Sunday, August 18, 2024

ஆந்திரா சாம்பார் பொடி

 ஆந்திரா சாம்பார் பொடி செய்வது எப்படி.

தேவையானவை:

காய்ந்த மிளகாய் - 30
மல்லி (தனியா) - அரை கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கொப்பரைத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். (எள், கறி வேப்பிலை, கொப்பரைத் துருவலைக் கடைசியாகச் சேர்த்து வறுக்கவும்). 

ஆறியபின் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். 

இந்தப் பொடியைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். 

ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Saturday, August 17, 2024

ஸ்டஃப்டு சப்பாத்தி

 ஸ்டஃப்டு சப்பாத்தி  செய்வது எப்படி...

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு - 2 கப்
உருளை கிழங்கு - 3
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
பெரிய வெங்காயம் - 2
கரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
குடைமிளகாய் - பாதி
எண்ணெய் - கால் கப்

செய்முறை

உருளைக்கிழங்கை தனியே வேக வைத்து எடுத்து, தோலுரித்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி (வெந்நீர் வேண்டாம்), சிறிது எண்ணெய்யும் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை 30 நொடி வதக்கவும்.

பிறகு வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் கரம் மசாலா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் போட்டு 3 நிமிடம் கிளறி விடவும்.

மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

ஊறிய மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக உருட்டி சற்று தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.

பின்னர் அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு மசாலாவை வைக்கவும்.

சப்பாத்தியை மடித்து மசாலா வெளியே வராதவாறு மூடவும்.மாவின் தடிமன் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே அளவு இருக்க வேண்டும்.

இம்முறை மிகவும் எச்சரிக்கையாக மிருதுவாக தேய்க்க வேண்டும்.

இல்லையெனில் மசாலா வெளிவந்து மாவுடன் பிரிக்க முடியாதபடி சேர்ந்துவிடும்.

தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

திருப்பிப் போட்டு, தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய்யை ஓரங்களில் இட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். சாஸ் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

Saturday, August 10, 2024

காய்கறி அவியல்

 ​​காய்கறி அவியல் 😍

 கேரளா ஸ்பெசல் 😍

  🍱தேவையானவை

வாழைக்காய் - 1
முருங்கைக்காய் - 2
கத்தரிக்காய் - 3
அவரைக்காய் - 6
மாங்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 2
தயிர் - 2 க‌ப்
தேங்காய் - 1
பச்சைமிளகாய் - 10
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

🍴செ‌ய்முறை 👇

காய்க‌றிகளை நன்றாகக் கழுவித் தோல் நீக்கி ‌நீளவா‌க்‌கி‌ல் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள். 

அளவாக நீர் ஊற்றி உப்பையும் போட்டுக் கலக்கி அடுப்பில் வைத்து வேக விடுங்கள்.

தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், சீரகம் முதலியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

காய்கறிகள் பாதி வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கிவிடுங்கள். 

அதன்பின் காய்கறிகள் நன்கு வெந்ததும் தயிரை ஊற்றிக் கலக்கிவிடுங்கள். 

பத்து நிமிடங்களுக்குப் பின் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கலக்கி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடுங்கள்.

Friday, August 9, 2024

பருப்பு அடை

 பருப்பு அடை செய்வது எப்படி ...

தேவையான பொருட்கள் ::::

▢150 கிராம் பச்சரிசி ▢150 கிராம் துவரம் பருப்பு ▢200 gram வெல்லம் ▢எண்ணெய் தேவைக்கேற்ப ▢1 சிட்டிகை உப்பு 

செய்முறை::::

 ▢ அரிசியையும்,துவரம் பருப்பையும் சம அளவில் எடுத்துகழுவி வைக்கவும். முதலில் கழுவி அளவில் அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு இட்லி மாவு பதத்தில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மையாக அரைக்க வேண்டாம். 

▢ இதனுடன் தேவையான அளவு இடித்த வெல்லத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 

▢ தோசைக் கல்லை காய வைத்து இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மாவை சிறிது மொத்தமாக அடை போல் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும். பின் திருப்பி போட்டு வேக விடவும். 

▢ இதோ ஹெல்தியான துவரம் பருப்பு வெல்ல அடை தயார். மாலை நேரத்திற்கு ஏற்ற இனிப்பு வகை இது. 

▢ இந்த துவரம் பருப்பு வெல்ல அடை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். உப்பு சிறிது சேர்ப்பது இனிப்பின் சுவையை கூட்டுவதற்காக மற்றும் இனிப்பு போதவில்லையெனில் சர்க்கரை கூட சிறிது சேர்த்து கொள்ளலாம். முக்கியமாக இனிப்பு சேர்ப்பதால் அடிப்பிடிக்கும், லாவகமாக எடுத்து திருப்பி போடவும்..

பருப்பு பொடி

 *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*

   *·.·´ பகிர்வு:·.·*

   *🌹மல்லிகா*🌹       

வீடே மணமணக்கும் பருப்பு பொடி செய்வது எப்படி ....

பருப்பு பொடி 

தேவையான பொருள்கள் 

துவரம் பருப்பு - 200 கிராம் 
மிளகு - 2 ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறிது
வர (நீள) மிளகாய் - 5 .
கல்லு உப்பு - தேவைக்கு

 வாணலியை அடுப்பில் வைத்து, சூடேறியதும், ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டு, கட்டி பெருங்காய  கட்டியை பொரிக்க வேண்டும்.

பருப்பு, மிளகாய், மிளகு எல்லாம் வாணலியில் போட்டு எண்ணெய் இல்லாமல் சிறு தீயில் சிவக்க வறுக்கவும்.

மிளகாயை கையில் வைத்து நசுக்கி பார்த்தால் மிளகாய் உடையணும். இதுதான் சரியான வறுபட்ட பதம்.

ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு, viper ல் வைத்து அரைக்கவும். மிக்ஸிய  ஃபுல்லா ஓட  விட்டால்  சூட்டில் taste காணாமல்  விடும்.

சற்றே காற்றாட வைத்திருந்து, பிறகு டப்பாவில் மாற்றி வைக்கலாம்....

   *·.·´ பகிர்வு:·.·*

   *🌹மல்லிகா*🌹       

*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

திமிருக்கு அரசன் 4

 திமிருக்கு அரசன் 4 

சக்திவேலுடன், ருத்ரா பைக்கில் ஈச்சனாரியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தாள். கடும் சினத்தின் காரணமாக முகம் சிவந்து 'ஜிவுஜிவு' என்று மாலை வெயிலில் பளபளத்தது. சக்தி ரியர்வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தவன் சிரித்துக் கொண்டான். நல்லவேளையாக அவன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவனின் சிரிப்பு அவளுக்குத் தெரியவில்லை. வண்டியில் ஏறியதிலிருந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, இருவரும். 'இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். இப்புடி  ஒரு அமைதிப் பேரணி(!?) தேவையாடா சக்தி உனக்கு?' என்று அவனே, அவனைக் கலாய்த்துக் கொண்டான். ஹோட்டலை விட்டு வெளியே வந்தவள், முதலில் பார்த்தது தன் அண்ணன் கதிரைத்தான்.  'இவன் எங்கே இங்கே ? என்ன சொல்வானோ?'  என்று பயந்தாலும், ஒருபக்கம் நிம்மதியாய் இருந்தது. என்னவோ தன்னைக் காக்க வந்த ரட்சகன் போல் நினைத்துக்கொண்டு அவனுடன் வரச்சொல்லி விடாமல் பேசிக் கொண்டிருந்த அந்த வினோத், அவளது தோழி கல்பனாவின் அண்ணனிடமிருந்து பிரசினையில்லாமல்  தப்பிக்கும் வழியைத் தேடியவளுக்குக்  கதிரைக் கண்டதும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சக்தி? ' இவனெப்படி இங்கே?' என்று யோசித்தாள். வெளியே வந்த ருத்ராவுடன் வந்த வினோத்தைப் பார்த்த கதிர் 'இவனா?' என்று அதிர்ச்சியானான். ருத்ராவை அவன் ஃபாலோ செய்தபோது அவனை எச்சரித்து அனுப்பியதும்  கல்பனா, அண்ணனுக்காக மன்னிப்புக் கேட்டதும் நினைவுக்கு வந்தது. ருத்ரா வலியப் போய் மாட்டி இருப்பதைப்  புரிந்து கொண்டவனுக்கு சக்தியின் மேல் நம்பிக்கை அதிகரித்தது. "அண்ணா" என்று அவள் அழைத்ததுமே சக்திக்கு அவளது அவஸ்தையான நிலை புரிந்து விட்டது. ஆனால் கதிருக்கோ அவள் யாரிடமும் சொல்லாமல் இங்கு வந்தது கோபத்தைதான் ஏற்படுத்தியது. "இங்க எப்படி வந்த ?" " வேலண்ணனோட(டிரைவர்)". "இவங்களோட என்ன செய்யுற?" " இல்லண்ணா. சும்மா ஃப்ரெண்டைப் பார்க்கலாம்னு….", கொஞ்சம் தயக்கத்துடனே பதிலளித்தாள். " இந்தப் பொறுக்கிதான் நீ பார்க்க வந்த ஃப்ரெண்டா?" "நான் …." என்று ருத்ரா சொல்ல ஆரம்பிக்க, "யாருடா பொறுக்கி? உன் தங்கைதான் அவளுக்குத் தெரியாம கல்யாணம் பேசிட்டாங்கன்னு அழுதா. போனா போவுது காப்பாத்தலாம்னு வந்தா, என்று கதிரின் சட்டையைப் பிடித்திருந்தான் வினோத். சக்தி அருகில் வந்து, இருவரையும் விலக்கியவன், "ருத்ரா, அவங்களோட போகப் போறயா? இல்லை வீட்டுக்கு வர்றியா?" என்று கேட்ட கேள்வியில் கதிர் டென்ஷனாகி விட்டான். 'இவன்  பாட்டுத் தூண்டிவிட்டு  ருத்ரா முரட்டுத்தனமாக ஏதேனும் செய்தால், அப்பாவிற்கு யார் பதில் சொல்வது?' இதற்குள் வினோத், "நீ யார்றா? கூப்பிடாமலே நாட்டாமை பண்ண வர?", என்றான். "ருத்ரா, நான் யாருன்னு நீயே சொல்றியா, இல்ல நான் சொல்லவா?" ருத்ராவிற்குப் பிடிக்கவில்லை என்றாலும், கதிரின் எச்சரிக்கைப் பார்வையும், வினோத்தின் விபரீதத் திட்டமும் , இவை இரண்டையும் விட சக்தியின் இறுகிய குரலில் இருந்த ஏதோ ஒன்றும்  "இவர்…..இவர்தான் ...என் ஃபியான்சே". "நல்லா உறைக்கறா மாதிரித் தமிழ்ல சொல்லு" - சக்தி. அவனை முறைத்தாலும், "இவர்தான் எனக்கு நிச்சயம் பண்ணி இருக்கற மாப்பிள்ளை" என்றாள். கல்பனா, 'அட லூசே, இவரைக் கட்டிக்கவாடி உனக்குக் கசக்குது?' என்ற பார்வை பார்த்தாள். கதிர் முறைத்துக் கொண்டிருக்க , சக்தி வினோத்திடம் கேலியாக, "கிளம்பறது", எனவும் அவன் முறைக்க, " என்ன லுக்கு? உன் தங்கச்சிக்காகப் பாக்கறேன்.  உங்கப்பா சாமிதுரை என்னோட கஸ்டமர்தான். அவர்கிட்ட பேசட்டுமா? இல்ல ஏசி கரிகாலன் என் க்ளாஸ்மேட்தான் அவருக்குப் பேசவா?" எனவும்  கல்பனா வினோத்தை இழுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள். மூவரும் அமைதியாகிவிட, சக்தி, "சரி கதிர், நான் வறேன்" என்று கிளம்பவும், கதிர், "சக்தி,  எனக்கு மார்க்கெட்ல வேலை முடியலை. கண்ணனை எண்ணெய் பேரலோட நிக்கவச்சிட்டு வந்திருக்கேன். நீங்க வீட்டுக்குதான் போறீங்கன்னா ருத்ராவை வீட்ல விட்டுற முடியுமா?" என்றான் தயக்கத்துடன். சக்தி ஒருகணம் திகைத்தவன், "நான் பைக்ல வந்திருக்கேன்"  என்று ருத்ராவைப் பார்த்தான். அதிர்ச்சியுடன் கதிரைப் பார்த்தவள், "அண்ணா, நான் ஆட்டோல போய்க்கறேன்" . "ஒண்ணும் தேவை இல்ல. என் கோபத்தைக் கிளறாம  ஒழுங்கா சக்தியோட போ. வீட்ல போய் அப்பாவை டென்ஷன் பண்ணாத. நாம மூணு பேரும் டிபன் சாப்பிட்டு நான்தான் சக்தியோட உன்னை அனுப்பிச்சேன்னு நானே சொல்றேன். இந்த ஒரு தடவையாவது நான் சொல்லுறதை மட்டும் செய்." அதன் விளைவே இப்போது இந்த பைக் பயணம்.  முதலில் அவனுடைய ஃபேக்டரியும்,  பிறகு அவனுடைய வீடு ஊருக்குள்ளும் அதைத்தாண்டி பண்ணைக்குள் பரமேஸ்வரனின் வீடும் இருந்தது. அவனது ஃபேக்டரி வாசலில் பைக்கை நிறுத்தியவன் , "ஒரு அஞ்சு நிமிஷம், சின்ன வேலை. உள்ள வா" என்றான். " நான் இங்கயே இருக்கேன்".

மாலை நேரம் ஆறுமணியை நெருங்கியதால் வீட்டுக்குக் கிளம்பிய தொழிலாளர்கள் , இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்ல, அவளைக் குறிப்பாகப் பார்த்தவன், உள் நோக்கி நடக்க ஆரம்பிக்க, எரிச்சலுடன் பின் தொடர்ந்தாள். (' பெரிய்ய இவுரு') அவனது அறையில் கம்ப்யூட்டரில் எதையோ பார்த்துவிட்டு, பென் டிரைவை எடுத்துக் கொண்டு, லாக் செய்து விட்டு ஃபேக்டரியை லாக் செய்யவைத்து சாவியை வாங்கிக் கொண்டு, இரவு வாட்ச்மேனிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சரியாக ஐந்து நிமிடத்தில் வந்தான். ருத்ராவிற்கு அவனது வேகமும் ஆளுமையும் வியப்பை அளித்தது. " லேப்டாப்னு ஒண்ணு இருக்கு தெரியுமா? " என்றாள் கேலியாக. " அது பேக்ல இருக்கு. சிசிடிவி ரெகார்டிங்கைதான் பென்டிரைவ்ல எடுத்தேன். ஏன்னா பதினோரு மணிக்கே நான் சிட்டிக்கு போய்ட்டேன்". பிறெகென்ன?' வாயை மூடிப் பேசவும்' தான். பிறகு மீண்டும் பைக் பயணம். மௌனம். அவளது வீட்டுக்கு முன்னால் வந்து நிறுத்தியவன், , ருத்ரா, உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னா நேரே உங்கப்பா கிட்ட போய் சொல்லி நிறுத்து. வாலண்டியராப்போய் வம்பை விலைக்கு வாங்காத", என்று விட்டு பைக்கில் பறந்து விட்டான். ********************** புதன் கிழமை காலை சரியாகப் பதினோரு மணிக்குப் பரமேஸ்வரன் குடும்பத்தினர், ராமலிங்கம் குறிப்பிட்ட  நகைக்கடைக்குச் சென்றனர். ராமலிங்கம், சொர்ணா, அப்பத்தா, குழந்தையுடன் வளர்மதி வந்திருந்தனர். சக்தி, செந்தில் இருவரையும் காணவில்லை. நல்ல நேரத்தில், தாலிக்குப் பொன் கொடுத்தனர். பிறகு மாங்கல்யத்தைக் கோர்க்க  ருத்ராவை கொடி டிசைன் பார்க்கச் சொன்னார், சொர்ணா. தாங்களே செய்வதாகக் கூறிய பரமேஸ்வரனிடம், "சம்பிரதாயப்படி நாங்கதான் கூறையும், தாலியும் வாங்கணும். மத்தது உங்க வசதிப்படி செய்யுங்க" என்றார் அப்பத்தா. ருத்ரா வேண்டா வெறுப்புடன் காட்டிய டிசைன்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாகப் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு டிசைனைத் தேர்ந்தெடுக்க, பத்து பவுனில் வாங்கினார்கள். அப்போது சக்தி கடைக்குள் நுழைந்தான். வந்தவனிடம், வாங்கியதைக் காட்டினர். நன்றாயிருப்பதாகத் தலையசைத்தவன், ருத்ராவைப் பார்த்தான், அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்றறிய. அவளோ 'யாருக்கு வந்த விருந்தோ?'  என்றிருக்க விட்டுவிட்டான். வளர்மதியும், ரமாவும் நட்புடன் பேச ஆரம்பித்துவிட்டனர்.  சொர்ணா, வளர்மதி, ரமா, பரமேஸ்வரன் எல்லாரும் ருத்ராவுக்கு சின்ன சின்ன நகைகள், மெட்டி, கொலுசு, வெள்ளியில் சில பூஜை சாமான்கள் என வாங்கிக் கொண்டிருக்க, கதிரும், ராமலிங்கமும் அவரவர் வாங்கியதற்கு பில் போடச் சென்றிருக்க, சக்தி அம்முவை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். இவன் வயிற்றில் கிச்சுகிச்சு மூட்ட நான்கைந்து அரிசிப் பற்களுடன் கிளுக்கிச் சிரித்தது குழந்தை. ருத்ரா அவன் குழந்தையுடன் விளையாடுவதை ஆச்சரியமாகப் பார்த்தாள். ஏனென்றால், ருத்ராவிற்குக் குழந்தைகளுடன் பழக்கமுமில்லை, ஆர்வம், ஆசையும் இல்லை. சக்தி எந்தவித இறுக்கமுமின்றிக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நகைக் கடையிலேயே மணி இரண்டை நெருங்கியது. எனவே அனைவரும் ஒரு நல்ல ஹோட்டலுக்குச் சென்றனர். இவர்கள் சாப்பிட ஆரம்பித்த சிறிது நேரத்தில் செந்தில் அவன் தங்கை நந்தினியை அழைத்துக் கொண்டு வந்தான். " இதான் என் பேத்தி, நந்தினி' என்றார் அப்பத்தா. ரமா, கதிர்,பரமேஸ்வரன் ஏன் ருத்ராகூட நந்தினியைப் பார்த்துத் திகைத்தனர். பத்தொன்பது வயது இளமையுடன்,  ஆளை அசரடிக்கும் அழகுடன் இருந்தாள் நந்தினி. எல்லாருக்கும் வணக்கம் சொன்னவள், " ஹாய் அண்ணி" என்றாள் ருத்ராவிடம். 'அண்ணி' என்ற அழைப்பில் ஒருநிமிடம் ஜெர்க் ஆனவள், ' ஹாய்' என்றாள் மெதுவாக. அடுத்து நந்தினி நேராக ராமலிங்கத்துக்கும் சக்திக்கும் நடுவில் போய் உட்கார்ந்தாள். "குட்லி அடிக்க எதுக்குடி காலேஜுக்குப் போன?" என்றான் சக்தி. "அம்மாதான் லீவ் போட விடலை". சக்தி வெயிட்டரை அழைத்தவன், செந்திலுக்கு மீல்சும், நந்தினிக்கு ஒரு சிக்கன் நூடுல்சும் ஆர்டர் செய்தான். ஏற்கனவே  அவளைக் கேட்காமல் பரமேஸ்வரன்  மீல்ஸ் ஆர்டர் செய்ததில் கடுப்பில் இருந்த  ருத்ரா நந்தினிக்கு சக்தி ஸ்பெஷலாகச் சொன்னதில் எரிச்சலானாள். பிறகு ஒரு பட்டுக்கடலுக்குச் சென்றனர். ருத்ரா, விலை கூடுதலாக எடுத்து அவர்களைத் திணறடிக்க முடிவு செய்து, எதுவும் பிடிக்காமல் நேரம் கடத்தினாள். செந்தில் வளர்மதியும், கதிர், ரமாவும் அவர்களுக்கான புடவை, உடைகளை எடுத்தனர். சொர்ணாவும், அப்பத்தாவும் அவர்களுக்கு, சம்பந்தி மரியாதைக்கு, தாய்மாமனுக்கு, உறவினர்களுக்கெல்லாம் கூட எடுத்துவிட்டனர். சக்தி ரொம்ப நேரம் தேடி எலுமிச்சைப் பச்சையில் ஆகாயநீல பார்டர் போட்ட புடவையை எடுத்துக்கொண்டு வந்தான். புடவை மிக அழகாக இருந்தது. சக்தி, "ஃப்ரூட்டி, இது நல்லா இருக்கில்ல?" என்றான் நந்தினியிடம். "சூப்பரா இருக்கண்ணா". " உனக்குதான்" " எனக்குப் பட்டுப்பாவாடைதான் வேணும்" "வயசாச்சுல்ல. இனிமே பாவாடைல காசு போடக்கூடாது. புடவைதான்" என்றார் சொர்ணா. சக்தி "நான் அப்புறமா வாங்கித்தரேன் ஃப்ரூட்டி . இப்ப இதை வாங்கிக்கோ" என்றான். வீடே நந்தினியைத் தாங்குவதைக் கண்டு கடுப்பானாள் ருத்ரா. "கல்யாணம் எனக்கா? இல்லை நந்தினிக்கா? அவளுக்கு ஒரு புடவை வாங்க  இத்தனை ரகளையா?" என்றாள் ஆத்திரத்துடன். பதறிய பரமேஸ்வரன், "மன்னிச்சுருங்கம்மா, என்று அப்பத்தாவிலிருந்து அம்முவரை அப்பாலஜி கேட்டார். கதிர் ருத்ராவை முறைக்க, சக்தி அவளருகில் வந்தவன், "மூணு மணி நேரமா ரெண்டுபேர் வீட்லயும் தேவையான எல்லா ஜவுளியும்  எல்லாருக்கும் வாங்கியாச்சு. உன்னைத்தவிர". "உன் கோபத்தை, யார் மேல வேணாக் காட்டுவியா? இப்ப மரியாதையா எங்க வீட்ல ஸாரி சொல்லு. இல்ல நாங்க வெளில போய்ட்டே இருப்போம். அதனால உங்கப்பாக்கு ஏதாவது ஆனா நான் பொறுப்பில்லை"  உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் ", என்றான் மெதுவான குரலில். கடையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். முள்ளின் மேல் நிற்பதுபோல் உணர்ந்தவள், வேறு வழியின்றி, அப்பத்தாவிடமும்  சொர்ணாவிடமும் வந்து "ஸாரி" என்றாள். இரண்டு குடும்பங்களும் திறந்த வாயை மூடாமல் பார்க்க, சக்தி ருத்ரா பார்த்த ரேஞ்சில் இல்லாமல் சுத்தமான ஜரிகையில் அளவான பார்டருடன் ஐந்து புடவைகளை எடுத்தான். அரக்குக் கலரில் தங்க ஜரிகை மற்றும் புட்டாக்களுடனிருந்த ஒரு கெட்டிக்கரைப் புடவையை முகூர்த்தத்திற்கு எடுத்தான். சொர்ணாவிடம் "அம்மா இது நாம வாங்கறது. வேறெதுவும் வேணுமா?" " நல்லாருக்கடா. இது ஒண்ணுதான் நம்ம சைட்லேர்ந்து." ரமாவிடம்," உங்க வீட்ல எடுக்கறதா இருந்தா இதுல இருந்து பார்க்கச் சொல்லுங்க." ருத்ரா மனதிற்குள் சக்தியைப் படுக்க வைத்து அவன்மீது தாண்டவமாடிக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒரு  மன்னிப்பைக் கேட்க விரும்பாததால், ரமாவிடம் "எத்தனை புடவை?" என அவள் "நான்கு" என்றாள். அவன் எடுத்து வைத்ததிலிருந்து நான்கை தேர்ந்தெடுத்தாள்.  சக்தி, ஒரு எம் எஸ் நீலத்தில் அரக்கு பார்டர் போட்ட புடவையை எடுத்தவன் அதைத் தங்கள் பில்லில் போடச்சொன்னான். பிளவுசை எடுத்துவிட்டு முந்தானையில் குஞ்சம் போட்டு வந்தபிறகு, அந்தப் புடவையை நேராக ருத்ராவிடம் கொடுத்தான். " இது என்னோட சாய்ஸ்", எனவும் ருத்ராவுக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே புரியாமல் முழிக்க, "அண்ணி, செம எக்ஸ்பிரஷன்" என்றாள் நந்தினி. ருத்ரா முதன்முறையாகக் கூச்சத்தில் முகம் சிவந்தாள். 'இவனென்ன எல்லாரும் இருக்கும்போதே இப்புடிப் பண்றான்?' என்று எண்ணினாள். (தனியா குடுத்திருந்தா அவனை வெச்சு செஞ்சுட மாட்டே?). ருத்ராவின் ஆங்காரத்தில் டென்ஷனான அவள் குடும்பத்தினர், நிம்மதியுடன் கிளம்பினர். கதிர், "சக்தி உங்களுக்கு இன்னும் டிரெஸ் எடுக்கலையே?" செந்தில், "அதை நானும்,சக்தியும் பாத்துக்கறோம். டயம் சொல்றேன். முடிஞ்சா நீங்களும் வாங்களேன்" என்றான். மறுநாள் இதைமுன்னிட்டு மூவரும் மீண்டும் சந்தித்தனர். கதிரிடமிருந்து ருத்ராவின் ஃபோன் நம்பரை வாங்கியவன், உடனேயே, அவளுக்கு ஒரு மெஸேஜ் கொடுத்தான். இரண்டு குத்துக்களும், இரண்டு கோப இமோஜிக்களும் பதிலாய் வந்தது. திருமண நாள் வரை இருவரும் இமோஜிக்களாலேயே சண்டை போட்டுக் கொண்டனர். ருத்ரா, கோபத்துடன் இருந்தாலும் அவனது எல்லா மெஸேஜூக்கும் பதிலளித்தாள். இருவரது வீட்டிலும் ஏற்பாடுகள், அழைப்புக்கள், திருமணத்திற்கு முன்பான சடங்குகள். திருமணநாளும் வந்தது. *********************** செந்தில் சொன்னதைப்போல் எல்லா ஏற்பாடுகளும் ஒரு குறைவுமின்றி செய்திருந்தனர். வீட்டின் முன்னாலும், பக்கவாட்டிலும் பந்தல் போடப்பட்டுப் பாரம்பரிய அலங்காரத்துடன் இருந்தது. வீடு பெரிதாகவே இருந்தது. திங்கட்கிழமை என்பதால் காலை ஆறுமணிக்கெல்லாம் சக்தியின் மாமா, மாமி, ஒன்றுவிட்ட அத்தை, அப்பத்தாவின் தங்கை, அவரது கணவர், செந்தில், வளர்மதி அனைவரும் சென்று பெண்ணை அழைத்து வந்தனர். ஒன்பது மணிக்குமேல் சடங்குகள் தொடங்கி சரியாகப் பத்து இருபதுக்குத்  திருப்பூட்டி ருத்ராவைத் தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான் சக்திவேல். திருமணச் சடங்குகள் முடிந்து அவர்கள் வீடே என்பதால் சாப்பிடும் முன்னரே இருவருக்கும் ஆரத்தி எடுத்து, ருத்ராவை விளக்கேற்றச் செய்தனர். பாலும், பழமும் கொடுத்தார்கள். சாப்பாடு ஆனபின் ருத்ராவை நந்தினியும், வளர்மதியும் ஒரு அறையில் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அது தங்களுக்கான அறையில்லை என்று தெரிந்து கொண்டாள், ருத்ரா. காலையில் உறவினர்களும், நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பரமேஸ்வரனிடம் வேலை செய்பவர்களும், சக்தியின் ஃபேக்டரியில் வேலை செய்பவர்களும் மாலை நான்கு மணிக்கு வரவேற்பில் கலந்து கொண்டனர். வரவேற்பில் காபி, ஸ்வீட், காரம், ஐஸ்கிரீமும் கையில் ஒரு கிலோ பிரியாணி பார்சலும், ஒரு லட்டுவும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார், ராமலிங்கம். இந்த யோசனையைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். ஏழு மணிக்கு வரவேற்பு முற்றிலுமாக முடிந்திருக்க, இரண்டு பக்கமும் நெருங்கிய உறவினரே மீதமிருந்தனர். இரவுக்கும், கேசரி, இட்லி, உப்புமா, சட்னி, சாம்பார் என ஏற்பாடு செய்திருந்தார்கள். எட்டுமணிக்கு சக்தியும், ருத்ராவும் பரமேஸ்வரனின் வீட்டிற்டுச் சென்றனர். அங்கும் ஆரத்தி எடுத்து பாலும்பழமும்  கொடுத்தனர். மாடியில் ருத்ராவின் அறை அவர்களது பிரத்யேக இரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உறவுப் பெண்கள் ருத்ராவிடம், ஏதோ அவளுக்கு வராத அதிருஷ்டம் வந்ததுபோல் சக்தியைப் புகழ்ந்தும், இருவரையும் இணைத்தும் கேலி பேசினார்கள். களைத்துப் போயிருந்த ருத்ராவுக்கு எரிச்சல் மிகுந்தது. சக்திக்கு, நந்தினியைத்தவிர அனைவரும் கோபப்படாமல் பொறுத்துப் போகும்படி அட்வைஸ் செய்தனர். "அப்பத்தா! இது உனக்கே ஓவரா இல்ல?" என்று சிரித்தான். " இல்லப்பா. ரெண்டு பேரும் முட்டிக்கிட்டே இருந்தா எப்படிக் குடும்பம் நடத்தறது?. அவளுக்கு இன்னும் புரிஞ்சுக்கற பக்குவம் வரலை. புருஷன் பொண்டாட்டிக்குள்ள யார் விட்டுக் குடுத்தாலும் தப்பில்லை. ஆனா ஒருத்தரை ஒருத்தர் வெளியாளுங்கக் கிட்ட விட்டுக் கொடுக்கக்கூடாது. இந்த விஷயத்துல நானே மூணாம் மனுஷியாதான் இருக்கணும், உங்களுக்கு" என்றார் சொர்ணா. " அம்மா" என்றவனை," நல்லா, சந்தோஷமா இருங்க ரெண்டு பேரும். ஆரம்பத்துல ஒரு மாதிரி இருக்கும். போகப் போக…"  என்பதற்குள் " பழகிடும்" என்றுகூறி செந்தில் வளர்மதியின் முறைப்பைப் பெற்றுக் கொண்டான். ருத்ராவை நெருங்கி அறிவுரை சொல்லும் தைரியம் ரமாவுக்கில்லை. அவளது அம்மா மட்டும், "பாத்து, சாமர்த்தியமா, கொஞ்சம் பொறுமையா இரு ருத்ரா. சீக்கிரம் புள்ளை பொறக்கட்டும்" என்றார்.

ருத்ரா, பலவித சிந்தனை மற்றும் மனநிலையுடன் உள்ளே நுழைந்தவள், இத்தனை வருடங்களாகத்  தனக்கு மட்டுமே சொந்தமாக இருந்த அறையில், அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மிகச் சுவாதீனமாக அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்தாள். சக்தியும் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

திமிருக்கு அரசன் 3

 திமிருக்கு அரசன் 3 

'எனக்கு சக்தி கிட்ட பேசணும்' என்ற ருத்ராவின்  குரலில் ராமலிங்கம் குடும்பத்தினர் ஒன்றும் வியப்போ, அதிர்ச்சியோ அடையவில்லை. மாறாக இதை எதிர்பார்த்தும், இயல்புபோலும் அமர்ந்திருந்தனர். முதல் பந்து வெறும் 'நோ பால்' ஆனதில் கடுப்பானாள் ருத்ரா. 'அம்மணிக்கு நம்ம பேரு ரிஜிஸ்டர் ஆயிருச்சுடோய்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு வேடிக்கை பார்த்தான் சக்திவேல். பரமேஸ்வரன் சமாளிக்க விரும்பி, "அதுக்கென்னம்மா பெரியவங்க பேசிமுடிச்சப்புறம் நீங்க பேசுங்க. ரமா, எல்லாருக்கும் காபி, பலகாரம் கொண்டு வாம்மா" என்றார். " சம்பந்தம் உறுதியாகாம கைநனைக்கக் கூடாதுன்னு தெரியாதா இவங்களுக்கு?" என்றாள் ருத்ரா. சொர்ணாவும், செந்தில்வேலும் தங்களைமீறி எழுந்துவிட்டனர். பதறிவிட்டார் பரமேஸ்வரன்.  ராமலிங்கமோ சந்திரமுகி படத்தில் வரும் வடிவேலைப்போல் 'ஒறஞ்சுபோய்' உட்கார்ந்திருந்தார். அப்பத்தாவும், சக்தியும் பார்த்துக்கொள்ள, சக்தியிடம், தலையசைத்தார் அவர். "எனக்கு அவங்களோட பேசறதுக்கு முன்னாடி உங்களோட பேசணும். உங்க கூட யார் இருக்கணும்னு நீங்க முடிவு செஞ்சுக்கங்க சார்" என்று ருத்ரா போட்ட  கூக்ளியை பௌல் செய்தான் சக்தி. 'இப்புடி ரெண்டுபேரும் கயிறு இழுத்தா விளங்கிரும்' என்று நொந்து போனார் பரமேஸ்வரன். உறவினர்களெல்லாம் ஏதோ ரஜினிபடம் ஃபர்ஸ் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பதுபோல் திறந்தவாயை மூடாமல் பார்த்தனர், ஸாரிங்க, பார்த்து ரசித்தனர். 'நல்லவேளை முறை என்று பொண்ணைக்கேட்டு அசிங்கப்படலை' என்று அன்பரசனுக்கு அம்புட்டுச் சந்தோஷம். கதிர் நிலைமையைக் கையில் எடுத்துக்கொண்டு , "அப்பா, வாங்க நீங்க, மாமா, நான் மூணு பேரும் ஆபீஸ்ரூமுக்குள் போகலாம். வாங்க சக்தி" என்றான். சக்தி இதற்குள் தன் குடும்பத்தினரைக் கண்களாலேயே ''இதுக்கேவா"' என்பதுபோல் சிரித்து சமாதானம் செய்தான். சக்தி வேல் தன் அப்பத்தாவுடன் எழுந்து அறையை நோக்கி நடக்க, "உங்க வீட்ல பொம்பளைங்கதான்  பேசுவாங்களோ?" என்றாள் ருத்ரா கேலியாக. சொர்ணாவின் அண்ணன் எழுந்து வாசல்பக்கம் சென்றுவிட்டார். பின்னே? திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் "என்னதான் பணமிருந்தாலும் இப்படியா ஒரு பொண்ணு பேசும்? சக்திக்கென்ன தலையெழுத்தா?" என்று சிறிது உரக்கவே முணுமுணுத்துவிட்டுச் சென்றார். "எங்க வீட்ல பெரியவங்கதான் பேசுவாங்க" என்று திரும்பிப் பார்க்காமலே அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுச் சென்றான் சக்தி. "சபாஷ் , சரியான போட்டி" என ரமா தனக்குள் முணுமுணுத்தவள் சொர்ணாவிடம் அமர்ந்து பேச ஆரம்பித்தாள். சொர்ணா ருத்ராவைப் பார்த்து, "இங்க வந்து உட்காரும்மா" எனவும் அதிசயமாகச் சொன்னதைச் செய்தாள். அதற்குமேல் பேசத் தைரியம் இல்லாதவராய் சொர்ணா அமர்ந்திருக்க, ருத்ரா அவர்கள் பெண் கேட்டு வந்ததின் பின்னணியை அவரிடமிருந்தே அறியும் முயற்சியில் இறங்கினாள். " நீங்க என்னைப் பார்த்திருக்கீங்களா?" "இல்லைமா" "உங்க பையன்?" "நாங்க யாருமே  உன்னைப் பார்த்ததில்ல அவரைத்தவிர" என்று ராமலிங்கத்தைக் கை காட்டினார். "அப்புறம் எப்படிப் பொண்ணுகேட்டு வந்தீங்க?" ரமா ருத்ராவை அடக்கமுயல, அன்னையின் உதவிக்கு வந்த செந்தில், " இதை உங்க அப்பாகிட்ட கேளுங்களேன்" என்றான். ஏற்கனவே சக்திதான் மாப்பிள்ளை எனத்தெரிந்ததில் வருந்திய அன்பரசுவின் தங்கை, செந்திலின் கம்பீரமான குரலில் ஈர்க்கப்பட்டாள். அவனையே பார்த்தவளைக் கண்டவன் ஃபோனை எடுத்து வளர்மதியை அழைத்தான். "மதி டார்லிங், அம்முகுட்டி என்னபண்றா? படுத்தாம இருக்காளா? நீயும் நந்துவும் சாப்பிட்டீங்களா?" என்று சத்தமாகப் பேசிக்கொண்டே வாசலுக்குச் சென்று மாமாவுடன் சேர்ந்து கொண்டான். அவனின் டார்லிங் என்ற அழைப்பில் திகைத்த சொர்ணாவும்  ராமலிங்கமும் அந்தப் பெண்ணின் பார்வையைக் கண்டு புன்னகைத்துக் கொண்டனர். ருத்ராவோ 'இவங்க குடும்பத்துல எல்லாரும்  பெரீய்ய மன்மதக் குஞ்சு' என்று முணுமுணுப்பாகத் திட்டியவளின் மனதின் ஏதோ ஒரு மூலையில் சக்தியின் உருவம் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் வந்து போனது. ********************** அறையின் உள்ளே சென்று அமர்ந்தபின் சிறிது மௌனம் நிலவியது. பின் சக்தியே பேச ஆரம்பித்தான். "சார் எங்கப்பா வந்து பேசினா மரியாதையா இருக்காதுன்னுதான் எங்க பாட்டியோட வந்தேன். எங்கவீட்ல மத்தவங்களைவிட இவங்கதான் இந்தக் கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்றாங்க" "........." ஒரு டிடி( Demand draft)ஐ எடுத்து அவர் கையில் கொடுத்தவன், "சார் இது உங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்கானது. இதோட எங்கப்பா வாங்கின கடனை அடைச்சாச்சு. இப்ப இந்தக் கல்யாணம் கடனுக்காக நடக்க வேண்டாம். இன்னும் உங்களுக்கு என்னையும், எங்க குடும்பத்தையும் புடிச்சிருந்தா மேல பேசலாம்" என்றான். சக்தி, கதிரின்  மதிப்பில்  உயர்ந்தான். பரமேஸ்வரன் இதை எதிர்பார்க்கவில்லை, என்பதால் சிறிது யோசித்தார். பிறகு அவரே, "நீ இதை திருப்பிக் கொடுக்க என்னப்பா அவசியம்?" " சார், அடிப்படைல நான் கடனை அடைக்க வந்த மாப்பிள்ளைன்னா உங்க பொண்ணு என்னை மதிப்பாங்களா? இப்ப தெரியலைன்னாலும் பின்னால தெரிஞ்சிடும்". "எப்படி இவ்வளவு பணத்தை ஏற்பாடு செஞ்ச?" "......" அப்பத்தா, "சொல்லுப்பா சக்தி, பரவாயில்லை" என்றார். "நஞ்சப்பா ரோடுல சின்னதா ஒரு ஷோரூம் வைக்கலாம்னு ஒரு கடையை வாங்கி இருந்தேன். அதோட கடனை அடைச்சு நாலு மாசமாச்சு. அதை ரெண்டு வருஷத்துக்கு ஒத்திக்கு குடுத்துட்டேன். என்  க்ளோஸ் ஃப்ரெண்டுதான். ஒண்ணாவே படிச்சோம். குமார் இண்டஸ்ட்ரீஸ் வீட்டுப் பையன் சிவகுமார்" என்று விளக்கமாகவே பதிலளித்தான் சக்தி. அவனே, "நான் சுதந்திரமானவனா இருக்கணும்னு ஆசைப்படறேன். என்னால உங்கபொண்ணை சந்தோஷமா வச்சுக்கமுடியும்னு நான் நம்பறேன். ஆனா…" " சொல்லுப்பா". "அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு. "முதல்ல அவங்க எங்க வீட்ல கூட்டுக்குடும்பமாதான் இருக்கணும்". " இரண்டாவது, நீங்களே உங்க மகளைப் பத்தி சொன்னதுனால சொல்றேன், ஏதாவது பிறந்தவீட்டுக்கு  அவசியமா வரணும்கிற பண்டிகை, சடங்கு, சம்பிரதாயம் தவிர அவங்க இங்க வந்து சீராடறதையோ தங்கறதையோ நீங்க ஆதரிக்கக் கூடாது. இது அட்லீஸ்ட் எங்க வீட்ல அவங்களுக்குப் பிடிப்பு வரவரைக்கும்". மூணாவதை "அப்பத்தா சொல்லுவாங்க" என்றான். " உங்க பொண்ணுக்கு என்ன செய்வீங்கன்னு தெரிஞ்சுக்கவோ, செய்யுங்கன்னு  சொல்லவோ இதைச் சொல்லலைங்க. அதிகமா செய்யவேண்டாம்னு  சொல்றதுக்குதான். ருத்ரா பொண்ணு செல்லமா வளர்ந்தங்காட்டிப் படபடன்னு பேசுது. அதனால சீர் அளவா இருந்தா உங்க பொண்ணுக்குதான் நல்லதுங்க. சக்திக்கு ஒரு தங்கச்சியும், ஒரு அண்ணியும் வீட்ல இருக்காங்க. வீட்ல ஒத்துமை வளரணும்னா  எல்லாரும் ஒரே தட்டுல இருக்கணுங்க", என்று சமத்துவத்தை சிம்பிளாக விளக்கினார். "அங்க யாருக்கும் பொறாமை கிடையாது. செந்தில் பொண்டாட்டியும், இன்சினீயருதான். பிரசவம் சிக்கலானதுல வீட்லயே இருக்குறா. நீங்க ருத்ரா பொண்ணுக்கு எதைச் செய்தாலும் கொஞ்ச வருஷம் கழிச்சுப் பொறுப்பும் பொறுமையும் வந்தபிறகு குடுங்க". "இதுவும் சக்தியோட யோசனைதான். அவன் பணம் எவ்வளவுங்கறதைப்பத்தி பேசக்கூடாதுன்னுதான் எங்கிட்ட சொன்னான். இதெல்லாம் ருத்ராவை சக்திக்கு கட்டினா மட்டும்தான்", என்றார் அப்பத்தா. அவர்களது எளிமையிலும், அக்கறையிலும் பேச்சிழந்து நின்றனர் பரமேஸ்வரனும், கதிரும். கதிரின் மாமா, சக்தியிடம், "ருத்ராவை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டார். " பிடிச்சிருக்கு", என்றுவிட்டுச்  சிறிது தயங்கியவன், "எனக்கு போரடிக்காம பிஸியா வச்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்று சிரித்ததில் மயங்கிய ருத்ராவின் மாமா பரமேஸ்வரனிடம், " மாமா, நீங்க ருத்ராவை சரிக்கட்டுங்க. இவர்தான் உங்க மாப்பிள்ளை" என்றவர், "என்னை சித்தப்பான்னு கூப்பிடுங்க சக்தி" என்றார் நிறைவுடன். ************************* சக்தியும், ருத்ராவும் மாடி ஹாலில் இருந்தனர். நேராகச் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அவன் அமர முடியாதபடி நடுவில் உட்கார்ந்து கொண்டு லேசாக ஆட்டவும் செய்தாள் ருத்ரா. ஒன்றும் பேசாமல் ஜன்னலருகில் போய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான், சக்தி. மௌனத்தில் கழிந்த ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு ஆத்திரத்தையும், அவனுக்குக் கடுப்பையும் கொடுத்தது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ருத்ரா " உனக்கென்ன தகுதி இருக்குன்னு எல்லாரும் பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க? எங்ககிட்ட மாசச்சம்பளம் வாங்குற உங்கப்பாக்கு இவ்வளவு தைரியம் யார் கொடுத்தது?" என்று காட்டமாகக் கேட்டாள். "எங்கப்பா வேலையை விட்டு மூணு நாளாச்சு" என்றவன், " இதுவரைக்கும் எத்தனைபேர் உன்னைப் பொண்ணுகேட்டு வந்திருக்காங்க?" என்றான். "ஏய்ய்" என்றவாறே அவள் வேகமாக எழ ஆத்திரத்தில் ஊஞ்சல் அதிர்ந்து எல்லாப் பக்கமும் ஆடியது. மாடிப்படியில் நின்றிருந்த கதிரும், ரமாவும் ருத்ரா சக்தியை அடித்துவிட்டாளோ என்றுப் பதறினர். "எங்க பணவரவு, சொத்து எல்லாம் உங்கப்பாக்கு அத்துபடி. அப்ப உங்களுக்குப் பேராசை இல்லாம வேறென்ன? உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வாங்கிட்டாரா எங்கப்பா?" 

சத்தமாகச் சிரித்தவன், "யாரை? என்னை? சான்ஸே இல்ல". "பின்ன? நான் வந்து உங்க வீட்ல இருப்பேன்னு நினைச்சியா?" "தாங்க் யூ ருத்ரா" 'இவனென்ன லூஸா?' பார்வை பார்த்தவள், "எதுக்கு?" என்றாள் "கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு" "நான் எப்ப சம்மதிச்சேன்?" "நீதானே இப்போ  வீட்டோட மாப்பிள்ளைன்னா பரவாயில்லை, எங்க வீட்டுல வந்து இருக்க முடியாதுன்ன? " அவன் சரியாக மடக்கியதில் ஒருகணம் திணறியவள், "ரொம்ப ஸ்மார்ட்டுன்னு நினைப்போ? ஒழுங்கா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு ஓடிடு", என்றாள். "என்னைப் பிடிக்கலைன்னு நீயே போய் சொல்லு. ஏன்னா எனக்குப் பொய் சொல்ல வராது". அவன் தன்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னதை உள்வாங்காமல், ஆத்திரம் மீதுற அவர்களுக்காக ரமா கொண்டு வைத்த தண்ணீர் சொம்பை ஓங்கித் தரையில் வீசப்போனவளின் கையைப்பிடித்தான் சக்தி. "எனக்கென்ன பைத்தியமா? சொந்த செலவுல சூனியம் வச்சுக்க? உனக்கு வேண்டாம்னா நீதான் சொல்லணும். மீ எஸ்கேப் . என்ன? கொஞ்சம் அழகா இருக்கியா? அதான் யோசனையா இருக்கு", என்றவன், கீழே இறங்கிப் போயே போய்விட்டான். செய்வதறியாமல் திகைத்து நின்றவளை ரமா வந்து அழைத்துச் சென்றாள். அவளது சம்மதத்தையோ, மறுப்பையோ அவள் தந்தையிலிருந்து யாருமே பொருட்படுத்தவில்லை. இரு நாற்காலிகள் போடப்பட்டு, ஒரு சலவை வேட்டியை விரித்து சொர்ணாவும், அப்பத்தாவும்  தாங்கள் கொண்டுவந்த பூ, பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, கஜலக்ஷ்மி டாலருடன் கூடிய செயின்,  புடவையின் நிறத்தில் கண்ணாடி வளையல்கள் மற்றும் சிவப்பும் பச்சையுமாக இருந்த புடவையின் நிறத்தில் டெரகோட்டா செட் ஒன்றும் சீராக வைத்தனர். ருத்ராவிற்குப் பேசவே வாய்ப்புக் கொடுக்காமல், நாற்காலியில் அமரவைத்தனர் ரமாவும், அவள் பெரியம்மாவும். முதலில் சொர்ணாவும் பிறகு மீசை சித்தப்பாவின் மனைவியும் தொடர்ந்து ரமா, அவரின் தாய், அத்தை, பெரியம்மா என அனைவரும் சந்தன, குங்குமம், அட்சதையுடன் நலங்கு வைத்தனர். ருத்ராவை சக்தி வீட்டினர் கொடுத்த புடவையை உடுத்திவரச் செய்தனர். அத்தை, பெரியம்மா என அவளை அடைகாத்ததில், கொதிநிலையில் இருந்தாலும் எதுவும் செய்யமுடியாமல் இருந்தாள். புடவை அணிந்து வந்தவளுக்கு சொர்ணா சங்கிலியைப் போட்டுவிட்டார். பிறகு " இதையும் போட்டுக்கோம்மா" என்று டெரகோட்டா செட்டிலிருந்து கழுத்தணியை மட்டும் கொடுத்தார். 'டெரகோட்டாவா?' என்று முகம் சுளித்த ருத்ராவின் உறவுகள், அப்பத்தாவின், "சக்தியே செஞ்சது" என்ற வார்த்தையில் ஸ்தம்பித்தனர். அன்பரசுவின் தங்கையின் காதுகளிலிருந்து புகை வராத குறை. பரமேஸ்வரனுக்கு ஒரே பெருமை. ருத்ரா ஒன்றும் ஃபேஷன் ஜுவல்லரி அணியாதவளல்ல. அதனால் அந்த நெக் பீஸின் டிசைனும் நேர்த்தியும் அவளைக் கவர்ந்தது. எனவே மறுக்காமல் போட்டுக்கொண்டவள், தன்னையறியாமல் சக்தியை நிமிர்ந்து பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் டக்கென்று கண்களைச் சிமிட்டினான்.  வெடுக்கென முகத்தைத் திருப்பியவள் டிஜிட்டல் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கதிர் சக்தியைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திச் சிரிப்பதைக் கண்டவள், மீண்டும் முருங்கை மரம் ஏறினாள். (சக்தி, பேசாம  உன் பேரை விக்ரம்னு மாத்திடலாமா?) பின் சக்தியையும் அமரவைத்து தாய் மாமன்கள் இருவரும் இருவருக்கும் பணம் வைத்துக் கொடுத்தனர். சக்திக்கு நிச்சய சீராக ஒரு வேஷ்டி சட்டையும், பிரேஸ்லெட்டும் கொடுத்தார் பரமேஸ்வரன். அவரது முன்னேற்பாடு இந்தத் திருமணத்தில் அவரது தீவிரத்தையும், ஈடுபாட்டையும் ருத்ராவிற்குத் தெளிவாகப் புரியவைத்தது. எதற்கு என்றே தெரியாமல் இதற்கு எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்தாள். அதற்குள், உறவுகளுக்கெல்லாம் நல்ல நேரமும், ஜாதகம், சகுனம் சொல்பவரான மீசை சித்தப்பா, "பரமேஸ்வரா தை முடிய இன்னும் பத்துநாள்தான் இருக்கு. அடுத்த எட்டு நாள்ல, வர்ற திங்கள்கிழமை நல்ல முகூர்த்தம். இல்ல மாசி, வைகாசின்னு பார்க்கவா?" என்றார். 'எட்டு நாளிலா' எனத் திகைத்த சொர்ணா, அப்பத்தா, ராமலிங்கத்திடம், காலம் தாழ்த்த விரும்பாத பரமேஸ்வரன், "ஒண்ணும் பிரசினை இல்லை. நம்ம வீட்டிலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்றார். இடைமறித்த செந்தில்வேல், "நம்ம வழக்கப்படி எங்க வீட்லயே கல்யாணம் நடக்கும் சார். பழைய வீடுங்கறதால ஓரளவு பெரிய வீடுதான் எங்களோடதும். சுத்தியும் இடமிருக்கு. காலையில கல்யாணமும் சாயந்திரம் ரிஸப்ஷனும் வச்சுக்கலாம்" என்றான். அவர்களின் சுயமரியாதையும், திட்டமிடலும் சொந்தங்களைக் கவர்ந்தது. பரமேஸ்வரன் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் சுமையை நினைத்துத் தயங்கினார். சக்தி, "தயங்காம எத்தனை பேரை வேணும்னாலும் கூப்பிடுங்க சார். ஒண்ணும் பிரசினை இல்லை" என்றான் அவரைப் புரிந்தவனாக. 'விட்டா அப்பாவே அவனைக் கட்டிக்குவார் போலயே? மாறி மாறி சொறியறாங்களே?' என்று காய்ந்தாள் ருத்ரா.(பொறாம??!). வேறு சில விஷயங்களைப் பேசி முடிவு செய்த பிறகு தாலி, முகூர்த்தப்புடவை,மற்றப் புடவைகள் எல்லாம் புதன் கிழமை  நாள் நன்றாக இருப்பதால் கடையின் பேரைச்சொல்லிக் காலை பதினொரு மணிக்கு சந்திப்பதாகப் முடிவு செய்து, சக்தி குடும்பத்தினர் கிளம்பினர். பரமேஸ்வரன், ராமலிங்கத்திடம், "கல்யாண செலவுக்குப் பணம் ….." என்றுஇழுக்க, "அதெல்லாம் இருக்குங்க. நல்லா செஞ்சுடலாம்" என்றுவிட்டார் அவர். ********************* தந்தை, தமையன், சக்தி என எல்லார் மீதும் கண்முடித்தனமான கோபத்திலிருந்த ருத்ரா, அவளுடைய கல்லூரித் தோழி ஒருத்திக்கு ஃபோன் செய்ய,அவள் ருத்ராவை மறுநாள் காந்திபுரம் அன்னபூர்ணாவிற்கு வரச்சொன்னாள். மறுநாள் மதியம் நான்கு மணியளவில் ஹோட்டலுக்கு வந்தவள், அவள் தோழியுடன் அவளது உருப்படாமல் ஊரைச்சுற்றும் அண்ணனும் வந்திருந்தான். ஏற்கனவே இவளைக் காதலிப்பதாகச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டவனைப் பார்த்து முகம் சுளித்தாள். ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் தனக்கிருந்த கோபத்தில் அவர்களுடன் உள்ளே சென்றாள். காலையிலிருந்து நண்பனது பிரிண்டிங் பிரஸ்ஸில் உட்கார்ந்து பத்திரிகை அடித்துக் கொண்டு, சக்தியும், ராமலிங்கமும் ஒரு காபி சாப்பிட வந்தவர்கள், வெளியேறும் முன், சக்தி ருத்ராவைப் பார்த்துவிட்டான்.  ஏதோ சரியில்லாதது போல் இருந்தது. தந்தையிடம்," நீங்க பத்திரிகையோட வீட்டுக்குப் போங்கப்பா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு" என்று அனுப்பியவன் ,ஃபோனில் கதிரை அழைத்தான். " நான் சக்தி பேசறேன்.எங்க இருக்கீங்க கதிர்?" " சிட்டில இருக்கேன். ஏன்?" " நான் காந்திபுரம் பஸ்ஸ்டேண்ட் கிட்ட இருக்கற அன்னபூர்ணா வாசல்ல நிக்கறேன், உடனே இங்க வாங்க" " என்னாச்சு?" " நீங்க வாங்க சொல்றேன்". தேங்காயெண்ணய் கொள்முதல் கொடுக்க வந்தவன், மார்க்கெட்டில்தான் இருந்ததால் ஏழே நிமிடங்களில் வந்து சேர்ந்தான். " என்ன விஷயம் சக்தி?"

ருத்ரா உள்ளே சென்றிருப்பதை கூறியவன், "அவனைப் பார்த்தா ஏதோ தப்பா தெரியுது. நான் மட்டும் பேசினா என்மேல இருக்கற கோபத்துல,  உங்க தங்கச்சி அவங்க பக்கமா பேசினா அவங்களுக்குதான் ஆபத்து. அதான் உங்களுக்கு ஃபோன் அடிச்சேன். எங்கப்பாவையும் வீட்டுக்கு அனுப்பிட்டேன்" என்றான். உண்மையிலேயே அவளது தோழியின் அண்ணன், இவர்கள் பேசுவதை வைத்து, ருத்ராவை நைச்சியமாக அவர்களது கெஸ்ட்ஹவுஸுக்குக் கூட்டிச்செல்லும் ஐடியாவைக் கொடுத்துதான் கூடவே வந்திருந்தான். ஏற்கனவே அவர்களது பேச்சு பிடிக்காமல் தப்பிக்க நினைத்த ருத்ரா வெளியேற, கூடவே அவர்களிருவரும் வந்தனர். வெளியில் வந்தவர்களின் முன்னால் போய் நின்றனர் சக்தியும், கதிரும்.