இன்றைய ஆலயம் தரிசனம் மேலக்கோட்டை திருநாராயணபுரம்
பாவங்கள் அனைத்தும் கரைய கருடனின் பேரில் எம்பெருமான் எழுந்தருளி வைரமுடி சேவை.
மேலக்கோட்டை ஸ்ரீ செல்லப்பிள்ளை எம்பெருமான் திருவடிகளே சரணம்
மேல்கோட்டை வைரமுடி சேவை 02-04-2020
மேல்கோட்டை (ஆங்கிலம்: Melukote ),(கன்னடம்: ಮೇಲುಕೋಟೆ)இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலை கிராமம். கர்நாடகத்தின் வைணவத்தலைமை பீடமாகக் கருதப்படும் இவ்வூருக்கு "திருநாராயணபுரம்" என்றும் பெயருண்டு.
வரலாறு
12ம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் ஸ்ரீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் செய்து "திருநாராயணபுரம்" என அழைக்கும்படி அருளினார்.
இக்கோவிலுக்கு பெங்களுர்-மைசூர் ஹைவேயில் மாண்டியா என்கிற ஊரிலிருந்து சுமார் 30 கிமி உள்ளே (நாகமங்கலா போகும் வழியில்) செல்ல வேண்டும்.
இந்தியாவின் சக்கரை மற்றும் வெல்ல உற்பத்தியில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது..அதனால் மாண்டியாவிலிருந்து மேலக்கோட்டைக்கு செல்லும் வ்ழியெல்லாம் கரும்பு தோட்டமும் சிறு சிறு வெல்லப்பாகு காய்ச்சப்படும் ஆலைகளையும் காணலாம் ..உருண்டையான பாகு வெல்லத்தை காட்டிலும்,சதுரமாக காணப்படும் அச்சு வெல்லமே இங்கு பெரும்பாலும் கிடைக்கிறது..
கரும்பு தோட்டம் ,வயல்வெளி மறறும் அங்கு காணப்படும் நீர்நிலைகள் பார்த்துக்கொண்டே சென்றோமானால் மாண்டியவிலிருந்து 1/2 மணி நேரத்தில் மேலக்கோட்டையை அடைந்து விடுகிறோம்.
ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது..அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள்.
சுமார் 1100 வருடங்களுக்கு முன்னால் வைஷ்ணவர்களின் ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர் இப்பகுதியில் பல ஆண்டு காலம் தங்கியிருந்தார்.
அச்சமயம் தொலைந்ததாக சொல்லப்பட்ட இக்கோவிலின் உற்சவமூர்த்தி,டெல்லியை ஆண்டு வந்த முகலாய அரசரின் அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க,பெருமாளை அந்த அரசரின் மகள் வைத்து விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.ராமனுஜர் அந்தப்பெண்னிடம் பெருமாளை தரும்படி கேட்க அவள் கொடுக்க மறுத்துவிட்டாள்.உடனே ராமனுஜர் பெருமாளை பார்த்து “ செல்லப்பிள்ளை வா” என்று அழைக்க பெருமாளும், “சல்! சல்!” என கொலுசு ஒசை படுத்த நடந்து ராமானுஜரிடம் வந்ததாக சொல்லப்படுகிறது. பெருமாளை பிரிந்து இருக்கமுடியாத அந்தப்பெண்னும் அவருடனே மேலக்கோட்டைக்கு வந்து விட்டதகவும் அவர் அதன் பின்னர் துலுக்க நாச்சியார் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது..
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவம் வைரமுடி சேவையாகும்
இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவமூர்த்தியை நாச்சியாருடன்
எழுந்தருளச் செய்துவைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர்.
இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக்கிடைக்காத
பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.
வைர முடி சேவை பங்குனி மாதம் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது
பிரஹலாதனின் மகன் விரோதசனன் பாற்கடலுக்குச் சென்று வைரமுடியை கொண்டு வந்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிடுகிறான்.
கருடன் அதை மீட்டுக்கொண்டு வரும்போது கண்ணனின் வேய்ங்குழல் நாதம் கேட்டு அவனுக்கு அணிவித்து விடுகிறார்.
கிருஷ்ணன் அதைப் பிறகு இந்த உற்சவ மூர்த்திக்கு அணிவித்து விடுகிறான். கலியுகத்தில் அதை வருடத்தில் ஒருநாள் பங்குனி உத்திரத்தன்று அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.
கருடனுக்கு வைநதேயன் என்றொரு பெயர் உண்டு.
இந்த முடி பெரிய திருவடியின் பெயரால் வைநமுடி என்று வழங்கப்பட்டுப் பின்னாளில் வைரமுடி என்று மருவியதாகவும் ஐதீகம்.
அந்த கருடன் கொண்டு வந்த வைரமுடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது. இனி இந்த திருநாராயணபுரத்தின் சிறப்புகளை முதலில் காண்போமா?
புராணங்களில் மேல் கோட்டை 1. பத்மகூடா, 2. புஷ்கரா, 3. புத்மசேகரா ,4.அனந்தமாயா , 5. யாதவகிரி, 6. நாராயணாத்ரி, 7. வேதாத்ரி ,8. வித்யா (ஞான) மண்டல், 9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் தென் இந்தியாவில் கர்னாடக ராஜ்யம், மாண்ட்யா மாவட்டம், பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ, மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்தில
ிருந்து சுமார் 20 கி.மீ. உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்துள்ள இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள்., பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன.
பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன:
1. தெற்கு திசை ஸ்ரீரங்கம் - கருணா நிவாசன் (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
2. கிழக்கு திசை - காஞ்சீபுரம், (தமிழ்நாடு) ஸ்ரீ வரதராஜன்.
3. வடதிசை - திருமலை / திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
4. மேற்கு திசை - மேல் கோட்டை (கர்னாடகம்) யதுசைல ரூபம் - திருநாராயணபுரம்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீ பலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீரங்கத்தை - போக மண்டபமென்றும்,
திருமலையை புஷ்பமண்டபமென்றும் பெருமாள் கோயிலை - தியாக மண்டபமென்றும் திருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.
மேலும் "நடை அழகு" ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு ப்ரஸித்தம்.
திருவேங்கடமுடையான் அமுது செய்யும் ப்ரஸாதங்களில் “வடை” ப்ரஸித்தம். பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு ஸமர்ப்பிக்கப்படும் " குடை" மிகப் பெரியது. திருநாராயணனுக்கே “முடி” (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது
இந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள் மலை மேல், கோட்டையில் அமைந்துள்ளன அவையாவன நரசிம்மர் ஆலயம், இரண்டாவது நாராயணர் ஆலயம். நாராயணர் ஆலயத்தில் மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் - ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.
தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார் தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம்,
முதலிய 8 தீர்த்தங்கள்.விமானம் :- ஆனந்தமய விமானம்.ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்
இத்த்லத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :
வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.
வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ்நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.
வைரமுடி சேவை
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, திருமலை பிரம்மோற்சவம், காஞ்சிபுரம் கருடசேவை போல வைணவார்களால் பெரிதும் போற்றப்படும் மிகப்பெரிய திருவிழா "மேல்கோட்டை வைரமுடி சேவை" யாகும்.குறைந்தபட்சம் நான்கு லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் இத்திருவிழா, மாண்டியா மாவட்ட நிர்வாகத்தால் மிகுந்த ஏற்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப்பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாடவீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின்கண் இவ்வைரமுடி சேவை இப்போதும் இரவுப்பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது. மேலும் வைரமுடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டியப்பின்னரே வைரமுடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.
கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது "வைநதேய முடி" என்றழைக்கப்பட்டு, "வைநமுடி" என சுருங்கி பின்னர் "வைரமுடி" என மருவியுள்ளது.
இந்த புஷ்கரணி சகல பாபங்களையும் நீக்க வலிமையுள்ளது. அதனால் அதன் நீரை தலையில் சிறிது தெளித்துக்கொண்டு அதை சுற்றியுள்ள மணடபங்களையும் அதில் காணப்படும் சிற்பங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அங்கு அந்த குன்றின் மேல் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்லலாம்..
ஸ்ரீ பாத இராமானுஜர்
ஸ்ரீ பாத இராமானுஜாசாரியருக்கு பிரியமான ஸ்தலம்
இங்குள்ள இராமானுஜரின் விக்ரஹம், அவரது காலத்திலேயே வடிக்கப்பட்டு அவரால் அங்கீகரிக்கப் பட்டதாகும். மேல்கோட்டையிலிருந்து புறப்படுவதற்கு இராமானுஜர் முடிவெடுத்தபோது, அவரது விக்ரஹம் ஒன்றை செய்வதற்கு சீடர்கள் அனுமதி கேட்டனர். சீடர்கள் தன்மீது வைத்திருந்த குரு-பக்தியாலும் குரு-பிரேமையாலும் மகிழ்ந்த இராமானுஜர் அதற்கு சம்மதித்தார்.
இராமானுஜர் பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் வாழ்ந்தபோது, தமிழகத்தின் பெரும்பகுதியை குலோத்துங்க
சோழன் என்ற கொடிய மன்னன் ஆண்டு வந்தான். அவன் விஷ்ணு வழிபாட்டிற்கு முற்றிலும் விரோதியாக இருந்ததால், பல்வேறு வைஷ்ணவர்கள் மேல்கோட்டையில் தஞ்சமடைந்தனர்; மேல்கோட்டையின் மக்களும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அம்மக்களின் தயாள குணத்தினால் மகிழ்ச்சியுற்ற இராமானுஜர், அவர்களை “திருக்குலத்தார்” என்று குறிப்பிட்டார்.
கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்த வைணவத்தின் வளர்ப்புத்தாயாம் ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.
மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் பெருமாள் சொன்ன வழியாக திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.
சாதிபேதங்களை எதிர்த்த ஸ்ரீ இராமானுசர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் (திருமகளின் பிள்ளைகள்) என அழைத்தத்தோடு அவர்களுக்கு வழிபாட்டிலும் சமூகத்திலும் சமமான இடமளித்தார்.
கற்களால் செய்யப்பட்ட பெரிய விக்ரஹங்களைக் கொண்ட கோயில்களில், திருவிழாக்களின் போது வெளியில் செல்வதற்கென்று சிறிய விக்ரஹங்கள் இருப்பது வழக்கம். அவர்கள் உத்ஸவ-மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். மேல்கோட்டையில் இருக்கும் உத்ஸவ-மூர்த்தி திருசெல்வ நாராயணர் (அல்லது செல்வப்பிள்ளை) என்று அழைக்கப்படுகிறார்; கோயிலும் திருசெல்வ நாராயணர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஒருமுறை இராமானுஜாசாரியரின் கனவில் தோன்றிய பகவான், இக்கோயிலின் உத்ஸவ-மூர்த்தியினை இங்கு சூறையாட வந்த முகலாயர்கள் கொண்டு சென்று விட்டனர் என்றும், விக்ரஹம் தற்போது தில்லியில் உள்ளது என்றும் கூறினார். தனது சீடர்களுடன் தில்லி சென்ற இராமானுஜர், தென்னிந்தியக் கோயில்களைச் சூறையாடிய சுல்தானைச் சந்தித்து, விக்ரஹத்தைத் திருப்பித் தரும்படி வேண்டினார். சுல்தான் அவரிடம் பல்வேறு விக்ரஹங்களைக் காட்டினார், ஆனால் இராமானுஜர் அவற்றில் எந்த விக்ரஹத்தையும் ஏற்கவில்லை. தனக்கு வேண்டிய விக்ரஹம் இளவரசியின் அந்தப்புறத்தில் இருப்பதாக இராமானுஜர் தெரிவித்தார். சுல்தானோ தங்களுக்கு அந்த விக்ரஹம் வேண்டுமெனில், தாங்களே விக்ரஹத்தை இங்கு வரவழையுங்கள் என்றார்.
இராமானுஜர் ஓர் இனிமையான பாடலைப் பாடி, “செல்வமே வா,” என்று அழைத்தார். விக்ரஹம் ஓர் அழகிய சிறுவனின் வடிவில் வந்து அவரது மடியில் அமர்ந்தார். தெய்வீகக் குழந்தையைப் பெரும் பாசத்துடன் அரவணைத்த இராமானுஜர், அவரை ஸம்பத்-குமாரர் (இளைய பெருமான்”) என்று அழைத்து, மேல்கோட்டைக்கு எடுத்துச் சென்றார்.
பகவானின் பிரிவைத் தாங்கவியலாத இளவரசி இராமானுஜரைப் பின்தொடர்ந்தாள். இளவரசியின் துணைக்காக தனது படையை சுல்தான் அனுப்பி வைத்தார், ஆனால் அவர்கள் எதிரியின் இராஜ்ஜியத்தினுள் நுழைந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இளவரசியோ தனது பயணத்தை நிறுத்தவில்லை. அவள் மேல்கோட்டையை அடைந்தபோது, முஸ்லீம் என்ற காரணத்தினால் கோயிலினுள் அவளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அவள் தனது வாழ்வை தவத்தில் கழிக்க முடிவு செய்தாள். அதனைக் கேள்விப்பட்ட இராமானுஜர் அவளை கோயிலினுள் விடும்படி தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். கோயிலினுள் நுழைந்த அவள் பகவானுடன் ஒன்றற கலந்தாள்.
திருசெல்வ நாராயணரின் திருவடிகளில், பீபி நாச்சியார் என்று அந்த இளவரசியின் விக்ரஹத்தை இராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். அன்றிலிருந்து, இக்கோயிலின் நைவேத்யங்கள் அவள் மூலமாகவே செய்யப்படுகிறது.
ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுசர் மீட்டு
க் கொண்டுவரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீ இராமானுசரையும் காத்தனர். இதற்கு நன்றி நவிலும்வண்ணம் இராமானுசரின் ஆணைக்கிணங்க, இன்றும் தேர்த்திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் "திருக்குலத்தார் உற்சவம்" மிகப் பிரம்மாண்டமாய் கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித்தருகிறது. திருத்தொண்டனூர், ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியன அருகில் இருக்கும் வைணவத் தலங்களாகும்.
இந்த கிராமத்தில் உள்ள அந்த ஊரின் தெரு முழுக்க தமிழ்மணம். அக்ரஹாரத்தின் பெரும்பாலான வீடுகளில் பெயர்ப்பலகைகள், "ஸ்ரீரங்கம் ராகவாச்சாரி, ஸ்ரீரங்கம் சீனிவாச அய்யங்கார்" என்றும் ஸ்ரீரங்கம் என்று ஊரின் பெயரும் பலரது வீட்டில் தமிழிலேயே இன்றும் எழுதப்பட்டிருக்கிறது. சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் தாத்தா குடும்பமும். அவர் இந்த ஊர் கோயிலில் அர்ச்சகராக இருந்தார். பிரபல திரைப்பட நடிகை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜெயந்தி மாலாவுக்கும் பூர்வீகம் இந்த மேல்கோட்டைதான்
கருட புராணம்
முதலில் கருடாழ்வார் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார். பிறகு வைரமுடி பல்லக்கில் ஏற்றப்பட்டு கோயிலைச் சுற்றி வருகின்றது. இந்த வைரமுடி கிரீடத்தை மாண்டயா கஜானாவிலிருந்து சகல மரியாதையுடன் கலெக்டர் கொண்டு வருவார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இந்த கிரீடம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
கருடன் கொண்டு வந்த அற்புத வைரமுடியை அணிந்து கொண்டு பல்லக்கில் வெளியே வருகிறார் சம்பத குமாரர். தாயார்களுடன் கருட சேவை சாதிப்பது இங்கு ஒரு தனி சிறப்பு.
ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்பட்டது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைகளுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருடபுராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர். எனவே அனைவரும் இந்நூலைப் படிக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
கருட தரிசனப்பலன்
கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக்கேட்பதும் நன்மையைத் தரும்; கீழ்க்கண்ட பலன்களும் கிடைக்கும்.
ஞாயிறு- பிணி (நோய்) நீங்கும்.
திங்கள், செவ்வாய்- அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.
புதன், வியாழன்- பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.
வெள்ளி, சனி- ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.
அனைத்து திருக்கோவில்களிலும் பிரம் மோற்சவத்தின்போது பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம்.
இத்தனை சிறப்புகளைப் பெற்ற கருட பகவானை வணங்கி அவனருள் பெற்று, அவனால் திருமாலின் தரிசனத்தையும் அருளையும் பெறுவோமாக!
கருடதரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது. கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பர்.
"கருடாய நமஸ்துப்யம் சர்வ சர்பேந்த்ர சத்ரவே
வாகனாய மகாவிஷ்ணு க்ஷாய அமித தேஜசே.'
இவ்வளவு சிறப்புகள் உள்ள வைரமுடி கருடசேவையைக் காண இப்போதே முடிவு செய்துவிட்டீர்களா? தவறாமல் 02-04-2020 சென்று சேவியுங்கள்.
No comments:
Post a Comment