Thursday, June 16, 2022

அப்பா...அப்பப்பா..என்கிற‌ மர்மம்

 அப்பா...அப்பப்பா..என்கிற‌ மர்மம் (படித்ததில் பிடித்தது)

எங்காத்தில் எல்லாமே முடிவெடுப்பது எங்க அப்பாதான். சில சமயம் அவரைக்கண்டால் சிம்ம சொப்பனமா இருக்கும். அவரைக்கேக்காம ஒரு காரியமும் செய்ய முடியாது, அதே சமயத்தில் அவர்கிட்டே போய் யார் கேப்பதுன்னும் தயக்கமா இருக்கும்.

அம்மா கார்த்தாலே இன்னைக்கு என்ன சமைக்கட்டும்னு தயங்கித்தயங்கி கிட்டெக்க போய் கேப்பா. அவர் சொன்னதைத்தான் அம்மா சமைப்பா, அதைத்தான் நாங்க எல்லோரும் வாயை மூடிண்டு சாப்பிடுவோம். இப்படியே 20 வருஷம் ஓடிடுத்து. 

இப்போ எனக்கு வயசு 25. MBA முடிச்சுட்டு HDFCயில் உத்யோகம். சொல்லவே வேண்டாம், நான் என்ன படிக்கணும், எங்கே வேலைக்கு அப்ளை செய்யணும்னு எல்லாமே அப்பா சொன்னபடி. அப்பாவுக்கு தெரிஞ்சவர் HDFCயில் பெரீய பதவியில் இருக்கார். அப்பா சொன்னா தட்டமாட்டார். “என் பையன் கணேசன் இந்த வருஷம் படிப்பை முடிக்கரான், உங்கிட்டே வரச்சொல்ரேன், நீ ஒரு வேலை போட்டுத்தராய்”னு சொல்லிட்டார். 

அவரும் தலை ஆட்டினர். உடனே உங்கள் பொண்ணுக்கோ அல்லது உங்க மச்சினனுக்கோ வேலை வாங்கிக்கொடுக்க சொல்லுன்னு எங்கிட்டே வந்துடாதீங்கோ! நான் அப்பாகிட்டே போய் கேக்கமாட்டேன். 

எனக்கு ஒரு தங்கை. வாசுகி. இப்போதான் CA பண்ரா. அவளும் அடுத்தது தன் வாழ்க்கையில் என்ன நடக்குமோன்னு அப்பா மூஞ்சியை பாத்துண்டு இருக்கா. 

அவள் கிட்டே மட்டும் அப்பா சாதாரணமா எப்போவாவது சிரிச்சுப்பேசுவர். அதுனாலெ நாங்க எல்லோரும் அப்பாவுக்கு வாசுகி செல்லம்னு சொல்லுவோம். ரொம்ப ஏதாவது காரியம் ஆகணும்னா, அவளை தாஜா பண்ணி அப்பாகிட்டே பெசச்சொல்வோம்.

அப்பா சுபாவம் அப்படி. எல்லாம் அவர் விருப்பப்படி இருக்கணும், நடக்கணும்னு எதிர்பாப்பார். அது கொஞ்சம் ரொம்பவே ஓவெரா போகும். நான் என்ன கலர்லே சட்டை போட்டுக்கணும்கிரதில் ஆரம்பிச்சு, மத்தியான சாப்பாட்டுக்கு என்ன எடுத்துண்டு போகணும்னும் அம்மாகிட்டே சொல்லிடுவர். 

ஒருநாளைக்கு வித்யாசத்துக்கு வெளீலெ சாப்பிடலாம்னு நினெச்சா அவர்கிட்டே கேக்கணும். நீதான் கை நிறைய சம்பாதிக்கராயே அதுலேந்து கொஞ்சம் எடுத்து ஹோட்டலில் சாப்பிடகூடாதோன்னு நீங்க நினைக்கலாம். இது வரைக்கும் பண்ணினதில்லை. பண்ணினால் என்ன ஆகும்னு நினெச்சுப்பாத்ததில்லை.

யார் எங்கே போனா, எப்போ ஆத்துக்கு வந்தான்னு அவருக்கு சொல்லணும். மின்னெல்லாம் ஆபீசுக்கு போயிட்டு சாயங்காலம் ஆத்துக்கு வந்தார்னா எல்லாத்தையும் அம்மா ஒப்பிப்பா. 

ஒரு 15 நிமிஷத்தில் வந்த உடனே ஆத்தில் அவர் இல்லாத போது என்ன ஆச்சுன்னு அவருக்கு தெரிஞ்சாகணும். அம்மா ஒண்ணு விடாமல் சொல்லிடுவா, இயல்பா, ரன்னிங்க் காமென்டரி மாதிரி, பொய்யில்லாம. அப்படி ஏதாவது போர்ஷன் விட்டுட்டாலோ அல்லது எதாவது ஒண்ணுகொண்ணு முரணாவோ சொன்னாலோ அப்பா ரெண்டு குறுக்கு கேள்வி கேட்டு கண்டுபிடிச்சுடுவர். அப்படியே ஆனா நீ வேர என்னமோன்னா சொன்னாய், அப்படி சொல்லு, இதை ஏன் எங்கிட்டேந்து மறைச்சாய் அப்படின்னு ஒரு பிடி பிடிப்பர். அதுனால அம்மா தனக்கேன் வன்புன்னு எல்லாத்தையும் சொல்லிடுவாள்.u

போன வருஷம் அப்பா ரிடையர் ஆயாச்சு. ஆத்தில்தான். அவர் பண்ற கெடுபிடி மாறலை ஆனா சில இன்னும் தீர்மானமா, ஆழமா மாறித்து. ஆக மொத்தம் அப்படியே. அன்னைக்கு தன் பால்ய சிநேகிதனுக்கு உடம்பு சரியில்லை, ராமசிருஷ்ணா ஆஸ்பத்திரியில் இருக்கான், போய் பாத்துட்டு ஏதாவது உபகாரம் செஞ்சுட்டு வரேன்னு போரூர் போனார். வரத்துக்கு சாயங்காலம் 6 ஆகிடுத்து. 

“கணெசன் சட்டையில் ஒரு பட்டன் போயிருந்தது, அதை தெச்சேன், அப்புரம் பழைய பேப்பர்காரன் வந்தான் கிலோ 8 ரூவாய்னு எடுத்துண்டான், 9.5 கிலோ இருந்தது, காசை சாமி அலமாரியில் வச்சிருக்கேன். சித்த நாழி தூங்கினேன். 

அப்புரம் எதுத்தாத்து கோமதி வந்து பேசிண்டிருந்தா. அவ ஆத்துக்காரருக்கு வயித்து வலியாம், பெருமாள் டாக்டர்தான் பாக்கிராராம்” இப்படி. உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிரேன்”. இவ்வளவு தகவல் பரிமாற்றம் இருக்கச்சே வாசுகி இன்னொரு பையனோட பைக்கில் வந்து இறங்கினான்னு அம்மா சொல்லாம இருப்பாளா? அந்த பிள்ளையாண்டன் எப்படி இருந்தான்னும் சொன்னா. கூடவே “நான் ஒண்ணும் கேக்கலை, நீங்களே கேட்டுக்கோங்கோ, நீங்க ஆச்சு, உங்க பொண்ணாச்சு”னுட்டா. 

எனக்குத்தெரிஞ்சு எங்க அம்மா இவ்வளவு தைரியத்தை வரவழச்சுண்டு சொன்ன முதல் வார்த்தை அதுதான்.

நாங்கெல்லாம் ஒரு சின்ன பிரளயமே உருவாகி ஆத்து ஜன்னல் கண்ணாடியெல்லாம் தூளாகப்போரதுன்னு நினெச்சோம். ஆனா ஆகலை.

அப்பா அப்படியே எழுந்து கை கால் அலம்பப்போயிட்டார். அப்புரம் சாப்பிடரச்சே வாசுகியை ஒரு பிடி பிடிப்பார்னு நெனச்சோம், அதுவும் இல்லை. அம்மாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துண்டோம். 

அப்புரம் அப்பா எழுந்து போனப்புரம், அம்மாதான் மெல்ல இவளை கேக்கரா, “என்னடி, ஆத்தில் இவ்ளோ பெரீய விஷயம் நடந்துருக்கு, இவர் இப்படி பொறுமையா இருக்கர், ஏண்டி நீ செஞ்சது தப்பில்லையா? நானாவது உன்னை விசாரிச்சிருக்கணும், அப்பா பாத்துப்பார்னு விட்டுட்டேன், யார்டீ அந்த பையன், அவனோட உரஸிண்டு? எப்பவும்போல எலெக்ட்ரிக் டிரைனில் வரதுதானே?” வாசுகியோ, “அவன் என்னோட ஆடிட்டர் ஆபீஸுக்கு வந்திருந்தான், அவருக்கு ரொம்ப நெருங்கிய நண்பரோட பையனாம், எங்கூட ஃபைலெல்லாம் பாத்தான், அப்புரம் “நானும் பொழிச்சலூர் பக்கம் போரேன், வரேளா”ன்னான். அப்பாகிட்டே சொன்னேன், போய்க்கோன்னார், அதான்”னு முடிச்சா. “அப்படின்னா அப்பாகிட்டே சொல்லிட்டா எல்லாம் ஆச்சா? இனிமேல் இப்படி ஏதாவது பண்ணினாயானால் நான் பழைய அம்மாவா இருக்கமாட்டேன்”னுட்டா. 

எனக்கு இது என்ன வீடு, ஆண்பிள்ளையை கராரா வளர்க்கரா, பொண்ணை தண்ணி தெளிச்சு விட்டுட்டானு தோணித்து.

ஒருநாள் என் ஆபீஸ் நண்பர்கள் எல்லோரும் பிக்னிக் போலாம்னு ஏலகிரிக்கு போக ஏர்பாடு பண்ணினா. எனக்கும் ரெண்டுநாள் போயிட்டு வரணும்னு ஆசை. அம்மாகிட்டே கேட்டு பிரயோஜனம் இல்லைன்னு தெரியும். அப்பாவைத்தான் கேக்கணும். அனா பயமா இருந்தது. என்ன சொல்வாரோன்னு. வாசுகியை தாஜா பண்ணி ஒருவழியா அவளைவிட்டு கேக்கச்சொன்னேன். “ஏன் தொரை அவரே கேக்கமாட்டாரோ?”ன்னு சத்தம் போட்டார். அப்புரம் கொஞ்சமா தைரியத்தை வரவழச்சுண்டு, அதுவும் ஆபீஸ் போயிட்டு அங்கேந்து ஆத்துக்கு போன் போட்டு, அப்பாவை கேட்டேன். “வேண்டாம், வீண் சிலவு”ன்னுட்டர். போனை ஓங்கி ரெசீவரில் வச்சேன், எல்லோரும் என்னை ஒருமாதிரியா பாத்தா, மேனேஜர் “உன் கோவத்தை ஆபூஸ் பிராப்பர்டிலே காமிக்காதே”ன்னு எச்சரித்துவிட்டுப்போனார். அவமானமா இருந்தது. 

அன்னைக்கு பூரா வேலையே ஓடலை. நாளைக்கு சனிக்கிழமை எல்லோரும் பிக்னிக் போயிடுவா, ஆனா இந்த 25 வயசுக்குழந்தைக்கு தன்னிச்சயா ஒரு முடிவெடுக்கத்தெரியலை.

ஆத்துக்கு வந்தா வாசுகியைக்காணோம். “எங்கே அவள்”னு அம்மாகிட்டேதான் கோவத்தை காண்பிக்க முடிஞ்சது. அதுக்கு அம்மா சொன்னது இன்னும் என் கோபத்தை கிளரித்து. அவ அம்மாகிட்டே கூட சொல்லாம, அப்பா பெர்மிஷன் வாங்கிண்டு 1 வாரம் தன் ஃபிரெண்ட்ஸோட பெங்களூர், மைசூர் பொயிருக்காளாம். கோவத்தில் ராத்திரி சாப்பாடு வேண்டாம்னுட்டேன். அப்பா கேட்டதும் வயறு சரியில்லைன்னு மழுப்பினேன். படுத்தா தூக்கமும் வரலை. இது என்ன வீடா இல்லை ஜெயிலா? ப்ரிசன் சூபர்வைஸர் மாதிரி, இல்லை பிக் பாஸ் வீட்டை கண்காணிச்சிண்டிருக்காபுலே எது நடந்தாலும் இந்த மனுஷருக்கு தெரியாம நடந்துடாது, எல்லாத்துக்கும் இவரைக்கேக்கணும், எல்லாத்துக்கும் இவருக்கு விளக்கம் கொடுக்கணும், இவர்தான் யார் நல்லவா, யார் கெட்டவான்னு முடிவு செய்வர். ஒருநாள் யார்கிட்டேயும் சொல்லாம கொள்ளாம எங்கேயாவது ஓடிப்போயிடணும்னு தோணித்து. 

இப்படி சிந்திக்கரச்சே எப்படி தூக்கம் வரும்? அதுவும் வெறும் வயித்தில்?

மெல்ல எழுந்துண்டு போய் சமையல் உள்லெ ஏதாவது சாப்பிடக்கிடைக்குமான்னு துழாவரத்துக்கு போரேன், உள்ளே அப்பாவோட படுக்கை ரூமிலேந்து பேச்சு சத்தம் கேக்கரது. 

“அது சரி, நடந்தது நடந்துபோச்சு, அத்தோட விட்டுடு.” இது அப்பா. “அதெப்படி, இதுநாள் வரைக்கும் இல்லாத புதுப்பழக்கம். இதெல்லாம் எங்கேந்து கத்துண்டு வந்திருக்கேள்? என்னை கேட்டிருக்கணுமா வேண்டாமா? ஒருதடவை போகட்டும்னு விட்டா திரும்பவும் தன்னிச்சையா என்ன முடிவெடுகிரது, உங்களுக்கு யார் இவ்வளவு தைரியத்தை கொடுத்தா? – இது அம்மா! அம்மா கேட்டதுக்கு அப்பாகிட்டேந்து ஒரு பதிலும் இல்லை. எனக்கோ ஆச்சர்யமா இருக்கு, கிட்செனில் வந்த காரியத்தை மறந்து அவா பேச்சை உன்னிப்பா கேக்க ஆரம்பிக்கரேன். இது நிச்சயம் அவா பெர்சொனல் மெட்டர் இல்லைன்னு தெளிவா புரிஞ்சது. ஆத்து விஷயம்தான்.

“அன்னைக்கு என் கிட்டே கேக்காம வாசுகியை யாரொ ஒரு முன்பின் தெரியாத பிள்ளையாண்டனோட பைக்கில் உக்காந்துண்டு வர அனுமதிச்சேள். உங்களுக்கு தெரிஞ்சவரோட நண்பர் பையன்னு தெரிஞ்சப்புரம் சரின்னு விட்டேன். இப்போ யாரொட 1 வாரம் வெளியூருக்கு அவளை அனுப்பிச்சேள்? எங்கிட்டே கேட்டுத்தானே எல்லா காரியத்தையும் 28 வருஷமா செய்யரேள்? என்ன, இந்தாத்தில் நான் சொல்ரபடிதான் நடக்கிரதுன்னு யாருக்கும், குறிப்பா குழந்தைகளுக்கு தெரியப்பிடாதுன்னு உங்களை முன் வச்சு எல்லாத்தையும் பாத்துண்டேன். உங்கள் மறியாதை கெட்டுடக்கூடாதுன்னு அவா முன்னாடி நடந்துண்டிருக்கேன், எல்லாமே உங்களைக்கேட்டுத்தான் செய்யணும்னு சொல்லியே அவாளை வளர்த்தாச்சு. ஆனா நீங்க என்னை கேக்காம அவாளுக்கு முடிவு சொல்லப்பிடாதுன்னு அண்டர்ஸ்டேண்டிங்க். இப்போ என்ன புதுப்பழக்கம்? இது எங்கே போய் முடியும்? இதுவே கடைஸீயா இருக்கட்டும்”னு முடிக்கரா.

அப்பா மூஞ்சி எப்படி போச்சுன்னு இங்கேந்து பாக்க முடியலை. ஆனா அப்பா,தன் செயலுக்கு விளக்கம் மாதிரி. “அடியே, அன்னைக்கு ஒருநாளைக்கு நான் உங்கிட்டே வேஷ்டி கிழிஞ்சுடுத்து, இன்னொண்ணு வாங்கிக்கணும், வாங்கிக்கலாமான்னு உங்கிட்டே கேட்டு நீ அடுத்த மாசம் வாங்கிக்கலாம், நானே சீப்பா வாங்கித்தரேன்னு சொன்னதையும், இப்போதைக்கு கோடியிலே இருக்கிர தையற்காரங்கிட்டே கொடுத்து தெச்சுக்கசொல்லி நீ 10₹ கொடுத்ததையும்” வாசுகி உன் பொண்ணு பாத்துட்டா. 

என்னை அவ மொட்டை மாடீக்கு அழைச்சுண்டு போய் அதைசொல்லி “என்ன அப்பா இது எத்தனை நாளாய் நடக்கிரது”ன்னு கேக்கிரா. நாங்க கல்யாணம் பண்ணிண்டதுலேந்துன்னு சொல்லவேண்டியதா போயிடுச்சு. அவ உடனே அண்ணாவுக்கு தெரியுமா, இல்லை நானே சொல்லட்டுமான்னு வேற தினம் என்னை ப்ளாக் மைல் பண்ணுவா. அதான் இந்த ரெண்டு விஷயத்திலும் அவ இஷ்டப்படி”ன்னு இழுத்தார்.

“சரி நான் அவளை வந்ததும் சமாளிக்கரேன். இது கணெசுக்கு தெரியாம பாத்துக்கோங்கோ”ன்னு அம்மா. “சரி இப்போ அந்தப்பக்கம் திரும்பி தள்ளிப்படுங்கோ, எனக்கு கார்த்தால நிறைய வேலை கிடக்கு, இப்போவே மணி 1130”ன்னுட்டு லைட்டை அணைக்கரா.

எனக்கு இப்போ ஏலகிரி போகாதது ஒரு பொருட்டாவே தெரியலை. ஆனா இந்த கனபாடிகளோட வேஷ்டி மட்டும் இல்லை, வாழ்க்கையே இப்படி ஒரே கந்தலாக இருந்திருக்கேன்னு நினெச்சுண்டேன்.

(அம்மா...அம்மம்மா..இது என் ரியாக்ஷன்)

No comments:

Post a Comment