Sunday, April 16, 2023

குயிக் குட்டி போண்டா

 குயிக் குட்டி போண்டா

"சட்ன்னு  குயிக்கா  குட்டி போண்டா 😄"

மதியம்   இட்லி-க்கு  அரைத்து வைத்த  மாவு பாத்திரம்   நான் காஃபி போட வரும் போது கண்களை  உறுத்தியது. 

ஆஹா  எண்ணெய் வைத்து "ஸ்நாக்ஸ்"  செய்து ரொம்ப நாளாயிட்டுதே  என்று உடனடியாக இரண்டு பெரிய வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு சிறிதளவு  சேர்த்து எல்லாவற்றையும் பாத்திரத்தில் கைகளால் நன்கு கலந்தாச்சு

இட்லி  மாவு  4  குழிக்கரண்டி  எடுத்து அதனுடன் கலந்தாச்சு. எண்ணெய் காய வைத்து போண்டா க்களாக போட்டு பொன்னிறமாக பொறிச்சாச்சு. 

போண்டா ஒரே பிடிவாதம் எனக்கு துணையாக ப்ரண்ட் யாரும் இல்லையா என்று கெஞ்சாத குரலில் கேட்க நமக்கு தான் மிகவும்  இரக்க குணம் ஆச்சே?  

😜😜😜😜😜

தேங்காய், பொட்டுக் கடலை , பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து "சட்னி" என்று பெயர் வைத்து "போண்டாவிற்கு ப்ரெண்டாக்கியாச்சு. 

😄😄😄😄😄😄😄

தவலை அடை

 அரிசி - ஒரு ஆழாக்கு
கடலைப் பருப்பு - 
கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல்

தாளிக்க 

கடுகு, உளுந்துஉப்பு - தேவையான அளவு.

அரிசி, கடலைப்பருப்பு, மிளகாய் மூன்றையும் மிக்சியில் பொலபொலவென வெள்ளை ரவை அளவிற்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்குமுன் ஓரிரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் பதம் நன்றாயிருக்கும். அரைத்த ரவையை, உப்புமா கிண்டுவது போல தயார் செய்து கொள்ள வேண்டும்.  கொஞ்சமாய் எண்ணெய் சேர்த்து தாளித்து, ரவையின் அளவிற்கு சரி பங்கு தண்ணீர் சேர்த்து (ஒரு ஆழாக்கு ரவைக்கு ஒரு கப் தண்ணீர் - 200 ml) கிளறிக்கொள்ளவும். உப்புமா போல இல்லாமல் இறுக்கமாக இருந்தால் நல்லது.தவலை அடை தட்டும் முறை.மாவு ஆறிய பின்னர், வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரில் படத்தில் காணும் விதத்தில் தட்டிக் கொண்டு, தோசைக்கல் அல்லது வாணலியில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தவலை அடை தயார்....!!!வெளிப்புறம் மொறு மொறுவெனவும் உட்புறம் நன்கு வெந்து soft ஆக பொலபொலவெனவும் இருந்தால் சுவை நன்றாக இருக்கும்.

மாப்பிள்ளை மயக்கம்

 மாப்பிள்ளை மயக்கம்!

 *கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி* 

மாப்பிள்ளையின் போட்டோவைப் பார்த்ததும் அதிலேயே மனம் லயித்துப் போய் ,பிடித்துப்போயிற்று மாலதிக்கு!

“அம்மா….! அப்பாகிட்ட சொல்லி இந்த இடத்தையே முடிச்சிடுங்க ” என்றாள் உறுதியுடன்.

“சரி மாலதி. உனக்கு ஒரு நல்ல இடம் அமையனங்கிறதுதானே எங்களோட ஆசை. கண்டிப்பா உனக்கு பிடிச்சிருக்கிற இந்த மாப்பிள்ளையையே ஏற்பாடு பண்ணச்சொல்லறேன்.” என்று அவள் அம்மா கூறியதைக்கேட்டு மகிழ்ச்சியின் எல்லையைத்தொட்டாள்.

மாலதி அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவள். கை நிறைய சம்பளம். பெற்றோருக்கு ஒரே செல்ல மகள். வசதிக்கு குறைவில்லை. இருந்தும் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோச குறைபாடு காரணமாக இது வரை பல வரன்கள் வந்தும் பொருந்தவில்லை.

தந்தை வேதாச்சலம் வீட்டினில் நுழையும் போதே “அப்பாடா” என்றார்!

“என்னங்க போன காரியம் ஆச்சா…? ஜாதகம் பொருந்தி வந்திருக்கா…?” எனக்கேட்டாள் கணவனிடம் மனைவி வேதவல்லி.

“பொருத்தம் சரியா இருக்கு. நாளைக்கே பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டேன்.” என்றார் மகிழ்ச்சி பொங்க.

அன்று இரவு மாப்பிள்ளையின் போட்டோவுடன் குடும்பமே நடத்தி விட்டாள் மாலதி.

காலையில் தன்னை அலங்கரித்துக் கொண்டு தயாராய் இருந்தாள்.

மாப்பிள்ளையும்,மாப்பிள்ளை வீட்டினரும் ஒரு காரில் வந்து வீட்டின் முன் இறங்கினர்.

பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன் திருப்தியை இரண்டு வீட்டினரும் பரிமாறிக்கொண்டனர்.

பெண்ணுடன் தனியாக பேச வேண்டும் என்று மாப்பிள்ளை விருப்பம் தெரிவிக்க ,பெற்றோர் சம்மதத்துடன் மொட்டை மாடிக்கு சென்றனர் இருவரும்.

“இத பாருங்க மாலதி… உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் புதுசா ஆரம்பிக்கப்போற ரியல் எஸ்டேட் பிசினஸ் நமக்கு கல்யாணம் ஆன பிறகு பெரிய லாபம் தரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ”என்ற மாப்பிள்ளை வேகனின் பேச்சைக் கேட்டு உச்சி குளிர்ந்து போனாள் மாலதி.

“அதுக்கு கூட ‘மாலதி ரியல் எஸ்டேட்’ னு பெயர் வைக்கலாம்னு இருக்கேன். ஆனா…” என்று இழுத்தான்.

“என்னங்க… எதுவா இருந்தாலும் என் கிட்ட நீங்க சொல்லலாம். எல்லாம் முடிவான பிறகு நமக்குள்ள ஒளிவு மறைவு எதுக்கு?” என்றாள்.

“நான் வாங்கின இடத்தோட அக்ரிமெண்ட் டைம் இன்னும் ரெண்டு நாள்ல முடியப்போகுது. மொத்த பணத்தையும் கொடுத்து எழுதலேன்னா அட்வான்ஸ் பணம் ஒரு லட்சம் போயிடும் அதான்” என்றான்.

“கவலைப்படாதீங்க. நான் ஹெல்ப் பண்ணறேன். என்னோட அப்பா,அம்மாவுக்கு இப்போதைக்கு இந்த விசயம் தெரிய வேண்டாம். என்னோட சம்பளத்துல கிடைச்ச பணம் ஐந்து லட்சம் என்னோட பேர்ல டெபாசிட் பண்ணியிருக்கு. அதுல லோன் போட்டு நாலு லட்சம் எடுக்கலாம். வேணும்னா நாளைக்கே எடுத்து தர்றேன்.” என்று மாலதி சொன்னதும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றான் அவள் வருங்கால கணவன் வேகன்.

அடுத்த நாள் நாலு லட்சம் தனது டெபாசிட் தொகையிலிருந்து லோன் கேட்ட மாலதியை ஆச்சர்யமாகப்பார்த்தார் வங்கி மேலாளர் மேகநாதன்.

“எதுக்காக இவ்வளவு பெரிய தொகையை லோனா கேட்கறீங்க…?”

“தேவை” என்றாள் சிக்கனமாக.

“அத நான் தெரிஞ்சுக்கலாமா…? இது உங்க பணம்னாலும் உங்க அப்பா ஸ்தானத்துல நான் இருக்கேன். அதான்”

“என் வுட்பிக்கு உதவ…”

“ஏம்மா இந்தக்காலத்துல கட்டின கணவனையே நம்ப முடியல. வுட்பிக்கு உதவறேன்னு சொல்லறியே….? எதுக்கும் உன்னோட முடிவை மறுபரிசீலனை செஞ்சு பாரு.” என்று மேலாளர் கூறிய போது, அருகிலிருந்த வேகனுக்கு அவர் மேல் ஆத்திரம் வந்தது.

“இது எங்க பர்சனல் விசயம். இதுல நீங்க தலையிடக்கூடாது ” என்றான் வேகன் சற்று கோபமாக.

“மிஸ்டர் நீங்க அவங்க அப்பாகிட்டவே உதவி கேட்டிருக்கலாமே…?” என்றார்.

“அதைக்கேட்க நீங்க யார்…?” என்றவன் ,யாரும் எதிர் பாராத விதமாக ஆத்திரம் கண்களை மறைக்க,வங்கி மேலாளருடைய சட்டையை எட்டிப்பிடிக்க, அரண்டு போயினர் மாலதி உள்பட அங்கிருந்த அனைவரும். காவலர்கள் வந்து வேகனைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

‘நம்மால் தானே இவருக்கு இவ்வளவு அவமானம். இருந்தாலும் மேனேஜர் நம்ம விசயத்துல இந்தளவுக்கு மூக்கை நுழைத்திருக்கக்கூடாது.’ என்று கவலையுடன் வேகனை ஜாமீனில் எடுக்க காவல் நிலையம் நோக்கிச்சென்றாள் மாலதி.

இன்ஸ்பெக்டர் துரை மாலதியை ஏறிட்டார்.

“நீங்க தான் மாலதியா…?”

“ஆமா சார்”

“நல்ல நேரம்மா. பேங்க் மேனேஜர் ரூபத்துல கடவுள் வந்து உன்னைக்காப்பாத்திட்டார். கல்யாணம் ஆகலேன்னாலும் பரவாயில்லை. ஆனா இவனைப்போன்ற கிரிமினல்களுக்கு மட்டும் வாழ்க்கைப் பட்டிடக்கூடாது.”

“நீங்க என்ன சார் சொல்லறீங்க…?” அதிர்ச்சியுடன் கேட்டாள் மாலதி.

“இவன் பக்கா கிரிமினல். இது வரைக்கும் ஏழு பெண்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணியிருக்கான்.” என்றார்.

இதைக்கேட்ட மாலதிக்கு மயக்கமே வரும்போல இருந்தது.

“கவலைப்படாதீங்க மாலதி. இனியாவது நல்லா விசாரிச்சு சம்மதம் சொல்லுங்க. பெஸ்ட் ஆப் நெக்ஸ்ட் லக்” என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

மாலதி மேனேஜருக்கு நன்றியை தெரிவிக்க சென்ற போது அவர்  அவள் தனக்கும் போல என்று கூறி தனது  ஆசியை தெரிவித்தார்.

புலியிடமிருந்து தப்பிய புள்ளி மானாக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு தனது வீடு நோக்கிச்சென்றாள் மாலதி.

🙏🙏🙏🙏🙏

மூன்று தலைமுறை -27

 மூன்று  தலைமுறை -27

அடுத்த நாள் காலையில் ராமநாத அய்யர்  காபி குடிக்க வந்தார். விசாலி நுரை பொங்க பொங்க காபியை ஆற்றி அவருக்கு கொடுத்தாள்.

'ஆகா.பிரமாதம்.பேஷ்.பேஷ்.எங்க காபி குடிச்சாலும் விசாலி கையால  கொடுக்ற காபி மாதிரி டேஸ்ட் வரமாட்டேன்றது' என்ற சாஸ்திரிகள், காபியை குடித்துக் கொண்டே பஞ்சுவை பார்த்து "என்ன பஞ்சு. விசுவை எந்த கல்லூரியில் சேக்றதா உத்தேசம்' என்று கேட்டார். அதற்கு பஞ்சு"இன்னிக்கு வரைக்கும்  முடிவு செய்யலை மாமா"என்றார். அதற்கு ராமநாத சாஸ்திரிகள் "எனக்கு ஒண்ணு தோண்றது. என் பையன் சபேசன் மவுண்ட் ரோடிலுள்ள கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜில் பி.ஏ எக்கனாமிக்ஸ் இரண்டாவது வருடம் படிக்கிறான். காலேஜில் பீசும் கம்மி. நன்னாவும் சொல்லி கொடுக்கிறாளாம். உனக்கு இஷ்டம் இருந்தால் அங்கேயே கூட நீ விசுவை சேக்கலாமே' என்றார். விசுவை விவேகானந்தா போன்ற தனியார் கல்லூரியில் சேர்க்க நினைத்திருந்த பஞ்சுக்கு இது ஒரு வித்தியாசமான அறிவுரையாக பட்டது. 'சரி மாமா.அங்கேயே முயற்சி செய்யலாம்' என்று கூறினார் பஞ்சு. மறு நாள் காலை பஞ்சுவும் விசுவும் மவுண்ட் ரோடில் உள்ள கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜுக்கு சென்றார்கள். இப்போதுள்ள ஸ்பென்சர் ப்ளாசா பக்கத்தில் கமாண்டர் இன் சீப் ரோட் அடுத்து  கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் இருந்தது. இப்போது நீங்கள் அங்கு சென்று பார்த்தால் உங்களை "க்வாய்தே மில்லத் மகளிர் கல்லூரி" என்ற போர்ட் தான் வரவேற்கும்.70 களில் அதை மகளிருக்கான கல்லூரியாக மாற்றி விட்டார்கள்.காலேஜ் உள்ளே சென்றதும் பஞ்சு பிரின்சிபால் ரூமை தேடிச் சென்றார். அப்போது அங்கு வந்த பியூன்,'சார் என்ன வேணும்' என்றார். 'இல்லப்பா.P.U.C அட்மிஷனுக்கு பிரின்சிபாலை பார்க்கணும்' என்றார். 'புது பிரின்சிபால் போட்டிருக்காங்க. அவர் இன்னும் Duty ஜாயின் பண்ணல.நீங்க வேணும்னா Vice principal ஐ பாருங்க' என்றார் ப்யூன்.

பஞ்சு Vice Principal அறைக்கு சென்றார். "மீர் ஷபீர் ஹுசைன். Vice Principal"  என்ற போர்ட் அவரை வரவேற்றது. அறையின் கதவில் இரண்டு தடவை தட்டினார்.

"கம் இன்'என்ற குரல் கேட்டது. பஞ்சுவும், விசுவும் உள்ளே நுழைந்தார்கள்.   மீர் ஷபீர் ஹுசைன் குள்ளமாக, சிவப்பாக இருந்தார். தலையில் தொப்பியும்,முகத்தில் தாடியும் இருந்தது. கருணை பொழியும் முகம். "சொல்லுங்க. என்ன விஷயமா வந்திருக்கீங்க" என்றார்.

அவர் பேசிய இஸ்லாமிய தமிழ் கொஞ்சம் வித்யாசமாக இருந்தது. பஞ்சு விவரத்தைக் கூறக்கேட்ட வைஸ் பிரின்சிபாலுக்கு ஆச்சரியம் ஆகிவிட்டது. "பையன் ராஜதானியில் ரேங்க் எடுத்து இருக்கிறான். பொதுவாக இதுபோல் ரேங்க் எடுத்தவர்கள் தனியார் கல்லூரியில் தான் படிக்க ஆசைப்படுவார்கள்.

நீங்கள் இந்த கல்லூரியில் சேர்க்க வருவதை நான் ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா" என்று கேட்டார். அதற்கு பஞ்சு "எங்களுக்கு தெரிந்த ஒருவருடைய மகன் இங்கு இரண்டாம் வருடம் B.A படிக்கிறான்.அவன் தந்தை சொல்லித்தான் நாங்கள் இங்கு சேர வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

மீர் ஷபீர் ஹுசைனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.அவர் சீட்டிலிருந்து எழுந்து அவரை அறியாமல்  'பஹுத் அச்சா' என்று கூறி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 'உங்க முடிவை நான் பாராட்டுகிறேன். எனக்கென்னமோ உங்களுடைய மகன் இந்த கல்லூரிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுப்பான்னு நினைக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு அவன் படிப்பிற்கு உதவி செய்வேன். நீங்கள் பணத்தை கட்டி விடலாம்'என்று கூறி அப்ளிகேஷன்  பார்மில் 'அட்மிட் 'என்று பச்சை இங்கில் எழுதி கையெழுத்து போட்டார்.

பஞ்சு  காலேஜ் ஆபீசுக்கு சென்று டேர்ம் பீஸாக 18 ரூபாயை கட்டினார். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் உள்ளோருக்கு பஞ்சு விசு கல்லூரியில் சேர்ந்த விவரத்தை கூறினார்.இதை கேட்ட ராஜகோபாலன் 'விசு.உனக்காக உங்கப்பா ரொம்ப மெனக்கெடறான். நாங்களும் சின்னச்சின்ன கஷ்டங்களைப் பொறுத்துண்டிருக்கோம். எல்லாம் நீ படிச்சி நண்ணா முன்னேறணம் என்பதுக்குத்தான்.

இதை மனசுல வெச்சுண்டு நீ படிக்கணம்.இந்த பட்டிணத்தில் உன் கவனத்தை கவர பல விஷயங்கள் இருக்கும்.அதை எல்லாம் நீ கவனிக்காமல் படிப்பு,படிப்புன்னூ, சதா சர்வ காலமும் படிச்சிண்டே  இருக்கணம்' என்றார். இதற்கு விசு 'தாத்தா. நீங்க எனக்கு இதையெல்லாம்  சொல்லணும்னு அவசியமே இல்லை.

எனக்கு தெரியும், எனக்காக  நீங்க எல்லாம்  படற கஷ்டம். நான் நன்னா படிச்சு நம்ம குடும்பத்துக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுப்பேன்' என்றான்.

"அப்படி சொல்லுடா.என் ராஜா" என்று ராஜகோபாலன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

மறுநாள் ராமநாதன் காப்பிக்கு  வந்தவுடன் அவருக்கு விசு காலேஜ் சேர்ந்த விவரத்தை பஞ்சு சொன்னார். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.பத்து நாள் கழிந்தது. கல்லூரிக்குப் போகும் நாளும் வந்தது. முதல் நாள் கல்லூரிக்கு சென்றான் விசு. சபேசன் முன்னதாகவே அவன் நண்பர்களுக்கு விசுவை பற்றி கூறியிருந்ததால் ராகிங்  இல்லாமல் இருந்தது. எல்லோரும் அவனை  ஆச்சரியமாக பார்த்தார்கள். சாதாரண மார்க் எடுத்தவர்கள் படிக்க விரும்பும் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜில் விசுவைப்போல ரேங்க் எடுத்தவர்கள் படிப்பது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.சிலர்"ஹும்.என்ன செய்வது. எல்லாம் தலை விதி' என்று பரிதாபப்பட்டார்கள்.

மிக உற்சாகமாக முதல் நாள் கல்லூரியில் கழித்தான் விசு.

மூன்று தலைமுறை -26

 மூன்று  தலைமுறை  -26

ஊரை விட்டு கிளம்வதற்கு முதல் நாள் அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் ராஜகோபல அய்யர் வீட்டுக்கு  வந்திருந்து அவர்கள் கிராமத்தை விட்டு மதராஸ் போவதில் தங்களக்கான வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்கள்.விசு அன்று முழுவதும் அவன் நண்பர்களுடனே பொழுதைக் கழித்தான். 

ஒரு நல்ல நாள் பார்த்து ஐவரும்  மதராசுக்கு வந்தார்கள்.அன்று காலை அனைவருக்கும் இராமநாத ஐயர் வீட்டு சாப்பாடு. சாப்பாடு முடிந்த கையோடு  வாடகை வீட்டிற்கு சென்று பார்த்தார்கள். இவர்கள் வரும் நாளை முன் கூட்டியே அறிந்திருந்த  வீட்டு சொந்தக்காரர், வீட்டை பெருக்கி, அலம்பி, வாசலில் மாக்கோலம் போட ஏற்பாடு பண்ணியிருந்தார்.  சாமான்களை ஏற்கனவே லாரி மூலம் அனுப்பி இருந்ததால் அவைகள் முன்னமே வந்து கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

எல்லாவற்றையும்  எடுத்துப் பிரித்து வைக்க விசாலிக்கு பஞ்சுவும், விசுவும் உதவி செய்தனர்.ஒரு வழியாக சாயங்காலத்திற்குள் எல்லா சாமான்களும் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இரவு சாப்பாட்டை மிளகு ரசம், கத்தரிக்காய் எண்ணை கறியுடன்,  ராமநாத அய்யல்  வீட்டில் இருந்து வந்த தயிருடன் சேர்த்து முடித்தனர்.  சொந்த ஊரில் இருக்கும் வரையில் வாழையிலையில் சாப்பிட்டு வந்தார்கள்.மதராசுக்கு வந்தவுடன் தட்டுக்கு மாற வேண்டியதாயிற்று.

மங்களத்துக்கும் ராஜகோபாலனுக்கும் சிலவற்றை ஏற்க முடியாது போனாலும் வெளியில் காட்டிக் கொண்டால் பஞ்சு,விசாலம் வருத்தப்படுவார்கள் என்று மனதுக்குள்ளே வைத்துக்கொண்டார்கள்.

ராமனாத அய்யர் மிகவும் உறு துணையாக இருந்து வந்தார். அடிக்கடி வந்து வேண்டிய உதவிகளை செய்தார்.

தினந்தோறும் அவருக்கு காலை இரண்டாம் காபி விசாலி கையால்தான் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

பஞ்சுவை கடை கண்ணிக்கு அழைத்து சென்று அங்குள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

மளிகை கடையில் மாதாந்திர கடனுக்கு சாமான்களை ஏற்பாடு பண்ணினார். மொத்தத்தில் ராமனாத அய்யர் மட்டும் இல்லையென்றால் பஞ்சுவுக்கு மதராஸ் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்திருக்கும்.

பஞ்சுவும், விசுவும் ஒரு நாள் முழுவதும் அலைந்து ராஜ கோபல அய்யருக்கு ஈசி சேர், கயித்து கட்டில், பத்தமடை கோரைப்பாய் ஆகிய பலவற்றை வாங்கி வந்தனர்.

ராஜ கோபல அய்யர் தம்பதிகள் அருகிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தினம் செல்ல ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக அங்கே இருவருக்கும் அவர்கள் வயதை ஒத்தவர்கள் சினேகம் கிடைத்து.விசாலியை ராமனாத அய்யர் மனைவி காமாக்ஷி  மாமி தனக்கு தெரிந்த பெண்டுகள் வட்டாரத்துக்கு அறிமுகப்படுத்தினாள்.வந்து இரண்டு வாரம் கழிந்தது. பஞ்சு  உத்தியோகத்திற்கு செல்ல ஆரம்பித்தார். நல்லவேளை ஆபீஸ் புது மாம்பலத்தில்(அதாம்பா T.Nagar)  இருந்தது.பஞ்சு ஆபிசுக்கு சைகிளில் செல்ல ஆரம்பித்தார்.விசு P.U.C ஐ எந்த காலேஜில் படிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

மூன்று தலைமுறை -25

 மூன்று  தலைமுறை  -25

பஞ்சு, ராஜகோபால அய்யரையும், மங்களத்தையையும் மதராசுக்கு அழைத்துச் செல்வதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இதற்கிடையில் சுந்தரேசன்,ஜானகி நல்லூரிலிருந்து விசுவை பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வந்திருந்தார்கள்.

சுந்தரேசன் பஞ்சுவிடம் "மாப்பிள்ளை. என் தூரத்து சொந்தம் இராமநாத ஐயர் மதராசில் மேற்கு மாம்பலத்தில் இருக்கிறார்.வைதீகத்தில் கொடிகட்டி பறந்துண்டிருக்கார்.

அவரை ஒரு தரம் போய் பாத்துண்டு வரேளா? அவர் ஒத்தாசையாக இருப்பார்' என்று சொன்னார்.இது நல்ல சஷஜனாக  பஞ்சுவுக்கும், ராஜகோபாலனுக்கும்  பட்டது. ஓரிரு தினங்களில் பஞ்சு கும்பகோணம் சென்று அங்கிருந்து மதராசுக்கு சென்றார்.  இராமநாத அய்யர் வீட்டை கண்டுபிடிப்பதில் கொஞ்சம் சிரமப்பட்டார்.வீட்டு நெம்பர்கள் வரிசையாக இருக்கவில்லை.

இரண்டு, மூன்று பேர்களிடம் விஜாரித்து ஒரு வழியாக கண்டுபிடித்தார்.ராமனாத அய்யர் வீட்டிற்கு சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்பஞ்சு. 'ஓஹோ சுந்தரேசன் மாப்பிள்ளையா? ரொம்ப சந்தோஷம். என்ன விஷயமாக  வந்திருக்கேங்கோ.முதலில் ஸ்னானம் பண்ணீட்டூ வாங்கோ.ஆகாரம் பண்ணீட்டு வந்த விஷயத்தை  பேசலாம்' என்றார்.

அந்த காலத்தில் பழக்கவழக்கங்கள் அப்படி இருந்தன. யாராவது வந்தால் கேட் அருகில் நிற்க வைத்து விஷயத்தை பேசி அனுப்பி விடும் பழக்கம் எல்லாம் அப்போது இல்லை.யாரேனும் நம்மை தேடி வந்தால், வந்ததும் கை கால் அலம்ப ஜலம்  கொடுத்து, சாப்பாடு போட்டு அதற்குப் பிறகுதான் மேற்கொண்டு பேசுவார்கள். பஞ்சுவும் குளித்து முடித்து  உணவருந்தினார். பிறகு வந்த விஷயத்தை கூறினார். ராமநாத அய்யர் 'நீங்கள் ஐந்து பேரும் தங்கற மாதிரி ஒரு ரூம்,ஹால் கிச்சன் கொண்ட இடம் இருக்கு.பக்கத்தில் ஏரிக்கரை தெருன்னு இங்க இருக்கு.அங்க ஒரு வீட்டில் பின்பக்கம் காலியாக இருக்கு.உங்களுக்கு வேண்டுமென்றால் நான் கொண்டு போய் காண்பிக்கிறேன். சொந்தக்காரர் ஆத்துக்கு நான்தான் உபாத்யாயம்.என் பேச்சை தட்டமாட்டார்' என்றார். மாம்பலம் ரயிலடிக்கு அருகாமையில் ஏரிகரைத்தெரு இருந்தது.

பஞ்சு அவருடன் சென்று அந்த இடத்தை போய் பார்த்தார். இடம் சிறியதாக இருந்தாலும் மிகவும் சுத்தமாகமாக இருந்தது.ஹாலிலும், ரூமிலும் நிறைய அலமாரிகள் இருந்தன.

சமையல் அறை போவதற்கு முன் சிறிய பூஜை அறை இருந்தது.பின் புறம் துளசி மாடம் இருந்தது.விசாலி பார்த்தால் சந்தோஷப்படுவாள் என்று பஞ்சு எண்ணிக்கொண்டார்.

முன் பக்கத்திற்கும் பின் போர்ஷனுக்கு இடையில் கிணறு இருந்தது. தாம்புகயிறும், ராட்டினமும் போடப்பட்டிருந்தது.

பஞ்சுவிற்கு வீடு மிகவும் பிடித்துப்போனது. வீட்டுக்காரரிடம் இருவரும் சென்று பேசினார்கள்.

'வாடகை 25 ரூபாய். கரண்ட் சார்ஜ் தனி.சப் மீட்டர் இருக்கு.இரண்டு மாச வாடகை அட்வான்ஸ்.இதை நீங்க வீட்டை காலி பண்றப்போ கடைசி மாத வாடகையை கழிச்சுட்டு மீதி கொடுத்திடுவேன்.

மனுஷா நல்லவளாக இருக்கணும். எங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருந்த கொண்டால் சரி.சாஸ்திரிகள் சொன்னதால எனக்கு வீட்டை உங்களுக்கு விடுவதில் ஆட்சேபணை ஏதுமில்லை.நீங்க எத்தனை பேர்' என்று கேட்டார். பஞ்சு மொத்தம் ஐந்து பேர் என்றும் பையன் மேல்படிப்புக்காக மதராஸ் வருவதாகவும் கூறினார். வீட்டுக்கு சொந்தக்காரர்'உங்களுக்கு வீடு பிடித்திருந்தால் சொல்லுங்கள்' என்றார். பஞ்சு அவரிடம் பத்து ரூபாய் கொடுத்து "இதை முன்பணமாக ஏத்துக்கணம்.நான் ஊருக்குபோய் எல்லாரையும் அழைச்சிண்டு சீக்கிரம் வந்துடுவேன்.மீதி அட்வான்ஸை அப்போது தருகிறேன்' என்றார்.

வீட்டு சொந்தகாரர்'பணமா முக்கியம். பணம் இன்று வரும் நாளை போகும். மனுஷ்யா தான் முக்கியம்' என்று கூறிக்கொண்டே பஞ்சு கொடுத்த பத்து ரூபாயை இடுப்பில் பத்திரமாக முடிந்து கொண்டார்.பஞ்சு இருவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.எல்லா விவரத்தையும்  பஞ்சு அப்பா,அம்மா,விசாலியிடம் கூறினார்.  'சின்ன இடமாக இருக்கும் போல இருக்கே.

அந்த  இடத்தில் நாம் இருக்க முடியுமா?' என்று கேட்டாள் மங்களம். பஞ்சு 'என்ன செய்யறது அம்மா.கொஞ்சம் சிரமம் தான். விசுவின் படிப்பை உத்தேசித்து  கொஞ்சம் அனுசரித்துதான் போகணம்' என்று பதிலளித்தார்.பஞ்சுவின் வார்த்தையிலிருந்த நியாயம் மங்களத்துக்கு புரிந்தது.  கிராமத்தில் உள்ள வீட்டை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. 'இப்போதைக்கு முக்கிய சாமான்களை ஒரு ரூமில் போட்டு பூட்டி விடுவோம்.வீட்டை பூட்டி  சாவியை வேலை செய்யும் ஆளிடம் கொடுத்து விட்டால் அவர்கள்  தினம் வீட்டை திறந்து  சுத்தம் செய்து கோலம் போட்டுவிடுவார்கள்.நாம்  திரும்பி வந்ததும்  வீட்டில் வசிக்கலாம்' என்று பஞ்சு கூறினார். நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் என்ற பழமொழி பஞ்சுவிற்கு மறந்து போனது.

திரும்ப சொந்த வீட்டிற்கு பஞ்சுவோ குடும்பத்தினரோ வருவார்களா என்பது அந்த சர்வேஸ்வரனுக்கே வெளிச்சம். மாடுகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. மாடுகளை யாரும் பராமரிக்க முன்வரவில்லை.விற்கத்தான் வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. லட்சுமியை விட்டு பிரியவே மனமில்லை விசாலிக்கு. யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் சென்று லட்சுமியின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள். லட்சுமி வாயில்லா ஜீவன் ஆனாலும் விசாலியின் வருத்தம் அதற்கு புரிய, அதன் கண்களும் கலங்கியது.வயல் வேலையை கவனிக்கும் மாடசாமி பசுக்களை வாங்க ஒரு ஆளை கூட்டி கொண்டு வந்திருந்தான்.வந்த  விலைக்கு பசுக்களை விற்று விட்டார்கள்.லட்சுமி வாங்கியவரிடம் செல்ல முரண்டு பிடித்தது.

'ம்மா' என்று விசாலியைப்பார்த்து கதறியது.விசாலிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.புடவை தலைப்பால் பொங்கி வரும் கண்ணீரை மறைத்து கொண்டாள்.(இதை எழுதும் போது என் கண்களில் பொங்கி வரும் கண்ணீரை நான் என்ன செய்ய?) கடைசியில் லட்சுமியை   விற்பதற்கு பதில் வீட்டிலேயை வைத்து கொண்டு மாடசாமி அதை பராமரிக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். விசாலிக்கு மனது ஒரளவு சாந்தியடைந்தது. 'மாடசாமி.உன்னால் இதை பராமரிக்க ஏதேனும் பணமாகவோ அல்லது வேறு ஏதாவது உபகாரம் வேண்டும் என்றால் நிச்சயம் எங்களுக்கு தெரியப்படுத்து. நாங்கள் செய்கிறோம்' என்றாள் விசாலி. 'அம்மா. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். லட்சுமி மாடு இங்கேயே இருக்கட்டும்' என்றான் மாடசாமி.

அவன் லட்சுமி மாடு என்று கூறியபோது விசாலிக்கு மனதில் முள் தைத்தது போல இருந்தது.

வேண்டிய ஏற்பாடுகள் முடிந்ததும் வீட்டுக்கு வேண்டிய முக்கிய சாமான்களை  ஒரு லாரியில் மதராசுக்கு ஏற்றி அனுப்பி வைத்தார் பஞ்சு.அவற்றை இறக்கி அவர்கள் போர்ஷனில் வைப்பதாக வீட்டு சொந்தக்காரர் ஓப்புக்கொண்டிருந்தார்.

மூன்று தலை முறை -24

 மூன்று தலை முறை -24

ஹெட்மாஸ்டர் அடுத்த ஆனந்த அதிர்ச்சியை அள்ளி வீசினார்.

"பஞ்சு சார்.விசு சென்னை ராஜதானியில் இரண்டாவது மாணவனாக வந்திருக்கிறான்.மெட்ராஸ் ராமகிருஷ்ணா ஸ்கூலை சேர்ந்த கங்காதரன் என்ற மாணவன் விசுவைவிட மொத்தத்தில் 2 மார்க்கு கூட வாங்கி முதல் ரேங்க் எடுத்துள்ளான். இது நம் பள்ளிக்கு மட்டுமில்லாமல் தஞ்சாவூர் ஜில்லாவிற்கே பெருமை' என்றார்.

இதையெல்லாம் கேட்ட பஞ்சுவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சந்தோஷத்தில் திக்கு முக்காடினார். விசுவுக்கு  முத்தமாரி பொழிந்தார். விசுவுக்குமிகவும் வெட்கமாகி விட்டது.

பஞ்சு வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி கடவுளை கும்பிட்டார்.

பின் விசுவுக்கு எஸ்.எஸ்.எல்.சி சர்டிபிகேட் புக் தரப்பட்டது.

ஹெட்மாஸ்டர் பஞ்சுவிடம்" நேற்று ஜில்லா கல்வி அதிகாரி பேசினார்.விசுவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென்று விரும்புகிறார்.இது அனேகமாக கும்பகோணத்தில் நடைபெறும்.நான் தேதி தெரிந்ததும் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.

'ஆகா.அப்படியே ஆகட்டும்" என்றார் பஞ்சு.

பின்பு பஞ்சுவும் விசுவும் மிக உற்சாகமாக சொந்த ஊர் திரும்பினர்.விஷயத்தை கேள்வி பட்ட விசாலிக்கு  சந்தோஷம் தாங்கமுடியவில்லை.விசுவை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். ராஜnகோபாலனும், மங்களமும் மகிழ்ச்சியில் நெகிழ்ச்சி அடைந்தார்கள். சந்தோஷத்தை கொண்டாட விசாலி அன்று பால் பாயசம் செய்தாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் ஒவ்வொருவராக வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு வாரத்தில் கும்போணத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு  விசு, பஞ்சு, இரண்டு தாத்தாக்கள், பாட்டிகள் கலந்து கொண்டார்கள்.விசுவுக்கு பள்ளியின் சார்பில் 51 ரூபாய் பணமும்,தஞ்சாவூர் ஜில்லா கல்வி ஆதிகாரி சார்பில் கேடயமும் தரப்பட்டது.

அடுத்து கல்லூரி படிப்பு எங்கே என்ற கேள்வி எழுந்தது.

பஞ்சுவைத்தவிர அனைவரும் கும்போணம் ஆர்ட் காலேஜில் சேரலாம் என்றனர்.

பஞ்சு அதை ஒத்துக்கொள்ளவில்லை. தலைநகரான மெட்ராஸே சிறந்த இடம் என நினைத்தார்.அவர் விசுவின் மேல் படிப்பிற்காக பெரும் மனக்கோட்டை கட்டி யிருந்தார்.மெட்ராஸ் போவது என்றால்,

பஞ்சுவும், விசாலியும் மெட்ராஸில் குடுத்தனம் வைக்கலாம் என்று ராஜகோபாலன் நினைத்தார்.

ஆனால் பஞ்சுவிற்கு வயதான பெற்றோரை தனியாக விட்டு விட்டு மதராசில் குடுத்தனம் வைக்க மனமில்லை.பஞ்சு,தந்தையின் நண்பரும் தன் மேலதிகாரியுமான பரசுராமனை சந்தித்து நிலைமையை கூறி அறிவுரை கேட்டார்.

அவர் 'நல்ல வேளை என்னிடம் நிலைமையை கூறினாய்.உனக்கு எல்லாமே கூடிவருகிறது.மெட்ராஸில்  நமது ஆபீஸ் கிளை திறக்க எண்ணியுள்ளோம்.நீ அங்கு பொறுப்போற்றுக்கொள்ள முடியுமா?" என்றார்.

பஞ்சு கடவுளே அவருக்கு வழிகாட்டியதாக எண்ணினார்.பரசுராமனிடம்"கரும்பு தின்ன கூலியா"என்று கூறி நன்றி சொன்னார். ஊருக்கு வந்து ராஜகோபலனிடம் பஞ்சு நடந்ததையெல்லாம்  கூறினார்.

பஞ்சு, விசாலி,விசு மதராசில் தனிக்குடுத்தனம் வைக்க வேண்டுமா அல்லது மொத்த குடும்பமே ஊரை காலி பண்ணிவிட்டு மதராஸ் போகப்போக வேண்டுமா என்று முடிவு செய்ய மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

நல்ல காற்று,தண்ணீர்,சொந்த பசு மாட்டிலிருந்து கிடைத்த பால்,தயிர், வெண்ணை, சொந்த நிலத்திலிருந்து கிடைத்த அரிசி இவையெல்லாம் விட்டு விட்டு பட்டணம் போவதா என்ற பெரும் குழப்பத்தில் அந்த குடும்பம் ஆழ்ந்தது.