Thursday, October 24, 2019

ரவை முறுக்கு, பட்டர் முறுக்கு பாசிப்பருப்பு முறுக்கு

 ரவை முறுக்கு

தேவையானவை:

அரிசி மாவு - கால் கப்
 ரவை - கால் கப்
 தண்ணீர் - 1 கப் (ரவை வேக வைக்க)
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 எள் - 2 சிட்டிகை
 சீரகம் - 2 சிட்டிகை
 வெண்ணெய் - 1 டீஸ்பூன்
 சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

ரவையை வறுக்காமல் மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். 

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ரவை சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும். 

ரவை நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும். 

அகலமான பாத்திரத்தில் வேகவைத்த ரவை, அரிசி மாவு, சூடான எண்ணெய், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், எள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து மாவை தேன்குழல் ஆச்சு அல்லது முள்ளு முறுக்கு அச்சு (ஸ்டார் அச்சு) மூலம் பிழியவும். 

முறுக்கு இருபுறமும் வெந்து எண்ணெயின் சலசலப்பு ஓசை அடங்கியதும் எடுத்தால், மொறு மொறுப்பான ரவை முறுக்கு தயார்.

குறிப்பு:

ரவை நன்கு ஆறியவுடன் முறுக்கு செய்யவும்.

 பட்டர் முறுக்கு

தேவையானவை:

அரிசி மாவு - அரை கப்
 கடலை மாவு - அரை கப்
 பொட்டுக்கடலை - அரை கப்
 வெண்ணெய்/ நெய் - 1 டீஸ்பூன்
 காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 சீரகம் - 2 சிட்டிகை
 எள் - 2 சிட்டிகை
 எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்கவும். 

அகலமான பாத்திரத்தில், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். 

இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். 

மாவை 3 கண் உள்ள ஸ்டார் அச்சில் சிறிது சிறிதாக விட்டு, ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் பிழியவும். 
மாவு இருபுறமும் வெந்தவுடன், எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

குறிப்பு:

பட்டர் முறுக்குக்கு ஸ்டார் அச்சையே பயன்படுத்தவும்.

பாசிப்பருப்பு முறுக்கு

தேவையானவை:

அரிசி மாவு - 1 கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - 1 டீஸ்பூன்
 காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 எள் - 2 சிட்டிகை
 சீீரகம் - 2 சிட்டிகை
 எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் விடாமல் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். 

அகலமான பாத்திரத்தில், அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் சேர்த்து கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்க்கவும். 

தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான முறுக்கு மாவாகப் பிசையவும். 

3 கண் உள்ள தேன்குழல் அச்சில் மாவை விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில், பிழியவும். 

மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால், வாசனையான மொறு மொறு பாசிப்பருப்பு முறுக்கு தயார்.

குறிப்பு:

இதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment