செட்டியார் பொம்மையின் வரலாறு என்ன?
நமக்குத் தெரிந்தது நவராத்திரியில் கொலுப் படியில் முதலிடம் வகிப்பார் செட்டியார்.குட்டி, குட்டி கிண்ணங்களில் அரிசி,பருப்பு என மளிகை சாமான்கள் நிரப்பி, கடையை பரப்பி, நாயகமாக செட்டியார், செட்டிச்சி பொம்மையை வைப்பார்கள். இது இல்லை எனில், கொலு முழுமையடையாது.
இந்த பொம்மையின் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழேவிழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன.
தஞ்சாவூர் குண்டு சட்டி பொம்மை என்று அழைக்கப்படும் இவை தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுபவைகளாக உள்ளன.
என் நிலையில் சாய்த்தாலும் கிழே சாயாமல் மீண்டும் பழைய நிலைக்கு வருபவை இந்த செட்டியார் பொம்மைகள். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து மேலும் மேலும் கீழே செல்லும் நிலைக்கு போனாலும், அத்தனையும் தன்னம்பிக்கை என்ற அருமருந்து இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை தான் இந்த பொம்மைகள் உணர்த்துகின்றன. மேலும் வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளைக் கூட தலையசைப்பால் உணர்த்தி விட முடியும். இதனால் ஆர்ப்பாட்டமான பேச்சை தவிர்த்து ஆழமான உணர்வை தெரிவிக்க முடியும். ராஜா ராணி பொம்மைகள் ,நடனமங்கை பொம்மைகள் ,தாத்தா பாட்டி பொம்மைகள் என தற்போது விதவிதமான தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.
ஸ்ரீ சரபோஜி மகாராஜா காலத்தில் இந்த பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் சிறப்பு பெற்றனர்.கட்டிடம், சிற்பம் ,ஓவியம் ,இசை ,நடனம் ,நாடகம் என பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்பட்டன.
"வீழ்ந்தவர் எழுந்திடுவர் "எனும் மிகப் பெரிய உண்மை இந்த பொம்மையில் உள்ளது.
இது பற்றி சுகி.சிவம் அவர்கள் கூறியது…
இந்த பொம்மையின் தாயகம் சீனா தான். சீனாவில் களிமண்ணை கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள் எப்போதும் நேர்த்தியாகவும் அர்த்தத்துடனும் தயாராகும். இந்த பொம்மையும் அப்படியே. 'தருமர் பொம்மை' என்பதே இதன் உண்மை வடிவம் .அதன் உடற்பாகம் உருண்டையாக இருக்கும். அதற்கும் உள்ளே அடிப்பாகத்தில் கனமான ஓர் உருண்டையை அமைத்திருப்பர். இதனால் இந்த பொம்மையை எந்த திசையில் படுக்க வைத்தாலும் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து விடும் .அழகான, ஆழமான பொருள் பொதிந்த பொம்மை இது.
சீனாவில் புத்த மதத்தின் பெருஞானத்தை பரப்பிய போதிதருமரைக் குறித்து உண்டான பொம்மை இது. அவரது ஞான நிலையை விளக்குவது. 'எவ்வளவு கவிழ்த்தாலும் தன் நிலைக்குத் திரும்பிவிடும் பொம்மையை போல ….யார் எப்படி கவிழ்த்தாலும், எது எப்படி பாதித்தாலும் மனம் தன் சமநிலைக்குத் திரும்பி விட வேண்டும்'! என்கிற போதி தருமரின் போதனையே இந்த பொம்மை உணர்த்தும் உண்மை .
உடலை நேராக வைத்து புன்னகை முகத்துடன் அமரம் ஆசனம் 'சித்தாசனம்' 'எனப்படும். இந்த பொம்மை எப்போதும் சித்தாசனத்திலேயே இருக்கும் .உலகம் உருட்டி உருட்டி கவிழ்த்து விட்டாலும் எவர் உதவியும் இன்றி பொம்மை நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளும்.
இந்த பொம்மை ஒன்றை வாங்கி, நம் மேசை மேல் வைத்துக் கொண்டால், .உலகம் எவ்வளவு கவிழ்த்தாலும் நிமிர்ந்து உட்கார வேண்டும் என்று பொம்மைக்கு தெரிகிற போது நமக்குத் தெரிய வேண்டாமா..
அது, தஞ்சாவூர் செட்டியார் பொம்மையா அல்லது தலையாட்டி பொம்மையா? எது சரி? எது எப்படி இருப்பினும்,உண்மையை எவ்வளவு அழகாக, ஆழமாக இந்த பொம்மைக்குள் வைத்திருக்கிறார்கள். எந்த நிலையிலும் சோர்வடையக்கூடாது, தன்னம்பிக்கையோடு, போராடி வெற்றி பெறவேண்டும் என்பதை இந்த பொம்மை உணர்த்துகிறது அல்லவா….
நன்றி 🙏 இணையம்.
No comments:
Post a Comment