Wednesday, June 22, 2022

அகத்தீஸ்வரர் திருக்கோயில்

 தினம் ஒரு திருத்தலம்.. 🛕



சதுர வடிவில் ஆவுடையார்.. 


சூரியன் மற்றும் சந்திரனோடு பைரவர்..!!

                

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்...!!

 இந்த கோயில் எங்கு உள்ளது? 

சென்னை மாவட்டத்தில் உள்ள நெமிலிச்சேரி என்னும் ஊரில் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 

சென்னை, குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் நெமிலிச்சேரி என்னும் ஊர் அமைந்துள்ளது. நெமிலிச்சேரியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

 இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 

கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி, சதுர வடிவிலான ஆவுடையார் மீது காட்சியளிக்கிறார்.

இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கிய திசையில் அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். 

இங்கு ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுற்று பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

வடகிழக்கு மூலையில் நவகிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் சூரியன் மற்றும் சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு.

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் 'நெமிலிச்சேரி" எனப் பெயர் பெற்றது.

 வேறென்ன சிறப்பு? 

கருவறையின் வெளியே கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கையும் காட்சி தருகின்றனர்.

கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.

கோயிலுக்கு வெளியே இடது புறத்தில் அகத்திய புஷ்கரணி உள்ளது. அதன் கரையில் மிகப்பெரிய அரசமரமும், அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன.

 என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? 

சிவராத்திரி, திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், நவராத்திரி, பிரதோஷம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? 

நோயால் பாதிக்கபட்டவர்கள் தங்களது பிரச்சனைகள் தீர இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

 இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? 

தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


No comments:

Post a Comment