தன்வினை....-34
By N Krishnamurthy
வினயாவிற்கு செய்வினை செய்தவர்கள் யார் என்று சந்தேகம் உங்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். அனேகமாக கதை போய்க் கொண்டிருக்கும்போதே, பலவிதமாக யூகித்திருப்பீர்கள். இதற்கு விடை கூறும் முன் இந்தக் கதையில் இடையில் விட்டுப்போன சிலவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது.
பலர் இது சௌஜன்யாவின் வேலைதான் என்று எண்ணியிருப்பீர்கள்.
சௌஜன்யா கேசவன் நம்பூத்ரியிடம் பேசிய பின்பு, கேசவன் நம்பூதிரி சௌஜன்யாவிடம் ஒரு வசிய மருந்து பொட்டலத்தை கொடுத்து அதை ஜகன் சாப்பிடும் காபியில் கலந்து விடச் சொன்னார். "அதன் பின்னர் ஜகன் உன் பின்னாடி பட்டி மாதிரி வந்து கொண்டிருப்பான்" என்று கூறினார். மறுநாள் அந்த வசிய மருந்தை பத்திரமாக ஆபீஸ் எடுத்துக் கொண்டு சென்ற சௌஜன்யா, ஜகன் சூடான காபியை கொண்டு வந்து ஒரு டேபிளிள் அமர்ந்திருப்பதை பார்த்தாள். அப்போது போன் வந்திருப்பதாக அங்கிருந்த பணியாளர் சொன்னவுடன்,ஜகன் ஃபோனை அட்டென்ட் செய்ய எழுந்து சென்றான். அப்பொழுது அந்தப் பக்கம் வந்த சௌஜன்யா, யாரும் பார்க்காத வகையில், வசிய மருந்தை ஜெகன் காபியில் சேர்த்தாள். அப்படியே சீட்டுக்கு திரும்பி விட்டாள். ஜகன் போன் பேசி விட்டு திரும்பி வரும்போது ஜகன் ஃபரென்ட் வினோத் வந்து கொண்டிருந்தான். "டேய் வினோத்,என்ன அர்ஜெண்டா பார்க்கச் சொல்லி பணிக்கர் கூப்பிட்டிருக்கார். அங்கே என் காபி இருக்கு. அத நீ குடிச்சூடு" என்று கூறி விட்டு வேகமாக சென்றான். வினோத் அந்த காபியை குடித்தான். அவ்வளவுதான் அன்றிலிருந்து வினோத் சௌஜன்யாவை தொடர ஆரம்பித்தான்.
(நம்பூத்ரி கொடுத்த வசிய மருந்துக்கு இவ்வளவு பவரா?
இதை நம்பி நம்பூத்ரி அட்ரசை என்னிடம் யாரும் கேட்க வேண்டாம்).
முதலில் சௌஜன்யாவுக்கு இது ஏன் என்று புரியவில்லை. ஒரு வாரம் கழித்து நம்பூதிரி "என்ன ஏதாவது பிராகரஸ் இருக்கிறதா" என்று கேட்டார். அப்போது அவள் இந்த விஷயத்தை அவரிடம் கூட அதற்கு அவர் "அடிப்பாவி. நீ கொடுத்த காபியை அந்த வினோத் பையன் குடித்துவிட்டு இருக்கிறான்" என்று கூறினார். சௌஜன்யாவும் யோசித்துப் பார்த்தாள். ஜெகனுக்கு வினோத் ஒண்ணும் குறைந்தவனில்லை. கிட்டத்தட்ட இருவரும் ஒரே வயது. ஒரே மாதிரி சம்பாதிக்கிறார்கள். வினோதும் நல்ல மாதிரி தான் . எப்படி இருந்தாலும் நமக்கு ஜகன் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டு சௌஜன்யா வினோத் கிடைத்தாலே போதும் என்று அவனிடம் சகஜமாக பழக ஆரம்பித்தாள். நாளடைவில் இது கல்யாணத்தில் முடிந்தது.
அப்படியானால் சௌஜன்யா வினயாவிற்கு செய்வினை செய்ய ஏற்பாடு பண்ணவில்லையா? அப்படி இல்லை என்றால் யார் பண்ணி இருப்பார்கள் ?.அடுத்த விட்டுப் போன இன்னொரு விவரத்தை நான் கூறினால்தான் உங்களுக்கு அது விளங்கும்.
தன்வினை....-35
தன் பெண் மைதிலிக்கு ஜகன் கிடைக்க மாட்டான் என்று அறிந்த மனோகரன் மிகவும் கொதிப்படைந்தார். ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்தார். கோயம்புத்தூரில் இருந்த அவர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு மலையாள மாந்திரீகர் இருந்தார். அவரிடம் போய் மனோகரன் விஷயத்தை கூறி "அந்தப் பையனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.. அதற்கு அவர் "என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய அக்கா பையன். உனக்கு என்ன, அந்தப் பையன் உன் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணம், அவ்வளவு தானே. முதல்ல அந்தப் பையன் இப்போ நிச்சயம் பண்ணியிருக்க பொண்ண வெறுக்கும்படி பண்ணுவோம். அப்புறம் படிப்படியா அந்த பையன் உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடிவு செய்வான் " என்றார். "என்ன பண்ணலாம் என்றார்" மனோகரன்.
" ரொம்ப சிம்பிள், அந்த பொண்ணுக்கு சூனியம் வெச்சுடலாம்" என்றார் அவர்." அது தப்பு இல்லையா" என்று கேட்டார் மனோகரன். "தப்புதான். நீ தான் முடிவு செய்யணும்" என்றார் மாந்த்ரீகன்.
" சரி. அந்த மாதிரியே செய்துவிடலாம்" என்று மனோகரன் வேறு வழி தோன்றாமல் கூறினார்.
கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்து அவரிடம் வினயாவிற்கு சூனியம் வைக்க மனோகரன் கூறினார். மாந்த்ரீகரிடம் தான் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தை கொடுக்க, அவர் இந்த மோசமான வேலையை செய்தார். அவருக்கு, இது மாதிரி செய்கிறவர்கள் எல்லாரையும், பூமராங் மாதிரி, அந்த செய்வினை திரும்பி வந்து சேரும் என்று அவ்வளவாக தெரியாது.
வினயாவிற்கு கேரளாவில் பரிகாரம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் மனோகரனின் மனைவி பின்பக்கத்தில் இருந்த பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு ஹாஸ்பிடல் சேர்க்கப்பட்டாள். இன்று வரை அவள் கோமாவில் இருக்கிறாள். இது நடந்த ஒரு மாதத்திற்கு பின் திடீரென்று அவரது மகள் மைதிலி வினயா மாதிரி கத்த ஆரம்பித்தாள். அங்கே கேசவதாஸ் வினாவிற்கு பரிகாரம் செய்து கொண்டிருக்க, இங்கே மைதிலி நிலைமை ரொம்ப மோசமாகிக்கொண்டேபோனது. ஒரு சமயத்தில் மனோகரன் மைதிலிக்கு வைத்தியம் செய்வதா, மனைவியை ஹாஸ்பிடல் சென்று பார்த்துக்கொள்வதா என்று புரியாமல் தவித்தார். வேறு வழி இல்லாமல் மைதிலியை ஒரு மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டிருந்தார் இந்த சமயத்தில் தான் அக்கா சுமதி, மகன் கல்யாணம் என்று மீண்டும் அவனைக் கூப்பிட்டிருந்தாள். " சரி கல்யாணத்துக்கு சென்று விட்டு சென்று வந்து விடலாம்" என்று எண்ணி கல்யாணத்துக்கு சென்றார் மனோகரன். கல்யாணப் பெண் வினயா வெகு சகஜமாக இருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. தமக்கையிடம் என்ன நடந்தது என்று எல்லா விவரத்தையும் கேட்டுக் கொண்டார். சரி தன்னுடைய பெண்ணையும் கேரளாவுக்கு அழைத்துக் கொண்டு போய் சரி செய்து விடலாம் என்று நினைத்தார். அதற்கு முன்னால் அக்கா கூறியபடி சிதம்பரத்தை போய் பார்த்தால் என்ன என்று அவருக்கு தோன்றியது . ஒருநாள் ராஜ ராஜபுரம் சென்று சிதம்பரத்தை பார்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு தன் பெண் மைதிலிக்கும் இது மாதிரி வந்திருப்பதாக அவர் கூறினார். மிக புத்திசாலியான சிதம்பரம், மனோகரன் சுமதிக்கு தம்பி என்றும் அவன் தன் பெண் மைதிலியை ஜெகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று இருந்ததையும் தெரிந்து கொண்ட அவருக்கு ,கேசவதாஸ் கூறியது ஞாபகத்துக்கு வர, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று மிக சுலபமாக நடந்ததை புரிந்து கொண்டார்.
மனோகரனிடம் அவர் கூற ஆரம்பித்தார்
"என்னால் உங்களுக்கு உதவி பண்ண முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ரமண மகரிஷி சொல்லுவார்" நீ ஏதாவது யாருக்காவது செய்தாயேயானால், அது உனக்கு நீ செய்து கொள்கிற மாதிரி என்று. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு கடவுள் மட்டும்தான் ஆறுதலளிக்க முடியும்.செஞ்ச தப்புக்கெல்லாம் அழுது,அழுது அவன் கிட்ட வேண்டிக்கோங்க.
காசிக்கு போய் கங்கைல ஸ்னானம் பண்ணினா பாவம் போயிடுன்னூவா.நீங்க காசிக்கு போய் கங்கைல ஸ்னானம் பண்ணினா, அந்த கங்கைக்கே பாவம் வத்துடும்.புரிகிறதா?" என்றார் சிதம்பரம். மனோகரன் செய்த செயலின் கடுமையை உணர்ந்ததால், சிதம்பரத்திற்கு அவருடன் கடுமையாக பேசவேண்டி இருந்தது.
"நன்றாக புரிந்தது சார்.நான் செஞ்சது மஹா பாவம். மன்னிப்பே கெடயாதூன்னு தெரிஞ்சுண்டேன் சார்" என்று துக்கத்துடன் கூறிக் கொண்ட மனோகர் அடுத்த பஸ்ஸை பிடித்து கோயம்புத்தூர் வந்து சேர்ந்தார்.
தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று சும்மாவா சொன்னார் பட்டினத்தார்.
நாளைய பகுதியுடன் தன்வினை.... முடிவடையும்.
No comments:
Post a Comment