Friday, July 31, 2020

திருப்பார்த்தன் பள்ளி

🙏  நமஸ்காரம்    

39   திருப்பார்த்தன் பள்ளி

மூலவர் - தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் - தாமரை நாயகி
உற்சவர் - பார்த்தசாரதி
உற்சவர் தாயார் - ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்
நாமாவளி - ஸ்ரீ தாமரை நாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் ஸ்வாமிநே நமஹ
தீர்த்தம் - கட்க புஷ்கரணி
விமானம் - நாராயண விமானம்

வழித்தடம்

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

பாசுரம்:

கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்
குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,
தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,
பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
        பெரிய திருமொழி  (1318) 

குவலயாபீடம் என்ற மத யானையின் தந்தங்களை முறித்த கண்ணன். காண்போரைக் கவரும் அழகும் குணமும் உடைய சீராளன். குவளை மலர் போன்றும், மேகம் போன்றும் வண்ணம் கொண்டவன் என் மன்னன் அவன். அவன் யானையைப் போன்றவன், வெண்மையான உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அவன் தாமரையாள் கணவன் என்றும்,  பவழம் போல் சிவந்த வாயை உடைய என்னுடையப் பெண், பார்த்தன்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடுவாள் என்று பாசுரம் பாடியருளியுள்ளார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரம் பதவுரை:

பவளம் வாயாள் என் மடந்தை - பவழம்போற் சிவந்த அதரத்தையுடையளான என் பெண்ணானவள்
கவளம் யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் - கபளம் கபளமாக உணவை யூட்டி மா மூட்டப்பட்ட (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தைகளை முறித்தொழித்த கண்ணபிரான் என்று சொல்லிக்கொண்டும்
காமரு சீர் - ஆரைப்படத் தகுந்த அழகையுடைய
குவளை மேகம் அன்ன - கருநெய்தற் பூவென்ன காளமேக மென்ன இவற்றோடொத்த
மேனி கொண்ட - திருமேனியையுடைய
கோன் (என்றும்) - ஸ்வாமியென்று சொல்லிக்கொண்டும்
என் ஆனை என்றும் - என்னுடைய யானை என்று சொல்லிக்கொண்டும்
தவளம் மாடம் நீடு நாங்கை - வெண்மையான மாடமாளிகைகளினால் நீண்டிருக்கிற திருநாங்கூரில் வாழ்கிற
தாமரையாள் கேள்வன் என்றும் - லக்ஷ்மீநாதன் என்று சொல்லிக் கொண்டும்
பார்த்தன் பள்ளி பாவொள் -. - பார்த்தன்பள்ளி யென்னுந் திருப்பதியைப் பாடா நின்றாள்

பாசுரம் விளக்க உரை: 

திருமங்கை யாழ்வாராகிற பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார், பார்த்தன்பள்ளிப் பெருமானிடத்தில் தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியை வெளியிட வேண்டி மகளுடைய வாய்மொழிகள் இருக்கும் படிகளை ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றாள்.

என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்கட்குத் தெரியுமா? கம்ஸன் தனது மதயானையைக் கொழுப்பேற்றி என் கணவனைக் கொல்லுமாறு அரண்மனை வாயிலில் நிறுத்தி வைத்தான்; இவனோ சேற்றிலிருந்து கொடியை இழுப்பவன்போல அதன் தந்தங்களை எளிதிற் பறித்திட்டு அதனை உயிர் தொலைத்திட்டான்; அப்படிப்பட்ட சூரன் காண்மின் என் கணவன் - என்கிறாள்.

அதற்குமேல் திருமேனி நிறத்தைப்பற்றிச் சொல்லத்தொடங்கி, குவளைப் பூப்போலும் காளமேகம்போலும் கறுத்துக் குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறமன்றோ என் கணவனது நிறம் - என்கிறாள்.  யானையை எத்தனை தடைவைப் பார்த்தாலும் ஒவ்வொரு தடவையிலும் அபூர்வ வஸ்துவாகியே ஆநந்தாவஹமாயிருப்பதுபோல, அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பன் என் கணவன் - என்கிறாள்.  அவனெழுந்தருளியிருக்கும் ராஜதானியின் சிறப்பும் பெயரும் உங்கட்குத் தெரியுமோ?  வெள்ளிய சாந்திட்டுப் பளபளவென்று விளங்குகின்ற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரிலே ஸ்ரீமானாய் விளங்குமவன் காண்மின் அவன் - என்கிறாள்.  இவ்வளவும் சொல்லிவிட்டுப் பார்த்தன்பள்ளித் திருப்பதியின் திருநாமத்தையிட்டு இசைபாடத் தொடங்கிவிட்டான் - என்று திருத்தாயார் கூறினளாயிற்று.

கவள யானை – யானையின் உணவுக்குக் கவளம் என்று பெயர்;  தீனிகளையிட்டு மதமூட்டப்பட்ட யானை என்றபடி, ‘காமம் தரு’ என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ‘காமரு’ என விகாரப்பட்டது; ஆசையை விளைக்கின்ற என்றபடி.  தவளம் - தவளம் என்பது வடசொல்.

பார்த்தன்பள்ளி – பார்த்தனென்று அர்ஜுநனக்குப் பெயர்; அர்ஜுநனுக்காகப் பள்ளிகொண்ட திருக்கோலமாய் ஸேவைஸாதிக்குமிடமென்பது பற்றி இத்தலத்திற்கு இத்திருநாமமாயிற்றென்பர்.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு: 

இத்தலம் பற்றி பாத்ம புராணம் பேசுகிறது. அர்ஜூனன் இவ்விடத்திற்கு வந்தபோது அதிகமான தாக வேட்கை யுண்டாக இங்கே தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்தை நோக்க அதில் இருந்த நீரும் வற்றிப்போனது.  இவ்வாறு தண்ணீர் வற்றிப்போவதற்கு என்னவென்று அகத்தியர் ஆராய்ந்து ஞான திருஷ்டியில் இது கண்ணனுடைய வேலையென்று தெரிந்து கொண்டு, அர்ஜூனனை நோக்கி அர்ஜூனா நீ எப்போதும், எந்த உதவி வேண்டுமானாலும் உன் ஆபத்பாண்டவனான கண்ணனையல்லவா அழைக்க வேண்டும என்று கூற, அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம்  கொடுத்தான்.  அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது. தாகந்தீர்த்த விஜயன் கண்ணனால் இவ்விடத்து சிறிது ஞானோபதேசமும் பெற்றான்     பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.
பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.

சிறப்பு:

வருணன் இவ்விடத்து திருமாலைக் குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.

உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார்.

பார்த்தசாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார்.

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/P6YKv5JXl3I

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/113014407165662/?sfnsn=wiwspmo&extid=tMvhZevfAYX8clQE

மகாபாரதம் பகுதி-77

🚩மகாபாரதம்   பகுதி-77

குருஷேத்திர  போர்..!

சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், இந்த இருவரின் பலத்தின் முன்பு துரியோதனின் படைகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயத்தில் புறமுதுகிட்டு ஓடினர். அப்போது, துரியோதனின் தம்பி விகர்ணன் பாண்டவர் படைகளை ஒரு இடத்தில் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து விட்ட அபிமன்யு, அவனோடு கடும் யுத்தம் செய்தான். அவன் விட்ட அம்புகளால் விகர்ணனின் வயிறு கிழிந்து தொங்கிவிட்டது. அவனது குடல் சரிந்து மிகுந்த ஆபத்தான நிலையில் தரையில் விழுந்தான். இது கண்டு கவுரவப்படையினர் திடுக்கிட்டு ஓடினர். தங்கள் உயிரையும் அபிமன்யு பறித்து விடுவான் என்று அவர்கள் ஓடிய வேளையில், சூரியன் அஸ்தமிக்கவே ஆறாம்நாள் போர் முடிந்தது. ஏழாம்நாள் போரில் பீஷ்மரும் அர்ச்சுனனும் சமபலத்துடன் மோதினர்.
பீமனுடன் சகுனியும், சல்லியனும் மோதி தோற்றுப்போனார்கள். ஆனாலும், பொதுவான அளவில் பார்த்தால் வெற்றி தோல்வியின்றியே முடிந்தது. எடடாம் நாள் கவுரவர் படைக்கு பெரும் இழப்பாக அமைந்தது. கவுரவர்கள் நூறுபேர் என்ற இலக்கணத்தை அன்றைய தினம் மாற்றியமைத்தான் பீமன். அன்று துரியோதனனின் தம்பிகளான சுந்தரன், விசாலக்கண்ணன், பவுதுண்டன், மகாவிந்து, அபயன், மகோதரன், ஆதித்தகேது, வீரவாசி ஆகியோர் துரியோதனனுடன் வந்து, பீமனுடன் ஒட்டுமொத்தமாக இணைந்து யுத்தம் செய்தனர். பீமனுக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்தது. அன்று அவர்களை வதம் செய்தே தீருவதென உறுதியெடுத்தான். அதன்படி அம்பு மழையை அவர்கள் மீது பொழிந்தான். அவை துரியோதனனின் எட்டு தம்பிமார்களையும் விண்ணுலகுக்கு அனுப்பியது. அந்தக் காட்சியைக் கண்ட துரியோதனனால், மேற்கொண்டு போர் செய்ய முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் தனது தேரை மகாத்மா பீஷ்மரை நோக்கி ஓட்டினான். பிதாமகரே! ஐயனே! தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எனது தம்பிமார்கள் எட்டுபேர், ஒரே நேரத்தில் என் கண்முன்னால் துடிதுடித்து இறந்தார்கள். நீங்கள் எங்கள் சேனாதிபதி மட்டுமல்ல! தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள். நீங்கள் இருந்த இந்த போர்க்களத்தில், இப்படி ஒரு மாபெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறேன், என்று கண்ணீர் வழியச் சொன்னான்.
அப்போது, பீஷ்மர் துரியோதனனுக்கு சொன்ன அறிவுரை உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்துவதாக அமைந்தது. துரியோதனா! இறப்பைக் கண்டு வருந்தாதே. போர்க்களத்தில், நாம் ஆயுதங்களை ஏந்துவது நமது பாதுகாப்புக்காக மட்டுமல்ல. பிறரைக் கொல்வதற்கும் தான். மேலும், போர்க்களத்தில் உயிர்விடுவது வீரர்களுக்கு சிறப்பாகும். அதாவது, ஒரு செயலைச் செய்வதென முடிவெடுத்து விட்டோம். அப்போது உயிருக்கு ஆபத்து வருகிறதே என ஒதுங்கி விடக்கூடாது. எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டும், இல்லையேல் மரணத்தை ஏற்க வேண்டும். ஒரு வள்ளல் தனது செல்வத்தை பிறருக்கு கொடுக்க தயங்கமாட்டான். ஒரு நல்ல இல்லறத்தான், தன் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொள்வான். உலகம் நிலையற்றது என நினைக்கும் ஞானி மரணத்தைக் கண்டு ஒதுங்கமாட்டான். இதெல்லாம் எவ்வளவு நிச்சயமோ, அதுபோல் போர்க்களத்தில் சாவும் நிச்சயம். அது கண்டு அஞ்சக்கூடாது, என்றவர் மேலும் தொடர்ந்தார்.
துரியோதனா! இந்தக்கிழவன் நேரம் கெட்ட நேரத்தில் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறானே என எண்ணாதே. நிஜத்தை சில இடங்களில் சொல்லியே தீர வேண்டும். இன்று உன் தம்பிகளை இழந்ததற்கான காரணத்தை எண்ணிப்பார். அன்று, யார் சொல்லையும் கேட்காமல், நீ திரவுபதியின் ஆடையைக் களைய உத்தரவிட்டாய். அவள் வடித்த கண்ணீர் இன்று இந்தக்கதிக்கு உன் தம்பிகளை ஆளாக்கியிருக்கிறது. எந்த ஒரு வீட்டில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கிறாளோ, அந்த இல்லம் அழிந்து போவது உறுதி. கர்ணனும், சகுனியும் சொன்னதைக் கேட்டு உன் சிந்தையில் தீமையை வளர்த்துக் கொண்டாயே அதன் பலாபலனை நீ தானே அனுபவிக்க வேண்டும், அதுமட்டுமா? மகாத்மா விதுரர் உனக்கு என்ன கேடு செய்தார்? மாபெரும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை அவர் வைத்திருந்தார். அது ஒன்று மட்டும் இருக்குமானால், இன்று குரு÷க்ஷத்ர களத்திலே, பாண்டவர்களில் ஒருவர் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால், நீயோ அவரது பிறப்பைப் பற்றி பழித்துப்பேசி, கோபத்தைத் தூண்டி, வில்லை ஒடிக்கச் செய்தாய். கர்ணனும் கோபித்துக் கொண்டு ஆயுதம் எடுக்காமல் இருக்கிறான். மேலும், பாண்டவர்களுக்கு கண்ணபிரானின் ஆசியும் இருக்கிறது.
பாண்டவர்களை எதிர்க்க இப்போது உன்னையும், என்னையும் விட்டால் வீரர்கள் யாருமில்லை. சரிவா! இருவரும் போவோம். போராடுவோம். மரணம் வந்தாலும் தழுவிக்கொள்வோம், என்று சொல்லியபிறகு, அவனது பதிலுக்கு காத்திராமல், தேரை படைகளின் மத்தியில் செலுத்தினார். இந்த சமயத்தில் பாண்டவர்களுக்காக களப்பலியானவனும், அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவனுமான அரவான், தான் சாகும் முன்பு போர்க்கள காட்சிகளை சில நாட்களாவது பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்டுப்பெற்ற வரத்தின்படி போர்க்களத்தில் நின்று காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மாயவித்தைகள் தெரிந்தவன். மாயத்தோற்றங்கள் பலவற்றை எடுத்து அவனும் போரில் குதித்தான். கவுரவப் படையுடன் கடுமையாகப் போரிட்டான். பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, வேத்தீரிய வனத்தில் தங்கியிருந்தனர். அவ்வனத்தில் வசித்த மக்களை அங்குள்ள பகாசுரன் என்பவன், நாளுக்கு ஒருவர் வீதம் விருந்தாக உண்டான். ஒருமுறை, பீமன் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள இளைஞனுக்குப் பதிலாகச் சென்று பகாசுரனைக் கொன்று விட்டான்.அவனது தம்பி அலம்புசன் என்பவன், தன் சகோதரனைக் கொன்ற பீமனைப் பழிவாங்க துரியோதனனுடன் இணைந்திருந்தான். அவனுக்கும், அரவானுக்கும் அன்று கடும்போர் நடந்தது. அரவான் நாகவடிவத்தில் அவனுடன் போர் செய்தான்...!

குருஷேத்திரம்
நாளை தொடரும்..!

ஶ்ரீராம ஜெயம்🙏

ஆலய அதிசயங்கள்

⛩️ஆலய அதிசயங்கள்.🌀🙏

1. 🕉️திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2.☸️ மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. 🕉️கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4.🕉️ ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. 🔱மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே. 

6. 🔱மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. 🕉️கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. 🕉️சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. 🔯சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10.🔯 எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11.🕉️ இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. 🦗காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. 🦅காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. 🐦குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15.🕉️✳️ நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. ⚜️சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. ❇️தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19.🔱 ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. 🔱சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.🌳தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. 🌠அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

🕉️தகவல் சித்தமெல்லாம் 🕉️சிவமயமே அணி...🕉️

நெஞ்சில் மாமழை

நெஞ்சில் மாமழை (சிறுகதைகள் சீ2 – 82)
#ganeshamarkalam

வாழ்க்கையில் எத்தனையோ நடக்கரது. சிலது சந்தோஷமா, சிலது நடந்துடுமோன்னும் நடந்துட்டா பீதியையும் கொடுக்கும். ஏன் எது நடந்தாலும் ஒரே மாதிரி இருக்க முடியலை? இப்படி அல்லாடரதுதான் வாழ்க்கையா?

ஆபீஸுக்குள் நுழையரச்சே வழக்கமா சுகன்யா உக்கார இடத்தில் வேர யாரோ தத்தி. ரிசெப்ஷனிஸ்டை மாத்தினா கேட்டுட்டு செய்யமாட்டாளா? அதுலேந்தே மூட் அவுட். ஒரு ஸ்டேட்மென்ட் முடிச்சுக் கொடுக்கணும். 3 மணிநேரம் பிடிக்கும். நேத்து மானேஜர் சதாசிவம் கிட்டே “கரெக்டா 12 மணிக்கு உங்க டேபிளில் இருக்கும் சார்”னு ஜம்பமா சொல்லிட்டேன். செய்யலைன்னா வெய்வன். எனக்கு வழக்கமா ஆபீஸ் வேலையில் தப்பாகும். வைதேகிகிட்டே காமிச்சுட்டு தரணும். இன்னைக்குன்னு பாத்து அவள் லீவு. மனசுக்குள் இனம்புரியாத சங்கடம் தொத்திண்டது

அப்போதான் HR ஆபீசர் ஒரு பொண்ணை அழைச்சிண்டு ஹாலுக்குள் வரான். கையைத் தட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்க்க திரும்பிப் பாக்கரோம். “ஹே கயிஸ் திஸ் இஸ் நர்மதா, நம்ம புது PRO. லெட் அஸ் கிவ் ஹர் அ வார்ம் வெல்கம்.” எல்லாரும் கை தட்டினோம். சங்கடம் போய் மனசுக்குள் மத்தாப்பு.

ஏன்னு கேட்டா சொல்லிடலாம். நர்மதா அத்தனை அழகு. தீபிகா படுக்கோனே + பாகுபலி அனுஷ்கா கலந்து உருட்டி செஞ்சாப்புலே. நடந்து வரச்சே அத்தனை நளினம். கிட்டக்க வந்துட்டாலோ “கிண்”ணுன்னு வாளிப்பான உடம்பு. என்ன பெர்ஃப்யூம் அடிச்சிண்டான்னு ஆராய்ச்சியில் இறங்குவேள். கண்ணை பெரீஸா விரிச்சு பெச ஆரம்பிச்சா சொக்கிப் போவேள். அவள் மூக்குனு கவனம் போச்சுன்னா கண்களை மறந்துடுவேள். உதட்டின் மேல் ஆசை வரச்சே உலகமே சுத்தும். சொல்லிண்டே போலாம். அதான் மனசுக்குள் மத்தாப்பூன்னு.

நர்மதா வந்ததும் சுகன்யா வராததும், வைதேகி லீவில் போனதும் பொருட்டாத் தெரியலை. இன்னும் ஒரு வாரம் இவாள்லாம் கண்ணில் படலைன்னாலும், கவலையில்லை.

சதாசிவன் போன். “மணி 11 ஆச்சு, 12க்கு ஸ்டேட்மென்ட் வேணும், எடுத்துண்டு க்ளையென்ட் பாக்கப் போணம், தப்பில்லாம பண்ணி ப்ரின்ட் எடுத்து ஃபைலில் வச்சு அனுப்பிடு”. பக்குன்னுது. இன்னும் ஆரம்பிக்கலை. முகம் வியர்கறதை பாத்த கணேசன் கிட்டக்க வந்து “செஞ்சு தரட்டும்மா?” “ஆபத்பாந்தவா, அநாதரக்ஷகா”ன்னு அவன்கிட்டே மடிக்கணிணியை நகர்த்தினேன். என்ன மாயம் செஞ்சானோ, கண்முன்னாடியே டாகுமென்ட் பிழையேதும் இல்லாம உருவெடுக்க, “உனக்கு நாளைக்கு ட்ரீட்”னுட்டு படிச்சுப்பாத்து ப்ரின்ட் கொடுத்துட்டேன். மானேஜர் கிளம்பிப் போனதும் ஹ்ருதயம் சீரா அடிக்க ஆரம்பிச்சது.

அதுக்குள்ளே, மூட் ஸ்விங்க்பாளே அது 3 தடவை இந்தக் கோடீலேந்து அந்தக் கோடீவரைக்கும் ஊசலாடினதை இப்படியே விட்டா ஸ்ட்ரெஸ், மாரடைப்புன்னு எங்கே விடுமோ!

நான் பாலசுப்பிரமணியன், பெரீய நிறுவனத்தில் அக்கவுன்ட் எக்ஸிக்யுடிவ்வா 2 வருஷம் ஆச்சு. புதுசு புதுசா கஷ்டமான வேலையா தரானுவ. மனம்விட்டு பேசன்னு கணெசன், வைதேகி இவா ரெண்டு பெரும். அப்போ சுகன்யா? ரிசெப்ஷனிஸ்டை எல்லாரும் டாவடிப்போம். வைதேகி என்னைவிட 4 வயசு பெரியவள், சீனியர். என்னை தம்பியா அடாப்ட் செஞ்சுடுட்டானு நினைக்கரேன். கணெசனும் தம்பி மாதிரிதான். நர்மதாபத்தி என்ன நினைப்பா? 

போன் போட்டேன். “ஏன் வரலை? காணலைன்னு கலங்கிப் போயிட்டேன்” ஏன் கலங்கணும்? சதாசிவம் வேலை கொடுத்தாரா?” “ஆமாம், கணேசன் செஞ்சு தந்தான்.” சந்தோஷப்பட்டா. “நாளைக்கு வந்துடுவேன், அத்தையும் குழந்தைகளும் திடுதுப்புன்னு அதான். வெளீலே போகவேண்டியிருந்தது”. அத்தை மேட்டரை விலாவாரியா சொல்ல நான் கூப்பிட்டது மறந்து போயிடும்னு புதுசா PRO வந்திருப்பதை சொல்ல, அப்படியா, பாக்கணும்னு பிரியப்பட்டா.

மத்தாநாள் சுகன்யாவும் ஆஜர். நுழைரச்சேயே அவள் கிட்டே கணேசன் வழியரதை பார்த்தேன். நேத்து நடந்த விஷயங்களை சொல்லியிருப்பான். முந்திரிக்கொட்டை. இப்போ சுகன்யாகிட்டே பெசரத்துக்கு வேர சாக்கு வேணும். உள்ளே போனவன் வைதேகியைப் பாக்க “வாடா, எங்கே அவள்?” “இன்னும் வரலை போலேருக்கு, வரட்டும், அழைச்சிண்டுபோய் இன்ட்ரோ தரேன்.” வாசலையே பாத்துண்டு உக்காந்தேன்.

இந்த மாதிரி டயத்தில் மனசில் ஒரு வெறுமை, கண்கள் பூத்தாமாதிரி ஃபீல் ஆகும். எதிர்பார்ப்பில், அடி வயித்தில் குடல் பின்னிக்கும். வருவாளா, மாட்டாளா? வந்தால் டக்குன்னு போயிடணும். நிமிஷங்கள் நத்தை மாதிரி. ஒவ்வொண்ணுக்கும் 300 செகன்ட் மாதிரி.

அதோ! நேத்து முதல்நானுட்டு ட்ரடிஷனல் புடவை. இன்னைக்கு சுடி. சுண்டி இழுத்தது, அவள் சீட்டுக்குப்போய் உக்காந்ததும், “வைதேகி வரீயா, போலாம்”னு கேக்க, “வரேண்டா! என்ன அவசரம்?” அப்புரம் ஏதாவது வேலைன்னு போயிட்டா? வா வா”ன்னு இழுத்துண்டு போகாத குறையா போரொம். எங்களை பாத்துட்டு “நானும் வரட்டுமா”ன்னு கணேசன் கேக்க, “அப்படியே கிட, சீட்லேந்து எழுந்துண்டாயானா மண்டையை பிளந்துடுவேன்”னு அதட்டினேன்.

வரதை பாத்துட்டு நர்மதா எழுந்துண்டா. “ஐ ஏம் நர்மதா, யுவர் ந்யூ PRO, நானே வந்து ஒவ்வொருத்தரா பாத்து அறிமுகப்படுத்திக்கலாம்னு இருந்தேன், நேத்து வந்ததும் வேலை தந்துட்டர், ஜாயினிங்க் ஃபார்மெலிடீஸ் இருந்தது” “நான் பாலா, அக்கவுன்ட்ஸ் எக்ஸெக், இது மிஸ்.வைதேகி சவுத் ஜோன் சேல்ஸ் ஹெட்னு, என் அக்கா மாதிரி, மென்டரும் கூட” கை குலுக்கிண்டோம். “அப்புரம் நிறைய பேசரோம்”னுட்டு நாங்க வர, என் முகத்தில் தெரிஞ்ச கெத்தை ஹாலில் எல்லோரும் பார்த்து பொராமைப்பட, அன்னைக்கு மனசில் சந்தோஷம் நிறைஞ்சு வழிஞ்சது. 

அன்னைக்கு பூரா என் கை சாஃப்டா. அடிக்கடி கன்னத்தில் வச்சு. யம்மா!

“வைதேகி, பாத்தியா எப்படி இருக்கான்னு?” “ஏண்டா எப்படி?” “கிவ்”வுன்னு. ஆபீஸே களை கட்டிட்டா மாதிரி.” “ஆமாம், சுகன்யாவுக்கு போட்டி. இனிமேல் பாரு அட்டெண்டன்ஸ் 100% ஆகும், வேலையில் எல்லாரும் கெட்டிக்காராளா மிளிர ஆரம்பிப்பா. நீயும் இனிமேல் யார் தயவில்லாம அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் போடுவாய்!” என்னவோ தெரியலை வைதேகி அப்படி சொன்னதும் பலூன் மாதிரி இருந்த மூட் ஊசியால் குத்தினாப்புலே புஸ்ஸுன்னு காத்து இறங்கித்து. இப்போ அதை சொல்லணுமா? சித்தே நாழிகூட நான் களிப்பா இருக்கப் பிடாதா?

இப்படித்தான் மனசில் திடுதுப்புன்னு சந்தோஷமும் கூடிய சீக்கிரமே வருத்தமும் கிலேசமுமாய் மாறி மாறி நடக்கும். இது ஆபீஸ் ஆகட்டும் பெர்சொனல் மேட்டராகட்டும். எனக்குன்னு விதிக்கப்பட்டதோ?

அப்பா இல்லை, அம்மாதான். வரன் பாத்திண்டிருக்கா. ஜாதகம் பொருந்தும், பொண்ணாத்தில் போடோவை பாத்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிடுவா. அம்மா நன்னா சமைப்பா, அத்தனை கைப்பக்குவம், ருசியா, ஆசையா சாப்டுட்டு படுத்துக்கலாம்னா கரென்ட் போயிடும். தண்ணி மோட்டர் ரிப்பேர் ஆகி இப்போதான் சரி செஞ்சிருப்பேன், இன்னொரு இடத்தில் குழாய் லீக் ஆகும். ஆபீசில் நன்னா போராச்சே ஆத்தில் பிர்ச்சனைகள் தலைதூக்கும்.

வேலை கிடெச்சு 2நா ஆனதும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு ட்ரீட் வேணும்னானுவ. ஜாலியா வரச்சே அம்மா போன். வழுக்கி விழுந்துட்டேண்டா, பக்கத்தாத்துலே டாக்டர் கிட்டே அழைச்சிண்டு வந்தான்னு கணுக்காலில் கட்டு 5 நாள் எழுந்திருக்கவேயில்லை. இப்போ நர்மதா வந்தது, என் ஆபீஸில் சேர்ந்தது மனசுக்கு குதூகலமா இருக்க, அடுத்தது ஏதாவது நொட்டாங்கு நடக்கணுமே, என்னவா இருக்குமோன்னு பயம் கவ்வித்து. வைதேகி வேர “நீயே தப்பில்லாம வேலை செஞ்சு காமி”ன்னுட்டா. அது ரொம்பவே கஷ்டம்.

இப்படி போச்சு நாட்கள். அம்மாவை கேட்டேன்: “ஏன் சும்மா உக்காந்திருக்காய், எனக்கு பொண் பாக்கர மேட்டர் என்னாச்சு? பேச்சு மூச்சையே காணோம்!” “வந்திண்டிருக்குடா, நேத்துகூட சாய்சங்கரா மேட்ரிமோனியல் அனுப்பிச்ச கட்டு அங்கே இருக்கு பாரு”. டீப்பாயில் ஒரு கவர். உள்ளெ 4 ஜாதகம். ஒண்ணுலேயும் போடோவே இல்லை. என்னத்தை நான் பாக்கரது, கட்டத்தையா? அப்போதான் அந்த ஜாதகம் கண்ணில் பட, மனசுக்குள் மாமழை. நர்மதாவாம். மேஷ ராசி, வயசு 27. நம்ம நர்மதான்னா உடனே சரின்னுடுலாம், போடோவைக்கூட பாக்காம. இது வேர யாரோ. வேலைபாக்கர கம்பேனி பேர் முன்னப்பின்னே தெரியாத ஒண்ணு. நான் பாக்கரதை பாத்த அம்மா “நர்மதான்னு ஜாதகம் பொருந்திருக்கு. போடோ நேரா வாங்கிக்கணுமாம். என்னடா செய்யலாம்?”

“எனக்கு இந்த நர்மதாவெல்லாம் வேண்டாம்”னுட்டு வெளீலே கிளம்பினேன்

மறுநாள் ஆபீஸில் வேலையே ஓடலை. நேரத்தை கடத்திட்டு மத்தியானம் கேன்டீனுக்குள் நுழஞ்சா அதிர்ச்சி.

கணேசன் நர்மதாவோட சிரிச்சு பேசிண்டு லன்ச் சாப்பிடரான். கூடவே வைதேகியும், சுகன்யாவும். நம்பளை ஏன் கூப்பிடலை? கோவிச்சிண்டு தள்ளிப்போய் உக்கார, வைதேகி “இங்கே வா.” கூப்பிட அவள் பக்கத்தில் உக்காந்துக்கரேன். கணெசனும் நர்மதாவும், “சாரி, பாலா நாங்க போகணும்” எழுந்துக்கரா. என்னவோ போல ஆகிடுத்து. வைதேகிதான், அவா ரெண்டு பேரும் அரைநாள் லீவு. மாயாஜாலில் சினிமாவுக்கு போரான்னா. 

எப்படிப் போவா? இவன்கிட்டே புல்லெட்னா இருக்கு? அதுலேயா? இவள் எப்படி உக்காருவா? முன்னாடியே பிளானோ! ஜீன்ஸும் டாப்ஸுமானா வந்திருக்கா! ஸ்டோல்ஸ் வேர. முகமூடி சுத்திக்கலாம். இவனோட கிளைன்ட் மீட்டுக்கு பைக்கில் போவேன். வேகமா ஓட்டுவன். இவள் புல்லெட்டில் எப்படி உக்காந்தாலும் அவன் மேல் விழுந்தா மாதிரிதான் முடியும். ப்ரேக் பொடுவானே! எனக்குத் தெரிஞ்சு மாயாஜால் போரவழீலே 8 ஸ்பீட் ப்ரேக்கர். 

என் மனசில் அடிக்கர புயலை கண்ணிலே கவனிச்ச வைதேகி, “இந்தா கொஞ்சம் தயிர்பச்சடி விட்டுக்கோ”ன்னு தன் டிஃபின் பாக்ஸிலேந்து என் சாதத்தில் ஊத்த, “இந்தாடா பாலு”ன்னு சுகன்யாவும் பாட்டிலில் வச்சிருந்த ஆரஞ்சு ஜூஸை தரா. இதெல்லாமா மன பாரத்தை குறைச்சிடும்?

கணேசன் இப்படிப் பண்ணுவான்னு நினைக்கலை. ஹெல்ப் செஞ்சான் ஒத்துக்கரேன். அதுக்காக என் ரூட்டை கிராஸ் செய்யணுமா? நர்மதாவை எனக்கு பிடிச்சதுன்னு நானும் ஒண்ணும் முயற்சி எடுத்துக்கலையே! யார் கிட்டேயும் சொல்லலை. இதுக்கு சீக்கிரம் ஏதாவது பண்ணணும். இல்லைன்னா கை மீறிப்போயிடும்.

ஆனால் சதாசிவம் என்னை பிழிஞ்செடுக்க ஆரம்பிச்சர். அடிக்கடி வைதேகி, கணெசனோட உதவி தேவைப்பட்டது. அதனால் அவன்கிட்டே சண்டைபோட முடியலை. ஒருநா இவன் சட்டையில் நர்மதா பொட்டுக்கர அதே பெர்ஃப்யூம். பல்லைக் கடிச்சிண்டு பொறுத்துண்டேன். மாயாஜால் போரச்சே இதே சட்டை. இன்னும் துவைக்கலை. கொல்லணும்!

அன்னைக்கு வெள்ளிக்கிழமை, நர்மதா சேர்ந்து 8 மாசமாச்சு. சாவகாசமா 11 மணிக்கு வரா. நேர மானேஜர் கேபினுக்கு போய் வெளீல வர 1 மணிநேரம் ஆச்சு. வந்தவள் வைதேகி கிட்டெ போய் கிசுகிசுன்னு பேச்சு. லன்ச்சில் நாங்க எல்லாரும் சேர, அவள் பையிலேந்து எடுத்து எல்லாருக்கும் ஒண்ணு தரா. அவள் கல்யாணப் பத்திரிகை. “யாருடீ லக்கி பாய்?” வைதேகி கேக்க, “ஷியாம் இஸ் இன் இன்ஃபோசிஸ்” “எப்படீடி பிடிச்சாய்?” சாய்ஸங்கரா மேட்ரிமோனியலில் 2 வருஷம் மின்னாடி அப்பா ஜாதகம் கொடுத்து வச்சிருந்தார். அப்டேட் கூட செய்யலை. பழைய வேலை டீடையில்ஸ் அப்படியே இருந்தது. அது கிடெச்சு பொருத்தம் பாத்துட்டு ஷியாம் ஆத்தில் போடோ கேட்டா. அப்புரம் எல்லாம் மடமடன்னு நடந்தது”.

நான் டிஃப்பன் பாக்ஸுக்குள் வெறிச்சுண்டு உக்காந்திருக்கேன். நெஞ்சில் மீண்டும் “சோ”ன்னு மாமழை. மேகமேயில்லை, கண்ணீர் தான் அப்படி கொட்டுமோ!. ஆனால் அதே நெஞ்சின் ஒரு மூலையில் லெசா சூரிய ஒளி. 

கணெசன் இல்லை வேர யாரோ ஷியாம்னு தெரிஞ்சுண்டதில் ஒரு சின்ன சந்தோஷ ஒளிக்கீத்து.

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 24

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).பகுதி 24
(By சுஜாதா&வெங்கடேசன்)(6381369319)
திருச்செங்குன்றூர்….
புராணக் கதை :
சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டு தலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சி யளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை’ என பொருள்படும் வகையில் ‘இமையவரப்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத் திருந்த வரங்களைக் கேட்டறிந்த விஷ்ணு, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைக் கேட்டுக் கொண்டார். முருகப்பெருமான், தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனுடைய அரக்கர் படைகளை முழுவதுமாக அழித்தார். பல்வேறு தோற்றங்களில் தோன்றிப் போரிட்ட சூரபத்மனை, ஒவ்வொரு தோற்றத்திலும் அழிக்க முற்பட்டு வெற்றி கண்ட முருகப்பெருமான், இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றைச் சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி அவ்விரண்டையும் தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.

கோவில் அமைப்பு :

இத்தல இறைவனான இமைய வரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.

கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் ‘சங்குதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது.

திருச்சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து தோற்றங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.

இது தவிர தனு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல், மகரவிளக்கு மண்டல பூஜை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தான் செய்த தவறான செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்கள், மனக் குழப்பமுடையவர்கள் மற்றும் மன அமைதி வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு மன ஆறுதலையும், மன அமைதியையும் பெறலாம். இவை தவிர, பயம் நீங்குதல், நோய்களில் இருந்து விடுபடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், தடைகள் நீக்கம் போன்றவைகளுக்கும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்குப் பால் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலயத்தின் சிறப்புகள் :

* இக்கோவில் 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

* நம்மாழ்வார் இத்தல இறைவனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

* பஞ்சபாண்டவர்களுள் தருமர் மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில்’, ‘தருமச்சேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

* நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் ‘திருச்செங்குன்றூர்’ என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் ‘திருச்சிற்றாறு’ என்று அழைக்கப்படுகிறது. 

வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  
பொருள்.  
குவலயாபீட வதம் மல்லர் வதம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார்.

அஞ்சம்பலம் :

மகாபாரதப் போருக்குப் பின்பு பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்குத் தாங்கள் செய்த சில தவறுகள் மனச்சுமையாக இருந்தன. அந்த மனச் சுமையில் இருந்து தங்களை விடுவித்து, மன அமைதி கொள்வதற்காகக் கேரளப்பகுதிக்கு வந்த அவர்கள், தகுந்த பராமரிப்பின்றி பழமையடைந்திருக்கும் மகாவிஷ்ணு கோவில்களைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தனர். 

அதன்படி தருமர்- திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) இமையவரப்பன் கோவிலையும், பீமன் - திருப்புலியூர் மாயபிரான் கோவிலையும், அர்ச்சுனன் - திருவாரண்விளை பார்த்தசாரதி கோவிலையும், நகுலன் - திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவிலையும், சகாதேவன் - திருக்கடித் தானம் (திருக்கொடித்தானம்) அற்புத நாராயணர் கோவிலையும் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி பெற்றனர். பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஐந்து கோவில்களும் கேரளாவில் ‘அஞ்சம்பலம்’ எனப்படுகின்றன. 

அமைவிடம் :

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது செங்கண்ணூர். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) அமைந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோமீட்டர், கொல்லத்தில் இருந்து 70 கிலோமீட்டர், கோட்டயத்தில் இருந்து 38 கிலோமீட்டர், திருவல்லாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கண்ணூர் செல்லப் பேருந்து மற்றும் ரெயில் வசதிகள் அதிக அளவில் உள்ளன.படம் கோயில் வெளிப்புறம்
                           தொடர்வது திருப்புலியூர்.

மலைநாட்டுத்திருப்பதிகள் பகுதி 23

மலைநாட்டுத்திருப்பதிகள்(கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி23
(By சுஜாதா&வெங்கடேசன்)பகுதி22
திருவல்லவாழ்மார்பனை சேவிக்காவிட்டாலும் துவஜஸ்தம்பத்த சேவிச்சுட்டு ஒன்பது மலை நாட்டு திவ்ய தேசங்களை சேவிச்ச திருப்தி வரது.  இன்னும் நாலு எங்கே எப்போன்னு கேக்கறோம். நாலும் இங்கேர்ந்து 30 கிமீ சுத்தளவுளதான். இன்னிக்கு இந்த ஊர்லயே தங்கிட்டு நாளைக்கு கார்த்தால ஒரு ஆட்டோ பேசி போகலாம்கிறார். ஆனா சரியான ரூம் கிடைக்கல. அவரே மேப் பார்த்துட்டு செங்கனூர் பக்கத்துலதான். அங்க போய் ரூம் போட்டா அந்த ஊர்லயே இருக்கற தர்மர் ஷேத்திரம் சேவிச்சுடலாம். ஏற்கனவே சகாதேவன் ஷேத்திரம் திருக்கடித்தானம் ஆச்சு. நாளைக்கு பீமன் அர்ச்சுனன் தொடர்பான ஷேத்திரம் சேவிச்சுட்டா பிரயாணம் முடிஞ்சுடும்கறார். இன்னிக்கு சாயங்காலமும் டயத்தை வேஸ்ட் பண்ணாம பெருமாள் சேவை ஏற்பாடு செய்யற எங்காத்துக்காரர் சமத்தை நெனச்சு சந்தோஷமா இருக்கு. 
செங்கனூர்ல ரூம் கெடைக்கறது. 
ஆனா செங்கனூர் வந்த உடனே இந்த ஊர் பகவதி அம்மன் பிரசித்தம்..இன்னிக்கு சேவிச்சுடுவோம். நாளைக்கு ஒரே நாள்ல நாலு பெருமாளையும் சேவிக்கலாம்கறார். பரண்யாசம் பண்ணின்டதால (நாராயணனை அன்றி புற தெய்வம் தொழாத வைணவ சன்னியாசம்)அப்பாவும் அக்காவும்்வரலேன்னுடறா..
நான் மட்டும் கெளம்பி போறேன்.  
இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன.

அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது. 

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.
இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
இக்கோயிலில் 
திருவல்லாவில் ஆண்கள் மட்டும் தரிசிக்கும் பெருமாள் கோயில் மாதிரி செங்கனூர் பகவதியை குறிப்பிட்ட நாட்களில் பெண்களின் கண்காணிப்பில் தரிசனம் செய்கிறார்கள் என்பதை கேள்விப்படும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. 
மறுநாள் கார்த்தால நாலு கோயிலுக்கும் ஒரு ஆட்டோக்காரரை ஏற்பாடு செய்து முதலில் உள்ளூர் திருச்செங்குன்றூர் கோயிலை அடையறோம். 
அப்பா வழக்கப்படி ஸ்தல வரலாறு புஸ்தகம் வாங்கி படிச்சி சொல்றார்.  

தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் மகாவிஷ்ணு காட்சியளித்து அருளினார். இந்தப் பெருமையுடன் பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில்.

மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.

அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.

உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.

கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லி, ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.

மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.

தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.(படம் செங்கனூர் பகவதி அம்மன் கோயில்)
      கதை தொடரும்…..
(இலவச பிராமண திருமண தகவல் பதிவிட 6381369319 என்ற எண்ணிற்கு மாட்ரிமோனி என வாட்சப் மெசேஜ் அனுப்புக)

மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி 5

புடவூர் திருஎஸ் விஜயராகவன் ஸ்வாமிகள் வழங்கும் மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி 5
நான்கு –திவ்ய தேசம்       திருமூழிக்களம்

உத்தரியத்துக்கு மாற்றிகொண்டு, உள்ளே சென்று இரண்டு அர்ச்சனை டிக்கெட் வாங்கிக்கொண்டு வழக்கம்போல் அர்ச்சனை முடித்துக்கொண்டு ஒரு பிரதக்ஷணம் வந்தோம். சன்னதி முன்னால் இருந்த மண்டபத்தில் அமர்ந்து நம்மாழ்வார் பாடியுள்ள திருவாய்மொழி ஒன்பதாம் பத்து ஏழாம் பதிகத்தை சேவித்தோம்.

எங்கானலகங்கழிவாய், இரை தேர்ந்திங்கினிதமரும்
செங்காலமடநாராய், திருமூழிக்களத்துறையும்
கொங்கார் பூந்த்துழாய்முடி எங்குடக்கூத்தர்க்கு என்தூதாய்
நுங்கால்கலென் தலைமேல், கெழுமீரோநுமாரோடே  

                                                                  இங்கும் ஒருமலையாளி கைகூப்பி காதால் கேட்டுக் கொண்டிருந்தவர் “இவ்விடத்தே எல்லாரும் பறையனுண்டு. ஈசேத்திரம் பாடல் பெற்ற ஸ்தலமானும்னு, பட்சே ஞான் கேட்டதில்ல. இதானும் ஆத்யம் கேட்டது. இவ்விடத்து போர்டிலே எழுதிவைக்கான் பற்றோ?”
“அது தேவஸ்வத்தோட பணியானும், எங்களால் கொறைச்சு மலையாளம் சம்ஸாரிக்க்கான் மாத்திரமே அறியும். வாய்கானாயிட்டு அறியில்ல. ஞான் வேனுமாங்கில் ஒரு XEROX COPY எடுத்தாய்க்க்கான் இவ்விடத்து தேவஸ்வம் ஆபீஸ்க்கு. போரே” என்று கூறி விடை பெற்றோம். பக்கத்திலே கோவிலை ஒட்டி பாரதப்புழா நதி ஓடிக்கொண்டு இருந்தது. அம்பலம் ரம்யமாயிருந்தது.
“வாசு ஒரு விஷயம் சொல்லுகிறேன் கேள்! இந்த திவ்ய தேசத்திற்கு நான் என் மாமனாருடனும், வேதாவுடனும் 197௦-ம் வருஷம் சாயங்காலம் 6-3௦ மணிக்கு வந்தேன். ஆலுவாயிலிருந்து பஸ் ஏறியபோது அஞ்சரை மணி. நல்ல வெளிச்சம். பாதி வழி வரும்போது நல்ல இருட்டுடன் சரியான மழை. சுற்றுப்புறம் ஒன்றும் தெரியவில்லை பஸ் ஜன்னல்களை தார்பாலின் திரை மறைத்திருந்தது.
மாமனாருக்கோ பயம். வழியில் எங்காவது பஸ் ஸ்டாண்டில் இறங்கிகொள்ளலாமா? என்றார். நான் கண்டக்டரை கேட்டேன். “ஏய், அதொண்ணும் பேடிக்கேண்டா கேட்டோ. ஞான் அம்பலத்து புறத்தே ஸ்டாப் செய்யான். குடை உண்டோ? ஈனாட்டிலே எப்போவும் கையில் குட வேணும் கேட்டோ., அது சாரமில்லே, இப்போ மழை நிக்கும்.” என்று கூறி விடவே நானும் “மணி ஆறு கூட ஆகவில்லை. என்ன பயம். மழை இருட்டிக்கொண்டு பேய்கிறது. இதெல்லாம் இங்கே சகஜம்தான்” என்று அவர் பயத்தை போக்கினேன். வண்டி கோவில் வாசல் பக்கத்திலேயே நிறுத்தினான். வாசலில் இருந்தோர் “வேகம் போய்கோ தீபாராதன ஆவுன்ன சமயமானும்” என்று உள்ளே செல்ல வேகப்படுத்தினர். மழை கொஞ்சம் நின்று பிசு, பிசு வென்று தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளேசென்று பெருமாளை சேவித்தோம். நங்கள் போனபிறகு தீபாராதனை ஆயிற்று.. பிறகு அந்த நம்பூத்ரி அர்ச்சகர் “மெட்ராசா? என் இவ்வளவு லேட்டாக வந்தீர்கள்?” என்று கேட்டார். நான்  “நாங்கள் மெட்ராஸ் தான் ஆனால் எர்ணகுளத்திலானும் பணி” என்றேன். அவர் உடனே “ஒ, நீங்கள் எர்ணகுலமானும்?! நீங்கள் திரும்பி போகானாயிட்டு பஸ் இல்ல கேட்டோ?. பஸ் கேரனமாங்கில் நீங்கள் குருமாசேரி வேகமாயிட்டு போகணும். ஒரு மைல் நடக்கணும் அவ்விடத்து கூட் ரோடில் அலுவா போகுன்ன பஸ் கரெக்ட்டாயிட்டு ஏழரை மணிக்கு தன்னே வரும். நாங்கள் ஒருவரை  ஒருவர் பார்த்துக்கொண்டோம். நான் சொன்னேன்
வேதா உன்னால் முடியுமா? இருட்டிவிட்டது. தெரு விளக்கு தவிர வேறொன்னும் இல்லை. மழை வலுத்தால் என்ன செய்வது. ஒதுங்ககூட வீடுகளில்லை. குடையும் கொண்டு வரவில்லை.” என்றேன். மாமனார் அப்படியே கோவில் திண்ணை ஒன்றில் அமர்ந்து விட்டார். “ஆட்டோ எதான்கில் கிட்டுமோ?” என்று கேட்டதற்கு நம்பூத்ரி சொன்னார்
அதொண்ணும் பரயான் பாடில்ல. வேனுமாங்கில் நம்ம வீட்டில் தங்கி காலை உதயம் பெருமாளை அஞ்சு மணிக்கு தர்ஷனம் செய்துவிட்டு போகான்” 6 மணிக்கு பஸ் உண்டு.
“இல்லை பொய் விடலாம் பேசிகொண்டேயிருந்தால் நேரமாய் விடும் என்று கூறி நடக்க ஆரம்பித்தோம். நானும் அவரும் ஸஹஷ்ராநாமம் சொல்லிக்கொண்டே வேகமாக நடந்தோம். வேதா ஸ்ரீமதியை உண்டாயிருந்தாள்.ஆறு மாசம் அதுதான் என் கவலை. மெதுவாவே வா. பார்க்கலாம். இன்னும் அரை மணிக்கு மேல் உள்ளது. நல்ல இருட்டு. மழை பன்னீர் போல் தூறிக்கொண்டு இருந்தது. வழியில் ஒரு இடத்தில் பாம்பு ஒன்று ரோடை கிராஸ் பண்ணி ஓடியது. எப்படியோ நாங்கள் குருமாசேரி வரவும் ஐந்து நிமிஷத்தில் பஸ் வரவும் சரியாக இருந்தது. அதுவரை மழையும் இல்லை. திருமூழிக்களத்து பெருமாள் மட்டும் கஷ்டப்பட்டுதான் சேவை சாதிப்பார் போலுள்ளது என்றேன். வாசு கேட்டான்”அது எப்படி/” நம் அண்ணன்கரசாரியார் கூட ஒரு 7௦ வருஷத்துக்கு முந்தி வந்த போது வழிதவறி ராத்திரி இருட்டு வேலையில் வயலில் வேலை செய்துகொண்டு இருந்த ஒருவன் HARICANE விளக்கு காட்டி வழி காட்டி வர கோயில் வந்து பெருமாள் செவித்ததாக எழுதி உள்ளார்./“சித்தியா ரொம்ப இண்டரஸ்ட்டான கதை எல்லாம் சொல்கிறாய். அதிருக்கட்டும் அடுத்த ப்ரோக்ராம்என்ன?” என்றான். அடுத்து ஆளுவா பஸ்ஸில் போகிறோம். அரை மணியில் கொண்டு தள்ளி விடுவான். மணி இப்போ எட்டரை. ஆலுவாயில் இருந்து வேறொரு பஸ் பிடித்து எடப்பள்ளியில் இறங்குகிறோம். எடபள்ளியிலிருந்து ஆட்டோ பிடித்து ( ரூ.5௦/-ஆகும்) 1௦-15 மணிக்கு திருகாட்கரை கோவிலுக்கு சென்று பெருமாளை சேவிக்கிறோம்
[23:13, 29/07/2020] +91 90439 96350: ஆலுவாவில் தங்கி நாளை காலை 1௦-15 மணிக்கு கோவிலுக்குள் சென்று பெருமாளை சேவித்தோம்.
என திருத்திப்படிக்கவும்