Sunday, April 2, 2023

சென்னா மசாலா

 Breakfast😋

*மாலினி மாமியின்*

சென்னா மசாலா

*🔰தே பொருட்கள்:-*

வெள்ளை கொண்டை கடலை---------1/4 கிலோ
பெரிய வெங்காயம்-----------------------1 
தக்காளி பழம் -----------------------------2
பச்சை மிளகாய் ---------------------------2 
இஞ்சி பூண்டு விழுது --------------------1 டீஸ்பூன்
கடலை மாவு -----------------------------1டீஸ்பூன்
மஞ்சள் தூள் ------------------------------1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் -----------------------------1 டீஸ்பூன்
தனியா தூள் ------------------------------1 டீஸ்பூன்
கரம் மசாலத்தூள் ------------------------3/4 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி ----------------------------1/2 டீஸ்பூன்
சீரகம் --------------------------------------1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ------------------------1/4 டீஸ்பூன்
எண்ணெய் --------------------------------4 டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவையான அளவு.

கசூரி மேத்தி சிறிதளவு 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு.

*Malini's🙎🏼‍♀️kitchen*

*செய்முறை:-*

முதலில் கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துமறுநாள் நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தக்காளி பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைக்கவும் .

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முதலில் சீரகத்தை போட்டு பொரிய விட்டு பெருங்காய பொடி ,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி கடலை மாவையும் சேர்த்து வாசனை வரும் வரை சிவக்க வறுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி பழ விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி அதில் அனைத்து வகை பொடிகள்,உப்பு போட்டு கலந்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வேக விடவும்.

மசாலா நன்றாக வெந்ததும் அதில் முன்பே உப்பு போட்டு வேக வைத்துள்ள கொண்டை கடலையை கரண்டியால் கொஞ்சமாக மசித்துவிட்டு சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை,கசூரி மேத்தி சிறிதளவு தூவி அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான சென்னா மசாலா சப்பாத்தி , பூரி மற்றும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தயார்.

சென்னா மசாலாவை சப்பாத்தி, பூரியுடன் பரிமாறும் போது அதன் மேலே பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை வெங்காயத்தை தூவி பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும்.

குறிப்பு :- கொண்டை கடலையுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்திருப்பதால் மசாலாவில் உப்பு சேர்க்கும் போது பார்த்து சேர்த்து கொள்ளவும்.

ஐயங்கார் இட்லி சாம்பார்

 ஐயங்கார் இட்லி சாம்பார் 

தேவையான பொருட்கள் :

பொருள்அளவுதுவரம் பருப்பு ஒரு கப் வெங்காயம் 2 பெரியது தக்காளி 2 பூண்டு பல் 5 பச்சை மிளகாய் 3 கறிவேப்பிலை ஒரு கொத்து தனியா தூள் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் 

செய்முறை :

 தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.

 ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

 கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

 ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.

 பின்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும்.

 சுவையான சாம்பார் ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை இட்லியுடன் பரிமாறவும்.

மூன்று தலைமுறை -15

 மூன்று தலைமுறை  -15

பஞ்சு முதல் சம்பளம் வாங்கியவுடன் பரசுராமன் சாரைப்  பார்க்கச் சென்றார்.வெறும் கையுடன் போக விரும்பவில்லை. அவருக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம் மற்றும் மாமிக்கு புடவை வாங்கிக் கொண்டு சென்றார். பரசுராமன் 'இதெல்லாம் வேண்டாம்பா. நீ ஒழுங்காக வேலை செஞ்சாலே போறும். என்னுட பேர நீ காப்பாத்து.அதுவே நீ எனக்கு செய்யும் பிரதி உபகாரம்' என்று சொல்லி அவன் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார். விசாலிக்கு ஒரு புடவையும், விசுவுக்கு டிரஸ்ஸும் விளையாட்டு சாமான்களும் வாங்கிகொண்டார் பஞ்சு. ராஜகோபாலனையும், மங்களத்தையும் பஞ்சுவும்,விசாலியும் நமஸ்காரம் செய்து முதல் மாசம் வாங்கின சம்பளத்தில் வாங்கிய வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவையையும் அவர்களுக்கு கொடுத்தார்கள். 'எதுக்குடா இதெல்லாம்' என்று கூறிய அவர்கள்'நோய் நொடி இல்லாமா தீர்க்காய்சா இருங்கோ' என  வாழ்த்தினார்கள்.

பின்பு பஞ்சு மீதி இருந்த சம்பள பணத்தை ராஜகோபாலனிடம் கொடுத்தார். ராஜகோபாலன் அதை அவனிடமே கொடுத்து 'சுவாமி படத்துக்கு முன் வைச்சு நமஸ்காரம் பண்ணீட்டதக்கப்புறம் அம்மாவிடம் கொடுத்துடு' என்றார்.

அந்த பணத்தை வாங்கிக் கொண்டு போய் சாமி படம் முன் வைத்து நமஸ்காரம் செய்த பஞ்சுவும், விசாலியும் பணத்தை மங்களித்திடம் கொடுத்தார்கள். மங்களம்   இந்த பணத்தை பத்திரமாக ஒரு பித்தளை சம்படத்தில்  உள்ளே வைத்தாள். பஞ்சு வாங்கிய முதல் சம்பளத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு கொஞ்சமும்,திருப்பதி ஏழுமலையானுக்கு கொஞ்சமும் மஞ்சள் துணியில் முணிந்து வைக்க  வேண்டும் என்று தீர்மானித்தாள்.

இப்போதெல்லாம் கும்போணத்திலுள்ள டென்ட் கொட்டாய் அருகில் உள்ள எல்லா ஊருக்கும் சென்று மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தார்கள்.

மாட்டு வண்டி யின் இருபுறமும்  படத்தின் போஸ்டரை ஒட்டி விடுவார்கள். படத்தின் பெயரையும் அதில்  நடிப்பவர்கள் பற்றியும் சின்ன நோட் நோட்டீஸ் அடித்து அதை வண்டியில் உட்கார்ந்து இருப்பவர் ஊர் பூராவும் போட்டு விடுவார் கள்.இதனை ஊரிலுள்ள சிறுவர்கள் பொறுக்கி செல்வது வழக்கம்.

இதனால் பல ஊர்களில் இருந்து கும்போணத்திற்கு சினிமா பார்க்க பலர் சென்றார்கள்.

1947, மாசி மாதத்தில்,ஏழு வயது நடந்து கொண்டிருந்த  விசுவுக்கு உபநயனம் செய்ய முடிவு செய்தார் ராஜ கோபலன்.ஆத்து வாத்யாரை வர வழித்து  நாள் குறிக்கப்பட்டது.

என்னென்ன பாத்திரங்கள்,துணிமணிகள் வாங்க வேண்டும்,என்ன சீர் செய்ய வேண்டுமென்பதையெல்லாம் வாத்யார் விவரமாக சொன்னார்.முதலில் சுந்தரேசனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.

பின்பு எல்லா பந்துக்களையும் அழைத்தார்கள்.விசு பள்ளியில் நண்பர்களிடம் இது பற்றி கூறி விசேஷத்திற்கு வருமாறு அழைத்தான். பஞ்சு  அவன் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை அழைத்தார்.ஒரு வாரம் முன்பே பூணல் கல்யாணம் களை கட்டியது. வீட்டை சுற்றி பந்தல் போடப்பட்டது.

மூன்று தலை முறை -14

 மூன்று தலை முறை  -14

விசு  பள்ளியில் சிறந்த மாணவனாக இருந்தான்.  சாயங்கால வேளையில்  விசாலி அவனுக்கு தவறாமல் ஸ்லோகங்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். விசுவுக்கு கற்பூர புத்தி. சொல்லிக்கொடுத்த நான்கு,ஐந்து நாட்களுக்குள் அவனுக்கு ஸ்லோகம் மனப்பாடம் ஆகிவிடும்.பஞ்சு கும்போணம் சென்று அவனுக்கு சின்ன சைக்கிள் வாங்கிக் கொண்டு  கொடுத்தார்.அதை வைத்துக் கொண்டு அக்ரஹார முழுதும் ரவுண்ட் அடித்தான். ஆரம்பத்தில் இரண்டு, மூன்று முறை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து கால் முட்டியில் அடி பட்டது. விசாலி விசுவின் முட்டி காயத்தை பார்த்துமனம் கலங்கினாள்.காயத்தின் மேல் தேங்காய் எண்ணெய் தடவினாள்.

அக்ரஹாரத்தில் சக வயதுடைய மீதி குழந்தைகளுடன் விசு அந்த கால விளையாட்டுக்களான கோலி(அதில் முக்கியமாக பேந்தா ஆட்டம்), கில்லி தாண்டல், கிட்டிப்புள் போன்ற ஆட்டங்களையும் ஆடினான்.ஊரிலுள்ள சிவன் கோயில் குளத்தில் ஓட்டாஞ்சில்லை அடித்து அலைகள் வட்ட வட்டமாக பெருகிப்போவதை கண்டு மகிழ்வான்.

பூவரச மர இலையை பறித்து  சுருட்டி வாயில் வைத்து நாதஸ்வரம்  மாதிரி ஊதுவான். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசுவுக்கு உடலை சுத்தம் செய்ய பேதிக்கு  கொடுத்தார்கள். வீட்டின் பின்புறம் ஆமணக்கு செடி இருந்தது. அதிலிருந்து கொட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு சூடு படுத்துவார்கள்.மேலே நுரையுடன் எண்ணை  மிதக்க ஆரம்பிக்கும்.ஒரு பாத்திரத்தில் எண்ணையை சேர்த்துக் கொள்வார்கள். இதுதான் விளக்கெண்ணெய் ஆகும். காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை கொடுத்துவிட்டால் எட்டு மணியிலிருந்து பேதி ஆரம்பிக்கும். மாலை 2 மணி வரை நீடிக்கும். வயிறு முழுவதும் சுத்தமாகிவிடும். பிறகு ரசம் சாதமும், தொட்டுக்கொள்ள பருப்பு  துகையலும் ஊட்டுவார்கள். அந்தக் காலத்தில் பேதிக்கு கொடுப்பது என்பது மிகவும் முக்யமான ஒன்றாக இருந்தது. இப்போதெல்லாம் அந்த பழக்கமே இல்லை.

அதனால்தான் பெரும்பாலோர் தற்காலத்தில் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலர் வெளியே சொல்கிறார்கள்.பலர் மனதுக்குள்ளே வைத்து புழுங்குகிறார்கள். *மனச்சிக்கலை விட மலச்சிக்கல் மோசமானது.* 

இதற்கிடையில் கும்பகோணத்தில் டென்ட் கொட்டாய்(திரை அரங்கம்) வந்தது.தரை டிக்கெட்டுக்கு  4 அணாவும், பென்ச்  டிக்கட்டுக்கு8 அணாவும், சேர்(Chair) டிக்கெட்டுக்கு ஒரு ரூபாயும் வசூலித்தார்கள். ஒரு ரூபாய்க்கு 16 அணா. டென்ட் கொட்டாவுக்கு முதலில் போகத் தயங்கிய மக்கள் பின்னால் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கினார்கள்.

தரை டிக்கட் பாமர ஜனங்களுக்கு சவுகர்யமாக இருந்தது. மணலில் எச்சில் துப்ப முடிந்தது.

படம் பிடிக்கவில்லை என்றால் மணலில் படுத்து சிறு தூக்கமும் போட முடிந்தது.எல்லிஸ் டங்கன் டைரக்ஷனில், M.S, G.N.B மற்றும் சிறு களத்தூர் சாமாநடித்த சகுந்தலை படம் பிரமாதமாக ஒடியது.கர்னாடக சங்கீத ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த M.S உம் G.N.B யும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ராஜகோபலனை பார்க்க அவருடைய பள்ளி நண்பரான பரசுராமன் குத்தாலத்திலிருந்து வந்திருந்தார். நெடுநேரம் தன்னுடைய பால்ய நண்பருடன் அளவளாவிய பரசுராமன் 'ஏண்டா ராஜு. உன் பையன் என்ன பண்றான்' என்று கேட்டார் .

'நில புலன்களை பாத்துண்டு வீட்டோட இருக்கான்'  என்றார் ராஜகோபாலன். 

'F.A படிச்சிருக்கானில்லையோ' என்று கேட்டார் பரசுராமன். "அவன் F.A பஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணி இருக்கான்டா' என்றார் ராஜகோபாலன் பெருமையுடன். பதிலுக்கு பரசுராமன் 

'படித்த புத்திசாலி பையனை சும்மா வீட்டில் உக்கார வெச்சிண்டிருக்கயே' என்ற பின் 'கும்பகோணத்துக்கு அனுப்பு. நான் வேலை செய்யும் காசிராமன் டிரான்ஸ்போர்ட்டில் அவனுக்கு ஒரு வேலை போட்டு தருகிறேன்' என்றார் பரசுராமன். அவர் காசிராமன் டிரான்ஸ்போர்ட்டில் உயர் அதிகாரியாக இருந்தார். ராஜகோபால் 'யோசித்து சொல்றேன்டா' என்று கூறிவிட்டார். பின்பு இதை பஞ்சுவிடம் கூறினார். தனிமையில் இருக்கும்போது பஞ்சு விசாலியிடம் இதுபற்றி  கூறி 'உன் அபிப்பிராயம் என்ன' என்று கேட்டார்.

விசாலம் 'இதில்  நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது' என்று கூறியதோடு நிறுத்தாமல் 'உத்தியோகம் புருஷ லக்ஷணம்ன்னு எல்லோரும் சொல்றாளே' என்றாள். பெண்கள் இதுமாதிரிதான். நேராக தம் கருத்தை  தெரிவிக்க மாட்டார்கள். வெறுமனே கோடி காட்டி விடுவார்கள். புரிந்து கொள்வது, அதன்படி நடந்து கொள்வது

புத்திசாலி கணவனுக்கு அழகாகும். இல்லாவிட்டான் அவர்கள் படும்பாடு  அந்த கடவுளுக்கே வெளிச்சம். பஞ்சு ராஜகோபாலனிடம் 'என்னப்பா. நான் பரசுராமன் சாரை போய் பாக்கலாமா' என்றார்.

ராஜகோபாலன் உடன் சம்மதம் தெரிவித்தார். கும்பகோணத்தில் அவரைப் போய் பார்த்தான் பஞ்சு. 'உன்னால் எப்போ முடியுமோ அப்போ வந்து வேலைக்கு சேந்துகோ' என்று கூறினார் பரசுராமன்.ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சு காசிராமன் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதேசமயம் விசாலி அக்ரஹாரத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு ஸ்லோகம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். இலவசமாகத்தான்.

பஞ்சு வேலைக்கு சேர்ந்ததும், குழந்தைகளுக்கு விசாலி ஸ்லோகம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததும் பிற்காலத்தில் அவர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று அவர்களுக்கே தெரியாது. கடவுள் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி எல்லோருக்கும் வழி காட்டுகிறான். நமக்குத்தான் அதை புரிந்து கொள்ளும் சக்தியோ,ஞானமோ இருப்பதில்லை

மூன்று தலைமுறை -13

மூன்று தலைமுறை -13

ஆயுஷ் ஹோமம்  முடிந்து சில  மாதங்களுக்குப் பிறகு  பஞ்சாபகேசன் குடும்பமும், விசாலி குடும்பமும் பழனிக்கு செல்லலாம் என்று தீர்மானித்தார்கள். ராஜகோபாலன், மங்களம், பஞ்சாபகேசன், விசாலி, சுந்தரேசன், ஜானகி ஆகியோர் குழந்தை விசுவுடன் கும்போணம் வரை சென்று அங்கிருந்து பஸ் மூலம் திண்டுக்கல்  சென்றார்கள். திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு வேறு ஒரு பஸ்ஸில் செல்ல வேண்டியிருந்தது.

பழனியில் தண்டாயுதபாணியின் தரிசனம் மிக அருமையாக கிடைத்தது. மேலிருந்து கீழே இறங்கி வந்து உணவருந்தி விட்டு பின்பு ஒரு குதிரை வண்டி வைத்துக்கொண்டு பூம்பாறை சென்றார்கள்.

ஏற்கனவே குழந்தை வேலப்பருக்கு  வேண்டிக் கொண்டபடி வெள்ளியில் தொட்டில் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

விசாலி கோவிலை சேர்ந்தவர்களிடம் வெள்ளி தொட்டிலை கொடுத்துவிட்டு பின்பு குழந்தை வேலப்பரை  தரிசித்து விட்டு பழனி திரும்பி அங்கிருந்து வந்த மாதிரியே திண்டுக்கல், கும்பகோணம் வந்து சொந்த ஊரை அடைந்தார்கள். இதுதான் விசுவிற்கு  முதல் நெடுந்தூர பயணம். பகல் வெயிலிலும், அதிகாலை குளிரிலும் அலைந்ததால் விசுவிற்கு இரண்டு நாட்கள்   லேசாக சளி,இருமவ் மற்றும் ஜுரம்  இருந்தது. தோட்டத்திலுள்ள கற்பூர வல்லி இலையை அரைத்து கஷாயம் செய்து கொடுத்த பிறகு விசுவுக்கு உடம்பு சரியாக போய்விட்டது.

பின்பு  கொஞ்ச நாள் கழித்து பஞ்சு  விசாலி,விசுவுடன் கும்போணத்திற்கு சென்று  போட்டோ(கறுப்பு,வெள்ளை) எடுத்துக் கொண்டார்.ஒரு வாரம் கழித்து பஞ்சு கும்போணத்திலிருந்து அந்த போட்டோவைப்ரேம் போட்டு  வீட்டில் ஹாலில் மாட்டினார்.குழந்தை குதிரையின் மேல் இருப்பது மாதிரியும் போட்டோ எடுக்கப்பட்டு,ப்ரேம் போடப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும்  செய்வதுபோல பஞ்சுவும்  விசுவுக்கு  மூன்று கால்கள் கூடிய மர வண்டி (தள்ளு வண்டி) வாங்கி கொடுத்தார்.மரத்தில் செய்து  கலர் அடிக்கப்பட்ட மரக்குதிரையும்  வாங்கி கொடுக்கப்பட்டது.அதன் மேல் உட்கார்ந்து விசு அழகாக பயமில்லாமல் சவாரி செய்ய ஆரம்பித்தான். வண்டி ஓட்டும் போது சில சமயம் கீழே தடுக்கி விழுவான். எழுந்து அழுவான். இதை பார்த்த விசாலிக்கு பிராணனே போவது போல இருக்கும்.ஒரு நாள் விசாலி வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றடியில் ஆட்கள் துவைத்து கொடுத்த துணிமணிகளை அலசிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் விசு அவள் புடவையை பிடித்தவாறு நின்று கொண்டிருந்தான். கொஞ்சம் தொலைவில் தோட்டத்தில் ஒரு பெரிய பாம்பு படமெடுத்திருந்தது. விசாலி அதை கவனிக்கவில்லை.

விசு பாம்பை பார்த்து  கத்தி, கூச்சல் போட்டான். பயத்தில் அவன் உடம்பு வெட வெட வென நடுங்கியது.பாம்பு என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது. அதை பார்த்த போது ஏற்பட்ட பயம் குழந்தைக்கு  வெகு நேரம் இருந்தது. குழந்தையை தூக்கிக்கொண்ட விசாலி 'ஒண்ணும் இல்லடா கண்ணா.அது நம்பள ஒண்ணும் பண்ணாது. எல்லாம் சரியாயிடும்' என்று சொல்லி  விசு நெற்றியில் விபூதி இட்டாள். அன்றிரவு விசுவுக்கு நல்ல ஜுரம் வந்துவிட்டது. கிட்டத்தட்ட நாலு நாட்கள் அதிகமான ஜுரம். துணியை தண்ணீரில் நனைத்து நெற்றியில் பற்று(பத்து) போட்டார்கள். நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது.

கஷாயம் கசந்ததால் விசு அதை துப்ப ஆரம்பித்தான். ஒவ்வொரு வேளையும்  கஷாயம் கொடத்தவுடன் ஒரு சிட்டிகை சர்க்கரையும் கொடுத்தாள் விசாலி.

ஒரு வாரம் கழித்து குழந்தை உடம்பு  சரியானது. கொஞ்ச நாளில் விசு பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். சில அடிகள்  நடக்கும்போது கீழே விழுவான். முட்டியில் அடிபட்டு கத்துவான்,அழுவான். இதைப்பார்த்தால் விசாலிக்கு  மிகவும் பாவமாக இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் அடம்பிடிப்பான். ஏதாவது கதையை சொல்லி சாப்பாடு ஊட்ட வேண்டி இருந்தது. இல்லாவிட்டால் தோட்டத்திற்கு  சென்று அங்கு உள்ள மரம்,செடி,மாடுகளை காட்டி சாப்பாடு ஊட்ட வேண்டி இருந்தது. சாப்பாடு ஊட்டும் போது

கதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்.கதையை 'உம்' கொட்டி ரசிப்பான்.இரவானால் நிலாவை காட்டி சாதம் ஊட்டினாள் விசாலி.

எல்லாக் குழந்தைகளைப் போல ஒன்று முதல் ஐந்து வயது வரை உள்ள காலத்தை விசு கழித்தான்.

ஐந்து வயது முடிந்ததும் அவனை உள்ளூரிலே உள்ள ஆரம்பநிலை பாடசாலையில் சேர்க்க ஏற்பாடாயிற்று. முதலில் கொஞ்ச நாட்கள் விசுவுக்கு பள்ளிக்கு செல்லவே பிடிக்கவில்லை. காலையில் பள்ளிக்கு செல்லு முன் தினமும் அழகைதான். சில நாட்கள் பொய்யாக வயிற்றுவலி, தலைவலி என்றெல்லாம் கூறுவான். தினம்தோறும் விசாலி அவனை தூக்கிக்கொண்டு பள்ளியில் விட்டு விட்டு வருவாள். பள்ளியில் உள்ளே விட்டு வெளியே வரும்போது 'அம்மா. என்னை உட்டூட்டு போகாதே' என்று கத்துவான்.  விசாலிக்கு மனம் ஒடிந்து போய்விடும். அவனை பார்க்காமலேயே வீடு திரும்புவாள். கொஞ்ச நாட்களில் இந்த நிலைமை சரியாகி விட்டது. பள்ளியில் அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அக்கால ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பலவாறான கதைகளை சொல்லி அதன் மூலம் அவர்களது கவனத்தைக் கவர்ந்தார்கள். இதற்கு பிறகு விசு ரெகுலராக பள்ளி செல்ல ஆரம்பித்தான்.

Saturday, April 1, 2023

கூடு

 54. கூடு (சிசீ7) #ganeshamarkalam

இப்பெல்லாம் கண்களை விட மூக்குக் கண்ணாடி முக்கியமாப் போச்சு. 2நாளா அதுவும் மாறி, கண்ணாடிக் கூடுதான். வச்ச இடத்தில் காணலை. படுத்துக்கரச்சே ஷெல்ஃபில் கூட்டில் மூக்குக் கண்ணாடிய மூடி வச்சுட்டுத்தான் தூங்குவன். ஆனா காணலை.

2 நாளா தேடிண்டு, ஆத்தில் ஒத்தாசைக்கு கூப்பிட்டுக்கலாம்னா யாருமில்லை. மூக்குக் கண்ணாடியயே கை தவறி எங்கேயாவது வச்சுட்டா தேடிப் பிடிக்க இன்னும் கஷ்டம். ஏன்னா கண் பார்வை தெளிவா இருக்காது. கண்ணாடி கைவசம் இருக்கே, கூட்டத் தேடுவதில் என்ன பிர்ச்சனை? கேப்பேள். நான் தனிக்கட்டை. எங்காம் பெரீசு. 4 பெட்ரூம், ஹால், வெராண்டானு. 2 வெராண்டா. ஒண்ணு மின்னாடி, இன்னொண்ணு பின்னாடி. முன்னாடி செருப்பு கழட்டி விட, சைக்கிள் நிறுத்தன்னு. சோபாவும், சட்டுன்னு உக்காந்துக்க. பின்னாடி வாஷிங்க் மெஷீன், இட்லி க்ரைண்டெர், சீயக்காப் போடி தூக்கு, தர்ப்பணம் செய்யர மணை இதெல்லாம் வச்சுக்க.

தனியாள்னாய்? இத்தனை எதுக்கு? வாஸ்த்தவம். இதெல்லாம் உமாவோட அமோகமா வாழ்ந்த காலத்து சமாச்சாரங்கள். நான், உமா, 2 பசங்க, 1 பொண் சேர்ந்து இருக்க வேணும்னு ஆசையா கட்டி, சாமான்கள் சேர்த்தது. இப்போ குழந்தைகள்லாம் செட்டில் ஆகி சிதறிப்போக, உமா மட்டும் மதுர மீனாக்ஷி புலாவா அனுபிச்சான்னு சொல்லாம கொள்ளாம கிளம்பினப்பரம் இதெல்லாம் வீணா கிடப்பது புரியரது. என்ன செய்ய? எனக்கு மட்டும்னு 2 ரூம் வச்சிண்டு சொச்ச வீட்ட இடிச்சுத் தள்ளவா முடியும்? இல்லை க்ரைண்டர் இன்னும் இத்யாதி சமாச்சாரங்களை தூக்கிக் கொடுத்துடுவாளா? அப்படியே வச்சபடி இருக்கு. சும்மா கிடக்குன்னும் சொல்ல முடியலை.

க்ரைண்டர் கிட்டே போனா அதை சாய்ச்சு பிடிச்சிண்டு கடைசீ விழுது உளூந்து போட்டு அரைச்சதை வழிச்சு எடுத்து பெரீய பாத்திரத்தின் விளீம்பில் தன் உள்ளங்கையை உமா தேய்ச்சுக்கராப் போலவே பிரமை. சைக்கிள் கிட்டே போனா திரும்பவும் உமா. அதை பளபளன்னு துடச்சு வச்சிண்டிருக்காப்போல். “ரோட்டில் சாணி கிடந்துதுன்னா அதில் சக்கரம் ஏறாம தள்ளீ ஓட்டிண்டு போகத் தெரியாது மனுஷணுக்கு?” ஓவ்வொரு ரூமும் ஐடமும் உமாவ ஞாபகப் படுத்திண்டு. அதுக்குத்தான் அப்பப்ப வாசப் படீல உக்காந்துப்பேன்.

கொல்ல வராண்டா கட்டரப்போ அப்பா சொன்னர், “சித்தே பெரீசா கட்டு, என்னைக்காவது ஆசைப் பட்டாயான்னா ஒரு பசுமாடு வாங்கிக் கட்டிக்கலாம். நிழலா மழையில் நனையாம உள்ளேயே”. உமா “அது சரி மாமா உங்க புள்ளை ஒண்ணும் செய்யமாட்டார், நாந்தான் அதை குளிப்பாட்டி, சாணி போட்டுதுன்னா வழிச்சு சுத்தம் செய்யணும்”. ஊருக்கு வெளீல பிளாட் வாங்கி விடு கட்டிண்டு வரப்போ மாடு வச்சுக்க ஆசை துளீர்விட்டது உண்மை. செயல் படுத்தலை. அக்கம் பக்கத்திலும் வீடுகள் வந்திட அதைப் பத்தி யோசிக்காமலே. அப்பாவே விளையாட்டுக்கு சொல்லியிருப்பார்னு. மாடு கட்டவேண்டிய இடத்தில் வாஷிங்க் மெஷீன். அதுவும் மாட்டை குளிப்பாட்டினா எத்தனை தண்ணீ சிலவாகுமோ அத்தனை கவுத்தது. பால் தரலை, பதிலா வெள்ளையா சோப்புநுரை வெளீல பாயும்.

இப்ப இதெல்லாம் மேட்டரில்லை. கூட்டைக் காணம். ஒவ்வொரு ரூமா, ஷெல்ஃபா தேடிண்டு வரலாம்னு வரேன். வாச வரைக்கும். குப்பைக் கூடையில் போட்டமோன்னு அதையும் கையவிட்டு அலசிப் பாத்தாச்சு. கிடெச்சுடும்னு நம்பிக்கை. தினம் தூங்கி எழுந்ததும் பல் தேய்ச்சு காபிய குடிச்சுட்டு கண்ணாடிக் கூட்ட தேடலாம். பொழுது போகும். ஆனா பாருங்கோ மத்தியானம் சித்தே அக்கடான்னு ஹாலில் தரைலேயே பாயப் போட்டுண்டு உடம்பை நீட்டினா அந்தண்டை பெட்ரூம் கதவு தொறந்திருந்ததோன்னோ அது வழியா பாக்கரச்சே கட்டிலுக்கு அடீல சிவப்பா ஒரு டப்பா. படவா, அங்கேயா ஒளிஞ்சிண்டிருக்காய்? கட்டிலுக்கு பக்கத்தில் தரையில் வச்சது கார்த்தாலே பெருக்கரச்சே துடப்பக் கட்டை பட்டு அடீலே தள்ளீப் போய். பெட்ரூமுக்குப் போய் தரையில் சாய்ஞ்சு படுத்துண்டு கைய நீட்டி எம்பி எடுத்துக்கரேன்.

அப்பாடா! 3 நாளா தேடியாறது. உமா இருந்திருந்தா சட்டுன்னு தேடி இந்தாங்கோன்னு தந்திருப்பள்.

படுத்துக்கரச்சே என் கண்ணாடியும் சமுத்தாய் தன் கூட்டுக்குள் போனதும்தான் திருப்தி. ஆனா பாருங்கோ தூக்கமே வரலை. கண்ணாடிக்கு கூடு மாதிரி எனக்கு இந்த வீடு ஆயிட்டாப் போலவும் அதுக்குள் நிறைஞ்சு கிடக்கும் நியாபகங்கள் அலை அலையா மனசில் வந்திண்டு. எப்படி தூக்கம் வருமாம்? உங்களுக்கு வரும்?

கடைக்குட்டி ரம்யா கொல்கத்தாவில். அவளுக்கு ஃபாரீன் போகலையேன்னு குறை. மாப்பிள்ளைக்கு சாமர்த்தியம் பத்தலைன்னு போனில் அரட்டுவள். நல்ல உத்யோகத்தில் கை நிறைய சம்பாதிச்சிண்டு இருக்கர். இவளோட படிச்சவா சிங்கப்பூரிலேயும், பேரிஸிலேயும், யூஎஸ்ஸுலேயும் கானடாவுலேயுமா. “நான் மட்டும் கொல்கத்தாவா!” வேதனை. ஆனா பொறந்து வளர்ந்து ஆளாகி, கல்யாணம்னு பண்ணிண்டு பல பண்டிகைகள் கொண்டாடி மகிழ்ந்த இந்த வீட்டுப் பக்கம் வரதில்லை. “அங்கே போரடிக்கரதுப்பா. நான் வரலை. நீ இங்கே வந்து எங்களோட 10நா இருந்துட்டுப் போ”.

பெரியவன் ராகவன் ந்யூஜெர்சீல. அங்கேயே நம்பூர் பொண்ணாப் பாத்து பண்ணிண்டுட்டான். எங்க சம்மதத்தோடத்தான். 3 வருஷத்துக்கு ஒருக்கா வருவன். சுகன்யா அமேரிகன் ஸ்லேங்கில் பெசுவள். சமுத்து. இவன் கருப்பு. அவள் அழகுக்கு இவனைப் பிடிச்சி பண்ணிண்டிருக்கான்னு ஃபீல் ஆகும். சின்னவன் சுரேஷ் சிங்கப்பூரில் இருந்தவன் இப்ப ஹாங்காங். DBSஇல் எக்ஸிக்யூடிவ். 2வருஷமாச்சு கல்யாணம் செஞ்சிண்டு. கும்மோணத்தில் பால்ய ஸ்நேகிதன் பொண். இவன் கல்யாணத்தை பாக்க உமா இல்லை. பெரியவனாவது வந்துண்டு போயிண்டு, வாட்ஸப் காலில், இவன் பேச்சு மூச்சே இருக்காது. இவன் சமாச்சாரம் சின்ன மாட்டுப் பொண் அவள் அப்பாவண்டை சொல்லி அவர் மூலமா எனக்கு வரும். எப்படியோ சௌக்கியமா இருந்தா சரீ, கண்டுக்கலை.

இவாளுக்காக பாத்துப் பாத்து கட்டின வீட்டில் நா மட்டும். பறவையெல்லாம் முட்டை போட்டு பொரிச்சு குஞ்சு வந்து அது பறந்து போனதும் அதுகளும் பறந்து போயிடுமாம். முட்டையிடன்னு ஆசையா கஷ்டப்பட்டு லோல்பட்டு இன்ன பிற விஷ ஜந்துக்கள்ளெந்து அந்த 3 மாசங்களுக்கு தங்களையும் முட்டையையும் காப்பாத்திக்கன்னு கட்டின கூட்டை அம்போன்னு விட்டூட்டு. பயன்பாடு முடிஞ்சதும் கலாஸ். நின்னு பாத்து ஒரு சொட்டு கண்ணீர் விடாமல். ஆனா நாம?

பின் வராண்டா கதவுக்கு பின்னாடி சாத்தி வச்சிருக்கும் துடப்பக்கட்டைலேந்து முன் வராண்டாவில் செருப்பு டப்பாக்குள் இருக்கும் காதறுந்த செருப்பு முதக்கொண்டு சென்டிமென்ட், கண்ணில் நீர வரவழைச்சிண்டு. நினைச்சுப்பேன் வீட்டை வித்துத் தொலைச்சுட்டு ஏதாவது அப்பார்ட்மென்டில், பக்கத்தில ஆஸ்பத்ரீ இருக்காப்போல் போயிடலாமான்னு. எங்காத்தை சுத்தி நிறைய வீடுகளாயிட்டாலும் எல்லாத்துலேயும் வயோதிகர்களே. என்னோட பழகிண்டு என்னோடவே மனை வாங்கி கட்டடம் கட்டிண்டு வந்தவா சொல்பம், புதுசா குடிவந்தவா, ஓனர் மாறிப்போய். யாரையும் தெரியல.

இங்கே என்னன்னு வச்சிருக்கு? உமாவோட ஞாபகங்களைத் தவிர? அதுவே இங்கேந்து போப்பிடாதுன்னு பிடிச்சு வச்சிண்டுடுத்தோ? குருவி மாதிரி சிறுகச் சிறுக காசு சேர்த்து பத்தாதுக்கு லோன் போட்டு நானும் அதே குருவிபோல் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கன்னு இந்த வீட்டை ஒரு கூடு மாதிரி கட்டீட்டு இப்போ இதே கூடு எனக்கு ஒரு விரும்பி ஏத்துண்டுட்ட விட்டுட முடியாத சிறையாப் போனதுதான் ஆச்சர்யம்.

கார்த்தாலே எப்பவும்போல் எழுந்து ஆக வேண்டியதை பாத்து, குளிக்கப் போலாமான்னு யோசிக்கரப்போ கோபாலன் வரர். 4வீடு தள்ளி. ஸ்நேகிதர். என் குழந்தைகளோட அவரோடதும் வளர்ந்தா. ஒரு வித்யாசம். அவர் கடைசீ பையன் சுதர்ஷன் படிப்பு வரலை, இத்தையும் அத்தையும் செஞ்சுண்டு இவரோடவே. மாட்டுப்பொண் LIC ஏஜன்ஸி வச்சிருக்கா. கோபாலன் ஆத்துக்காரிக்கு ஷுகர், மூட்டுக் கால்னு ஒரு லிஸ்ட் சொல்லுவான். கார்த்தாலே வரான்னா விஷயம் இருக்கணும். “வாடா, எங்க ஆளையே காணம், காபி போடட்டுமா?” “அதெல்லாம் வேண்டாம். பார்க்குக்கு போரேன், கூட வாயேன்”. சரீன்னு ஆத்தை பூட்டிண்டு கிளம்பரேன்

எங்கள் நகர் நல சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை அரசாங்கத்துக்கு லீஸில் கொடுத்து பார்க் மெயின்டெயின் செய்யரா. நன்னா பண்ணியிருக்கா. 8 போடரத்துக்குன்னு ஒரு இடம். அதில் 20 எட்டு போட்டான் கோபாலன். அப்பரம் பென்சில் பக்கத்தில் உக்காந்துண்டான். மூச்சு வாங்கித்து. “கொலஸ்ட்ராலில் ரெண்டு இருக்காமே நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால்? எதுன்னு தெரியலை மூச்சு வாங்கரது.” “மூட்டு உபாதைக்கு இது தேவலை.” கமென்ட் அடிக்கரேன். நிச்சயம் இதைப் பத்தி பெச வரலை. பாப்பம், அவனாவே “உன்னண்டை ஒண்ணு கேக்கணும், நீதான் சரியா அட்வைஸ் செய்வாய்.” அப்ப ஏதோ பெரீய மேட்டர்.

“ஆத்தில் வாக்குவாதம்”. “என்னத்துக்கு?” “சுதர்ஷண்கு சுயமா தொழில் ஆரம்பிக்க பணம் வேணுமாம். என் வீட்டை அடமானமோ இல்லை வித்தோ பணம் புரட்டித் தர முடியுமான்னு. அவனுக்குத் தோதா மாமியும் பேசரா. மாட்டுப்பொண் வரப்போர பணத்தை என்ன செய்யப்போரான்னு விளக்கினா.” “உன் பொண் இருக்காளே, அவ சம்மதிக்கணுமே?” “அக்காக்கு பாத்யதை இல்லைங்கரான் பிள்ளை. வக்கீல விசாரிச்சுட்டானாம். வீட்டை அடகு வைக்கலாம். இவனால் திருப்ப முடியலைன்னா தெருவுக்கு வந்துடுவமே? வித்தாலும் அதே கதி. நீதான் வழி சொல்லேன்”.

“இரு ரெண்டு 8 போட்டூட்டு வரேன். யோசிப்பம்”. எழுந்து போரேன். தலை சுத்தீத்து. என்ன கருமாந்திரமோ இதை ஏன் எல்லாரும் பொடரா? ஆனா கோபாலன் பிர்ச்சனைக்கு தெளிவா யோசிக்க முடிஞ்சது.

“பையன் தொழில் செய்யணும்னா பேஷா செய்யட்டும். அரசாங்கம் நிறைய உதவி செய்யரா. பேங்கில் பணம் தருவா. இவன் அங்கே போய் கேக்கணும். அவாளுக்கு திருப்பிக் தரணும், உனக்கு தரேண்டாம். நன்னா புரிஞ்சி வச்சிருக்கான். ஜாக்கிரதை. அதாவது இப்பவே நீ கொடுக்கப்போர பணம் மூழ்க வாய்ப்பு தெரியரது. ரெண்டாவது நீ வித்தேன்னா பாதி உன் பொண்ணுக்கு தரணும். அவள் கையெழுத்தில்லாம விக்க முடியாது. அவள் என்ன பாவம் செஞ்சா உன் சொத்தில் தன் பங்கை விட்டுத் தர? அவளை வஞ்சித்தாயானால் மஹா பாபம். அது கிடக்கட்டும். நன்னா வாழ்ந்து கொண்டாடின வீடு உன்னோடது. என் கண் முன்னாடி பல விசேஷங்களை அங்கேதான் நடந்தினாய். உசுரோட இருக்கப்பவே எப்படி தூக்கிக் கொடுக்க? அவசரப்படாதே”.

“எனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. மாமி என்ன சொல்ரான்னா இந்த சிமென்டும் கல்லும் கட்டீண்டு என்ன செய்யப் போரேள், எப்ப இருந்தாலும் இவாளுக்குத்தான், அதை இப்பவே கொடுத்து ஒத்தாசை செஞ்சா என்னனு”. “இப்படித்தான் விதவிதமா பினாத்துவா. கடைசீலே உன் இஷ்டம்னுட்டு அந்தண்டை போய் மூக்கப் பிழிவா. ஜாக்கிரதை. நினச்சதை சாதிக்காம விடமாட்டா”. பேசிண்டே இருக்கேன் லேசா நெஞ்சை வலிக்கராப்புல படவே “கோபாலா, ஆத்துக்கு போலாம். படுத்துக்கணும்போல இருக்கு.” “என்ன பண்ரது, டாக்டர்கிட்டே போவமா?” “அதெல்லாம் வேண்டாம்”.

வலிச்சது வாயுத் தொல்லை இல்லைன்னு தெரியும். பாப்பம். சாயங்காலத்துக்குள் இன்னொருக்கா பண்ணித்துன்னா அட்மிட் ஆகிடலாம்னு. ஆனா நல்லவேளை அப்படி ஆலை. ஒண்ணு மட்டும் நன்னா விளங்கித்து.

கண்ணாடி முன்னாடி நின்னுண்டு என்னையே பாத்துக்கரேன். பனியனை கழட்டீட்டு. கண்முன்னாடி கண்கூடாத் தெரிஞ்சது இன்னொரு கூடு. எலும்பும் தோலுமா. பூணலை ஒதுக்கிப் பிடிச்சிண்டு எந்த பொசிஷணில் ஒய்யாரம நின்னாலும் ஒரே மாதிரித்தான் இருக்கு. இதுவும் ஒரு கூடு. வாடகைக்கு எடுத்துண்டு வந்தமா? ஆனா அதீத சொந்தம் கொண்டாடிண்டிருக்கம்.

கூடவே வச்சுப்பமான்னா? இதையும் ஒருநா விட்டூட்டுப் போகத்தான் போரம். எப்போன்னும் விட்டுட்டப்பரம் போக்கிடம் எதுன்னும் தெரியல.

பால்

 44. பால் (சிசீ 9) #ganeshamarkalam

தினம் கார்த்தால எழுந்துண்டா காபி கேக்கறது. அதுக்கு புதுப் பால்தான். இப்படி தினம் பால் தேடி அலையும் ஜனங்களுக்கு என்ன சொல்லி வச்சிருக்கா? இன்னிக்கு செத்தா நாளைக்குத்தான் பாலாம். ஏன்? கண்டுபிடிக்கணம்.

விநோதமா தோணும். வித்யாசமா யோசிப்பமேன்னு நினைக்கரவன். மத்தவாள்லேந்து டிஃபரென்ட்டுன்னு காமிச்சுக்க. இந்தமாதிரி சிந்தனையெல்லாம் எப்போன்னா கார்த்தால மார்னிங்க் வாக் போரச்சே. கார்த்தால போனாத்தான் மார்னிங்க் வாக், அழுத்தந் திருத்தமா சொல்லணுமா? கேப்பேள். வாக் போரேன்னுட்டு சாயங்கலாம சிலர் போவா. தெரிஞ்சவா எதிர்பட்டா “மார்னிங்க் வாக் போரேன்”, விசுக் விசுக்குன்னு போயிண்டேயிருப்பா. கேட்டவன் கேணையனோன்னு படும்.

இப்படியெல்லாம் பேசரதை வச்சு லூஸுன்னு நினைக்கலாம். ஸ்ரீரங்கத்துல பலருக்கு அப்படித்தான். பாருங்கோளேன்! இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலுங்கரா. இந்த வாக்கியத்தை சமீபத்துல எங்கே கேட்டேன்? யோசிக்கரேன். சாரங்கபாணி சாஸ்த்ரிகளாத்தில் ஒரு துக்கம். விசாரிக்கலாம்னு போனப்போ வந்திருந்தவா பேசிண்டிருந்தா. கங்கா ஜலம், பால் இப்படியெல்லாம் வாயில் விடுவதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷனாப்போச்சு. கொரானா காலத்துல யார்க்கு என்ன காரியம் ஒழுங்கா நடந்தது? எதாவது அசம்பாவிதம்னா உடனே டாக்டர் செர்டிஃபிகேட், போய்ச் சேர்ந்தவரோட ஆதார் கார்ட் அப்படீன்னு தேடக் கிளம்பிடுவம். அதுக்கப்பரமாத்தான் அபரகாரியத்து சாஸ்த்ரிகள். சொந்தக்கு சொல்வது அப்பரம், ஆன்லைன் க்ரிமடோரியம் புக்கிங் முக்கியம்னு மாறிடுத்து!

யோசிச்சுண்டே நடந்து வரேன். தெற்கு சித்திரை வீதி மூலையில் அனுமார் கோவில் கிட்டக்க எங்காம். ரெம்ப வருஷமா இருக்கம். கிளம்பி பிரதக்ஷணமா 4 சித்திரை வீதியையும் வலம் வருவேன். ஒரு சுத்து ஒரு கிமீ, 3 தடவை செய்யலாம். பெருமாள வலம் வந்தாப் போலவுமாச்சு. புண்யத்துக்கு புண்யம், ஷுகரும் குறையும். ஸ்வீட் பண்ணச்சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவதை விட்டாச்சு. சுந்தரவல்லிக்கும் முடியல. வயசாகிடுத்தோன்னோ?

இந்த பால் மேட்டர் ஏன்? வடக்கு பக்கம் வந்துட்டதும் குண்டலம் ரங்கமஹால்கிட்டக்க குப்பைத்தொட்டி. பசு ஒண்ணு மேய்ஞ்சிண்டு. தன்னோட யெளவன காலங்களில் நிறைய பால் கொடுத்திருக்கும். இப்போ அதை வச்சு காசு பண்ண முடியாதுனுட்டு அவுத்து விட்டூட்டான். எப்படியாவது பிழைச்சுப் பொட்டம்னு. பால் வத்திபோன பசுக்களை இப்படித்தான். அது ப்ளாஸ்டிக்கை மென்னுண்டு. எப்போ பசுக்கு சம்ரக்ஷனை குறைஞ்சு போயிடுத்தோ அப்போல்லாம் நம்மை கெட்ட காலம் சூழ்ந்துடுத்துன்னு வச்சுக்கலாமாம். அடுத்த ஸ்டேஜ் இது. குப்பை மேட்டில்தான் ஆகாரம் பாத்துக்கும்படி ஒரு நிலமை பசுக்களுக்கு நாம ஏற்படுத்திட்டம்னா கலி முத்திப் போச்சுன்னும் உலகம் தன்னையே அழிச்சுக்கும் காலம் கிட்டக்க வந்துடுத்தாம்.

ராகவன், ரிடயர்ட் தாசில்தார், பென்ஷனர், மாசம் 12000 வரும், வீட்டு வாடகையில்லை, மருந்து சிலவுமட்டும் 3000னு இருக்கப்போ இந்த மாட்டை ஓட்டிண்டு போய் வச்சுண்டு என்னத்தை செய்ய? யோசிச்சுண்டே வந்துட்டேன். செய்யணம்னு நினைக்கர சிந்தனையாவது மிஞ்சியிருக்கே! அடுத்த சுத்தில் மாட்டைக் காணலை. வேற தொட்டிக்கு போய்டுத்தோ! நம்மூரில் அதுக்கா பஞ்சம்?

ஆத்துக்கு வந்து கிளிச்சு சாப்டூட்டு பேப்பர முடிச்சுட்டப்பரம் மத்தியானமா ஒரு போன். கோவில்லேந்துதான். தெரிஞ்சவர், மூலவர்க்கு சேவகம் செய்யும் கோவிந்து மாமாவோட மச்சினன் சீனுவாசன். கோவில் ஆபீஸில் கணக்கனா இருக்கான். “என்னடா சீனிவாசா! அத்தி பூத்தாப்போல் போன் செய்யராய்?” அத்தி பூத்ததை பாத்ததில்லை. சொல்ரதுதான். “சார் அமேரிக்காவுலேந்து ட்யூரிஸ்ட் வந்திருக்கா. கோவிலப் பத்தியும், இன்ன பிற விஷயங்களையும் யார்கிட்டேயாவது பேசித் தெரிஞ்சுக்கணம்னு ஆசைப்படரா. உங்களப் பத்திச் சொன்னதும் எப்போ மீட் செய்யலாம்னு கேட்டா. என்ன சொல்லட்டும்?” மணி 2. சாப்டாச்சு. திண்ணைல கிடப்பேன். “வரச் சொல்லேன், உக்காந்து பேசலாம் கோவில சுத்திக் காமிக்கரதெல்லாம் முடியாது, அதை நீ பாத்துக்கோ”. “சரி மாமா அழைச்சிண்டு வரேன். ஃபில்டர் காபி கேப்பா. கொடுப்பேளோன்னோ?” “அதுக்கென்ன? மாமிக்கு முடிஞ்சா பஜ்ஜியும் செஞ்சு தருவள் உபசரிப்பு இல்லாமலா?”

மாமியைக் கூப்பிட்டு சொன்னதும் “பேஷா வரட்டுமே!”. “பால் இருக்கோடீ?” “2 பாக்கெட் தயிருக்கு வச்சிருக்கேன். பாத்துக்கலாம். எத்தனை பேராம்?” “அதைக் கேட்டுக்கலையே? வரட்டும் பாப்பம், சீமாச்சும் கூட வரான், அவனையே ஓசைப்படாம கடைக்கு அனுப்பிச்சுடலாம்!.” பாக்கட் பால் எப்பவும் கிடைக்கும்.

திரும்பவும் பால் பத்தின சிந்தனை. பாருங்கோ அனுதினமும் எத்தனை சமாசாரங்களுக்கு பால் அவசியமாப் பொய்டுத்து? ஆனா இன்னைக்கு செத்தா நாளைக்குத்தான் பாலாம். அது ஏன்னு கண்டுபிடிக்கணம்.

சீமாச்சுவோட வந்தது 45 வயசு மதிக்கத்தக்க அமேரிக்கப் பெண். சல்வார் கமீஸ். வேடிக்கையா பட்டது. ஏன்னா அவரே அத்தனை வெளுப்பு. ரத்தசோகை வந்தாப்போல். ஆங்காங்கே முகத்துல சன்பேர்ண். இதுல லைட் கலரில் எம்ப்ராய்டரி செஞ்ச உடுப்பு. எப்படிப் போட்டுக்கணம்னு தெரியாம போட்டுண்ட துப்பட்டா. நானா எழுந்துபோய் அத சரி செய்ய முடியும்! கார்லேந்து இறங்கினதுலேந்து எங்காத்து திண்ணை வரைக்கும் தெருவைப் பெருக்கிண்டே!

பேர் கேதரினா. இல்லினாயிஸாம். பால்பண்ணை நடத்தராளாம். ஒண்ணும் பிடிக்கலைனு ஸ்பிரிச்சுவல் ட்ரிப்பு போட்டுண்டு கிளம்பி வந்துட்டாளாம். மதுரை, திருவண்ணாமலை பாத்தாச்சாம். இப்போ ரங்கநாதர். “இத்தனை பெரீய கோவிலப் பாத்ததேயில்லை. உங்கூரில் எல்லாம் பிரம்மாண்டம். எங்கே பாத்தாலும் கோவில். ஸ்ரீரங்கநாதர் ஸ்டோரி தெரிஞ்சுக்கணம்”. சொல்வதை ரிக்கார்ட் செய்யட்டுமான்னு கேட்டுக்கரா.

திண்ணையிலேயே உக்காந்துக்க சொல்லி குடிக்க காபி எப்படிப் போட்டா பிடிக்கும்னு கேட்டுண்டு எல்லாம் விளக்கிச் சொல்ரேன். ரங்கநாதரைப் பத்தியும் இந்த கோவிலப் பத்தியும் மாசக்கணக்கா சொல்லிண்டிருக்கலாம். கொஞ்சம் பக்தி, கொஞ்சம் புராணம், வரலாறு, லெஜெண்ட் கலவையா. தினப்படி பிரஸாதங்கள், பூஜைமுறைகள்னு.

இப்போ செய்யராளான்னு தெரியலை இருந்தாலும் மின்னே நடந்திண்டிருந்த வைபவம் ஒண்ணச் சொல்ரேன். தினம் கார்த்தால பசுவின் பின்பக்கத்தை ஸ்ரீரெங்கநாதர் பாக்கும்படியா அழைச்சிண்டு வரும் வைபவத்தைச் சொல்லி எப்படி பசுக்கள் இந்திய கலாசாரத்தோட பின்னிப் பிணைந்து கிடப்பதையும் சொல்லி ஆச்சர்யப்படுத்தினேன். “அது என்ன பின்பக்கம்?” கேப்பான்னு தெரியும். சொல்லணமே! சொல்லலைன்னா நாகரீகம் வளராத ஜந்துக்கள்னு நம்மை நினைச்சுப்பா. நம்மில் பலர் நாம கடைப்பிடிக்கும் சம்ப்ரதாயங்கள் அதன் பிண்னணியில் இருக்கும் நம்பிக்கைகளை, சயின்டிஃபிக் பின்புலத்தை விவரிக்க முடியாததால்தான் பேரைக் கெடுத்து வச்சுண்டிருக்கம்.

மாட்டின் பின்புறத்தில் அதன் கால்களினூடே தெரியும் பால்நிரம்பிய மடி லக்ஷீகடாக்ஷமான காட்சி. அதுவுமில்லாம பசு பூமாதேவியின் ப்ரதி நிதித்துவமாவும் சொல்ரம். எப்படீன்னு பூமிராஜன் ப்ரிது கதை சொல்லி விவரிக்கரேன். பூமாதேவி ரங்கநாதரோட கான்சார்ட் வேற. சொல்லீட்டு இதுக்கு முக்கிய காரணம் ஆனானப்பட்ட சுவாமியே இப்படி முதல்ல அதைத்தான் பாக்கணம்னு வச்சிருக்கான்னா நாம அந்த கோமாதாவை எப்படி பாத்துக்கணம்னு புரிஞ்சிக்கத்தான் சிலதுன்னும்.

அமேரிக்காவுல இன்னும் பல ஐரோப்பிய நாடுகள்ல இப்போல்லாம் நிறைய ஆசிய நாடுகள்லேயும் பசுவை நன்னா வளர்த்துவிட்டு அடிச்சுத் திங்க தோதுப்பட்ட மாமிசமாத்தான் நினைச்சு சம்ரக்ஷனை செஞ்சாரது. ஆனா அதுலேந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் நமப்ளோடது. அதை புரிஞ்சுக்க அவாள்லாம் ஏன் முயற்சி செய்யப்போரா? நாம சும்மாவானுத்துக்கும் வாய் வலிக்க சொல்ரது வேஸ்ட்னு பட்டது. ஆனா கேதி கேட்டது விசேஷமா பட்டது

“வர வழீல உங்கூரில் மாடு தெருவில் அலைஞ்சீண்டு குப்பையில் மேய்ஞ்சிண்டு இதெல்லாம் நீங்க சொல்வதுக்கு ஆப்போஸிட்டா பட்டது, இயற்கையான சூழலில் மாட்டை நீங்க பேணுவதை பாக்கமுடியுமா?” சீமாட்டி எனக்கு வச்ச சேலஞ்ச்! இப்ப என்னடா செய்ய? சீமாச்சு முகத்தை பாக்கரேன். “இருக்கு சார் போலாம், வாங்கோ! வந்த கார்லேயே அழைச்சிடு போரேன்.”. அதுக்குள்ள காபியும் சுந்தரவல்லி ஆசையா பிழிஞ்ச ரிப்பன் பகோடாவும் வர சாப்டூட்டு கிளம்பினம். “ராகவன் சார் நீங்க அவாளோட பின் சிட்டில் உக்காந்துண்டு வாங்கோ. நான் ட்ரைவரோட உக்காந்துக்கரேன்”. வேஷ்டியும் வெத்து உடம்பாவும் மேலுக்கு அங்கவஸ்த்திரத்தை மட்டும் சுத்திண்டு நெத்தீல திருமண்ணோட அப்படியே ஏறிண்டவனை அவள் ஆச்சர்யமா பாக்கலை. சுந்தரவல்லியைவிட சின்னவள். அவளே கண்டுக்கலை. அப்படின்னா நாம நிச்சயம் வயசானவனா தெரியரம். ஜிம்மில் சேருவமா? வாக் வேகமா நடக்கணம்.

எங்கே போப்போரம்? காவேரிப்பாலம் கடந்து முசிரி ரோடுல திரும்பிட்டான். 5கிமீ வந்ததும் முத்தரசநல்லூர். ஊருக்குள் வளைஞ்சு வளைஞ்சு மண்ரோடா வந்தா லக்ஷ்மி-நாராயணப்பெருமாள் ஆலயம். எதுக்க குடிசை. 2 பசுமாடு. சின்ன குடும்பம். வெள்ளையும் ப்ரவுன் நிறமுமா ஒரு மாட்டை 25 வயசு மதிக்கத்தக்க குடியானவப்பெண் அலுமினியப் பாத்திரத்தில் பாலைக் கறந்துண்டு. ஒருபாத்திரம் ஏற்கனவே ரொம்பி. இன்னொண்ணு பாதி ஃபுல் இன்னும் பால் பீச்சி அடிச்சுண்டு. எத்தனை லிட்டர்னு கணக்கெடுத்தா கண் பட்டுடுமே!. ஒரே மாடா இத்தனை கொடுத்திருக்கும்? இன்னொரு மாடு தூரக்கன்னா கட்டி வச்சிருக்கு! கறந்திண்டிருக்கும் மாட்டை கட்டலை அதுவே தன்னிச்சையா பெண்ணுக்கு ஒத்தாசையா ஆடாம இருப்பது அற்புதமான காட்சியா.

“உங்கூர்ல பெண்களே பால் கறப்பாங்களா?” யெஸ்! ஷி இஸ் எ கெள கேர்ல்!” அந்தண்டை கோட்டாயில மாட்டுக்கு தீவனம் நிறைய கிடக்கு. கறந்துட்டு குப்பை மேட்டுக்கு தொறத்தப் போவதில்லை. மாட்டோட கண்டிஷணைப் பாத்தா நிச்சயம் நல்ல கவனிப்போடத்தான் பாத்துண்டாரதுன்னும் புரியும். சீமாச்சு சரியான இடத்துக்குத்தான் அழைச்சிண்டு வந்திருக்கான். இவளுக்கு பெரீய மாட்டுப் பண்ணையா காட்டணம்னா இங்கே எங்கே? இப்படித்தான் சின்னச் சின்னதா காமிக்கலாம்.

பாலைக் கறந்து முடிக்கரவரைக்கும் நாங்களும் அவளை டிஸ்டர்ப் செய்யலை அவளோட கவனமும் சிதறலை. அப்பரம் சீனுவாசன் கிட்டக்கபோய் வந்த விஷயத்தைச் சொல்ல சட்டுன்னு கயித்துக் கட்டில் ஒண்ணக் கொண்டுவந்து போடறா. காந்தம்மான்னு பேராம். வீட்டுக்காரர் சித்தாளாம். இவள் மாடுகள பாத்துக்கரா. பால் வியாபாரம். இன்ன பிற சமாச்சாரங்கள் அவாத்து சிலவுக்கு ஆதாரம். முக்கியமா பையன் ஸ்கூல் படிப்புக்கு. நாங்க பார்த்த மாடு கல்யாணி. உள்ளே இருப்பது கமலா. “வீட்டுல ஒருத்தவங்கபோல பழகும் சார்”. நிச்சயம் ரெண்டும் அவாத்துல மின்னே வாழ்ந்த பெண்களோட பேராத்தான் இருக்கணம், ஞாபகார்த்தமா. எல்லாத்தையும் கேதிக்கு சீனிவாசன் சொல்ரான்.

“எல்லா மாட்டையும் இப்படி கவனிச்சுக்கத்தான் எங்க தர்மம் சொல்லிக் கொடுத்திருக்கு. ஆனா நகரமயமாக்கினதும், இன்ன பிற விஷயங்கள், குறிப்பா டெக்னலாஜிக்கல் டெவலப்மென்ட், விவசாயம், கிராமப்புர வாழ்க்கை நலிவடந்தைதும் இப்படி பல காரணங்களால் பசு ஸம்ரக்ஷணை முடியாம இப்போ  வெளிநாட்டுலேந்து இறக்குமதி செஞ்ச பால்பவுடரையும், சோயாபீன்ஸ் ரசத்தையும் பாக்கெட்டில் போட்டு அதை வாங்கி உனக்கு ஃபில்டர் காபின்னு கொடுத்தாச்சு!” சீனிவாசனே போட்டு உடெச்சுட்டான். காபி கொடுத்த எனக்கு அவமானமாப் போச்சு. 

“ஆனா இப்படி ஒண்ணு ரெண்டூன்னு மாடுங்களை வச்சு பராமரிப்பது எகனாமிக்கலி வையபிளா?” பதில் நாங்க எப்படி? காந்தம்மா முகத்தை பாக்கரம். அவள் BSc வரைக்கும் படிச்சிருக்கான்னு சொல்லீட்டு இதுக்கு பதில் நான் சொல்ரேன்னுட்டு ஆரம்பிக்கரா.

“பெருமாள் வசிச்ச இடம் கோகுலம். இந்திய தெசத்தை கோலோகம்னு சொல்லுவாங்க. கிருஷ்ணன் கோபாலன். நல்ல வேளை கோதுலி நேரம். பசுபரிபாலனம் பின்னாடி ஒரு சின்ன கூட்டுக் குடும்பத்தோட எகனாமிக் சர்வைவலே அடங்கியிருக்கு. அப்பெல்லாம் பசுவும், அதாவது கெள அதைத் தவிர்த்து இன்ன பிற டொமெஸ்டிக் அனிமல்ஸ் சேர்ந்தே குடும்பமா வாழந்திருக்காங்க. ஒரு ஜீவராசி இன்னொரு ஜீவராசிக்கு உதவிண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தா நாம செய்யும் விவசாயம் மூலம் கிடைக்கும் உபரி விஷயங்களை வச்சே பசு பரிபாலனம் நடந்துடும். பசு கொடுக்கும் சாணி நல்ல எரிபொருள். சுற்றுப் புற சூழலை பாதிக்காத ஃப்யூயல். வேறோண்ணும் விளையலைன்னாலும் கறந்த பால் மனுஷங்கள காப்பாத்திடும். இன்னித் தேதிக்கு இந்த 2 பசு கொடுக்கும் பாலை எங்களுக்குப் போக மிச்சத்தை விற்பதால் வரும் வருமானத்துல நாங்க 4 பேர் ஆரோக்யமா உயிர் வாழலாம். எங்களுக்கு தெரிஞ்ச இந்த எகனாமிக்ஸ் உலகலாவிய சரிவு ஏற்பட்டாலும் பாதிக்கப் படாது”.

கேதி அசந்துபோனா. நல்லதோர் விஸிட்டா முடிஞ்சது அந்த பயணம். காந்தம்மா கொடுத்த திக்கான மோரை அடிச்ச வெய்யலுக்கு பெரீய டம்ப்ளரில் ரெண்டுவாட்டி கேட்டு வாங்கிக் குடிச்சம். கார்கிட்டே போனதும் காந்தம்மாகிட்ட என் சந்தேகத்த கேக்கரேன். 

“அதுவா சார். இன்னைக்கு செத்தா நாளைக்கு தகனம், சாம்பலே மிஞ்சும். வாழ்நாப்பூரா மாட்டுப் பால குடிச்சு வளர்ந்தவங்க சாம்பலாக் கிடக்கையில கொஞ்சம் பாலத் தெளிச்சு வைப்பம். குளிர்ந்து போய்ச்சேரட்டும்னு செய்வம்!”