Wednesday, August 7, 2024

திமிருக்கு அரசன் - 1

திமிருக்கு அரசன் - 1

by வேதா விஷால்

"அப்பா, ருத்ராக்குப் பிடிக்கலைன்னா ஏன் கம்பெல் பண்றீங்க?" " உன் தங்கச்சியப் பத்தியும், அவ இப்ப செய்யறதெல்லாமும் நல்லாத் தெரிஞ்ச நீயே இப்படிப் பேசலாமா கதிரு?" "அதுக்கில்லப்பா, அவன் நல்லவன்தான். ஆனா வீம்பும் பிடிவாதமும் ஜாஸ்தி." மகனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார், பரமேஸ்வரன். அதில்  ' நம்ம பொண்ணுக்கென்ன இதுக்கெல்லாம் குறைச்சலா' என்ற கேள்வி இருந்தது. " இல்லப்பா ருத்ராவை ரொம்ப சொகுசா, செல்லமா, வளர்த்துட்டோம். இன்னும் கொஞ்சம் வசதியான இடமாப் பார்த்து…..". "அந்த மாதிரிப் பையன் என்ன தேவைக்கு இவளைப் பொறுத்துப்பான். ரெண்டே மாசத்துல திரும்பி வந்துருவா" 'இப்ப மட்டும்' என்று முணுமுணுத்தான் கதிர். "கதிர், உன் கவலை, எனக்குப் புரியாம இல்லை. இந்தக் கல்யாணத்தால அவ வாழ்க்கையை இழக்க மாட்டாங்கறதுதான் ஒரே நம்பிக்கை. அதுக்குதான், அவன் போட்ட எல்லா நிபந்தனைக்கும் நான் சம்மதிச்சிருக்கேன்." " நீங்க வீட்டோட மாப்பிள்ளையாகவாது வரணும்னு சொல்லியிருக்கலாம்பா?". "அப்ப ருத்ரா திருந்தவே வேணாங்கிற.  அவ, அவங்க வீட்டுக்குப் போறதுதான் சரி". "அதுதான்ப்பா எனக்குக் கவலை. நம்ம ருத்ராவை அவன் கொடுமைப் படுத்தினா?" " யாரை? உங்க தங்கச்சிய? ஏங்க உங்களுக்கே அந்த பையனைப் பார்த்தா பாவமாயில்லை?" என்றவாறே இருவருக்கும் தேநீருடன் வந்தாள் ரமா, கதிரின் மனைவி. " அப்படிச் சொல்லும்மா" என்று சிரித்தார் பரமேஸ்வரன். பரமேஸ்வரன் கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையில்  உள்ள கிராமங்களில் நிலபுலன்கள் அதிகம் உள்ளவர். தென்னை, திராட்சை, ஒருபோகம் அரிசி, காய்கறி, பழங்கள் என்று விளைவிப்பவர். இது தவிர ஊட்டியிலும், வால் பாறையிலும் பழத்தோட்டங்கள் வைத்திருக்கிறார். ஒரு பெரிய ரைஸ் மில்லும், தேங்காய் எண்ணெய் ஆட்டும் மரச்செக்கு மூன்றும் வைத்திருக்கிறார். அவரது வாலிபவயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்ததின் பலனாக எண்பதுகளில் பழைய தியேட்டர் ஒன்றை வாங்கிப் புதுப்பித்தார். அதுவும் இரண்டாவது ரிலீஸ் ஷோக்களுடன் வெற்றிகரமாக ஓடுகிறது. பரம்பரை விவசாயி. பழமையில் ஊறிய கிராமத்து மனிதரென்றாலும்  மாற்றங்களை ஏற்றுக் கொள்பவர். மனைவி காந்திமதி மகள் ருத்ராவுக்கு ஐந்து வயதானபோது, மூன்றாவது பிரசவத்தில் இறந்துவிட்டார். குழந்தையும் பிழைக்கவில்லை. கதிர் மூத்த மகன்.  இருபத்தெட்டுவயது. கோவை விவசாயக் கல்லூரியிலேயே பட்டம் படித்துவிட்டு, பரமேஸ்வரனுக்குக் கிட்டத்தட்ட ஓய்வு கொடுத்துள்ளான். அவன் மனைவி ரமா, அவனது தாய் மாமனின் மகள். கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் இலக்கணமாய் இந்தச் சமூகம் வரைந்திருக்கும் பிம்பத்தில் முழுமையாகப் பொருந்துபவள். ருத்ரா, நம் நாயகி, அவளுக்குப் பெயர் மிகவும் பொருத்தம். பயங்கரக் கோவக்காரி. சட்டென்று எடுத்தெறிந்து பேசி விடுவாள். பள்ளிப் பருவத்தில் தினமும் ஒரு வம்புடன்தான் வருவாள். கதிர் குறைந்தது இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது வந்து அழுவான். "அப்பா ஒண்ணு அவளை வேற ஸ்கூலுக்கு மாத்துங்க. இல்ல, என்னை ஹாஸ்டல்ல போட்ருங்க" என்பான். ருத்ராவை கல்லூரியில் சேர்க்கையில், கோயம்புத்தூரிலேயே ஹாஸ்டலில் சேர்த்தார். ஒரே வாரத்தில் காலேஜிலிருந்து ஃபோன் வந்து விட்டது. ' நீங்கள் ஹாஸ்டலைக் காலி செய்யவில்லை என்றால்  உங்க பொண்ணோட காலேஜ் ஸீட்டைக்  கிழித்துவிடுவோம்' என்று. (ரிலாக்ஸ் மக்கா! அப்பப்போ சொல்றேன்!). ருத்ராவை , அதுக்காக நீங்க ஒரு சொர்ணக்கா, 'திமிரு' ஸ்ரேயா ரேஞ்சுக்குக் கற்பனை பண்ணாதீங்க!. ஏன்னா அம்மிணி அம்புட்டு அழகாக்கும். நல்ல செலுலாய்ட் பொம்மை மாதிரி, வனப்பும், வலிமையும் , பொள்ளாச்சியின் செழுமையும் தெரியும். ஒருமாதிரித் தேன் நிறம். கட்டாயம் பார்ப்போரைத் திரும்பிப் பார்க்கச் சொல்லும்.ஆனால் பக்கத்தில் சென்றால், "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க" என டயலாக் எல்லாம் விடமாட்டாள். அடித்துவிட்டுத்தான் பார்க்கவே செய்வாள். பெண்ணியம் என்றும் பெண் சுதந்திரம் என்றும் அவள் நினைக்கும் கருத்துக்களுக்கும் அந்த சித்தாந்தங்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. அவள் கூறும் பெண்சுதந்திரம் அவளுக்கு மட்டுமே என நினைப்பவள். இஞ்சினீயரிங் படிப்பு முடிந்து ஒருவருடம் ஆகப்போகிறது. மேலே படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ, பரமேஸ்வரன் அனுமதிக்கவில்லை. அவளுக்கும் பெரிதாக ஆர்வமில்லை. சோப்பு, சீப்பில் தொடங்கித் தனக்கு உரிமையானதை யாருக்கும் அவசியத்துக்குக் கூட பகிரமாட்டாள்.  அப்பா, அண்ணன், அப்பத்தா, அந்த வீடு எல்லாம் அவளுடையது  என்ற உரிமையுணர்வு (possesiveness) அதிகம் நிறைந்தவள். கதிருக்கு நல்லவேளை மாமன்மகளுடன் திருமணம். ரமாவை முன்பே தெரியுமென்பதால் ஒரளவு ஏற்றுக்கொண்டாள். அசலில் எடுத்த பெண்ணாயிருந்தால் எப்போதோ கதிருக்கு விவாகரத்தாகியிருக்கும். வேலையாட்கள், பண்ணையாட்கள் எல்லோரையும் யாரென்று பார்க்காமல் திட்டி விடுவாள். அன்று ருத்ராவின் கல்லூரித் தோழிகள் சிலர்  மதிய உணவுக்கு வந்திருந்தனர். அவர்களின் வருகைக்காக நிறைய ஐட்டங்கள் சமைக்கப்பட்டிருந்தது. சிக்கன் கிரேவியில் உப்புக் குறைவாக இருந்தது, ருத்ரா சொன்ன இனிப்பைச் செய்ய மறந்து விட்டார் என்பதற்காகப் பல வருடங்களாய் வேலை செய்யும் அன்னம்மாவை ருத்ரா கண்டிக்கும்முன் அவள் அண்ணி ரமா, அன்னம்மாவைக் காப்பதற்காக அந்தக் கிரேவியைத் தான்தான் செய்ததாகக் கூறினாள். கதிருடன் திருமணமாகி ஒரு வருடம் கூட நிரம்பாத ரமாவை என்ன செய்கிறோம் என்று தெரியாத கோவத்தில், அறைந்துவிட்டாள். மிரண்ட அவள் சிநேகிதிகள் சாப்பிடாமலே சென்றுவிட்டனர். என்னதான் அத்தைமகள், நாத்தனார் என்றாலும் அடித்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத ரமா பிறந்தகம் சென்றுவிட்டாள்.  பொறுமைக்கும் அளவு உண்டல்லவா? மாமன் மகளை ஆசைப்பட்டு, வேண்டி, விரும்பி மணந்த கதிர் நொந்து போய்விட்டான்.  பத்தே நாட்களில் பொலிவிழந்து காட்சியளித்தான். பரமேஸ்வரனும் கதிரும் கெஞ்சிக் கூத்தாடி ரமாவைத் திரும்ப அழைத்து வந்தனர். இப்போது ரமா மூன்றுமாத கர்ப்பம். ஆனால் ருத்ராவிடம் ஒரு நல்ல பழக்கம். கோபம், சண்டை எல்லாம் மறந்து உடனே பேசிவிடுவாள். அவளது கோபம் பொங்கி வெடித்ததும் அவள் தணிந்து விடுவாள். ஆனால் பாதிக்கப்பட்டவர்? நான்காம் வகுப்புப் படிக்கையில் அவளை '  Fighting cock  (சண்டக் கோழி)' எனப் பெயரிட்ட ஒரு பையனை சறுக்கு மரத்தின் மேலிருந்துத் தள்ளியதில் அவனுக்கு வலது கையில் ஃப்ராக்சர். பரமேஸ்வரன் மருத்துவச் செலவும் செய்துப் பள்ளியிலிருந்து நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டார். சின்ன வயதிலேயே தாயை இழந்ததினாலா என்றால், பரமேஸ்வரனின் தாய் ஓரளவு தெம்புடன் இருந்தவர் ருத்ரா இரண்டாம் வருடம் படிக்கையில்தான் காலமானார். அவரின் மரணம் மற்றும் ரமாவின் வருகை இரண்டும் அவளது சுபாவத்தை மோசமாக்கியது. ருத்ராவின் இந்த சுபாவத்திற்குப் பரமேஸ்வரனும் ஒரு காரணம். தாயில்லாப் பெண் என்பதால் ஓவர் செல்லமும், தவறு செய்தாலும் அழுத்தமான கண்டிப்பின்மை, எதைக் கேட்டாலும் வாங்கித் தருவது, முக்கியமாக பிறரைவிட ருத்ரா உசத்தி, பெஸ்ட் எனும் ஒப்பீடு என எல்லாம் சேர்ந்து அவளை அல்லிராணியாகவே ஆக்கிவிட்டது. வீட்டு வேலைகளோ, படம் வரைதல், கோலம் போடுதல் போன்ற இயல்பாகவோ, ஆர்வத்துடனோ பெண்கள் செய்யும் எதுவும் அவளுக்குத் தெரியுமா இல்லையா என்பது அவளுக்கே வெளிச்சம். அவளாக உருவகித்துக் கொண்ட , சுதந்திரம் மிக்க, ஆளுமை கொண்ட பெண்ணாகத் தன்னை நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு, வெளிப்படுவது சுதந்திரம் இல்லை, திமிரும், ஆணவமும் என்று புரியவில்லை. அன்புதான் ஆளுமை என யார் சொல்வது? அவளிடம் இருக்கும் இன்னொரு பிரசினை வசதி குறைந்தவர்கள், அவர்களிடம் வேலை செய்பவர்களை அலட்சியமாகவும் , கடமைப்பட்டவர்கள் போலவும் நினைப்பது. மொத்தத்தில் ஒரு மினி நீலாம்பரிதான் நம் ருத்ரா. இதற்கெல்லாம் காரணம் அவளுக்குள் இருக்கும் அன்பை வெளிக்காட்டத் தெரியாததுதான், என அவள் தந்தை பரமேஸ்வரன், வார்த்தைகளில் இல்லாவிட்டாலும், உள்ளுணர்வால் உணர்ந்ததின் விளைவே இந்தத் திருமண ஏற்பாடு. ************************ சக்திவேல். ருத்ராவைப் பெண்மையும், மென்மையுமாக மாற்றிச் சாதிக்கக் கூடிய ஆதிக்க நாயகன் என்று அவள் தந்தை  பரமேஸ்வரனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இவனிடம் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால், அவன் சாதாரணன். தன்னையும், தன்னைச்சேர்ந்தவர்களையும் நேசிப்பவன்.  எல்லாவற்றுக்கும் மேல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தவறோ சரியோ முடிவெடுக்கத் தெரிந்தவன். இருபத்தி ஏழு வயது இளைஞன். வசீகரன். பி.எஸ்.ஜி யில்  மெக்கானிக்கல் இன்சினீயரிங் படித்துவிட்டு, ஒருவருட பணி அனுபவத்திற்குப் பிறகு ஐஐஎம், பெங்களூரில் எம்பிஏ படித்தவன். 

சொந்தத் தொழில்தான் செய்வேன் என்று வங்கிக்கடன், தந்தையின் ஐந்து ஏக்கர் நிலம் இவற்றின் உதவியுடன், அதே கோவை- பொள்ளாச்சி இடையே கார் உற்பத்திக்குத் தேவையான ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி,   மூன்றரை வருடங்களாகிறது. ஒரு வருடமாக நல்ல ஓட்டம். உற்பத்தியின் தரத்துக்கு பயன்பாட்டாளர்கள் ஐந்து நட்சத்திரங்கள் கொடுக்கின்றனராம். ஒரு அண்ணன், செந்தில் .கோவை கவர்மெண்ட் கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கிறான். மனைவி, வளர்மதி. பத்துமாதப் பெண் குழந்தை, அம்மு. ஒரு தங்கை, நந்தினி, கிருஷ்ணம்மாள் காலேஜில், பிஎஸ்சி, கணிதம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். தாய்: சொர்ணா, தந்தை: ராமலிங்கம். இந்தத் திருமணத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒரே இனம், படித்த குடும்பம், ஆளுமையும் சாமர்த்தியமும் நிறைந்த பையன் என்பதையெல்லாம் விட, பரமேஸ்வரனிடம், அவரது கணக்கப்பிள்ளை, காரியதரிசி, எஸ்டேட், ஃபேக்டரி மேனேஜர் என எல்லா வேலையையும் ஒருவராகச் செய்யும் ராமலிங்கம் தன் குழந்தைகளின் படிப்பிற்காக வாங்கிய கடன்.( இரண்டு மகன்களின் படிப்பு, மூத்த மகனின் திருமணம் என சிறுகச் சிறுக வாங்கிய கடன்,  சம்பளத்தில் பிடித்தது போக அசலும் வட்டியுமாய் பதினோரு லட்சத்தில் வந்து நிற்கிறது). இரண்டாவது காரணம் தன் கைக்கடங்கிய  வீட்டோட  மாப்பிள்ளையாக்கிக் கொள்ள நினைத்தவரிடம், அதை மறுத்து அவன் கொடுத்த விளக்கமும், போட்ட நிபந்தனைகளும்,தன் மகளை அவன் வழிக்குக் கொண்டுவந்து வாழ வைத்து விடுவான் என்ற நம்பிக்கையைக் கொடுத்ததனால். பணம் படைத்த முதலாளி  மகள் என்பதோடு மட்டுமில்லாது, ருத்ராவின் குணத்தை நன்கறிந்தவர் ராமலிங்கம். சிறுவயது முதலே குடும்பக் கஷ்டத்தையும், நிலைமையையும் உணர்ந்த பொறுப்பான மக்களைப் பெற்ற அவருக்கு ருத்ராவை சக்தியுடன் இணைத்துப் பார்க்கத் துளியும் விருப்பமில்லை. தான் உண்டு, தன் படிப்பு, விளையாட்டு, கல்லூரியில் கற்றுக்கொண்ட கீபோர்ட் உண்டு என்று  தன் வேலையைப் பார்ப்பவன். தன் சொந்த முயற்சியால் தொழில் தொடங்கி வெற்றி கண்டவன். அவர் நிலத்தை விற்றதற்குப் பதிலாகத் தங்கையின் கல்யாணத்திற்குப் பணம் சேர்ப்பவன். அப்படிப்பட்ட மகனுக்கு, வாங்கிய கடனுக்காக அந்த அடங்காபிடாரியை, (இதை நினைக்கும்போதே பயந்தார்) கட்டி வைப்பதா என்று வீட்டில் சொல்லாமலே காலம் கடத்தினார், ராமலிங்கம். ஒருவாரம் பொறுத்த பரமேஸ்வரன், நேரே, சக்தியின் ஃபாக்டரிக்கேப் போய்விட்டார். உண்மையை உடைத்துச் சொன்னவர், கடன் ஒரு காரணம்தான் என்றும், அவனால் ருத்ராவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் கூறினார். "நீ எங்களோடவே வந்துடலாம் சக்தி. உங்கவீடு உள்ளூருதானே. தினம் கூடப் போகலாம்" என்றவரை முறைத்தவன், " நான் எங்கப்பா வாங்கின கடனுக்காக பயப்படலை சார். அதை என்னால ஒரு ரெண்டு வருஷத்துல அடைச்சிட முடியும். ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க,  வீட்ல பேசிட்டு பதிலை நானே வந்து சொல்றேன். இது கூட நீங்களே வந்து கேட்டதுனாலதான்" என்றான் தெளிவாக. சக்திவேலுக்குத்  தன் வீட்டுப் பெண்களைப் பற்றித் தெரியும். அநாவசியமாக யாருடனும் பேசாதவர்கள். அக்கம்பக்கத்தினர் மதிக்கும் படி இருக்கும் குடும்பம். அண்ணி வளர்மதியும் அப்படியே. படித்த, பண்பான பெண். அவன் தங்கையோ இன்னும், அனைவருக்கும் சிறுபெண்தான். அவனது அப்பத்தா ராமலிங்கத்தின் தாய் எண்பது வயதிலும் திடகாத்திரமாய் இருக்கிறார். தன் வீட்டினரிடம் பரமேஸ்வரனின் வருகையைச் சொன்னதும், ராமலிங்கம் கலங்கிவிட்டார். அவனது அம்மா, அப்பத்தா இருவருமே அவர்கள் வசித்து வந்த அந்தப் பூர்வீக வீட்டை விற்றுக் கடனைக் கட்டலாம் என்றனர். " ஏண்டா, உன்னை மாதிரியே உன் முதலாளிக்கும் புத்தி மட்டோ?  கல்யாணம் பேச ஆயி, அப்பனைக் கேக்காமக் கல்யாண மாப்பிள்ளையவாக்  கேப்பாங்க?" என்று ராமலிங்கம், அவர் முதலாளி இருவரையுமே வசை பாடினார் அப்பத்தா. அதன்பிறகே ஒருவாரத்திற்கும் மேலாக தான் மறைத்ததைக் கூறினார், ராமலிங்கம். சக்திவேல் நெகிழ்ந்து போனான். இந்தக் குடும்பத்திற்காக எதையும் செய்யலாம் என்று எண்ணியவன், அந்தக்கணத்தில் முடிவு செய்தான், ருத்ராவைத் திருமணம் செய்து கொள்வதென்று. மறுத்த வீட்டினரிடம், " அப்பா, இதை நம்ப வாங்கின கடனுக்காகச் செய்யலை. தாத்தா, நீங்க ரெண்டு பேருக்குமே அவங்க வீட்லதான் வேலை. உங்க ஐயா உங்க மேல இருக்கற நல்ல அபிப்ராயத்துலயும், நம்பிக்கையிலயும்தான் கேட்ருக்காரு." "அதையும் மீறி ஒரு தவிப்புலதான் எங்கிட்டயே வந்து பேசுனாரு. ஊருக்கே அந்தப் பொண்ணப் பத்தித் தெரியும்னு சொன்னார். அவர் எதையும் மறைச்சுப் பேசலை.  நம்பளை நம்பி வந்து கேட்ருக்காரு. நம்ம இனத்துல பொண்ணைத்தான் போய்க் கேட்போம். அவர் அதைக் கூட நினைக்கலை." அவனது அண்ணன், "அப்படின்னா இந்தக் கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கறயா?". "ரெண்டு நாள் அவகாசம் கேட்டிருக்கேன். இன்னிக்குத் வெள்ளிக்கிழமை. திங்களன்னிக்கு நானே வந்து பதில் சொல்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கென்னவோ தப்பில்லைன்னு தோணுது. எல்லாரும் யோசிச்சு என்ன முடிவு செஞ்சாலும் சரிதான்." " சக்தி.. அவரு உன்னை வீட்டோட மாப்பிள்ளையால்ல கூப்பிடறாரு?" - அம்மா சொர்ணா. " அம்மா, அவரு கூப்பிட்டா  நான் போயிடுவேனா? நாம சம்மதம்னு சொன்னா அவர் கடனுக்கும் அதுக்கும் சரியாப் போச்சு. அதுக்கப்புறம் நான் போடற நிபந்தனைக்கு அவர் ஒத்துக்கிட்டா கல்யாணம். இல்லைன்னா அவர் விருப்பம்" " அவர் ஒத்துக்கலைன்னா?" - ராமலிங்கம். " ஒத்துக்குவாருப்பா. ஏன்னா அப்பதான் அவர் பொண்ணு வாழ்க்கை அவர் நினைச்ச மாதிரி இருக்கும்". பலத்த விவாதங்கள், யோசனைக்குப் பிறகு திங்களன்று தன் தாய்,தந்தை, அப்பத்தா, மற்றும் அண்ணனுடன் பரமேஸ்வரனுக்குச் சொல்லிவிட்டு முறையாகப் பெண் கேட்கச் சென்றான். இந்தத் திருமணத்தில் இருந்த சவால் சக்திவேலை ஈர்த்தது. அதுவே அவனைச் சம்மதிக்கவும் வைத்தது.

No comments:

Post a Comment