Sunday, October 1, 2023

காஞ்சிபுரம்இட்லி 1

 காஞ்சிபுரம்இட்லி:💐

தேவையானவை:💐

பச்சரிசி,
புழுங்கலரிசி,
உளுந்து - தலா 1 தம்ளர்,
கடுகு,
சீரகம் - ½ டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சுக்குப்பொடி- 1½ டீஸ்பூன்,
முந்திரி - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயப் பொடி - ½ டீஸ்பூன்,
நெய் - தாளிக்க,
தயிர் - 2 கரண்டி,
வெந்தயம் - ½ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:💐

வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்க்கவும். பிறகு, மேலும் சிறிது நெய் விட்டு, கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.

செய்முறை:💐

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் மூன்று மணி நேரம் ஊற விட்டு, பின் அரைத்துக் கொள்ளவும். 

இட்லிக்கு அரைப்பதுபோல, குடைய குடைய அரைக்காமல் கொஞ்சம் கொதகொதப்பாக அரைத்து பின், எட்டு மணி நேரம் புளிக்க விடவேண்டும். 

அத்துடன் கெட்டித்தயிர் மற்றும் உப்பு கலந்து விடவும். இட்லிப்பானையில் சின்ன சின்னக் கிண்ணங்களில் நெய் தடவி, அதில் மாவை விட்டு, வேக வைத்து எடுக்கவும். கிண்ணத்தில் மந்தார இலை வைத்தும் வேக விடலாம். சுவை அமோக ருசியாய் இருக்கும்.

____________💐

இஞ்சி தேங்காய் சட்னி💐

தேவையானபொருட்கள்:💐

துருவிய தேங்காய் - 1 கப்
இஞ்சி - 2 துண்டு (தோல் நீக்கி, கழுவியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:💐

முதலில் மிக்ஸியில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை சட்னியில் ஊற்றி கலந்தால், இஞ்சி தேங்காய் சட்னி ரெடி!!

___________💐

பீர்க்கங்காய் குழம்பு:💐

தேவையான பொருட்கள்:💐

பீர்க்கங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:💐

முதலில் பீர்க்கங்காயை கழுவி, தோல் சீவி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை சற்று அதிகமாக ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகப்பொடி போட்டு தாளிக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். காய் வெந்ததும், அதில் தக்காளி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, சிறிது ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பிறகு உப்பை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். (முக்கியமாக உப்பை காய் வேகும் போது சேர்க்க வேண்டாம். இல்லையென்றால் காய் சரியாக வேகாமல் இருக்கும்.)

இப்போது சுவையான பீர்க்கங்காய் குழம்பு ரெடி!!! 

இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

அனைத்து ரெசிபிக்களை செய்து சுவைக்கவும்.

30_வகை_செட்டிநாடு_ரெசிபிகள்

 #30_வகை_செட்டிநாடு_ரெசிபிகள்........💐

சமையல் கலை நிபுணர்’ கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.💐

#மிளகாய் சட்னி💐

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 15 அல்லது 20, புளி – சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு ‘ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.

வெள்ளை பணியாரம்💐

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுந்து – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!j

கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து – ஒன்றரை கப், பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு – ஒரு கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.u

செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந் தால், வடை கறுத்து விடும்.

கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து – ஒரு கப், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் – ஒன்றரை கப், நெய் – கால் கப்.

செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

இனிப்பு சீயம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய: தேங்காய் – ஒன்று, பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.

பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்…. சுவையான இனிப்பு சீயம் தயார்!

ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி – 4 கப், உளுந்து – ஒரு கப், ஜவ்வரிசி – கால் கிலோ, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

குழி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுந்து – அரை கப், ஜவ்வரிசி – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்…. சுவை யான குழி பணியாரம் ரெடி.

கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் – தலா கால் கப், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.

குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.

கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி – 2 கப், உளுந்து – கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.

ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை – தலா அரை கப், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்… ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.

பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப், பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண் ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – 2 கப், வெல்லம் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்… சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

குழம்புக்கு: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.

கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: கத்திரிக்காய் – கால் கிலோ, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – ஒன்று, சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.

வெண்டைக்காய் மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை – ஒரு கப், அரிசி களைந்த நீர் – 2 கப், புளி – எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு பல் – 10, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கப், மாங்காய் வற்றல் – 6, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு – சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு – 6 பல், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு – சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.

கத்திரிக்காய் திரக்கல்

தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: பூண்டு – 5 பல், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி… சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

தண்ணிக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – அரை கப், புளி – சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, உப்பு – தேவையான அளவு.

பொடி செய்ய: காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – சிறிதளவு, பட்டை – சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு – மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது… இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.

செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பட்டை – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – 5, பூண்டு – 3 பல், சோம்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து… வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.

ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், வெல்லம் – ஒன்றரை கப், தேங்காய் – ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் – தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.

சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 4, புளி – கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.

கீரை மண்டி

தேவையானவை: கீரை – ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, அரிசி கழுவிய நீர் – 2 கப், தேங்காய்ப் பால் – கால் கப், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).

குறிப்பு: வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. ‘மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ என்பது செட்டிநாட்டு பழமொழி.

சிவப்பரிசி புட்டு

தேவையானவை: சிவப்பரிசி மாவு – ஒரு கப், சர்க்கரை – ருசிக்கேற்ப, தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்த சிவப்பரிசி மாவை தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கினால்… சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.

கவுனி அரிசி

தேவையானவை: கவுனி அரிசி – 2 கப், சர்க்கரை – ஒன்றரை கப், தேங்காய் – ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கவுனி அரிசியை சுத்தம் செய்து 5 டம்ளர் நீரில் சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி, அடுப்பில் வைக்கவும். 2 விசில் வந்ததும், ‘சிம்’மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய் கலந்து சூடாகப் பரிமாறவும். இனிப்பு தூக்கலாக வேண்டுமானால், கூடுத லாக கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவும்.

குறிப்பு: செட்டிநாட்டு விசேஷங்களில் இது கண்டிப்பாக இடம் பிடிக்கும். சிவப்பு அரிசிக்கும், கவுனி அரிசிக்கும் வித்தியாசம் உண்டு. எனவே கடைகளில் கவனமாக கேட்டு வாங்க வேண்டும்.

சூப்பி

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – ஒன்று, பால் – அரை டம்ளர், பூண்டு – 2 பல், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, பிரியாணி இலை, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் துவரம்பருப்பு வேக வைத்த நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும், பூண்டை தட்டிப் போடவும். பின்னர் பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கி பரிமாறவும். விருப்பப் பட்டால், பீன்ஸ், காலிஃப்ளவர், கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.

கார சட்னி

தேவையானவை: சின்ன வெங்காயம் – ஒரு கப், தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 8, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோல் உரித்த சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. செட்டிநாட்டு டிபன் வகைகளின் சுவையைக் கூட்டுவதில் இந்த கார சட்னிக்கு முக்கிய இட முண்டு.

பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் – தலா 2 கப், தேங்காய் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதில் உருட்டி வைத்துள்ள உருண்டை களைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

பீட்ரூட் வடை

தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன், மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுத்தால்… சுவையான, செட்டிந£ட்டு ஸ்பெஷல் பீட்ரூட் வடை தயார்.

வெஜிடபிள் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், தக்காளி, கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பட்டை – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று, முந்திரி – 10, நெய் – தேவையான அளவு, எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி – பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்… வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்..

சேலம் தக்காளி குருமா🌐⛔*

 *❇️♍இடியாப்பத்துக்கு அருமையாக இருக்கும்... சேலம் தக்காளி குருமா🌐⛔*

*தேவையான பொருட்கள்*

  1.  எண்ணெய்  1டேபிள் ஸ்பூன் 
  2.  தக்காளி  4  
  3.  பெரிய வெங்காயம் 1  
  4.  பூண்டு பல்  5  
  5.  இஞ்சி 1/2 இன்ச்  
  6.  பச்சை மிளகாய் 1 
  7.  சீரகம்  1/4டீஸ்பூன் 
  8.  சோம்பு1/2டீஸ்பூன் 
  9.  பட்டை 1 இன்ச்  
10.  கிராம்பு 2  
11.  துருவியதேங்காய்  1 
        டேபிள் ஸ்பூன்  
12.  பொட்டுக்கடலை 
        1 டேபிள் ஸ்பூன்  
13.  மிளகாய் தூள் 1 
        டீஸ்பூன்  
14.   மல்லித் தூள்  1 
        1/2 டீஸ்பூன்  
15.  மஞ்சள் தூள்  1/4 
        டீஸ்பூன்  
16.  உப்பு சுவைக்கேற்ப  
17.  தண்ணீர்  
        தேவையானளவு 

*தாளிப்பதற்கு...*

  1.   எண்ணெய் 1 
        டேபிள் ஸ்பூன் 
  2.  சோம்பு 1/2டீஸ்பூன்  
  3.  பிரியாணி இலை1 
  4.  கறிவேப்பிலை சிறிது 
  5.  பெரியவெங்காயம் 1 
        (பொடியாக 
        நறுக்கியது)  
  6.   கொத்தமல்லி சிறிது 

*செய்முறை*

# முதலில் தக்காளிகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.  

# பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். * பின் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். 

# பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.  இறுதியாக தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். 

#வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

# பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.  எண்ணெய் சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சோம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 

# பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பைத் தூவி வதக்க வேண்டும்.  அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்க வேண்டும். 

# பின் அதில் 1 முதல் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சேலம் தக்காளி குருமா தயார்🔵🟣

பூண்டு சூப்

 *✳️♍பூண்டு, காய்கறி சேர்த்து சுவையான சூப்🌐⛔*

*தேவையான பொருட்கள்*

1.  பூண்டு 6-7
2.  இஞ்சி  1 
3.  வெங்காயம் 1 
4.  கேரட், முட்டைக் 
      கோஸ், பச்சை 
      பட்டாணி, சோளம், பீன்ஸ் 1 கப் 
5.  கார்ன்ஃப்ளார்  மாவு 1 டீஸ்பூன் 
6.  மிளகு 1 டீஸ்பூன் 
7.  உப்பு தேவைக்கேற்ப
8.  வெண்ணெய் 1  டீஸ்பூன் 

*செய்முறை*

# ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

# காய்கறிகள் சிறிது மென்மையாகும் வரை அனைத்தையும் வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து பூண்டு மற்றும் மிளகு சேர்க்கவும்.

# எல்லாம் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும்.  

# கலவை நன்கு கொதி வந்ததும் சூப்பில் இந்தக் கலவையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். அதனுடன், சூடாக வறுக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்🟣🔵  

Thursday, September 28, 2023

காஞ்சிபுரம் இட்லி

 *காஞ்சிபுரத்தின் பாரம்பரிய இட்லி - காஞ்சிபுரம் இட்லி*

*பகிர்வு:*

*🌟தமிழ் அமுதம்✨*

வணக்கம் ,

காஞ்சிபுரம் இட்லி ! காஞ்சிபுரத்தில் இந்த இட்லி மிகவும் பிரபலம் , அங்கு இட்லியை மூங்கில் குழாயில் செய்வார்கள் மேலும் ஒரு சில இடங்களில் வாழை இலையில் செய்வதும் உண்டு.காலை நேர உணவாக இட்லி செய்வது எனக்கு மிகவும் சௌகரியம் ,அவசரத்தில் யாரும் சரியாக சாப்பிடமாட்டார்கள் அதனால் இட்லி செய்தல் விரைவாக மற்றும் நிறைவாக சாப்பிடுவார்கள்.

பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி செய்முறை கிழே,

நேரம் : 10 மணிநேரம்

சமைக்கும் நேரம் : 20 நிமிடம்

நபர்கள் : 10


தேவையானவை :
பச்சரிசி – 1கப்
இட்லி அரிசி – 1கப்
உளுந்து – 1கப்
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு
கடுகு – 1தேக்கரண்டி
கடலை பருப்பு -1 பல  தேக்கரண்டி
கருவேப்பில்லை – ஒரு கொத்து
மிளகு – 1தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
முந்திரி – 10
இஞ்சி – 1தேக்கரண்டி (நறுக்கிய ).
நெய் – 2தேக்கரண்டி

செய்முறை :

அ) பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை கழுவி , நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஆ) உளுந்து ,வெந்தயத்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

இ) ஊறியபின் முதலில் உளுந்து ,வெந்தயத்தை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

ஈ) பின்பு ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

உ) அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை ஒன்றாக சேர்த்து , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.மாவை மூடிவைத்து சுமார் 8 மணிநேரம் புளிக்கவிடவும்.

ஊ)8 மணிநேரம் புளித்த பிறகு மாவு நன்றாக பொங்கி வரும் ,கலக்கி வைக்கவும்.

எ) சீரகம் மற்றும் மிளகை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

ஏ) ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறித்த பின் , கடலை பருப்பு ,முந்திரி ,கருவேப்பில்லை சேர்த்து வறுக்கவும்.அத்துடன் சீராக மிளகு பொடியை சேர்த்து ஒரு முறை வறுத்து மாவுடன் சேர்த்து கலக்கவும்.

ஐ) இட்லி தட்டில் ,வாழையிலை  வைத்து அதன் மேல் இட்லி மாவை ஊற்றி ,15 நிமிடம் ,இட்லி வேகும் வரை வேகவிடவும்.

ஓ) வாழையிலை இல்லையென்றால் சாதாரண இட்லி போலும் ஊற்றலாம்.

ஓஒ) நான் டிபன் சாம்பாருடன் பரிமாறினேன் , நீங்கள் சாம்பார் அல்லது காரச்சட்னியுடன் பரிமாறலாம்.

Monday, September 11, 2023

பிரச்சனைகளை தீர்க்கும் ஆலயங்கள்

 *பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்:*

நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த  மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்.

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம். 

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்தபட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பல காரணங்களால்  மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன. 

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை/புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில்  நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.  

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணர்ந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே.

*மன நோய் அகற்றும்  திருவிடை மருதூர்:*

சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

*புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை:*

புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன் குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 

கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன் குடியின் நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப் பட்டுள்ளது. 

*கடன் தொல்லைகள் தீர்க்கும்  திருச்சேறை ருண விமோச்சனர்:* 

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில்  ருணவிமோச்சனராய்  அருள் பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும். ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ருண விமோசன லிங்கேஸ்வரர். கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ருண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.  

*சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்  சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:*  

கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாலிக்கும்  திருபுவனம்  சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

*பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வணங்க வேண்டிய  ஸ்ரீவாஞ்சியம்:*  

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

*அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:*

அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்துவந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்துபயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும்வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

*தடைபட்ட திருமணம் நடக்க கோனேரி ராஜபுரம் என்று அழைக்கப்படும் திருநல்லம்:*  

முக்கண்ணன்  உமா மகேஸ்வரராய் மேற்கு நோக்கி வீற்றிருக்க,  அங்கவள நாயகியாய் அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 *தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர்:*   

மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமிதீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராதவியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன. 

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":*  

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர்தந்தை யாகம் செய்ய தேவையான பொருள்கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன்மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

*சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:*    

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும்வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

*நாக, புத்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்க* 

நாச்சியார் கோவில் கல் கருடன்.

*காரியங்கள், திருமணம் கைகூட* 

திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்.

*கடும் வியாதிகளின் இருந்து விடுபட*


கும்பகோணம் பாணபுரீஸ்வரர் .

*கடும் ஜூரம் விலகிட*

காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

*பிரிந்த தம்பதியர் ஒன்று சேர* 

கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள் .

*ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க* திருநீலக்குடி எனும் தென்னலக்குடி.

*மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர*

திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் .

*குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர*

சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்.

*விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற:* 

அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன் .

*விரைவில் திருமணம் கைகூட காசி விஸ்வநாதர் கோயில் நவ கன்னியர் வழிபாடு:*

நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மல்ர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.  கும்பகோண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள " மகாமக " குளக்கரையில் உள்ளது இத் திருத்தலம்.

*மாங்கல்ய பலம் அருளும் பஞ்ச மங்கள சேத்ரமாம் " திருமங்கலக்குடி:*

     நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்.இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான். 

 இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான். 

மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

இத் திருத்தலம், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், சூரியனார் கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளது. 

*மாங்கல்யப் பேறு தரும் கருவிலி கொட்டிட்டை சர்வாங்க சுந்தரி:*

தட்ச யாகத்தின் போது, தாட்சாயினியை பிரிந்த ஈசன், இத் தலம் வந்தடைந்தான். ஈசனை மீண்டும் அடைய வேண்டி, அம்மையும் இங்கே வந்தடைந்தாள். அப்பனும், அம்மையும் இணைந்த இத் திருக்கோயில், திருமணம் கை கூடுவதற்கும், மாங்கல்ய பேறு நீடிப்பதற்க்கும் வழிபடப்படுகிறது. இது பிறப்பை அறுத்து மோட்சம் அருளும் தலமாதலால், " கருவிலி " என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் நீங்கும். இத் தலத்தை தரிசிப்பது, கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்த பலன் அருளும் கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில், நாச்சியார் கோயில் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் கூந்தலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம். 

*திருமணம், மகப் பேறு, சுகப் பிரசவம் அருளும்  திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை:*

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். 

நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது இத் திருக்கோயில். 


*தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம்:*

      

முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 

*திருமணத் தடைகள் நீக்கும் சார்ங்கபாணி கோயிலின்  கோமலவல்லி " நாச்சியார் :*


சார்ங்கபாணி திருக்கோயிலின் நாச்சியார்  கோமலவல்லி தனிச் சிறப்பு கொண்டவர்.


 தாயாரின் அவதாரத் தலம் இது என்பதால், இங்கு நாச்சியாருக்கே முதல் மரியாதை. தாயாரை வழிபட்ட பின்னரே மாலவனை வணங்க வேண்டும். இத் தாயாருக்கு, தங்கள் வசதிக்கேற்ப புடவை சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் திருமணாமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மன வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர், கருத்தொருமித்து ஒன்று சேர்வர். வழிபடும் சுமங்கலிப் பெண்களின் " மாங்கல்ய பலம் " பெருகும். தடை பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத் திருத்தலம். 


*திருமணத் தடை அகற்றும்  திருப்புறம்பியம் ஸ்ரீ குகாம்பிகை:*


பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கும் திருப்புறம்பியத்தில் உள்ள " ஸ்ரீகுகாம்பிகை " சந்நதி மிகச் சிறப்பானது. குழந்தை வடிவு கொண்ட ஆறுமுகனை, தன் இடையில் தாங்கி நிற்கும் இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், வேண்டுவோர்க்கு அருள் புரிகிறாள் இந்த அம்பிகை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற இத் திருத்தலம். 


*விவாகத் தடைகள் அகற்றும்  திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் :*


"புன் நாகம்" என்ற பாம்புக்கு பெருமாள் காட்சி தந்த இத் திருத்தலம், ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. " மண்ணிற்கு தென்பால் நின்ற திருமாலே " என்று திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும்.   வேறெங்குமில்லாத வண்ணம், இத் தலத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையில் கிழக்குக் நோக்கி, தனது வலது காலை ஓரடி முன் வைத்து பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு உதவ தயாராக உள்ளது போன்று காட்சி தருகிறார் "பால ஆஞ்சநேயர்". 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 


*பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பூமாதேவி சமேத  ஆதி வராகப் பெருமாள்:*


தன் இடப் பக்க தொடையில் பூமா தேவியை கொண்டு காட்ச் தரும் " ஆதி வராகப் பெருமாள் ", பூமி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில், நெய் விளக்கேற்றி வணங்கி, சகஸ்ரநாமம் செய்து, அன்ன தானம் அளித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வழிபடுவோருக்கு புத்திர பாகியம் கிடைக்கும்.  இத் திருத்தலம், கும்பகோணத்தின் மையப் பகுதியில், சக்கரபாணி கோயிலின் அருகில் உள்ளது.


*மணம் போல் மணாளன் அமைந்திட:*


கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் அருகிலுள்ள "நிறம் மாறும் லிங்க திருமேனி கொண்ட திருநல்லூர்" 


*திருமணத் தடைகள் அகன்றிட:*


கும்பகோணம் திருப்பனந்தாளை அடுத்து அமைந்துள்ள ஆதி குரு வீற்றிருக்கும் " திருலோகி சுந்தரேஸ்வரர்".


*திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட:*


திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் தனி மணடபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் "சோமஸ்கந்தர்" 


*தடை படும் திருமணம் இனிதே நடைபெற:*


கும்பகோணத்தில் அமையப்பெற்ற "குரு பரிகார தலமான ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி".


*திருமணத் தடைகள் நீங்க:*    


கும்பகோணத்தில் அமைந்துள்ள " ராகு பரிகார தலமான - திரு நாகேஸ்வரம் ராகு பகவான் "  


   


*இழந்த செல்வம் மீட்டு தரும்  தென் குரங்காடுதுறை:*


சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம்  தென்குரங்காடுதுறை என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம்  செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. 


*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் திருவாடுதுறை:*


கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக   அருளிய பதிகம்:

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!

*கடன், சங்கடங்கள் போக்கும்  திருபுவனம் சரபேஸ்வரர்:*

தீராத கடன் தொல்லைகள் தீரும்.

Sunday, September 10, 2023

கோவர்த்தன்

 திடீர் கதை-52 #ganeshamarkalam

கோவர்த்தன்

பேரூர் கோவில். தரிசனம் பண்ணி முடிச்சுட்டு வாசல்ல கார் பார்க்கிங்க்லதான் அந்தாளப் பாக்கரேன். நான் நிறுத்தி வச்சுட்டுப் போன விலையுயர்ந்த கார்ல ஒய்யாரமா சாய்ஞ்சு நின்னுண்டு. பிச்சைக்காரால்லாம் சாய்ஞ்சுக்கவா நான் ஆடி கார் வாங்கியிருக்கேன்? கோவம் வந்தது.

 கோபுரவாசல்ல நின்னுண்டே கீ லாக்கை அமுக்கரேன். பளிச்சுன்னு லைட் அடிச்சு “க்ரீன்”னு 2வாட்டி சத்தம் வந்ததும் சரி ஓணர் வந்துட்டான்னு பட்டிருக்கும். சட்டுன்னு நகந்து நின்னுக்கரார். ஆனா விலகிப் போலை. யாரிவன் இந்தக் காருக்குச் சொந்தக்காரன்னு தெரிஞ்சிக்க ஆசையோ? கோயமுத்தூரில் விலையுயர்ந்த இம்போர்டட் கார்கள் ரெம்ப உண்டு. அதுனால இதெல்லாம் ஒரு பெரீய சமாச்சாரமா இங்கே யாரும் பாக்க மாட்டா. மில் ஓணர்ஸ் அத்தனை பேர். 6 மாசத்துக்கு ஒரு புது கார் வாங்கி எக்ஸ்பென்சஸா காமிச்சு டேக்ஸ் சலுகை வாங்கிப்பதில் கில்லி இவா. ஆனாலும் என் ஆடி பிரத்யேகமான ஒண்ணூ.

ஆடி R8. 5.2L V10+ எஞ்சீன். எக்ஸைஸ் கூட்டினப்ரம் 4 கோடி ஆச்சு. எனக்கு பெரிசில்லை. இந்தியாவில் இருக்கப்போ யூஸாட்டம், திரும்பிப் போரச்சே லோக்கல் கம்பேனி யூஸுக்கு தந்துடலாம்னு. யூஎஸ்ல 2 ரோல்ஸ் வச்சிருக்கேன். இந்தியா தவிர உலகத்தில் பல இடங்கள்ல மைனிங்க் இன்டெரெஸ்ட். அதாவது கணிம வளங்கள் எங்கேல்லாம் இருக்குன்னு ஆராய்ச்சி செஞ்சு அதை அன்னாட்டு அரசாங்கத்துக்கு லீஸ்ட் சிலவில் தோண்டி எடுத்துக் குடுப்பது எங்க பிசிநெஸ். சிலர் அதை எடுத்துண்டு போய் சைனா இல்லை சவுத் அமேரிக்காவில் எங்க தொழிற்சாலைகள்ல உலோகமா, மூலப்பொருளா மதிப்புக் கூட்டிப் பண்ணி திரும்ப வந்து குடுக்கச் சொல்லுவா.

 இல்லை எங்க சிலவில் எங்கே கிடைக்கறதோ அதுக்குப் பக்கத்துலேயே வேணும்கிறதை பிரிச்சு எடுத்துக் கொடுக்க தொழிற்சாலை நிறுவி எப்படிச் செய்யன்னும் சொல்லித் தந்து முத 20 வருஷங்களுக்கு அவா ஜனங்களுக்கும் வேலை போட்டுத் தந்து செய்யவும் சொல்லாம். எதுன்னாலும் நாங்க தயார். அதேபோல் பழுதடஞ்சுட்ட, பழச்சாப்போன இல்லை லாபகரமா நடந்த முடியாம திவாலாப்போன உலோக தொழிற்சாலைகளை காயலாங்கடை விலைக்கு வாங்கி சரிசெஞ்சு ஓடவிட்டுக் காமிப்பதிலும் நாங்க அசகாய சூரர்கள்.

 பணம் கொட்டிண்டு இருக்கும்.

எத்தனை சம்பாதிச்சா என்ன? 

வருஷத்துக்கு 1 மாசம் நான் இந்தியாக்கு வந்து என் இச்சைக்கு மனம் போன போக்கில் சுத்துவதை வழக்கமா வச்சிருக்கேன். தனியா வருவேன். பலதடவை யாருக்கும் சொல்லாம. இப்படி வந்துட்டு இங்கே வந்ததுதான் இன்னைக்கு. கோயமுத்தூர் ஏன்கலாம்.

 இங்கேதான் 30 வருஷம் மின்னாடி நான் தொழில் முனைவனா எல்லாத்தையும் ஆரம்பிச்சது. சின்னதா ஃபவுண்டரி ஆரம்பிச்சு கல்லா கட்டி இப்போ இந்த நிலமைக்கு வளர்ந்து மேஜர் பிஸ்நெஸ் ஐரோப்பா, அமேரிக்கான்னு இருந்தாலும் பேரீஸ்தான் எனக்கு ஹெட் குவார்டர்ஸ். பேரீஸ் வாழ் குடிமகன் பேரூர் கோவிலுக்கு வருவானேன்? சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இங்கே வெள்ளியங்கிரி மலைத் தொடரில் தோண்டினா என்னெல்லாமோ இருப்பதா எங்களுக்குத் தகவல். அதையும் விசாரிக்கத்தான்.

நரசிம்மமூர்த்தின்னு அப்பா வச்ச பேரை வெளிநாட்டில் என் பிசிநெஸ் அசோசியேட்ஸும் ஈஸியா சொல்லும்படி “நச்சு”னு சுருக்கியாச்சு. சோழியன் என்பதுக்கு என் நிஜப்பெயரைச் சொன்னேன். ஆனா கடவுள் பக்தீன்னெல்லாம் வளர்த்துக்கலை. சின்ன வயசுல கஷ்டப்பட்டது நன்னா ஞாபகம் இருக்கே! சாமி கோவில்னெல்லாம் அம்மா சொல்ரப்போ கோவமா வரும். மத்தவாளைப்போல் நாம ஏன் வசதியா இருக்க முடியலைன்னும் அதுக்கு கடவுள் நம்மாத்து மனுஷாள அனுரஹம் செய்ய மறந்துட்டார்னும் ஆதங்கம். நிறைய வாழ்க்கையில் சம்பாதிச்சு இப்படி ஒரு நிலமைக்கு வந்தப்ரமும் இதெல்லாம் அப்பா சொன்ன அந்த பெருமாள் அனுக்ரஹம்னு எண்ணத் தோணலை. என் சுய முயற்சீன்னுதான் எடுத்துண்டேன். ஆனாலும் இப்போல்லாம் இப்படி வரும்போது - எதுனாலவோ தெரியலை ஆனா-உந்தப்பட்டு கோவில்களுக்குப் போக விருப்பம் வந்துடுத்து. அப்படி வந்ததுதான் பேரூர் கோவில்.

ரெசிடென்ஸீல ரூம். அதைவிட பெரீசா கம்பீரமா ஹோட்டலைக் காணம். 3நாதான் இருக்கப்போரம், அடுத்து குருவாயூர் பயணம்னு வந்தாச்சு. அதுக்கப்ப்ரம் திருவனந்தபுரம் அங்கேந்து ரிட்டர்ன். இப்போ இந்த பிச்சைக்காரனை நகந்துக்கச் சொல்லீட்டு வண்டியை எடுக்கணம். அதுக்கு மின்னாடி என்னையே பார்த்துக்கரேன். 

சிம்பிளாத்தான் ட்ரெஸ், ஜீன்ஸ் டீ ஷெர்ட். கோட் சூட்லாம் மாட்டிண்டா கோவிலுக்கு வருவா? வேஷ்டி கட்டிண்டிருக்கலாம். ஆனா செய்யலை. ட்ரைவர் வேண்டாம்னாச்சு. நேத்து வந்து இறங்கிட்டதும் ஹோட்டலில் செக் செய்ததும் புதுக் கார் டெலிவரி ஆராப்போல் ஏற்பாடு. 

நான் போய் அந்த காரண்ட நின்னா பாக்கராவாளுக்கு நானேதான் அதுக்கு ட்ரைவர், அதுல வந்த ஆள் வேற யாரோவா இருக்கண்மனு அபிப்ராயப்படுவா என்பது நிச்சயம். இப்போ இந்த பிச்சைக்காரன் என்ன சொல்ரான்னு பாப்பம்னு மனசுக்குள் ஓர் விநோத ஆர்வம் வந்து பூந்துண்டது. என்னை முதலாளின்னு நினைச்சு ஓடிப்போரானா இல்லை சம்பளம் வாங்கிக்கர ட்ரைவர்னு நினைச்சு ஏதாவது பேச்சுக் கொடுப்பானா?

கிட்டக்க வந்ததுந்தான் அங்கே மின்னே சாய்ஞ்சு நின்னுட்டு இப்போ பவ்யமா நகந்து நிப்பது பிச்சைக்காரனில்லை ஒரு சாமியாரோனு பட்டது. இந்தியாவில் கோவில் வாசல்ல சாமியார்கள் சகஜம். கோவில் கோபுரத்துக்கு அடீல 2 பேர் பார்த்தேன், இவர் இங்கே என் கார்கிட்ட. ஏன்னா இந்த பார்க்கிங்கில் செக்கசெவேல்னு ஃபாரீன் கார் பளபளன்னு நின்னா ஆகர்ஷிக்காம இருக்குமா? மணி கார்த்தால 10. அந்தண்டப் பக்கமா பல வெள்ளை டேக்ஸிகள் நின்னுண்டு, பக்கத்துலயே ட்ரைவர்ஸ். அதான் இந்த ஆளுக்கு இதில் மோகம். சாமியார் ஆயாச்சே இன்னும் ஆசை விடலையோ?

கிட்டக்க வந்தும் அவர் கேட்ட கேள்வி நான் எதிர்பாக்காதது. “கோவில் ரெம்ப அழசாச்சே! முழுசா பார்க்க முடிஞ்சதா?” சட்டுன்னு இவர் பிச்சை கேட்பவரில்லை, சாமியாரும் இல்லைன்னு தோணிப்போச்சு. படிச்சவரா காவி உடுத்திண்டு சும்மா ஜாலிக்காக ஷேவ் செய்யாம விட்டூட்டார், நெத்தீல இட்டுண்ட விபூதியையும் சந்தனப் பொட்டையும் எடுத்துட்டு ட்ரிம்மா ட்ரெஸ் பண்ணிண்டு வந்தார்னா என் கம்பேனீலயே நானே வேலை போட்டுத் தந்திருக்கும் வைஸ் ப்ரெஸிடென்ட்டாத்தான் நினைப்பேன். என்ன ஒரு அவரசரமா பிச்சைக்காரன்னு முடிவெடுத்துட்டேன்! லஜ்ஜையாப்போச்சு. “ஆமாம், ரெம்ப அழகு. சின்ன வயசுல வந்திருக்கேன். இப்போ 30+ வருஷங்களுக்கு அப்ரமா வரேன். அப்படியே இருக்கு. ஆனா அப்போ வந்தப்போ புரியாதது சில புரிந்தாப்போல். நின்னு ரசிச்சுட்டுத்தான் வந்திருக்கேன்”. “இப்போ எங்கே பயணம்?” இன்னும் முடிவாலை, நாளைக்கு குருவாயூர் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட இல்லை. “மருதமலை முருகனைப் பாக்கலையோ?” “செய்யலாம்.” 

ட்ரெக்கிங்க் போக ஆசை இருக்கா?” இங்கே அதெல்லாம் இருக்கா என்ன?” “அதென்ன அப்படிக் கேட்டுப்புட்டேள்? மலை இருந்தா ஏறிப் போகவேண்டாமா? நான் போப்போரேன். கூட வரதுன்னா வரலாம்?” “நீங்க யாரு?” “என் பேர் கிருஷ்ணமூர்த்தி. பாலக்காடு. ஃபாரெஸ்ட் டிப்பார்ட்மென்டுல இருந்தேன். இப்போ ரிடயர்ட். சொந்தூர் குருவாயூர். கூட வந்தா நிறைய பேசலாம்”. “இப்போவா? வெய்யல் ஏறிப்போச்சே!” இல்லை. நாளைக்கு. கார்த்தால 5க்கு ஏற ஆரம்பிச்சுடணம். வரேளா? சாயங்காலமா திரும்பிடலாம்?” எங்கே மருதமலையிலா?” “இல்லை இந்தப் பக்கமா. 40கிமீ” “அத்தனை தூரம் நடக்கணுமா?’ இல்லை கார்ல போயிட்டு கடைசீ 10 ஏறிப்போணம்.” 

யோசிப்பதைப் பாத்துட்டு சொல்ரார். “கார்த்தால 5 மணிக்கு இங்கே மீட் செய்யலாம். நான் என் கார் கோண்டு வரேன்.” பதிலுக்கு காத்திருக்காம காணாமப் போயிட்டார்.

சரியா 4:45க்கு என் ஆடீல வந்து இறங்கியாச்சு. ஹோட்டல்ல கேட்டுண்டு கூட வந்த ட்ரைவர் நாங்க போனப்ரம் காரை எடுத்துண்டு போயி ஹோட்டல்லயே பத்ரமா வைப்பான். சாயங்காலம் கூப்பிட்டா வந்து அழைச்சிண்டு போவன். கிருஷ்ணமூர்த்தி கரெக்ட்டா தன் சேன்ட்ரோல 5:01க்கு வரார். ஏறிண்டு மேற்கால சர்ருன்னு ஏதும் பேசாமல். 

மாதம்பட்டி, புலுவம்பட்டி, ஆலந்துறைன்னு மங்கலான வெளிச்சத்துல படிக்கரேன். புலகண்ட் தாண்டினதும் ஈஷா ஃபவுண்டேஷன் என்ட்ரன்ஸ். அங்கே வண்டிய நிப்பாட்டிட்டு வாங்கோ நடக்கலாம்னு முதுகுப் பையுடன். ஹாஃப் பேன்டும் கையில்லா பனியனும். நல்ல ஷூஸ். ரேபான் கிளாசஸ் பனியனில் சொருகிண்டு. கிட்டத்தட்ட நானும் இமயமலையையே கடந்து போராப்போல் வந்திருப்பதால வேகமா நடக்கரோம். என்னைவிட அவர் வயசு கூட ஆனா அவர்தான் வேகம். ஒரு வீரக் காளியம்மன் கோவில் தாண்டினதும் ஏத்தம் ஆரம்பிச்சது. எல்லாம் சுகானுபவமா மாறிப்போன அதிசயமும் நடந்தது.

வழீல என்னைப்பத்தி கேட்டுத் தெரிஞ்சிண்டார். எந்தவித தயக்கமும் இல்லாம நான் செய்யரதை பூரா சொல்லிண்டே மூச்சு வாங்கிண்டு வந்தேன். இவரண்டை எதையும் மறைக்கத் தோணலை. எப்படி பூமீல இருக்கும் வளங்களை சுரண்ட உதவி அதுல காசு பண்ரேன்னும். அதோட நிறுத்திண்டிருக்கணம். வெள்ளியங்கிரி ஆரம்பிச்சு இந்த கேரளா பார்டெர்ல வெட்டி எடுத்தா என்னெல்லாம் கிடைக்கும்னும் எனக்கு தெரிஞ்சதை பெருமையா. 

“நன்னா வச்ச உங்க பேரை நன்னாத்தான் சுருக்கி “நச்சு”னு வச்சுண்டுட்டேள்! நச்சுன்னா நஞ்சு. விஷம். நீங்க தோண்டி எடுத்துட்டு விட்டூட்டுப் போகிர இடம் நஞ்சாப்போகும்”. தெரியும். ஆனாலும் இவர் வாயில அந்த ஸ்டேட்மென்ட் கடுமையா செவிகளைத் தாண்டி எம்மனசையே தாக்கித்து. “ஆனா நாங்க தோண்டுவதெல்லாம் மனுஷாளுக்கு அத்தியாவசியமான சமாச்சாரமாச்சே! என்ன தப்பு?’ “உங்களுக்கு பல சுவாமி கோவில்கள் மலைமேல் ஏன்னு தெரியுமா?”

மருதமலை, பழநி, திருப்பரங்குன்றம் முருகன். எம்பேர்கொண்ட நரசிம்ம மூர்த்தி பொதுவா மலைமேலத்தான். வெங்கடாசலபதி பெருமாளே ஏழுமலையில். தெரியாம இல்லை. “இந்த நாட்டுக் காரன்தானே நானும்! பெருமாளைப் பாக்கணம்னா சிரமப்பட்டு கஷ்டப்பட்டு முயற்சிச்சாத்தான் முடியும்னு சொல்லும் தாத்பர்யம். பிரார்த்தனை என்னவாம்? ஏறி வந்து மொட்டை போட்டுக்கரேன்னு. நடந்தே ஏறி வரேன்னு. லக்ஷோபலக்ஷம் மக்கள் அப்படி செய்யரா. எத்தன கடினமான பாதைன்னாலும் கல்லும் முள்ளும் காலில் குத்த சபரி யாத்திரை போராளே! தெரியும்.”

வளைஞ்சு வளைஞ்சு போர ரோட்டுல கிட்டத்தட்ட சிறுவாணி டேம்கிட்டக்க வந்தாச்சு முன்னாடி போனவர் நின்னுடரார். கால் வலிச்சதான்னா இல்லை. என்னை முறைச்சுப் பாக்கரார். அதில்லை காரணம். பெருமாள் மலைமேல் இருப்பது, முருகன் கோச்சுண்டுபோய் மலைமேலே ஏறி நின்னுண்டதெல்லாம் நம்ப கவனத்தை மலைகள்மீது ஈர்க்கவே. நீங்க படிச்ச 5ஆம் கிளாஸ் புஸ்தகத்துல கூட மலைகளின் முக்கியத்துவம் யாவைன்னு 5 மார்க் கேள்விக்கு பதில் போட்டிருக்குமே! எழுதின பதில் ஞாபகம் இருக்கா பாக்கலாம், சொல்லுங்கோ!” என்ன இவர் ட்ரெக்கிங்க் கூட்டிண்டு வந்து அஞ்சாம் கிளாஸ் கொஸ்சீன் கேக்கரார்? சொல்ரேன்

“மலைகள் 70-80% சுத்தமான தண்ணீக்கு முக்கியமான சோர்ஸ். அதுமட்டுமில்லாம ஃபூட் மற்றும் க்ளீன் எனெர்ஜீக்கு மலைகளே ஆதாரம். மலைகள் அரணாக ஊர்களைக் காத்து நிக்கும். ஆறுகள் மலைகளில்தான் தோன்றி சமவெளிகளை உயிர்பிக்கும், பாசனத்துக்கு உதவும். மலைக்காடுகள் நமக்குத் தேவையான பல வளங்களை நல்க வல்லன. பல அத்தியாவசியமான கணிம வளங்களை உயிரினங்களை ஈகோ சிஸ்டத்தை பாதுகாத்து வைப்பவை மலைகள். இப்படி நிறைய எழுதினேனே! ஞாபகம் இருக்கே!” 

"மலைகள் அபூர்வம். இருக்கும் மலைகளை பாதுகாப்பா வைப்பான் மனிதன்னு நினைச்சுத்தான் கடவுளெல்லாம் அங்கே ஏறிப்போய் உக்காந்துண்டது. நீங்க சொன்ன காரணங்களுக்காக இல்லை. என்னை மட்டுமின்றி நான் ஏறி உக்காந்திருக்கும் மலையையும் வழிபடுன்னு சொல்ரார் பெருமாள்.” “அது நடக்கிறதா?” “ஆமாம், இல்லைன்னு சொல்லலாம். பழநீ போன்ற மலைகளை கட்டடமா எழுப்பி உருத்தெரியாம மாத்தி கமெர்ஷியல் சென்டரா ஆக்கி வருடங்களாச்சு. ஷோளிங்கர் மலை சீக்கிரம் அவ்வாறே மாறிடும். திருப்பதீல பெருமாலைச் சுத்தீ பெரீய மாநகரமே பண்ணிவச்சாச்சு. ஆனா நல்ல வேளை இன்னும் நிறைய பாக்கி வச்சிருக்கம். ஆனா உத்திரவாதமில்லை. வருத்தப் படேண்டிய விஷயம். மலையில் இருக்கும் கணிம வளங்களை நாக்கில் சப்புகொட்டிண்டு எப்படி வழிச்செடுக்கலாம்னு திட்டம் தீட்ட நீங்க இத்தன தூர்ம வந்திருக்கேள்.”

பதில் சொல்லலை. பேச்சை மாத்துவம்னு “இந்த டேம் வரைக்கும் ரோடு இருக்கே! நாம கார்லயே வந்திருக்கலாமே! வழீல ஜீப்பெல்லாம் போச்சே! நடந்தே எதுக்கு.” “ட்ரெக்கிங்க் வரம்னுட்டு நாம வண்டிப் புகையை இங்கே வந்து கக்கிட்டுப் போணமா? இப்போ பாருங்கோ திவ்யமா 1 மணிநேரம் சுத்தமான காத்தை சுவாசிச்சுட்டு நிக்கரம்! இப்போ அடுத்ததா நாம போப்போர இடம் காட்டுக்குள், சிறுவாணி நீர்வீழ்ச்சி. ரெடியா? இப்போதான் உண்மையிலேயே ட்ரெக்கிங்! என்ன சொல்ரேள்?” சரின்னு தலையாட்டரேன். 

3 மணீநேர காட்டுக்குள் பயணம். ஆனா வொர்த் இட். உக்காந்துண்டு அவரே எனக்கும் கொண்டுவந்த சமாச்சாரங்களை இலைல போட்டு நீட்டரார். ஹோம் மேட் இட்லீஸ் மிளகாய்ப்பொடி தடவி, தொட்டுக்க கெட்டித் தயிரோட. பசீல அள்ளிச் சாப்பிட்டேன். நான் சாப்பிடுவதை ஆசையா பாத்துண்டே அவர்.

“மதுராகிட்ட பிருந்தாவன் இருக்கு. அதுக்கு 20கிமீட்டரில் கோவர்தன கிரி. அந்த மலையத்தான் கிருஷ்ணர் தன் சுண்டுவிரலால தூக்கிப் பெருமழையா வருணபகவான் கொட்டினப்போ ஊரையும் அதன் மக்களையும் மூழ்கிடாம குடைபோல் பிடிச்சிண்டு காப்பாத்தினார்னு பாகவத்துல கதை வரும். நீங்க படிச்சிருக்கேளோன்னோ!” 

“யெஸ். கிருஷ்ணர் குழந்தையா இருக்கப்போவே தான் யார்னும் இனி வரப்போகிர பல பராக்கிரம செயல்களுக்கு ஒரு ட்ரெயிலர் மாதிரி இதெல்லாம் செய்து காட்டிண்டிருப்பார்னு எங்கம்மா சொல்லியிருக்கா.” “ஆனா அந்தக் கதையை நாம சின்ன வயசுல கேட்டூட்டு அப்ரம் மறந்தே போயிருப்பமே!” “ஆமாம். அது எதுக்கு இப்போ?” சொல்ரார்.

“கோகுலத்தில் வருஷா வருஷம் மழையை, வருணபகவானை கோண்டாட மஹோத்ஸவம் பண்ணுவாளாம். ஒரு வருஷம் கிருஷ்ணர் சொல்ரார் வேண்டாம்னு. ஏன்னு கேக்கரா. மழையில்லேன்னா ஜீவராசிகள் அழிஞ்சுடுமேன்னு. அதெல்லாம் கிடையாது பண்ண வேண்டாம்னுடரார். வருணன் கோச்சுண்டு இவாளுக்கு பாடம் கற்பிக்கணம்னு கொட்டித் தீக்கரான். எல்லாரும் “கிருஷ்ணா! என்ன இது? ப்ளீஸ் ஏதாவது செய்”ன்னதும், அவர் கோவர்தன கிரியை தூக்கிக் குடைபோல் பிடிச்சுண்டு நிக்க வருணனால எதுவும் சாதிக்க முடியாம நின்னுபோய் கிருஷ்ணர்கிட்ட சாரி சொல்ரான். கூடவே “ஏன் இப்படி ஒரு விளையாட்டு?” கேக்க அவர் எல்லாருக்கும் சொல்ரார் “மழைக்கே காரணம் மலைதான். மலைகளே மஹோத்ஸவத்துக்கு பாத்யதை உள்ளவைனு. இத அதிகமா கதாகாலக்ஷேபத்துல சொல்ல மாட்டா.”

அன்னைக்கு ட்ரெக்கிங்க் முடிஞ்சு நாங்க திரும்பி பேரூர் வர மணி 6 ஆச்சு. ஹோட்டலுக்கு வந்துட்டு யோசனையில் மூழ்கிட்டேன். மலை மட்டுமா முக்கியம், பூமீயே நாம வளமா வாழ்வதுக்கு பிரதானமா இருக்கப்போ அதுலிருந்து நிறுத்தாம சுரண்டுவது எத்தனை தப்பு! என்ன செய்யலாம்? கிருஷ்ணமூர்த்தியைக் கேக்கலாம்னு அவர் நம்பரை போன்ல சேவ் செஞ்சுண்டது ஞாபகம் வர எடுத்துப்பாக்கரேன். 

காணலை. காணவேயில்லை.