மஹா பெரியவா அற்புதங்கள் - 23
சொத்து விஷயம் !!
''ஸார், கையில் என்ன ஏதோ சீரியசாக படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'' என்று தெருகோடி குப்பு ராவ் கேட்டபோது தாத்தா வாசலில் திண்ணையில் உட்கார்ந்து ஒரு பழைய டயரியை புரட்டிக்கொண்டிருந்தார்.
''அடடா குப்பு ராவா, வாருங்கள், வாருங்கள் சௌக்கியமா. ரொம்ப நாளாச்சே பார்த்து. ''
'மண்ணச்ச நல்லூரிலே ஒரு பிதுரார்ஜித வீட்டுலே கொஞ்சம் ரிப்பேர் பண்ணிட்டு ஒரு மாசம் இருந்தேன். ரெண்டு நாளாச்சு வந்து. சரி உங்களைப் பார்த்து பேசி, இல்லை இல்லை, நீங்க பேசறதைக் கேட்போமே என்று வந்தேன். ''
நீங்க ஏதோ முக்யமா படிச்சிண்டிருக்கிரீர்கள் போல இருக்கு.. இரு இழுத்தார் குப்பு ராவ்.
''அதெல்லாம் ஒண்ணுமில்லே. எனக்கு இந்த மஹா பெரியவா பைத்தியம் உண்டு. ஏதாவது அவரைப்பத்தி படிச்சதே எழுதி வைச்சிண்டு அடிக்கடி பாத்துண்டே இருப்பேன். அதுலே ஒன்னு இது. ''
''ஓஹோ சௌகரியமாகவே போச்சு. எனக்கும் அவரைப்பத்தின விஷயம் கேக்கப் பிடிக்குமே. எங்கே சொல்லுங்கோ ''
தொண்டையைக் கனைத்துக்கொண்டு தாத்தா சொன்ன விவரங்கள் எப்பவோ அம்ருத வர்ஷினியில் சில வருஷங்களுக்கு முன்பு யாரோ ஒரு மகானுபாவன்
ஸ்ரீ S. ராமநாதன் என்பவர் அளித்த தகவல் அது... அங்கும் இங்கும் கொஞ்சம் செப்பனிட்டு சுருக்கி அளிக்கிறேன்.;;
மகா பெரியவாளை தரிசனம் செய்ய சேலத்தில் வசித்த ஒரு வக்கீல் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் வந்தார்கள்.
பெரியவா அருகில் நின்று தரிசனம் பண்ணப் போனபோது பெரியவா அக்ஷதை கொடுத்தார் . மேல் துண்டை சர்வ ஜாக்ரதையாக விரித்து குனிந்து அக்ஷதை பெற முயன்றபோது இவருக்கு மட்டும் ஏனோ அக்ஷதை மேல் துண்டில் விழவில்லை. கீழே மணலில் விழுந்தது. அதை ஜாக்ரதையாக மணலிலிருந்து பிரித்து சேகரித்து, கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர் வக்கீல் தம்பதிகள்.
எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.
சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த சம்பவம் அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.
வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது.
ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்:
‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’
ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம். இருக்காதா பின்னே!
எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.
நில புலன்கள் சேர்ந்தால் ஒருவர் பெரிய நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.
ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது. தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து, அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.
அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.
“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” -
மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:
“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயோ? ” மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர்.
சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைகளையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”
“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே!
உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது.
மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை. மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார்.
“ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.
இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?
ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!
அன்பு நண்பர்களே,
அனைவரும் நம்முடைய தெய்வீகம் பேஜை லைக் செய்து உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து
ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளை
பெற வேண்டுகிறோம்..
நீங்கள் செய்யும் லைக் மற்றும் ஷேர் எங்களை மென்மேலும் புதிய பகுதிகளை / கட்டுரைகள் போட ஊக்குவிக்க உதவும்..
மாலை வணக்கம் நண்பர்களே !!
என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!
No comments:
Post a Comment