Monday, March 20, 2023

மூன்று தலைமுறை-2

 மூன்று தலை முறை-2

By N Krishnamurthy 

1927 ல் பஞ்சாபகேசன்  விசாலத்தை கை பிடித்தார்.பஞ்சாபகேசனுக்கு வயது பதினாறு.விசாலத்திற்கு பத்து வயது.கல்யாணத்திற்கு 20 நாட்கள் முன்பே விசாலத்தின் அத்தை, ஜானகியின் தங்கை, சுந்தரேசன் தம்பி மனவி ஆகியோர் வந்து சீர் பட்சணம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.கல்யாணத்திற்கு 10  நாட்கள் இருக்கும் போது சுந்தரேசனின் அத்திம்பேர் (அக்காபுருஷன்), தம்பி, ஷட்டகர் (சகலை) ஆகியோர் வந்து சேர்ந்தனர்.

நல்லூர் அக்ரஹாரம் முழுவதும் அடைத்து போடப்பட்ட பந்தலில் ஐந்து நாள் கல்யாணம் களை கட்டியது.பையன் F.A.படித்திருந்ததாலும்,நில புலம் இருந்ததாலும் நிறையவே சீர் செனத்தி செய்திருந்தார் சுந்தரேசன். கல்யாணத்தன்று கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலிலிருந்து பிரசாதம் வந்தது. கல்யாணம் முடிந்தவுடன் ராஜகோபலன் குடும்பத்தினர்(பஞ்சாபகேசன் உட்பட) சொந்த ஊருக்கு திரும்பினர். விசாலம் தன் பெற்றோர்களுடன் நல்லூரிலேயே தங்கி விட்டாள்.

பத்து நாள் கழிந்ததும் சுந்தரேசன்,ஜானகி விசாலத்தை கூட்டிக்கொண்டு ராஜ கோபாலன் வீட்டிற்கு எதிர் விருந்துக்கு வந்தனர்.

விசாலம் கால் அலம்ப கொல்லையிலுள்ள கிணற்றடிக்கு சென்றாள்.பஞ்சாபகேசன் அங்கிருந்த வாழை மரத்திலிருந்து சாப்பிடுவதற்கு இலை எடுத்துக் கொண்டிருந்தான்.விசாலத்தைப்பார்த்ததும், சுற்று முற்றம் பார்த்து யாரும் இல்லையென உறுதி செய்து கொண்டு 'விசாலம் இங்கே வா' என்றான். விசாலத்திற்கு அவனருகில் போவதா வேண்டாமாஎன புரியவில்லை.வெட்கம் பிடுங்கி தின்றது.மெதுவாக அடி எடுத்து அவனருகே சென்றாள்.

'நோக்கு என்னை பிடிச்சிருக்கா' என்றான். விசாலம் பதிலுக்கு 'பிடிக்காமத்தான் கல்யாணம் பண்ணின்டேனா?' என்றாள்.

இதைக்கேட்டு பஞ்சாபகேசனுக்கு காதில் தேன் பாய்ந்தது போல இருந்தது.இன்னும் ஏதோ சொல்ல வாயெடுக்கும் போது

'ஏண்டா பஞ்சு.கிடுகிடு வென இலையை பறிச்சுண்டு வர மாட்டயோ' என்ற மங்களத்தின் குரல் கேட்டது.

'தோ.வந்திண்டே இருக்கேனம்மா' என்று இடத்தை காலி செய்தான்.அவன் சென்ற பின்பு "பஞ்சு' என்று தனுக்குள் சொல்லி பார்த்துக்கொண்ட விசாலம் மீண்டும் தனக்குள் 'சீ.சீ.என்ன பண்றேன் நான்.ஆத்துகாரர் பெயரை என் வாயாலே சொல்லி விட்டேனே' என்று தலையில் அடித்துக் கொண்டாள்.(இதைப்படிக்கும் இந்த காலத்து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு மனைவிமார்களுக்கு இப்படியும் கூட இருந்திருப்பார்களா என்று ஆச்சரியமாக இருக்கும். கணவன்  பெயரை சொல்லி கூப்பிடும் காலமல்லவா இது)

அன்று விருந்து முடிந்ததும் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொண்டு சுந்ததரேசன் குடும்பம் கிளம்பியது.வழி அனுப்பி வைக்கையில் மங்களம் ஜாளகியிடம் "எங்க மாட்டு பெண்ணை எப்போது கொண்டு விடுவீர்கள்'என்றாள்.

இதற்கு ஜானகி 'விசாலம் உங்காத்துப் பெண். பெரிய மனுஷி ஆக வேண்டிய வயதும் நெருங்கி விட்டது.அப்படி ஆனதும் சொல்லி அனுப்புகிறோம் .நீங்கள் வந்து அவளை இங்கே அழைச்சுண்டு போறதுக்கு தடையில்லையே' என்றாள்.

ஐந்து மாதம் கழித்து  ஒரு சுப வேளையில் விசாலம் பெரிய மனுஷி ஆனாள்.

மங்களம் நல்லூர் போய் விசேஷத்தில் கலந்து கொண்டு திரும்பிய ஏழாம் நாள் நல்ல வேளையில் விசாலம் பஞ்சாபகேசன் வீட்டில் அடி எடுத்து வைத்தாள்.

விசாலியும்,பஞ்சுவும் (பஞ்சாபகேசன் இனிமேல் பஞ்சு என்றும், விசாலம் விசாலி என்றும் அழைக்கப்படுவார்கள்) 

மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள். மங்களம் மாட்டுப்பெண்ணை கண்ணின் இமை போல பார்த்துக் கொண்டாள்.

காவேரி தண்ணி குடித்து வளர்ந்திருந்ததால் இயற்கையிலேயே புத்திசாலியான பஞ்சுவிற்கு வேலை என்று ஒன்றும் இல்லை. அந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை. மேலும் வேலைக்கு போக வேண்டிய அவசியமும் இருந்ததில்லை.

பிதுர் ராஜ்ய சொத்தான மூன்று ஏக்கர் நிலத்தை வைத்து பயிர் செய்து  கொண்டு இருந்தான்.அக்ரஹாரத்தின் நடுவில் சொந்த வீடு.  கொட்டிலில் 3 மூன்று கறவை மாடுகள்.நாலு பேருக்கு உண்டான பாலை எடுத்துக்கொண்டு,ஒரு பாகத்தை  சிவன் கோவில் அபிஷேகத்திற்கு கொடுத்து விட்டு,மீதி பாலை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் ஈட்டினார்கள்.

பிள்ளைதாய்ச்சி பெண்ணைப்பார்த்தால்  விசாலத்திற்கு இரக்கம் சொல்லி மாளாது. அம்மாதிரி பெண்களுக்கு அன்னமிட்டும், தன்னுடைய புடவையை கொடுத்தும், கையிலுள்ள காசில் இரண்டோ மூன்றோ ரூபாயும் கொடுப்பாள்.

இரக்கம் இருக்காதா பின்னே?

திருமணமாகி பதினான்கு வருடமாகியும் விசாலத்திற்கு வயிற்றில் புழு, பூச்சி உண்டாகவில்லை.ஏறாத கோயில் இல்லை. 

வேண்டாத தெய்வம் இல்லை. ஏனோ தெய்வம் கண் திறக்கவே இல்லை. ஒரு நாள் கோயிலில் இவர்களைப் பார்த்த ஒரு சாமியார் இவர்களிடம் 'என் அப்பன் பழனி முருகனைப் பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள். அவன் சந்தான பாக்கியம் அளிப்பான்' என்று கூறுவதைக் கேட்டு பழனிக்கும்  சென்று பால முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து மனமுருகி வேண்டினார்கள்.

போகும் வழியில் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பன் கோவிலுக்கும் சென்ற அங்கிருந்த குழந்தை வேலப்பனிடம் குழந்தை பிறந்தவுடன் வெள்ளியில் தொட்டில் செய்து போடுவதாக விசாலம் வேண்டிக்கொண்டாள். (குழந்தை வேலப்பர் கோவில்  அல்லது குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாஷாணத்தில் உருவாக்கப்பட்டது எனப்படுகிறது).

மூன்று தலைமுறை-1

 மூன்று தலைமுறை -1

By N Krishnamurthy 

நான் இனிமேல் தரப்போவது மூன்று தலைமுறைகளில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

இது முழுவதும் என் கற்பனையில் விளைந்தது.

கதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் இக்கதையின் நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம்போலிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. எந்த கதையும் ஆகாசத்திலிருந்து குதித்து விடுவதில்லை.

நாம் தினம்தோறும் காணும் நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே ஒரு கதை பின்னப்படுகிறது. 

இந்த கதையின் கருவை நான் கொஞ்ச நாளாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். கதைக்கருவை அப்போதக்கப்போது மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.எழுதுவதில் ஒரு சிறு தயக்கம் இருந்தது. பெரும்பாலோர் இந்தக்கதை தங்களுடைய வாழ்க்கையில் நடந்தது போலிருக்கிறதே என நினைத்துக் கொள்வார்களோ என்று பயந்தேன்.முக்கிய நண்பனிடம் இதுபற்றி ஆலோசனை செய்யும் போது அவன் 'இல்லை. இல்லை.நீ அவசியம் எழுத வேண்டும்' என்று கூறினான். எனவேதான் இதை நான் எழுதத் துணிந்தேன்.

முதல் தலைமுறை பற்றி பார்ப்போம். 1911 ல் தஞ்சாவூரை அடுத்த ஒரு சிற்றூரில் உள்ள அக்ரஹாரத்தில் ராஜ கோபலன் மற்றும் மங்களம் தம்பதியின் ஏக புத்ரனான  பஞ்சாபகேசன் சுப ஜனனம்.

பஞ்சாபகேசனுக்கு ஏழு வயதாகும் போது உபநயனம் (பூணூல்) போடப்பட்டது.

ஐந்தாவது வயதில் பள்ளியில் சேர்ந்த பஞ்சாபகேசன் 15 வது வயதில் S.S.L.C. முடித்தான்.S.S.L.C. யில் 600 க்கு 430 மார்க் வாங்கியதால் கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் சுலபமாக F.A வில் சேரமுடிந்தது.உடனேயே பெண் ஜாதகங்கள் குவியத் தொடங்கின.ராஜ கோபாலன் வந்த ஜாதகங்களை எடுத்துக்கொண்டுபோய் கும்பகோணத்தில் உள்ள பிரபல ஜோதிடர் குருராஜிடம் சேர்ப்பித்து பொருத்தம் அதிகமுள்ள பெண்ணின் ஜாதகத்தை தேர்ந்தெடுக்குமாறு வேண்டினார். 

குருராஜும் எல்லா ஜாதங்களையும் பஞ்சாபகேசனுடைய ஜாதகத்துடன் ஒப்பிட்டு பார்த்து  நல்லூர் சுந்தரேச அய்யருடைய  குமாரத்தி விசாலம் மற்றும் திருவாரூர் தியாகராஜ அய்யருடைய குமாரி கமலம்   ஜாதகங்கள் பொருந்தி இருப்பதாக கூறினார். விசாலம் ஜாதகம் பத்துக்கு பத்தும்,  கமலம் ஜாதகமும் பத்துக்கு எட்டும் பொருந்தி இருப்பதாகவும் கூறினார். திரும்பி ஊருக்கு வந்த ராஜகோபாலன் மனைவி மங்களித்திடம் விஷயத்தைச் சொன்னார்.

பொருத்தம் பத்துக்கு பத்து இருப்பதால் நல்லூர் சுந்தரேச அய்யரின் பெண்ணை  முதலில் பார்ப்பது என்றும் பெண் பிடிக்காவிட்டால் அடுத்த இடத்தை பார்க்கலாம் என்று தீர்மானித்தார்கள்.

பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து வண்டி கட்டிக் கொண்டு அருகிலுள்ள நல்லூருக்கு சென்றார்கள்.  நல்லூர் சுந்தரேச ஐயர் வீட்டின் வாசலில் வண்டி வந்து நின்றது. ஏற்கனவே சுந்தரேச அய்யருக்கு விஷயம் தெரியப்படுத்தி இருந்ததால் ராஜகோபலன் தம்பதிகளுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்தமடை பாய் போட்டு அதில் உட்காரச் சொன்னார்கள்.சந்தனமும் குங்குமமும் கொடுத்தார்கள்.

கல்கண்டு வழங்கப்பட்டது.சுந்தரேச ஐயர் முதலில்  சாப்பிட்டு விட்டு பின்பு பெண்ணை பார்க்கலாமா என்றார் ராஜகோபாலனுக்கு  தயக்கம். பெண் பிடிக்கவில்லை என்றால் அங்கு சாப்பிட வேண்டாம் என நினைத்தார்.  'பரவாயில்லை.முதலில் பெண்ணை பார்த்து விடுவோம். அதற்குப் பிறகு சாப்பாட்டில் கை நனைக்கலாம்' என்றார்.

சுந்தரேசன் புரிந்துகொண்டார்.அவருடைய  மனைவி  ஜானகி விசாலத்தை கூட்டிக்கொண்டு வந்தாள்.விசாலம் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தாள். விசாலத்தைபார்த்த உடனேயே மங்களத்துக்கு பிடித்துப் போய்விட்டது. விசாலம் ஒல்லி பிச்சானாக  இல்லாமலும்  குண்டு பூசனிக்காயாக இல்லாமலும்  நடுத்தரமாக இருந்தாள். மாநிறத்தை  விட தூக்கலான கலர்.

தலை நிறைய அடர்த்தியான கூந்தலைப் பின்னி ஜாதிமல்லி பூ வைத்திருந்தாள்.

விசாலமும்,ஜானகியும் வைத்துக் கொண்டிருந்த ஜாதி மல்லியின் பூ வாசம் கூடத்தில் முழுவதும் மணம் பரப்பியது. விசாலத்தின் இரண்டு புருவமும் வில்லைப்போல இருந்தன.நெற்றியில் குங்குமப் பொட்டு.(அப்போதெல்லாம் ஸ்டிக்கர் பொட்டு கிடையாது).

வயது பத்து தான் என்பதால் பாவாடை தாவணி போட்டு இருந்தாள். மங்களம் விசாலியிடம் பேச்சு கொடுத்தாள். பாட்டு பாட சொன்னாள். விசாலத்திற்கு அருமையான குரல். 

'தேவி ப்ரோவ சமயமிதே' என்ற சாமா சாஸ்திரி கீர்த்தனையை பிரமாதமாக பாடி முடித்தாள். 'விசாலத்திற்கு நிறைய ஸ்லோகமும் அத்துபடி' என்றாள் ஜானகி. 'இப்போதுதான் சமையல் கொஞ்சம் கற்றுக் கொண்டு இருக்கிறாள். ஆனால் வெகு சீக்கிரம் அதிலும் பிரமாதமாக ஆகி விடுவாள்' என்றாள் ஜானகி. மொத்தத்தில் மங்களத்திற்கு விசாலத்தை மிகவும் பிடித்துவிட்டது.

தன் மகனுக்கு மிகவும் பொருத்தமானவள் என்று தீர்மானித்தாள். மங்களம்  ராஜகோபலனுக்கு கண் ஜாடையில் ஒப்புதலை தெரிவித்தாள். ராஜகோபாலன் சுந்தரேசனிடம்  'எங்களுக்கு பெண்ணைப் பிடித்திருக்கிறது. பையனைப் பற்றி வேறு விவரம் வேண்டுமானால் கேளுங்கள் சொல்கிறேன்' என்றார். சுந்தரேச ஐயர் 'இல்லை. இல்லை. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்' என்றார். ராஜகோபாலன் கூறினார் 'எனக்கு இருப்பது ஒரே மகன். உங்களுக்கு தெரியும். எனக்கு பிதுர்ராஜ்ய சொத்தாக அக்ரஹாரத்தில் வீடும், கொஞ்சம் நில புலனும் இருக்கிறது. பையனும் இப்பொழுது F.A முதல் ஆண்டு படிக்கிறான். அடுத்த வருடம் படிப்பு முடிந்து விடும். மேல்கொண்டு படிப்பதாக இருந்தால் படிக்கலாம்.அவன் இஷ்டம்.இதை மனதில் கொண்டு நீங்கள் என்ன சீர் செனத்தி செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். நாங்கள் ஒன்றும் வற்புறுத்தி கேட்க மாட்டோம்' என்றார்.பிறகு  ராஜகோபாலனும் மங்களமும் சுந்தரேச ஐயர் வீட்டில் நுனி வாழை இலையில்  விருந்து உண்டார்கள். இதில் ஒரு வேடிக்கை நீங்கள் கவனித்திருக்கலாம்.

அந்த காலத்தில் பெண்ணை பார்க்க மாப்பிள்ளையை கூப்பிட்டு கொண்டு போவதில்லை.இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று தோப்பனார்(தகப்பனார்) கூறினால் கண்ணை மூடிக்கொண்டு கட்ட தயாராக இருந்தார்கள் அந்த காலத்து  பசங்கள். இதனால் ஒன்றும் அவர்களுடைய குடி முழுகிப் போய்விடவில்லை. வாழ்க்கை வசந்தமாகவும், சந்தோஷமாகவும் தான் இருந்தது. 'ஊருக்கு போய் முகூர்த்தத்திற்குநல்ல நாளாக பார்த்து  சொல்லி அனுப்புகிறோம்'என்றார்கள்.

மங்களம் விசாலத்தை உச்சி முகர்ந்து பின் அவள் தலை மேல் கை வைத்து ' போய் வருகிறேனடி கண்ணம்மா'என்றாள். திரும்பி வந்ததும் மறுபடியும் ராஜகோபாலன் கும்பகோணம் சென்று ஜோதிடரிடம் நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்தார்.

இந்த தகவலை சுந்தரேசனுக்கு தெரியபடுத்தினார். கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டு பத்திரிக்கை அடிக்கப்பட்டது. பத்திரிக்கை ஒரு காப்பியை அவர்கள் சுந்தரேசனுக்கு  அனுப்பி வைத்தார்கள். விசாலத்துக்கு  சொந்த கிராமத்தில் ஏகப்பட்ட தோழிகள். பொதுவாகவே அவள் எந்த ஆணையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஆண்களைப் பற்றிப் பேச்சு வந்தால் கூட கலந்து கொள்ள மாட்டாள். இதனால் அவளுக்கு 'அக்னி' என்று அவளுடைய தோழிகள் பெயர் சூட்டி இருந்தார்கள். பிள்ளை பெயரைக் கேட்டவுடன் அவர்களுக்கு கேலி செய்வதற்கு மிகவும் சௌகரியமாக போய் விட்டது.இந்த அக்கினி விசாலியை மாப்பிள்ளை பஞ்சு பற்றிக்கொள்ள போகிறது என்றெல்லாம் கலாட்டா செய்தார்கள். விசாலிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.வெறும் பத்து வயது ஆனதால் அவளுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. துக்கமாகவும் இருந்தது. தாயார் ஜானகியிடம் 'இந்த சின்ன வயதில் நான் கல்யாணம் செய்துகொண்டு புகுந்தகத்திற்கு போகத்தான் வேண்டுமா?' என்றாள். ஜானகி சொன்னாள் 'அடி அசடே. பெண்ணாகப் பிறந்தால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.உனக்கு நேர்ந்த இடம் மிகவும்  நல்ல இடமாக இருக்கிறது.

நீ வருத்தப்பட வேறு ஒன்றும் விஷயமில்லை.எல்லாம் பகவான் புண்ணியத்தில் நல்லதாகவே நடக்கும்' என்றாள்.

Thursday, March 16, 2023

வத்தகுழம்பு

  வத்தகுழம்பு 

வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?

வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை. பூண்டு உண்பவர்கள் அதையும் வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளலாம். ஆனால் இவை எல்லாம் பஞ்சாங்கத்தை ஐபோனில் பார்ப்பது போன்ற உணர்வு. வத்தல் மட்டுமே ஓரிஜினல். மத்தபடி காய்கறி கூட நோ நோ தான்.

வத்தலுக்கு அடுத்தபடியாக முக்கியம் நல்லெண்ணை. மீதி எண்ணை எதற்குமே கட்டாயம் தடா. புது புளியும் வேண்டாம் பழைய புளியும் வேண்டாம். ஒரு டீன் ஏஜ் புளி அசத்தும். வத்தகுழம்பிற்கு கை பக்குவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை வைக்கும் சட்டி. 

கும்பகோணம் கல்சட்டி பெஸ்ட். மங்களகரமாக வைக்கலாம் கமகம வத்தக்குழம்பு. கும்பேஸ்வரர் கோவில் கடைகளில் கட்டாயம் கிடைக்கும். 

குழம்பிற்கு வறுக்கப்படும் வத்தலை முதலில் வறுத்து அதிலேயே புளியிடாமல், தனியாக எடுத்து வைத்து கொண்டு கடைசியாக சேர்ப்பது குழம்பிற்கே புது அவதாரத்தை தரும். குழம்பு கொதிக்கும் பொழுது சேர்க்கப்படும் கறிவேப்பிலை ஜன்ம சாபல்யம் பெறும். மூட கூடாது, அடுப்பை சிம்மில் வைத்து கொதித்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும். எண்ணெய் பிரிந்த பின் இறக்கி வைக்கப்பட்ட  வத்தகுழம்பு இங்கிலாந்து வரை இழுக்கும். பின்னர் அதில் வறுத்த வத்தலை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் ஒரே ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் சேர்த்தால் அந்த மணத்திற்கு எந்த மலரும் ஈடாகாது.

வத்தகுழம்பு வைக்க தெரிந்து இருப்பதை விட முக்கியம் அதை சாப்பிட தெரிவது. சாதத்தை அழுத்தி பிசைந்து, வத்தக்குழம்பு சாதம் சாப்பிடுபவன் அடுத்த ஜன்மத்தில் பல பாவத்திற்கு ஆளாவான். இன்று பிறந்த குழந்தையை தூக்குவதை போல் மிகவும் அழுத்தம் கொடுக்காமல், சாதத்தை பிசைய வேண்டும். பிசைய என்று வார்த்தையை கூட அழுத்தாமல் படிக்க வேண்டும். என்ன தான் சாப்பாட்டிற்கு நெய் என்பது மன்னனின் மகுடம் போல என்றாலும் இங்கே அதற்கு வேலை இல்லை. இது நல்லைண்ணை ராஜாங்கம். சுடச்சுட சாத்தத்தோடு ஒரு தாராளமான ஸ்பூன் நல்லெண்ணை விட்டு சாதத்தை உதிர்த்த பின் அதன் மேலே வத்தகுழம்பை விட்டு நிற்க, சாம்பார் சாதம் மாதிரி மொத்தமாக பிசைய வேண்டாம். அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிசிறி பிசிறி சாப்பிட, நல்ல மழையில் SPB குரலில் இளையராஜா Melodies கேட்பது போல், Sidedish க்கு இங்கே வேலை இல்லை. இல்லாமல் முடியாது என்போர்க்கு அப்பளம் 0K. சுட்டது இன்னும் சூப்பர்.

இன்னும் சிறப்பு தயிர் சாதத்தை மையாய் மசித்து, கையில் சிறிது சாதம் எடுத்து கொண்டு நடுவிலே சிறு பள்ளமிட்டு அதை வத்த குழம்பால் நிரப்பி, அடடா சூப்பர் ஸ்டார் படத்தை அவருடனேயே உட்கார்ந்து பார்த்த பரவசம்.

சாதத்திற்கு மட்டுமல்ல, அடைக்கு கூட வத்தகுழம்பு நல்ல combination.

வெங்கட்பிரபுவும் பிரேம்ஜியும் போல.

முடித்த பின் கடைசியாக தட்டில் ஒரே ஒரு கரண்டி மட்டும் விட்டு வழித்து நக்கப்படும் ஒரு நல்ல வத்தக்குழம்பின் மணமும், ருசியும், worldcupல் தோனி அடித்த  சிக்ஸர் போலே என்றுமே நினைவில் நிலைத்திருக்கும்.

Wednesday, March 15, 2023

புள்ளிமான் வேட்டை - 60

 புள்ளிமான் வேட்டை - 60

மறுநாள் நிச்சயதார்த்தம் மாலை நாலு மணிக்கு ஆரம்பமானது. திருச்சியிலிருந்து ராமகிருஷ்ணனும்,உமாவும் வந்திருந்தார்கள். அடுத்த ஒன்பது மாதத்துக்குள் ஒரு நாள் முகூர்த்தத்துக்கு குறிக்கப்பட்டிருந்தது. சென்னை டி. நகரில் உள்ள கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தையே ஏற்பாடு செய்து விடுமாறு சுப்பிரமணியத்தை. சரசா, பாலகிருஷ்ணன் தம்பதிகள் கேட்டுக்கொண்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து ஏழு மணிக்கு டின்னர் பரிமாறப்பட்டது.

அன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடித்து ஹரீஷ் குடும்பமும், சுப்பிரமணியன் குடும்பமும் சென்னை வந்தது. கிருஷ்ணன் இரண்டு நாள்  தங்கி விட்டு பின்பு சென்னை  வந்தான். மதுரையிலிருந்து வந்த அடுத்த நாளே ஹரிஷும்,தாரிணியும் அசோக் நகரில் உள்ள லேடி டாக்டரை பார்த்துவிட்டு வந்தார்கள். பிரக்னன்சி கன்பர்ம் ஆகியிருந்தது.வீட்டுக்கு வரும்போது மறக்காமல் ஆவினிலிருந்து மைசூர்பா வாங்கிக் கொண்டு சென்றார்கள். வீட்டு வாசலில் குழந்தை மிருதுளாவை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த  சுலோச்சனாஹரீஷை பார்த்து "என்னடா ஆச்சு" என்றாள்."உள்ள வாம்மா சொல்றேன்" என்றான் ஹரீஷ். ஸ்வீட் பாக்கெட் ஓபன் பண்ணி "ஸ்வீட் எடுத்து கோ" என்றான். சுலோச்சனா விஷயத்தை புரிந்து கொண்டு தாரிணியை பார்த்து" ரொம்ப சந்தோஷம்டி அம்மா" என்றாள். "நல்லபடியா பெத்து பொழைக்கணும்" என்றவள் "உங்க அம்மாக்கு சொல்லீட்டியா"என்றாள். "இல்லம்மா.இனிமே தான் சொல்லணும்" என்றாள் தாரிணி. "முதல்ல அதை செய்" என்றாள் சுலோச்சனா. தாரிணி  அம்மாவுக்கு போன் செய்து  விஷயத்தை சொன்னாள். "கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்குடி. நான் வர வாரம் வந்து உன்னை பாக்கறேன்" என்றாள்.அடுத்த வாரம். நிறைய பக்ஷணங்ளை  செய்து எடுத்துக் கொண்டு தாரிணியின் அம்மா சென்னை வந்து ஒரு வாரம் தாரிணியுடன் தங்கி விட்டு போனாள்.நாளாக நாளாக தாரிணியின் சௌந்தர்யம் கூடிக்கொண்டே போனது.வளைகாப்பு, சீமந்தம் முடிந்தது.(தாரணிக்கு இது முதல் குழந்தை இல்லையே எப்படி சீமந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சிலர் கேட்கக் கூடும். ஹரீஷுக்கு இது முதல் குழந்தை.மேலும் சுலோச்சனா வளைகாப்பும்,சீமந்தமும் பண்ண வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள்)

வழக்கம் போல கிருஷ்ணன் சனி ஞாயிறுகளில் தன் வருங்கால மாமனார் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். மாதத்திற்கு இருமுறை  ஞாயிற்றுக்கிழமை சாயங்காலங்களில் கிருஷ்ணனனும், சுநந்தாவும் பீச்சுக்கு போய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தாரணிக்கு மசக்கை இருந்ததா. மாங்காய் மற்றும் சாம்பல் அவள் சாப்பிட்டாளா என்பது போன்ற விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

சுநந்தா சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாரிணியை சென்று  பார்த்துவிட்டு வருவாள். அப்போதெல்லாம்  சம்யுக்தா தாரிணிக்காக வீட்டிலே செய்த சில பலகாரங்களை கொடுத்தனுப்புவாள்.  சுநந்தா, கிருஷ்ணனுடைய கல்யாண நாளும் நெருங்கி  வந்தது.

கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் தான் கல்யாணம் ஏற்பாடானது.

கல்யாண தேதிக்கு நாலுநாள் கழித்து தான் தாரிணிக்கு டெலிவரி டேட் கொடுக்கப்பட்டிருந்தது. கல்யாணத்துக்கு முதல்  காலையில் விரதம் முடிந்து மதியம் சாப்பிட ஒரு மணி ஆனது. மாலை 4 மணிக்கு நிச்சயதார்த்தம்.  ஞானாம்பிகை கேட்டரிங் தான் சமையல்.சாயங்காலம் ரிசப்ஷனுக்கு ஹரீஷ்,தாரணி, சுலோச்சனா,தாரிணியின் அம்மா வந்திருந்தார்கள்.நிறை மாத கர்ப்பிணி தாரிணிக்கு நடக்கக்கூட முடியவில்.புசு புசு வென்று மூச்சு வாங்கியது.  அவளைப் பார்த்து சுநந்தா"இந்த நிலைமையிலும் நீ வந்திருக்கணுமா" என்றாள். அதுக்கு சிரித்துக் கொண்டே தாரணி"எங்க அண்ணா கல்யாணத்துக்கு நான் வராமல் போனால் எப்படி"என்றாள் .அன்று  மாலை நடந்த ரிசப்ஷனுக்கு நிறைய கூட்டம்.சுநந்தாவின் கல்லூரி நண்பர்கள் நண்பிகள், இப்போது உள்ள ஆபீஸ் பிரண்ட்ஸ், கிருஷ்ணனுடைய ஆபீஸ் பிரெண்ட்ஸ்,இதைத் தவிர சுப்ரமணினயுடைய உறவினர்கள்,டாக்டர் ராஜன்,முருகானந்தம். மற்றும் பலர் வந்திருந்தார்கள். மறுநாள் காலை. ஒன்பதில் இருந்து பத்துக்குள் முகூர்த்தம். காலை 6:00 மணிக்கு ஹரீஷ்,தாரிணி மற்றும் சுலோச்சனா,தாரிணியின் அம்மா  வந்து விட்டிருந்தார்கள். காலையிலிந்து எல்லா பங்ஷனனிலும் கலந்து கொண்டார்கள்.

முதல் நாள் இரவு சென்னையில் வந்து இறங்கிய சிவகுருநாதன், மறுநாள் காலை எட்டு மணிக்கு கல்யாணம் மண்டபத்திற்கு வந்து விட்டிருந்தார்.முகூர்த்தத்தின் போது கிருஷ்ணன் மற்றும் சுநந்தா ஆபீஸிலீருந்து Full attendance.

ஷைலு தாலி கட்டும் போது நாத்தனார் முடிச்சு போட்டாள். கல்யாணம் முடிந்ததும் சுப்ரமணியன் ஆனந்தக்கண்ணீர் விட்டார் (சுப்ரமணியம் மாமனார் ஆகிவிட்டார். இனிமேல் அவரை ஒருமையில் அழைக்கத் தகாது)காஞ்சி பெரியவாளை மனதார நினைத்து"பெரும் கஷ்டத்திலிருந்து என்னை மீட்டுவந்து இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தீட்டேங்களே மகா ப்ரபோ.நான் எப்படி நன்றி சொல்வேன்" என்று கூறிக்கொண்டார். சுநந்தா  தாரிணியை கட்டிக்கொண்டு. அழுதாள். தாரிணி  அவளைப் பார்த்து "சீ. பைத்தியம். எதுக்கு அழுற. நெனச்சுது நடந்தூட்த்தோல்யோ" என்றாள். வழக்கமாக கேட்கும்" மாப்பிள்ளை வந்துட்டாரா? மாட்டுப்பொண்  வந்தூட்டாளா? விஜாரிப்புகள் தொடர்ந்தன.

மதியம் சுநந்தா,கிருஷ்ணன், தாரிணி மற்றும் ஹரீஷ் சேர்ந்து சாப்பிடுவதாக இருந்தது. திடீரென்று தாரணிக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. அவள் ஹரீஷ் காதில்"வலி ரொம்ப அதிகமா இருக்கு" ."சரி.இப்பவே க்ளினிக்குக்கு போலாம்" என்ற  சொன்ன ஹரீஷ் காரை எடுக்க ஒடினான். சுலோச்சனா தாரிணியை கைத்தாங்கலாகை  கூப்பிட்டுக்கொண்டு கார் பார்க்கிங்போய் காரில் ஏறி அமர்ந்தார்கள்.சுநந்தா கார் அருகில் வந்து தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு"டேக் கேர். ஒண்ணும்  ஆகாது. பயப்படாத. தைரியமா போயிட்டு வா" என்றாள்.அரைமணியில்  கிளினிக்கில் அட்மிட் செய்யப்பட்டாள். நலங்கின் போது'தாரணிக்கு. எப்படி இருக்கோ'என்று நினைத்துக் கொண்டு,கலங்கி போயிருந்த சுநந்தா  கொஞ்சம் உற்சாகம் இழந்திருந்தாள். எனவே நலங்கின்  விளையாட்டு கொண்டாட்டங்களை அவளால் முழு மனதுடன் ரசிக்க முடியவில்லை.

இரவு ஏழு ஐந்துக்கு மணிக்கு  தாரிணிக்கு *"ஹரி கிருஷ்ணன்"* பிறந்தான். 

நாட்கள் ஓட ஆரம்பித்தன. ஒரு வருடத்தில் கிருஷ்ணன், சுநந்தாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு *சுகிர்தா* என்று பெயரிட்டார்கள். 

-----------------------------------------------------இத்துடன் கதை முடிந்து விட்டது. வேட்டை ஆடப்பட்டிருக்க வேண்டிய புள்ளிமான் தப்பித்தது. ஆனால் நிறைய புள்ளிமான்கள் வலையில் சிக்க  ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் கதையின் நான்காவது பதிவை நான் போடும்போது எனக்கு ஏற்பட்ட  அனுபவத்தை. உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அன்று கோயம்புத்தூரில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஸ்ரீதர் எனக்கு போன் பண்ணி" என்ன நீங்க. குழந்தை கிள்ளிவிட்டு. தொட்டிலையும் ஆட்டுறீங்க" என்றான். "என்ன ஸ்ரீதர். நீ என்ன சொல்ற புரியல" என்றேன். நீங்க எழுதற கதைல அந்தப் பொண்ணு வேற மதக்காரனை பண்ணிக்க கூடாது அப்படின்னு தீவிரமா இருக்கீங்க. ஆனா உங்க பொண்ணையே ஒரு முஸ்லீமுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறீங்களே .இது ஞாயமா" என்றார். எனக்கு கோவம் வந்தது. எனக்கு ஒரு பெண். அவளுக்கு 2001லேயே கல்யாணம் ஆகிவிட்டது. நல்ல இடம். என்னுடைய மதம், என்னுடைய இனம், என்னுடைய சப்செக்ட்.இது  தெரிந்தும் ஸ்ரீதர் ஏன் இப்படி உளறுகிறான் என்று நினைத்தேன். ஸ்ரீதர்  உடனே சிரித்துக்கொண்டு"ஒரு கல்யாண பத்திரிக்கை அனுப்பிச்சி இருக்கேன் பாருங்க" என்றான். அதைப் பார்த்ததும் திகைத்து விட்டேன். மீனாட்சி என்ற பெண்ணுடைய தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவி  ராதாவுடன் சேர்ந்து  மீனாட்சியை சையது இஸ்மாயிலுக்கு. திருமணம் செய்து கொடுப்பதாக பத்திரிக்கை அடித்திருந்தார். அந்தப்  பத்திரிக்கயை வாட்ஸ் அப்பில் எனக்கு ஸ்ரீதர் அனுப்பி இருந்தான். சபை நாகரிகம் கருதி அதை இங்கே வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று நான் அதை இந்த க்ரூப்பில் வெளியிடவில்லை. அப்போதுதான் புரிந்தது,நம்முடைய சமூகம் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டிருப்போக, இப்பொழுது பெண்ணின் தகப்பன் பெற்றோர்களே. பெண்ணை வேற்று  மத இளைஞருக்கு. கல்யாணம் செய்து கொடுப்பது மட்டுமில்லாமல் பத்திரிக்கை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பெண் கோவையில் உள்ள ஒரு அக்ரஹாரத்தை சேர்ந்தவளாம். என்னுடைய உறவினர் ஸ்ரீதரின் இரண்டாவது மகனின் இன்ஜினியரிங் கிளாஸ்மேட் இந்தப்பெண். முதல் மூன்று வருடம் ஒழுங்காக இருந்தவள்,  நான்காம் வருடம் தடம் மாறி போய்விட்டாள் என்று தெரிந்து கொண்டேன். கடவுளே. மீனாட்சியின் அப்பா கிருஷ்ணமூர்த்தியாக இல்லாமல் ஒரு சுப்பிரமணியனாக இருந்திருக்கலாமோ.

புள்ளிமான் வேட்டை -59

 புள்ளிமான் வேட்டை -59

நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் வைகையில் ஹரீஷ் குடும்பமும், சுப்பிரமணியன் குடும்பமும்,மதுரைக்குச் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. கிருஷ்ணன் மூன்று நாட்களுக்கு முன்பே சென்று விட்டிருந்தான். சென்னையில் இருந்து வருபவர்களுக்காக பாலகிருஷ்ணன் வீட்டின் அருகிலுள்ள ஒரு லாட்ஜில் ரூம்கள் போட்டிருந்தார். 

கிருஷ்ணனுடைய பாஸ் சிவகுருநாதன்  ஆபீஸ் வேலையாக வெளிநாடு போயிருந்ததால் நிச்சயதார்த்திற்கு வர முடியவில்லை. "கல்யாணத்திற்கு நிச்சயம் வருவேன் கிருஷ்ணா" என்று போனில் உறுதி அளித்திருந்தார்.பகல் 1:10 மணிக்கு சுப்பிரமணியம் குடும்பம்  எக்மோர் சென்றடைந்தது. இன்னும் ஹரீஷ்,தாரிணி சுலோச்சனா வந்து சேரவில்லை. ஒன்று  முப்பதுக்கு  அவர்கள் மூவரும் ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்கள்.

கம்பார்ட்மெண்ட் வாசலிலேயே நின்று கொண்டிருந்த சுநந்தா தாரிணியைப் பார்த்து கை காட்டினாள். "என்ன லேட் "என்றாள் சுநந்தா. "நாங்க வந்த டாக்ஸி பிரேக் டவுன் ஆயிடுத்து. வேற டாக்ஸி பிடிச்சு வரதுக்குள்ள போறும் போறும்ன்னு  ஆயிடுத்து" என்றாள் தாரிணி.சுனந்தாவும், தாரிணியும் ட்ரெயினில் அருகருகே உட்கார்ந்து கொண்டார்கள்.  "என்ன ஏதாவது விசேஷம் உண்டா" என்றாள் சுநந்தா. "ஆமாம். நாளைக்கு எங்கண்ணாக்கு நிச்சயதார்த்தம் என்றாள் " தாரிணி."சும்மா ஏதாவது சொல்லி மழுப்பாதே.நான் கேட்டது என்னான்னு நோக்கு தெரியும்"என்றாள் சுநந்தா.தாரிணியின் கன்னம்  சிவந்தது. பிறகு மெல்ல சுநந்தாவின் காதில் "குளிச்சு  40 நாள் ஆச்சு. பொய்யோ மெய்யோன்னு இருக்கு. உங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு வந்ததும்தான் டாக்டர் கிட்ட போகணும்" என்றாள்  தாரிணி."அடி சக்கை"என்று கூறிய சுநந்தா  "கங்கிராஜுலேஷன்" என்றாள். இதையெல்லாம் பார்த்தும், கேட்டுக்கொண்டும் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஹரிஷ். இவர்களை பார்க்காத மாதிரி ஜன்னல் வழியாக தன்  தன் பார்வையை திருப்பினான். விஷயத்தை யூகித்த அவனும் கொஞ்சம் கூச்சப்பட்ட மாதிரி தெரிந்தது. "மாமியாருக்கு தெரியுமா" என்றாள் சுநந்தா. "தெரிஞ்சிண்டிருப்பான்னு நெனக்கறேன்" என்றாள் தாரிணி.

"என்ன குழந்தை பிறக்கணம்னு நெனைக்கிற நீ" என்றாள் சுனந்தா. அதற்கு தாரணி"முதல்ல கன்ஃபார்ம் ஆகட்டும். அப்புறம் பாக்கலாம்" என்றாள்."நேக்கு என்னமோ கன்ஃபார்ம் ஆயிடும்ன்னு தான் தோண்றது" என்றாள் சுநந்தா. பின்பு அவள் "இரண்டாவதும்  நோக்கு பொண்தான் நெனைக்கிறேன்" என்றவள் தொடர்ந்து "பொண்  பொறந்தா *"ஹரிணி"* ன்னு பேர் வெச்சுடு"என்றாள்."உம் பேரும் ஹரிஷ் பேரும் சேந்த மாரி இருக்கும்" என்றாள். "ஆம்பளையா பொறந்தா என்ன பேர் வைக்கிறது மன்னி " என்றாள் தாரிணி. "இருக்கவே இருக்கு. *"ஹரிகிருஷ்ணன்"* ன்ற பேர்"என்றாள் சுநந்தா. வண்டி விழுப்பரம் அடைந்ததும் பிளாட்பாரத்தில் சூடான உப்புமா கிடைக்க ஹரீஷ் அதை  வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தான்(விழுப்பரம் உப்புமா பேமஸ்.சென்னை- திருச்சி ட்ரெயினில் பயணிப்பவர்களில் பலர் விழுப்பரம் உப்புமாவுக்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு காத்திருப்பதை நான் அறிவேன்)

சுநந்தாவிடம் ஹரீஷ்"ஆபீஸ் வேலையெல்லாம் எப்டி போறது" என்றான்."கொஞ்சம் Tough ஆதான் இருக்கு.நெறய கத்துக்க வேண்டியிருக்கு" என்றாள்."எங்க ஆபீஸ்ல கூட ரெக்ரூட்மெண்ட் போயிண்டிருக்கு.நீ அப்ளை பண்ணலமே"என்றான்.

"தெரியும்.ஆனால் அவர் அப்ளை பண்ண வேணாம்ன்னு சொல்லீட்டார்" என்றாள் சுநந்தா. தாரிணி,சுநந்தா அரட்டை மேலும் தொடர்ந்தது.எட்டு மணிக்கு திண்டுக்கல் அடைந்ததும்,சுலோச்சனா தான் கொண்டு வந்திருந்த இட்லியையும்,தக்காளி சட்னியையும் எல்லோருக்கும் வினியோகித்தாள்.

தாரிணி கூடமாட ஒத்தாசையாக இருந்தாள்.இட்லி முடிந்ததும், சம்யுக்தா தான் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தையும், மாஇஞ்சி ஊறுகாயையும் எல்லோருக்கும் தந்தாள்.தயிர் சாதத்தை 

சாப்பிட்ட தாரிணி" என்ன மாமி.சாதம் கொஞ்சம் கூட புளிக்கலயே.சூப்பரா இருக்கே"என்றாள்.

ராஜேஸ்வரி"பிசயச்சே கொஞ்சம் பால் விட்டு பிசஞ்சா தயிர் சாதம் புளிக்காது" என்றாள்.

எட்டரை மணிக்கு சோழவந்தானை அடைந்த ட்ரைன், மதுரைக்கு 9:40 க்கு போனது.கிருஷ்ணன் ஷ்டேஷனுக்கு வந்திருந்தான்.ஏற்கனவே ஏற்பாடு பண்ணியிருந்த இன்னோவாவில் ஏறி லாட்ஜை அடைந்த கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணன் விடை பெற்று சென்றான்.ஏற்கனவே தாரிணியின் அம்மா கோயம்புத்தூரிலிருந்து வந்து விட்டிருந்தாள்.

பாட்டியை பார்த்ததும் குழந்தை ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.பாட்டி குழந்தையின் மேல் முத்தமழை பொழிந்தாள். இதைப்பார்த்த எனக்கு ஒரு மேலை நாட்டு கவிஞன் கூறிய வினோதமான வாக்கியங்கள் நினைவுக்கு வருகிறது.When I experience the love between me and my grand children,I wish God had given me grand children first,

 bypassing my kids.நடைமுறையில் சாத்தியமே இல்லாது போனாலும்,இது தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையே உள்ள நேசத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. கண்ணதாசன் " அனுபவித்தால் தான் தெரியும்" என்று சொன்னபடி  இதை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த பேரானந்தம் தெரியும்.அதில் அடியேனும் ஒருவன்.

புள்ளிமான் வேட்டை -58

 புள்ளிமான் வேட்டை -58

இரண்டு மூன்று மாதங்களில்  தாரிணியும், ஹரீஷும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள்.   

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஹரீஷ்  வீட்டுக்கு சென்ற தாரிணி சுலோச்சனாவுக்கு துணையாக இருந்து சமையல் மற்றும் இதர வேலைகளை பழகிக்கொண்டாள்.நடுவில் ஒரு தரம் தாரிணி, கோயம்புத்தூர் போய் அம்மா, தம்பி, ம்ருதுளாவை பார்த்து விட்டு வந்தாள். சுலோச்சனா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு" கிருஷ்ணா. ரெண்டு பேருக்கும் சீக்ரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடம்ன்னு பாக்கறேன்.ஆத்து  பக்கத்துல இருக்க ஜோசியரை  பாத்து நாள் குறிச்சிண்டு  வந்துடறேன். நேக்கு  சொந்த பந்தம் அதிகம் கிடையாது. எங்க அக்கா ஒருத்தி மதுரையில் இருக்கா. அவளுக்கு வயசு 80க்கு மேல ஆயிடுத்து. அவ வருவான்னு தெரியல. அவ பசங்க ரெண்டு பேரும் அமெரிக்காவில இருக்கா. ஹரீஷ் அப்பாக்கு கூட பொறந்தவா யாரும் இல்லை. ஒரு ஒண்ணு விட்ட மாமா தான் இருக்கா. அவர் கூப்ட்டமானா, விஷயத்தைத் தெரிஞ்சுண்டு ஏதாவது பிரச்சனை பண்ணுவார். இரண்டாவது அவர் பாம்பேல இருக்றதால வரத்துக்கும் வாய்பில்லை" என்று கூறி தொடர்ந்து "ரொம்ப வேண்டப்பட்டவர்களை மட்டும் கூப்ட்டு காதும் காதும் வச்ச மாதிரி வடபழனி கோவில்ல கல்யாணத்தை பண்ணீட்டா என்ன"என்றாள்." நீங்க சொல்றது  கரெக்ட் மாமி.அப்டியே பண்ணிடலாம்"என்றான் கிருஷ்ணன். அடுத்த 15 நாட்களில் ஒரு  வெள்ளிக்கிழமை என்று முகூர்த்தம் இருந்தது.அன்றைக்கு  ஹரீஷ்,தாரிணி கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.சுலோச்சனா அந்த நாள் தாரிணிக்கு ஒத்து போகுமா என்று முதலிலேயே கேட்டு வைத்துக் கொண்டிருந்தாள். தாரிணியின் அம்மாவையும் கலந்து ஆலோசித்தார்கள்.

கிருஷ்ணனும், ஹரீஷும் இரண்டு நாட்கள் முன்னதாக லீவு போட்டுவிட்டு கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.முதல் நாளே மதுரையிலிருந்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் சுப்ரமண்யன் வீட்டில் வந்திறங்கினார்கள். வெள்ளிக்கிழமை காலை ஏழிலிருந்து எட்டு மணிக்குள் கிருஷ்ணன், பாலகிருஷ்ணன்,சரசா ஷைலஜா,சுலோச்சனா ஹரீஷ், சுப்ரமணியன்,சுநந்தா,

சம்யுக்தா,ராஜேஸ்வரி, தாரிணி, அவள்அம்மா, தம்பி, குழந்தை ம்ருதுளா, தாரணிஆபீஸ் தோழிகள்  மூவர் வடபழனி முருகன் கோவிலில் ஆஜரானார்கள். தாரிணி அரக்கு கலர் பட்டு புடவையில், சுநந்தா பண்ணிய அலங்காரம் மேலும் அழகூட்ட,தேவதையாக ஜொலித்தாள். ஹரீஷ் பட்டு வேஷ்டியும், சந்தன கலர் முழுக்கை ஷர்ட்டும் அணிந்திருந்தான்.(புதனன்று அவனும் ,தாரிணியும் பாண்டி  பஜாரில் கடை கடையாக ஏறி,கடைசியில் ஒரு கடையில் தாரிணி அவன் ஷர்ட்டை செலக்ட் செய்திருந்தாள்.தாரிணியின் பட்டு புடவை சம்யுக்த்தாவின் செலக்ஷன்). ஒன்பது மணிக்கு வடபழனி முருகன் சந்ததியில் சோமநாத சிவாச்சாரியார் மாலைகள் எடுத்துக் கொடுக்க, ஹரீஷும், தாரிணியும் முருகப்பெருமான் சாட்சியாக  மாலை மாற்றிக் கொண்டார்கள். சில சமயம் நமது வீடுகளில், நமது குழந்தைகள் நமது கல்யாண போட்டோ ஆல்பங்களை பார்க்கும்போது" ஏம்மா உங்க கல்யாணத்துக்கு போது நான் இல்லை" என்று கேட்கும். அதைப் போன்று கேட்கக்கூடிய வாய்ப்பு ம்ருதுளாவுக்கு கிடையாது. ஏனென்றால் அவள் தான்  அவள்  அப்பா அம்மா கல்யாணத்திற்கு வந்திருக்கிறாளே. மாலை மாற்றி முடிந்ததும் முருகனுக்கு அர்ச்சனை செய்தார்கள். பின்னர்  கிருஷ்ணன், சுநந்தா மற்ற அனைவரும் புதுமண தம்பதிகளுக்கு  கை கொடுத்து , வாழ்த்து சொன்னார்கள். எல்லாம்  முடிய மணி பத்தரையை ஆனது. கோவிலை ஒட்டியிருந்த சரவணபவனில் எல்லோருக்கும் லன்ச்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது அந்த காலத்து சரவணபவன். சாப்பாடு உண்மையிலேயே நன்றாக இருந்தது.

நண்பர்கள்,நண்பிகள் விடைபெற்று சென்றனர். பின்பு மூன்று கார்களில் ஹரீஷ்,தாரிணி, சுலோச்சனா ,கிருஷ்ணன், சுநந்தா,தாரிணியின் அம்மா, ம்ருதுளா, சுப்ரமண்யன்,ராஜேஸ்வரி   ஆகியோர் ஹரீஷ் வீட்டுக்கு சென்றார்கள். முன்னதாகவே ஹரீஷ் வீட்டுக்கு சென்றிருந்த சம்யுக்தா ஆரத்தி எடுத்து, புதுமண தம்பதிகளுக்கு நெற்றியில் ஆரத்தி இட்டு வரவேற்றாள்.மாலை வரை வீடு கலகலவென பேச்சும் சத்தமுமாக இருந்தது. கிருஷ்ணன், அப்பா, அம்மா, தங்கையை இரவு ட்ரெயினில் ஏற்றிவிட்டு தன்னுடைய இடத்துக்கு திரும்பினான். சுப்ரமணியன்,  சம்யுக்தா, ராஜேஸ்வரி, சுநந்தாவை அழைத்துக்கொண்டு டாக்சியில் வீடு திரும்பினான்.இதெல்லாம் நடந்து முடிந்து ஆறு மாதத்திற்கு பிறகு சுநந்தா படிப்பை முடித்து இருந்தாள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி, கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தாள். மூன்று மாதத்திற்கு பின் சுப்ரமணியன் சரசாவுக்கு போன் செய்து"என்னம்மா. நிச்சயதார்த்தம் வச்சுக்கலாமா" என்று கேட்டான். "தாராளமா வச்சுக்கலாம் அண்ணா. உன் காலைத்தான் டெய்லி எதிர்பார்த்திண்டிருந்தேன்என்றாள். அடுத்த 10 நாட்களுக்குள் நல்ல நாளாக பார்த்து மதுரை தல்லாகுளத்தில் இருந்த ஒரு மினி ஹாலில் நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது.

மாவடு மாஹத்மியம்

  589

மாவடு மாஹத்மியம் 

ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் சைஸில் மலை வடு கிடைக்கும்.

அப்படியே பச்சை மாவடுவை கதவிடுக்கில் நசுக்கினால், காக்காய்க் கடியாய் பகிர்ந்து கொள்ளலாம். பல் கூசும் புளிப்பாக இருக்கும். (பல் தானே கூசுகிறது. பின் கண்னை ஏன் மூடிக் கொள்கிறோம்?)

வடுவின் பால் பட்டால் வாய்ப்புண் ஒரு நாள் முழுவதும் படுத்தும். மாவடு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பொடி, தஞ்சாவூர் குட மிளகாய், மோர் மிளகாய் என்று சில சாமான்கள் சீசனில் வருடா வருடம் தொடர்ந்து வரும்.

ஆனாலும் இந்த மாவடு மட்டும் எந்த ஊரில் இருந்தாலும், கிடைப்பது சப்பை வடுவாக இருந்தாலும், நம் பங்குக்கும் ஒரு படியாவது போட்டால் தான், ஏதோ நாமும் பெரிய மனுஷி ஆகி விட்டதுபோல் ஒரு தோரணையான ஃபீலிங் வருகிறது. 

தேவையான பொருள்கள்:

மாவடு – 1 படி
கல் உப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1 கப்
கடுகு – 1/4 கப்
விரளி மஞ்சள் – 3
விளக்கெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 1/4 கப்

செய்முறை

மாவடுவை நன்கு அலம்பி, நீரை வடியவைத்து, ஒரு துணியில் பரத்தி காய வைக்கவும்.

காய்ந்த மிளகாயை வெயிலில் காய வைத்து,பொடித்துக் கொள்ளலாம் அல்லது 1/2 கப் மிளகாய்த் தூளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

விரளி மஞ்சளை வெயிலில் காய வைக்கவும் அல்லது வாணலியில் 5 நிமிடம் ஈரப்பசை இல்லாமல் வறுத்துக் கொண்டு, கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மஞ்சள் பொடியைக் கலந்து பிசிறிக்கொள்ளவும்

ஊறுகாய் போடும் பாத்திரத்தில் முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே ஒரு பிடி மாவடு, அதன் மேலே ஒரு உப்பு, காரப் பொடி, மாவடு என்று மாற்றி மாற்றி எல்லா வற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடி வைக்கவும்.

இரண்டாம் நாள் கலந்து எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அதன்பின் அடிக்கடி அடிவரை கிளறிவிட வேண்டும்.

 ஊறுகாய்க்கு எப்பொழுதும் கண்ணாடி, பீங்கான் ஜாடி அல்லது கல் சட்டியையே உபயோகிக்கவும்.

மாவடு, மலை வடுவாக இருந்தால் புளிப்பு அதிகமாக இருக்கும். [சும்மா ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்க்காமலா இருப்போம்? 🙂 இந்த முறையும் வடுவின் பால் பட்டு வாயில் புண். :(]

இதற்கு ஒரு பிடி உப்பும், இரண்டு டேபிள்ஸ்பூன் காரப்பொடியும் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

 அநேகமாக மாவடுவின் காம்பை அதிகம் வெட்டாமல் வைத்திருப்பார்கள். தராசிலோ, படியிலோ அளக்கும் போது இது அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும்; வியாபாரிக்கு லாபம்.

வாங்கும்போது ஒடித்துவிட்டு வாங்குவது நமது சாமர்த்தியம். முடியாவிட்டால் மார்க்கெட் விலையே அவ்வளவுதான் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

 வேறு யாராவது(?!) வாங்கி வந்திருந்தால், “ஏமார்ற மூஞ்சி எப்ப வரும்னு காத்துண்டிருந்து தள்ளிவிடுவாங்க போல இருக்கு; சாமர்த்தியம் பத்தாதுன்னு எப்படித்தான் நிமிஷத்துல கண்டு பிடிக்கறானோ?

இவங்களைத் தான் மாப்பிள்ளை பாக்க அழைச்சுகிட்டுப் போகணும்… ” என்று சொல்லிக் கொண்டே (நாம் கடைக்காரனைத் தானே திட்டுறோம்)

ஈரம் உலரவைக்கும் நேரத்தில் ஒரு இன்ச் நீளம் மட்டும் விட்டு, மிச்சக் காம்பை வெட்டி விடவும்.

எக்காரணம் கொண்டும் மாவடுவில், வரும் நாள்களில், ஈரக் கரண்டியை உபயோகிக்கக் கூடாது. ஆனால் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஐஸ் க்யூப்களை இரண்டு மூன்று போட்டு வந்தால் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.

 நல்லெண்ணை விடுவது அவரவர் விருப்பம் தான். ஆனால் விடுவதால் அதிகம் சுருங்காமல் வாசனையாக இருக்கும்.

 மாவடு போட்டு பத்து பதினைந்து நாள்கள் கழித்து அதிலிருக்கும் நீரை இறுத்து, 2/3 பாகமாக ஆகும் வரை அடுப்பில் வைத்துக் காய்ச்சி ஆறவைத்து, பின் மாவடுவில் மீண்டும் விட்டால், வருடம் முழுவதும் கெட்டுப் போகாது.

ஆனால் பொதுவாக போடுவது, அப்படி எல்லாம் செய்யாமலே நன்றாகத் தான் இருக்கிறது.

“மாப்பிள்ளையில் கிழவனும், மாவடுவில் அழுகலும் கிடையாது!” என்பார்கள். நம்பவேண்டாம்.

அழுகிய மாவடுவை எப்பொழுதும் சாப்பிடாதீர்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தயிர் சாதம் வரை காத்திருக்க வேண்டாம். குழம்பு சாதத்திற்கே மாவடு சூப்பராகப் பொருந்திப் போகும்.

வடு மாங்கா துவையல்

காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காயம் வறுத்து, அவற்றோடு சிறிது புளி, உப்பு, தேங்காய், வடு மாங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.

வடு மாங்கா பச்சடி:

மாவடுவோடு ஒரு டீஸ்பூன் தேங்காய், சிறிது மல்லித் தழை, ஒரு பச்சை மிளகாய் வைத்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்து பச்சடி செய்யலாம்.

மாவடுச் சாறு:

சென்ற வருட மாவடுச் சாறு கட்டாயம் மீந்திருக்கும். இதில் ஆலிவ் வாங்கி ஊற வைத்து இரண்டாம் நாளிலிருந்து சாப்பிடலாம். இதன் முழு காப்பிரைட்டும் எனக்கே சொந்தம்.

மேல் சாறாக நீக்கி விட்டு, அடியில் தங்கும் கெட்டியான சாறை சாதத்தில் எண்ணை அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கு கூட தொட்டுக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் வத்தல், வேப்பம் பூ, ஆகியவற்றை சாற்றில் நனைத்து, ஊறியதும் வெயிலில் உலர்த்தி, எண்ணையில் பொரித்து, தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம்.