Thursday, December 6, 2018

'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்'

'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்'

(பக்தருக்குப் பாடம் சொன்ன பரமாசார்யா)

கட்டுரையாளர்-என். அக்ஷிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
இந்த வார குமுதம் லைஃப்
28-11-2018 வெளிவந்தது.

மகாபெரியவாளின் பரம பக்தனான டாக்டர் ஒருவர்,வரும்போதெல்லாம் மிகவும் விலை உயர்வான பழங்களை வாங்கிவந்து ஆசார்யாளிடம் சமர்ப்பிப்பார்.

ஓரு சமயம் மகாபெரியவர் கும்பகோணத்துக்கு அருகே ஓர் இடத்தில் முகாமிட்டிருந்ததைக் கேள்விப்பட்டு அவரை தரிசிக்க அங்கே வந்தார்,அந்த மருத்துவர். வழக்கம்போல ஏராளமான பழங்களை வாங்கிவந்த அவர், முகாமை நெருங்கிய போது, மகாபெரியவாளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் அங்கே நிற்பதைப் பார்த்தார். அடிக்கடி வருபவர் என்பதால், அந்த அணுக்கத் தொண்டரிடம் சகஜமாகப் பேசிய அவர்,பேச்சோடு பேச்சாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

"மகாபெரியவா பிட்சை பண்ணணும்கறதுக்காக நான் இப்படி விலை உயர்ந்த பழங்களாக பார்த்து வாங்கி வந்து தருகிறேன். ஆனால் மடத்தில் உள்ள பெருச்சாளிகள்தான் அதை தின்னுதோன்னு சந்தேகமாக இருக்கு. அப்படி எதுவும் நடந்துடாம நீங்கதான் பார்த்துக்கணும்" என்றார் மருத்துவர்.அந்த தொண்டருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.பேசாமல் இருந்தார்

உள்ளே சென்று மகாபெரியவாளை தரிசித்தார் டாக்டர்.பழங்களை அவர் முன் சமர்ப்பித்தார்.பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு ,புறப்படுவதற்காக பிரசாதம் வேண்டி, பெரியவா முன் பவ்யமாக கையை நீட்டினார்.

அவருக்கு பிரசாதம் தராத மகாபெரியவா ,"இவ்வளவு தூரம் இத்தனை பழத்தையும் வாங்கிண்டு வந்திருக்கே. இன்னும் கொஞ்ச நேரம் இரு. ஒரு வேலை இருக்கு உனக்கு" என்றார்.

ஆசார்யா இப்படிச் சொன்னதும்,சரி என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் ஒதுங்கி 
நின்றார் அந்த டாக்டர்

சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, "இங்கே வா...!.என்று மருத்துவரைக் கூப்பிட்ட மகாபெரியவர் பேசத் தொடங்கினார்." இவ்வளவு விலை உயர்ந்த கனிகளை வாங்கி வந்திருக்கிறாய். ஆனால் உன்னுடைய மனசு அவ்வளவு உயர்ந்ததாக இல்லையே. இந்தப் பழங்களை எல்லாம் எனக்காக என்று வாங்கி வந்து விட்டாய். இதை என்னிடம் தந்ததுமே ,உன்னுடையது என்பது போய் விடுகிறது. ஆனால் அதன் பிறகும் நீ உன்னுடையதாகவே நினைக்கிறாய் . அதை நான் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறாய்

இங்கே எத்தனையோ பேர் எவ்வளவோ பழங்கள் உள்பட என்னென்ன முடியுமோ எல்லாமும் கொண்டுவந்து தருகிறார்கள். எல்லாரும் தரும் எல்லாவற்றையும் நான் ஒருவனே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது முடியுமா? இங்கே மடத்துக்காக தங்கள் குடும்பத்தை விட்டு எத்தனையோ பேர் வந்து சேவை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தர சந்நியாசியான என்னிடம் என்ன இருக்கிறது. பலரும் என்னிடம் தருவதைத் தானே நான் இவர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது.இந்த மடத்தில் இருக்கும் பெருச்சாளிகள் நீ தருவதைத் தின்கிறது என்று சொன்னாயே ,அப்படியானால், முதல் பெருச்சாளி நான்தானே? ஆசார்யா கொஞ்சம் நிறுத்த 'குப்' என்று வியர்த்தது அந்த டாக்டருக்கு.

சகல அவயங்களும் நடுங்க," பெரியவா மன்னிக்கணும்..! ஏதோ ஆதங்கத்துல.. வார்த்தைகளை முடிக்க இயலாமல் தழுதழுத்தார்.

"சரி, பெருச்சாளிகள் தின்னக் கூடாதுன்னு சொல்லிட்டே,அப்படின்னா இதையெல்லாம் இங்கே வைக்கக் கூடாது இல்லையா?" கேட்ட பரமாசார்யா யாருமே எதிர்பார்க்காதபடி அந்தப் பழங்களை எடுத்து பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே எறிய ஆரம்பித்தார்.

தவித்துப்போன டாக்டர் அவசர அவசரமாக ஜன்னலை நெருங்கி தெருவை எட்டிப் பார்த்தார். அங்கே வரிசையாக நிறைய நரிக்குறவர்கள் நின்று,அந்தப் பழங்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அந்த சமயத்தில் டாக்டர் எட்டிப் பார்க்க, அவர்தான் பழங்களைப் போடுகிறார் என்று நினைத்து ,"சாமீ நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்" என்று குரல் எழுப்பினார்கள்.

"மகாபெரியவா மன்னிக்கணும். இனிமே வீணான கர்வமும்,மற்றவர்களை தாழ்வாக நினைக்கும் எண்ணமும் எனக்கு ஒரு போதும் வராது!" சொன்ன டாக்டர் மறுபடியும் மகாபெரியவா முன் விழுந்து வணங்கினார்.

'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்' ஆசிவழங்கி ஆசார்யா சொன்னது அங்கே இருந்த எல்லோருக்கும் கடவுளின் குரலாகவே ஒலித்தது.

வெளியே ஜன்னலுக்குக் கீழே பாமர ஜனங்கள் நிற்பது பரமாசார்யாளுக்கு எப்படித் தெரிந்தது என்பது மட்டும் பரம ரகசியம்.