Friday, March 15, 2024

ஆத்மாநந்தா-8

 ஆத்மாநந்தா-8

By N Krishnamurthy 

" கோவிலுக்கு கிளம்பு"என்றார் தெக்ஷிணாமூர்த்தி வசந்தியிடம். பூஜா முரியிலிருந்து வெளிப்பட்டனர் இருவரும்.

வீட்டைப்பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக்கொண்டார் தெக்ஷிணாமூர்த்தி. ஐந்து நிமிடம் நடந்து கோவிலை அடைந்தனர்.

இவர்களைப்பார்த்த கோவில் பட்டர் ஒருவர் "சுகந்தன்னே"என்று கேட்டுவிட்டு தனி வாசல் வழியே இவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார். அங்கும் கொஞ்சம் நிற்க வேண்டி இருந்தது. தனது முறை வந்ததும்  ஸ்ரீகிருஷ்ணனை மனங்குளிர தரிசித்த வசந்தா " ஹரே கிருஷ்ணா. அடுத்த ஏகாதசிக்கு நான் உன்னை தரிசிச்க வரும்போது மனசு சந்தோஷமா வந்து தரிசிக்க அருள் புரியணம்"என்று வேண்டிக்கொண்டாள்.

தெக்ஷிணாமூர்த்தியும் உள்ளமுருக வேண்டினார்.

வீட்டிற்கு வந்ததும் தெக்ஷிணாமூர்த்தி, மரவள்ளிக்கிழங்கு கலந்த தோசையை, ஓலனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, வேறு உடுப்பு உடுத்திக்கொண்டவர் கையில் மதிய உணவு அடங்கிய டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு,"நான் வரட்டமா" என்று அவளிடம் சொல்லிக்கொண்டு, கல்லூரிக்கு புறப்பட்டார். 

வசந்தா அவரிடம்" நான் திருவெம்பாடிக்கு போய் அச்சனையும், அம்மையையும் பாத்தூட்டு வரேன். நாலரை மணிக்குள்ள வந்துடுவேன் " என்றாள்."செரி"என்றார் அவர்.

குருவாயூரிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் கணிதத்துறையில் லெக்சரராக உள்ளார் தெக்ஷிணாமூர்த்தி.

அன்று சமையல் வேலை இல்லை வசந்திக்கு.பஸ்சை பிடித்து திருச்சூர் சென்று, திருவெம்பாடியிலுள்ள தன் வீட்டை அடைந்தாள்.

வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்த ராதாகிருஷ்ணன் "கார்த்தியாயினி,யார் வந்திருக்கா பார்" என்று குரல் கொடுத்தார்.

உள்ளேயிருந்து வந்த கார்த்தியாயினி வசந்தியை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.

"மோளே,மாப்பிள்ளை வரலையாக்கும்" என்றாள். "இன்னிக்கு வொர்கிங் டேன்னு மறந்தூட்டுதோ"என்றாள் வசந்தா.

"காப்பி குடிக்கறயா" என்ற கார்த்தாயினிடம் "அம்மே.கொறச்சு வெள்ளம் மதி"என்றாள் வசந்தி. இருவரும் பேச ஆரம்பித்தனர். "ராமேந்திரன் கிட்டேந்து தகவல் உண்டா "என்றாள் வசந்தி.

ராமேந்திரன் அவள் தம்பி ராமசந்திரன். திருவனந்தபுரத்திலுள்ள யுனிவர்சிடி காலேஜில் சமஸ்கிருத லெக்சரர்.

போனவருஷம் கல்யாணமானது. பெண் பாலக்காடு கல்பாத்தியை சேர்ந்த சுந்தரமய்யரின் சீமந்த புத்ரி விஜயலக்ஷ்மி. "நேத்துக்ககுத்தான் போன் பண்ணான்" என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு விஷயத்தை சொல்லத்தயங்கினாள் கார்த்தியாயினி

."ஏதோ சொல்ல வந்து நிறுத்திண்டூட்டாய்" என்றாள் வசந்தி.

கார்த்தியாயினி அவளிடம் "விஜயலக்ஷ்மி குளிச்சு ரெண்டு மாசம் ஆறதாம்"என்றாள்.

இதைக்கேட்ட வசந்தி"இந்த நல்ல சமாஜாரத்தை அவன் என்கிட்ட ஏன் சொல்லலைன்னு தெரியலை. கொழந்த பாக்யம் இல்லாத அக்காவுக்கு இத சொன்னா அவ வருத்தப்பட போறாளேன்னு சொல்லல போலயிருக்கு"என்றாள். கார்த்தியாயினி பதில் சொல்லவில்லை.

வசந்தியே தொடர்ந்தாள்."அவாவா பூர்வ ஜென்மத்ல பண்ணதுக்கு ஏற்பத்தான் பகவான் படி அளக்கிறான்"என்றாள்.

.கார்த்தியாயினி அவள் கைகளை பற்றி"கவலைப்படாதே.நோக்கும் சீக்ரம் இந்த பாக்யம் கெடைக்கும்னு நம்பறேன்"என்றாள்.

வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தவள் கையிலிருந்த வாட்ச்சை பார்த்து "ரெண்டு மாணி ஆயிடித்தே.இப்போ பஸ்ஸை பிடிச்சாத்தான் அவர் காலேஜுலேந்து வரதுக்குள்ள நான்போக முடியும்"என்றாள் வசந்தி.

பெற்றோர்களை நமஸ்கரித்தாள். ராதகிருஷ்ணன் "சீக்ரமேவ புத்ர ப்ராப்தி ரஸ்து"என்று ஆசீர்வாதம் செய்தார். வெற்றிலை,பாக்குடன் புடவையும் வைத்துக்கொடுத்தாள் கார்த்தியாயினி.

"எதுக்கு புடவையெல்லாம்"என்ற வசந்தியிடம் "எதுத்தாத்து அம்புஜம் புடவ கடைக்கு கூப்ட்டா. இந்த டிசைன்புடவை பிடிச்சிருந்தது.வேற வேற கலர்ல ரெண்டு புடவ வாங்கினேன். ஒண்ணு நோக்கு, இன்னொண்டு விஜய லக்ஷ்மிக்கு"என்றாள் கார்த்தியாயினி.

Thursday, March 14, 2024

உப்பு அடை

 *காரடையான் நோன்பு ஸ்பெஷல் !* 👆👇

 உப்பு அடை:  👆👇 

தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1
ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு,
எண்ணைய் தேவையானது

 தாளிக்க:

கடுகு,உளுத்தம் பருப்பு,பெருங்காயம்,

கறிவேப்பிலை

 செய்முறை

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டிய வைகளை தாளித்து இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காரா மணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை தூவிக் கொண்டே கிளறவும்.

மாவு நன்றாக வெந்ததும் வடை போல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். அடை ரெடி.

அனைவருக்கும் காரடையான் நோன்பு 14.3.2020 வாழ்த்துக்கள் !

வெல்ல அடை,

 *காரடையான் நோன்பு ஸ்பெஷல் !* 👆👇

 வெல்ல அடை,

 *செய்முறை* 

காரடையான் நோன்பு கொண்டாட, வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.இப்போது வெல்ல அடை பற்றி பார்க்கலாம்.ர

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.

வாசனை வரும் வரை வறுக்கவும்.

 வெல்ல அடை: 

 தேவையானவை :

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 3/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

 செய்முறை

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்க விடவும்.

வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர்"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.

வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டி கொண்டே மறுகையால் கிளறவும்.

மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

இப்போது வெல்ல அடை ரெடி.

அனைவருக்கும் காரடையான் நோன்பு 14.3.2020 வாழ்த்துகள் !

ஏகாம்பரநாதர் கோயில்

 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களுள் ஒன்றான *இது, நிலத்தைக் குறிப்பதாகும்*. 

இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார்.

 'ஏகாம்பரநாதர்' என்பது இவரது பெயர். அம்பாளின் திருநாமம், 'காமாட்சி அம்மன்' என்பதாகும். கருவறையில் உள்ள மூலவர் லிங்கத்தை 'பிருத்வி லிங்கம்' என்று அழைப்பார்கள். இந்த லிங்கம், மண்ணால் ஆனது. *சுயம்பு லிங்கம். எனவே இந்த லிங்கத்திற்கு அபிஷேகங்கள் கிடையாது.*

மாறாக, லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்குத்தான் அபிஷேகங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன.

மற்ற சிவாலயங்களைப் போல, இங்கு அம்மனுக்கு என்று தனியாக சன்னிதி கிடையாது.

 காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சியே, அனைத்து சிவாலயங்களுக்குமான தேவி என்பதால், அங்குள்ள சிவாலயங்கள் எதிலுமே அம்பாளுக்கு என்று தனியாக சன்னிதி அமைக்கப்படுவதில்லை. தவிர விநாயகர், முருகன், போன்ற தெய்வங்களுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.

முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சன்னிதி உள்ளது. 

ஒவ்வொரு கோவிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் *கோவிலில் தல விருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஆகும்.

 இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள *நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன*.

தலவரலாறு

ஒரு முறை கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். ஈசனுக்கு ஒரு நொடிதான் என்றாலும் அது மனிதர்களுக்கு பல நூற்றாண்டு காலம் என்பதால், அதுவரை உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன.

 இதைக்கண்டு பார்வதிதேவி வருத்தம் அடைந்தார். அவர் தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க, தவம் மேற்கொள்ள எண்ணினார். அதன்படி *காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் அமைத்து பூஜித்தார்.

பார்வதியின் தவத்தை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். *பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.* உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள்புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் 'பிருத்வி லிங்கம்.'

அதாவது தற்போதைய மூலவர். அம்மன் அருளும் காமகோட்டமே, காமாட்சி அம்மன் கோவிலாகத் திகழ்கிறது. 

பார்வதி கட்டித் தழுவியதால் ஏகாம்பரநாதர் கோவிலின் மூலவர் லிங்கம் 'தழுவக் குழைந்தார்' என்றும் அழைக்கப்படுகிறார்.

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது 'உன்னைப் பிரியேன்' என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர், இந்தத் தலத்தில் பதிகம்பாடியதன் மூலமாக திரும்பப் பெற்றார்.

ஆலய அமைப்பு

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயம், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. 

*அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது.* பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் 'திருக்கச்சிஏகம்பம்' என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.

இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம், 58.5 மீட்டர் உயரமும், ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவ ராயர் (கி.பி 1509) காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

 இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

 ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

*🌹D Muthu Prakash🌹*

ஆத்மாநந்தா -7

 ஆத்மாநந்தா -7

By N Krishnamurthy 

கும்பகோணத்துக்காரர்களை பற்றியே கதைத்துக்கொண்டிருப்பது போரடிக்கிறது.

கண்ணுக்கு ரம்யமான மலையாள தேசத்துக்கு கதையை நகர்த்துவோமா?

இதைத்தான் God's own country என்கிறார்கள்.

மலையாள தேசத்தில் மிகவும் பிரசித்த பெற்ற திவ்ய தேசங்களில் குருவாயூர் முக்யமானதல்லவா?

 *பூலோக வைகுண்டமான* குருவாயூரில்  எப்போதும் போல ஜன சமுத்திரம் அலை மோதிக்கொண்டிருந்தது. அன்று ஏகாதசி ஆதலால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

கோவிலுக்கு அருகே உள்ள ம(மா)ஞ்சிரா ரோட்டில்  ஒரு வீட்டின் மீது நாம் பார்வையை செலுத்துவோம்.

வீட்டின் சொந்தக்காரரான தெக்ஷிணாமூர்த்தி, முப்பது வயதானவர்.ஆனால் பார்த்தால் இருபத்தைந்து என்றே மதிப்பிடத் தோன்றும். வேஷ்டி உடுத்தி அதன் மேல் அங்கவஸ்தரத்தை தரித்து, காலை சந்தியை முடித்து, பின்னர் அன்று நாராயணீயத்தின் எழுபத்தி இரண்டாவது சதகத்தில் அக்ரூரன் தேரில் ஏறி ஸ்ரீகிருஷ்ணனை காண வரும் போது அவனுக்கிருந்த மன நிலமையை பட்டத்ரி

"த்ரக்ஷ்யாமி வேத சுத கீத கதிம் புமாம்ஸம்"என தொடங்கும் பாடலில் 

"அக்ருரன் வேதங்களால் புகழ்ந்து பாடப்பட்ட அந்த பரம புருஷனை நான் காண்பேனா? தொடுவேனா?இறுக தழுவிக்கொள்வேனா? அவன் என்னுடன் பேசுவானா? அவனை எங்கே பார்ப்பேன் என்று அவன் உன்னைப்பற்றிய சிந்தித்து கொண்டிருந்ததால் அவன் போகும் வழியெல்லாம் உன் தோற்றமே தோன்றியது" என விவரத்திருப்பதை சஹான ராகத்தில் மனமுருகி பாடினார்

சஹான ராகமே கருணா ரசம் பொங்கித்ததும்பும் ராகம். இதில் தெக்ஷிணாமூர்த்தியின் 

நேர்த்தியான குரலும் சேர்ந்தது "சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது " போல இருந்தது. (சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தால் எப்படி இருக்கும். அனுபவித்திருக்கீறீர்களா என கேட்கவேண்டாம். எங்கேயே படித்த இந்த சொற்றொடர் பிடித்திருந்தது. வெகு நாட்களாக எங்கேயாவது புகுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன்.இன்று புகுத்திவிட்டேன்!)

அருகில் நின்று கொண்டிருந்த அவரது தர்மபத்தினி வசந்தா,வயது இருபத்தி ஆறு (மலையாளப்பெண்களுக்கே உண்டான அடர்த்தியான கருங்கூந்தல், த்ருஷ்டி படுமளவிற்கு சௌந்தர்யம். தன்னுடைய சொந்த தேசத்தை படைத்திருந்த கடவுள், வசந்தாவையும் வஞ்சனை இல்லாமல் படைத்திருந்தான்) கண்களில் நீர் சோர,கை கூப்பி மனதிற்குள்" பிரபோ.என்டே குருவாயூரப்பா.இன்னும் எவ்வளவு நாள்தான் என்னை சோதிப்பாய். நான் கேட்பதை கொடுக்க உனக்கு அத்தனை சிரமமா? அல்லது என் மீது உனக்கு இரக்கமே இல்லையா?  வழக்கமாக அனுதினமும் கேட்பது போல இன்றும் கேட்கிறேன்.  நீ நான் கேட்பதை கொடுக்கும் வரை நான் ஓய மாட்டேன்.

நீல வண்ண கண்ணனே. இந்த முறையாவது என் மனக்கவலை தீர்ப்பாயா" என வேண்டினாள். 

இனிமேல் கதாபாத்திரங்கள் மலையாளத்தில் சம்சாரிக்கப் போகிறார்கள். அவர்கள் பேசுவது எனக்கு கொறச்சு கொறச்சு  மனசிலாகும்.

(மலையாளப்படங்களை பார்ப்பதின் விளைவு).

ஆனால் வாசகர்களுக்கு புரியுமா எனத்தெரியாததால் பாத்திரங்கள் பேசுவதை தமிழ்படுத்தி தரப்போகிறேன். ஏதேனும் தவறாக மொழிமாற்றம் செய்தால் கண்டு கொள்ள வேண்டாம்.

தெக்ஷிணாமூர்த்தி குடும்பம் கடந்து ஏழு தலைமுறைகளாக குருவாயூரில் இருந்து வருகிறது.

வசந்தை(வசந்தாவை அப்படித்தான் மலையாள தேசத்தவர்கள் அழைப்பார்கள்) திருச்சூர்,திருவெம்பாடி யில் ராதாகிருஷ்ண நம்பூதிரிக்கும், கார்த்தியாயினிக்கும் பிறந்தவள்.

பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அவளை தொடர்ந்தே வந்திருக்கின்றான்.

திருவெம்பாடியிலும்,குருவாயூரிலும் அருள் பாலிப்பது உன்னி கிருஷ்ணனே அல்லவா!

ஆத்மாநந்தா -6

 ஆத்மாநந்தா -6

By N Krishnamurthy 

மங்களமும், லாவண்யாவும் காலத்தை ஓட்ட ஆரம்பித்தார்கள். ஒரு வருடத்திற்குள் கோவில்,குளம் செல்ல வேண்டாம் என்று வீட்டிலேயே அடைந்து கிடந்தாள் மங்களம்.

வாரந்தோறும் மறக்காமல் காயத்ரிபோன் செய்வாள். 

ஸ்ரீராம் மாதம் ஒருமுறை போன் செய்வான்.

சுந்தரமும், ஜனனியும்  மாத காரியங்களை செய்ய   கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர்.

ஆத்மநாதன் இறந்த 340 ஆவது நாளுக்குமேல் 355 ஆவது நாளுக்குள், பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள் தவிர்த்து ஒரு நாளில் ஊன மாசிகம் நடந்தது.

வருஷாப்தீகத்திற்கு ஐந்து நாட்கள் முன்பே சுந்தரம் குடும்பம், காயத்ரி,ஸ்ரீராம் குடும்பம் வந்திருந்தது.

கூடுதலாக சுந்தரத்தின் பையன் கிரீஷ்,மாட்டுப்பெண் மாலினி,குழந்தை ஆப்திகா ஆகியோர் அமெரிக்காவிலிருந்து  வந்திருந்தார்கள்.

இது போல காயத்ரியின் மகள் சௌம்யா மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து தன் இரண்டு வயது மகன் பிராணேஷுடன் வந்திருந்தாள்.அவள் கணவன் டென்டிஸ்ட்டாக பிராக்டீஸ் செய்கிறான். அவனால் வர முடியவில்லை.

இறந்த தமிழ் மாதம், பக்ஷம், திதிக்கு முதல் நாள் சோதகும்பம் செய்தார்கள். ஒரு வாத்யாருக்கு  சமாராதனை சமையல் சாப்பாடு போடப்பட்டது.

(சோத கும்பமும் பிதா முதலிய மூவரை குறித்து செய்யப்படும் ச்ராத்தமே ஆகும்)

நியமம் அதிகம் இல்லாததால் இதற்கு சாஸ்திரிகள் வர  ஒப்பு கொண்டார். ஆனால் மாசிகத்திற்கு நியமம் அதிகம் உள்ளதால் சாஸ்திரிகள் வேறு ஒருவரை   அனுப்பினார்.

ஸோத கும்பம் சாப்பிட்ட வாத்யாருக்கு ஒரு பவுன் தங்கத்தில் ஒரு மோதிரம்,  வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, வெள்ளி பவித்ரம் ஒன்று, 10X6  வேஷ்டி ,டவல், குடை, பாத ரக்ஷை(செருப்பு), விசிறி, கோதானத்திற்கு பதில் பணம்,மட்டை தேங்காய், சந்தன கட்டை,  ஒரு லிட்டர் கொள் அளவுள்ள பித்தளை சொம்பு, வெள்ளி கிண்ணத்தில் தேன் ஆகியவைகளை தானமாக தந்தார்கள் .

வருஷாப்தீகத்தன்றும், சுபத்தன்றும் தேஜோமய குருக்களும்,மதுராம்பாவும் வந்திருந்தனர்.

குருக்களுக்கு எண்பத்தியேழு நடந்து கொண்டிருந்தது. முடியவில்லை. இருப்பினும் நண்பனுக்காக வந்திருந்தார்.

சுபத்தன்று டாக்டர் பாலகிருஷ்ணனும் அவரது மனைவியும் வந்திருந்தனர்.

குழந்தைகளும், மற்றவர்களும் புதுத்துணி அணிந்தார்கள்.

வருஷாப்தீகத்தன்று சிராத்த சமையல். விஸ்வேதேவர், பித்ரு இருவர் சாப்பாடு. இவர்கள் இருவருக்கும் தங்க மோதிரம், வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, , வெள்ளி பவித்ரம் ஒன்று, வெள்ளி கிண்ணத்தில் தேன் ,குடை, செருப்பு, விசிறி, பித்தளை சொம்பு, டவல், 9x5 வேஷ்டி, பஞ்ச தானம் மட்டை தேங்காய், சந்தன கட்டை  இவைகள தானம் செய்தார்கள்.

சுபம் அன்று நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், செய்யப்பட்டன.

குடும்பத்திலுள்ள அனைவரது  பெயர், நக்ஷத்திரம், ராசிகளை பேப்பரில்எழுதி  சுந்தரம்    சாஸ்த்ரிகளிடம் கொடுத்து விட, அதை பார்த்து அவர் ஆயுஷ்ய ஹோமம் செய்தார்.

சுபம் முடிந்த அடுத்த நாள் ஒருவர் பின் ஒருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.

கடைசியில் சுந்தரம் குடும்பம் மட்டும் தங்கி இருந்தனர்.

மங்களம் சுந்தரத்திடம் "என்னக்கி கிளம்பணம்னு சொல்லுடா சுந்தா.நானும்,லாவண்யாவும் துணி மணிகளை யெல்லாம் எடுத்து வச்சிக்கணம் "என்றாள்.

சுந்தரம் அம்மாவிடம் "அதுக்கு அவசியமே இல்லை அம்மா" என்றார்.

"என்னடா சொல்ற நீ? என்றாள்  மங்களம். "நான் வரத்துக்கு மூணு நாள் முன்னாடி வாலன்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிண்டூட்டேன். ஒரு நாள்  நான் மட்டும் திருச்சிக்கு போய், சாமானை எல்லாம் ஏற கட்டிண்டு, ஒரு லாரில ஏத்திண்டு வந்துட வேண்டியது தான்" என்றார்.

 "அந்த  வீட்டை என்ன பண்ண போற" என்றாள் மங்களம். " அந்த வீட்ட எங்க காலேஜ்ல வேலை செய்ற   ஒரு ப்ரபொசர் வாடகைக்கு வேணும்னு கேக்கறார் . அவருக்கே வாடகைக்கு கொடுத்துலாம்னு இருக்கேன்"என்றார். இதைக் கேட்ட மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.

இருக்காதா பின்ன. வேறு வழி இல்லாததால் கும்பகோணம்  வீட்டை விட்டு  பிரியப் போகிறோமே  என்ற துக்கம் அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. இப்பொழுது அது இல்லாமல் போனது.

இரண்டு நாள் கழித்து மங்களம், லாவண்யாவுடன், மாலை ராமசாமி கோவிலுக்கு சென்று வந்தாள். அவளை ஒரளவுக்கு தெரிந்து வைத்திருந்த பெண்கள் தங்களுக்குள் "மங்களம் மாமி மஹாலக்ஷ்மி மாதிரி மங்கலமா இருப்பா.பாவம் இப்போ இப்படி ஆய்ட்டா"என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டனர்.

Wednesday, March 13, 2024

சதுர்புஜ கோதண்டராமர் கோயில்

 அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்,

பி.வி.களத்தூர் வழி,

பொன்பதர்கூடம்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

*+91- 44 – 2744 1227, 97890 49704 (மாற்றங்களுக்குட்பட்டது)*

*காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே கோயில் அர்ச்சகரை தொடர்பு கொண்டால், பிற நேரத்தில் சுவாமியைத் தரிசிக்கலாம்.*

*மூலவர் – சதுர்புஜ கோதண்டராமர்.*
*தீர்த்தம் – தேவராஜ புஷ்கரணி, சேஷ தீர்த்தம்.*
*ஆகமம் – வைகானசம்.*
*பழமை – 500 வருடங்களுக்கு முன்.*
*புராணப் பெயர் – பொன்பதர்க்கூடம்.*
*ஊர் – பொன்பதர்க்கூடம்.*
*மாவட்டம் – காஞ்சிபுரம்.*
*மாநிலம் – தமிழ்நாடு.*

*இராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, தனது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதையின் மீது பரிவு காட்டிய திரிஜடை மற்றும் இராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவாகக் காட்சி தந்தார். இதேபோல தனக்கும் காட்சி கிடைக்க வேண்டுமென, தேவராஜ மகரிஷி விரும்பினார். இதற்காக இத்தலத்தில் சுவாமியை வேண்டித் தவமிருந்தார். அவரது பக்திக்கு இரங்கிய மகாவிஷ்ணு, நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி இங்கு காட்சி தந்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி “சதுர்புஜ கோதண்டராமர்” என்று பெயர் பெற்றார்.*

*மூலஸ்தானத்தில் இராமபிரான், வலது புறம் சீதையுடன் அமர்ந்து, திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் இலட்சுமணர் நின்றிருக்கிறார். இவர்கள் மூவரையும் வணங்கியபடி, வலது திருவடியை முன்புறமாக வைத்தநிலையில் ஆஞ்சநேயர் இருக்கிறார். இராமபிரான், மகாவிஷ்ணு போல காட்சி தந்த தலமென்பதால், இவரது மார்பில் மகாலட்சுமி இருப்பது சிறப்பான அமைப்பு. மகர சங்கராந்தியன்று (தைப்பொங்கல்) சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். அன்று சுவாமி பாரிவேட்டைக்குச் செல்வார். இராமபிரான், சூரிய குலத்தில் தோன்றியவர் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.*

*இங்குள்ள உற்சவமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது சிலை விரல் நகம் மற்றும் கை ரேகைகளும் தெரியும்படியாக வடிக்கப்பட்டுள்ளது. இவர் இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். சீதையைத் திருமணம் செய்யும் முன்பு இராமர், இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்துக்கொண்டு, ஒடித்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இந்த அமைப்பில் சிலை வடித்துள்ளனர். இத்தகைய கோலத்தில் இராமரை தரிசிப்பது அபூர்வம்.*

*தர்மதிஷ்டர் என்னும் மகானுக்கு ஒரு சாபத்தால் சயரோகம் ஏற்பட்டது. நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் ராமபிரானை வழிபட்டார். சுவாமி, அவரது நோயைப் போக்கியருளினார். இந்நிகழ்வின் அடிப்படையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.*

*இங்கு இறைவன் புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இலட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தேசிகர் ஆகியோர் முன்மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.*

திருவிழா:

*இராமநவமி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம்.*

கோரிக்கைகள்:

*தம்பதியர் தங்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.*

நேர்த்திக்கடன்:

இத்தலத்தில் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்கிறார்கள். துலாபாரமாகவும் காணிக்கை செலுத்துவதுண்டு.