திமிருக்கு அரசன் 3
'எனக்கு சக்தி கிட்ட பேசணும்' என்ற ருத்ராவின் குரலில் ராமலிங்கம் குடும்பத்தினர் ஒன்றும் வியப்போ, அதிர்ச்சியோ அடையவில்லை. மாறாக இதை எதிர்பார்த்தும், இயல்புபோலும் அமர்ந்திருந்தனர். முதல் பந்து வெறும் 'நோ பால்' ஆனதில் கடுப்பானாள் ருத்ரா. 'அம்மணிக்கு நம்ம பேரு ரிஜிஸ்டர் ஆயிருச்சுடோய்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு வேடிக்கை பார்த்தான் சக்திவேல். பரமேஸ்வரன் சமாளிக்க விரும்பி, "அதுக்கென்னம்மா பெரியவங்க பேசிமுடிச்சப்புறம் நீங்க பேசுங்க. ரமா, எல்லாருக்கும் காபி, பலகாரம் கொண்டு வாம்மா" என்றார். " சம்பந்தம் உறுதியாகாம கைநனைக்கக் கூடாதுன்னு தெரியாதா இவங்களுக்கு?" என்றாள் ருத்ரா. சொர்ணாவும், செந்தில்வேலும் தங்களைமீறி எழுந்துவிட்டனர். பதறிவிட்டார் பரமேஸ்வரன். ராமலிங்கமோ சந்திரமுகி படத்தில் வரும் வடிவேலைப்போல் 'ஒறஞ்சுபோய்' உட்கார்ந்திருந்தார். அப்பத்தாவும், சக்தியும் பார்த்துக்கொள்ள, சக்தியிடம், தலையசைத்தார் அவர். "எனக்கு அவங்களோட பேசறதுக்கு முன்னாடி உங்களோட பேசணும். உங்க கூட யார் இருக்கணும்னு நீங்க முடிவு செஞ்சுக்கங்க சார்" என்று ருத்ரா போட்ட கூக்ளியை பௌல் செய்தான் சக்தி. 'இப்புடி ரெண்டுபேரும் கயிறு இழுத்தா விளங்கிரும்' என்று நொந்து போனார் பரமேஸ்வரன். உறவினர்களெல்லாம் ஏதோ ரஜினிபடம் ஃபர்ஸ் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பதுபோல் திறந்தவாயை மூடாமல் பார்த்தனர், ஸாரிங்க, பார்த்து ரசித்தனர். 'நல்லவேளை முறை என்று பொண்ணைக்கேட்டு அசிங்கப்படலை' என்று அன்பரசனுக்கு அம்புட்டுச் சந்தோஷம். கதிர் நிலைமையைக் கையில் எடுத்துக்கொண்டு , "அப்பா, வாங்க நீங்க, மாமா, நான் மூணு பேரும் ஆபீஸ்ரூமுக்குள் போகலாம். வாங்க சக்தி" என்றான். சக்தி இதற்குள் தன் குடும்பத்தினரைக் கண்களாலேயே ''இதுக்கேவா"' என்பதுபோல் சிரித்து சமாதானம் செய்தான். சக்தி வேல் தன் அப்பத்தாவுடன் எழுந்து அறையை நோக்கி நடக்க, "உங்க வீட்ல பொம்பளைங்கதான் பேசுவாங்களோ?" என்றாள் ருத்ரா கேலியாக. சொர்ணாவின் அண்ணன் எழுந்து வாசல்பக்கம் சென்றுவிட்டார். பின்னே? திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் "என்னதான் பணமிருந்தாலும் இப்படியா ஒரு பொண்ணு பேசும்? சக்திக்கென்ன தலையெழுத்தா?" என்று சிறிது உரக்கவே முணுமுணுத்துவிட்டுச் சென்றார். "எங்க வீட்ல பெரியவங்கதான் பேசுவாங்க" என்று திரும்பிப் பார்க்காமலே அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுச் சென்றான் சக்தி. "சபாஷ் , சரியான போட்டி" என ரமா தனக்குள் முணுமுணுத்தவள் சொர்ணாவிடம் அமர்ந்து பேச ஆரம்பித்தாள். சொர்ணா ருத்ராவைப் பார்த்து, "இங்க வந்து உட்காரும்மா" எனவும் அதிசயமாகச் சொன்னதைச் செய்தாள். அதற்குமேல் பேசத் தைரியம் இல்லாதவராய் சொர்ணா அமர்ந்திருக்க, ருத்ரா அவர்கள் பெண் கேட்டு வந்ததின் பின்னணியை அவரிடமிருந்தே அறியும் முயற்சியில் இறங்கினாள். " நீங்க என்னைப் பார்த்திருக்கீங்களா?" "இல்லைமா" "உங்க பையன்?" "நாங்க யாருமே உன்னைப் பார்த்ததில்ல அவரைத்தவிர" என்று ராமலிங்கத்தைக் கை காட்டினார். "அப்புறம் எப்படிப் பொண்ணுகேட்டு வந்தீங்க?" ரமா ருத்ராவை அடக்கமுயல, அன்னையின் உதவிக்கு வந்த செந்தில், " இதை உங்க அப்பாகிட்ட கேளுங்களேன்" என்றான். ஏற்கனவே சக்திதான் மாப்பிள்ளை எனத்தெரிந்ததில் வருந்திய அன்பரசுவின் தங்கை, செந்திலின் கம்பீரமான குரலில் ஈர்க்கப்பட்டாள். அவனையே பார்த்தவளைக் கண்டவன் ஃபோனை எடுத்து வளர்மதியை அழைத்தான். "மதி டார்லிங், அம்முகுட்டி என்னபண்றா? படுத்தாம இருக்காளா? நீயும் நந்துவும் சாப்பிட்டீங்களா?" என்று சத்தமாகப் பேசிக்கொண்டே வாசலுக்குச் சென்று மாமாவுடன் சேர்ந்து கொண்டான். அவனின் டார்லிங் என்ற அழைப்பில் திகைத்த சொர்ணாவும் ராமலிங்கமும் அந்தப் பெண்ணின் பார்வையைக் கண்டு புன்னகைத்துக் கொண்டனர். ருத்ராவோ 'இவங்க குடும்பத்துல எல்லாரும் பெரீய்ய மன்மதக் குஞ்சு' என்று முணுமுணுப்பாகத் திட்டியவளின் மனதின் ஏதோ ஒரு மூலையில் சக்தியின் உருவம் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் வந்து போனது. ********************** அறையின் உள்ளே சென்று அமர்ந்தபின் சிறிது மௌனம் நிலவியது. பின் சக்தியே பேச ஆரம்பித்தான். "சார் எங்கப்பா வந்து பேசினா மரியாதையா இருக்காதுன்னுதான் எங்க பாட்டியோட வந்தேன். எங்கவீட்ல மத்தவங்களைவிட இவங்கதான் இந்தக் கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்றாங்க" "........." ஒரு டிடி( Demand draft)ஐ எடுத்து அவர் கையில் கொடுத்தவன், "சார் இது உங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்கானது. இதோட எங்கப்பா வாங்கின கடனை அடைச்சாச்சு. இப்ப இந்தக் கல்யாணம் கடனுக்காக நடக்க வேண்டாம். இன்னும் உங்களுக்கு என்னையும், எங்க குடும்பத்தையும் புடிச்சிருந்தா மேல பேசலாம்" என்றான். சக்தி, கதிரின் மதிப்பில் உயர்ந்தான். பரமேஸ்வரன் இதை எதிர்பார்க்கவில்லை, என்பதால் சிறிது யோசித்தார். பிறகு அவரே, "நீ இதை திருப்பிக் கொடுக்க என்னப்பா அவசியம்?" " சார், அடிப்படைல நான் கடனை அடைக்க வந்த மாப்பிள்ளைன்னா உங்க பொண்ணு என்னை மதிப்பாங்களா? இப்ப தெரியலைன்னாலும் பின்னால தெரிஞ்சிடும்". "எப்படி இவ்வளவு பணத்தை ஏற்பாடு செஞ்ச?" "......" அப்பத்தா, "சொல்லுப்பா சக்தி, பரவாயில்லை" என்றார். "நஞ்சப்பா ரோடுல சின்னதா ஒரு ஷோரூம் வைக்கலாம்னு ஒரு கடையை வாங்கி இருந்தேன். அதோட கடனை அடைச்சு நாலு மாசமாச்சு. அதை ரெண்டு வருஷத்துக்கு ஒத்திக்கு குடுத்துட்டேன். என் க்ளோஸ் ஃப்ரெண்டுதான். ஒண்ணாவே படிச்சோம். குமார் இண்டஸ்ட்ரீஸ் வீட்டுப் பையன் சிவகுமார்" என்று விளக்கமாகவே பதிலளித்தான் சக்தி. அவனே, "நான் சுதந்திரமானவனா இருக்கணும்னு ஆசைப்படறேன். என்னால உங்கபொண்ணை சந்தோஷமா வச்சுக்கமுடியும்னு நான் நம்பறேன். ஆனா…" " சொல்லுப்பா". "அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு. "முதல்ல அவங்க எங்க வீட்ல கூட்டுக்குடும்பமாதான் இருக்கணும்". " இரண்டாவது, நீங்களே உங்க மகளைப் பத்தி சொன்னதுனால சொல்றேன், ஏதாவது பிறந்தவீட்டுக்கு அவசியமா வரணும்கிற பண்டிகை, சடங்கு, சம்பிரதாயம் தவிர அவங்க இங்க வந்து சீராடறதையோ தங்கறதையோ நீங்க ஆதரிக்கக் கூடாது. இது அட்லீஸ்ட் எங்க வீட்ல அவங்களுக்குப் பிடிப்பு வரவரைக்கும்". மூணாவதை "அப்பத்தா சொல்லுவாங்க" என்றான். " உங்க பொண்ணுக்கு என்ன செய்வீங்கன்னு தெரிஞ்சுக்கவோ, செய்யுங்கன்னு சொல்லவோ இதைச் சொல்லலைங்க. அதிகமா செய்யவேண்டாம்னு சொல்றதுக்குதான். ருத்ரா பொண்ணு செல்லமா வளர்ந்தங்காட்டிப் படபடன்னு பேசுது. அதனால சீர் அளவா இருந்தா உங்க பொண்ணுக்குதான் நல்லதுங்க. சக்திக்கு ஒரு தங்கச்சியும், ஒரு அண்ணியும் வீட்ல இருக்காங்க. வீட்ல ஒத்துமை வளரணும்னா எல்லாரும் ஒரே தட்டுல இருக்கணுங்க", என்று சமத்துவத்தை சிம்பிளாக விளக்கினார். "அங்க யாருக்கும் பொறாமை கிடையாது. செந்தில் பொண்டாட்டியும், இன்சினீயருதான். பிரசவம் சிக்கலானதுல வீட்லயே இருக்குறா. நீங்க ருத்ரா பொண்ணுக்கு எதைச் செய்தாலும் கொஞ்ச வருஷம் கழிச்சுப் பொறுப்பும் பொறுமையும் வந்தபிறகு குடுங்க". "இதுவும் சக்தியோட யோசனைதான். அவன் பணம் எவ்வளவுங்கறதைப்பத்தி பேசக்கூடாதுன்னுதான் எங்கிட்ட சொன்னான். இதெல்லாம் ருத்ராவை சக்திக்கு கட்டினா மட்டும்தான்", என்றார் அப்பத்தா. அவர்களது எளிமையிலும், அக்கறையிலும் பேச்சிழந்து நின்றனர் பரமேஸ்வரனும், கதிரும். கதிரின் மாமா, சக்தியிடம், "ருத்ராவை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டார். " பிடிச்சிருக்கு", என்றுவிட்டுச் சிறிது தயங்கியவன், "எனக்கு போரடிக்காம பிஸியா வச்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்று சிரித்ததில் மயங்கிய ருத்ராவின் மாமா பரமேஸ்வரனிடம், " மாமா, நீங்க ருத்ராவை சரிக்கட்டுங்க. இவர்தான் உங்க மாப்பிள்ளை" என்றவர், "என்னை சித்தப்பான்னு கூப்பிடுங்க சக்தி" என்றார் நிறைவுடன். ************************* சக்தியும், ருத்ராவும் மாடி ஹாலில் இருந்தனர். நேராகச் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அவன் அமர முடியாதபடி நடுவில் உட்கார்ந்து கொண்டு லேசாக ஆட்டவும் செய்தாள் ருத்ரா. ஒன்றும் பேசாமல் ஜன்னலருகில் போய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான், சக்தி. மௌனத்தில் கழிந்த ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு ஆத்திரத்தையும், அவனுக்குக் கடுப்பையும் கொடுத்தது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ருத்ரா " உனக்கென்ன தகுதி இருக்குன்னு எல்லாரும் பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க? எங்ககிட்ட மாசச்சம்பளம் வாங்குற உங்கப்பாக்கு இவ்வளவு தைரியம் யார் கொடுத்தது?" என்று காட்டமாகக் கேட்டாள். "எங்கப்பா வேலையை விட்டு மூணு நாளாச்சு" என்றவன், " இதுவரைக்கும் எத்தனைபேர் உன்னைப் பொண்ணுகேட்டு வந்திருக்காங்க?" என்றான். "ஏய்ய்" என்றவாறே அவள் வேகமாக எழ ஆத்திரத்தில் ஊஞ்சல் அதிர்ந்து எல்லாப் பக்கமும் ஆடியது. மாடிப்படியில் நின்றிருந்த கதிரும், ரமாவும் ருத்ரா சக்தியை அடித்துவிட்டாளோ என்றுப் பதறினர். "எங்க பணவரவு, சொத்து எல்லாம் உங்கப்பாக்கு அத்துபடி. அப்ப உங்களுக்குப் பேராசை இல்லாம வேறென்ன? உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வாங்கிட்டாரா எங்கப்பா?"
சத்தமாகச் சிரித்தவன், "யாரை? என்னை? சான்ஸே இல்ல". "பின்ன? நான் வந்து உங்க வீட்ல இருப்பேன்னு நினைச்சியா?" "தாங்க் யூ ருத்ரா" 'இவனென்ன லூஸா?' பார்வை பார்த்தவள், "எதுக்கு?" என்றாள் "கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு" "நான் எப்ப சம்மதிச்சேன்?" "நீதானே இப்போ வீட்டோட மாப்பிள்ளைன்னா பரவாயில்லை, எங்க வீட்டுல வந்து இருக்க முடியாதுன்ன? " அவன் சரியாக மடக்கியதில் ஒருகணம் திணறியவள், "ரொம்ப ஸ்மார்ட்டுன்னு நினைப்போ? ஒழுங்கா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு ஓடிடு", என்றாள். "என்னைப் பிடிக்கலைன்னு நீயே போய் சொல்லு. ஏன்னா எனக்குப் பொய் சொல்ல வராது". அவன் தன்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னதை உள்வாங்காமல், ஆத்திரம் மீதுற அவர்களுக்காக ரமா கொண்டு வைத்த தண்ணீர் சொம்பை ஓங்கித் தரையில் வீசப்போனவளின் கையைப்பிடித்தான் சக்தி. "எனக்கென்ன பைத்தியமா? சொந்த செலவுல சூனியம் வச்சுக்க? உனக்கு வேண்டாம்னா நீதான் சொல்லணும். மீ எஸ்கேப் . என்ன? கொஞ்சம் அழகா இருக்கியா? அதான் யோசனையா இருக்கு", என்றவன், கீழே இறங்கிப் போயே போய்விட்டான். செய்வதறியாமல் திகைத்து நின்றவளை ரமா வந்து அழைத்துச் சென்றாள். அவளது சம்மதத்தையோ, மறுப்பையோ அவள் தந்தையிலிருந்து யாருமே பொருட்படுத்தவில்லை. இரு நாற்காலிகள் போடப்பட்டு, ஒரு சலவை வேட்டியை விரித்து சொர்ணாவும், அப்பத்தாவும் தாங்கள் கொண்டுவந்த பூ, பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, கஜலக்ஷ்மி டாலருடன் கூடிய செயின், புடவையின் நிறத்தில் கண்ணாடி வளையல்கள் மற்றும் சிவப்பும் பச்சையுமாக இருந்த புடவையின் நிறத்தில் டெரகோட்டா செட் ஒன்றும் சீராக வைத்தனர். ருத்ராவிற்குப் பேசவே வாய்ப்புக் கொடுக்காமல், நாற்காலியில் அமரவைத்தனர் ரமாவும், அவள் பெரியம்மாவும். முதலில் சொர்ணாவும் பிறகு மீசை சித்தப்பாவின் மனைவியும் தொடர்ந்து ரமா, அவரின் தாய், அத்தை, பெரியம்மா என அனைவரும் சந்தன, குங்குமம், அட்சதையுடன் நலங்கு வைத்தனர். ருத்ராவை சக்தி வீட்டினர் கொடுத்த புடவையை உடுத்திவரச் செய்தனர். அத்தை, பெரியம்மா என அவளை அடைகாத்ததில், கொதிநிலையில் இருந்தாலும் எதுவும் செய்யமுடியாமல் இருந்தாள். புடவை அணிந்து வந்தவளுக்கு சொர்ணா சங்கிலியைப் போட்டுவிட்டார். பிறகு " இதையும் போட்டுக்கோம்மா" என்று டெரகோட்டா செட்டிலிருந்து கழுத்தணியை மட்டும் கொடுத்தார். 'டெரகோட்டாவா?' என்று முகம் சுளித்த ருத்ராவின் உறவுகள், அப்பத்தாவின், "சக்தியே செஞ்சது" என்ற வார்த்தையில் ஸ்தம்பித்தனர். அன்பரசுவின் தங்கையின் காதுகளிலிருந்து புகை வராத குறை. பரமேஸ்வரனுக்கு ஒரே பெருமை. ருத்ரா ஒன்றும் ஃபேஷன் ஜுவல்லரி அணியாதவளல்ல. அதனால் அந்த நெக் பீஸின் டிசைனும் நேர்த்தியும் அவளைக் கவர்ந்தது. எனவே மறுக்காமல் போட்டுக்கொண்டவள், தன்னையறியாமல் சக்தியை நிமிர்ந்து பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் டக்கென்று கண்களைச் சிமிட்டினான். வெடுக்கென முகத்தைத் திருப்பியவள் டிஜிட்டல் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கதிர் சக்தியைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திச் சிரிப்பதைக் கண்டவள், மீண்டும் முருங்கை மரம் ஏறினாள். (சக்தி, பேசாம உன் பேரை விக்ரம்னு மாத்திடலாமா?) பின் சக்தியையும் அமரவைத்து தாய் மாமன்கள் இருவரும் இருவருக்கும் பணம் வைத்துக் கொடுத்தனர். சக்திக்கு நிச்சய சீராக ஒரு வேஷ்டி சட்டையும், பிரேஸ்லெட்டும் கொடுத்தார் பரமேஸ்வரன். அவரது முன்னேற்பாடு இந்தத் திருமணத்தில் அவரது தீவிரத்தையும், ஈடுபாட்டையும் ருத்ராவிற்குத் தெளிவாகப் புரியவைத்தது. எதற்கு என்றே தெரியாமல் இதற்கு எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்தாள். அதற்குள், உறவுகளுக்கெல்லாம் நல்ல நேரமும், ஜாதகம், சகுனம் சொல்பவரான மீசை சித்தப்பா, "பரமேஸ்வரா தை முடிய இன்னும் பத்துநாள்தான் இருக்கு. அடுத்த எட்டு நாள்ல, வர்ற திங்கள்கிழமை நல்ல முகூர்த்தம். இல்ல மாசி, வைகாசின்னு பார்க்கவா?" என்றார். 'எட்டு நாளிலா' எனத் திகைத்த சொர்ணா, அப்பத்தா, ராமலிங்கத்திடம், காலம் தாழ்த்த விரும்பாத பரமேஸ்வரன், "ஒண்ணும் பிரசினை இல்லை. நம்ம வீட்டிலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்றார். இடைமறித்த செந்தில்வேல், "நம்ம வழக்கப்படி எங்க வீட்லயே கல்யாணம் நடக்கும் சார். பழைய வீடுங்கறதால ஓரளவு பெரிய வீடுதான் எங்களோடதும். சுத்தியும் இடமிருக்கு. காலையில கல்யாணமும் சாயந்திரம் ரிஸப்ஷனும் வச்சுக்கலாம்" என்றான். அவர்களின் சுயமரியாதையும், திட்டமிடலும் சொந்தங்களைக் கவர்ந்தது. பரமேஸ்வரன் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் சுமையை நினைத்துத் தயங்கினார். சக்தி, "தயங்காம எத்தனை பேரை வேணும்னாலும் கூப்பிடுங்க சார். ஒண்ணும் பிரசினை இல்லை" என்றான் அவரைப் புரிந்தவனாக. 'விட்டா அப்பாவே அவனைக் கட்டிக்குவார் போலயே? மாறி மாறி சொறியறாங்களே?' என்று காய்ந்தாள் ருத்ரா.(பொறாம??!). வேறு சில விஷயங்களைப் பேசி முடிவு செய்த பிறகு தாலி, முகூர்த்தப்புடவை,மற்றப் புடவைகள் எல்லாம் புதன் கிழமை நாள் நன்றாக இருப்பதால் கடையின் பேரைச்சொல்லிக் காலை பதினொரு மணிக்கு சந்திப்பதாகப் முடிவு செய்து, சக்தி குடும்பத்தினர் கிளம்பினர். பரமேஸ்வரன், ராமலிங்கத்திடம், "கல்யாண செலவுக்குப் பணம் ….." என்றுஇழுக்க, "அதெல்லாம் இருக்குங்க. நல்லா செஞ்சுடலாம்" என்றுவிட்டார் அவர். ********************* தந்தை, தமையன், சக்தி என எல்லார் மீதும் கண்முடித்தனமான கோபத்திலிருந்த ருத்ரா, அவளுடைய கல்லூரித் தோழி ஒருத்திக்கு ஃபோன் செய்ய,அவள் ருத்ராவை மறுநாள் காந்திபுரம் அன்னபூர்ணாவிற்கு வரச்சொன்னாள். மறுநாள் மதியம் நான்கு மணியளவில் ஹோட்டலுக்கு வந்தவள், அவள் தோழியுடன் அவளது உருப்படாமல் ஊரைச்சுற்றும் அண்ணனும் வந்திருந்தான். ஏற்கனவே இவளைக் காதலிப்பதாகச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டவனைப் பார்த்து முகம் சுளித்தாள். ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் தனக்கிருந்த கோபத்தில் அவர்களுடன் உள்ளே சென்றாள். காலையிலிருந்து நண்பனது பிரிண்டிங் பிரஸ்ஸில் உட்கார்ந்து பத்திரிகை அடித்துக் கொண்டு, சக்தியும், ராமலிங்கமும் ஒரு காபி சாப்பிட வந்தவர்கள், வெளியேறும் முன், சக்தி ருத்ராவைப் பார்த்துவிட்டான். ஏதோ சரியில்லாதது போல் இருந்தது. தந்தையிடம்," நீங்க பத்திரிகையோட வீட்டுக்குப் போங்கப்பா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு" என்று அனுப்பியவன் ,ஃபோனில் கதிரை அழைத்தான். " நான் சக்தி பேசறேன்.எங்க இருக்கீங்க கதிர்?" " சிட்டில இருக்கேன். ஏன்?" " நான் காந்திபுரம் பஸ்ஸ்டேண்ட் கிட்ட இருக்கற அன்னபூர்ணா வாசல்ல நிக்கறேன், உடனே இங்க வாங்க" " என்னாச்சு?" " நீங்க வாங்க சொல்றேன்". தேங்காயெண்ணய் கொள்முதல் கொடுக்க வந்தவன், மார்க்கெட்டில்தான் இருந்ததால் ஏழே நிமிடங்களில் வந்து சேர்ந்தான். " என்ன விஷயம் சக்தி?"
ருத்ரா உள்ளே சென்றிருப்பதை கூறியவன், "அவனைப் பார்த்தா ஏதோ தப்பா தெரியுது. நான் மட்டும் பேசினா என்மேல இருக்கற கோபத்துல, உங்க தங்கச்சி அவங்க பக்கமா பேசினா அவங்களுக்குதான் ஆபத்து. அதான் உங்களுக்கு ஃபோன் அடிச்சேன். எங்கப்பாவையும் வீட்டுக்கு அனுப்பிட்டேன்" என்றான். உண்மையிலேயே அவளது தோழியின் அண்ணன், இவர்கள் பேசுவதை வைத்து, ருத்ராவை நைச்சியமாக அவர்களது கெஸ்ட்ஹவுஸுக்குக் கூட்டிச்செல்லும் ஐடியாவைக் கொடுத்துதான் கூடவே வந்திருந்தான். ஏற்கனவே அவர்களது பேச்சு பிடிக்காமல் தப்பிக்க நினைத்த ருத்ரா வெளியேற, கூடவே அவர்களிருவரும் வந்தனர். வெளியில் வந்தவர்களின் முன்னால் போய் நின்றனர் சக்தியும், கதிரும்.
No comments:
Post a Comment