Wednesday, November 1, 2023

நாற்கோணம் -2

 நாற்கோணம் -2

By N Krishnamurthy 

 *ஜானகி:* சீதா ஞாயிற்றுக்கிழமை என்ன அவ வீட்டுக்கு கூப்பிட்ட போது முதல்ல கொஞ்சம் தயங்கினேன். நம்பளால எதுக்கு  தொந்தரவுன்னு நினைச்சேன். எட்டு மணிக்கு மறுபடி போன் பண்ணி 'ஏன் இன்னும் வரலைன்னு' சண்ட போட்டா.  சரின்னு கிளம்பிட்டேன்.  முட்டாள்தனமா நான் அன்னைக்கு போகலைன்னு தீர்மானம் பண்ணி இருந்தா, வாழ்க்கையில பெருசா மிஸ் பண்ணி இருப்பேன்.கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்ததக்கப்புறம் "நான் ஹாஸ்டலுக்கு கிளம்புறேன்" சொன்ன போது "நீ சாப்பிட்டு தான் போகணும்" அடம் பிடிச்சா சீதா. எல்லாமே நம்ம நினைக்கிறபடி நடக்கிறது இல்ல. மேல இருக்கற ஒருவந்தான் எல்லாத்தையும் நடத்தி  வைக்கிறான்னு  நான் தீர்மானமா நம்பறவ. அதனால்தான் அப்படி சீதா  வற்புறுத்தின போது நான் ஒத்துண்டிருக்கணும் . இல்லேன்னா  நான் ராம பாத்து இருக்க முடியுமா.

ராம்தான் சீதா பண்ணிக்க போற மாப்பிள்ளைன்னு  தெரிஞ்சும் என் மனசு ஏன் அவன் கிட்ட போச்சோ.இனிமே நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.சீதாவை அவ அம்மா சமையல் ரூம் பக்கம் கூப்ட்ட போது ராம் என் கூட பேச ஆரம்பிச்சான். பாவி,என்னமா அழகா இருக்கான். ப்ளு ஜீன்ஸும்,வெள்ளை டீ ஷர்ட்டும் போட்டதால அவன் அழகா இருக்கானா இல்லை அவன் அது ரெண்டையும் உடுத்திண்டதால அவைகளுக்கு அழகு வந்தூட்தானா தெரியல.  அழகா இருக்கறவாளுக்கு அறிவு கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்னு நினைச்சேன்.(தற்பெருமை அடிக்கிறேன்னு நினைச்சுக்க கூடாது, நான் இதுல எக்சப்ஷன்)

ஆனா அவன்  என் எண்ணத்தில் மண்ணை வாரி போட்டுட்டான். பாரதியை பற்றி பேசினோம்,பாரதிக்கும், எங்க ஊர் பக்கத்ல இருக்க  கடையத்துக்கு உள்ள தொடர்பை  பற்றி,அவன்  அப்படி பேசறான். அப்படியே அக்ஷரம் தவறாம குயில் பாட்டை ஒப்பிக்கறான். சரி பேச்ச கொஞ்சம் கர்நாடிக் மியூசிக் பக்கம் திருப்பலாம்னு பாத்தா,அதையும் அவன் விட்டு வைக்கல.என்ன ஆச்சர்யம்.எனக்கும் அவனுக்கும் பிடிச்சுதே ஒரே ராகம்.பைரவி.

ச்யாமா சாஸ்திரி பைரவில பண்ணியிருக்கற ,

'அம்ப காமாக்ஷி'  ஸ்வரஜதியை நாள் பூரா கேப்பேன்றான்.(நேக்கும் அது உயிர்).

பழைய பாடகாள்ல யார் பிடிக்கும்னு கேட்டேன்.ஜி.என்.பி,

மதுரை மணின்னான்.என் சாய்சும் இதான்.நேக்கு தீடீர்னு ஒரு சந்தேகம்.இக்ஷிணி ஏதாவது வசியம்பண்ணி என் மனசல இருக்கறத வேவு பாக்றானோன்னு. கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசிண்டு இருந்தோம். நானும் அவனும் ஒரே வேவ் லெங்த்ல  இருப்பதை நான் தெரிஞ்சிண்டேன். இருந்தா கூட மனசுக்குள்ள "ஜானகி உன் டியர் ஃப்ரெண்ட்.ராம் அவள கல்யாணம் பண்ணிக்க போறவன்.அவன் மேல ஆசையை  நீ வளத்துகறது  நண்ணா  இல்லைன்னு" மனசு ஒரு பக்கம் நெனச்சாலும், இன்னொரு பக்கம் இந்த பாழும்  மனசு அவனையே சுத்தி சுத்தி வரது.இதுக்குதான் கண்ணதாசன் ரெண்டு மனம் வேணும்னு எழுதினானா?

நெனச்சு வாழ ஒண்ணு.மறந்து வாழ ஒண்ணுண்ணு.

கடைசீல கிளம்பும்போது அவன் என் நம்பரை கேட்டான். எனக்கு கொடுக்கிறதா வேணமான்னு தயக்கம். சீதா வேற பாத்துண்டு இருந்தா. அவ பார்வையே சரியில்லை. வேற வழி இல்லாம என் நம்பர் கொடுத்துட்டேன். அப்ப சீதா என்ன முறச்ச மாதிரி தெரிஞ்சது. சரி பார்த்துக்கலாம்ன்னு, அவா கிட்ட சொல்லிண்டு  ஹாஸ்டலுக்கு  கெளம்பீட்டேன்.

"நான் ஓணா உன்ன டிராப் பண்றேன்னு" ராம் சொல்வானோன்னு  நெனைச்சேன். நல்ல வேளை ராம் அப்படி ஒண்ணும் சொல்லல.

நாற்கோணம் -1

 நாற்கோணம் -1

By N Krishnamurthy 

இந்த கதையை நான் எழுதப்போவதில்லை. அந்ததந்த கதாபாத்திரங்களே கதையை நகர்த்திச்செல்லப்போகிறார்கள்.

--------------------------------------------------------------

 *சீதா:* "மாடு மாதிரி வளந்திருக்கயே தவிர உனக்கு அறிவு போறாதடி" என்பாள் அம்மா, நான் சின்ன தவறு செய்தால் கூட.

அதன் தாக்கம் இந்த மர மண்டைக்கு இப்போதுதான் உரைக்கிறது. இருபத்தி  ரெண்டு வயதாகியும், இப்படி தவறு பண்ணீட்டனே என நெஞ்சு பதபதைக்கிறது.

எங்க இனத்தை சேர்ந்தவர்களுக்கு நினைச்சுக்கூட பாக்க முடியாத எம்.ஐ.டி யில் என்ஜினியரிங் படிச்சி,அண்ணா யூனிவர்சிடியில் ரெண்டாவது ரேங்க் வந்து,ப்ளேஸ்மண்டில்,

எடுத்த எடுப்பிலேயே மாசம் தொண்ணூராயிரம் ரூபாய் வேலைல ஒரு வருஷம் குப்பை கொட்டியும், இந்த இமாலய தப்பை எப்படி பண்ணேன். 

இப்போ மருகி என்ன பண்ணறது.

அன்னிக்க அந்த தப்பை நான் பண்ணியிருக்க கூடாது.

என் பிரண்ட் ஜானகியை வீட்டுக்கு கூப்பட்டது தப்பா,போயிட்டு வரேன்னு சொன்னவளை வலுக்கட்டாயமா 'லன்ச் சாப்டூட்டுதான்  போணம்னு' சொன்னது தப்பா,அந்த சமயம் பாத்து அத்தை பையன்(என் முறை பையன்) ராம் எங்காத்துக்கு வந்தது தப்பா,அவனை இந்த ராக்ஷசிக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணினே அது தப்பான்னா யோசிக்கறேன்,யோசிக்கறேன், மூளை கொழம்பறது.எனக்கு நானே சூன்யம் வைச்சூண்டூட்டேனோ?

ஜானகி எங்கூட வேல பாக்றவ.என் வயசுதான்.

சொந்த ஊர் அம்பாசமுத்திரம்

.தாமிரபரணி தண்ணி குடிச்சு வளர்ந்ததனால உடம்புல அப்படி ஒரு மினு மினுப்பு.கரு கருன்னு பாம்பு மாதிரி நெளியற கூந்தல்.செத்த  பூசின மாரி உடம்பு.

பொம்னாட்டிக்கே அவளது காந்த கண்ணையும்,சிரிப்பையும்  பாத்தா பேசணம்னு தோணும். அப்படீன்னா ஆம்பளைகளுக்கு கேக்கணமா.

நான் ஜானகியை விவரிச்சதை பாத்து நான் அழகில்லைன்னு அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம்.கிட்டத்தட்ட நானும் அவளை மாதிரிதான்.என்ன,கலர் துளியூண்டு(Just 10%) கொறச்சல்.

நான் காவேரி தண்ணி குடிச்சு வளர்ந்தவ. +2 வரைக்கும் கும்பகோணத்தல படிச்சேன்.அந்த சமயம் பாத்து அப்பாவும் ரிடயர் ஆனாதால,குடும்பமே சப் ஜாடா மெட்ராசுக்கு வந்தூட்டோம்.நங்க நல்லூர்ல 27 ஆவது தெருவுல பிளாட்ல இருக்கோம்.

பகவானே.ஆஞ்ஜநேயா.

நான் பண்ண தப்பால எனக்கு ராம் கிடைக்காம பண்ணீடாதே. எல்லாம் நல்லபடிய போனா நோக்கு வடமால சாத்தறேன்.

வடா பாவ்

 வடா பாவ்

தேவையான பொருட்கள்

*பூண்டு சட்னி*

*பவுடர் செய்வதற்கு...*

*.  எண்ணெய் 1 டீஸ்பூன் 
*.  எள்ளு 2 டீஸ்பூன் 
*.  வரமிளகாய் - 5
*.  பூண்டு 1/4 கப் 
*.  துருவிய தேங்காய் 1/2 கப் 
*.  உப்பு சுவைக்கேற்ப 

*வடா மாவிற்கு...*

*.  கடலை மாவு 2 கப் 

*.  மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் 

*.  ஓமம் 1 டீஸ்பூன் 

*.  உப்பு சுவைக்கேற்ப 

*.  தண்ணீர்

     தேவையான அளவு 



*ஆலு வடா*

*செய்வதற்கு...* 

*.  எண்ணெய் 1 
     டேபிள் ஸ்பூன் 
*.  கடுகு 1/2 டீஸ்பூன் 
*.  வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது) 
*.  இஞ்சி 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) 
*.  பூண்டு 4 பல் (பொடியாக நறுக்கியது) 
*.  பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கியது) 
*.  பெருங்காயத் தூள்  
      1/4 டீஸ்பூன் 
*.  உருளைக்கிழங்கு4 
     (வேக வைத்து மசித்தது) 
*.  மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 
*.  கொத்தமல்லி சிறிது (நறுக்கியது) 
*.  சீஸ் க்யூப் சில துண்டுகள் 
*.  உப்பு சுவைக்கேற்ப 

*பிற பொருட்கள்* 

*.  பாவ் பன் 8 

*.  வெண்ணெய் 

     டோஸ்ட் செய்வதற்கு 

*.  எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு 

*செய்முறை*

* முதலில் பூண்டு சட்னி பவுடரை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அதில் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

* அடுத்து வடா பாவ்விற்கு வேண்டிய வடையை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். 

* பிறகு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறியதும், அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி குளிர வைக்க வேண்டும். 

* உருளைக்கிழங்கு மசாலா குளிர்வதற்குள், ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், ஓமம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்🔵🟣


ரகோபதேஸம்தொடர்ச்சி_20

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

#ரகோபதேஸம்தொடர்ச்சி_20

by பாஸ்கர் சத்யா

'மாமா வந்துட்டேன்'

மடத்தில் இருந்த அவரிடம் உரக்க சொல்லிக் கொண்டே மடத்திற்குள் நுழைகிறேன்.

'நானும் ரெடியா காத்திண்டு இருக்கேன்.'

அவரும் நான் சொன்ன‌ அதே தொனியில் அப்படி சொன்னபோது இருவரும் சிரிக்கிறோம்.

வகுப்பு துவங்க ஆயத்தமாகிறோம் இருவரும்.

'இன்னிக்கு என்ன சொல்லித்தரணும் நோக்கு?'

'சிக்ஷா வல்லியில் ஏதோ முக்கியமானது ரெண்டு விட்டு போயிடுத்து.  மறக்காம ஞாபகப் படுத்து அப்படின்னு சொன்னேள்.'

'ஆமாம்.  ஞாபகம் இருக்கு.  'மாத்ரு தேவோ பவ' அப்படின்னு ஆரம்பிக்கிற ஸ்லோகமும் 'சத்யம் வத தர்மம் சர' அப்படிங்கற ஒரு வரி ஸ்லோகமும் சொல்லிக் கொடுக்கறதா சொன்னேன்.  ஆனா அதுக்கு முன்னாடி அஞ்சு விதமான சிந்தனைகள பத்தி பயிற்சி எடுக்கும்போது கிடைக்கக்கூடிய பலன்கள் ....  அதையும் தெரிஞ்சுக்கறது நல்லது இல்லையா?  முதல்ல அதை பாப்போம்.'

'இதீமா மஹாஸக்ம்ஹிதா: ய ஏவமேதா மஹாஸக்ம்ஹிதா

வ்யாக்யாதா வேத ஸந்தீயதே ப்ரஜயா பசுபி: ப்ரஹ்ம

வர்ச்சஸேனான்னாத்யேன ஸுவர்க்யேண லோகேன'

இது பயிற்சிகளோட பலன்களை செல்லக்கூடிய மந்திரம்.'

இதி - இவ்வாறு; 

இமா: - இந்த; 

மஹா ஸம்ஹிதா: - முக்கியமான சேர்க்கைகள்; 

ய: - யார், 

ஏதா: - இந்த: 

வ்யாக்யாதா: - விளக்கப்பட்ட 

மஹா ஸம்ஹிதா: - முக்கியமான சேர்க்கைகள்:

வேத - அறிவு 

ப்ரஜயா - மக்கட் செல்வம்: பசுபி: - கால்நடைச் செல்வம்:

ப்ரஹ்மவர்ச்சஸேன - புனிதப் பேரொளி; 

அன்ன ஆத்யேன - உணவு முதலானவை: 

ஸுவர்க்யேண லோகேன - மேலான உலகங்கள்; ஸந்தீயதே - பெறுகிறான்.

இங்க சொல்லப்பட்ட இந்த முக்கியமான சேர்க்கைகள்பற்றி அறிபவன் மக்கள் செல்வம், கால்நடைச் செல்வம், புனிதப் பேரொளி, உணவு முதலானவற்றைப் பெறுகிறான். மேலான உலகங்களில் வாழ்வதற்கான வாய்ப்பும் அவனுக்குக் கிடைக்கிறது.

'இந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை விட இந்த அஞ்சு வகை சிந்தனைகளை தெரிஞ்சிண்டு, முறையா பயிற்சி எடுக்கணும் அப்படிங்கிற உட்பொருளையும் நாம புரிஞ்சுக்கணும்.'

'தெரிஞ்ச உண்மைகள மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து அவைகள மனசோட ஒரு பகுதியாக்கணும். பிறகு ஆழ்ந்து சிந்தனை செய்யுன்னு சொல்றது உபநிஷதங்கள். சிந்திக்கின்ற மனசு தான் தெளிவு பெறும். மனத் தெளிவு பெற்றவனுக்குத் தான் தனது நோக்கம் என்ன, அதை அடைவதற்கு எந்த வழியில் போகணும் என்பவை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரியும்.  நோக்கத்திற்கு பாதகமானவைகள விலக்கி, சாதகமானவைகள ஏத்துண்டு செயல்பட ஏதுவா இருக்குமோன்னோ?;   அதுவே அவனுக்கு வெற்றியை கொடுக்கும் இல்லையா? குருகுல வாசத்துக்கு பிறகு அவன் இல்லற வாழ்வக்கைல அடியெடுத்து வைக்கலாம் அல்லது துறவு வாழ்வை கூட ஏத்துக்கலாம்.   அப்போது அவனுக்கு ரெண்டிலும் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ அவனுக்கு லகுவாகறது.'

'இந்தச் சிந்தனைகளின் மூலம் மனம் நான், எனது என்ற குறுகிய ஸெல்ஃபிஷ் வட்டங்களிலிருந்து அவன் கண்டிப்பாக வெளியே வந்துடறான்.  அலுவலகம், வேலை என்று பலவாறாகப் பிரிந்து கிடந்த மனம் ஒரு வட்டத்துக்குள்ள அவன் குவிச்சுடறான்'

இந்தச் சிந்தனைகளை உரிய முறையில் ஒழுங்காகத் தொடர்ந்து செய்யும்போது மன அழுத்தம் குறையறது; மனம் லேசாகறது; வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான மனத் தெளிவைத் தர்றது.'

'இந்த மாதிரியான சிறப்புகளால் தான் குருகுல படிப்பும் போது வாழ்க்கைக் கல்வியின் ஆரம்பப் படிகளுள்ல முதல் படியா இது வைக்கப்பட்டிருக்கு.'

'இந்த சிக்ஷா வல்லியில சொல்லப் பட்டிருக்கிற பயிற்சிகள் எக்கச்சக்கம்.  நான் நோக்கு அடிப்படை சிந்தனைகள மாத்திரம்தான் சொல்லிக் கொடுத்திருக்கேன்.  இது மட்டுமே முழு பயிற்சி ஆகாது அப்படிங்கிறதையும் சொல்லிடறேன்.'

'மாமா நீங்க வேத பாடசாலைல படிக்கும் போது இதெல்லாம் சொல்லி கொடுத்தாளா?'

'நன்னா கேட்ட போ.  உபநிஷத்துகள் எல்லாத்தையும் தீர்க்கமாவும் ஸ்பஷ்டமாவும் கத்துக்குற வரைக்கும் பெண்டு கழட்டிடுவா.  வாத்தியார்களுக்கு திருப்தி வர வரைக்கும் விட மாட்டா.  பனிஷ்மெண்டெல்லாம் கூட உண்டு.'

'நல்ல வேளை.  நீங்க எனக்கு குருவா இருக்கேள்.'

'என்னமோ தெரியல டா.  உன்ன பாத்தா எனக்கு கோபமே வர மாட்டேங்கறது.'

இப்படி சொல்லிவிட்டு சிரிக்கிறார்.  நானும் அவருடன் சேர்ந்து கொள்கிறேன் சிரிப்பில்.

'சரிடா அந்த ரெண்டு ஸ்லோகங்களை இப்ப பார்க்கலாம்.'

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆசார்ய தேவோ

பவ அதிதி தேவோ பவ 

மாத்ரு - தாய்: பித்ரு - தந்தை; ஆசார்ய: - ஆசிரியர்: அதிதி - விருந்தினர்; தேவ: - தெய்வம்; பவ - ஆகட்டும்.

தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள்

தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள்

ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள்

விருந்தினரைக் தெய்வமாகப் போற்றுங்கள்.

'மந்திரத்தோடு பொருள் என்னவோ இவ்வளவுதான்.  ஆனா இதை உயிருள்ளவரை கடைப்பிடிக்கிறவா எல்லோருக்கும் பகவானோட அனுக்ரஹம் பரிபூரணமா எப்போதும் கிடைக்கும்.'

'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ....' இப்படி எண்ணற்ற உபதேசங்கள் மாதா பிதாவின் மேன்மைகளை சொல்லி இருக்கு.  வேறு எந்த மதத்திலும் இல்லாத அளவு நம்ம ஹிந்து மதத்துல மாதா பிதாவின் அருமைகளை அள்ளி கொடுக்கப்பட்டிருக்கு.  அதிலும் குறிப்பாக தாயாரை பத்தி சொல்லப்பட்ட உபதேசங்கள் ஏராளம்.'

'கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி –'

தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?

இது மாதிரியான வாக்கியங்கள் சமிஸ்க்கிரதத்துல ஏராளமா இருக்கு.

'குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி'

இது தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரத்துல வருகிற வாக்கியம்.  இதோட பொருள், கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.

'ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே'

தாய் உயிரோடிருக்கும் வரைதான்  வீட்டில் சுகம்.

'து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம்'  கதா மஞ்சரிகள் ஒண்ணுல வருகிற வாசகம் இது.  ப்ருஹத் கதா மஞ்சரின்னு நெனைக்கறேன்.

'இதுக்கு என்ன அர்த்தம்?  அம்மாக்கள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல.

'ந மாது: தைவதம் பரம்- இது சாணக்ய நீதி.  பொருளானது

அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை.  தாயிற் சிறந்த கோவிலும் இல்லை அப்படின்னு தமிழ்ல சொல்லுவாளே.'

'பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன'

மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை கூட விட்டுடலாம், ஆனால் தாயாரை ஒருநாளும் விட்டுடக்கூடாது.

'மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம்'

எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.

'மாதா பித்ருப்யாம்  சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – இது கதாசரித் சாகரத்துல வந்திருக்கற அதி அத்புதமான ஸ்லோகம்.

பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழவே முடியாது.

'மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி  பந்தனே'.  இது ஹிதோபதேசம்.

அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள்.  'தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை' இப்படி எம்ஜிஆர் பாட்டு ஒண்ணு கூட இருக்கே.'

'மாத்ருதோஷோ ந தோஷ: 

அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது

'மாத்ரா சமம்  நாஸ்தி சரீர போஷணம்'

தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமில்லை.

'யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ'

தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள்.  தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை அப்படின்னு கூட தமிழ்ல இருக்கே.'

'ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—இது மனுஸ்மிருதி ஸ்லோகம்.

தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.

'ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி:'

தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.

அடுக்கிக் கொண்டே போனார்.  என் தந்தையை அவர் நினைக்கும் போதெல்லாம் கலங்குவதை குறிப்பிட்டு இருக்கிறேன்.  அப்போதெல்லாம் எனக்கு சுரக்காத கண்ணீர், இப்போது மாதாவின் மேன்மைகள் குறித்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது பிரவாகமாய் கண்களில் தேங்கி இதயம் வரை நனைத்துக் கொண்டிருந்தது என்றால் மிகை இல்லை.

ஒரு கட்டத்தில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்குகிறேன்.  அதற்கு மேல் ஸ்லோகங்களை உள்வாங்குவது மனதில் நிறுத்துவது இயலாததாக ஆகி விடுகிறது.

புரிந்து கொண்ட அவர் அத்துடன் உபதேசங்களையும் நிறுத்தி விடுகிறார்.  என்னை நானே கட்டுக்குள் கொண்டு வரும் வரை மௌனமாக என்னை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.  பிறகு ....

'ஏண்டா கொழந்த ...  தைரியமான பையன் ஆச்சே நீ.  எதுக்கு இப்படி அழுதுண்டிருக்க?  சமத்து கண்ண தொடச்சுக்கோ.'

வார்த்தைகள் வராமல் விசும்பல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன என்னிடத்தில்.

தன் இருக்கையை விட்டு எழுந்து என் கையை பிடித்து சற்று தூக்கி நிறுத்துகிறார்.  தன் அங்கவஸ்திரத்தால் என் கண்கள் முகம் அனைத்தையும் துடைத்து விடுகிறார்.  பிறகு என் தலையை அவருடைய மார்பு பகுதியில் வைத்து இரு கைகளாலும் அழுத்திப் பிடிக்கிறார்.

'அசடு அசடு....  என்ன இது?  கண்ண தொடச்சுட்டு பாண்டுரங்கன் முன்னாடி ஒக்கார்ந்துக்கோ.  எல்லாரோட தாய்களும் ஒண்ணுதான்.  அப்பா இல்லாத கவலையே இல்லாம உங்க அம்மா உன்ன வளர்க்கறாளோன்னோ?  அதான் கொஞ்சம் உணர்வு அதிகமாயிடுத்து.  இதோட இன்னைக்கு கிளாஸ் போதும்.'

'கொஞ்சம் பகவான் முன்னாடி ஒக்காந்து ரிலாக்ஸ் பன்னிண்டு கிளம்பு.  அஞ்சாறு தடவ 'வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி

ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.' இந்த ஸ்லோகத்தை சொல்லு.  சரியாயிடுவ.'

செய்கிறேன்.  நமஸ்கரிக்கிறேன்.  கிளம்புகிறேன்.

வாசல் வரை வந்து என் தலையை கோதி விட்டு தடவி வழி அனுப்பி நான் தெருக்கோடி வரும் வரை மடத்திலிருந்து என்னை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

தொடரும்

ரகோபதேஸம்தொடர்ச்சி_19

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

ரகோபதேஸம்தொடர்ச்சி_19

by பாஸ்கர் சத்யா

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.  பாண்டுரங்க மடத்திற்குள் நான் நுழையும்போது மாமா அங்கு இல்லை.  மடத்தின் எல்லா கதவுகளும் திறந்திருந்த நிலையில் அவர் இல்லாதது சற்று ஆச்சரியத்தை தந்தது.

'மாமா மாமா மாமா ....'

இப்படி கூப்பிட்டதற்கு எதிர் குரல் கிடைக்காத நிலையில் தோட்டத்திற்கும் சென்று பார்க்கிறேன்.  அங்கும் அவரை காணவில்லை.

'எங்கே போயிட்டார் கதவு எல்லாத்தையும் தொறந்து வெச்சிட்டு?'

கிளம்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கம் முழுவதும் விபூதி தரித்த நிலையில் ஒரு கையில் ஒரு கமண்டலத்திலும் மற்றொரு கையில் பஞ்ச பாத்திர உத்தரணி சஹிதம்‌ மாமணி ஆற்று வாசல் கதவிலிருந்து மாமா உள்ளே நுழைகிறார்.

மகிழ்ச்சி என்னிடத்தில்.

'என்ன மாமா?  எங்கே இருந்து வரேள்?  உங்கள காணாம நான் பயந்துட்டேன் தெரியுமா?'

'நோக்கா பயம்? படவா!  நான் இதை நம்பணமாக்கும்?'

'இல்ல மாமா கதவெல்லாம் தொறந்து வெச்சிட்டு எங்கேயும் போக மாட்டேளே நீங்க.  அதான் கொஞ்சம் பயம் கொடுத்துடுத்து.'

'ஒண்ணும் இல்லடா.  கொஞ்சம் ஆத்தாங்கர மணல்ல அமைதியா சித்த நேரம் உக்கார்ந்துட்டு மாத்யான்னிஹத்தையும் பண்ணிட்டு திரும்பறேன்.'

'வெய்யிலா இருந்திருக்குமே மாமா?'

'மடத்தோட தோட்டத்த ஒட்டின மரத்து நிழல்ல தான் உக்கார்ந்திருந்தேன்.  அவ்வளவா ஒண்ணும் சுடல.'

இப்படி எனக்கு பதில் கொடுத்துவிட்டு, 'பாஸு பூஜையையும் முடிச்சுட்டு கிளாஸ்ல உட்காரலாமா?  சொல்லிக் கொடுத்துட்டு பண்றதுன்னா எனக்கு ரொம்ப லேட் ஆயிடும்.  நோக்கு அவசரம் ஒண்ணும் இல்லையோன்னோ?'

'இல்ல மாமா.  லீவு நாள் தானே. நான் வேணா அதுவரைக்கும் கொஞ்சம் தோட்டத்துல இருக்கட்டுமா?  நீங்க பூஜையை ஆரம்பிங்கோ.  ஆரத்தி மணி சத்தம் கேட்டோண்ண வந்துடறேன்.'

'நல்லது டா.  ஆனா பூச்சி பட்டு ஜாக்ரதை.'

தோட்டத்திற்கு செல்கிறேன்.  பூக்களோடும் செடிகளோடும் ஆனந்தமாய் பேச்சை துவக்குகிறேன்.  செடிகளை குளிப்பாட்டுகிறேன்.  புதுச் செடிகளுக்காக சில குழிகளையும் ஏற்பாடு செய்கிறேன்.

'பாஆஆஆஆஸு' ஆசானின் குரல் சற்று சத்தமாக.  அவசரம் அவசரமாக கை கால்களை சுத்தம் செய்துவிட்டு ஆரத்தி மந்திரங்களில் அவரோடு சேர்ந்து கொள்கிறேன்.

பாண்டுரங்க பூஜை முடிந்தது.  வழக்கமான வகுப்பு ஏற்பாடுகளும் முடிந்து அவருடைய உபதேசத்திற்காக காத்திருக்கிறேன்.

'மனச ஒருமைப்படுத்த அஞ்சு விதமான சிந்தனைகளை பத்தி சொல்லிண்டு இருந்தேன்.  அதுல முதல் விஷயமா பிரபஞ்சத்தை பத்தியும் பேசினோம் இல்லையா?'

'இனி அடுத்ததாக ஒளி பத்தின சிந்தனை.  அதிஜ்யௌதிஷம் சமிஸ்கிரதத்துல.'

அதாதிஜ்யௌதிஷம் அக்னி: பூர்வரூபம் ஆதித்ய

உத்தரரூபம் ஆப: ஸந்தி: வைத்யுதஸ்ஸந்தானம் இத்யதி ஜ்யௌதிஷம் 

அத - இனி;

அதிஜ்யௌதிஷம் - ஒளிப்பொருள் பற்றி; 

அக்னி: - அக்கினி: 

பூர்வரூபம் - முற்பகுதி; 

ஆதித்ய: - சூரியன்; 

உத்தர ரூபம் - பிற்பகுதி; ஆப: - தண்ணீர்; 

ஸந்தி: - இணைப்பு;

வைத்யுத: - மின்னல்; ஸந்தானம் - இணைக்கின்ற பொருள்; 

இதி - இவ்வாறு: அதிஜ்யௌதிஷம் - ஒளிப்பொருள் சிந்தனை.

'இப்போ சேர்த்து பார்ப்போமா?இனி ஒளிப்பொருள் சிந்தனையைப் பார்ப்

போம். இதில் அக்கினி முற்பகுதி, சூரியன் பிற்பகுதி

இரண்டும் இணைவதால் தண்ணீர் உண்டாகிறது.

இரண்டையும் இணைப்பது மின்னல், ஒளிப்பொருள்

சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.'

'பிரபஞ்சத்தோட அழகுல மனச ஒருங்கிணைக்கணும்னா முதல்ல அதோட அழகை ரசிக்கணும். அதுல லயிக்கணும். அதற்கு அடிப்படைத் தேவை ஒளி. ஒளி இல்லாம பார்க்க முடியுமோ? இதுல என்ன விசித்திரம் பாரு.  ஒளிய நாம நேரடியா பார்க்க முடியாது; ஒளி பட்டு ஒளிர்கின்ற பொருளை மட்டுமே காண முடியும். எனவே அக்னி, சூரியன், மின்னல் போன்ற சில வஸ்துக்கள் இங்கே எடுத்துக் கொள்ளப்படறது.   இந்தச் சிந்தனையின் இரண்டு முக்கிய அம்சங்கள்.

'ஒளிர்கின்ற பொருட்கள் தாம் ஒளிர்வதுடன் பிற பொருட்களையும் ஒளிரச் செய்கின்றன; அதாவது, பிற பொருட்களை நாம் காணுமாறு செய்கின்றன. பிறருக்கும் பயன்படற மாதிரி வாழ்க்கைய அமச்சுக்கணும்னு சொல்றதுக்கு இது ஓர் உதாரணமா அமயறது.'

'அக்னியிலிருந்து தண்ணீர் கிடைக்கறது. இது படைப்போட அடுத்த கட்டம். இயற்கையின் நிகரற்ற ஆற்றலுக்கு மின்னல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இயற்கையின் ஆற்றலால் அக்னிலேந்து தண்ணீர் உருவாகிறது.'

'ஒளியைச் சிந்திக்கறது அவ்வளவு சுலபம் இல்லை.  அதனால பிரபஞ்ச சிந்தனைய விட சற்று உயர்நிலை சிந்தனைனு இத சொல்றா.'

'அடுத்ததாக பார்த்தோமேயானால் கல்விச் சிந்தனை.

அதாதிவித்யம் ஆசார்ய: 

பூர்வ ரூபம் அந்தேவாஸ்-

யுத்தரரூபம் வித்யா ஸந்தி: ப்ரவசனக்ம் ஸந்தானம்

இத்யதிவித்யம்

அத - இனி; 

அதிவித்யம் - கல்விபற்றி; ஆசார்ய: - ஆசிரியர்; 

பூர்வரூபம் - முற்பகுதி; அந்தேவாஸீ - மாணவன்; உத்தரரூபம் - பிற்பகுதி; 

வித்யா - கல்வி; 

ஸந்தி: - இணைப்பு; 

ப்ரவசனம் - கற்பித்தல்: ஸந்தானம் - இணைகின்ற பொருள்: 

இதி - இவ்வாறு; அதிவித்யம் - கல்விச் சிந்தனை.

'கல்விபற்றிய சிந்தனைல ஆசிரியர் முற்பகுதி, மாணவன் பிற்பகுதி, இருவரும் கல்வியில் இணைகின்றனர்;

கற்பித்தல் இணைதலுக்குக் காரணமாக உள்ளது,

கல்விச் சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.'

'இது இன்னும் சற்று உயர்ந்த சிந்தனை. சிந்தனைக்கு ஒரு பொருள எடுத்துக்காம, ஒரு கருத்த எடுத்துக்கறது. கல்வியை, அதாவது கல்வியின் பல்வேறு அம்சங்களைச் சிந்திக்குமாறு இந்தச் சிந்தனை கூறுகிறது.'

'அடுத்த சிந்தனை ஞாபகம் இருக்கா?'

சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை.  இருந்தாலும் சவாலாக எடுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பிக்கிறேன்.  அவரும் புன் சிரிப்போடு என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

'உற்பத்தின்னு நீங்க சொன்ன மாதிரி ஞாபகம் மாமா.'

'அட அட அட ...  எத்தனை உன்னிப்பா கவனிச்சிருக்க வகுப்ப?  நீ தெரியாதுன்னு உதட்டை பிதுக்குவேன்னு நெனைச்சேன்.'

பெருமிதமாக இருந்தது அப்போது எனக்கு.

'சரி.  இப்ப அந்த உற்பத்தி சிந்தனைய பத்தி பாப்போம்.  இதை உயிர்ச் சிந்தனை அப்படின்னும் சொல்லலாம்.'

அதாதிப்ரஜம் 

மாதா பூர்வ ரூபம் பிதோத்தரரூபம்ப்ரஜா

ஸந்தி: ப்ரஜனனக்ம் ஸந்தானம் இத்யதிப்ரஜம்

அத - இனி; 

அதிப்ரஜம் - உயிர்களின் உற்பத்திபற்றி ; 

மாதா - தாய்; 

பூர்வரூபம் - முற்பகுதி; 

பிதா - தந்தை;

உத்தரரூபம் - பிற்பகுதி; 

ப்ரஜா - பிறக்கின்ற உயிர்: ஸந்தி: - இணைப்பு: 

ப்ரஜனனம் - உடலுறவு; ஸந்தானம் - இணைக்கின்ற பொருள்: 

இதி - இவ்வாறு; அதிப்ரஜம் - உயிர்களின் உற்பத்திபற்றிய சிந்தனை.

'இந்த விஷயம் உன் வயசுக்கு ஏத்ததா இல்லாட்டாலும் அடிப்படை விஷயமா தெரிஞ்சுக்கறதுல தப்பில்ல.  அம்மா அப்பா சேர்க்கை குழந்தை இதுதான மனுஷாளோட பிறப்புக்கு ஆதாரம்?'

'தாய் முற்பகுதியாவும் தந்தை பிற்பகுதியாவும், இருவரும் இணைவதால் உயிர் பிறக்கிறது.  உயிர்களின்

உற்பத்திபற்றிய சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.  ஜீவராசிகள் எல்லாத்துக்குமே இது பொருந்துமே.  செடிகள் கூட‌ மகரந்த சேர்க்கை மூலமாக வ்ருத்தி ஆகிறதோன்னோ?'

'வேத கால சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கிய காரணங்கள்ல ஒண்ண இங்க பாக்கறோம். காமம், உடலுறவு போன்றவைகள் தகுந்த ஒருவரால் கற்பிக்கப்படுவது மாத்திரம் இல்லாம, அத பத்தி சிந்திக்குமாறும் இங்கே சொல்லப்படறது. கல்விக்காலம் முடிந்து வெளியேறும்போது ஒருவன் நல்ல மனிதனாக வாழ்வதற்கு இந்தக் கல்வி, இந்தச் சிந்தனை வழி வகுத்தது. வாழ்க்கையின் ஓர் அடிப்படை அம்சமான காமம் பத்தி, உரிய வேளையில், உரிய முறைப்படி, தகுந்த ஒருவர் கற்பிப்பதன்மூலம் நல்ல மனிதன் உருவாகிறான்; நல்ல சமுதாயத்திற்கு அது வழிகோலுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை  கீதை தெய்வீகமா ஸ்லாகிக்கிறது.'

'இதோட முடிச்சுண்டு மேற்கொண்டு அடுத்ததுக்கு போவோம்.  வாக்கு சிந்தனை:

அதாத்யாத்மம் அதரா ஹனு: பூர்வரூபம் உத்தரா ஹனு

ருத்தர ரூபம் வாக் ஸந்தி: ஜிஹ்வா ஸந்தானம் இத்யத்யாத்மம்//

அத - இனி; 
அத்யாத்மம் - உடம்புபற்றி; அதரா ஹனு: - கீழ்த் தாடை; பூர்வரூபம் - முற்பகுதி: 
உத்தரா ஹனு - மேல் தாடை: உத்தரரூபம் - பிற்பகுதி: 
வாக் - வாக்கு; 
ஸந்தி: - இணைப்பு:
ஜிஹ்வா - நாக்கு: 
ஸந்தானம் - இணைக்கின்ற பொருள்: 
இதி - இவ்வாறு: 
அத்யாத்மம் - உடம்பு பற்றிய சிந்தனை.

'உடம்புபற்றிய சிந்தனையை இனி காண்போம்.  இதில் கீழ்த்தாடை முற்பகுதி, மேல்தாடை பிற்பகுதி, இரண்டும் இணையும்போது வாக்கு பிறக்கிறது. இணைக்கின்ற பொருளாக இருப்பது நாக்கு.

உடம்புபற்றிய சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.

'உடம்புபற்றிய சிந்தனை அப்படின்னு சொல்லப்பட்டாலும் இது உண்மையில் வாக்கு பற்றிய சிந்தனையாகும். பேச்சுக் கட்டுப்பாடே ஆன்மீக வாழ்வுக்கு முதல் படி.'

'விவேக சூடாமணில ஸ்ரீ சங்கரர் 'யோகஸ்ய ப்ரதம த்வாரம் வாக் நிரோத:' அப்படிங்கறார்.'

'இந்தக் கூற்றுப்படியே வாக்கின் ஆற்றலை கையாள்வதை கர்ம யோகத்தோட அடிப்படை நியதியாகவே வைக்கிறார் ஸ்வாமி விவேகானந்தர்.  ஒரு நிமிஷம் வாக்கின் ஆற்றலை யோசிச்சு பார்த்தோமானால் நமக்கே புரிஞ்சுடும்.  அன்றாட வாழ்க்கைல மட்டும் இல்லாம உயர்ந்த தத்துவங்கள்ல கூட வாக்கின் ஆற்றல் மாபெரும் சக்தியா இருக்கு.  இந்தச் சக்தியின் இயல்பைத் தெரிஞ்சுக்கறதும் அதைச் சிறப்பா பயன்படுத்தறதும் கூட கர்மயோகத்துல ஒரு பகுதியா இருக்கு.'

'தேவையற்ற பேச்சு சாதாரண வாழ்க்கைக்கு  பெரிய தடை.  இதனால நமது ஆற்றலில் கணிசமான பகுதி பேச்சுல நாம இழந்துடறோம். எனவே பேச்சுக் கட்டுப்பாட்டைப்பற்றி சிந்திக்கும்படி, கடைப்பிடிக்கும்படி மாணவன் இங்கே இந்த சிக்ஷா வல்லிலே உபதேசிக்ப்படறான்.'

'இது மாதிரி நிறைய விஷயங்கள் சிக்ஷா வல்லில இடம் பெற்றிருக்கு.  பிற்காலத்துல நோக்கு யோகம் த்யானம் இதுமாதிரியான பயிற்சிகள்ல ஈடுபாடு ஏற்பட்டதும்போது  இந்த அடிப்படை ஆதார விஷயங்கள் உபயோகமா இருக்கலாம்.  அத மனசுல வச்சுண்டு தான் இந்த அஞ்சு விதமான சிந்தனைகளை பத்தி சொல்லிக் கொடுத்தேன்.  அடிக்கடி இந்த அஞ்சு விஷயங்களை ஞாபகப்படுத்தி கொண்டே இரு.  எங்க இருக்க சொல்லு பாப்போம் எதெது அந்த அஞ்சுன்னு?'

கொஞ்சம் யோசிக்கிறேன்.

'இயற்கை அல்லது பிரபஞ்சம் முதலாவது.  சரியா மாமா?'

'சரிதான்.  ஒவ்வொண்ணுக்கும் என்கிட்ட சரியான்னு கேட்காதே.  ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி ஒண்ணு ஒண்ணா சொல்லு.'

அதுக்கப்புறம் என் தாவன்கட்டையில் விரல்களால் தாளம் அடிக்கிறேன்.

'ம்ம்ம் ...  மாமா ஞாபகம் வந்துடுத்து.  அடுத்தது ஒளி.  அடுத்தது படிப்பு,கல்வி.  நாலாவதா உடல் உற்பத்தி.  கடைசியா வாக்கு.'

தன் இரு கைகளையும் சேர்த்து தட்டிக் கொண்டே என்னை பாராட்டுகிறார்.

'நீ இந்த மாதிரி நான் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் ஞாபகப்படுத்தி டாண் டாண்ணு சொல்றதாலத்தான் நோக்கு நிறைய சொல்லிக் கொடுத்துண்டே இருக்கணும் போல இருக்கு.  உன்னோட பள்ளிக்கூட பாடங்களையும் இப்படித்தான் ஸ்ரத்தையோட கத்துக்கணும்.  அங்க நோக்கு கவனிச்சிதறல் அதிகமா இருக்கும்.  ஏன்னா அங்க எல்லாரோடையும் சேர்ந்து இருக்கியோன்னோ?  உன்னோட பிரெண்ட்ஸ்களோட சேட்டைகள் இது மாதிரியெல்லாம் பாக்கும்போது கவனம் சிதறுமோன்னோ?  அதுக்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது.'

'இங்கு நான் சொல்லிக் கொடுக்கிறதுக்கெல்லாம் பரீட்சை மார்க் இதெல்லாம் கிடையாது.  ஆனால் ஸ்கூல் படிப்புல இதெல்லாம் இருக்கே.  அதனால ஆத்துக்கு வந்தோண்ண கத்துண்ட விஷயங்கள் மறக்காமல் இருக்க பயிற்சிகளும் முயற்சிகளும் கூட முக்கியம்.  புரிஞ்சுதா நான் சொல்றதெல்லாம்?'

மண்டையை ஆட்டி ஆட்டி அவருக்கு உறுதி அளிக்கிறேன்.

'சரிடா பாஸு.  ரொம்ப நாழி ஆச்சு இன்னிக்கு.  இதோட போதும்.  சிக்ஷாவல்லில சில விஷயங்கள் கத்துண்ட மாதிரி மத்த ரெண்டு வல்லிகளப் பத்தி நாளைக்கு பேசுவோம்.  மத்த ரெண்டு வல்லிகள் பெயர்கள் ஞாபகம் இருக்கா?'

'ஆனந்த வல்லி, ப்ருகு வல்லி ... சரியா மாமா?'

'கரக்டுடா கொழந்த.  அவைகள் ரெண்டும் என்ன ஏதுங்கற அளவுல சுருக்கமா சொல்லிக் கொடுக்கறேன்.  அதுக்கு முன்னாடி சிக்ஷா வல்லியில நீ தெரிஞ்சுக்க வேண்டிய முக்யமான ரெண்டு விஷயங்கள் ஸ்லோகங்களா இருக்கு.  அத முதல்ல முடிச்சுட்டு ஆனந்த வல்லி ப்ருகு வல்லி ஆரம்பிப்போம்.'

'அந்த ரெண்டு ஸ்லோகங்கள்‌ என்னன்ன மாமா?'

'அதுக்குள்ள அவசரமாக்கும்?  அவைகள் 'மாத்ரு தேவோ பவ' அப்படின்னு ஆரம்பிக்கும் ஸ்லோகமும் 'சத்யம் வத தர்மம் சர' அப்படிங்கற உயர்ந்த தத்துவத்த சொல்ற ஸ்லோகமும் தான்.  நான் மறந்து போனாலும் ஞாபகப் படுத்து.'

'சரி மாமா.  நான் நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறேன்.'

தொடரும்.

வழக்கம் போல என் நமஸ்காரங்களுக்கு பிறகு அவரது ஆசிகளை பெற்றுக்கொண்டு கிளம்புகிறேன்.

தொடரும்

அக்கி ரொட்டி

 *அக்கி ரொட்டி* 

 *தேவையானவை* : பச்சரிசி மாவு – கால் கிலோ, தேங்காய் – ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்),  கொத்தமல்லி –  ஒரு கட்டு, 

பச்சை மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ் பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 50 கிராம், 

உப்பு – தேவைக்கேற்ப.

 *செய்முறை* :  கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  

எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசையவும். 

ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். 

ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம்  எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது. 

விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

மசாலா மஜ்ஜிகே

 *மசாலா மஜ்ஜிகே.... (நீர்மோர்)* 👆👇

நீர்மோர் , மாங்காய், வெள்ளரி போட்ட கோசுமல்லி போட்ட  மசாலா மஜ்ஜிகே  வீட்டிற்கு வருபவர் களுக்கு தருவது, அவர்கள் அதை விரும்பி குடித்து பாராட்டி செல்வதும் ஒரு தனி அழகு தான்.

      மசாலா மஜ்ஜிகே செய்வது மிகவும் சுலபம். 

நாம் குடிப்பதற்கும், வீட்டிற்கு வருபவர் களுக்கு தரவும், ஆபிஸ், வெயிலில் வெளியே செல்லும் போது குடிக்க கொண்டு செல்லவும் குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாம்.

       இது சுவை நிறைந்தது.


 *தேவையானவை* :

கெட்டி தயிர்
பச்சைமிளகாய், 1
இஞ்சி சிறு துண்டு
மாங்காய் சிறு துண்டு
வெள்ளரி சிறு துண்டு
கொத்துமல்லிதழை சிறிதளவு
கறிவேப்பிலை, புதினா சிறிதளவு.
வெந்தயப்பொடி...சிட்டிகை
சீரகம் சிட்டிகை
பெருங்காயத்தூள் சிட்டிகை.
உப்பு தேவையான அளவு.

       தயிர் உடன் மேற் கண்ட பொருட்களை எல்லாம் மிக்ஸியில் அடித்துதேவையான அளவு நீர் கலந்து வடிகட்டி 10 நிமிடம் fridge-ல் வைத்தும் குடிக்கலாம். 

fridge-ல் வைக்காமலும் குடிக்கலாம்.

      கோடைகாலத்திற்கு ஏற்ற, எனர்ஜி drink இது. மாங்காய், வெள்ளரி விருப்ப மில்லாதவர்கள் சேர்க்க தேவை யில்லை.