Saturday, November 30, 2024

ரவா பூரி & ஆலு மசாலா

 ரவா பூரி & ஆலு மசாலா

250 கிராம் வறுக்காத ரவையை மிக்ஸியில் பவுடராக அரைத்து ஒரு கிண்ணத்தில் போடவும். 2 1/2 ஸ்பூன் ஆயில், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு கலக்கவும். பிறகு இதில் தேவையான நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும். மாவை சற்று தளர்வாகவே பிசையவும் இதை மூடி போட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும். 

இந்நேரத்தில் அவித்து தோல் சீவிய 2 உருளைக்கிழங்கை கட்டிகள் இன்றி நன்கு மசித்து வைக்கவும். ஒரு வாணலியில் 2 tbs ஸ்பூன் ஆயில் விட்டு சூடானதும் 1/2 ஸ்பூன் சீரகம், கீறிய பச்சை மிளகாய் 2, வரமிளகாய் 2 கிள்ளிப் போட்டு பொரியவிட்டு, பின் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், & சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து 1 நிமிடம் வதக்கவும். 

இப்போது அடுப்பை மிதமாக எரியவிட்டு 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மசாலா போல கிளறவும், பின் இதில் மசித்த கிழங்கை போட்டு கிழங்கு முழுதும் மசாலா நன்கு கலக்கும் படி கலந்து கிளறிவிட்டு இதோடு 1 கிளாஸ் நீர் சேர்த்து ஒரு முறை நன்கு கலக்கிவிடவும். பின்னர் இதில் 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/2 ஸ்பூன் சாட் மசாலா..

உப்பு தேவையான அளவு போட்டு கலந்து கொதிக்கவிடவும் 2 நிமிடங்கள் கொதித்தால் போதும். மசாலா திக்காக குழைந்து இருக்கும், அதில் மல்லித் தழைகள் நறுக்கிப் போட்டு நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். சுஜி பூரிக்கு ஏற்ற அருமையான ஆலு மசாலா ரெடி! இப்போது ஊறிய மாவை திறந்தால் அது இறுகி இருக்கும்.

நன்றாக அதை அழுத்தி பிசைந்து மொத்த மாவிலிருந்து சிறு சிறு மாவாக பிரித்து அதை உருட்டி கோதுமை மாவில் பிரட்டி பூரிகளாக தேய்க்கவும். ஒரு வாணலியில் ஆயில் விட்டு அது நன்கு சூடானதும் பூரிகளை போட்டு பொரிக்கவும். நல்ல சூடான ஆயிலில் தான் பொரிக்கணும்! ஆயில் கொதித்துவிடவும் கூடாது அவ்வப்போது தீயை ஏற்றி..

இறக்கி சீரான சூட்டில் வைத்து பொரிக்கவும். இந்த பூரி கோதுமை மாவு போல இன்றி சட்டென உப்பலாக பொரியும். பூரி மீது கரண்டியால் ஆயிலை அள்ளி ஊற்றவும் மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும், சூடான ஆயிலை ரொம்ப ஊற்றினால் பூரி மேலே பிரவுன் கலர் ஆகிவிடும்! இந்த பூரி மேலே மொறு மொறு என்றும் பிய்த்தால் சாஃப்ட் ஆகவும் இருக்கும். இந்த சுஜி பூரியை நாம் செய்து வைத்த ஆலு மசாலாவுடன் சேர்த்துப் பரிமாறுங்கள். மீண்டும்.. மீண்டும்.. வேண்டும்.. வேண்டும்.. என்ற குரல் இதை ருசிப்பவர்கள் வாயிலிருந்து வந்துகொண்டே இருக்கும்.

கருணைக்கிழங்கு மசியல்

 கருணைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி...?

கருணைக்கிழங்கு மசியல் செய்வதற்கு 300 கிராம் அளவு கருணைக்கிழங்கை நன்கு கழுவிக்  கொள்ள வேண்டும். கழுவிய இந்த கிழங்குகளை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். விசில் வந்து அடங்கிய பிறகு கிழங்குகளை ஆற வைக்க வேண்டும். இவை ஆறியதும் இவற்றின் தோலை உரித்து நன்கு மசித்துக்  கொள்ள வேண்டும். 10 பல் பூண்டு, 20 சின்ன வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு தக்காளியையும் பொடிப்  பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியுடன் தேவையான அளவு உப்பை ஊற வைக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் மூன்று குழிக்கரண்டி சேர்த்து காயவைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, 1/4 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கும் பொழுது இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதையும் வதக்கவும். இவை நன்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கு சேர்த்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். ஊற வைத்திருக்கும் உப்பு மற்றும் புளியை கரைத்து இவற்றுடன் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். சுரண்டு வரும்பொழுது இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார்.

கேரட் பீன்ஸ் குழம்பு

 கேரட் பீன்ஸ் குழம்பு.....!

தேவையான பொருட்கள்:

200 கிராம் பீன்ஸ்
100 கிராம் கேரட்
150 கிராம் சின்ன வெங்காயம்
1 குழி கரண்டி எண்ணெய்
1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
2 ஸ்பூன் மல்லித்தூள்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
2 தக்காளி
1 பீஸ் தேங்காய்
உப்பு

செய்முறை

வெங்காயத்தை நைசாக அரைத்து எண்ணெயில் நன்றாக வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸை வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளவும். மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் எல்லாவற்றையும் காயுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்கவும்.

தேங்காயுடன் தக்காளியை அரைத்து குக்கரில் சேர்த்து குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி காய் வெந்ததும் சப்பாத்தியுடன் பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொத்சு

 சிதம்பரம் கத்திரிக்கா கொத்சு

தேவையான பொருள்கள்

கத்திரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - எலுமிச்சை அளவு

தாளிக்க
எண்ணெய்
கடுகு - 1/2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
கடலை,உளுந்து பருப்பு தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை

கொஸ்து பொடிக்கு
காய்ந்தமிளகாய் - 6
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் சிறிது

 செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், கத்திரிக்காய் வதக்கவும்

பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுத்து பொடிக்கவும்

வதக்கல் வதக்கியவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து, அரைத்த கத்திரிக்காயை சேர்க்கவும்

வதங்கியதும் கொஸ்து பொடியை சேர்க்கவும்

தாளித்தல் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்

புளி கரைசல் பச்சை வாசம் போக கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

 சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொத்சு ரெடி.

Sunday, November 24, 2024

ஆந்திரா வெங்காய தோசை

 *Today TRENDING சமையல் TIPS*👉

ஆந்திரா வெங்காய தோசை

தேவை: 

இட்லி மாவு - 2 கப்  சாம்பார் வெங்காயம் - ஒரு கப்  காய்ந்த மிளகாய் - 3  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: சாம்பார் வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். தவாவில் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி, தேய்த்து அரைத்த வெங்காய விழுதை 3 டீஸ்பூன் போட்டு, தோசைத் திருப்பியால் தோசை முழுவதும் பரவலாகத் தேய்த்து ஓரங்களில் நல்லெண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை. வாரத்தில் மூன்று நாள்கள் ஆந்திராவின் பிரசித்தி பெற்ற இந்த தோசையைச் சாப்பிடலாம்.

Thursday, November 21, 2024

A humorous post about cataract operation

 A humorous post about cataract operation:

கொஞ்ச நாட்களாக கண் பார்வை மங்கலாக, கலங்கலாக இருப்பது போல ஒரு பிரமை இருந்தது. மினரல் வாட்டரைப் பார்த்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீர் போல் இருந்தது.

கேடராக்ட் இருக்குமோ என சந்தேகப்பட்டு பெங்களூரில் இருக்கும் ஒரு பிரபல கண் ஆஸ்பத்திரிக்குப் போனேன். 

அங்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆனால் கையைக் கடிக்கும். திரையைக் கிழித்து திரவியம் தேடும் ஆஸ்பத்திரி அது.

முதலில் வழக்கமான பரிசோதனை. W S E J M படிக்க வேண்டும். கடைசி வரிசை படிக்க முடியாவிட்டால் நம்மிடம் கறந்து விடுவார்கள். அந்த டெஸ்டில் கடைசி இரண்டு வரிசையில் நான் ஃபெயில்.

பைனாக்குலர் மாதிரி இருந்த சமாச்சாரத்தில் பார்க்கச் சொன்னார்கள். இரண்டு நிமிடத்தில் அவர்கள் ஆவலுடன் தேடிய கேடராக்ட் அவர்களுக்குக் கிடைத்து விட்டது.

“உங்களுக்கு கேடராக்ட் இருக்கு. அதனால தான் கண் மங்கலா இருக்கு”  என்று இருள் வாக்கு சொன்னார்கள்.

அதன் பிறகு ஒரு Counselling பெண்ணிடம் அனுப்பினார்கள்.

கவுன்சிலிங் எனப்படுவது யாதெனில் வரும் ஆட்களை கப்பெனப் பிடித்துப் போடுதல்.

ரிப்போர்ட்டுகளைப் பார்த்த கவுன்செல்லர் “எந்த லென்ஸ் வைச்சிக்கறீங்க?” என்று கேட்டார்.

“கைரேகை ஜோசியம் பாக்கற லென்ஸ் வைச்சிடாதீங்க. அதுல பிடி இருக்கும். மூக்கு வரைக்கும் தொங்கும்” என்றேன்.

“உங்களுக்கு Trifocal Toric லென்ஸ் வைச்சிடலாம்” என Trigonometric equation மாதிரி டெக்னிக்கலாக ஏதோ சொன்னார். 

அந்த லென்ஸ் வைத்துக் கொண்டால் தூரத்தில் இருப்பது, பக்கத்தில் இருப்பது, நடுப் பக்கத்தில் இருப்பது எல்லாமே தெரியுமாம்.

“நீங்க Reading glass யூஸ் செய்யறீங்களா?”என்றார்.

“Writing glass யூஸ் செய்யறேன்”

“இந்த லென்ஸ் வைச்சிகிட்டா....”

“இனிமே எழுதவே மாட்டேனா?”

“நோ. இனிமே நீங்க கண்ணாடியே போட வேணாம்” என்றவர்  லென்ஸில் விலையை சொன்னார். ஒரு Eye க்கு அவர் சொன்ன விலையில் இரண்டு ஐ போன் வாங்கலாம். இருந்தாலும் சரியென்றேன். 

அவருக்கு மிகுந்த சந்தோஷம் .ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அடுப்பெரியும்.

அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார்.

“சாதா ஆபரேஷனா? லேசர் ஆபரேஷனா?”

லேசர் ஆபரேஷன் என்றால் டாக்டர் கண்ணில் கையே வைக்க மாட்டார். லேசரே எல்லாவற்றையும் கிழித்து விடும். நீட் பாஸ் செய்த லேசர்.

சாதா ஆபரேஷனில் தோசைக் கரண்டி கொண்டு கண்களில் இருக்கும் திரையை சுரண்டுவார்களோ!

“லேசரே  செஞ்சிடுங்க” என்றேன். அதற்குக் கூடுதல் கட்டணம். ஒரு Split A.C விலை.

“திங்கட்கிழமை கார்த்தால எட்டு மணிக்கு வந்துடுங்க” என்றார். திங்கட் கிழமை 7:30 முதல் 9:00 வரை ராகு காலம். ராகு காலத்தை ஏமாற்ற ஒரு உபாயம் செய்வார்கள். ஊருக்குக் கிளம்புபவர்கள் ராகு காலத்துக்கு முன்பாகவே பெட்டியை வீட்டுக்கு வெளியே வைத்து விடுவார்கள். ராகு நம்மை விட்டு விலகி பெட்டியை வெளியே வைக்காத மக்குப் பயல் யாரையாவது தேடிப் போய் விடும்

அது போல பக்கத்து வீட்டு பாட்டி சொன்னார். 

“நீங்க ஏழரை  மணிக்கு முன்னால கண்ணை எடுத்து வீட்டு வாசல்ல வைச்சிடுங்க” 

ஏழே காலுக்கே புறப்பட்டு எட்டு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்தோம். ரிசப்ஷனில் ஒரு பெண் ‘வாவ்’ எனச் சொல்லும் வகையில் இருந்தாள். அவள் வாவென அழைத்தாள். என்னுடைய ஃபைல் பார்த்தாள்.

கண் மாற்றி ஆபரேஷன் செய்து விடக் கூடாதல்லவா! அதனால் என் இடது கையில் ஒரு Band கட்டினாள். அது சத்தியமாக ராக்கி இல்லை. அதில் என் பெயர் இருந்தது. போதாதற்கு என் இடது கண்ணின் மேல் ஒரு பெருக்கல் குறி போட்டாள். இது தான் நொள்ளைக் கண் என்பதற்கு அடையாளமாக. 

சில Declaration form களில் கையெழுத்து போடச் சொன்னாள். Software download செய்யும் போது படித்துப் பார்க்காமல் I agree என்று டிக் அடிப்போமே அது போல டிக் செய்தேன்.

அதன் பிறகு அடுத்த அறைக்குக் கூட்டிப் போனார்கள். இங்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். கேடராக்டையும் மீறி அவர்கள் பளிச்செனத் தெரிந்தார்கள். ஒருவர் B.P யும்  Oxygen ம் பார்த்தார். இன்னொருவர் ஒரு மாத்திரை கொடுத்தார்.

அந்த மாத்திரை Anxiety வராமல் இருப்பதற்கு என்று சொன்னாள்.  ‘உங்க டாக்டருக்கு பத்து கொடுங்க’ என்று நினைத்துக் கொண்டேன்.

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ஆபீஸ் போகும் போது கே.ஆர் .விஜயா பின்னாலிருந்து  கோட்  மாட்டி விட்டு மாலையில் கன்னத்தில் அறை வாங்கிக் கொள்வார். அது போல ஒரு கன்னடத்து விஜயா பின்னாலிருந்து எனக்கு கவுன் மாட்டி விட்டார். நாம் சும்மா நின்று கொண்டிருக்க இன்னொருவர் கவுன் மாட்டி விட்டால் அந்த சோம்பேறித்தன சுகத்துக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை.

தலையில் துணியினால் ஆன ஒரு தொப்பியை கட்டி விட்டாள். இதிலும் இடது பக்கம் செல்லோ டேப் ஒட்டினார். அதாவது இடது கண் தான் என்பதற்கான மூன்றவது கட்ட எச்சரிக்கை. இதையும் மீறி வலது கண்ணில் ஆபரேஷன் நடந்தால் நமக்குக் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.

இன்னும் சில சுவாரசியம் இல்லாத ஃபார்மாலிடிக்கள் முடிந்த பிறகு இரண்டாவது நபராக ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினார்கள்.  

தியேட்டரில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். 

ஆபரேஷன் தியேட்டரில் மெலிதாக ஏதோ ஹிந்திப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக ‘கண்ணாளனே உனது கண்ணை இன்றோடு காணவில்லை’ என்ற பாட்டு ஒலிக்கவில்லை.

கண்ணைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஊற்றினார் ஒருவர். அது தான் மயக்க மருந்தாம். இவ்வளவு பணம் வாங்கிவிட்டு ஒரே ஒரு சொட்டா? ஐந்து லிட்டர் கேன் கொண்டு ஊற்றியிருக்கலாம்.

இரண்டே நிமிடத்தில் கிழி பீடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘மேலே இருக்கற லைட்டைப் பாருங்க. மூனு லைட் தெரியுதா?’ என்று கேட்டார்கள்.

ஆமாம் என்று தெரிந்ததைச் சொன்னேன்.

‘அந்த லைட்டையே பாருங்க’ என்றார்கள். அது தான் லேசர் லைட்டா? ஒவ்வொரு லைட்டையும் பார்த்ததில் என் பேங்க் பேலன்ஸ் கணிசமாகக் குறைந்தது.

பிறகு போஸ்ட் ஆபீசில் கவரின் மீது ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டுவது போல கண்ணுக்குள் எதையோ ஒட்டினார்கள். அநேகமாக அது லென்ஸ் ஆக இருக்கக் கூடும்

மொத்தமே ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. “உங்க ஆபரேஷன் முடிஞ்சது” என்றார் டாக்டர்.

பெருமாள் கோவிலில் பக்தர்கள் தலையில் சடாரி வைக்கும் அர்ச்சகர் போல அடுத்த ஆளுக்குப் போய் விட்டார் டாக்டர். 

ஒரு ஆள் வந்து என்னைக் கீழே இறக்கி விட்டார். ஒரு கருப்புக் கண்ணாடியைக் கண்ணில் மாட்டி விட்டார்.

“நீங்க நடந்து போகலாம்” என்று வெளியே அனுப்பி விட்டார். 

ஒரு வீல் சேர் கூடக் கொடுக்கவில்லை வீணர்கள். நடந்து போகச் சொல்லி விட்டார்கள். நடந்து வெளியே போனால் ஆபரேஷன் செய்து கொண்டதாக இந்த சமூகம் நம்பாதே!

வெளியே வந்தேன். முன்னர் பார்த்த அதே பெண் வந்தார். நலம், நலமறிய ஆவல் என விசாரித்தார். பிறகு தாம்பூலப் பை மாதிரி எதையோ கொடுத்தார். அதனுள்ளே ரவிக்கைத் துணி இருக்கவில்லை. ஒரு ஜூஸ் இருந்தது. ஒரு குடை இருந்தது. இந்தக் குடைக்காக நான் கொடுத்த விலை மிகவும் அதிகம்.

Dos and Don’ts சொன்னார்.

பணத்தைக் கட்டி விட்டு வெளியே வந்தோம். கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டதில் பசு மாடு எருமை மாடு  மாதிரி தெரிந்தது. எருமை மாடு தெரியவே இல்லை.

முருகன் இட்லிக் கடையில் நான்கு விதமான சட்னிகள் வைப்பது போல நான்கு விதமான ஐ டிராப்ஸ் கொடுத்திருந்தார்கள். 

சரியாக கண்ணுக்குள் விழுவது போல அதைப் போட்டுக் கொள்வது ஒரு அவஸ்தை. வட இந்திய கோவில்களில் சிவலிங்கம் மேல் ஒரு சொம்பு இருக்கும். அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழும். அது போல ஒரு சொம்பு இருந்தால் வசதியாக இருக்கும். அதற்குக் கீழே படுத்துக் கொள்ளலாம்.

இரண்டு நாட்களில் கண் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. இது வரை தெரியாதது எல்லாம் தெரிந்தன. கிச்சன் சுவற்றில் எறும்பு ஊர்வது தெரிந்தது. அந்த எறும்பு கர்ப்பமாய் இருந்தது கூடத் தெரிந்தது.

அடுத்த திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் இன்னொரு முறை நடந்தன. பெண்கள் கூட மாறவில்லை. அதே கண்கள். அதே பெண்கள். அதே குடை.

ஒரு வாரம் கழித்து செக் அப் போனேன். சில சந்தேகங்கள் கேட்டேன்.

“தும்மினா லென்ஸ் கீழே விழுமா?”

“எச்சில் தான் விழும்” என்றார் அந்த பெண் டாக்டர்.

இந்த ஆஸ்பத்திரியில் எல்லா கண் டாக்டர்களும் இளம் கன்னிகளாகவே இருந்தார்கள். ரின் போட்டுத் துவைத்த வெள்ளைக் கோட் போட்டிருந்தார்கள்.

“கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் பார்த்தா கொஞ்சம் Discomfort இருக்கு” என்றேன்.

“அந்த மாதிரி சமயத்துல கண்ணை சிமிட்டுங்க”

“இந்த மாதிரியா?” என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியிருக்கலாம். போக்ஸோ சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் சிமிட்டல் கொஸ்டினை சாய்ஸில் விட்டு விட்டேன்.

மறுபடியும் பயாஸ்கோப்பில் தாடையை வைத்து டெஸ்ட்.

“உங்க லென்ஸ் எல்லாம் சரியான இடத்துல பத்திரமா இருக்கு. கொஞ்ச நாள்ல லென்ஸ் பவர் செட் ஆகி பழகிடும்” என்றார்.

பழகிக் கொண்டிருக்கிறேன். 

நகைச்சுவைக்காக கலாய்த்திருந்தாலும் இந்த மருத்துவ மனையில் சிகிச்சை சிறப்பாகவே இருந்தது. Systems, பணியாளர்களின் பணிவு, கனிவு, நீல நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை யுனிஃபார்ம் எல்லாமே முதல் தரம். கண்ணைத் திறந்து கொண்டு Five Star Rating கொடுக்கலாம்.

டாக்டர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஜே!

*************************

Friday, November 15, 2024

வெஜிடேபிள் புலாவ்

 எல்லோருக்கும்   பிடிச்ச   உணவு   வெஜிடேபிள் புலாவ் செய்வது எப்படினு  பாப்போம்!

தேவையானவை:

அரிசி  - 4 கப்
காய்கறிகள்
உருளை -- 4
வெங்காயம் - 2
கத்தரிக்காய் -- 3
வாழைக்காய் -- பாதி
பூசணி -- சிறு பத்தை
பரங்கிக் காய்  -- சிறு பத்தை.....
தக்காளி -- 2
கிராம்பு -- 4
ஏலக்காய் -- 2
பட்டை- 2 செமீ
மிளகாய் பொடி  --  2 டீஸ்பூன்.....
இஞ்சி -- 5 செமீ
பூண்டு -- 12 பற்கள்
சின்ன வெங்காயம் -- 8
பச்சை மிளகாய் -- 3
எண்ணெய் --  4 டேபிள்ஸ்பூன்
நெய் --- 3 டேபிள்ஸ்பூன்.....
உப்பு -- தேவைக்கேற்ப....


செய்முறை:

அரிசியை தண்ணீரில் நன்றாக களைந்து, தண்ணீரை இறுத்து விட்டு, 10 - 12 நிமிஷம் அரிசியை வைத்துக்கொள்ளவும்.......

கிராம்பு, ஏலக்காய், பட்டை இவைகளை பொடித்துக் கொள்ளவும்......

காய்கறிகளை சதுரங்களாக நறுக்கவும்......

கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிஷம் போட்டு, பின்னர் தோலுரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோலுரித்து, நன்கு அலம்பி, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.......

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்......

குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்/நெய் விட்டு, சூடானதும், பொடித்த கிராம்பு முதலானவைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்......

அடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் விழுது; 4 நிமிஷம்.....

அடுத்து, பூண்டு இஞ்சி விழுது; 3 நிமிஷம் மிளகாய்ப் பொடி, உப்பு சேர்க்கவும்; 2 நிமிஷம் வதக்கவும்.......

நறுக்கிய காய்கறிகளை போட்டு, மிச்சமுள்ள நெய்/எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் ஊற்றி, வதக்கவும் - 8 நிமிஷம்..... 

களைந்த அரிசியை போட்டு, 3 நிமிஷம் வதக்கவும்.

காய்கறிகளும், அரிசியும் நன்கு ஒன்றுசேர வேண்டும்.

5-6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தக்காளி விழுதை சேர்க்கவும்.

குக்கரை மூடி, சமைக்கவும்.

4 விஸில் வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.....

வெங்காயம்+தக்காளி ரைத்தா -வுடன், சூடாக புலவ் சாப்பிடவும்.

இட்லி பொடி

 ​​இட்லி பொடி 😍

என்னதான் இட்லிக்கு சாம்பார் சட்னியை வைத்தாலும் அதனுடன் கூடுதலாக வைக்கும் இட்லி பொடியின் சுவையே தனி சுவைதான்.  

இதை வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது  என்பது பற்றி பார்ப்போம்..

🍱தேவையான பொருட்கள்:

தோல் நீக்கிய 
உளுத்தம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
உடைத்த கடலை- கால் கப்
வெந்தயம்- 1/4 டேபிள்ஸ்பூன்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
பூண்டு பல் - 5 (தோலுடன்)
கருவேப்பிலை - 15
பெருங்காயப் பொடி - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

🍴செய்முறை: 👇

முதலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருகாமல் மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்.

பிறகு வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்..

பிறகு பருப்பு வகைகளை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்..

அதன்பிறகு பூண்டு, கருவேப்பிலை, எள்ளு, தேவைக்கு உப்பு போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடிக்கும் பொழுது தூள் பெருங்காயம் சேர்த்து பொடித்து எடுத்தால் சுவையான இட்லி பொடி ரெடி, 

பொடிக்கும் போது கொரகொரப்பாக பொடிப்பது நல்லது.. மேலும் காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் காய்ந்த மிளகாயின் அளவை கூட்டிக்கொள்ளுங்கள்..

இதனை நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறினால் அதன் சுவையே தனி..

5 வகையான தோசை

 5 வகையான தோசை

1. தக்காளி தோசை

தேவையானவை: 

பச்சரிசி - ஒன்றே கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், தக்காளி - 4, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

2.ஆலு வெந்தயக்கீரை தோசை

தேவையானவை: தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப், உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ, தக்காளி - 1, வெங்காயத் தாள் - 1 செடி, பெரிய வெங்காயம் - 1, வெந்தயக்கீரை - 1 கட்டு, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், தூள் உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 6 டீஸ்பூன், வெண்ணெய் - 1 பாக்கெட்.

செய்முறை: இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.

பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.

3.மசால் தோசை

தேவையானவை: தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.

துவையலுக்கு: தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை: ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.

துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

4.கோதுமை தோசை

தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.

செய்முறை: ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும். கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.

5.மினி சாம்பார் தோசை

தேவையானவை: (தோசைக்கு) ஆலு தோசைக்கான மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு. (சாம்பாருக்கு) துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பெரிய சைஸ் தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 15, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - 2 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3. தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன். (தேங்காயை மட்டும் கடைசியாக வதக்கிப் பொடிக்கவும்). தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை: முதலில் சாம்பாரை தயாரித்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேகவிடவும். சாம்பார் பொடி சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் வெந்ததும் வறுத்து பொடித்த (தேங்காய் சேர்த்த) பொடியைப் போட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும், சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும். அதோடு வெல்லத்தையும் சேர்த்து கலக்கி, கொதித்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.

தோசை மாவை நன்கு கலக்கி ஸ்பூனில் எடுத்து, குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றி (தோசைக்கல் சூடானதும் ஒரு தடவைக்கு 10 மினி ஊத்தப்பங்கள் ஊற்றலாம்), எண்ணெய் விட்டு, வெந்ததும் பின்புறம் திருப்பி சற்று சிவந்ததும் எடுக்கவும். சாம்பாரை வாயகன்ற கிண்ணத்தில் ஊற்றி அதில் தோசைகளை மிதக்க விட்டு, சூடாக பரிமாறவும். 1 கப் சாம்பாருக்கு, 7 குட்டி தோசைகள் சேர்க்கலாம். விருந்துகளுக்கு ஏற்ற ஸ்பெஷல் அயிட்டம் இது.

காலிஃப்ளவர் மசாலா

 காலிஃப்ளவர் மசாலா செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் - பெரிய பூவாக ஒன்று
வெங்காயம் - 4
தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வரமிளகாய் - 4
தாளிக்க - கடுகு, உளுந்து, தட்டிய பூண்டு, கடலைப்பருப்பு
அரைப்பதற்கு
தேங்காய் - கால் மூடி
நிலக்கடலை - 2 கைப்பிடி
தனியா - ஒரு கைப்பிடி
மிளகு - அரை தேக்கரண்டி
வர மிளகாய் - 6
பூண்டு -ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4

செய்முறை

🎄    அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.

🎄    நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

🎄    வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

🎄   காலிஃப்ளவரில் ஒவ்வொரு பூவாக பிரித்து வெந்நீரில் 5 நிமிடம் வைக்கவும்.

🎄   அரைப்பதற்கு கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

🎄    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்துக்கொள்ளவும்.

🎄   பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

🎄    அதில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய கிளறவும்.

🎄    பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவைக்கு நீர் சேர்த்து வேக விடவும்.

🎄    கிரேவி பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

🎄    சுவையான கோபி மசாலா தயார்.

🎄   சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்தும், வெறும் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்

#sujiaarthi

உடனடி புளி சாதம்

 உடனடி புளி சாதம் செய்வது எப்படி...

 தேவையான பொருட்கள்

தேவைக்கேற்ப சமைத்த அரிசி
அரிசிக்கு 1 தேக்கரண்டி எள் விதை எண்ணெய்
அரைப்பதற்கு
30 கிராம் புளி (30 கிராம் அல்லது ஒரு சிறிய எலுமிச்சை அளவு உருண்டை)
4 சிவப்பு மிளகாய்
1 தேக்கரண்டி கல் உப்பு (1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப)
வறுத்த மற்றும் தூள் 
1 தேக்கரண்டி எள் விதைகள்
1/2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
சீசனிங்கிற்கு
50 மிலி இஞ்சி எண்ணெய் (நெல்லென்னை)
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
1 சிட்டிகை அசாஃபோடிடா
1 துளிர் கறிவேப்பிலை
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
3 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை

வழிமுறைகள்

உடனடி புளி சாதம் செய்வது எப்படி

புளி, சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை மிகக் குறைந்த வெந்நீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

20 நிமிடங்களுக்குப் பிறகு, புளி, சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும். பேஸ்ட் தயாராக உள்ளது.

1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தய விதைகளை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். கடாயில் இருந்து அகற்றவும்.

அதே கடாயில், எள்ளை உலரவைக்கும் வரை வறுக்கவும். இப்போது மூன்றையும் சேர்த்து பொடி செய்யவும். இந்த மசாலா பொடியை ஒதுக்கி வைக்கவும்.

சமையல் அரிசி

ஒவ்வொரு தானியமும் தனித்தனியாக இருக்கும் வகையில் அரிசியை சமைக்கவும்.

அரிசியுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு தட்டில் பரப்பவும். அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.

சுவையூட்டும்

1/4 கப் நல்லெண்ணெய் (நல்லென்னை) சூடாக்கி, ஒரு தேக்கரண்டி கடுகு, பெருங்காயம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கடுகு வெடித்ததும், வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

புளி விழுதில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஊற்றவும்.

அதில் தயார் செய்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். புலிகச்சல் தயார்.

இப்போது அரிசியில் தேவையான விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

எங்கள் புளி சாதம் தயார். அப்பளம் அல்லது பப்பாளி அல்லது பருப்பு வடையுடன் மகிழுங்கள்.

வேர்க்கடலை சட்னி

 வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ....?

வேர்க்கடலை சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அரை கப் அளவு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் நான்கு வர மிளகாய்களை கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு சிறிய அளவு புளி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

மிளகாய், பூண்டு, புளி ஆகியவை நன்கு வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து இரண்டு மேசை கரண்டி அளவு தேங்காய் பூ சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து இதனை அரைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலையை நீண்ட நேரம் அரைத்தால் அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் எனவே நீண்ட நேரம் அரைக்க கூடாது.

இதோ சட்னி அரைத்தாகி விட்டது. இப்பொழுது இதனை தாளிக்க வேண்டியது தான். ஒரு சிறிய தாளிக்கும் கரண்டியில் ஒரு மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்த பிறகு ஒரு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு வர மிளகாய் சேர்க்கவும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு இதனை சட்னியில் சேர்க்கவும்.

அவ்வளவுதான் சுலபமான சுவை நிறைந்த வேர்க்கடலை சட்னி தயாராகி விட்டது!

இட்லி சாம்பார்

 இட்லி சாம்பார் செய்வது எப்படி.....

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு

துவரம் பருப்பு ஒரு கப் 
வெங்காயம் 2 பெரியது 
தக்காளி 2 
பூண்டு பல் 5 
பச்சை மிளகாய் 3 
கறிவேப்பிலை ஒரு கொத்து 
தனியா தூள் ஒரு டேபிள் ஸ்பூன் 
கடுகு அரை டீஸ்பூன் 
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் 
சீரகம் அரை டீஸ்பூன் 

செய்முறை :

 தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.

 ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

 கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

 ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.

 பின்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும்.

 சுவையான சாம்பார் ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை இட்லியுடன் பரிமாறவும்.

காஞ்சிபுரம் இட்லி

 காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி ...?

காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு இரண்டு கப் அளவு பச்சரிசி மற்றும் ஒரு கப் புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து மெஷினில் கொடுத்து ரவை போல் உடைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரிசி ரவையில் செய்தால் தான் இந்த இட்லி சுவையாக இருக்கும்.

இப்பொழுது ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். உடைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஆட்டி வைத்திருக்கும் உளுந்து மாவுடன் ஊறிய அரிசி மாவையும் கலந்து கரைத்து கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும் இதனை குறைந்தது 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அல்லது முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை ஊற்றலாம். ஆறு மணி நேரம் கழித்து ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை உரலில் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்கு பொடியையும் எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வழக்கமாக இட்லி ஊற்றுவது போல இந்த மாவில் இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வளவு தான். கோவில் சுவையில் காஞ்சிபுரம் இட்லி தயாராகி விட்டது!

பிஸி பேளாபாத்

 பிஸி பேளாபாத் செய்வது எப்படி....

தேவையான பொருள்கள்:

1. அரிசி

2. துவரம் பருப்பு

3. கடலைப் பருப்பு

4. தனியா

5. லவங்கப்பட்டை

6. கிராம்பு

7. காய்ந்த மிளகாய்

8. பெருங்காயம்

9. தேங்காய்த் துருவல்

10. கடுகு

11. உருளைக் கிழங்கு

12. உப்பு

13. புளி

செய்முறை:

1. கடலைப் பருப்பு, தனியா, துவரம் பருப்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகிய அனைத்தையும் எண்ணெயில் வறுத்துத் தேங்காய் உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இது மசாலா போல வாசனை வரும்.

2. துவரம் பருப்பு, அரிசி ஆகிய இந்த இரண்டையும் மேற்கண்ட அளவு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.

3. பாதி வெந்த மாத்திரத்தில் நறுக்கிய உருளைக் கிழங்கை நன்கு கழுவிப் போடவும்.

4. இவை எல்லாம் வெந்தவுடன் 3/4 ஆழாக்கு கரைத்த புளித் தண்ணீரை விட்டு உப்பு போட்டு முன்பு நாம் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாகக் கலந்து மேலும் கொதிக்க விடவும்.

5. கொதிக்கும் சமயத்தில் அடிப் பிடிக்காமல் இருக்க நன்கு கிளறி விடவும். பின்னர் இறக்கி வைத்து விடவும்.

6. உடன் அதே அடுப்பில் கடுகு, கருவேப்பில்லை எண்ணெய்யில் தாளித்து அதில் கொட்டி விடவும்.

7. இதோ, இப்போது சுவையான பிஸி பேளாபாத் தயார் ஆகிவிட்டது.