Saturday, March 28, 2020

தனியன் என்றால் என்ன? ராமானுஜ தயா பாத்ரம்

 தனியன் என்றால் என்ன?

ஆசார்யர்களையும் ஆழ்வார்களையும் முதலில் வணங்கி, பிறகு திவ்ய ப்ரபந்தங்களை அனுஸந்திப்பது நம் ஸம்ப்ரதாயம்.  இப்படி ஆசார்யர்களுக்கும் ஆழ்வார்களுக்கும் நம் வணக்கத்தை தெரிவிக்கும் பாசுரங்கள் தனியன்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை திவ்யப்ப்ரபந்தங்களிலிருந்து தனித்து நிற்பதால், தனியன் என்று பெயர் பெற்றன.

ராமானுஜ தயா பாத்ரம் – தேசிகனின் வைபவத்தின் வைபவம்
ஸ்வாமி தேசிகனின் வைபவத்தை நாம் அறிந்திடவும், அதனை பகிர்ந்திடவும் முயற்சித்தல், எளிதான செயல் அன்று.ஸ்வாமியின் வைபவத்தின் வைபவம் அத்தகையதாகும்.
ஸ்வாமி பாதுகா ஸஹஸ்ரத்தில், பாதுகையின் ப்ரபாவத்தை கூறும் பொழுது, “ஆகாயம் முழுதும் காகிதமாக கொண்டு, ஏழு ஸமுத்ரங்களை மையாக கொண்டு, 1000 தலைகள்மற்றும்கண்கள் கொண்ட அந்த பரந்தாமனே வந்து எழுதினால், ஒரு வேளை எழுத முடியுமோ என்னவோ” என்று சாதிக்கின்றார்.

निश्शेषमम्बरतलं यदि पत्रिका स्यात् सप्तार्णवी यदि समेत्य मषी भवित्री ।
वक्ता सहस्रवदनः पुरुषः स्वयं चेत् लिख्येत रङ्गपतिपादुकयोः प्रभावः।। 3.2

இது பாதுகைக்கு மட்டும் இன்றி, பாதுகா சேவகராம் ஸ்வாமி தேசிகனுக்கும் உபலக்ஷணம். ஸ்வாமியின் பெருமையின் ப்ரபாவமும் அப்படியே ஆகும்.

ஸ்வாமி தேசிகன், பல க்ரந்தங்களை, பல மொழிகளில் அருளியுள்ளார். தேசிகனின் ப்ரபாவத்தையும், க்ரந்தங்களையும் அறிந்து கொள்ள நம் ஆயுள் போதாது. ஆயினும்தேசிகனின் ஒரு பாசுரம் பயின்றாலே, அது நமக்கு பரமபதத்திற்கு சோபானமாக(அதாவது படியாக) அமையும். இதையே, “ஓர் ஒன்று தானே அமையாதோ, தாரணியில் வாழ்வோருக்கு வானேற போமளவும் வாழ்வு” என்று ஸ்வாமி தேசிகனின் தனியனிலும் அறிகிறோம், போற்றி துதிக்கின்றோம்.

தேசிக அடியாரின் ரஹஸ்ய த்ரயம்: 

நம் ஸம்ப்ரதாயத்தில், தத்வ த்ரயம், ரஹஸ்ய த்ரயம் போன்ற விஷயங்களை காணலாம்.தேசிகனின் அடியார்கள் அறிய வேண்டிய மூன்று விஷயம் என்ன என்றால் அது தேசிகனின் மூன்று தனியன்களே ஆகும். அவையாவன,

1. ஸ்ரீ நயினாராசார்யர் அருளிச்செய்ததனியன்:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்கிககேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
2. ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிச்செய்ததனியன்:
ராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம் ||
3. பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்ததனியன்:
சீர் ஒன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழமொழியுள் – ஓர் ஒன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு.

ராமானுஜ தயா பாத்ரம்தனியன் அவதாரம்:
ஒரு சமயம் ஸ்வாமி தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர், ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் மற்றும் சிஷ்யர்கள் சூழ, திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார். அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார். ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர், தேசிகனின் அனுமதியைப் பெற்று, காலக்ஷேப கோஷ்டியில் அமர்ந்து ஸ்வாமியின் திருக்குமாரர் பற்றிய கீழ்கண்ட தனியனை அனுஸந்தித்தார்.

ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்யமஹம் பஜே ||

பிறகு, தர்சனப்ரவர்த்தகர் ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும்,தாய் மாமாவானஸ்ரீ அப்புள்ளாரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான ஸ்வாமி தேசிகன் விஷயமாக,

ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு குரு பரம்பரையைச் சொல்லி, பகவத் விஷய காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.

இதனை அறிந்த ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய” என்கிற தனியன், தன்னுடைய பெருமையைச் சொல்கிறது. ”ராமானுஜ தயாபாத்ரம்….” என்கிற தனியன், தனக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறதுஎன்று சந்தோஷப்பட்டார். பின்னர் ”ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய:” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் போது அநுஸந்திக்கும் படியும் ”ராமானுஜ தயா பாத்ரம்” என்கிற தனியன் “பகவத் விஷய” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும் நியமித்தார். இவ்வாறு பஹுதான்ய வருடம், ஆவணி ஹஸ்தம் நன்னாளில் ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்.பின்னர் ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தின் படி தமிழ் பிரபந்தங்களை ஸேவிக்கும் முன்இந்த தனியனை அநுஸந்திக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

ஆசார்ய தனியனின் தனிப்பெருமை: 

கருணையினால் ஜ்ஞானத்தை அளித்து, நாம் நற்கதி அடைய வழி வகுக்கும் ஆசார்யனுக்கு, சிஷ்யன் கைமாறு செய்ய முடியுமா என்றால், முடியாது. அப்படி இருக்க, சிஷ்யன் ஆசார்யன் மேல் கொண்டுள்ள பக்தியை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பூர்வர்கள் நான்குவித விஷயங்களை கூறியுள்ளனர். அவையாவன,

1. ஆசார்யன் பெருமை புலனாகும் படியாக அவரை பற்றிய ச்லோகம் எழுதி,அவரிடம் ஸமர்ப்பித்து, அவரின் அனுமதியின் பெயரில் அவரை பற்றிய துதி பாடல்களை பாடுவது.
2. விரலை வெட்டி ஆசார்யனுக்கு காணிக்கையாக ஸமர்பிப்பது.
3. மார்பில் ஆசார்யன் பெயரை பச்சை குத்திக்கொள்வது.
4. ஆசார்யன் திருவடி என்று நம்மை ஆசார்யனின் தாஸனாக அறிமுகம் செய்து கொள்வது. இதனையே ஸ்ரீவைஷ்ணவ அடியார்களாகிய நாம் “அடியேன் ராமானுஜ தாஸன்” என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.
இதில் நம் ஆசார்யர்கள் ஸாத்வீகமான முறையையே நாம் பின்பற்ற உபதேசித்தனர்.சிஷ்யர்கள் ஆசார்யனுக்கு தனியன் ஸமர்ப்பித்தல், அவரின் பெருமையையும் குணங்களையும் போற்றும் தனியனை நித்யம் அனுஸந்தானம் செய்தல், நம் ஆசார்யர்கள் உகந்தஅனுஷ்டானங்கள் ஆகும்.
இதையொட்டியே ஸ்வாமி தேசிகனின் ப்ரதான சிஷ்யர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் மேல் இருந்த அபரிமிதமான ஆசார்ய பக்தியினால் அருளியது ”ராமானுஜ தயா பாத்ரம்” என்னும் தனியன் ஆகும்.

ராமானுஜ தயா: 
“ராமானுஜ தயா” – இந்த பதத்தின் அர்த்தத்தை நாம் அறிந்தோம் என்றால் அனைத்தையும் அறிந்தவர் ஆகின்றோம்.

ராமானுஜரின் தயைக்கு பாத்திரமானதேசிகன்
ராமானுஜரின் தயைக்கு, கருணைக்கு பாத்ரமானவர்என்பது முதல்விளக்கம்.
ஸ்வாமி தேசிகனின் திருக் குமாரர் —குமார வரதாசார்யர் —-தன்னுடைய பிள்ளை அந்தாதியில்,
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம்என் சென்னியதே .
ராமானுஜரின் வண்மையைப் போற்றும், சீர்மையன்—என்று ஸ்ரீ நயினாசார்யர் சொல்கிறார்.எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று, ஸ்ரீ நயினாசார்யர்,பாசுரமிடுகிறார். இராமாநுசமுனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால், ராமானுஜ தயா பாத்ரர். அதுமட்டுமல்ல ராமானுஜரின் மறுஅவதாரம் அன்றோ நம் ஸ்வாமி தேசிகன்.

1 comment: