Sunday, April 21, 2024

தன்வினை....-20 & 21

 இன்றும் திராவிட மாடல் மாதிரி இலவச மழை பொழிகிறது. Enjoy.

தன்வினை....-20

By N Krishnamurthy 

கணேசன் பேச ஆரம்பித்தார்.

" உங்கப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி நீங்க திருச்சிக்கு போனதக்கப்புறம் மூணு வருஷம் சொந்த ஊர்ல இருந்தோம். அப்புறம் மெட்ராஸ் போய்ட்டோம். விவேகானந்தா காலேஜ்ல பி.எஸ்.சி முடிச்சு,சர்வீஸ் கமிஷன் எழுதி சென்ட்ரல் கவர்ன்மண்ட் வேலைல சேர்ந்தேன். கல்யாணம் ஆச்சு. நேக்கு ஒரே பொண்ணு .நேக்கும் விமலாவுக்கும் வினயா பொறந்தா. சமீபத்ல வினயாவுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சது. அதுவரை நண்ணா போயிண்டிருந்த என் வாழ்க்கை, நான் பண்ண பூர்வ ஜென்ம பாவத்தாலயோ, என்னவோ நில தடுமாறி போய்ட்டது. எத்த தின்னா பித்தம் தெளியும்ன்ற நெலமைக்கு ஆளாய்ட்டோம்"என்று அவர் கூறியபோது அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. 

இதைக்கண்ட சிதம்பரம் " நீ ஆம்பளடா. அழலாமா. அந்தகடவுள் எல்லா சுகத்தையும் தொடர்ச்சியா கொடுக்கறதில்லை. சுகம் அதிகமா போறபோது நமக்கு ஒரு மதமதப்பு வந்தூடறது. அதிகமா ஸ்வீட்டா சாப்ட்டா வயித்தல மந்தம் ஏற்படர்து.  உடனே அந்த காலத்ல இதுக்கு நம்ப அம்மா ,பாட்டி எல்லாம் என்ன பண்ணுவா, ஞாபகம் இருக்கா. நமக்கு அப்போ பேதிக்கு கொடுப்பா.வயத்து உபாத தீந்தூடும். அது போல பகவான் உனக்கு கசப்பு மருந்த கொடுத்திருக்கான். இதுக்கப்புறம் எல்லாமே நல்லதா இருக்கும் " என்று கூறி " கொஞ்ச நேரம் முன்னாடி  தகராறு பண்ணிண்டி ருந்தாளே அவதான் உன் பொண்ணு வினயாவா" என்று கேட்டார். இவரும் அந்த கூத்தையெல்லாம் பார்த்து இருக்கிறார் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்ட கணேசன் தலையை குனிந்தபடி "ஆமாம்"என்றார் .

 "ஆமாம்,உனக்கு ஒரே கொழந்தேன்னு சொன்ன. அப்போ உங்க கூட இருந்த பையன் யார். தெரிஞ்சவனா" என சிதம்பரம் கேட்டார். கணேசன் "அவர் தான் வினயாவுக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பையன்  "என்றார். 

உட னே சிதம்பரம் " எதுக்கு இப்படி  தலைய குனிஞ்சுகற.வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த காலத்துல பசங்க எல்லாம் வித்தியாசமா யோசிக்கறா. அதனால்தான் அப்பா, அம்மாவினுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கறது இல்ல" என்று சொன்னார். அதற்கு கணேசன் " சிதம்பரம் சார்.என் பொண்ணு வினையா அப்படிபட்டவ  இல்லை. நான் கிழிச்ச கோட்ட தாண்டாதவ. ரெண்டு மாசமா அவள ஏதோ  படுத்திண்டு இருக்கு. நிச்சாயதார்த்தம் முடிஞ்ச கொஞ்ச நாளைக்கப்பறம் அவ  சித்த பிரம  பிடிச்ச மாதிரி இருக்கா.

டாக்டர் கிட்ட காட்டி மருந்து ,மாத்தரையும் கொடுத்திண்டிருக்கோம். குணம் தெரியல. குல தெய்வம் சார்ங்கபாணியை  தர்சனம் பண்ணலாம்னு வந்த எடத்ல இப்படி ஆய்ட்த்து" என்றார் கணேசன்.


சிதம்பரம்  "கவலய விடு. எல்லா டாக்டர விட பெரிய டாக்டரான பெருமாள் காதுலே உன் கஷ்டத்தை போட்டூட்டயோன்னோ.இன்னமே அவர் பாத்துப்பார் "என்று ஆறுதல் கூறினார்.

 தன்வினை....21

"மேக்கொண்டு என்ன பண்றதா உத்தேசம் " என்றார் சிதம்பரம். இக்கட்டான தருணத்ததிலும் கணேசன் "மேக்கொண்டு என்ன பண்றது. லாட்ஜுக்கு தான் போகணம்"என்று ஜோக்கடித்தார்."என்னனடா நீயும் ஜோக்கடிக்கற"என்றார் சிதம்பரம். கணேசன்"பூவோட சேந்த நாறும் மணம் பெறும்ன்ற மாதிரி உங்க கிட்டேந்து ஜோக் அடிக்கறது தொத்திண்டூட்த்து"என்றார். சிதம்பரம் "That is the spirit டா கணேசா. கஷ்டம் வரும்போது நம்ம தலய குனிஞ்சுண்டே இருந்தா கவல நம்ப முதுகுல ஏறி அழுத்தும்.அப்போதான் நம்ப தல நிமிர்ந்து நிக்கணம் " என்றவர்

" வாடா,நானும் உங்கூட லாட்ஜுக்கு வரேன்" என்றார். இருவரும் லாட்ஜை நோக்கி நடந்தார்கள்.


ரூம் கதவை தட்டினார் கணேசன். ரூம் உள்ளே பலத்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்த பின்னர் ரூம் கதைவை பாதி திறந்த ஜகன் யார் கதவை தட்டியது என பார்த்தான். கணேசனுடன் ஒரு அன்னியர் நிற்பதை கண்டதும் கொஞ்சம் தயக்கம் காட்டினான் அவன். "பரவாயில்ல தொறங்க. சார் நமக்கு வேண்டியவர்தான் "என்றார் கணேசன். கதவு முழுவதுமாக திறந்ததும் இருவரும் உள்ளே நுழைந்தனர். சிதம்பரத்தை பார்த்த வினயா இன்னும் உரத்த குரலெடுத்து "யார்டா நீ. உன்னால ஒண்ணும் பிடுங்க முடியாது. உன்ன தீத்து கட்டீடுவேன் "என்று கத்த ஆரம்பித்தாள். "கதவை அடைங்கோ" என்றார் சிதம்பரம் உரத்த குரலில்.

வினயா இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து, சிதம்பரத்தை அடிக்க கை ஓங்கினாள். அவளது ஓங்கிய கையை இறுக்கி பிடித்த சிதம்பரம் கண்களை மூடி

 ஓம். நமோ பகவதே.
ருத்ர குமாராய,
 சடானனாய ,
 சக்தி ஹஸ்தாய, அஷ்டாதச லோசனாயா , சிகாமணி பிரலங்க்ருதயாய ,
 கௌரெஞ்சகிரி மர்த்தனாய"  

என்று ஆரம்பித்து குமார தந்த்ரத்தில் கூறப்பட்ட  சுப்ரம்மண்ய பிரசன்ன மாலா மந்திரத்தை  முழுவதும்( ஏழு நிமிடம் எடுத்துக்கொண்டு) சொன்னார். அவர் ரெண்டாவது வரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வினயாவின் கை பிடி தளர்ந்தது. அவள் கண்கள் சொருக ஆரம்பிக்க, அவள் கீழே விழப்போனாள். அவளை விமலாவும், கணேசனும் தாங்கிப்பிடித்தார்கள். 

ஸ்லோகத்தை ஓதி முடித்த சிதம்பரம்   கண் திறந்து கணேசனிடம் " இது ஹயக்ரீவரால் உபதேசிக்கப்பட்ட சத்ரு சம்ஹார மந்த்ரம். இதை நான் உனக்கு எழுதி தருகிறேன். நீ தினமும் குளித்துவிட்டு இதை சொல்லணம். துர்சக்தி  அணுகாமல் இது நம்மை பாதுகிக்கும்"என்றார்.  வினயா ஆழ்ந்த உறகத்திலிருந்தாள்.

பின்பு சிதம்பரம் கணேசனிடம்," வினயாவுக்கு இப்படி ஆறதுக்கு முன்னாடி உங்க ஆத்துல ஏதாவது துர் சகுனம் தென்பட்டதா "என்று கேட்டார். கணேசன் "ஆமாம். அதை துர்சகுனமான்னு சொல்ல முடியல. எனக்கு நிலப்படில இருக்க கம்பி குத்தி காயம் ஆய்டுத்து"என்றார். "இன்னும் ஏதாச்சும் நடந்ததா. ஞாபகப்படுத்தி பாருங்கோ"என்றார் சிதம்பரம். விமலா "ஆமாம்.காரணமே இல்லாம துளசி செடி பட்டு போச்சு. அத்தோட இல்லாம கிச்சன்ல எப்பவும் ஓடிண்டிருக்க பல்லி கூட்டம் இப்பெல்லாம் தல கிட்டறதே இல்ல "என்றார். இதையெல்லாம் கேட்ட சிதம்பரம் " சிவ சிவா. இவ்வளவும் நடந்திருக்கு" என்றார்.பின்பு அவர் கணேசனயும், ஜகனையும் பார்த்து "நம்ப கொஞ்சம் தனியா பேசணமே"என்றவர் "ரிசப்ஷனுக்கு போலாமா"என்றார். ஜகன் "எனக்கு தனி ரூம் இருக்கு சார். அங்க போலாமா" என்றான்.

"சரி"என்று சிதம்பரம் கூற, மூவரும் ஜகனுடைய அறைக்கு சென்றார்கள். சென்றவுடன் கணேசன்"மறந்தூட்டனே. இது தான் ஜகன். வினயாவுக்கு நிச்சயமாயிருக்கற மாப்பிள்ளை "என்று சிதம்பரத்திடம் கூறிவிட்டு ஜகனிடம் "சார் தான் சிதம்பரம். ஆதில நாங்க ஒரே ஊர்ல இருந்திண்டிருந்தோம். கோவில்ல என்ன பாத்து அடையாளம் கண்டு பிடிச்சார் " என்றார். 

"Nice to meet you sir" என்று கை கொடுத்தான் ஜகன். அவனது கைகளை குலுக்கிய சிதம்பரம் Nice to meet you too" என்றவர் "இந்த காலத்ல இப்படி ஒரு இளைஞனை பாக்றது சந்தோஷமாயிருக்கு "என்றார்.

பின்பு கணேசனை பார்த்து "ஏண்டா ரொம்ப நாளைக்கப்புறம் பாக்கறோம். காபி வாங்கி தர மாட்டேங்கற"என்றார். ஜகன் உடனே "நான் காபிக்கு ஆர்டர் பண்றேன்"என்றான். "யார் ஆர்டர் பண்ணா என்ன. நேக்கு வேண்டியது ஸ்ட்ராங் கும்பகோணம் டிகிரி காபி"என்று சொல்லி சிரித்தார். ஜகன் ரூம் சர்வீசை கூப்பிட்டு மூன்று காபிக்கு ஆர்டர் செய்தான். காபி வந்ததும் அதை குடித்து முடித்த சிதம்பரம் "ரெண்டு பேரும் கவனமா கேளுங்கோ. வினயாவுக்கு பிடிச்சிருக்கறது பைத்தியம் இல்லை. யாரோ வேண்டாதவா அவளுக்கு செய்வினை பண்ணியிருக்கா "என்றார். இதைக்கேட்ட கணேசன் அதிர்ந்து போனார். ஜகன் இதை நம்ப முடியாதவனானான்.

"பகவான் நீங்க சொன்ன மூணு சமிக்ஞைகளால உங்களுக்கு இதை காமிச்சுகொடுத்திருக்கான்"என்றார்.

" எங்களுக்கு வேண்டாதவா யாரும் இல்லையே" என்றார் கணேசன். சிதம்பரம் அவரிடம் "வேண்டாதவர் என்றால் பர்மனண்ட்டாக வேண்டாதவர்ளாக இருக்கணம்னு அவசியமில்லை. ஏதோ சில காரணங்களுக்காக சமீபத்தில் கூட வேண்டாதவர்களாக யாராவது ஆகியிருக்கலாம். For example, ஜகன் வினயாவை கல்யாணம் பண்ணிகறதை பிடிக்காத யாரவது கூட இத பண்ணியிருக்கலாம் " என்றார்.

சாஸ்திரம்பாக்கம்வைத்தீஸ்வரன் கோவில்

 சாஸ்திரம்பாக்கம்வைத்தீஸ்வரன் கோவில்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாஸ்திரம் பாக்கம் என்ற திருத்தலம். இங்கு சிவபெருமான் ‘வைத்தீஸ்வரன்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். அம்பாளின் திருநாமம் தையல்நாயகி என்பதாகும்.

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய்விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப் போனது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மனநோய் பாதிக்கப் பட்ட ஒரு இளைஞர், இறைவனின் சக்தியால் மனநோய் தீர்ந்து தீர்க்கமான இளைஞனாக மாறினார். இதையடுத்து அந்த வாலிபர், மண் மூடிப்போயிருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து அபிஷேகம், ஆராதனை செய்து வந்தார்.

இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த வாலிபனின் செய்கையைக் கண்டு திகைத்தனர். அவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, தான் முழு குணம் அடைந்து விட்டதாகவும், அதற்கு இந்த இறைவனே காரணம் என்றும் தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து அதே இடத்தில் இறைவனுக்கு குடில் அமைத்து தினமும் வழிபாடு செய்து வந்தனர். தற்போது கோவில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.

ஆலய அமைப்பு:

ஆலயம் கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்ட 16 கால் மண்டபம் காணப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கிய படி மூலவர் வட வைத்தீஸ்வரன் அருள்பாலித்து வருகிறார். இறைவனின் இடது பக்கத்தின் தனிச் சன்னிதியில் மாங்கல்ய பலம் தரும் அன்னையாக தையல்நாயகி அம்மன், கமல பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் சன்னிதி அருகே, இறைவனின் சன்னிதியை நோக்கியபடி காலத்தை நிர்ணயிக்கும் கால பைரவர், நாய் வாகனத்துடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவன் வந்த பிணி, வரும் பிணிகளை நீக்கும் சக்தி படைத்தவராக விளங்குகிறார். இதனாலேயே இவரை வட வைத்தியநாதர் என்று அழைக்கின்றனர்.

இங்குள்ள இறைவன் சன்னிதியில் துவார பாலகர்களாக விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தைச் சுற்றி பிரகார வலம் வரும்போது, பரிகார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, லிங்கோத்பவர், பிரம்மதேவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். புதிதாக குபேர மூலையில் லட்சுமி, கணபதிக்கு தனி சன்னிதி, வாயு மூலையில் வள்ளி– தெய்வானை சமேத சண்முகநாதர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. கொடிமரமும் இல்லை. ஆலயத்தின் தல விருட்ச மாக விலா மரமும், அரச மரமும் உள்ளன. இவற்றில் தற்போது அரச மரம் மட்டுமே உள்ளது. சித்தர்கள் வழிபாடு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், கருங்குருவி வடிவிலும், வண்டு வடிவிலும் சித்தர்கள், இத்தல இறைவனை வழிபாடு செய்வதாக நம்பிக்கை தெரிவிக்கப் படுகிறது. 

ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் காலை 6.10 மணி முதல் 6.25 மணி வரை, சூரியனின் கதிர்கள் இத்தல இறைவனின் லிங்கத் திருமேனியில் விழுவது காணக்கிடைக்காத அற்புதக் காட்சி. பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சாஸ்திரம், ஜாதகம் பார்ப்பதில் அற்புத அந்தணர்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், பல்லவர்கள் சாஸ்திரம் பார்க்க வந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகவும் செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயம் இருந்த இடம் முன்பு தர்ப்ப வனமாக இருந்துள்ளது. ஆகவே இந்த ஆலயத்திற்கு வந்து தர்ப்பை ஆசனம் செய்து, அதில் அமர்ந்து,

த்ர்யம்பகம் யஜாமஹே
ஸூகந்திம் புஷ்டிவர்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்
முஷிய மாம்ருதாத்’

என்ற சுலோகத்தைச் சொல்லி இறைவனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள கல்வெட்டுகள் பலவும் சிதிலமடைந்து விட்ட காரணத்தால், பல குறிப்புகளைக் கண்டறிய முடியவில்லை. ஒரு சில குறிப்புகளே கிடைத்துள்ளது. இறைவனின் பெயர் ‘மிருத்யூஞ்ஜிஸ்வரர்’ என்றும், இறைவியின் திருநாமம் பாலாம்பிகா என்ற பவரோக விநாசினி என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மக்கள் மனக் கஷ்டத்தையும், பணக் கஷ்டத்தையும் போக்கும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு நிகரான தலம் இது என்று கூறப் படுகிறது. மேலும் குழந்தைப் பேறு கிடைக்கச் செய்யும் ஆலயமாகவும் இந்தத் தலம் திகழ்கிறது.

இத்தல இறைவன் விஸ்வாமித்திர முனிவரின் கண் நோயைத் தீர்த்தவர் என்று கூறப் படுகிறது. ஒரு முறை விஸ்வாமித்திர முனிவர், சாஸ்திரப் பாக்கத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது ‘ராவணனை அழிப்பதற்காக, ராமபிரான் மனிதனாக அவதரித்துள்ளார். உலக மக்களைக் காக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு எடுத்துள்ள இந்த அவதாரத்தில், ராவணனை எதிர்த்து ஜெயிக்கும் வரை ராமனுக்கு நோய்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளும்படி, திருக்கச்சூர் தலத்தில் உள்ள இருள்நீக்கி அம்மனிடம் விஸ்வாமித்திரர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இருள்நீக்கி அம்பாள், ‘நோயைத் தடுக்கும் பலை, அதிபலை என்ற மூலிகையின் பெயரைச் சொன்னாலே ராமன் உள்பட பூலோகத்தார் அனைவரும் நோயில் இருந்து தப்பி பயன்பெறுவார்கள்’ என்று அருளினார்.

அந்த தலத்தில் வழிபட்டு திரும்பும் வேளையில்தான் விஸ்வாமித்திரர் கண் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அருகில் உள்ள சாஸ்திரப்பாக்கம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வட வைத்தியநாதர் பெருமானை வழிபட்டு தன்னுடைய கண் நோய் நீங்கும் அற்புதத்தைப் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

தற்போது ஒரு வேளை மட்டுமே பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ்வசதி குறைவாக உள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

Saturday, April 20, 2024

தன்வினை....-18. &. 19

 Weekend க்காக இன்று 

தன்வினை....-19 இலவச இணைப்பு.

தன்வினை....-18

By N Krishnamurthy 

டாக்டர் வீட்டிலிருந்து திரும்பியவுடன் அவர்கள் வீட்டில் சிறிது  நேரம் உட்கார்ந்து இருந்து விட்டு, ஜகன் தன் வீட்டிற்கு கிளம்பினான். அன்று இரவிலிருந்தே வினயாவிற்கு மாத்திரை கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. சாதாரணமாக மாத்திரைகளை சாப்பிட அவளுக்கு இஷ்டமே இருப்பதில்லை. விமலா வற்புறுத்தி வேளா வேளைக்கு மாத்திரைகளை கொடுக்க வேண்டி இருந்தது. மாத்திரை சாப்பிடுவதால் என்னவோ அவள் தூங்கி தூங்கி வழிந்தாள். இதனால் அவளுடைய இப்பொழுது நடவடிக்கைகளான காட்டு கூச்சல் கத்துவது , தரையிலும், சுவற்றிலும் கரியால் எழுதுவது  போன்றவைகள் அதிகம் இல்லை என்று கூறலாம். ஆனால் முழித்திருக்கும் சில நேரங்களில் அவள் முன்பை விட மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தாள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்த விமலா, ஒருவேளை இது தெய்வ குத்தமாக இருக்குமோ, ஒரு நடை குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்தால் என்ன என்று யோசித்தாள்.  


புதன்கிழமை மாலை ஆறு மணி இருக்கும் ஜகன் உள்ளே வந்தான்.

 " இப்போ எப்படி மாமி இருக்கு வினயாவுக்கு" என்று கேட்டான்." இப்ப கொஞ்சம் பரவாயில்லைன்னு பார்மலா சொல்லத்தான் நெனைக்கிறேன். ஆனா அப்படி  சொல்ல முடியலை. அதிக நேரம் தூங்கி தூங்கி வழிஞ்சாலும்,முழிச்சிண்டிருக்கற  டைம் எல்லாம் சேத்து வச்சு வட்டியும், முதலமா கத்தறா" என்றாள் விமலா."மேல் கொண்டு என்ன பண்றதுன்னே தெரியல " என்று தொண்டை அடைக்க கூறிய  அவள்  "குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம் பாக்கறேன்" என்றாள்.


(ஏதாவது ஒரு கஷ்டம் வரும்போது ஆரம்பித்தில் பொதுவாக பல குடும்பங்கள், குல தெய்வத்தை மறந்து விடுகின்றனர். இதை வேண்டுமென்று செய்வதில்லை. கஷ்டத்தால் ஏற்படும் மனக்குழப்பத்தால் சரியாக  சிந்திக்க முடிவதில்லை. எத்த தின்னால்  பித்தம் தெளியும் என்ற நிலையில், பல தீர்வுகளை சோதித்து பலன் கிடைக்காமல் போனதும், குலதெய்வமே அவர்கள்மேல் பரிதாபப்பட்டு, நம்மை இவர்களுக்கு நினைவுறுத்துவோம் என்று எண்ணி அவர்களை தன்னை எண்ணிச்செய்து, தன் பால்  வரவழித்து, தீர்வுக்குண்டான வழியை காண்பித்து கொடுக்கிறது. இது போல கணேசனின் குலதெய்வமும் அவருக்கு கை கொடுக்குமா?). 

"உங்க குலதெய்வம் எது மாமி" என்றான் ஜகன். "கும்பகோணம் சார்ங்கபாணி தான் எங்க குலதெய்வம்" என்றாள்  விமலா. "எப்ப போணம் சொல்லுங்கோ. சனி, ஞாயிறுன்னா  நானும் வரேன். உங்களுக்கு உத்தாசையா இருக்கும். எங்க ஆபீஸ்ல என் ஃப்ரெண்ட் சித்தார்த் கார் வச்சிருக்கான்.

அவன் காரை எடுத்துண்டு போய்ட்டு வந்தூடலாம் " என்றான் ஜகன். 

"மாமா வந்ததுக்கு அப்புறம் கேட்டூட்டு சொல்றேன்" என்றாள் விமலா.

"எங்க மாமி, வினயாவ காணோம் "என்று கேட்டான்  ஜெகன்.

" மத்தியானம் சாப்டூட்டு மாத்ரை  போட்டுண்டவ, இன்னும் தூங்கிண்டு இருக்கா. கிட்டத்தட்ட  எட்டு மணிக்கு தான் எழுந்திருப்போ" என்றாள் விமலா.

இவர்கள் இப்படி பேசிக் கொண்டே இருந்தபோது கணேசன் உள்ளே நுழைந்தார். கணேசனை பார்த்தும் ஜகன் எழுந்து நிற்க முயற்சித்தான். "பரவாயில்ல, நீங்க உட்காருங்க"என்றார்  கணேசன். ஜகன் அவரைப் பார்த்து"  நீங்க என்ன விட வயசல ரொம்ப பெரியவா. வாங்கோ, போங்கன்னு நீங்க என்ன கூப்பிடறது  நேக்கு கூச்சமா இருக்கு. ஜகன்னு பேர் சொல்லியே கூப்பிடலாமே "என்றான். இதன் பிறகு விமலா அவருக்கு காபி கொண்டு வந்து கொடுத்து, தங்கள் பேசிக் கொண்டிருந்ததை சொன்னாள். அதற்கு கணேசன்" சனி,ஞாயித்துக்கெழமைனா  நேக்கும் பரவாயில்லை. ஆபீசுக்கு லீவ் போட வேண்டாம்" என்றார்.

"சரி வர சனி, ஞாயிறு  போயிட்டு வரலாம்" என்று கூறினார் அவர்.

பின்னர் ஜகன் விடைபெற்று வீடு திரும்பினான்.

வெள்ளியன்று காலை ஜகன் அவர்களுக்கு போன் செய்து "சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு கார்  கொண்டு வருகிறேன். கும்பகோணம் போய்விடலாம்" என்று கூறினான்.

திட்டமிட்டபடி சனிக்கிழமை காலை கும்பகோணத்திற்கு சென்றார்கள். நல்லவேளை ஜகன் இருந்தது உபயோகமாக போனது. இல்லையென்றால் வினயாவை சமாளித்து இருக்கவே முடியாது. கும்பகோணத்தில் ஏற்கனவே வெங்கட்ரமணா லாட்ஜில் தனக்கு ஒரு ரூமும், அவர்களுக்கு ஒரு ரூம் ஆக இரண்டு ரூபாய் புக் செய்திருந்தான் ஜகன்.  கும்பகோணம் போய் சேரும்போது  மணி மூன்றை  தொட்டுவிட்டது. வழியிலே லஞ்ச் சாப்பிட்டு விட்டார்கள். பின்பு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மாலை 5 மணிக்கு சார்ங்கபாணி  கோவிலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். கோவில் அருகில் வந்ததும், கோபுரத்தை பார்த்த வினயா திடீரென்று கத்த ஆரம்பித்தாள். "என்ன என்ன பண்ண போறீங்க.கொலை செய்யப் போறீங்களா. ஜாக்கிரதை நான் உங்களை எல்லாம் கொன்னுடுவேன்.நான் கோயிலுக்கெல்லாம் வர மாட்டேன்" என்று கத்தினாள். அவள் கண்கள்  சிவந்து போயிருந்தன. தலையை விரித்துப் போட்டுக் கொண்டாள். அங்குள்ளோர்  இந்த கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் கணேசனும், விமலாவும் திகைத்தார்கள். அப்போது ஜகன் "  மாமா நீங்க ஒண்ணு பண்ணுங்கோ. நீங்க ஒண்டி போய் ஸ்வாமியை தர்சனம் பண்ணீட்டு,வேண்டிண்டு வாங்க. நானும் மாமியும்,வினயாவும்  லாட்ஜுக்கே  போயிடுறோம்" என்றான். "சரி" என்று கணேசன் சொன்னதும், அவர்கள் திரும்பி லாட்ஜுக்கு போக ஆரம்பித்தனர்.

தன்வினை....-19

தெய்வம் மனிதர்களை சோதிக்கும். ஆனால் கைவிடுவதே இல்லை. "தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்ற வாக்கியத்தின் படி கணேசனுக்கு, பெருமாள், அவரது கவலை தீர ஒரு மனுஷனை அடையாளம் காட்ட திருவுள்ளம் கொண்டார் போலும். யாரை கைகாட்டப்போகிறார்?

அது *சிதம்பர* ரகஸ்யம் அல்லவா. அதை இப்போது வெளியிடலாமா?

கணேசன் மாத்திரம் சார்ங்கபாணி கோவில் உள்ளே நுழைந்தார்.

ஆராவமுதனையும்,கோமளவல்லித் தாயாரையும் நன்றாக தரிசனம் செய்து கொண்டு, மனமுருக வேண்டிக்கொண்டார். பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்து கோயில் வாயிற்படியில் சிறிது நேரம் அமர்ந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க, கண்ணியம் மிகுந்த, ஒரு பெரியவர் தன்னையே உற்று நோக்குவதை பார்த்தார். 

அந்த பெரியவர் நடந்து கணேசன் அருகில் வந்து  " நீங்க" என்று ஆரம்பித்து பின்னர் " நீ கணக்கு வாத்தியார் சதாசிவத்தினுடைய பிள்ளை பையாச்சுதானே "என்று கேட்டார். கணேசனுக்கு தூக்கி வாரி போட்டது. தன் தந்தையின் பெயரை சொன்னதோடு மட்டுமல்லாமல் ,தானே கிட்டத்தட்ட மறந்திருந்த தன்னுடைய நிக் நேமை ஒருவர் சொல்லி அழைத்ததுதான் அவரது ஆச்சர்யத்துக்கு காரணம்.  அந்த பெரியவர் யாராய் இருக்கும் என்று சிறிது நேரம் யோசித்துப் பார்த்தும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. அந்த பெரியவர் அவரிடம்" ஏம்பா கணேசா, என்ன மறந்துட்டியா. உங்க ஆத்துக்கு  எதிராத்துல தாசில்தார் சங்கர சுப்பிரமணியம் இருந்தாரே, ஞாபகம் இருக்கா. அவர் பையன் சிதம்பரம் தான் நான்" என்று கூறினார். இதை கேட்ட கணேசன்"  ஓ,இப்போ ஞாபகம் வந்தூட்த்து. சிதம்பரம் சாரா நீங்க. எவ்வளவு வருஷம் ஆச்சு பாத்து"என்றார். 

இதன் பின்பு கணேசனுக்கு பழைய நினைவெல்லாம் திரும்ப ஆரம்பித்தது. அவர் சிதம்பரத்தை பார்த்து"  நீங்க டென்த் படிக்கும்போது, தெருமுனையில் இருந்த மாமரத்துல ஏறி மாங்கா பறிக்கும் போது  கீழே விழுந்து உங்க கையில அடிபட்டு,கட்டு போட்டுண்டேளே, ஞாபகம் இருக்கா" என்று கேட்டார். இதைக் கேட்ட சிதம்பரம்  " எது ஞாபகம் வச்சுக்க வேணாமோ அதயெல்லாம் நண்ணா  ஞாபகம் வெச்சசிண்டு இருக்க கணேசா. எஸ்.எஸ்.எல். சில நான்  ஸ்கூல் பர்ஸ்ட் வந்தேனே. அது ஞாபகம் இருக்காது" என்று சொல்லி சிரித்தார் .கணேசன் உடனே

" எடத்துக்கேத்த மாதிரி ஜோக்கா சொல்லி சுத்தி இருக்கறவாள சந்தோஷபடுத்தற உங்க குணம் இன்னும் மாறல. நீங்க ஸ்கூல் பர்ஸ்ட் வந்தத  எப்படி நான் மறக்க முடியும். உங்க அம்மா கிட்ட கெஞ்சி, கூத்தாடி மைசூர் பாகு பண்ணி  தர சொல்லி, வாங்கி சாப்பிட்டோமே .அது இன்னும் எனக்கு நெஞ்சுல இனிக்கிறது" என்றார். அவர் பின்னர் சிதம்பரத்தை பார்த்து " நீங்க இப்ப எங்க இருக்கீங்க.என்ன பண்றீங்க. ஆத்துல சௌக்யமா " என்று கேட்டார்.

"அதெல்லாம் ஒரு பெரிய கதப்பா. சுருக்கமா சொல்லணம்னா பாஸ்கர ராயபுரம் பக்கத்துல ராஜராஜபுரம் என்ற ஊர்ல நான்,என் சகதர்மிணி சாரதாவோட  இருக்கேன். என் கிளாஸ்மேட் மற்றும் க்ளோஸ் ஃப்ரண்டுமான ஜெகதீசன், ஃபாரின்லேந்து அந்த ஊர்ல வந்து குடி ஏறி, ஊரை ரொம்ப அபிவிருத்தி பண்ணி இருக்கான்.

நானும், ராமர் பாலம் கட்ட அணில் உதவி பண்ண மாதிரி, அவனுக்கு  ஒத்தாசயா இருக்கேன். இப்பல்லாம் நிறைய கதாகாலட்சேபம் பண்றேன். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் புத்தி  தெளிஞ்சிருக்கு" என்று கூறி சிரித்தார் சிதம்பரம்."இங்கேர்ந்து ராஜராஜபுரம் எவ்வளவு தூரம் "என்றார் கணேசன்.

"இங்க இருந்து போனா ஒரு மணிக்குள்ள போய் சேர்ந்துடலாம்" என்றார் சிதம்பரம்.

" ஆமாம் நீ எங்க இருக்க. என்ன பண்ற .உங்கதைய செத்த சொல்லேன் ,கேப்போம்" என்று கேட்டார்  சிதம்பரம்.

தன் வினை....-17

 தன் வினை....-17

By N Krishnamurthy 

அன்று இரவு ஜகன் கணேசனை போனில் கூப்பிட்டான்." மாமா நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். நாளைக்கு காலைல 11 மணிக்கு நம்ப டாக்டர் பாக்க போறோம்.நான் பத்து மணிக்கு அங்க  வந்துடறேன். நீங்க எல்லாம் ரெடியா இருந்தா நம்ப அங்கே இருந்து ஒரு டாக்ஸி பிடிச்சு  டாக்டர் வீட்டுக்கு போயிடலாம்" என்றான்.

"டாக்டர் பேர் என்னப்பா"என்று கேட்டார் கணேசன்.

"டாக்டர் பேர் *தாமரை* மாமா "என்றான் ஜகன்.

அதைக்கேட்ட கணேசன் தாமரை தான் நம்பள காப்பாத்தணம்* . தாமரையை விட்டா வேற கதி இல்ல"என்றவர்"சரி ஜகன். நாளைக்கு காலைல நாங்க பத்து மணிக்கே ரெடியா இருக்கோம்"என்றார் கணேசன்.

 மறுநாள் காலை சொல்லி வைத்த மாதிரி ஜகன் 10 மணிக்கு வந்து சேர்ந்தான். அப்பொழுது வினயா ரொம்பவும் நார்மலா இருந்தாள். இப்படி இருப்பவளா அன்று அந்த ஆட்டம் ஆடிவிட்டாள்  என்று ஜகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. "நானும் வரட்டுமா"என்றாள்  விமலா. " வாங்களேன். ரெண்டு பேர் கூட இருந்தா சௌகர்யம் தான்"என்றான்  ஜகன். எல்லோரும் டாக்சியில் ஏறி   டாக்டர் க்ளினிக்குக்கு சென்றார்கள்.

டாக்டர் தாமரை  ஆரஞ்சு கலர் புடவையில் இருந்தாள் சுமார் 50 வயது இருக்கலாம். மூக்கின் மேல் கண்ணாடி இருந்தது. தீக்ஷன்யமான கண்கள். ஜகனைப் பார்த்து" நீங்க தானே போன் பண்ணி இருந்தீர்கள்" என்று கேட்டாள். " ஆமாம், டாக்டர் " என்று கூறினான் ஜகன். "பேஷன்ட் யார்" என்று டாக்டர் கேட்டபோது வினயாவை சுட்டிக்காட்டி " இவள் தான் பேஷண்ட்" என்று கூறினான் அவன்.  டாக்டர் "இவுங்க உங்களுக்கு என்ன உறவு" என்று கேட்டாள். "டாக்டர். நான் திருமணம் செய்து கொள்ளப்போகும்  பெண் இவள்" என்று கூறினான்.

ஜகன். "இவளது பெற்றோர்கள் வந்திருக்கிறார்களா" என்று கேட்டாள் டாக்டர். "ஆம்" என்று அவன் கூறியதும்  "அவர்களையும்  கூப்பிடுங்கள்" என்று கூறினாள் டாக்டர். அவர்களும் வந்து அவர்கள் வந்ததும் டாக்டர்  ஜகனை பார்த்து " நீங்கள் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் சற்று வெளியில் இருங்கள்" என்று கூறினாள். ஜெகன் வினயாவும் வெளியில் சென்றவுடன், கணேசனையும் விமலாவையும் பார்த்து டாக்டர்" நடந்ததெல்லாம் ஒன்று விடாமல் கூறுங்கள்" என்று கேட்டாள்.  எல்லா விவரங்களையும் அவர்கள்   டாக்டரிடம் கூறினார்கள். இதன் பிறகு அவர் ஜெகனையும்,வினையாவையும்  உள்ளே வரச்சொன்னாள். வினயாவை முற்றிலும் செக்கப் செய்துவிட்டு, அவளிடம் "உனக்கு என்னம்மா செய்கிறது" என்று கேட்டாள். "எனக்கு ஒண்ணுமே இல்ல டாக்டர். நான் நார்மலாக தான் இருக்கிறேன்" என்றாள் வினயா.  " அடிக்கடி தலைவலி வருகிறதா" என்று கேட்டாள் டாக்டர்.  " இல்லை .நான்கு நாட்கள் முன்பு ஒருதரம் தலைவலி வந்தது. அவ்வளவுதான்" என்றாள் வினயா. "தலை விண் விண்  என்று தெறிக்கிற மாதிரி இருக்கிறதா" என்று கேட்டாள் டாக்டர். "அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை" என்று   சாதுவாக பதில் அளித்துக் கொண்டிருந்த விமலா திடீரென்று டாக்டரை பார்த்து " உன்ன நான் சும்மா விடமாட்டேன். தீர்த்து கட்டிடுவேன்.என்ன உன்னால ஒழிக்க முடியுமா.நான் உன்ன ஒழிச்சூடுவேன்"என்று கத்த  ஆரம்பித்தாள்.  சேரில் இருந்து எழ ஆரம்பித்த அவளை, ஜகனும், விமலாவும் பிடித்துக் கொண்டார்கள். இது போன்ற பல கேஸ்களை பார்த்த டாக்டர் இதற்கெல்லாம் அசரவில்லை. எழுந்து வந்த அவள் வினயாவின் கையில் ஒரு ஊசியை குத்தினாள். மூன்றே நிமிடங்களில் வினயா மயக்கமானாள். டாக்டர், ஜகனிடம் " ஏதோ ஒரு காரணத்தினால் இவளுக்கு மன சிதைவு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து  மருந்து சாப்பிட வேண்டி இருக்கும் .இவள் வேலைக்கு  போய்க்கொண்டிருந்தால் கொஞ்ச காலத்திற்கு வேலைக்கு அனுப்ப வேண்டாம் .மீண்டும் 10 நாட்கள் கழித்து வந்து என்னை பாருங்க. நடுவில் ஏதாவது எமர்ஜென்சி என்றால்  எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் இவளை கூட்டிக் கொண்டு வரலாம்" என்று கூறினாள். கணேசன் டாக்டரிடம் "எவ்வளவு பீஸ் தர வேண்டும் " என்று கேட்டார். அதற்கு டாக்டர் ஜகனை சுட்டிக்காட்டி "இவர் ஏற்கனவே ரிசப்ஷனில் பீசை கட்டி விட்டார்" என்று கூறினாள்.

குச்சனூர் சனீஸ்வரர்

 துன்பங்கள் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர்

சனிதோஷத்தால் வரும் துன்பங்கள் குறைய தேனி மாவட்டத்தில் வீற்றிருக்கும் குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யலாம்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார் குச்சனூர் சனீஸ்வர பகவான். 

இங்கு ஆடிமாதத் திருவிழாவும், இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழாவும் சிறப்பானதாகும்.

‘தினகரன் மான்மியம்’ என்கிற பழமையான நூல் வாயிலாகவே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் பற்றிய தல வரலாற்றை அறிய முடிகிறது.

அதன்படி முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன், திரு மணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்திருக்கிறான். கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்ட மன்னனின் கனவில் ஒரு முறை அசரீரி ஒலித்தது.

‘உன் வீட்டுக்கு ஒரு அந்தணச் சிறுவன் வருவான். அவனை வளர்த்து வந்தால் குழந்தை பிறக்கும்’ என்றது அந்தக் குரல்.

அதன்படி ஒரு சிறுவன், மன்னரிடம் வந்து சேருகிறான். அவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வரும் வேளையில், அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 

அவனுக்கு ‘சதாகன்’ என்று பெயர் சூட்டினர். காலங்கள் உருண்டோட சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால், அவனுக்கே முடிசூட்டினான் மன்னன். 

இந்தநிலையில் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் பல சோதனைகளையும், துன்பங்களையும் அவன் சந்தித்தான்.

தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன், தந்தையின் துன்பம் நீங்க, சுரபி நதிக்கரைக்குச் சென்று சனியின் உருவத்தை நிறுவி வழிபடத் தொடங்கினான்.

அந்த வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான், அவன் முன்தோன்றி, ‘முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது.

இதன் காலம் ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது’ என்றார்.

ஆனால் சந்திரவதனன், “என் தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சனி பகவானிடம் கோரிக்கை வைத்தான். ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான், சந்திரவதனனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார்.

அப்போதும் சந்திரவதனன், சனீஸ்வர வழிபாட்டை நிறுத்தவில்லை. சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினான்.

ஒரு கட்டத்தில் மனம் இரங்கிய சனீஸ்வரபகவான் சந்திரவதனன் முன் தோன்றி, அவனது துன்பங்களை களைந்ததுடன் ‘பக்தர்கள் தங்களது குறைகளை உணர்ந்து இவ்விடத்துக்கு வந்து என்னை வணங்கினால், அவர்களுக்கு சனிதோஷத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார். மேலும் அவ்விடத்தில் சுயம்புவாகவும் எழுந்தருளினார்.

சுயம்பு சனீஸ்வரருக்கு, குச்சுப்புல்லினால், ஒரு கூரை வேய்ந்தான் சந்திரவதனன். குச்சுப்புல் கூரை என்பதே நாளடைவில் குச்சனூர் என்றானது.

குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதனை ஆடிப்பெருந்திருவிழா என்பர். சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வர். ஆடி மாதம் முழுவதும் வருகிற சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலில் ‘விடத்தை மரம்’ தல மரமாகவும், ‘கருங்குவளை மலர்’ தல மலராகவும், ‘வன்னி இலை’ தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், ‘எள்’ தானியமாகவும் இருக்கிறது. 

இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போடுவதும், கருப்பு வஸ்திரம் சாத்தி, காகங்களுக்கு எள்ளு சாதம் பிரசாதமாக படைத்து சனீஸ்வரரை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தேனியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் குச்சனூர் உள்ளது. இதற்கு வீரபாண்டி வழியாகவும், சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். சின்னமனூரில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம்.

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் சனீஸ்வர தேவா போற்றி 🌷

ஊட்டிக்கு ஒரு ரூட்

 ஊட்டிக்கு இப்படி ஒரு ரூட் இருக்கா? பலரும் அறியாத ரகசிய பாதை.. போறது அவ்வளவு ஈஸி இல்லை

ஊட்டி: கோவையில் இருந்து ஊட்டி செல்வோர் பொதுவாக மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாகவே செல்வார்கள்.. ஆனால் கோவையில் இருந்து காரமடை வழியாக முள்ளி, கீழ் குந்தா, மஞ்சூர் வழியாக வேறு ஒரு பாதையில் ஊட்டிக்கு போக முடியும்..

அந்த பாதையை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஊட்டிக்கு செல்ல சென்னையில் இருந்து வருவோர் அல்ல கோவையை தவிர மற்ற மாவட்டங்களில் இருந்து வருவோர் நேராக அவினாசி அன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்வார்கள். ஒரு சிலர் கோத்தகிரி வழியாகவும் ஊட்டிக்கு செல்வார்கள்..

ஆனால் கோவையில் இருந்து செல்வோர், நேராக துடியலூரை கடந்த உடன் பெரிய நாயக்கன் பாளையம், காரமடை வழியாக மெயின் சாலையில் மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து வழக்கம் போல் குன்னூர் அல்லது கோத்தகிரி வழியாக ஊட்டி செல்வார்கள். ஆக மொத்தம் எங்கிருந்து வந்தாலும் மேட்டுப்பாளையத்தை தாண்டாமல் யாரும் ஊட்டி போக மாட்டார்கள்... இதுதான் பலரும் கடைபிடிக்கும் வழக்கம்.

அதேநேரம் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் போகாமல் இன்னொரு ரூட் வழியாகவும் போகலாம். கோவையில் இருந்து நேரடியாக வனப்பாதை வழியாக ஊட்டிக்கு போக முடியும். அது தான் மஞ்சூர் ரூட். அதேநேம் இந்த மஞ்சூர் ரூட் அழகான பாதை என்றாலும், மிகவும் அதிகமான வனவிலங்கு நடமாட்டம் உள்ள ஆபத்தான பாதையும் கூட.. எனவே இந்த பாதையில் செல்வோர் மிக கவனமாகவே செல்ல வேண்டும்..

சரி நேராக விஷயத்திற்கு போகலாம்.. கோவையில் இருந்து காரமடை வழியாக முள்ளி, குந்தா, மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு போக முடியும்.. இந்த சாலையை பொறுத்தவரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது.. இந்த சாலையில் பேருந்துகள் செல்கின்றன. காரமடையில் இருந்த கிளம்பினால் வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை மிக அடர்ந்த வனப்பகுதியாகும்.. இது சிங்கிள் பாதை போல் தான் தார் சாலை இருக்கும். இந்த சாலையில் யானைகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் சாலையில் யானைகளை பார்க்க முடியும்.. கோவையில் இருந்து பேருந்தில் செல்வதே மிகவும் நல்லது. அதிகாலை 5.40க்கு ஒரு பேருந்தும், காலை 10.30க்கு ஒரு பேருந்தும் இருப்பதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்..

வாகமன் மூணாறு சுற்றுலா தலங்களை விட சூப்பர் கிளைமேட்.. கோடைக்கு ஏற்ற தமிழ்நாட்டு சுற்றுலா தலங்கள்

அதேநேரம் சொந்த வாகனத்திலும் வரலாம். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருவோர், முள்ளி என்ற செக்போஸ்டில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னரே அனுமதிப்பார்கள்.. காரமடை மஞ்சூர் சாலையில் பயணித்து வந்தால் முதலில் முள்ளி செக் போஸ்ட். முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் இரண்டு ரூட் போகிறது. ஒரு ரூட் கெத்தை வழியாக கேரளா போகிறது.

இன்னொரு ரூட் மஞ்சூர் போகிறது. அந்த இன்னொரு ரூட்டான மஞ்சூர் சாலையில் தான் ஊட்டிக்கு செல்ல விரும்புவோர் பயணிக்க வேண்டும். யானைகளை அதிகமாக வரும் என்பது ஒருபுறம் எனில், நிறைய காட்டெருமைகளையும் இந்த சாலையில் பார்க்க முடியும். மஞ்சூர் சென்ற பின்னர் இறங்க வேண்டும். மஞ்சூரில் இருந்து ஊட்டிக்கு பேருந்துகள் அடிக்கடி இருக்கிறது. அங்கிருந்து எளிதாக ஊட்டி செல்ல முடியும். காரமடை டூ மஞ்சூர் பாதை பயணம் அற்புதமான அனுபவம் என்றாலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது ஆபத்தானது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.. கார்களில் அல்லது பேருந்தில் வருவதில் பிரச்சினை இல்லை.. இரவில் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை..

Thursday, April 18, 2024

ஸ்ரீ ராம நவமி சிறப்பு பதிவு

 |ஸ்ரீ ராம நவமி சிறப்பு பதிவு. ஸ்ரீ ராம ஜெயம்.

கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்.  

கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராம‌நவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள்‌ வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு பகல்‌ பாராமல் பஜனை நடந்துகொண்டே யிருக்கும். வருபவர்கள்‌ அனைவருக்கும் உண்வுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.  

கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி.ஒரு சமயம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம்.  அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம்.

உறங்கிக்  கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை ஓரமாக சமையலறையிலேயே விட்டிருந்தாள்  கோபன்னாவின் மனைவி. நைவேத்ய சமயம் வந்துவிட்டதா என்று பார்க்க கூடத்திற்குச் சென்றார். மிக உற்சாகமாக பஜனை நடந்து கொண்டிருந்தது. தன்னை மறந்து சிறிது நேரம் அங்கேயே ஓரமாக நின்றுவிட்டார்.

சற்று நேரத்தில் நைவேத்யம் கொண்டு வா என்று கோபன்னா சைகை காட்ட உள்ளே வந்தார். நைவேத்யத்தை எடுக்கும் சமயம் 'சொரேல்' என்று உரைத்தது. உறங்கிக்கொண்டி ருந்த இடத்தில் குழந்தையைக் காணவில்லை.  பதறிப் போய்த் தேடினாள்.  

குழந்தை தவழ்ந்த அடையாளம் கஞ்சித் தொட்டியின் அருகே தெரிந்தது.

அங்கே.. கஞ்சித் தொட்டியினுள்..  கொதிக்கும் கஞ்சிக்குள்..  மிதந்துகொண்டிருந்தது..குழந்தை..  குழந்தையேதான்.

மயக்கமடைந்து விழுந்தாள்.

நைவேத்யம் கொண்டுவரப் போனவளை வெகு நேரமாய்க் காணோமே என்று கோபன்னா தானே தேடிக்கொண்டு வந்தார்.  மனைவி கீழே விழுந்திருப்பதைப் பார்த்து நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார்.

என்னாச்சும்மா?  

பசி மயக்கமா?  

இதோ நைவேத்யம் ஆயிடும். பாகவதா சாப்பிட்டா சாப்பிடலாமே..

இல்ல.

என்ன? ஏன் அழற?

கு..ழந்..தை..

குழந்தைக்கென்ன?  

அவன் இங்கதான் எங்கயாவது விளையாடிண்டிருப்பான்.நேரமாச்சும்மா. நைவேத்யம் எடு.. ராமர் காத்துண்டிருக்கார்.. பாகவதாளுக்கும் பசிக்கும். காலைலேர்ந்து பாடறா‌ எல்லாரும்..

கு.. ழந்.. தை.

குழந்தைக்கென்னாச்சு?

அங்க..கையை நீட்டிய இடத்தில் கஞ்சித் தொட்டிக்குள் மிதந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்.

ஒன்றுமே புரியவில்லை.

கணவனும் மனைவியும்‌ ப்ரமை பிடித்தாற்போல் சற்று நேரம் நின்றனர்.  

மெதுவாக கொதிக்கும் கஞ்சியிலிருந்து குழந்தையின் உடலை எடுத்து வாழை இலையில் வைத்தார். ஒரு முடிவுக்கு வந்தவராக  கண்ணைத் துடைத்துக் கொண்டு இன்னும் பத்து வாழை இலைகளை வைத்து ஒரு சாக்கில் குழந்தையின் உடலைச் சுற்றி ஓரமாக வைத்தார்.

நம்ம துக்கம் நம்மோடு போகட்டும். பாகவதா சாப்பிடும் வரை குழந்தை போனதை மூச்சு விடக்கூடாது. கண்ணைத் துடை.

எப்படி? எப்படி முடியும்? போனது நம்ம குழந்தையாச்சே..

அவன் நம்ம குழந்தை இல்ல. ராமனோட குழந்தை. ராமன் தான் கொடுத்தான். அவனே எடுத்துண்டாச்சு..  

இப்ப குழந்தை போனதை சொன்னா யாரும் சாப்பிடமாட்டா. எல்லாரும் இவ்ளோ நேரம் பாடியிருக்கா. பேசாம வா..  

மனைவியை மிரட்டினார்.

இருவரும் பஜனை நடக்கும் கூடத்துக்குப் போனார்கள்.

அப்போது ஒரு பாகவதர்,கோபன்னா, தீபாராதனை சமயம்.. குழந்தையைக் கூப்பிடுங்கோளேன்..

கூப்டுங்கோ..

அவன் தூங்கறான். வர மாட்டான்.

பரவால்ல  எழுப்பி தூக்கிண்டு வாங்கோ..என்று இன்னொருவர் சொல்ல, அதற்குமேல் தாங்கமாட்டாமல், கோபன்னாவின் மனைவி கதறினாள்.

என்னாச்சு? என்னாச்சு?  எல்லாரும் பதற, கோபன்னா ஒருவாறு தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லும்படி யாயிற்று.

அனைவரும் உறைந்துபோயினர்.  

பெற்ற குழந்தை இறந்துவிட்டான்.உடலை ஒளித்து வைத்து விட்டு பஜனையா? பாகவத ஆராதனையா?  இப்படி ஒரு ஆத்யந்த பக்தியா?  நம்பவே முடியவில்லை.

பெரியவராக இருந்த ஒரு பாகவதர்,  கோபன்னாவின் அருகே வந்தார்.

கோபு, இப்படி பக்தி பண்ற உனக்கே கஷ்டம் வந்தா, எல்லாருக்கும் ராமன் மேல நம்பிக்கையே போயிடும்.

 குழந்தையைக் கொண்டு வா. எல்லாரும் சேர்ந்து ராம நாமம் சொல்வோம். அம்ருத மயமான நாமம் குழந்தையை எழுப்பும். ராமருக்காச்சு, நமக்காச்சு. எடுத்துண்டு வா. ஒண்டிக்கு ஒண்டி பாத்துருவோம்.

கோபன்னா அசையாமல் நின்றார்.  அவரைத் தள்ளிக்கொண்டே போய் குழந்தை இருக்கும் இடத்தை அடைந்து அந்த பாகவதரே தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்.

நடுக் கூடத்தில்  வெந்துபோயிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையின்  உடல் கிடத்தப்பட்டது.

அனைவரும் சுற்றி அமர்ந்து தங்களை மறந்து கண்ணீர் வடிய ராம ராம ராம ராம ராம என்று நாமம் சொல்ல ஆரம்பித்தனர்.  

எவ்வளவு நேரம் ஜபம் செய்தார்களோ தெரியாது. அனைவருமே தன்னை மறந்த நிலையில் ஜபம் செய்து கொண்டிருக்க வாசலில் ஒருவர் வேகமாய் வந்தார்.

வடநாட்டைச் சேர்ந்த ஒரு பெரியவர் போல் இருந்தார். நெடுநெடுவென உயரம். தலையில் பச்சை நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார். ஒரு  கையில் பெரிய கோல். மற்றொரு கையில் கமண்டலம்.  ஆஹா யார் இந்த மஹானுபாவன்.

கிடுகிடுவென்று கூடத்தினுள் வந்தவர்,

ஏய் இன்னும் என்ன தூக்கம்?  எழுந்திரு  என்று கர்ஜித்துக் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரைக் குழைந்தையின் உடல் மீது தெளித்தார்.

குழந்தையின் உடல் சிலிர்த்தது.. ஆம்..

உறக்கத்திலிருந்து எழுந்தவன் போல் கண்ணைத் துடைத்துக்கொண்டு  எழுந்து உட்கார்ந்தான் குழந்தை. எல்லோரையும் சுற்றும் முற்றும் பார்த்தான்.

மாயாஜாலம்போல்  அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க, கிடுகிடுவென்று வெளியேறினார் வந்தவர்.  

அனைவரும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க, வந்தவரைத் தேடி வாசலில் ஓடினார் கோபன்னா.  

அதோ தூரத்தில் அந்தப் பெரியவர்.

விடாமல் துரத்தினர்..

யோகி போலிருக்கிறார். யாராய் இருக்கும்?

கரங்களை சிரமேல் குவிக்க, அந்தப் பெரியவர் திரும்பி கோபன்னாவைப் பார்த்தார். ஒரு கணம் கோதண்டமேந்தி, ஸ்ரீராமனாகக் காட்சி கொடுத்தவர், சட்டென்று மறைந்துபோனார்.

ராமஜோகி மந்துகோனரே...  

குதித்துக்கொண்டு பாட ஆரம்பித்தார்

பிற்காலத்தில் பத்ராசல ராமதாசர் என்று அழைக்கப்பட்ட கோபன்னா..

மூல ராமோ விஜயதே 

*ஜெய் ஸ்ரீராம்*