(சென்னையிலிருந்து திருப்பதி மார்க்கம்..)
(Padma Gopal)
(பகுதி −3..)
நாகலாபுரத்திலிருந்து எங்கள் பயணம், அடுத்ததாக "நாராயண வனத்தை" நோக்கி அமைந்தது..
புத்தூரிலிருந்து சுமார் 5கி.மீ.தொலைவில் உள்ள இந்த நாராயணவனம், ஶ்ரீநிவாஸப் பெருமானுக்கும் பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த தலமாகக் கருதப்படுகிறது..
புராண வரலாற்றின்படி, பத்மாவதி தாயாரின் தந்தையான ஆகாஸராஜன் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாகத் தெரிகிறது.
புத்ரபாக்யம் இல்லாத அரசன், புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்த ஆயத்தமான பொழுது, இவ்விடத்தில் யாகசாலை அமைப்பதற்காக நிலத்தைச் சீர்படுத்தினான்..
அப்பொழுது கலப்பையில் பட்டு ஒரு சிறு பெட்டி வெளிப்பட்டது. அப்பெட்டியில் அழகான பெரிய தாமரை மலரின் மத்தியில், அப்பொழுது பூத்த தாமரைப் புஷ்பமாய் ஒரு பெண்குழந்தையைக் கண்டான் அரசன்..
பூமாதேவியின் அம்சமான அந்தக் குழந்தையைத் தாமரை (அலர்) மேல் கண்டெடுத்ததால், அதற்கு "அலர்மேல் மங்கை" என்றும், தாமரைக்குப் "பதுமம்" என்ற ஒரு பெயரும் இருப்பதால்,"பத்மாவதி" என்றும் அக்குழந்தை அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
இந்தத் தலத்தில் இருந்த நந்தவனத்தில்தான், ஶ்ரீநிவாஸரைக் கண்டு பத்மாவதி மையல் கொண்டதாக, புராணம் சுவைபட இயம்புகிறது.
நாராயணனைக் கண்டபின்னே, நந்தவனம் இருந்த இடம், நாராயணவனம் என்று பெயரைத் தாங்கியது என்பது செவி வழிச் செய்தி..
பத்மாவதி தாயாருக்கு இது பிறந்த வீடு ஆகையால், அக்கால வழக்கப்படி, தெருவடைத்து பந்தலிட்டு இங்கே திருமணம் நடந்ததாகக் கூறுகிறார்கள்..
"பெருமானுக்கு இத்தலம்தான் மாமனார் வீடு!.." என்று பெருமையோடு இங்குள்ளவர்கள் பேசுவதையும் நம்மால் காணமுடிகிறது!...
கண்களையும் சிந்தையையும் ஈர்க்கின்ற எழில்மேனியோடு மூலவர் ஶ்ரீகல்யாண வெங்கடேஸ்வரர், ஶ்ரீதேவி பூதேவியோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்..
இதழ் சிந்தும் புன்னகையை, இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்புத் தட்டாது!..
அத்தனைப் பேரழகு!..
திருமார்பில் மஹாலக்ஷ்மித் தாயார் எழுந்தருளியுள்ளார்..
கல்யாண மாப்பிள்ளைக் கோலம்...
அதனால் கையில் கங்கணத்தோடு காட்சி அளிக்கிறார் பெருமான்!..
இடையில் இருக்கின்ற தசாவதார ஒட்டியாணம், "நானே அந்தப் பரமபதநாதன்!.." என்று உறுதியாகச் சொல்கிறது!..
வேட்டையாடும் நோக்கத்தோடு புறப்பட்டு வந்ததால், பெருமானின் ஒரு கையில் பெரிய கத்தியொன்று காணப்படுகிறது.
உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்ற எழிலோடு இருக்கின்ற உற்சவர்மூர்த்தி, "கல்யாண ஶ்ரீநிவாஸர்" என்ற திருநாமத்துடன் ஶ்ரீதேவி பூமிதேவி சமேதராகக் காட்சியளிக்கிறார்.
இவர்களைத் தவிர,"போக ஶ்ரீநிவாஸ"ரும் சந்நிதியில் அழகாகச் சேவை சாதிப்பதைக் காண முடிகிறது..
பெருமானின் திருவடி தரிசனம், விக்ரஹம் என்ற தோற்றத்தையும் மறக்கச்செய்து "நேரில் எழுந்தருளினானோ!.." என்று மயக்குவதாக இருக்கிறது!..
தனது பிறந்தகமான இந்த பூமியில், தனி ஸந்நிதியில் பத்மாவதி தாயார் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில், மஞ்சள் சரடுகள் மின்னக் காட்சியளிக்கிறாள்!..
"எழுத்தில் வடிக்க இயலாத என்னழகை, நேரில் வந்து தரிசித்தால் ஓரளவேனும் நீ பிடித்து விடலாம்!..."
....என்று தனது அத்புதமான அழகினால், மயங்க வைக்கிறாள் இந்த மாதரசி!
விளம்பி வருஷம் வைகாசி மாதத்து உத்திர நக்ஷத்திரம் அன்று பெருமாளுடன் இவள் திருமணம் கண்டதாகக் கூறுகிறார்கள்..
திருச்சானுரில் உறைகின்ற அலர்மேல் மங்கை வேறு, இந்தப் பத்மாவதி தாயார் வேறு என்றும் இங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்..
திருச்சானூரில் அருள்பவள் மஹாலக்ஷ்மியின் திருவவதாரமான "அலர்மேல் மங்கை" என்றும்,
இங்கு உறைபவள் பூமாதேவியின் அம்சமான "பத்மாவதி" என்றும் இவர்கள் வேறுபடுத்திக் கூறுகிறார்கள்..
தாயார் சந்நிதிக்கு வெளியே, அவளது கல்யாணத்துக்கு மாவு அரைத்த மிகப் பெரிய இயந்திரத்தை வைத்து, இன்றளவும் பேணி வருகிறார்கள்..
ப்ரகாரத்தில் கோதை நாச்சியாருக்காக, தனிச்சந்நிதி ஒன்றும்,
சீதா இலக்ஷ்மண சமேத ஶ்ரீராமச்சந்திர மூர்த்திக்கான தனிச்சந்தியும் காணப்படுகின்றன..
திருமலைக்கும் முந்தையதான இந்த கல்யாண வெங்கடேஸ பெருமாள் கோவில், இன்று..
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் மிகவும் அருமையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது..
ஏழு அடுக்கு உயரத்தோடு காணப்படுகின்ற கோயிலின் கோபுர அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதபடி இருக்கிறது!..
திருப்பதி பெருமாள் கோயிலில் நடைபெறுவது போல் கல்யாண உற்சவமும் இங்கே நடைபெறுகிறது...
இவற்றைத் தவிரவும்,
ஆண்டாள் நீரோட்ட உத்ஸவம்,
பங்குனி உத்தர உத்ஸவம்,
வரலக்ஷ்மி விரதம்,
தெப்போத்ஸவம்,
ரதசப்தமி,
யுகாதி என்கிற தெலுங்கு வருஷப் பிறப்பு,
ஶ்ரீராமநவமி,
சித்ரா பௌர்ணமி,
திருவாடிப்பூர உத்ஸவம்,
தீபாவளி,
வைகுண்ட ஏகாதசி பெருவிழா,
கார்த்திகை தீபம்,
தனுர் மாசம்
ஆகியவையும் வெகுசிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது..
அதுவுமன்றி, பெருமானுடன் ஒரே தலத்தில் தாயாரும் எழுந்தருளியிருப்பதால், இத்தலம் திருமணம் ஆகாதவர்களுக்கான மிகச் சிறந்த பரிகாரத் தலமாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது..
வரப்ரஸாதியாக விளங்கும் பெருமானும்...
வாரிவழங்கும் அன்னையாகத் தாயாரும்...
.....இத்தலத்தில் அனுக்ரஹிப்பதால்,
இங்கு தரிசனம் செய்து பெருமாளையும் தாயாரையும் வழிபடுபவர்களுக்குக் கடன் தொல்லைகள் முற்றிலும் நீங்கி, செல்வ வளம் கூடும் என்பது நிதர்சனம் என்ற கூடுதல் செய்தியும் நமக்குக் கிடைக்கிறது!....
வாழ்வில் ஒரு முறையேனும், அன்னையையும் அண்ணலையும் தரிசனம் செய்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முயல்வோமே...
(வளரும்..)
No comments:
Post a Comment