"பெரியவா...எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை,பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத் தேத்திக்கணும்னு ஒரு ஆசை....ஆனா,என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி"

அப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களை  பார்த்துவிட்டு 

"இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்....கண் பார்வை செரியில்லே! என்ன பண்ணலாம்?" 

சர்வஞத்வம் என்பதே,  தனக்கு எல்லாம் தெரிந்தும், அதை லக்ஷியம் செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்வம் குடுப்பதுதான். இல்லையா?

பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்......

"நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ?"....

"தெரியும்"

"அங்க என்ன விசேஷம்?"

"அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா......"

"புராணங்களை எழுதினது யாரு?"

"வ்யாஸர்...."

"வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. "வ்யாஸகத்தி" ன்னு பேரு தெரியுமோ?''."
பண்டிதர்களுக்கோ ஆச்சர்யம்! அவர்களுக்கு இது புது விஷயம் கூட.  . நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரியலை. ஆனால் பெரியவாளுக்கு நுண்ணிய விஷயங்கள் கூட  திருஷ்டாந்தம். .
அவர் அருகில்  இருந்த ஒருவரை அழைத்து  அந்த  கண் தெரியாத, காதுகேளாத பக்தரிடம் உரக்க சொல்ல சொன்னார். 

அவரும் உரக்க அன்பரின் செவிட்டு காதில் "பெரியவா  உங்களை குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி,கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும்'' அப்படின்னு உங்களுக்கு சொல்றார்.

அவரும் புரிந்துகொண்டு தலையாட்டினார். நைமிசாரண்யம் சென்றார்  கொஞ்சம் கொஞ்சமாக  காது கேட்க ஆரம்பித்தது. கண்ணும் கண்ணாடி போட்டுக்கொண்டு புஸ்தகம்  படிக்கும் அளவுக்கு  அபிவிருத்தி  ஆனது என்று பின்னாலே எப்பவோ பெரியவா கிட்டே வந்து சொன்னாராம்.

ராமனுஜம் ''சார், பெரியவா, பெரியவா தான்'' கலியுகத்தில் கண் கண்ட தெய்வமா இருந்தவா'' 

இதைக் கேளுங்கோ ராமானுஜம்.

''வடக்கே ராஜஸ்தான்லே எங்கேயோ  வேலையா இருந்த ஒருத்தருக்கு காதில்  எப்பவும்  ஏதோ  யாரோ  பேசறா மாதிரி  சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அதுவும் அந்த குரல்  ஆஞ்சநேயர் பேசறா மாதிரி தோணினதாலே நிறைய பேர்  அவரிடம் வந்து  குறி கேட்டனர்.  அவரும்  தனக்கு தோணினதை, அதாவது ஆஞ்சநேயர் என்ன சொல்கிறார்  என்பதை சொல்லி விஷயம்  எங்கும் பரவ ஆரம்பித்தது.  அவருக்கு  நேரம் இல்லாமல் போய் விட்டது. 

உத்தியோகத்துக்கே சரிவர போகமுடியாமல் போய்விட்டது. ஆபிசில் அவருக்கு பிரச்சினை இதால்.  இத்தனைக்கும் அவர்  இலவசமாக  தான் குறி சொல்லி வந்தார்.  கஷ்டத்தை யாரிடம் சொல்வது? மனதில் கவலை  அதிகரிக்க, யாரோ சொல்லி  அவர்  காஞ்சிபுரத்தில்பெரியவா கிட்டே இது பத்தி சொல்லிவிட்டு அவரை நமஸ்காரம் பண்ணலாம்  என்று  வந்தார்..

அவர் வந்தபோது  நிறைய பேர் பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள்.  ஓரத்தில்  வெகுநேரம்  நின்றுகொண்டிருந்தவரை பெரியவா  அருகில் வா என்று கையால்  ஜாடை காட்டினார். 

''எதுக்கு  ரொம்பா நாழியா  நின்னுண்டே இருக்கே?'' 

 “வடக்கே ராஜஸ்தான்லே  வேலையா இருக்கேன்.  அங்கே இருக்க பிடிக்கவில்லை. பெரியவா அனுக்ரஹத்தாலே,மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும்.”

“எங்கிட்ட  ஏன் இதை  சொல்றே ? உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே … ஹனுமான் கிட்டேயே நீ பிராத்தனை பண்ணிக்கோயேன்.”

அந்த பக்தர் ஆடிப்போய் விட்டார். ''அபசாரம் பெரியவா. ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான். என்னமோ எனக்கு அப்படி தோணித்து. ஒரு வேளை எதாவது துர்தேவதையோ கூட  இருக்குமோ என்று கவலையா இருக்கு. ஒண்ணுமே தெரியவில்லை. என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது..  அது சொல்கிற பதில் சிலபேர்களுக்குப் பலித்துவிடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள். எனக்குத்தான் உள்ளூர அது ஆஞ்சநேயரா இல்லையா என்று  தெரிஞ்சுக்கணும்னு  தோணித்து.

பெரியவா கிட்ட இதை சொல்லிட்டு என் கஷ்டத்தைப் போக்கணும்னு  வேண்டிக்கதான்  காத்திண்டிருகேன்.''
“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. 

கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாளை  தரிசனம் செய்தார் அன்பர்.

“என்ன….ஆஞ்சநேய ஸ்வாமி,  இன்னமும்  காதுக்குள்ளே தான்  இருக்காரா  இல்லை  ராமசேவைக்குப் போயிட்டாரா? ” என்று கேட்டார் பெரியவா தனக்கே உரிய  ஒரு க்ரிஷ்ணத்தனமான புன்னகையோடு.   

அன்பரும்  ''பெரியவா சொன்னபடி  ராம சேவைக்கு  
தான்  போயிருக்கணும்.'' என்றார் சிரித்துக்கொண்டே.''

பிரமாதம்  மாமா.  இதுக்கு தான்  உங்க கிட்டே  வரது.  

நானும்  என்  பெருமாள் எனக்கிட்ட  சேவைக்கு போறேன். போஸ்ட்மேன்  ராமானுஜம்  சைக்கிளில்  தாவி ஏறினார்  புதுத் தெம்போடு... 

ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!

அன்பு நண்பர்களே,

அனைவரும் நம்முடைய தெய்வீகம் பேஜை லைக் செய்து உங்களுடைய  நண்பர்களுக்கும் ஷேர் செய்து
ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளை 
பெற வேண்டுகிறோம்..

நீங்கள் செய்யும் லைக் மற்றும் ஷேர் எங்களை மென்மேலும் புதிய பகுதிகளை / கட்டுரைகள் போட ஊக்குவிக்க உதவும்..

மாலை வணக்கம் நண்பர்களே !!

என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

No comments:

Post a Comment