Monday, October 2, 2023

பருப்பு உருண்டை குழம்பு

 பருப்பு உருண்டை குழம்பு 

துவரம் பருப்பு / Thuvaram Paruppu  - 200 gram
சின்ன வெங்காயம்  /Chinna vengayam - 20
பச்சை மிளகாய் / Green chilli  /  - 3
மல்லி இலை   coriander leaves  - சிறிதளவு 
கறிவேப்பிலை /Curry leaves   - சிறிதளவு 
பெருங்காயத்தூள்  / asafoetida   - 1/2 spoon 
உப்பு  / salt - 1/2 spoon

 *பருப்பு உருண்டை செய்முறை:* 

பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்.

சின்னவெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைத்த பருப்பு நறுக்கிய பொருள்கள், உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.

 *குழம்பு செய்முறை:* 

நல்லெண்ணெய் 

50 கிராம் ஊற்றி பெருஞ்சீரகம்  

கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். 

வதங்கியவுடன்  4 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ( Kuzhambu Milagai thool | Kulambu masa...   ) போட்டு பச்சை வாசனை போக வதக்கி அதனுடன் நறுக்கிய 2 தக்காளி பேட்டு வதக்கவும்.

நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து அதனை கரைத்து வதங்கிய மசாலாவுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் கால் மூடி தேங்காய் அரைத்த விழுது உப்பு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இந்த குழம்பு கொஞ்சம் தண்ணியா தான் இருக்க வேண்டும். 

உருண்டை வெந்து வரும் போது சிறிது கரைந்து குழம்பு கெட்டியாகி விடும்.

குழம்பு கொதித்து பச்சை வாசனை போனவுடன் பருப்பு உருண்டையை சின்ன சின்னதாக உருட்டி குழம்பில் போட வேண்டும். 

பருப்பு உருண்டை வெந்தவுடன் மேல் எழும்பி வரும்  போது கரண்டி விட்டு கிளர வேண்டாம். 

மிகவும் சுவைாயான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.

Sunday, October 1, 2023

சமையல் டிப்ஸ்

 சமையல் டிப்ஸ்:-

வெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் பிசுபிசுப்பு இருக்காது.

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது பச்சை நல்லெண்ணெய் இரண்டு அங்குலம் மேலே நிற்குமாறு ஊற்றினால் ஊறுகாய் நீண்டநாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

வெண்டைக்காய் குழம்புக்கு வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது புளித்த மோரை சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும். 

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிரை சேர்த்து வதக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கி போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். 

உருளைக் கிழங்கை உப்பு நீரில் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் உருளைக் கிழங்கு சீக்கிரம் வெந்துவிடும்.

பாகற்காயை நறுக்கி காயவைத்து தூளாக்கி, ஒரு டீஸ்புன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

மரவள்ளிக்கிழங்கில் வறுவல் செய்யும்போது, மரவள்ளிக்கிழங்கை 5 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்தபின் வறுத்தால் மரவள்ளிக்கிழங்கு வறுவல் மொறுமொறுவென சுவையாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பு ன் சர்க்கரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சிறிது மிளகை எண்ணெய் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால், எண்ணெய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

சமையல் ரெசிபி

 அருமையான சில சமையல் ரெசிபிக்களைப் பார்ப்போம்....💐

முருங்கைக்கீரை ரசம்💐

 தேவையானவை...💐

🔘முருங்கைக் கீரை -கால் கப்,அரைத்துக்கொள்ள: வெந்தயம்,சீரகம் – தலா அரை டீஸ்பூன்,பச்சை மிளகாய் – 2எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,தக்காளி – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,உப்பு – தேவைக்கேற்ப.பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – ஒரு டேபிள்ஸ்பூன்,தனியா – 2 டீஸ்பூன்.தாளிக்க:கடுகு – 2 டீஸ்பூன்,கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு.எண்ணெய் – சிறிதளவு,காய்ந்த மிளகாய் – 2


செய்முறை...💐


🔘முதலில் கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு வறுத்து, அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும், சேர்த்துக்கொள்ளலாம் பின்பு பரிமாறவும்.

____________💐

தனியா பத்தியக் குழம்பு....💐


  பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்சனைகளையும் இந்த தனியா பத்தியக் குழம்பு நீக்கும். இப்போது தனியா பத்தியக் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்:💐 

தனியா - 3 ஸ்புன்
கடலைப்பருப்பு - 1 ஸ்புன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்புன்
கடுகு - அரை ஸ்புன்
எள்ளு - அரை ஸ்புன்
மிளகு - 1 ஸ்புன்
நெய் - 1 ஸ்புன்
மிளகாய் வற்றல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு 
பெருங்காயம் - ஒரு சிட்டிகை 
மஞ்சள்த்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:💐

 முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத் தனித்தனியே வறுத்துப் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். பிறகு புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

 பின்னர் அடி கனமான பாத்திரத்தில் புளி கரைசலை ஊற்றி, கொதிக்க வைத்து அதில் மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு, பெருங்காயம், எள்ளு சேர்க்கவும். பிறகு அரைத்தப் பொடியைப் போடவும். நன்றாக வாசனை வந்ததும் ஒரு கொதி விட்டு குழம்பு போல கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

 ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சு டானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் கொட்டவும். இதைச் சு டான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இந்த குழம்பு கைப்படாமல் இருந்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பயன்கள்: 💐

 தனியா விதை, வாயுப் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும், இருமல், சளி, தலைவலி, பித்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. 

 இதில் தேநீர் தயாரித்தும் அருந்தலாம். மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து. வயிற்று வலி, வயிற்றுப் புண்கள் போன்றவற்றை போக்கும்.

_____________💐

பலாக்காய்ப் பிரட்டல்..💐

தேவையானவை:💐

பலாக்காய் – அரை கிலோ உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – ஒன்று மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:💐

தேங்காய்த் துருவல் - கால் கப் தக்காளி - 2 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி – ஒரு துண்டு பூண்டு - 3 பல் சோம்பு, சீரகம், கசகசா – தலா ஒரு டீஸ்பூன் முந்திரி - அரை டேபிள்ஸ்பூன் (நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்).

தாளிக்க:💐 

சோம்பு - கால் டீஸ்பூன் பட்டை - சிறிய துண்டு பிரியாணி இலை - ஒரு துண்டு.

செய்முறை:💐 

உருளைக்கிழங்கு, பலாக்காயைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, வேகவைத்த பலாக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி, நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

_____________💐

குண்டு மிளகாய் சட்னி💐

step 1💐

முதலில் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் குண்டு மிளகாயை நறுக்கி வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவேண்டும்.

step 2💐

பின் அதனுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து பிரட்டவும். பின்னர் குண்டு மிளகாயைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி ஆறவிடவேண்டும். 

step 3💐

ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான, காரம் அதிகமில்லாத குண்டு மிளகாய் சட்னி ரெடி.

___________💐

காஞ்சிபுரம்இட்லி 1

 காஞ்சிபுரம்இட்லி:💐

தேவையானவை:💐

பச்சரிசி,
புழுங்கலரிசி,
உளுந்து - தலா 1 தம்ளர்,
கடுகு,
சீரகம் - ½ டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சுக்குப்பொடி- 1½ டீஸ்பூன்,
முந்திரி - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயப் பொடி - ½ டீஸ்பூன்,
நெய் - தாளிக்க,
தயிர் - 2 கரண்டி,
வெந்தயம் - ½ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:💐

வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்க்கவும். பிறகு, மேலும் சிறிது நெய் விட்டு, கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.

செய்முறை:💐

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் மூன்று மணி நேரம் ஊற விட்டு, பின் அரைத்துக் கொள்ளவும். 

இட்லிக்கு அரைப்பதுபோல, குடைய குடைய அரைக்காமல் கொஞ்சம் கொதகொதப்பாக அரைத்து பின், எட்டு மணி நேரம் புளிக்க விடவேண்டும். 

அத்துடன் கெட்டித்தயிர் மற்றும் உப்பு கலந்து விடவும். இட்லிப்பானையில் சின்ன சின்னக் கிண்ணங்களில் நெய் தடவி, அதில் மாவை விட்டு, வேக வைத்து எடுக்கவும். கிண்ணத்தில் மந்தார இலை வைத்தும் வேக விடலாம். சுவை அமோக ருசியாய் இருக்கும்.

____________💐

இஞ்சி தேங்காய் சட்னி💐

தேவையானபொருட்கள்:💐

துருவிய தேங்காய் - 1 கப்
இஞ்சி - 2 துண்டு (தோல் நீக்கி, கழுவியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:💐

முதலில் மிக்ஸியில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை சட்னியில் ஊற்றி கலந்தால், இஞ்சி தேங்காய் சட்னி ரெடி!!

___________💐

பீர்க்கங்காய் குழம்பு:💐

தேவையான பொருட்கள்:💐

பீர்க்கங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:💐

முதலில் பீர்க்கங்காயை கழுவி, தோல் சீவி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை சற்று அதிகமாக ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகப்பொடி போட்டு தாளிக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். காய் வெந்ததும், அதில் தக்காளி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, சிறிது ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பிறகு உப்பை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். (முக்கியமாக உப்பை காய் வேகும் போது சேர்க்க வேண்டாம். இல்லையென்றால் காய் சரியாக வேகாமல் இருக்கும்.)

இப்போது சுவையான பீர்க்கங்காய் குழம்பு ரெடி!!! 

இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

அனைத்து ரெசிபிக்களை செய்து சுவைக்கவும்.

30_வகை_செட்டிநாடு_ரெசிபிகள்

 #30_வகை_செட்டிநாடு_ரெசிபிகள்........💐

சமையல் கலை நிபுணர்’ கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.💐

#மிளகாய் சட்னி💐

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 15 அல்லது 20, புளி – சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு ‘ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.

வெள்ளை பணியாரம்💐

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுந்து – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!j

கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து – ஒன்றரை கப், பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு – ஒரு கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.u

செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந் தால், வடை கறுத்து விடும்.

கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து – ஒரு கப், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் – ஒன்றரை கப், நெய் – கால் கப்.

செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

இனிப்பு சீயம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய: தேங்காய் – ஒன்று, பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.

பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்…. சுவையான இனிப்பு சீயம் தயார்!

ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி – 4 கப், உளுந்து – ஒரு கப், ஜவ்வரிசி – கால் கிலோ, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

குழி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுந்து – அரை கப், ஜவ்வரிசி – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்…. சுவை யான குழி பணியாரம் ரெடி.

கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் – தலா கால் கப், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.

குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.

கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி – 2 கப், உளுந்து – கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.

ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை – தலா அரை கப், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்… ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.

பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப், பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண் ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – 2 கப், வெல்லம் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

குழம்புக்கு: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.

கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: கத்திரிக்காய் – கால் கிலோ, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – ஒன்று, சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.

வெண்டைக்காய் மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை – ஒரு கப், அரிசி களைந்த நீர் – 2 கப், புளி – எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு பல் – 10, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கப், மாங்காய் வற்றல் – 6, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு – சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு – 6 பல், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு – சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.

கத்திரிக்காய் திரக்கல்

தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: பூண்டு – 5 பல், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி… சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

தண்ணிக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – அரை கப், புளி – சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, உப்பு – தேவையான அளவு.

பொடி செய்ய: காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – சிறிதளவு, பட்டை – சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு – மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது… இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.

செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பட்டை – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – 5, பூண்டு – 3 பல், சோம்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து… வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.

ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், வெல்லம் – ஒன்றரை கப், தேங்காய் – ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் – தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.

சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 4, புளி – கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.

கீரை மண்டி

தேவையானவை: கீரை – ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, அரிசி கழுவிய நீர் – 2 கப், தேங்காய்ப் பால் – கால் கப், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).

குறிப்பு: வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. ‘மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ என்பது செட்டிநாட்டு பழமொழி.

சிவப்பரிசி புட்டு

தேவையானவை: சிவப்பரிசி மாவு – ஒரு கப், சர்க்கரை – ருசிக்கேற்ப, தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்த சிவப்பரிசி மாவை தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கினால்… சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.

கவுனி அரிசி

தேவையானவை: கவுனி அரிசி – 2 கப், சர்க்கரை – ஒன்றரை கப், தேங்காய் – ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கவுனி அரிசியை சுத்தம் செய்து 5 டம்ளர் நீரில் சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி, அடுப்பில் வைக்கவும். 2 விசில் வந்ததும், ‘சிம்’மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய் கலந்து சூடாகப் பரிமாறவும். இனிப்பு தூக்கலாக வேண்டுமானால், கூடுத லாக கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவும்.

குறிப்பு: செட்டிநாட்டு விசேஷங்களில் இது கண்டிப்பாக இடம் பிடிக்கும். சிவப்பு அரிசிக்கும், கவுனி அரிசிக்கும் வித்தியாசம் உண்டு. எனவே கடைகளில் கவனமாக கேட்டு வாங்க வேண்டும்.

சூப்பி

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – ஒன்று, பால் – அரை டம்ளர், பூண்டு – 2 பல், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, பிரியாணி இலை, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் துவரம்பருப்பு வேக வைத்த நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும், பூண்டை தட்டிப் போடவும். பின்னர் பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கி பரிமாறவும். விருப்பப் பட்டால், பீன்ஸ், காலிஃப்ளவர், கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.

கார சட்னி

தேவையானவை: சின்ன வெங்காயம் – ஒரு கப், தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 8, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோல் உரித்த சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. செட்டிநாட்டு டிபன் வகைகளின் சுவையைக் கூட்டுவதில் இந்த கார சட்னிக்கு முக்கிய இட முண்டு.

பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் – தலா 2 கப், தேங்காய் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதில் உருட்டி வைத்துள்ள உருண்டை களைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

பீட்ரூட் வடை

தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன், மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுத்தால்… சுவையான, செட்டிந£ட்டு ஸ்பெஷல் பீட்ரூட் வடை தயார்.

வெஜிடபிள் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், தக்காளி, கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பட்டை – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று, முந்திரி – 10, நெய் – தேவையான அளவு, எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி – பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்… வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்..

சேலம் தக்காளி குருமா🌐⛔*

 *❇️♍இடியாப்பத்துக்கு அருமையாக இருக்கும்... சேலம் தக்காளி குருமா🌐⛔*

*தேவையான பொருட்கள்*

  1.  எண்ணெய்  1டேபிள் ஸ்பூன் 
  2.  தக்காளி  4  
  3.  பெரிய வெங்காயம் 1  
  4.  பூண்டு பல்  5  
  5.  இஞ்சி 1/2 இன்ச்  
  6.  பச்சை மிளகாய் 1 
  7.  சீரகம்  1/4டீஸ்பூன் 
  8.  சோம்பு1/2டீஸ்பூன் 
  9.  பட்டை 1 இன்ச்  
10.  கிராம்பு 2  
11.  துருவியதேங்காய்  1 
        டேபிள் ஸ்பூன்  
12.  பொட்டுக்கடலை 
        1 டேபிள் ஸ்பூன்  
13.  மிளகாய் தூள் 1 
        டீஸ்பூன்  
14.   மல்லித் தூள்  1 
        1/2 டீஸ்பூன்  
15.  மஞ்சள் தூள்  1/4 
        டீஸ்பூன்  
16.  உப்பு சுவைக்கேற்ப  
17.  தண்ணீர்  
        தேவையானளவு 

*தாளிப்பதற்கு...*

  1.   எண்ணெய் 1 
        டேபிள் ஸ்பூன் 
  2.  சோம்பு 1/2டீஸ்பூன்  
  3.  பிரியாணி இலை1 
  4.  கறிவேப்பிலை சிறிது 
  5.  பெரியவெங்காயம் 1 
        (பொடியாக 
        நறுக்கியது)  
  6.   கொத்தமல்லி சிறிது 

*செய்முறை*

# முதலில் தக்காளிகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.  

# பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். * பின் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். 

# பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.  இறுதியாக தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். 

#வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

# பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.  எண்ணெய் சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சோம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 

# பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பைத் தூவி வதக்க வேண்டும்.  அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்க வேண்டும். 

# பின் அதில் 1 முதல் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சேலம் தக்காளி குருமா தயார்🔵🟣

பூண்டு சூப்

 *✳️♍பூண்டு, காய்கறி சேர்த்து சுவையான சூப்🌐⛔*

*தேவையான பொருட்கள்*

1.  பூண்டு 6-7
2.  இஞ்சி  1 
3.  வெங்காயம் 1 
4.  கேரட், முட்டைக் 
      கோஸ், பச்சை 
      பட்டாணி, சோளம், பீன்ஸ் 1 கப் 
5.  கார்ன்ஃப்ளார்  மாவு 1 டீஸ்பூன் 
6.  மிளகு 1 டீஸ்பூன் 
7.  உப்பு தேவைக்கேற்ப
8.  வெண்ணெய் 1  டீஸ்பூன் 

*செய்முறை*

# ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

# காய்கறிகள் சிறிது மென்மையாகும் வரை அனைத்தையும் வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து பூண்டு மற்றும் மிளகு சேர்க்கவும்.

# எல்லாம் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும்.  

# கலவை நன்கு கொதி வந்ததும் சூப்பில் இந்தக் கலவையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். அதனுடன், சூடாக வறுக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்🟣🔵