Thursday, July 2, 2020

அனாமிகா

அனாமிகா
- மனதை தொட்டுவிடும் கதைகள் (10)  #ganeshamarkalam

அம்புஜம், 38 வயது, மணமாகாதவள். இந்த காலத்துலே இது பெரிய மேட்டர் இல்லை, அவள் கல்யாணம் பண்ணிக்காம இருந்துடலாம்னு முடிவு பண்ணியிருக்கலாம். அனால் அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. தான் பாக்கிறத்துக்கு அழகா இல்லையேன்னு.

5அடி, 4 அங்குலம், கட்டையான தேகம், நிறம் கருப்பு, கீழ்ப்பல் கொஞ்சமா கோணல் ஆங்கிலம் பேச தெரியாது. அவள் படிச்சதெல்லாம் கவர்மேன்ட் ஸ்கூலில் தமிழ் மீடியம். காலேஜ்லே புஸ்தகத்தை வச்சுண்டு ரொம்ப கஷ்டப்பட்டா. கடவுளுக்கும் அவர் ப்ரொஃபேஸருக்கும் மட்டும்தான் தெரியும் அவ எகனாமிக்ஸ்லெ எப்படி பட்டம் வாங்கினான்னு. இந்தியன் வங்கிலே வேலையிருந்தாலும் அவ சமூக வாழ்க்கை நிலைகுலைந்து கிடக்கு. அப்படி ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கலேன்னுதான் சொல்லணும்
இருக்கிர சில நண்பிகளும் மத்தியான சாப்பாட்டுக்குதான் இவளை பார்க்க வருவா. வாரக்கடைஸீன்னா தனியா ரூமுக்குள்ளேயே. கூட்டம் அலை மோதுர பஸ்ஸுலே கூட யாரும் அவ மேல உரஸமாட்டா. அவளை பெத்தவா அவளுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணியும் வரன் கிடைக்கலன்னுட்டு, ஜாதகத்துலே ஏதொ கோளாருன்னு விட்டுட்டா. அவளே தெடிண்டு சமாளிச்சுடுவான்னு ஒரு நம்பிக்கையோட.

40 வயஸு தாண்டறத்துக்குள்ள இதுக்கு ஏதாவது பண்ணிடணும்னு அம்புஜம் முடிவுக்கு வந்தா. “அனாமிகா”ங்கிர பேரில் FBலே ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணினா. அதில் பழங்காலத்து தெலுங்கு சினிமா நடிகையோட 35 வயசு ஃபோடோவை, இந்த நடிகையை யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு போட்டாச்சு. ரெண்டே நாள்லெ 25 பிரெண்ட் ரெகுவஸ்ட். அதுலே அஞ்சை ஒத்துண்டாச்சு. ராஜேஷ் தான் அவளுக்கு பொருத்தமா இருப்பான்.

ராஜேஷ் நல்ல உயரம், ரொம்ப அழகா, கோதுமை நிறம். 43, அனால் கல்யாணம் ஆகலை, அண்ணா யுனிவர்ஸிடிலே உடற்பயிர்சியாளராம். 11ஆவது பிரெண்ட் ரெகுவஸ்ட் இவனோடது. 11 இவளோட லக்கி நம்பர். அவன் நிறைய ஃபோடோ அனுப்பியிருந்தான். அதோட இவள் நேரம் சிலவிட ஆரம்பித்தாள். அந்த போடோ தூங்கப்போரச்சே அவளை என்னென்னமோ செஞ்சது. ராஜேஷ் சாட் செஞ்சப்போ ரொம்ப அமரிக்கையா, பணிவா இவள் சௌந்தர்யத்தை புகழ்ந்தான், நம்பளை சேத்துவச்சது வெங்கடேச பெருமாளாதான் இருக்கும்னு வியந்தான். அவன் வீடியோ சாட்டுக்கு வரியான்னு கேட்டப்போ இவ இப்போ வேணாம், என் பக்கத்துலே அம்மா படுத்திண்டிருக்கா, நான் உங்களோட பேஸரது தேரிஞ்சா கோவிச்சுப்பா அப்படின்னுட்டா. இவ அப்பிடி சொன்னது அவனுக்கு அவ மேல இன்னும் வாஞ்சயை அதிகப்படுத்திடுத்து.

இப்போல்லாம் மணிக்கொருதடவை சாட் பண்ரா. காதல், முத்தம், கட்டி அணைச்சுக்கறது இத்யாதி விஷயங்களுக்கெல்லாம் இவா கோட் வோர்ட் வச்சுண்டுருக்கா. இந்த வாட்ஸப் என்க்ரிப்ஷனையெல்லாம் நம்ப முடியாது.

ரொம்ப சீக்கிரமே அவா ஒரு தனி உலகத்தில் மாய கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சாசு. ராஜேஷுக்கு ஒரு பையன் ஒரு பெண் குழந்தை வேணுமாம். இவளுக்கோ பையன்கள் மட்டும். இவ மாதிரியே இவ போண்ணூம் பொறந்துட்டா, அதன் கஷ்டம் இவளுக்குத்தான் புரியும். அவளுக்கு கூட்டு குடும்பம், ராஜேஷின் பெற்றோர்களுடன் இருப்பது பிடிக்கும்னு சொல்லிட்டா, அவனுக்கு இதில் அவ்வளவு ஈடுபாடில்லை. ரெண்டுபேரோட பிறந்த நாட்கள், FBஇல் மீட் பண்ணின நாள்னு எல்லாத்தையும் கொண்டாட அரம்பிச்சு, அதுக்கு ஒருத்தருகொருத்தர் அட்ரெஸ் கொடுத்துகாமையே பரிசு அனுப்பிச்சுண்டு. 

அனாமிகா ஒருநாளைக்கு, போறும் அவனை மீட்பண்ணி உண்மையை சொல்லிடணும்னு தீர்மானிச்சா. தனக்கு கணவனா வரபோரவனிடம் இன்னும் உண்மையை மறைக்க மனசு வரலை. ரஜேஷ் பாவம். உண்மையான அம்புஜம் வெளியே வரட்டும்.

சந்தொஷத்துல திக்கு முக்காடிப்போன ராஜேஷ் அவளை தாம்பரம் ஸ்டேஷனில் மீட் பண்ண வரேன்னு உடனே ஒத்துக்கிரான். சனிக்கிழமை 3 மணிக்கு பாங்க்லே பெர்மிஷன் போட்டுண்டு அவ செங்கல்பட்டுலேந்து டிரைன்லெ வந்துடுவாளாம். ஃபாஸ்ட் லோகல் நிக்கிற ப்ளாட்பாரத்தில் மீட் பண்ணலாம்னு. அப்புரம் சங்கீதாவுலே சாபிடலாம்னு அவ ஐடீயா. ஏனொ தெரியலை பில்லை ரெண்டுபேறும் பகிர்ந்துக்கலாம்னு சொல்லிட்டா. அப்படின்னாத்தான் வருவேன்னு அவ சொன்னதாலே இவனும் ஒத்துண்டுட்டான். நான் உன் ப்ரொஃபைல்லெ இருக்கிர படத்தைவச்சு உன்னை கண்டுபிடிச்சுடுவேன்னு அவன் சொல்ரான். அதுக்கு இவ விளையாட்டா – எல்லாம் நிஜ வாழ்க்கையில் அதே மாதிரி இருக்காதுன்னு சொல்லிட்டு – தான் வரும்போது இந்த வார ஆனந்த விகடன் கையில் வச்சிருப்பேன்னு சொல்ரா.

சொன்னபடி ரயில்லேருந்து இரங்கரச்சேயே பென்ச்லே ராஜெஷ் உட்கார்ந்திருக்கான். கரெக்டா லேடீஸ் கம்பார்ட்மென்ட் வந்து நிக்கிர இடத்துக்கு நேரா. ராஜேஷ் அவன் போடோவில் பார்த்ததைவிட ஒரு மடங்கு இன்னும் அழகா அங்கேயும் இங்கேயும் இவளை தன் கண்களால் தேடிண்டு. இவளுக்கு இருதய துடிப்பு நின்னுபோய் திரும்பவும் வரது. ஆனால் இவன்கிட்ட போய் நான்தான் அனாமிகான்னு எப்படி சொல்றது? தயங்கிண்டு மெல்ல போய் அவன் இருக்கிர பென்ச்லேயே இவளும் உட்கார்ந்துக்கரா. கொஞ்ச நேரத்துலே வந்த டிரைனும் போயாச்சு, கூட்டமும் கலைஞ்சாச்சு. தேடரதை விட்டுட்டு ரஜெஷ் இன்னொரு வண்டி வர வரைக்கும் பார்க்கலாம்னுட்டு போனை எடுத்து இவளை டயல் பண்ரான். 

இவ போன் அடிக்கரது.

அனாமிகாவுக்கு தூக்கி வாரிப்போடரது. இப்படி ஆகும்னு இவ தயாரா வரலை. தட்டு தடுமாரி போனை எடுக்கிரத்துக்குள்ள ராஜேஷ் பாத்துட்டான். அனாமிகாவை பாத்துட்டு ஸ்தம்பித்துபோயிடரான். அவன்கிட்டே  இருக்கிர போடோவில் இருப்பதும் இந்தப்பொண்ணும் ரொம்ப வித்யாஸம். ரெண்டு பேரும் வினோதமா, பரிதாபமா பாத்துக்கரா. அம்புஜம் எங்கிர அனாமிகாவுக்கோ அப்படியே காத்துலே கரைஞ்சு போயிடமாட்டோமான்னு இருக்கு.

ஆனால், முதல்ல சுதாரிச்சுகிறது ராஜேஷ்தான். அவன் தலையை திருப்பி, நமுட்டு சிரிப்போட பின்னாடி பென்சுலே உட்கார்ந்திருக்கிறவரைப்பார்த்து, “ராமானுஜம் சார், முன்னாடி வாங்கோ, உங்க அனாமிகாவை கண்டுபிடிச்சுட்டேன்”னு சொல்ரான். ஒரு 45 வயது மதிக்கதக்க தலை முக்காவாசி வழுக்கை விழுந்தும் பின்ன மண்டையில் மட்டும் ரெண்டுபக்கத்துலேருந்து இணைய துடிச்சிண்டுருக்கிற மாதிரி கொஞ்சம் முடியோட, கட்டையா, தமிழ்நாடு போலீஸ்காராளை வம்புக்கிழுக்கும் தொந்தியோட ஒருத்தர் முன்னாடி வந்து அனாமிகாவுக்கு கை கொடுக்க யத்தணிக்கிரார்: “ஹாய், நான் ராமானுஜம், உங்களோட FB பிரெண்ட்!”

அதுக்கப்புரமும், அடுத்த ஒரு மாசமும் நிறைய நடந்தது. அது இப்போ வேண்டாம்.

இவா ரெண்டு பேரும் இப்போ சந்தோஷமா கல்யாணம் பண்ணிண்டு இருக்கா. இவாளுக்கு ரெட்டை பெண் குழந்தைகள் அப்படியே அம்புஜத்தை உறிச்சு வச்சாப்புலெ. அவாளும் அவ படிச்ச அதே ஸ்கூலுக்குத்தான் போரா. ராமானுஜம் தன்னோட FB அக்கௌன்ட்டை முடிச்சுண்டுட்டான்.

வளர்மதி c/o ராயல் கிளினிக்

வளர்மதி c/o ராயல் கிளினிக் மனதை தொட்டுவிடும் கதை   - ganeshamarkalam

எனக்கு 76. இந்த வயசில் த்ரோட் இன்ஃபெக்ஷன் வரப்பிடாது. அது வயசைப்பாத்தா வரது? வந்துடுத்து. 

பெருமாள் டாக்டர்கிட்டே போனா 5 மாத்திரை ஒரு சிரப் எல்லாம் குடுப்பன். சாப்பிட்டா வயித்தை பிசையும். த்ரோட் சரியானாலும் பழையபடி உடம்பு நார்மல் ஆகிரத்துக்கு இன்னும் 10 நாள் ஆகும். சரியாகலைன்னா 3 நாளைக்கு கொடுத்ததை இன்னும் 2 நாள் கன்டின்யூ பண்ணுன்னுட்டு அவன் வேலையை பாப்பன். அதுனாலே போகாம சமாளிச்சுடலாம்னு மாட்டுப்பொண்ணை சுக்குக்கஷாயம் வச்சுக்கொடுக்க முடியுமான்னு கேட்டேன். அரை மணீலே வாசலில் ஊஞ்சலில் உக்காந்திண்டிருந்தவன் பக்கத்தில் “ணங்க்”குன்னு டம்ப்ளரை வச்சா.

அந்த “ணங்க்” சத்தத்தை கேட்டால் எங்காத்து விஷயமெல்லாம் அம்பலம் ஆயிடும். அதை விவரிச்சு இந்தக் கதையையும் சோகமா ஆக்கப்போரதில்லை. சுருக்கமா சொல்லணும்னா ஆத்துக்காரி 10 வருஷத்துக்கு முன்னாடி போனதுலேந்து மாட்டுபொண்கிட்டே மாட்டிண்டிருக்கேன். ஏதோ வயித்துக்கு போதுமானது அப்பப்போ வந்து தட்டில் விழும். ஆத்தில் விசேஷம்னா ஏதாவது வித்யாசமா. மத்தபடி ஒரு எக்ஸ்ட்ரா காபி, அல்லது பொரிச்ச அப்பளம், அரைச்சு, கிரைச்சு பண்ணவேண்டியிருக்கிர மிளகு குழம்பு பருப்புத்தொவயல் இப்படி எதுக்காவது மசக்கை வந்தா, வாயை மூடிண்டு இருந்துடுவேன். என் ரூம் உண்டு, நான் உண்டுன்னு சுருங்கியாச்சு. 

இப்போவரைக்கும் சுகர் பிபின்னு சிரமப்படுத்தலை. ஆச்சர்யம்தான். எங்கூட படிச்சவா, வேலைபாத்தவான்னு கேட்டா என்னொத்த வயசுக்காரா பல பேருக்கு உடம்புபூரா வியாதி. எங்கூட வாக் வரப்போ இதைத்தான் பேசிப்ப்பானுவ. ஃபுல் ஹெல்த் செக்கப் பண்ணிண்ட சேதுராமன் அவனுக்கு கண்டுபிடிச்சதை சொல்ரச்சே தலையே சுத்தித்து. எல்லாத்துக்கும் பேர் தெரிஞ்சு வச்சுண்டு அதை சொல்லி பயமுருத்தினான். எனக்கு த்ரோட் இன்ஃபெக்ஷன் மட்டும் தீர்ந்தபாடில்லை.

குழந்தைகளோட ஆத்தில் இருமல் வந்துட்டா மாட்டுப்பொண்ணு குழந்தைகளை எங்கிட்டே அண்டவிடமாட்டா. பெருமாள் டாக்டரை பாத்துடரதுன்னு கிளம்பினேன்.

அவன் விஷயம் கேள்விப்பட்டதுமே பிபி மெஷீன எடுத்துட்டான். புஸ்க் புஸ்க்னு பண்ணிட்டு, “150/96 இருக்கு. பிபி ரெகுலரா செக் பண்ணிப்பேளா”னான். “இல்லை”ன்னேன். “இந்த வயசுலே பண்ணிக்கணும், ஆரம்பிங்கோ. இப்படியே இருந்தா அதுக்கு மாத்திரை சாப்பிடணும், இல்லைன்னா கஷ்டம்”னான். இப்போதைக்கு தொண்டைக்கு தரேன்னுட்டு நான் சொன்னாப்புலே ஒரு தாள் முழுசும் எழுதித்தள்ளினான். 

அன்னைக்கு ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். வாரம் ஒருக்கா பிபி செக் பண்ணிப்பாத்துடரதுன்னு. தெருவுக்கு 8 டயக்னாஸ்டிக் கிளினிக் பாக்கரேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ராயல் கிளினிக். ஒருத்தரும் இல்லை, சேர் போட்டு சுத்தமா துடச்சுவிட்டாப்புலே பளிச்சுன்னு. சரி அடுத்த வாரம் வரலாம்னுட்டு. ஆத்துலே சொல்லணுமா? வேண்டாம், அப்புரம் பாத்துக்கலாம்.

தொண்டை சரியாச்சு. அவன் கொடுத்த மருந்தாலா, நானே வாங்கிக்குடிச்ச கஷாயத்தினாலான்னு மனசில் கேள்வி வந்தது. 8நாள் கழிச்சு ராயல் கிளினிக் போரேன். சாயங்காலம் 5 இருக்கும், யாரும் இல்லை. ஆனா ஒரு 22 வயசுப்பெண் உக்காந்துண்டு போனை நோண்டிண்டிருந்தாள். “வாங்க சார்”னா. நான் “பிபி எடுக்கணும்”னேன். “சரி சார், 20₹ ஆகும். கொஞ்ச நேரம் உக்காருங்க.” “யாருமே இல்லையே, ஏன் உக்காரச்சொல்ராய்”னு கேட்டுடலாம்னு நினைக்கரச்சே, அவளே, “கொஞ்சம் நடந்து வந்த படபடப்பு அடங்கினதும் எடுப்போம்”னா. பரவாயில்லையே, இதுவும் நன்னா இருக்கேன்னு அப்படியே சாஞ்சு உக்காந்துக்கரேன்.

அவள் சாவகாசமா எழுந்து வந்து எனெக்கெதிரே ஒரு ஸ்டூலைப்போட்டுண்டு உக்காந்தா. எனக்கு பக்கத்தில் நாற்காலியில் பிபி மெஷீனை வைக்கரா. அந்த பட்டியை எனக்கு வலிச்சுடுமோங்கிரா மாதிரி மெல்ல கையில் சுத்திட்டு புஸ் புஸ் பண்ணி பாத்தா. அப்புரமா அதை மெர்குரி மீட்டரில் பொருத்தினா. நிதானமா என் முகத்தை பாத்துட்டு அழகா ஒரு சிரிப்பு. “உங்க பேர் என்ன சார்?” சொல்ரேன். “வயசு 60 இருக்குமா?” நான், “ஐய்யய்யோ, அவ்வளவு கம்மி இல்லை 76, அடுத்த மாசம் 77”கிரேன். அவள் முகத்தில் என்னை சின்னதா ஆச்சர்யப்படுத்தி குஷியும் படுத்திவிட்ட திருப்தி, என் வீக் பாயின்ட் தெரிஞ்சு அதில் நுணி விரலை வச்சு வருடினாப்புல. 

என் மணிக்கட்டை மெல்ல தன் இடது கை விரல்களால் பற்றிக்கொண்டு பல்ஸ் பாத்துண்டே காத்தை அழுத்தி அப்புரம் விட்டு, மெர்குரி என்ன சொல்ரதுன்னு பாக்கரா. அப்புரம் ஏதொ தீர்மானமா ஸ்தெதஸ்கோப் காதில் மாட்டிண்டு அதை என் கை மடிப்பில் வச்சு திரும்பவும் புஸ் புஸ். அவள் கரம் சில்லுன்னு என் தோலில் பட்ரது. கிட்டக்க குனிஞ்சு பாத்துண்டெ திடீர்னு, “130/90 இருக்கு. உங்க வயசில் ஒண்ணுமில்லை”னுட்டா.

“உன் பேரென்னம்மா?” “வளர்மதி சார்”.

திருச்சி சொந்த ஊராம். பாராமேடிக்ஸ் படிச்சுட்டு சென்னையில் வேலை தேடிண்டு வந்தாளாம். கிளினிக்குக்கு பின்னாடி லேப் அதை ஒட்டி ஒரு ரூம் அதில்தான் வாசம். இவாளோட கிளினிக் 8 இருக்காம், இந்த பிரான்ச் இப்போதான் ஆரம்பிச்சு இன்னும்சூடு பிடிக்கலையாம். தினம் 10 பேர் வராளாம், ஆத்துக்கும் போய் பாப்பாளாம், சாம்பிள் எடுத்துண்டு வந்து சோதனை பண்ணி ரிஸல்ட் கொடுப்பாளாம். இவளோட ரெண்டு பசங்க வேலை செய்யரா பைக்கில் ஹோம் செர்விசுக்கு, அதில் ஒருத்தன் பிஸியோவாம். நான் வாரம் ஒருதடவை வருவேன்னுட்டு கார்ட் ஒண்ணை எடுத்துக்கரேன். வேணும்னா போன் செய்யலாமே. “காலை, மாலை, காபீ குடிச்சுட்டு, குடிக்காம வாங்க மாத்தி மாத்தி பாக்கிரது நல்லது.”. கிளம்பரச்சே 20₹ கொடுக்கரேன், சிரிச்சுண்டே வாங்கிண்டா. “ஆல் தெ பெஸ்ட்” அப்படின்னா. அப்படி ஒருத்தர் சொல்லி கேட்டு கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு.

ஆடுத்த வாரம் போனப்போ 120/80. “பெர்ஃபெக்ட் ஹெல்த், கலக்கரீங்க சார்.” கொஞ்சநாழி உக்காந்திருக்கச்சே அவளைப்பத்தி இன்னமும் தெரிஞ்சுண்டேன். அவளோட கூடப்பிறந்தவா 2 பேர், எல்லாம் பெண்கள். அப்பா இல்லை. இவதான் மூத்தவ அதனால் உடனே வேலைசெஞ்சு சம்பாதிக்க நிர்பந்தம். இவ மாதிரி மத்தவாளும் அடுத்த வருஷம் வேலை தேடிப்பாளாம். வேர பெரீய ஆஸ்பத்ரீயில் ஏதாவது வாங்கித்தர முடியுமான்னு கேட்டா. வாரங்கள் கழிஞ்சது. அவ சொல்ர ரிசல்ட்டை ஆத்துக்கு வந்ததும் ஒரு டயரியில் எழுதிக்கரேன். பெருமாள் கேட்டால் இந்தான்னு கெத்தா காமிக்கலாமே.

நெட்டில் அலசி பிபி அதிகமாகாம என்ன செய்யலாம்னு படிச்சேன். முக்கியமா ஸ்ட்ரெஸ் கொடுக்கிர விஷயங்களை தவிர்க்கணும், லைஃப் ஸ்டைல் மாத்திக்கணும், மனசுக்கு பிடிச்ச விஷயங்களில் ஈடுபடுத்திக்கணும்னு போட்டிருக்கான். ரெட் வைன் நல்லதாம். அதுக்கெங்க போரது? அதுக்கு பதிலா வெளீலெந்து வரச்சே 200கி கருப்பு திராட்சை வாங்கிண்டு போவேன், பேரன் அம்மாகிட்டே, “தாத்தா எதையோ ஒளிச்சுவச்சு சாப்பிடரா”ன்னு போட்டுக்கொடுத்துட்டான். இப்போல்லாம் 1 கிலோ வாங்கிண்டு போயிடரது.

வாரா வாரம் இந்த பெருசு ஜோரா ட்ரெஸ் பண்ணிண்டு போரதை மாட்டுப்பொண் கவனிக்க ஆரம்பிச்சா. போனா வரத்துக்கு 1 மணி ஆகிரதையும். நடந்து போக 8 நிமிஷம். 10 நிமிஷம் ஆசுவாசம். 5 ந்மிஷத்தில் பிபி எடுத்துண்டு 30 நிமிஷம் அங்கேயே உக்காந்துண்டு அவளொட பேசிண்டிருந்துட்டு, மனசு கேக்காம கிளம்பி மீண்டும் ஆத்துக்கு நடந்து வரத்துக்கு 1 மணி ஆகிடும். செக் பண்ணிண்டு திரும்ப வரச்சேயே அடுத்த வாரம் எப்போ வரும்னு இருக்கும். இன்னும் ஏழு நாளான்னு தோணும். ஏன் மூணு நாளைக்கு ஒருதரம் வாரம் சேஞ்ச் ஆகக்கூடாது?

கையில் பட்டி கட்டினதும் நிமிர்ந்து என்னைப்பாத்து சிரிச்ச வளர்மதி இப்போல்லாம் நான் வரப்போ கிளினிக் வாசலையே பாத்துண்டு நான் வந்ததும் பெரீசா சிரிச்சிண்டு எழுந்து வரா. இப்போல்லாம் நாங்க பல விஷயங்களை பேசரோம். அவளுக்கு ரெண்டு இடத்தில் நேர்காணல் ஏர்படுத்தி கொடுத்தேன். அதிலொண்ணு தேரும்னு நினைக்கரா. நடந்துடும்னு நான் கான்ஃபிடென்ஸ் கொடுக்கரேன். “உங்களுக்கு என்ன சார், உடம்பை நன்னா பாத்துக்கரீங்க, வெஜிடேரியன், ஒண்ணும் பிராப்ளம் வராது, ஜாலியா மனம்போல இருங்க”ன்னு அவள் எனக்கு கான்ஃபிடென்ஸ் கொடுக்கிரா. நான் பாத்த லேடெஸ்ட் சினிமா பத்தி சொன்னதை வச்சு, “சார் உங்களுக்கு வயசாச்சுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க”ன்னா. என்ன சொன்னேன், ஞாபகம் இல்லை. இந்த வயசில் டக்குன்னு மறந்து போயிட்ரது. 

அன்னைக்கு எனக்கு ரீடிங்க் பாக்கிரச்சே தன் கை என்மேல் பட்டதும், “உங்களுக்கு சூட்டு உடம்புசார்”னா. “ஆமாம் இப்போ எண்ணை குளியலும் நிருத்தி 10வ ஆச்சு”ன்னேன். அவள் எண்ணை தேச்சு குளிச்சதேயில்லையாம். 
நான் சொச்ச நேரத்தை என்ணைகுளியல் பத்தியும் நன்மைகள் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். பயத்தம்பருப்பு பொடிபண்ணி தேய்ச்சு குளிச்சா தோல் பள பலன்னு ஆகும்னு சொல்லிவச்சேன்.

இப்படியே 15 வாரம் ஓடிடுத்து. ஒண்ணு மட்டும் புரிஞ்சது. என் பிபி ஸ்டெடியா 120லேந்து 130 வரைக்கும் ஊசலாடிண்டிருக்குன்னும் ஒண்ணும் பெரீசா பயப்படவேண்டாம்னும், மனசை லேசா வச்சுண்டா லைஃப் ஈஸியாப்போயிடும்னும். வளர்மதி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டாள்னும் புரிஞ்சது. எங்களுக்குள் ஏற்பட்ட நட்புக்கு விளக்கம் கிடைக்கலை. எனக்கு ஒரு பெண் இருந்தால் அவளைவிட வளர்மஹிக்கு 15 வயசு ஜாஸ்தியா இருக்கும். பேத்தி இருந்தால் இவளைவிட பேத்திக்கு 12 வயசு கம்மியாயிருக்கும். அப்படி ஒரு ரெண்டும்கெட்டான் வயசுப்பொருத்தம். ஆனாலும் விகல்பமில்லாம அவளை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. 

அவளுக்கு நான் அப்பாவும் இல்லை, தாத்தாவாகவும் இல்லை, எங்கேயோ நடுவில். ஆனால் நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ஒருத்தரை ஒருத்தர் இனம்புரியாத எதிர்பார்ப்போடு வாரா வாரம் சந்திச்சிண்டு, இது வேர லெவெல். நீங்க என்ன நினெச்சாலும் அதுக்கும் மேலன்னு தோணரது.

அன்னைக்கு எப்பவும் போல பிபி செக் பண்ண போகணும். உள்ளேந்து புது டிஷெர்ட் ஒண்ணு எடுத்து போட்டுண்டு. கருநீலம். காலரோட. அதை ஒரே ஒருதடவைதான் போட்டுண்டேன். அதை திரும்ப எடுத்துப்போட்டுண்டதுக்கு ஒரு காரணம். அன்னைக்கு வளர்மதிக்கு பிறந்தநாள். அவளுக்காக ஒரு பென்செட் வண்ணத்தாளில் கட்டி வச்சிருன்னு சொன்னதை போர வழீல ஃபேன்ஸி ஸ்டோரில் வாங்கிண்டு போகணும். அவள் சரீன்னா கிட்டக்கேயே இருக்கிர லோயி ஸ்வீட்ஷாப்பில் அழைச்சிண்டு போய் ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடுக்கலாம்னு.

என்னைக்கும் இல்லாத துள்ளலோட போரேன். 

அவளைக்கானலை. மீசை வச்சிண்டு பிஸியோதான் உக்காந்திருக்கான். என்னை கண்டுக்கவேயில்லை.

நாற்காலியை சத்தப்படுத்திண்டு உக்காரரேன், அவன் கவனத்தை ஈர்க்க. “என்ன சார்”கிரான். “வளர்மதி இல்லையா? இன்னைக்கு பிபி செக் பண்ணிக்க வரேன்னு சொல்லியிருந்தேனே?” “அமாம் சார் ரெஜிஸ்டரில் எழுதி வச்சிருக்கா. “ஏன், அவள் எங்கே, அவ தான் வழக்கமா பாப்பா?” “சார், அவள் வேலையை விட்டுட்டு திருச்சி போயிட்டா.” அதிர்ச்சியில் உறைஞ்சு போரென். 

எங்கிட்டேகூட சொல்லாமவா? அப்படி என்ன நடந்தது? யாருக்காவது உடம்பு சரியில்லையா?

பிஸியோ மெல்ல சொல்ரான். “வளர்மதி வர எல்லா கஸ்டமர்கிட்டேயும் பெர்சனலா நெறுங்கி பழகிட்டான்னு யாரொ லேடி எங்க ஓனர்கிட்டே போனில் கம்ப்ளைன்ட் செஞ்சுட்டா சார். அவள் அப்படிப்பட்ட பொண் இல்லை. ஆனாலும் சரியா விசாரிக்காம வேலைலேந்து தூக்கிட்டா. அதான் யார்கிட்டேயும் சொல்லாம போயிட்டாள்”. 

அன்னைக்கு எனக்கு பிபி 150/100 காட்டித்து. மனசு பட படன்னு விவரமில்லாம அலைபாஞ்சது.

அவளோட நிலமைக்கு நாந்தான் காரணமோன்னு பயம் சூழ்ந்திண்டது. அவளுக்கு அந்த வேலையும் அதில் கிடைத்த சம்பளமும் எவ்வளவு அவசியம்னு எனக்கு தெரியும். இவள் யாரோட பழகினா இப்படி ஒருத்தர் கம்ப்ளைன்ட் செய்ய? ஆத்துக்கு வந்து என்ன பண்ரதுன்னு தெரியாம அப்படியே வாசல் ஊஞ்சலில் உக்காந்துக்கரேன். 

மாட்டுப்பொண்ணு எப்போவும் இல்லாம வாசலுக்கு வந்து, “மாமா காபி போடட்டுமா”ன்னு கேக்கரா. அவ கண்ணில் என்னைக்கும் இல்லாத நமுட்டு சிரிப்பும் இனம் புரியாத சந்தோஷமும் பாக்கிரேன். 

எல்லாமே விளங்கினா மாதிரி இருந்தது.😢🙏

சீர் சினத்தி

சீர் சினத்தி

 (மனதை தொட்டுவிடும் கதை – 
ganeshamarkalam)

என்னமோ தெரியலை, கல்யாணம்னா நம்மாங்கள்லெ பொண்ணோ, மாப்பிள்ளையோ ஞாபகத்து வரலை, சீர் சினத்திதான் வரது. என் பொண் கல்யாணத்தில் சீர் பத்தி பெசரச்சே சினம் வந்தது. அதுக்குத்தான் சீர் சினத்தின்னு சொல்ராளோன்னு நினெச்சுண்டேன்.

வரதக்ஷிணை பத்தி நான் இங்கே பேசவே வரலை. அது வேர மேட்டர். முன்னெல்லாம் ஒரு பெரீய லிஸ்ட் போட்டு என்ன வேணும்னு கராரா சொல்லிடுவா. மயக்கம் தெளிஞ்சப்புரம் எப்படி சமாளிக்கலாம்னு யோசிப்போம். அப்புரம் அவேர்னஸ் வந்து கொஞ்சம் குறைச்சுண்டா. சட்டம்னு ஒண்ணு வந்தது. அதுக்கு பயந்து அதைப்பத்தி பெசரதும் குறைஞ்சது. ஆனாலும் பெண்ணை பெத்தவா நிச்சயம் பண்ணிடலாம்னு தோணினதும் “என்ன எதிர்பாக்கரேள்”னு கேட்டுடரதும் அவா “ஒண்ணும் வேண்டாம், உங்க இஷ்டப்படி செய்யுங்கோ”ன்னு சொல்ரதும் இப்போ சகஜம். 

என் ஒரே பொண்ணுக்கு கல்யாணம் செய்யணும்னு கஷ்டத்திலேயும் சேத்து வச்சிருந்தேன். “உங்க இஷ்டப்படி நீங்க ஆசைபட்ரா மாதிரி பண்ணுங்கோ”ன்னு சம்பந்தி மாமா சொன்னர். அவர் சொல்லி முடிக்கலை சம்பந்தி மாமி “ஒரே பொண்ணு ஆசையும் பாசமுமா வளர்த்திருப்பேள் இல்லையா”ன்னு கொக்கி போட்டு ஆத்துக்காரரை ஒரு தினுஸா லுக் விட்டா. அவர் சுதாரிச்சிண்டு “என்ன ஒண்ணு வர மனுஷாளை நன்னா கவனிக்கணும், அவா கல்யாணம் நன்னா நடந்ததுன்னு சொல்லும்படி பண்ணிடுங்கோ”ன்னர். 

அப்புரமா புடவை எடுக்க சேர்ந்து போலாம்னு கூடவே வந்த சம்பந்திப்பேராத்து மாமிகள் சொல்லிக்கொடுத்தபடி “என்ன செய்யப்போறேள்”னு நாசூக்கா கேட்டுத்தெரிஞ்சிண்டுதுகள். இந்தக்காலத்தில் பொண் கிடைக்கரதே கஷ்டமா இருக்கு, யாரும் வரதக்ஷிணை பத்திப்பேசரதில்லைன்னு சொல்லலாம். அதுவும் பிராம்ணா பசங்களின் நிலமை ரொம்பவே மோசம். வரதக்ஷிணைன்னு ஆசைபட்டா காலம்பூரா தனியா அல்லாட வேண்டியதுதான். இந்தக்கதை நான் சொன்னாப்புலே வரதக்ஷிணை பத்தி இல்லை. சீர் சினத்தி பத்தி.

எனக்குத்தெரிஞ்சு சீர் விஷயத்தில்தான் சண்டைகளும் மனஸ்தாபமும் ஏற்படரது. சண்டையையும் அவாய்ட் பண்ணி அதுக்கப்புரம் அதனால் கெட்டுப்போர ஸ்நேகிததையும் மீட்டெடுத்துடலாம், ஆனால் நடக்கிர கூத்தை தடுக்க முடியாது. 

என் நண்பனோட பொண் நிச்சயதார்த்ததுக்கு திருநெல்வேலி போகணும். மாப்பிள்ளை அங்கே பிடிச்சிருக்கான். “எப்படீடா”ன்னு கேட்டேன். “இல்லைடா தெரிஞ்சவர் மூலமா ஜாதகம் வந்தது, எல்லாம் பொருந்தித்து, ஆத்துக்காரிக்கு அவ்வளவு தூரத்தில் பொண் குடுக்கணுமான்னு யோசனை. நல்ல குடும்பமா பட்டது, சரின்னுட்டோம். என் பொண்ணு இந்த மாப்பிள்ளைதான் வேணும்னு கொடிதூக்கிட்டா”னான். நாளன்னைக்கு போகணும். 5 மணி நெல்லை எக்ஸ்ப்ரெஸ். 

திடீர்னு யாரோ சொல்ரா “நெல்லை பிராம்ணா ஆத்து விசேஷம்னா மாலாடு பிடிச்சு எடுத்துண்டு போகணும்”னு. பக்குன்னுது. அதைத்தவிர மத்தது என்னென்னவோ சீர் தயாரா இருக்கச்சே இந்த மாலாட்டுக்கு எங்கே போரது? முதல்ல அப்படீன்னா என்னன்னு இந்த தஞ்சாவூர்காரனுக்கு தெரியலை.
பயத்தம்பருப்பு உருண்டையாம். அதுக்கென்ன செஞ்சுடலாம்னு ஆத்தில் ரெண்டுபெண்கள் ரெடியா நின்னா. எனக்கு இவா மெனெக்கெட்டு செஞ்சு சரியா வரலைன்னா? கூப்பிட்டேன் அறுசுவை கணேசனை. “ஒண்ணும் இல்லை செஞ்சுகொடுக்கரேன் எப்போ வேணும், எத்தனை வேணும்”னார். “51 எடுத்துண்டு போங்கோ, நானே பாத்திரம் வாங்கி வச்சுத்தரேன்”னர். “நேர ஸ்டேஷனுக்கு கொண்டுவந்துடரேன்”னு ப்ராமிஸ். 

நாங்க பெர்த்தில் சாமானும் சட்டுமா பரப்பி வச்சுட்டு மாலாடுக்காக பிளாட்பாரத்தில் உலாத்தினோம், சரியா வந்து சேர்ந்தது. ஒரு எவெர்சில்வெர் அண்டா, இடுப்புயரத்துக்கு. ரெண்டு பேர் எடுத்துண்டு வந்தா. பாக்கிரவா ரயிலிலே இருக்கிர கான்டீனுக்கு ஏதோ சாமான் போரதுன்னு நினெச்சிருப்பா. அண்டாவில் ஷாட்புட் சைஜில் மாலாடு, நீட்டா அடுக்கி வச்சிருக்கான். “இவ்ளோ பெரீசா”ன்னு போன் போட்டு கேட்டதுக்கு “அப்படித்தான், இல்லைன்னா கோவிச்சுப்பா”ன்னான். நல்லவேளை விவரம் தெரிஞ்சவன் கிட்டே போனோம். ஆனா பிராப்ளமே இப்போதான் ஸ்டார்ட்.

மாலாடு நாசூக்காம். உடைஞ்சுடுமாம். அதான் வரிசையா வச்சு, இடைலெ பேப்பர் வச்சு அண்டாவில் கொடுத்தானாம். அண்டாவையும் சீரா எடுத்துண்டுவாளாம். சரியாப்போச்சு! ஆனா ரயில் ஆட்ரச்சே உடையப்பிடாது, உடெச்சு கொண்டுபோனாலோ அல்லது 51இல் 1 குறைஞ்சாலும் சண்டை வரும்னு பயமுறுத்திட்டு போனை வச்சான். 

என் ஃப்ரெண்ட் வேர மாப்பிள்ளை பாத்துடலாமானு யோசிக்க ஆரம்பிச்சான், ஏன்னா ரயில் ஆடுமே?. இப்போ போய் எப்படி? பொண்ணு மேல் பெர்த்தில் உக்காந்து பாட்டுகேட்டிண்டிருக்கா. கொன்னே போட்டுடுவா. 

சரி சமாளிக்கலாம்னு அந்த அண்டாவை ரெண்டு பேர் அணைச்சாப்புலே பிடிச்சிண்டு ராத்திரி பூரா தூங்காம உக்காந்துண்டு போனோம். அங்கே நிச்சயதார்த்தத்தில் சீர் சாமானெல்லாம் வச்சதும் அண்டாதான் நடுநாயகமா எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. பையனோட பாட்டி அதில் என்ன இருக்குன்னு தொரந்து பாத்துட்டா. நல்ல வேளை ஒண்ணும் உடையலை, அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

எங்காத்து கல்யாணத்தில் ரெண்டு நாள் முன்னாடி என் பொண் ஒரு லிஸ்ட் போட்டு இந்த சாமானெல்லாம் வாங்கிடுன்னா.  என்னன்னு பார்த்தா பியர்ஸ் சோப், ஜில்லெட் செட் அது இதுன்னு ஒரு 3000₹ க்கு வந்தது. மாப்பிள்ளைக்கு விளையாடல் சாமானாம். அதில் 4 இம்போர்ட்டட் சாமான்கள். பாண்டிபஜார் பூரா சுத்தினேன். இவ ஏன் லிஸ்ட் கொடுத்தா? அவனுக்கு என்ன வேணும்னு இவளுக்கு எப்படி தெரியும்? ஆத்துக்காரி சொல்ரா “அதான் செல் போன் வாங்கி குடுத்துட்டேளே, சாயங்காலம் 7 மணி ஆச்சுன்னா ராத்திரி 11 வரைக்கும் எத்தையோ கிளுக் புளுக்குன்னு பேஸிண்டு அப்போ சொல்லியிருப்பான்.” சரிதான்னு வாங்கினதை சத்திரத்துக்கு போரச்சே ஞாபகமா எடுத்து வச்சுண்டாச்சு. 

நீங்க என்ன நினைப்பேள், முஹூர்தத்தன்னைக்கு கார்த்தாலே கொடுத்து மாப்பிள்ளையை சந்தோஷப்படுத்தி இருப்பேன்னுதானே. அதான் இல்லை.

நாங்க கல்யாணக் காரியங்களுக்காக ஏர்பாடு செஞ்சிருந்த கேடரர் அவன் எப்போவும் செய்யராப்புலே தஞ்சாவூர் பிராம்ணா கல்யாணத்துக்கு தேவையான விஷயங்களை கரெக்டா செஞ்சுடுவான் அவனே மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் விளையாடல் சாமான் வாங்கி மாப்பிள்ளைக்கு ஒரு செட் மாடீலே 5 மணிக்கே எடுத்துண்டு போய் கொடுத்துட்டான். தூங்கி எழுந்து சிந்தால் சோப், பரசூட் ஆயில், வெல்வெட் செஷே பாத்த மாப்பிள்ளைக்கு ஷாக். ஃபோனில் ராப்பகலா என் பெண்ணோட போட்ட மொக்கை வொர்கவுட் ஆகலைன்னு வருத்தபட்டு அப்புரம் அதை அக்காகிட்டே சொல்லி அவ தூபம் போட்டு இவன் குளிக்கவே போகாம சல்க்கிங்க். 

அப்புரம் அரசல் புரசலா விஷயம் என் மச்சினனுக்கு தெரிஞ்சு எங்கிட்டே, “அத்திம்பேர் மாப்பிள்ளை மூட் அவுட், தாலி கட்டுவாரா மாட்டாரான்னு தெரியலை”ங்கிரான். என்ன விஷயம்னு துப்பு துலக்கினா நடந்தது தெரிஞ்சது. “பொண் தங்கியிருக்கிர ரூமில் அலமாரியில் அவன் கேட்ட வஸ்துக்கள் எல்லாமே இருக்கு கொண்டுபோய் கொடுத்துட்டு மாமனார் வந்து முதுகை தேய்க்கட்டுமான்னு கேட்டுச்சொல்லு”ன்னு சொல்லி அனுப்பிச்சேன். நல்லவேளை, அத்தோட போச்சு.

“தாழம்பூ குடையும் கட்டைச்செருப்பும்”னு ஒரு நாவலே எழுதலாம். காசி யாத்திரக்கு வேண்டியதை வாங்கணும்னு நானும் என் மச்சினனும் ரெங்கனாதன் தெருவுக்கு போனோம். ஸ்டேக் மார்க் குடையும் மெட்ரோ செருப்பும் வாங்கரதுதானேன்னு நினைக்கலாம். சில விஷயத்தில் நான் பிடிவாதக்காரனாக்கும். இந்த காசியாத்திரை பாலிகை தெளிக்கரது, சாந்தி முஹூர்த்தம் இப்படிப்பட்ட மேட்டரில் சம்பிரதாயப்படிதான் நடக்கணும் ஒரு வெறி. ஸோ குடைன்னா தாழம்பூதான், செறுப்பு கட்டைதான்னு பொண்ணு பெரியவளானதுமே முடிவு செஞ்சது. வாக்கிங்க் ஸ்டிக் மட்டும் ரெண்டு, எனக்கும் இருகட்டும்னு. கடைசீலெ சரவணா ஸ்டோர்ஸ் மாடி மாடியா ஏறியும் கிடைக்கலை.

பில் போட்ர இடத்தில் ஒரு மஹானுபாவன் நேரே எதுத்தாப்புலே பாய் கடையில் கேளுங்கோன்னான். அங்கே ஒரு பாய், “காசியாத்திரை சாமான்களா”ன்னுட்டு என்ன வேணுமோ அப்படியே செட்டா எடுத்து காண்பிச்சு பேக் செஞ்சு தந்தான், ஆச்சர்யமா இருந்தது. நம்ம வழக்கம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. 

ஆனா அன்னைக்கு மண்டபத்திலேந்து சித்த போராமாதிரி போயிட்டு யூடெர்ன் எடுத்து வந்த மாப்பிள்ளை காலில் கட்டைச்செருப்பை காணோம். வேர ஒரு சாதாரண செருப்பை மாட்டிண்டிருந்தர். அவ்வளவு அலைஞ்சு திரிஞ்சு மாமனார் ஆசையா வாங்கிண்டு வந்ததை போட்டுக்கலையே அப்படியே காசிக்கு அனுப்பிச்சுடலாமான்னு ஒரு செகண்ட் தோணித்து.

சிலது மறந்துபோயிட்ரது. நல்லபடியா கல்யாணம் நடந்து பெத்த பொண் சௌக்கியமா சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிக்கணும்னு ஒருவித கிலிலே மனசு தவிக்கரச்சே சீர் பத்தின சிந்தனையை எங்கே வச்சுக்கிரது? சீரில் மறந்து விட்டுட்ட விஷயத்தில் ஒரு சின்ன பிரளயமே வரலாம். 

நலங்கு முடிஞ்சு எல்லோரும் ஹாய்யா உக்காந்திண்டிருக்கோம். ரிசெப்ஷணுக்கு டயம் இருக்கு. பரிஜாரகன் ஏதோ அல்வாவாம் சாம்பிள் கொடுத்துட்டு போனான். சம்பந்தி மாமியோட ஒண்ணுவிட்ட தம்பி (மாலை மாத்தரச்சே அவன்தான் ஒவ்வொண்ணா எடுத்துத்தந்தான், திவ்யமா இருந்த வத்தக்குழம்பில் உப்பு பத்தலைன்னு பொய் கம்ப்ளைன்ட் செஞ்சதும் அவன்தான்) எங்கிட்டே வந்து “மாமா என்ன இப்படி பண்ணிட்டேளே”ங்கிரான். 

இந்த 4 நாட்கள் கல்யாணம் முடிஞ்சு அவா ட்ரைன் ஏறிப்பொரவரைக்கும் இப்படித்தான் நடந்துக்கணும்னு வைராக்கியத்தில் சம்பந்திபேர் யார் வந்தாலும் டக்குன்னு எழுந்து நின்னு, கையை பவ்யமா வாய்கிட்டே பிடிச்சிண்டு “சொல்லுங்கோ”ன்னு அவன் என்ன சொல்ரான்னு காதை தீட்டிண்டு கேட்டேன். “என்ன பண்ணிட்டேன்? “சீர் குறையரது”. “என்ன குறையரது?” கொஞ்சம் சத்தமா வார்த்தை வரது. அதான் தாலிகட்டியாச்சே. “பஞ்சபாத்திர உத்துருணி வைக்கலை.”

இதுக்கெல்லாம் இன்சார்ஜ் என் மச்சினன். அவன் இங்கே நடப்பதை பாத்துட்டு கிட்டே வரான், ஏதொ விசேஷம், இல்லைன்னா விவகாரம், ரெண்டையும் விட்டுவைக்கமாட்டான் அவன். பையனாத்து தரப்பு வாதங்களை கேட்டுட்டு, இவன் “ஒண்ணும் பிராப்ளம் இல்லை இப்போ போய் வாங்கிண்டு வந்துடரேன், சித்தே பொறுத்துக்கொங்கோ, விட்டுப்போயிடுத்து”ன்னான். நான் “சித்த இருடா”ன்னுட்டு, வந்தவரைப்பாத்து “பஞ்சபாத்திர உத்துருணியை வச்சுண்டு என்ன செய்யப்போரேள்”. அவர் பாவம், “ஆத்தில் வேணும்னா அதான், சந்தியாவந்தனம் செவாளோனோ அதுக்காக இருக்கும்.”. நினைச்சப்புலே நான் வச்ச ட்ராப்பில் மாட்டிண்டான். அடுத்த கேள்வி. “யாரு சந்தி பண்ரத்துக்கு?” அவன் “மாப்பிள்ளைதான்!” கேள்வியை சமாளிச்சுட்டா மாதிரி ஒரு பெருமித சிரிப்பு. நான் விடரதாயில்லை. “கடைசீயா மாப்பிள்ளை எப்போ சந்தியாவந்தனம் செஞ்சார்னு கேட்டுண்டு வந்து உண்மையை சொல்லுங்கோ அப்புரம் வாங்கிண்டு வரச்சொல்ரேன்”னு ஹாய்யா உக்காந்துண்டேன்.

“கெட்டுண்டு வரேன்”னு போனவன் அப்புரம் வரலை. ரிசெப்ஷனுக்கு இறங்கிவந்த சம்பந்தி மாமி என்னை ஒரு மாதிரியா பாத்தா. தெரிஞ்சுண்டேன் அவள் பிள்ளை பூணல் போட்டதுலேந்தே சந்தி பண்ரதில்லைன்னு. எனிவே, என் மச்சினன் காசு எடுத்துண்டு போய் சாஸ்திரத்துக்கு ஒரு பஞ்சபாத்திரமும் உத்திருணியும் வாங்கிண்டு வந்து கொடுத்தான். அப்புரம்தான் சம்பந்தி மாமி பொடோவுக்காக சிரிச்சா.

இப்படி சில பல நிகழ்வுகள், சில வேடிக்கையாயும், சில சின்ன சண்டையாவும் பரிமளித்து, சில டிட் ஃபார் டேட்ன்னு என் பங்குக்கு நானும் திருப்தி படராப்புலே வீம்பா நடந்துண்டு எங்காத்துப்பொண் கல்யாணம் சீரும் சிறப்புமா நடந்து முடிஞ்சது.

ரயிலடியில் அவாளை வழியனுப்ப எல்லோரும் கூடியிருக்கோம். அவா மனுஷாளை கூட்டமா அழைச்சிண்டு (வேனில்தான்), மூட்டுவலிக்காராளோட அவா ஸ்பீடுக்கு கையை பிடிச்சிண்டு நடந்து, ஓவர் ப்ரிட்ஜ் ஏறி ரெண்டு பேராய் அவாளை பின்னாடிலேந்து தூக்கி கம்பார்ட்மென்ட் உள்ளே தள்ளி பெர்த்தில் உக்கார வைக்கரவரைக்கும் முழி பிதுங்கித்து. என் பொண்ணு மெல்ல கிட்டக்க வந்து கண் கலங்க “அப்பா, கல்யாணத்துக்கு ரொம்ப சிலவாயிடுத்தாப்பா”னு கேக்கரா. “அடி பைத்தியக்காரி, இதெல்லாம் ஒரு சிலவாடி, சந்தோஷமான காரியம் அப்பா சிலவா பாக்கலைடி, நீ புதுசு உடுத்திண்டு உன் ஆத்துக்காரரோட கூப்பெலே போராய்னு நினைக்கரச்சே அத்தனை சந்தோஷமா இருக்குடி”ன்னேன். என் கையை தன் கையால் இறுக்க பிடிச்சிண்டு என் கண்ணைப்பாத்தா. அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஆழமான எங்களுக்கு மட்டுமே புரிஞ்ச அன்பு.
எல்லாம் நல்லபடியா முடிஞ்சு ஆத்துக்கு வந்தோம். மாசம் ஓடித்து. மாப்பிள்ளை பெங்களூருவில் அபார்ட்மென்ட் வாங்கிட்டாராம், கிரஹப்ரவேசத்துக்கு கூப்பிட்டுருக்கா. போய் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யணும்னு பிளான்

போன் வந்தது. சம்பந்தி மாமிதான். என் ஆத்துக்காரியிடம் என்னை விசாரிச்சுட்டு, கிரஹப்ரவேசத்துக்கு வரச்சே ஸ்டீல் குடம் மறந்துடாதீங்கோன்னு வார்னிங்க்.

🙏😄🙏😂🙏😔🙏🤔🙏🤫🙏🤣👍

டீஜே

டீஜே (சிறுகதைகள் சீ2 – 95)
#ganeshamarkalam

அது என்னன்னு கேக்கத் தோணும். ஆங்கிலத்தில் டிஸ்க் ஜாக்கி. அதாவது கிராமஃபோன் தட்டை பாடவைக்கரவா. குதிரை ரேஸில் ஜாக்கி மாதிரி. இப்போ இசைத்தட்டுக்கு எங்கே போரது? எல்லாம் டிஜிடல் மயம் ஆச்சே!. டிஜிடல் ஜாக்கீன்னும் வச்சுக்கலாம்.

நான் சிவா. டீஜே என் தொழில். படிக்கப்போரது என் கதையைத்தான். தலைப்பு புரிஞ்சிருக்கும். புரியலைன்னா நீங்க திண்ணையிலேந்து எழுந்து போரது உசிதம். இங்கே அதி புத்திசாலிகளுக்கு மட்டுமே இடம்.

இப்போல்லாம் கல்யாண ரிசெப்ஷனுக்கு எங்களைத்தான் அதிகமா கூப்படரா. சீசனில் நான் ரொம்ப பிஸீ. இந்த காலத்து பசங்க வெளிநாட்டில் படிக்கப் போரேன்னுட்டு அங்கேயே செட்டில் ஆகி, கல்யாணத்தை மட்டும் இங்கே செஞ்சுண்டு உடனே கிளம்பிப் போர ஜாதி அவசரமா தாலி கட்டரவா டக்குன்னு ஏற்பாடு செஞ்சுக்க நாங்கதான் தோதுப்படுவோம். எங்கிட்டே ரெண்டு டீம் இருக்கு. ஒரே நாளில் ரெண்டு வரவேற்பு சமாளிப்பேன்.

ரெண்டு லாப்டாப், ம்யூசிக் சிந்தசைஜர், டிஜிடல் ஆம்ப்ளிஃபையர் பெரீசு பெரீசா 4 ஸ்பீக்கர், மைக் செட், 8அடிக்கு LCD வீடியோ ஸ்க்ரீன் இத்யாதி. கூட மாட ஒத்தாசைக்கு 2 பசங்க. வாங்கடா காசும், கல்யாண சாப்பாடுனா வருவானுவ. 

புக் செய்யரப்போ விசாரிப்பேன். எந்த மாதிரி கூட்டம் வரும், மாப்பிள்ளை பொண்ணுக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் எப்படி, அதுக்குத் தகுந்தா மாதிரி பாட்டு செலெக்ஷன். உங்களுக்கு ஏதாவது நேயர் விருப்பம் இருக்கான்னு கேட்டுப்பேன். விருப்பத்தை பூர்த்தி செய்யணும்னு அவசியமில்லை.

டீஜேவோட வேலை என்ன? நேத்து போன ரிசெப்ஷணில் நடந்ததை சொன்னாலே புரியும்.

மேடவாக்கத்துக்கு போர வழீலே புதுசா பெரீய கல்யாண மண்டபம். கார் பார்க்கோட. மத்தியானம் 3 மணிக்கு முன்னாடி வந்துடுங்கோன்னு சொன்னா. நாளைக்கு முஹூர்த்தம். இன்னைக்கே ரிசெப்ஷன். புது இடமாச்சே மின்னாடி போய் ஸ்கவுட் செஞ்சுடலாம்னு, எல்லாத்தையும் டெம்போ வேனில் அள்ளிப் போட்டுண்டு வந்தாச்சு. சாமானை ஹாலில் வச்சுட்டு, எங்கே கடை விரிக்கலாம், மேடை எங்கே, மனுஷா எங்கெ உக்காந்துப்பா, முக்கியமா பவர் சாக்கெட் எங்கேல்லாம் இருக்குன்னு செக்கிங்க்.

எனக்கும சித்தே உயரமா இடம் வேணும். அதுக்காகவே மரத்தில் 2 அடி தூக்கலா நின்னுக்க விடீயோ ஸ்க்ரீன் வச்சுக்க இருக்கு. அதை போட்டு சாமி படத்தை பின்னாடி வச்சுப்பேன். இஷ்ட தெய்வம் பெருமாள். ஐயங்கார் பையன் டீஜேவான்னு கேக்கப்பிடாது. படிப்பு ஏறலை, வந்தாச்சு. இப்போ அதுக்கென்ன? கதைலேந்து திசை திருப்ப ட்ரை செய்யாதீங்கோ. 

என் லாப்டாப்பில் 6000 பாட்டு வச்சிருக்கேன். அதுக்கு தகுந்த விஷுவல்ஸ். அந்த பாட்டு வர சீன் தவிரவும். உதாரணத்துக்கு “சின்ன கண்ணன் அழைக்கிரான்”. பாலமுரளி பாடினது. அதுக்கு TRஉம் சன்னி லியோனும் குத்தாட்டம் போடரா மாதிரி ஒண்ணு காமிப்போம். இது என்ன கூத்துன்னு நினைக்கரத்துக்கு முன்னாடி ISCON எடுத்த கிருஷ்ண லீலை கார்டூன் மாறிடும். அட, நன்னா இருக்கேன்னு தோணரச்சே சிவகார்த்திகேயன் பொண்ணு பாடரதை போடுவோம். அதையாவது பாக்கலாமேன்னு நினெச்சேள்னா மங்காத்தாலேந்து அஜீத் “ஆடாம ஜெயிச்சோம்டா!”. 

ரிசெப்ஷணுக்கு விஜய் ரசிகா வந்துட்டா? டக்குன்னு ஏஆர் ரகுமான் “ஆளப்போரான் தமிழன்” ஆரம்பிக்கும்.

லாப்டாப்பில் ஜகஜ்ஜால விஷயங்கள் செய்வேன். சும்மாவானும் நின்னுண்டு பாட்டு போடுவேன்னு நினைச்சேள்னா சுத்த விஷயம் தெரியாதவர்னு அர்த்தம். உடம்பை குலுக்கிண்டே இருப்பேன்.

இதெல்லாம் செட் செஞ்சப்புரம் டெஸ்டிங்க். மைக்கில் “செக் செக்”னு ஹஸ்கி வாய்ஸில் சொல்லிட்டு, மனுஷா வர நேரமாச்சுன்னா என் காஸ்ட்யூம் மாட்டிப்பேன். என்ன காஸ்ட்யூம்? ஒண்ணுமில்லை. அதறப்பழசா கிழிச்சு விட்டுண்ட ஜீன்ஸ். மேலே ரவுண்ட் நெக் டீ ஷர்ட். அதுக்கு மேலே கட்டம் போட்ட சட்டை. வலது கை மட்டும் மடிச்சு. தலையை பின்னாடி தள்ளி வாரிண்டு நெத்தியை அகலமா செஞ்சுண்டு. ஒரு தொப்பியை திருப்பி மாட்டிக்கணும். 

கூட்டம் சேரரவரைக்கும் ஆரம்பிக்கப் பிடாது. எப்போ ஆரம்பிப்பான்னு காக்க வச்சுட்டு சின்னதா என்னைப் பத்தி ஒரு வீடியோ. அதில் “டீஜே சிவாஆஆஜீ”ன்னு லெட்டர்ஸ் வரும். அப்புரம் மாக்ஸிமம் வால்யூம் வச்சு டமால்னு ட்ரம்ஸோட வர பாட்டு போடணும். எல்லாருக்கும் தூக்கிப் போடணும்

சந்தோஷமான பாட்டோட ஆரம்பிக்கரது சிலாக்கியம். அன்னைக்கு “அய்யய்யோ ஆனந்தமேன்னு” கும்கி பாட்டு போட்டேன். பொண்ணைப் பெத்தவர் கிட்டக்க வந்து “ஆரம்பமே அய்யய்யோ”ன்னு செஞ்சுட்டேளேன்னு சொல்ல, “சாரி” சொல்ல வேண்டியிருந்தது. சுதாரிச்சிண்டு மலையாளம் ஜிமிக்கி கம்மல், ரெண்டுமூணு பஞ்சாபி ஃபோக் எல்லாம் நன்னா போச்சு. சத்தத்தில் யாருக்கும் என்ன பாட்டு போட்டேன்னு கேக்காது. கேட்டாலும் கவனம் இருக்காது. அந்த வேளையில் “பல்லே பல்லே”யும் தமிழா இனிக்கும். அவாளுக்குள்ளேயே பெசிக்க உதட்டை காதோடவச்சு கத்தினாத்தான் முடியும். பாக்க சுவாரஸ்யமா இருக்கும். 

மேடைக்குப்போர வரிசை நீண்டுண்டு போரது. வீடியோவா ஸ்டில் போடோவான்னு தெரியாம போஸ் தந்துட்டு மணமக்கள் கையை குலுக்கி சீக்கிரம் டைனிங்க் ஹால் போக தவிக்கர உள்ளங்கள். என் பாட்டுச் சத்தத்தில் 3 மணி நின்னா ரெண்டு நாளைக்கு காது கேக்காது. எனக்கு பணம் செட்டில் பண்ரச்சே பொண்ணைப் பெத்தவனுக்கு மூச்சே நின்னு பாத்திருக்கேன். 

இந்த ஃபங்க்ஷனில் என்ன விசேஷம்னு யோசிக்கரச்சே அவள். உள்ளெ நுழையரா. கூடவே அவளை ஒரு வீல் சேரில் வச்சுத் தள்ளிண்டு, அவள் அப்பாவோ? இவள் எப்படி வீல் சேரில்?

சம்பூர்ணாவை இத்தனை வருஷம் கழிச்சுப் பாப்பேன்னு நினைக்கலை. என்கூட +2 படிச்சா. செட்டினாடு வித்யாஸ்ரம். எனக்கு அவள் மேல் கிரஷ். காதலா? சொல்ல முடியலை, ஆனா அவள் வேணும்னும் அவ கூடவே இருந்தா நல்லதுன்னும் படும். அவள் அப்பா பனக்காரர். பதவியில் இருந்தர். ஸ்மார்த்தா, நுங்கம்பாக்கத்தில் டாஜ் ஹோடல் பின்னாடி சொந்த வீடு கார். ஸ்கூலுக்கு காரில் வருவா. நான் மந்த வெளீலேந்து நடை. படிப்பு ஏரலை, கடைசீ பென்ச். இவள் முதல் 4 ராங்கில் வருவள். 

கல்சுரல்ஸ் கோலோகலமா நடக்கும். “பரதநாட்டியம் பை சம்பூர்ணா சுவாமிநாதன்”னு போடுவா.

டிசெம்பர் லீவு முடிஞ்சதும் நண்பர்களொட அரட்டை. ஒருத்தன் “நாம நம்ம கிளாஸுலேயே படிக்கர பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னா யாரை தேர்ந்தெடுப்போம், ஒத்தோத்தரா சொல்லுங்கோ”. ஆரம்பிச்சு வச்சான். என் டெர்ன் வந்ததும் சம்பூர்ணான்னு சொல்லிட்டேன். எல்லாரும் அவா செலெக்ட் செஞ்சவா கிட்டே ஒரு வாரத்துக்குள் சொல்லிடணும்னு சவால். 

இதை யாரும் சீரியஸா எடுத்துக்கலைன்னு எனக்கு புரியலை. நான் மட்டும் நல்ல நாள் பார்த்து சம்பூர்னாவை லன்ச் டயத்தில் “உன்கிட்டே பெசணும் தனியே வரியா?”ன்னு கெக்க, கூட இருந்த ஸ்நேகிதிகள் கொல்லுன்னு சிரிச்சு “போடி என்ன சொல்ரான்னு கேட்டுண்டு வந்து எங்களுக்கும் சொல்லு”ன்னு அனுப்பிச்சா.

“கல்யாணம் செஞ்சுக்கணும்னா உன்னைத்தான் செஞ்சுக்கலாம்னு இருக்கேன்.” அவகிட்டே அசடு வழிய, அவ ஓங்கி என் கன்னத்தில் ஒண்ணு கொடுத்தாள். தனியா வந்தது நல்லதா போச்சு. பேசாம வந்துட்டேன், யார்கிட்டேயும் சொல்லலை. ஸ்டெல்லா மேரீஸ் போனான்னு தெரியும். நான் முக்கி முனகி சென் ஜோசஃபில் சேர, முதலாம் வருஷமே அதை டிஸ்கன்டின்யூ செஞ்சுட்டு இதையும் அதையும் செஞ்சு காலத்தை கழிச்சாச்சு.

டீஜே ஆனதுலேந்து கையில் காசு பாக்கரேன், அப்பாகிட்டேயும் மரியாதை. லைஃப் கல்யாணம், பார்டீஸ்ன்னு கோலாகலமா. இந்த டப்பா டமாரமெல்லாம் வாங்கிக்க எடுத்த லோன் கட்டியாறது.

சம்பூர்ணாவை பாத்து 12 வருஷம் ஆச்சு. எப்படி இப்படி ஆச்சு? தெரிஞ்சவா, சொந்தக்காரா விஷேசத்துக்கு போணம்னா யாராவது தள்ளிண்டே வந்தாத்தான். மனசை என்னமோ செஞ்சது வாஸ்தவம். அவள் மேல் இன்னும் ஆசை ஒட்டிண்டிருக்கோ? நிச்சயமா இந்த கெட்டப்பில் என்னை அடையாளம் தெரியாது. தாடி வேர! கெத்தா இருக்கும்னு. நான்தான் சிவான்னு சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அவள் மட்டும் அப்படியே, தங்கத்தில் வார்த்தா மாதிரி, ஒய்யாரமா நர்த்தனமாடின உருவம் கால்கள் கட்டப்பட்டு. பகவானே!

போய்ப் பெசலாமா? கோவிச்சுப்பாளா? அப்பாக்காரன் என்ன நினைப்பான்? நானே ஏற்படுத்தர இந்த செவுட்டுக் களேபரத்தில் எப்படி பெசறது? சித்தே போகட்டும், இவளை கூட்டத்தில் தவர விட்டுடப்பிடாது. சாப்பாட்டு ஹாலுக்கு போரத்துக்குள் பெசிடணும்னு நினெச்சிண்டு நான் பாட்டுக்கு உடம்பை போட்ட பாட்டுக்கு ஏத்தாப்புலே சிலுப்பிண்டு. இப்போதான் பார்த்தேன் மேடைக்கு முன்னாடி சில வாண்டுகள் தங்கள் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா. சில இளம் சிட்டுக்களும், அதைக் கண்கொட்டாம பாக்க பெரிசுகளும்.
இன்னும் உத்சாகமா பாட்டு போட ஆரம்பிச்சேன்.

நான் நகந்து போயிட்டா இதைப்பண்ண கூட வந்த பையனுக்கு தெரியாது. அவனை “நீ போய் சாப்டுட்டு வா, அப்புரமா நான் முடிஞ்சதும் போய்க்கரேன்.” அனுப்பி வச்சேன். நடுவில் ஒரு மாமி சீட்டு அனுப்பினா, “ஏரிக்கரையின் மேலே”னு “முதலாளி” சினிமா பாட்டு வேணுமாம். தொலைஞ்சேன். இந்த மாதிரி ஃபங்க்ஷனில் இப்படி ஒண்ணு ரெண்டு விடாப்பிடியா தொறத்தும். தப்பிக்க விடமாட்டா.

அப்போதான் என் இடது பக்கத்தில் வீல் சேரோட சம்பூர்ணா நிக்கரதை கவனிச்சேன். அவள் அப்பாவை காணலை. நான் பாக்கரதை பாத்துட்டு “ஹாய்”னு கை அசைச்சா. நானும் பதிலுக்கு ஆட்டிட்டு என்னை யார்னு தெரிஞ்சிண்டு ஹாய் சொன்னாளா இல்லை அவளுக்கும் பாட்டு போடணுமான்னு. “இங்கே வா”ங்கிராமாதிறி திரும்பவும் கை அசைக்க, சில முழுப் பாட்டுக்களை ஆடோவில் போட்டுட்டு கீழே இறங்கிப்போரேன்.

என்னவோ சொல்ல சத்தத்தில் கேக்கலை. “என்னை வெளீலே அழைச்சிண்டு போ”ன்னு சொல்ல வண்டியை தள்ளிண்டு பொரேன். வெளீலே கார் பார்க் கிட்டே வந்ததும் “சிவா எப்படி இருக்காய்? உன்னை இங்கே பாப்பேன்னு தோணலை”. பதில் சொல்லாம “இதெப்படீ”ன்னு கண்ணால் அவ காலைப் காண்பிச்சேன். 

ஸ்டெல்லா முடிச்சுட்டு யூஎஸ் படிக்கப்போனவள் அங்கே ஒரு விபத்தில். கல்யாணம் செஞ்சுக்கலை. அம்மா இல்லை, அப்பாதான் என்னை பாத்துக்கரார்.
“டேய் சிவா, விளையாட்டா விவரம் புரியாத வயசில் நீ வந்து சொன்னதை பெரீசா எடுத்துண்டு உன்னை கன்னத்தில் அறைஞ்சதுக்கு இன்னி வரைக்கும் வருத்தப்படாத நாளில்லை. என்ன மன்னிச்சுடு” என் கண்ணில் நீர் கெட்டியா கோத்துண்டுடுத்து. “சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் அதை எப்பவோ மறந்துட்டேன். நீயும் மறந்துடு”. 

“சாப்டியா?” “இல்லை. ஓரு ஸ்நேகிதரோட. அப்பா பேசிண்டிருக்கார்”. “நான் இன்னும் 15 நிமிஷத்தில் பாட்டுக் கடையை மூடிடுவேன். என்கூட சாப்பிட வரையா?” கேக்கரேன்.

“என் வண்டியை நீ தள்ளிண்டு ஏன்னை அழைச்சிண்டு போவீயான்னா நான் உன் கூட சாப்பிடுவேன்!”

மானசரோவர் பயணம் பகுதி 08

துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம்  எட்டாவது (8) அத்தியாயம்.  ஆரம்பமாகின்றது. 😊

By சுபஸ்ரீஸ்ரீராம் (Subhasri Sriram)

இன்று ஜூலை 2ம் தேதி..

வழக்கம் போல  இன்று காலை சீக்கிரமே எழுந்து, பல் தேய்த்துவிட்டு ரெடியாக இருந்தோம்.. குளிக்கலை. ஏன் என்றால்  விடிய விடிய மழை.. அதனால இன்றும் போகவில்லை... ரூமிலேயே இருந்தோம்.. 

தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப உடல்நிலை மாறும் என்று போன பகுதியில் சொன்னேன் இல்லையா... இன்று எனக்கு ஒரே ஃபீவர், வாமிட்டிங்க், ஒற்றைத் தலைவலி.. இதே மாதிரி பல பேருக்கு இருந்தது.. பசிக்கவே பசிக்காது.. இருந்தாலும் சாப்பிடணும்.. யார் கைலாஷ் யாத்திரை சென்றாலும்,  நன்றாக இருந்தாலும், அங்கு போனால் உடல் உபாதை கண்டிப்பாக இருக்கும்..

உங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும், என்பதற்காக நான் இங்கு முக்கியமா சாப்பாட்டைப்பத்தி விடாமல் எழுதுகிறேன்.

நீங்கள் யாராவது கைலாஷ் யாத்திரை நேபாள்கஞ்ச், சிமிக்கோட் வழியாகப் போனால் இந்த மாதிரி தான் கிடைக்கும்.. நம்ம ஊரு சாப்பாடு கிடைக்காது... 

உங்கள் அதிர்ஷ்ட்டம், உங்க ப்ரோக்ராமில் எந்த வித இயற்கையின் தடங்கல் இல்லாமல் இருந்தால் சூப்பர்.. அப்படி இல்லாமல், எங்களை மாதிரி தங்கி தங்கி போனீர்கள் என்றால்  கொஞ்சம் கையில் பருப்புப் பொடி, புளிக்காய்ச்சல், தொக்கு வைத்துக்கொள்ளலாம்.. தேவை என்றால் நீங்கள் சாப்பிடும் ரெஸ்ட்டாரண்ட்டில் சாதம் வாங்கி பொடியுடன் சாப்பிடலாம்....

அப்புறம், இங்கு ஃப்ளைட், ஹெலிக்காப்டரில் நேபாள்கஞ்சிலிருந்து தான் காய்கறிகள் பால், தக்காளி, முட்டை, இன்னும் பல சாமான்கள் வரும்.. இதில் க்ளைமேட் மோசமாக இருநதால், சிமிகோட்டில் சுத்தி மலை இருக்கிறது.. அதில் விளையும்.காளிஃப்ளவர்,முட்டைக்கோஸ்,உருளைக்கிழங்கு,முள்ளங்கி தான் கிடைக்கும். அதை வைத்துத் தான் சமையல் செய்வார்கள்...

இன்று காலை பூரி, மசால், டீ..ஊறுகாய்..

மதியம் சாதம், புல்கா, கொள்ளுக்கூட்டு, கேரட்,முள்ளங்கி,ஆலு,காளிஃப்ளவர் சப்ஜி, ஊறுகாய்..
அப்பளம்..

இரவு கிச்சடி, உருளை சப்ஜி, கொள்ளூக்கூட்டு அப்பளம், ஊறுகாய்.

எப்படியோ சாப்பிட்டு தூங்கிட்டோம்.. இன்னும் மழைப்பெய்துக்கொண்டு இருக்கின்றது..

மறுநாள்... இன்று ஜூலை 3ம் தேதி.. 

வழக்கம் போல எழுந்துவிட்டோம்..பல் தேய்த்து டீ குடித்தோம். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக  வெயில் வர்ற ஆரம்பித்தது.. 

டிபன் ஆலு பரோட்டா, ப்ரட், சப்ஜி ஊறுகாய்.. 
பிடிக்கவே இல்லை...இருந்தாலும் சாப்பிட்டோம்... உடல் நிலை ஸ்ரீராமுக்கும் சரியில்லை.. 

நேபாள்கஞ்சில் மழை வரும் போல்  இருந்தது..அதனால் அங்கு மீதி உள்ள அத்தனைப் பேரையும் பஸ்ஸில் சுர்கேத்(நேபாளின் ஆர்மி பகுதி) அழைத்துச் சென்றார்கள்.. அங்கு க்ளைமேட் நன்றாக இருந்தது... அங்கு உள்ள ஆர்மி ஹெலிக்காப்டரில் 30 பேர் ஒரே நேரத்தில் அங்கிருந்து சிமிக்கோட் வரலாம்.. இந்த ஏற்பாட்டை டூர் ஆப்பரேட்டர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். நம் மக்கள் பல இடத்தில் க்ளைமேட்டால் தவித்ததால் திருமதி சுஷ்மாஸ்வராஜ் அவர்கள் ஏற்பாடு பண்ணியிருந்தார். டாக்டர் வந்து பிபி, ஆக்சிஜன் லெவல் வந்து செக் பண்ணினார்கள். சமீபத்தில் நேபாள், கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற மக்களை பல டிவிக்கள் செய்திகளில் ஹைலட்டாகச் சொன்னார்கள்..(இது எங்கள் வீட்டின் மூலமாகத் தெரிந்தது.)

மதியம் நேற்றைய மெனுவே தான்... :P

கைலாஷ் யாத்திரை முடித்து விட்டு வந்தவர்கள் கிட்டத்தட்ட 700 பேர் ஹில்சாவில் இருந்தார்கள்.. அவர்கள் ஹெலிக்காப்டர் மூலமாக இங்கு சிம்க்கோட்டிற்கு வந்துக்கொண்டு இருந்தார்கள்.. நாங்கள் சிமிக்கோட்டிலிருந்து ஹில்சா போகணும். ஆனால் நாங்கள் போகலை. ஏன் என்றால் சுர்கேத்லிருந்து, அவர்கள் கிளம்பி இங்கு சிமிக்கோட் வந்தால் தான் நாங்க ஹில்சா போகமுடியும்..

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது, வெளியில் நின்றோம்.. கடைசியில் இன்றும் போகவில்லை.. 
சாயங்காலம் டீ சாப்பிட்டுவிட்டு யாரும் பேசாமல் அமைதியாக இருந்தோம்..

இரவு ஃபுட்பால் பார்த்துவிட்டு டிபன் கிச்சடி, பால்பாயசம், ஆலு,தக்காளி சப்ஜி, புல்கா, ஊறுகாய் சாப்பிட்டுவிட்டு ரூம் வந்தோம்.. சிறிது நேரத்தில் தூங்கிவிட்டோம்..

நாளை ஜூன் 4ம் தேதி...  நாளைக்காவது ஹில்சா, கைலாஷ் போனீங்களா? என்று கேட்பது காதில் விழுகின்றது..

பொறுத்திருந்துப் பாருங்கள்.. 

மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்.. !!! 😊


ஓனாண்டி

ஓனாண்டி (again season 2)
#ganeshamarkalam

ஓனாண்டியா, ஓணாண்டியா? ஓநாண்டியா இருக்குமோ! தெரியலை. எழுதிப்பாக்க அவசியமே ஏற்படலை. சடகோபனை அப்படித்தான் கூப்பிடரா. பட்டப்பெயராம். அவரும் சுவீகாரம் செஞ்சுண்டுட்டர்.

ஆத்துலேந்து 2 கிமீ தள்ளி தேனுபுரீஸ்வரர் ஆலயம். அங்கேந்து கபாலீஸ்வரர் கோவில் வரைக்கும் சுரங்கப்பாதை இருந்ததுன்னு ஒரு இடத்தை காமிப்பா. நிஜமான்னா தெரியாது. பழைமையான கோவில். அத்தனை அழகு, மொட்டை கோபுரம், முழுசா கட்டி புதுப்பிக்கணும்னு, தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கீழே வந்ததால் கை வைக்க முடியலை. சிதிலம் இல்லாம பாத்துக்க கவர்மென்ட் இருக்குன்னு சொல்லிட்டா. மதில் சுவத்துக்குள் நாலா பக்கமும் களையா தோட்டம்.

கோவிலுக்கும் சடகோபனுக்கும் என்ன? அதான் சொல்லிண்டே வரேனே! ஞாயித்துக்கிழமை முன் மண்டபத்தில் நந்திகேஸ்வரருக்கு இடது பக்கத்தில் தூணில் சரபேஸ்வரர். அவருக்கு சரியா நாலரை டு ஆறு ராகுகால பூஜை. அதில் சடகோபன் தேவாரம், திருவாசகத்துலேந்து பாடுவர். அதோட தானே எட்டுக்கட்டின அம்பாள் இல்லை ஈஸ்வரன் மேலே ஒண்ணை பாடிட்டு அப்புரம் அபிஷேகம். கணீர்னு மைக் இல்லாம வந்திருக்கர 200பேருக்கும் கேக்கும்.

சுவாமி மேலே எட்டுக்கட்டி நிறைய வச்சிருக்கராம். தெரிஞ்சிண்ட குருக்கள் அதையும் பாடலாம்னு இவர் பாட பூஜைக்கு ஒத்தாசைக்கு வந்த வாலன்டீயர்ஸ் இவருக்கு ஓனாண்டி பட்டத்தை கொடுக்க எல்லாம் நடந்தது. அவா கேலியா வச்சது. 23ஆம் புலிகேசீயில் வரும் பாலபத்திர ஓனாண்டியை மனசில் வச்சு. அதை நல்ல பட்டமாய் இவர் எடுத்துண்டது ஆச்சர்யம்.

ஓனாண்டிப் புலவர்னு பிரபலம் ஆக, நண்பர்களுக்கு மட்டுமே சடகோபன்னு தெரியும். ராகுகாலம் இவர் வந்தாத்தான் களைகட்டும். எல்லாரும் குழுமிட்டாலும் சரபேஸ்வரர் கிட்டே தரையில் ஒரு இடம் காலியா விட்டுடுவா. “நகருங்கோ”ன்னு சொல்லிண்டே இவர் வந்து சேந்துக்கரச்சே, பாக்கரவா மத்தியில் ஓனாண்டிப்புலவர் வந்தாச்சுன்னு சலசலப்பு ஓடும்.

வயசு 55. யாரும் உறவு கிடையாதுன்னு பேச்சு. சன்னிதித்தெருவில் குருக்களாகம் தள்ளி ஒரு சிங்கிள் ரூமில் குடியிருக்கர். ஊர் ஊராப் போனவர் இந்த கோவிலில் 3 வருஷம் ஆச்சாம். பாக்க உயரமா, நன்னா இருப்பர். தலை நரைச்சு, ஷேவ் செஞ்சுக்காத தாடி. முறுக்கிவிட்ட மீசை. நெத்திக்கு குழைச்சு வீபூதி இட்டு, நடுவுலே சின்னதா குங்குமப்பொட்டு. பூஜைக்கு மட்டும்னு இல்லை, எப்பவுமே அவரை இப்படி பாக்கலாம். தெய்வாம்ஸ முகம்னு கூட.

வாசலில் கார், பைக் நிருத்தினா காசு வாங்க ஒரு பையன். பூக்காரியோட பையன். அவன் ஒனாண்டிக்கு சிநேகிதன். கோவில் சாத்தியாச்சுன்னா அவர் ரூமில்தான். இவருக்கும் அவனுக்கும் என்னன்னா, பாடம் சொல்லித்தரார்னு கேள்விப்பட்டோம். நன்னா இருக்கே!. ஸ்கூலுனு போரதில்லை, இவர்கிட்டே சில புஸ்தகங்கள், கணக்கு, வாய்ப்பாடு, திருக்குறள், இப்படீன்னு சொல்லிக் கொடுப்பராம். எழுதப் படிக்கவும். தூரக்க ஹோடல்லேந்து வேணும்னா வாங்கிண்டு வந்து கொடுப்பன்.

நான் ராம், SRMஇல் எஞ்சினீரிங்க் கடைசீ வருஷம். என் ஆள் சுவேதா ராகுகால பூஜை விடாம அட்டெண்ட் செய்யரான்னு நானும் சேர்ந்துண்டு அவளுக்கு என்மேல் மதிப்பும் மரியாதையும் – அதைவிட அன்பும் ஆசையும் வளர இப்போல்லாம் விடாம வரேன். சுவேதா ராம்னு அவ பேரை மாத்திப்பிடரதுன்னு – 330க்கே வந்து கோவில் வாசல் திறக்கரப்போ மத்த வாலன்டியர்ஸோட வெயிட் செய்வேன். நிறைய வேலை இருக்கும். உள்ளேந்து சரபேஸ்வரர் உத்ஸவ மூர்த்தியை பூட்டை தொறந்து எடுத்துண்டு வரணும். பூ, பழம் அபிஷேகத்துக்கு வேண்டியதையும் பிரார்த்தனை செய்யரவா கொண்டுவர சாமான்களையும் குருக்கள் வரத்துக்குள்ள ஒழுங்கா வைக்கணும்.

அர்ச்சனைக்கு சீட்டு கொடுத்து காசு வாங்கி. வர தேங்காயெல்லாம் உடெச்சுத் தரணும். வில்வம் தொடுக்கணும், பிரசாதம் ரெடியானதும் மடப்பள்ளிலேந்து எடுத்துவரன்னு, கூட்டத்தை ஒழுங்குபண்ணுவது, நேரா மூலவர் தரிசனம்னு போரவாளை வரிசையா காவந்து பண்ரதுன்னு. இங்கேயும் அங்கேயும் ஓடிண்டிருக்கரதை சுவேதா பாத்திண்டிருப்பா. பூஜை முடிஞ்சு பிரசாதம் தந்தப்புரம், சரடு வாங்கிண்டு கூட்டம் கறையரவரைக்கும் உக்காந்திண்டு என்னோட டாவாடிச்சுட்டு போவள். போன வாரமே ஆத்தில் வந்து பெசச் சொல்லுன்னா. பேசிட்டா படிப்பு முடிச்சதும் கல்யாணம்னு பிளான். SRMஇல் வேர கேம்பஸ்ஸில் நர்சிங்க் கோர்ஸ் பண்ரா. அப்பா இல்லை. அம்மா இன்கம் டாக்ஸில்.

ஒருநா ஒனாண்டி ஞாயித்துக்கிழமை பூஜையெல்லாம் முடிஞ்சதும் எங்கிட்டே வந்தர். “சடகோபன், இங்கே பாட்டுப்படுவேனே!” அறிமுகப்படுத்திண்டர். “சொல்லுங்கோ மாமா, தெரியும், ரொம்ப நன்னா பாடரேள்” ‘வா சித்தே, உங்கிட்டே பேசணும்.” உக்காரவச்சர். தொன்னையில் சக்கரைப்பொங்கல். “இந்தா”ன்னு நீட்டினர். கொஞ்சம் எடுத்துண்டு முகத்தைப் பார்த்தேன். என்ன பெசுவர், அதுவும் என்னிடம்?

தொன்னையை காலி செஞ்சு கர்சீப்பில் கையை தொடச்சுண்டு “நீ என்ன பண்ராய்? கோவிலில் ஒத்தாசை செய்யரதை கண்குளிர பாப்பேன், அது தவிர என்ன பண்ராய்?” அடடே, நம்மையும் கவனிச்சு பாராட்டராரேன்னுட்டு, படிப்பதையும் இது கடைசீ வருஷம்னு சொன்னேன். என்ன படிப்புன்னர். கம்யூனிகேஷன் எங்ஜினீரிங்க்னுட்டு நிருத்தினேன். அதுவே புரியுமா?. “அப்படியா”ன்னு சொன்னவர், “இந்த டெலிகாம்னு சொல்லுவாளே அதுவா? இப்போ தொலைத்தொடர்பு, என்டர்டெயின்மென்ட் கம்ப்யூட்டிங்க் எல்லாம் கலந்துபோய் வித்யாசமேயில்லை, கஷ்டமான படிப்போ?” ஆச்சர்யமா இருந்தது. தேவலையே, தெரிஞ்சிருக்கே!

“ஆமாம் சார், கத்துக்கரோம் அடுத்த வருஷமே புதுசா வந்துடரது, படிச்சதை அப்டேட் செஞ்சுக்கணும்”. “நன்னா படி, படிச்சுட்டு என்ன செய்யரதா உத்தேசம்?” எதிர்பாக்கலை. இவருக்கென்ன நாட்டம்னு பட்டது. “நல்ல வேலையெல்லாம் இருக்கு, பெரீய கம்பேனியில் போயிடலாம், அதிர்ஷ்டம் வேணும், பாத்திண்டிருக்கேன், வேலையில் சேர்ந்துட்டு மேல்படிப்பும்னும் ஒரு ஆசை”. “சரி நன்னா செய், அமோகமா வருவாய்”. அவரே “தாங்க்யூ”ன்னுட்டு எழுந்துண்டர்.

“சுவேதா எத்தனை நாளாப் பழக்கம்?” எதிர்பாக்கவேயில்லை. “கோவிலில் நடக்கரதை நான் கவனிக்காம இல்லை, சும்மா கேட்டேன், எஞ்சாய்!” பதிலுக்கு நிக்காம கிளம்பிப் போனர். எமகாதகர் போலெருக்கு? எப்படி எடுத்துக்கரது? விட்டுடவும் முடியாது. சுவேதாகிட்டே சொல்லணும். அவளோடையும் பெசியிருந்தா? இல்லை வழிமறிச்சு பெசினா? சுவேதா “ஒனாண்டி கேள்விப்பட்டுருக்கேன், மீட் செஞ்சதில்லை. சும்மா விளையாட்டா கேட்டிருப்பர்!” அதோட விட்டாச்சு.

10நா கழிச்சு, மெல்ல அப்பா அம்மாகிட்டே சுவேதாவை விரும்பரதாவும், நல்ல பொண் நம்மடவா, அவ அம்மாகிட்டே பேசணும்” அம்மா “அது என்னடா படிப்பு முடியலை, உத்யோகம் கிடையாது, காதல் கத்திரிக்காய்?” கத்தினா. அப்பா “படிக்கரச்சேதான் இளவயசு பொண்களை பாக்கரதும் பழகரதும் நடக்கும், ஆசை வரும், என் பையன் அழகா காதலிக்கரேன், கல்யாணம் செஞ்சுக்கரேன்னு வரான், நீ சத்தம் போடாம அந்த பொண் நம்மாத்துக்கு ஒத்து வருமான்னு பாரு!” நானும் என் தங்கை வனஜாவும் அதிர்ந்தே போனோம். அப்பாதான் தையத்தக்கன்னு குதிப்பர், அம்மா என் பக்கம் பேசுவான்னு நினைச்சா நேர் எதிரான்னா இருக்கு. நாளைக்கு வனஜாவுக்கு யாரையாவது பிடிச்சிருந்தா மாத்தி குதிப்பாளோ!

ஜாதகம் வாங்கிண்டு வந்து கொடுத்தேன். ஜோசியர்கிட்டே போச்சு. “உங்காத்தில் என்னடீ நிலவரம்?” “அம்மா கோவிலில் உன்னை உனக்குத் தெரியாம பாத்துட்டா, உங்காத்தில் வந்து பெசினா ஓகேதான்”. சொன்னவள் “ஒண்ணு மனசில் வச்சுக்கோ படிப்பை முடிச்சு வேலையில் உக்காந்தாத்தான் கழுத்தை நீட்டுவேன்” “எனக்கு முன்னாடி உனக்கு வேலை கிடெச்சா பண்ணிப்பையா?” “நோ சான்ஸ்!” நம்மம்மா இவள் அம்மாவைப் பாக்கணும். டிக்ரீ வாங்க 4 மாசம் இருக்கு. ஏதாவது காம்பஸ் இன்டெர்வ்யூன்னு நடந்தால் பூந்துண்டுடலாம்னு பட்டது. அப்புரம் டும்டும்தான்.

ஆனால் எதுவும் எதிர்பார்த்தா மாதிரி நடக்கலை.

“ஜாதகம் பொருத்தம் ஆச்சு, நாங்க போய் சுவேதாவை அவாத்தில் வச்சு பாத்துட்டு பேசிட்டு வரோம்”னு போனவா, சோகமா திரும்பி வந்தா. “சுவேதா அம்மா விவாகரத்து வாங்கிண்டவளாம். சுவேதா கைக்குழந்தையா இருக்கச்சே தன் அப்பா பேச்சைக்கேட்டு ஆத்துக்காரரை பகைச்சிண்டு பிரிஞ்சு வந்துட்டான்னு கேள்விப்பட்டோம், யோசிக்கணும்டா”. திக்குன்னுது. சுவேதா சொல்லவேயில்லை. அப்பா இல்லைன்னா அதுனாலே எங்கேன்னு கேக்கலை. என்ன செய்யரதுன்னு ரெண்டு பேருக்குமே பிடிபடலை. அம்மா டைவெர்ஸை மாத்தமுடியாது. ஆனா எங்க கல்யாணம்?

அன்னைக்கு ராகுகால பூஜை. எல்லாரும் செய்யராப்புலே 9 வாரம் விடாம பூஜையில் கலந்துக்கரோம்னும், நினெச்சதை நடத்திக் கொடுக்கணும்னும் வேண்டிண்டு, நானும் சுவேதாவும் சீட்டு வாங்கிண்டோம். வந்துண்டுதான் இருக்கோம், கைங்கர்யம் செய்யரோம், ஆனாலும் இப்படி செஞ்சா நல்லது நடக்கரதாம். அதான்.

6ஆவது வாரம் பூஜை முடிஞ்சதும் அப்பா மனசு இளகினாப்போல பட்டது. சரபேஸ்வரர் கண்ணை தொறந்துட்டரோ? 8ஆவது வாரம், “ஜாதகம் நன்னா பொருந்திருக்கரச்சே நாம ரொம்ப யோசிக்கணுமா”ன்னு அம்மா பேசிண்டிருந்ததை கேட்டேன். 9ஆம் வாரம், கார்த்தாலே “சுவேதா அம்மாவையும் கோவிலுக்க வரசொல்லு, நாங்களும் வரோம் அங்கேயே பெசிடலாம்னு அப்பா சொன்னர்.

கோவிலுக்குள் அப்பா நுழையரதைப் பாத்துட்டு ஓனாண்டி ஓடி வந்து பழகியவர் பாதிரி கைகுலுக்கி குசலம் விசாரித்துப் போரர். எனக்கு ஒண்ணும் புரியலை. இவரை உங்களுக்குத் தெரியுமான்னா, “ஆமாம் பாடுவாரே, புலவராச்சே”ங்கரர் அப்பா. அப்புரம் சுவேதா அம்மா வர இவாள்ளாம் பேசிக்கரதை பிராசாதம் தந்துண்டே பாக்கரேன். சிரிச்சுண்டே பிரிஞ்சு போனதைப்பாத்துட்டு கல்யாணம் நிச்சயம் நடக்கும்னு பட்டது. பாத்திரங்களை தேய்க்கர இடத்தில் வச்சுட்டு வரச்சே ஓனாண்டி வந்து கையைப் பிடிச்சு “கங்க்ராட்ஸ்”னு சொல்லிட்டுப் போனர். “நிச்சயம் ஆகிடுத்தாமே, கூப்பிடாம விட்டுடாதே!” படிப்பை முடிச்சு வேலையும் கிடெச்சு கல்யாண வேலை ஆரம்பிச்சது

அப்பாவும் அம்மாவும் சடகோபன் மாமாவை நலங்கில் பாடச்சொல்லலாம்னு அபிப்ராயப்பட, என்னை அனுப்பி சம்மதத்தை கேளுன்னா. “அதுக்கென்ன பேஷாப்பாடரேன்”னுட்டர். நாங்க சொன்னதால் சுவேதாவத்தில் தட்டலை. கல்யாணத்தில் தேவாரம் பாடினா வித்யாசமா இருக்கும்னுட்டு மட்டும் சொன்னா.

ஓனாண்டியோ சிரத்தை எடுத்துண்டு, எங்களுக்காகவே புதுசா எட்டுக்கட்டி நிறைய காதல் பாட்டுக்கள், கிருஷ்ணர்மேல் ராதா, மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்மேலே பாடினாப்புலே 10 பாட்டு பாடி அசத்த வந்திருந்தவா எல்லாரும் மகிழ்ச்சியா கேட்டா.

சித்தே தள்ளி உக்காந்திண்டிருந்த சுவேதா அம்மா மட்டும் கண்ணைத் தொடைச்சிண்டதை நான் பார்த்தேன்.

ஏகா (எ) ஏகாம்பரம்

ஏகா (எ) ஏகாம்பரம் (சிறுகதைகள் சீ2 – 23)
#ganeshamarkalam

சிதம்பரத்தில் தலச்சம்பிள்ளை ஆம்பளையா இருந்துட்டா நடராஜன்னு பேர் வைச்சுடுவா. இங்கே காஞ்சீபுரத்தில் எனக்கு ஏகாம்பரம்னு எங்கம்மா பேர் வச்சா. 

அப்பா கிடையாது. பையன் பெரீய ஆளாய் வருவன்னு நினெச்சாளா, இல்லை என் எதிர்காலத்தை அந்த ஏகாம்பரேஸ்வரர் பாத்துப்பர்னு நினெச்சாளோ தெரியலை. நானோ ஏகாம்பரேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தை பாத்துண்டே தினம் சுத்திண்டிருக்கேன். அங்கேந்து தள்ளி அங்காளம்மன் தெருக்கோடீலே சின்ன ஓட்டு வீடு எங்களோடது. உத்யோகம் இவரோட ராஜகோபுரத்து கடைத்தெருவில். உடனே நான் பெரீய ஜவுளிக்கடை வச்சு அமோகமா வியாபாரம் பண்ரேன்னு நினெச்சுடப்பிடாது. என்னன்னு நேர வந்தா நீங்களே கண்கூடா பாக்கலாம்.

அங்கே இருக்கிற எல்லா ஜவுளிக்கடையிலேயும் எனக்கு வேலை! கோவிலுக்கு வரவாளை, சும்மா வெட்டிக்கு சுத்திண்டிருக்கர சுற்றுலா பயணிகளை எப்படியாவது கடையில் புடவை வாங்க ஆசைக்காட்டி அழைச்சிண்டு வந்து விட்டுடணும். சுத்தமான பட்டு, காஞ்சீபுரத்துலேயே நெய்தது, இங்கே விட்டா எங்கேயும் இவ்வளவு கம்மி விலைக்குக் கிடைக்காது, உடனே வந்தால் ரிபேட், நாழி பண்ணினா விலை ஏறிடும்னு சொல்லி கடையை அல்லது முகப்பில் தொங்கறதை பாக்க வைக்கணும். 

கடைக்குள் நுழைஞ்சா எனக்கு ஒரு கஸ்டமருக்கு 10ரூபாய் கிடைக்கும். பர்சேஸ் செஞ்சுட்டா வித்த விலையில் கமிஷன்.

எத்தனைக்கு வாங்கினான்னு எனக்குத்தெரியாது, நான்தான் இன்னும் கஸ்டமரைப் பிடிக்க போயிடுவேனே! சிலர் ஏமாத்திப்பிடுவானுவ. இருந்தாலும் நல்ல நாளில் எப்படியோ 200 தேறும். நல்ல நாள்னா எந்த நாள்னு உங்களுக்கு டவுட் வருமே? எனக்கு என்னைக்கு நிறைய கமீஷன் கிடைக்கறதோ அன்னைக்கு நல்ல நாள்தான் ஓய்!

சம்பாதிச்சதை நேர அம்மாகிட்டே கொடுத்துடுவேன். கார்த்தாலே 8 மணிக்கு ஆத்தைவிட்டுக் கிளம்பினேன்னா ராத்திரி 9 மணிக்குத்தான் அவள் முகத்தை திரும்பப்பாப்பேன். சாப்பிடாம காத்துண்டிருப்பா. நல்ல மனுஷி. எங்கம்மான்னு சொல்லலை. கஷ்டப்பட்டு வளர்த்தது எனக்குத் தெரியும். அந்த சோகக்கதை இப்போ வேண்டாம்.

ரெண்டு வருஷமா அம்மாவுக்கு உடம்பு லேசா முடியலை. தள்ளாமைதான். எனக்கு 33 ஆச்சு, ஒரு கல்யாணத்தை பண்ணிடணும்னு ஆசை. பெத்தவளுக்கு இருக்காதா பின்னே? அவளுக்கும் 55 ஆச்சு. என் வயசு அவளை படுத்தி எடுக்கறது. தெரிஞ்சவா யாரும் இப்படி ஒரு உத்யோகம் செய்யரவனுக்கு எப்படி பொண் கொடுப்பா? வெளியூர்லேந்து வந்தவா என்ன பண்ரேன்னுட்டு தெரிஞ்சிண்டு, “தப்பில்லை, ஆனா ஒரு ஸ்திரமான சம்பாத்யம் இருந்தா தேவலையே”ன்னு கழண்டுக்கரா. 

ஒரு வரன் தபாலில் ஜாதகம் பொருந்தி போடோவில் ஓகே பண்ணி பொண் பாக்க நேரில் வந்துதான் அழைப்போம்னு வந்தவா, ஏகாம்பரேஸ்வரரை தரிசனம் செய்யப்போரச்சேயே என்னை தெருவில் பாத்திருக்கா. போடோவில் பாத்த பையன்னு அழைக்காமலே திரும்பிட்டான்னு தரகன் அப்புரமா சொன்னான். 

இவா வரப்போரான்னு நான் கடைக்குள்ளே போய் ஒளிஞ்சுக்கவா முடியும்?

படிப்பே ஏறலை. அதான் இதைப் பண்ணிண்டு காலத்தை ஓட்டரேன். ஆண்டர்சன் ஹையர் செகண்டரி ஸ்கூலில்தான் படிச்சேன் 10ஆவது பெயில். “இன்னும் படிக்கச் சொன்னியானா ஏதாவது மடத்தில் போய் சேர்ந்துடுவேன்”னு அம்மாவை மிரட்டினேன். காஞ்சீபுரத்தில் மடத்துக்கா பஞ்சம்? “சரிடா உன் இஷ்டம்போல்”னுட்டா. மனசுக்கு கஷ்டமா இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி, எஃபர்ட் போட்டு படிச்சிருக்கலாமோன்னு. ஆனால் பரிக்ஷை வைக்கராளே அதான் சரிப்பட்டுவரலை.

என் உத்யோகத்தை பண்ணிண்டு இருக்க பலபேரை நீங்க பாத்திருக்கலாம். சரவண பவன் போனேள்னா அங்கேயும் புடவைக்கடைக்கு முன்னாடி என்னைப்போலவே பாக்கலாம். ஏன், எல்லா ஊரிலேயும். ஒருதடவை அம்மாவை அழைச்சிண்டு கும்பகோணம் போயிருக்கச்சே தாராசுரம் போனோம். கோவிலைச்சுத்தி புல்வெளி. உக்காந்துண்டு கம்பீரமான கோவில் அழகை அனுபவிச்சிண்டு நொங்கு வாங்கி சாப்பிட்டோம். அப்போ ரெண்டு பேர் கிட்டக்கே வந்து கும்பகோணம் புடவை, திருபுவனம் நெசவுப்பட்டுன்னு ஆரம்பிக்க. எங்கிட்டேயேவா? அவா ஆரம்பிச்சதுமே நானும் காஞ்சீபுரத்தில் கூவரா மாதிரி கூவிக்காண்பிச்சேன். “இதுவும் நம்ம ஜாதிடோய்”னு ஓடிட்டானுவ. 

அம்மாதான் “நீ அப்படி அவாளை கேலி பண்ணியிருக்கக் கூடாதுடா, உன்னைப் போலத்தானே அவாளும், ஏதோ ரெண்டு புடவை வாங்கிண்டிருந்தா அவாளுக்கு 50ரூ கிடெச்சிருக்கும். இந்த ஊரில் ஒரு வாரத்துக்கு 10 புடவை விக்குமான்னு ஆச்சர்யமா இருக்கு, கெடுத்துட்டாய்”. சரிதான். இருந்தாலும் எங்ககிட்டே அவா விக்கர விலைக்கு வாங்கவா வசதி இருக்குன்னு நினெச்சுண்டேன்.

காஞ்சீபுரத்தில் பெரூசா வோல்வோ பஸ்ஸில் கூட்டமா வருவா. எங்க பாடு ஜாலிதான். ரொம்பவே பிஸியாகிடுவோம். வடக்கத்திக்காரா சேட் மாமிகள் சாமியை அப்புரம் பாத்துக்கலாம், முதல்ல பட்டு வாங்கலாம்னு ஆம்படையான் குழந்தைகளை கோவிலுக்குள் அனுப்பிச்சுட்டு என் பின்னாடி வரத் தயாராய் இருப்பா. காரில் வரவா நான் கூப்பிடர இடங்களுக்கு அபூர்வமாத்தான் வருவா. அவா பின்னாடி போறது வேஸ்ட். அவாளுக்குன்னே இப்போ பெரீய ஜவுளிக்கடைகள் தெருவுக்கு ஒன்ணு வந்தாச்சு. அங்கே வேலே பார்கிங்காம், ஜூஸ் கொடுப்பா, மத்தியானம் போனா இலை போட்டு சாப்பாடே உண்டு. 

வெளிநாட்டுக்காரா வந்தால் வேற விதமாப்போகும். கடைக்கு வந்து காமிக்கச்சொல்லிட்டு வீடியோவெல்லாம் எடுத்துக்குங்கள், கடைசீலே ஒரு ஸ்கார்ஃப் வாங்கிப்பா. இதை தெரிஞ்சுண்டு கடைக்காரனும் 100 ரூவா சமாசாரத்தை 800க்கு வித்துடுவான். “ஒன்லி 10 டாலர்ஸ்”ம்பான். எனக்கு மட்டும் பழைய கமிஷன்.

அன்னைக்கு யாராவது மாட்ட மாட்டாளான்னு சுத்தி வரச்சே ரெண்டு பஸ்ஸுக்கு நடுவுலே அந்த வெள்ளைக்காரியைப் பாத்தேன். கணுக்காலுக்கு மேலே முழங்காலுக்கு கீழே நின்னுடரா மாதிரி ஒரு வெள்ளை பேன்ட், மேலே சட்டை மாதிரி தொள தொளன்னு, உள்ளாடையே இவா ஊரில் விக்கமாட்டாளா? எல்லாம் தெரிஞ்சுது. தொப்பி மட்டும். கலர்கலராய் கழுத்தை சுத்தி ஒரு துப்பட்டா. திசை மறந்துட்டாப்புலே எங்கே போறதுன்னு விளங்காதமாதிரி. 

என்னைப்பாத்து “இங்கே வா”ன்னு கூப்பிடரா. “வாட் இஸ் திஸ் ப்ளேஸ்?” “திஸ் இஸ் காஞ்சீபுரம், மெயின் ஷிவா டெம்பிள்.” பேசிண்டிருகச்சையே டக்குன்னு என்மேல் மயங்கி சரிஞ்சுட்டா.

அப்படியே தோளில் தூக்கிண்டு போய் ஜவுளிக்கடையில் விட்டுடலாமான்னு ஒரு வினாடி தோணித்து. பக்கத்திலேயே ராமபத்ரன்னு தெரிஞ்ச டாக்டரோட க்ளினிக் இருக்கு, கைத்தாங்கலா அழைச்சிண்டு போரேன். அவர் பாத்துட்டு ரெண்டுநாளா ஒண்ணுமே சாப்பிடலை அதான்னு ட்ரிப்ஸ் ஏறவச்சுட்டு அவளை கிளினிக்லேயே படுத்துக்க சொல்ரார். என்ன கஷ்டமோ. அவள் கையில் ஒரு பர்ஸ் அதில் பாஸ்போர்ட் மட்டும்தான் இருக்கு. ஹாலேந்த். காசே இல்லை. யாராவது அடிச்சிருப்பான். போனும் இல்லை. இப்போ என்ன பண்றது, போலீசுக்கு சொல்லலாம். எனக்கொரு யோசனை. ரெண்டு மணிநேரம் கழிச்சு அவளுக்கு தெம்பு வந்ததும் “எங்காத்துக்கு வரீயா எங்கம்மா உன்னை பாத்துப்பா”ன்னு அழைச்சிண்டு போயிடரேன். 

“நீ செய்டா ராஜா”ன்னு ராமபத்ரன் கண்ணடிச்சார். ஆட்டோக்காரன் “என்ன ஐயரே நீ கயிட் வேலையும் பாக்கரீயா”ன்னு கேட்டான்

அம்மாவுக்கு இவளோட வந்து இறங்கினது ஒன்ணும் புரியலை. விஷயத்தை சொன்னதும் என்னை அம்போன்னு விட்டுட்டு ஆசையா அவளை உள்ளே அழைச்சிண்டு போயிட்டா. அவளுக்கு வேண்டியதை செஞ்சு கொடுத்து சாப்பிடச்சொல்லி “படுத்துக்கோ கார்த்தால பாத்துக்கலாம்”னு. சித்த நாழி பெசினதில் அவள் சென்னையிலேந்து காஞ்சீபுரம் ட்ரைனில் வந்தவளை அங்கேயே யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டு, அப்புரம் நடந்தே ஊருக்குள் வந்திருக்கா. யாருக்கும் இவ பேசினது புரியலை. நல்லவேளை நான் பார்த்துட்டேன்

எங்களோடயே இருந்தா. நான் பெசின ஆங்கிலம் போதுமானதாயிருந்தது. அவளுக்கு 27 வயசாம். பேர் எம்மாவாம். தனியா இந்தியா வந்து சுத்தணும்னு கிளம்பினாளாம். வந்த இடத்தில் இப்படி. ஒருநாளைக்கு நானே அவளை காஞ்சீபுரத்தில் எல்லா இடத்தையும் சுத்திக்காண்பிச்சேன். அம்மா “ஏதாவது வாங்கிக்கொடுத்து அனுப்பலாம்டா”ன்னு கடைகளுக்கு அழைச்சிண்டு போய் அவளுக்கு பிடிச்ச ஒரு சல்வார், ஒரு புடவையும் வாங்கித்தந்தாள். என் சேவிங்க்ஸ் பாதி ஃபணால் ஆச்சுன்னு வச்சுக்கோங்கோ. போன இடத்தில் “ஏகா, யூ டூ வாங்கிக்கோ, மய் ப்ரெசென்ட்”னு சொல்லி ஒரு சில்க் ஜிப்பா வாங்கிக்க வச்சா. காசு நான் கொடுத்தேன்

15 நாளாச்சு, அவள் உடம்பும் தேறித்து. “திஸ் டிஷ் சாம்பார் வெரிகுட்”னுட்டு காபி டீ மாதிரி குடிச்சா. அம்மா வச்ச மிளகு ரஸத்தை ஒரு பெரீய கப் சாதத்தில் விட்டுண்டு, எல்லா பருக்கையும் மூழ்கினப்புரம் சித்த நாழி அதையே பாத்திண்டிருந்துட்டு ஸ்பூனால் சாப்பிட ஆரம்பிப்பள். அவள் ப்ரவுன் கண் கலங்கும். அம்மா கையை பிடிச்சு “யூ அர் க்ரேட்” ம்பா. சொல்லிட்டு இன்னும் கொஞ்சம் சாப்பிடுவள். திரும்பவும் அம்மா கையை பிடிப்பள். ஒரே நாளில் அம்மா 8தடவை க்ரேட் ஆனாள்.

ஒருநாளைக்கு ஆத்துக்கு வந்தா இவா ரெண்டுபேரும் வாசத் திண்ணையில் பூத்தொடுக்கரா. ஃபாஸ்டெஸ்ட் ஃபிங்கர்ஸ் ஃபர்ஸ்ட்னு ஒரு கான்டெஸ்டாம். எம்மா ஜெயுச்சுடுவான்னு பட்டது. மானம் போயிடப்பிடாதுன்னு அம்மாவை பசிக்கறதுன்னு உள்ளே இழுத்துண்டு போயிட்டேன்.

அன்னைக்கு சனிக்கிழமை. “ஓரிக்கையில் பெரியவா மணி மண்டபத்தில் யாகம் செய்யரா, சமையலுக்கு கூப்பிட்டிருக்கா”ன்னு அம்மா பாதிநாள் போயாச்சு. நானும் எம்மாவும் ஆத்தில் தனியா. “யூ நாட் கொயிங்க் ஃபார் வொர்க் ஏகா”ன்னு இவள் கேக்க, “நோ, ஐ ஆம் நாட் ஃபீலிங்க் வெல்”னு “ஹெட்டேக்”னு நெத்தியை தேச்சு விட்டுக்கரேன். “வெயிட், ஐ வில் டூ சம்திங்க் ஃஃபார் இட்”னுட்டு உள்ளெ போய் அடுப்பை மூட்டி நிமிஷமா சுக்கு கஷாயம் செஞ்சு எடுத்துண்டு வரா. “டேக் திஸ், யூ வில் பி ஃபைன் இன் 30 மினிட்ஸ்”னுட்டு நான் உக்காந்திண்டிருந்த சேருக்கு பின்னாடி வந்து என் பொட்டை தன் கையால் நீவி விட ஆரம்பிக்கரா. என்னை அறியாம அப்படியே கண் அசந்துட்டேன்.

இந்தக் கதையை படிக்கரவா யாருக்காவது ஒரு 27 வயசு டச்சுக்காரி நெத்தியில் அமுக்கி விட்டு பொட்டில் ஹிதமா தேச்சு விட்டு பின் பக்கமா மூஞ்சிகிட்டே வந்து புஸ் புஸ்னு சூடா மூச்சுக்காத்தை விட்டா தெரியும். அம்மாவும் இல்லை தூங்கிப்போய் கற்பை காப்பாத்திண்டுடலாம்னு தோணித்து.

அம்மா வந்ததும் வாசல்லேயே நிறுத்தி இவள் எனக்கு செஞ்சதை விவரமா சொல்ல, அம்மாவுக்கு கொள்ளை சந்தோஷம். அப்போதான் எழுந்துண்ட என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு உள்ளே போரா.

இப்போ எம்மா திரும்பிப்போகணும். அவள் அப்பாவோட பேசி டிக்கெட் வாங்கி அனுப்பச்சொல்லிட்டா. சென்னை வரைக்கும் கொண்டுபோய் விட்டுடலாம்னு அம்மா பிளான். ஒருவாரம் இருக்கு கிளம்ப. டிக்கட் வந்துடும். எம்மாவும் சரி, என் அம்மாவும் சரி ஏதோ குசுகுசுன்னு தங்களுக்குள் பேசிக்கறதும், பிரிஞ்சு போவதுமா ஏதோ நாடகம் நடக்கறதுன்னு மட்டும் புரிஞ்சது. 

பொறுக்கமுடியாம ராத்திரி சாப்பிடரச்சே அம்மாவை கேட்டுடரேன். என்ன மேட்டர்?

ஒருநாள் முன்னாடி இவள் என் அம்மாகிட்டே சொல்லியிருக்கா, என்னை ரொம்பப் பிடிச்சிருக்காம், கல்யாணம் செஞ்சுக்க ஆசைன்னு. “அவனுக்கு சரின்னா பண்ணிண்டு கூட்டிண்டு போய்க்கோ”ன்னு சொல்லிட்டாளாம். எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. எப்படி ஓடும்? அன்னைக்கு என்மேல் மயங்கிச் சரிஞ்சப்போவே நினெச்சேன் இது சாதாரண மயக்கமா இருக்காதுன்னு. பாக்கிர பொண்களையெல்லாம் ஒரு புடவை கஸ்டமராவே பாத்துட்ட எனக்கு ஹாலாண்டிலேந்து ஒருத்தி வந்து விலைபோகாத இந்த பிராம்ணனையும் பிடிச்சிருக்கு, நான் பண்ணிக்கரேன்னு சொன்னது அப்படீயே ஷாக்கா இருக்கு.

எம்மா பாக்கிறத்துக்கு நன்னாத்தான் இருக்கா. அவ பக்கத்தில் நான் நின்னா சால்ட் எண்ட் பெப்பர் மாதிரி இருக்கும். அவளுக்கே பரவாயில்லைன்னா நான் ஏன் அலட்டிக்கணும்? அம்மாவை எப்படி தனியா விட்டுட்டுப் போரது? எம்மாவா, அம்மாவான்னு இப்படி அல்லாட வச்சுட்டாளேன்னு யோசிச்சேன்.

ஆனா எம்மா அத்தனை தெளிவா ஒண்ணு சொன்னா. “மாம் இஸ் ஆல்ஸோ கெட்டிங்க் எ டிக்கெட். லெட் அஸ் கெட் அதர் ஃபார்மாலிடீஸ் டன்”. இட் இஸ் ஃபார் யூவர் மாம் ஐ ஆம் மேரியிங்க் யூ”ன்னு சொல்லிட்டு கண் அடிச்சிண்டே என் அம்மாவை கட்டிப்பிடிச்சுக்கரா.