Monday, August 28, 2023

பங்காளி

பங்காளி - சுஜாதா சிறுகதை

(வெளிவந்த வருடம் 1981)

ஐதராபாத்தில் பிளேன் இறங்கினபோது சற்று கைகால்களை நீட்டிக்கொள்ளலாம் என்று வெளியே வந்தேன். விமான நிலையத்தின் பெரிய ஹாலில் கூட்டமாக இருந்தது. கண்ணாடிக் குப்பைகளை அலங்கரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள். காலர் இல்லாத சட்டையும், ஆந்திர வகை பஞ்சகச்சமும் அணிந்தவர்கள் இங்கும் அங்கும் உலாவிக்கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பம் மொத்தமும் ஒரே ஒரு சேட்டை வழியனுப்ப வந்திருந்தது சுவாரஸ்யமாக இருந்தது.

முப்பது வயதிலேயே அவனுக்கு இளம் தொந்தி. நெற்றியில் அவசரக் குங்குமம். பக்கத்தில் மனைவி, சுற்றத்தார். நிமிஷத்துக்கு நிமிஷம் பளிச் பளிச்சென்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். வெளிநாடு போகிறான் போலும்.கல்கத்தா வழியாகவா என்று யோசித்தேன். அவன் மனைவிக்கு இருபத்து ஐந்து வயசு இருக்கலாம். தலை, முகமெல்லாம் போர்த்தியிருந்தாலும் துணியின் சன்னத்தால் அழகாக, பிள்ளை பெற்றுக் களைத்த முகம் தென்பட்டது. இடுப்பில் சிவப்பாக ஒரு குழந்தை ஒட்டிக்கொண்டு ரவிக்கையை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த ஏராளமான வளையல்கள் புலம்பின. மற்றொரு முறை உண்டாயிருக்கிறாள் போலும். சேட்டு அவளுடன் அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டிருக்க வார்த்தைக்கு வார்த்தை சிரித்துக் கொண்டிருந்தான். ஸஃபாரி சூட் அணிந்த பையனின் தொணதொணப்பை யாரும் கவனிக்கவில்லை. பெண் ஒன்று ஆறு ஏழு வயசில் 'அமர் சித்ரகதா' படித்துக் கொண்டிருதது.

பிளேன் புறப்படுவதை அறிவித்துவிட, குடும்பத்தார் அனைவரும் முத்தம் கொடுக்காத குறையாக அவனுக்கு வழியனுப்பிப் பால்கனியிலிருந்து டாடா கட்ட மாடிப்படி நோக்கிச் சென்றார்கள். அந்த ஊட்டமான சேட் எனக்குப் பின்னால் க்யூவில் சேர்ந்துகொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தான். செக்யூரிட்டி முடிந்து வெளியே வந்து விமானம் நோக்கி நடக்கும்போது பால்கனியைத் திரும்ப நோக்கி டாடா காட்டினான். தூரத்தில் ஏரோப்ளேன் படிகளிலிருந்து திரும்பி நிதானமாக டாடா காட்டி முத்தங்களைப் பறக்கவிட்டான். என் பக்கத்தில் உட்கார்ந்தான். விமானம் புறப்படும்வரை முட்டைக் கண்ணாடி வழியாக டாடா காட்டினான். ரன்வேயில் ஓடும்போது கூடத் தூரத்தில் தெரிந்த புள்ளிகளை நோக்கி டாடா காட்டிவிட்டு கடைசியாகத் திரும்பும்போது கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டான். அழுகிறான் ! எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"வெளிநாடு போகிறீர்களா?" என்று கேட்டேன்.

"இல்லை, கல்கத்தா வரைதான்"

"ரொம்ப நாள் கல்கத்தாவில் தங்கப்போகிறீர்களா?"

"இல்லையே ! இரண்டு மூன்று தினங்கள்தான்...ஓ "

என் கேள்வியின் காரணத்தைப் புரிந்துகொண்டு "என் மனைவியை விட்டு என்னால் ஒரு தினம்கூடப் பிரிந்திருக்க முடியாது. அதனால்தான்." எனக்கு ஆச்சரியம் குறையவில்லை. மூன்று நாள் பிரிவுக்கு இத்தனை ஆர்பாட்டமா? அதுவும் புதுசாகக் கல்யாணம் ஆனவனாகவும் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் வயிற்றில் உள்ளதையும் சேர்த்து நான்கு குழந்தைகள் எண்ணினேன். சேட்டுடன் பேச்சுக்கொடுத்ததில் ஐதராபாத்தில் டெக்ஸ்டைல் மொத்த வியாபாரம் பண்ணுகிறானாம். "அபிட்ஸ்" அருகில் ஏதோ ஒரு சந்தில் விலாசம் சொல்லிக் கார்டு கொடுத்தான். எங்கெங்கே எது சல்லிசாகக் கிடைக்கிறதோ அதையெல்லாம் போய் வாங்கி வந்துவிடுவானாம்/ தமிழ்நாடு என்று சொன்னதும் பவானி ஜமக்காளம், சேலம் கைத்தறிச் சேலை எல்லாம் சொன்னான். தசராவுக்கு முன் சீப்பாக கிடைக்குமாம். நாற்பது, ஐம்பதாயிரத்துக்கு எடுத்து வருவானாம்.

ஏரோப்ளேனில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டு ஜிப்பாவுக்குள் ஒளித்து வைத்திருந்த சின்ன டப்பாவை எடுத்து அதிலிருந்து சூரணம் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு எனக்கும் காட்டினான்.

"வேண்டாம். நான் இதெல்லாம் சாப்பிடுவதில்லை."

"வெறும் ஜீரண சூரணம். ஜர்தா எதுவும் இல்லை. என் மனைவி கைப்படச் செய்தது..."

நான் சாஸ்திரத்துக்கு ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். ஏலம், லவங்கம், ஜாதிபத்திரி எல்லா வாசனையும் வந்தது.

"எப்படி இருக்கிறது?"

"குட்"

"என் வீட்டில் எல்லாமே சுத்த நெய்யில் தயார் செய்தது. உங்கள் தென்னிந்திய பிராமணர்களைவிட சைவம். முட்டைகூடத் தொடமாட்டோம். வெளியே சாப்பிட மாட்டோம். இப்போது இரண்டு நாட்களுக்கு உண்டான சப்பாத்தியை என் மனைவி கட்டிக் கொடுத்திருக்கிறாள். வெளியூர்களில் மோர்தான் சாப்பிடுவேன். ஏர்லைன்ஸ் கொடுக்கும் சாப்பாட்டில் 'புடிங்' மட்டும்தான் உண்பேன்" என்றான்.

பையிலிருந்து கத்தையாக நூறு ரூபாய் நோட்டுக்களைப் பிரித்து வைத்துக்கொண்டு எண்ணினான். நோட்டில் அவர்கள் எண்ணிக்கையில் கணக்குப் போட்டான். போட்டு முடித்ததும் "கடவுள் எனக்கு குறை வைக்கவில்லை. இரண்டு பையன், ஒரு பெண். பையன் இப்போதே உல்லி உல்லி, ஜார்ஜெட் எல்லாம் சொல்கிறான். 'பிட்டு' இப்போதே கால்குலேட்டரில் கணக்குப் போடுகிறது. என் மனைவி போல ஒருத்தியைப் பார்க்க முடியாது. அதனால்தான் அவளைப் பிரிந்திருக்க ஒரு நாள்கூட இயலவில்லை. அவளைப் பார்த்தீர்கள் அல்லவா? ஏர்போர்ட் வந்திருந்தாள் !"

"பார்த்தேன்."

"உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?"

"ஆகிவிட்டது. என் மனைவி ஏர்போர்ட்டுக்கெல்லாம் வந்து டாட்டா காட்டமாட்டாள்" என்றேன்.

"நாங்கள் உறவில்தான் பெண் எடுப்போம். சொத்து குடும்பத்தை விட்டுப் போகக்கூடாது பாருங்கள். எங்கள் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறோம் சொல்லுங்கள் பார்க்கலாம்?,"

எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

"பதினெட்டு பேர். இந்தியக் குடும்பம் சிதைந்துவிட்டது. பெரியவர்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை. இன்றைக்கும் என் அப்பா பெரியவர் வந்திருந்தாரே, பார்த்தீர்கள் இல்லையா? தொன்னூறு !. என் மனைவி வேலைக்குப் போவதில்லை. மனைவியின் இடம் வீட்டில்தான். என் மனைவி மாதிரி ஒரு பெண் அரிது. காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பாள். நான் கடைக்கு ஆறரைக்குக் கிளம்பிவிடுவேன். என் தம்பிமார்கள் கோடவுனைப் பார்த்துக்கொள்ள, நான்தான் கடையைப் பார்த்துக்கொள்வேன். கணக்கெல்லாம் இன்னும் அப்பாதான். தொன்னூறு வயசு. கால்குலேட்டர் தேவையில்லை அவருக்கு. மனைவி எனக்கு வெந்நீர் எடுத்து வைப்பாள். பனியன், ஜட்டி எல்லாம் எடுத்துவைத்து ஷேவிங்குக்கு வெந்நீர் எடுத்து வைப்பாள். 'காக்கா'வுக்கு தேநீர் போட்டுத் தந்துவிட்டு, அம்மாவுக்குப் பூஜை சாமான்கள் எடுத்துவைத்துவிட்டு எனக்கு ரொட்டி, நாஷ்தா. அப்புறம் குழந்தைகளைக் காரிலேற்றி கான்வெண்டுக்கு அனுப்ப வேண்டும், அவர்களைக் குளிப்பாட்டி. என் குழந்தைகள் மட்டுமல்ல, தம்பி பிள்ளையும்."

அவன் மனைவி அவன் குடும்பத்தில், வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் ஒருவிதமான அச்சாணி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவன் சொன்ன டைம்டேபிள்படி இரவு பன்னிரண்டு மணிவரை அவளுக்குக் கைக்காரியம் ஏதாவது இருக்க வேண்டும்.

"அதன்பின்தான் துளசிதாஸ் ராமாயணம் கொஞ்சம் படித்துவிட்டு ...அவள் அதிகம் படித்ததில்லை. படிக்காவிட்டால் என்ன?"

"மற்ற மருமகப் பெண்கள்?"

"அவர்களும் பங்குகொண்டுதான் செய்வார்கள். ஒரு சண்டை கிடையாது. சினிமா, கினிமா ஏதும் கிடையாது. எப்போவாவது ராத்திரி ஷோ போவோம். வேண்டுமென்றால் வீடியோ பார்த்துக்கொள்வோம்..." இந்த நாட்களில் இப்படியொரு குடும்பம் இருப்பதை நம்ப முடிகிறதா?

விமான பணிப்பெண் வெஜிடேரியன் விசாரித்துக்கொண்டு ஜிகினா மூடிய பிளாஸ்டிக் தட்டில் உணவை வைத்துவிட்டுச் சென்றாள். அதில் டெஸர்டை மட்டும் எடுத்துக்கொண்டு தன் கைப்பையிலிருந்து சின்ன டிபன்பாக்ஸ் எடுத்து அதிலிருந்து ரெண்டு சப்பாத்தியும், ஊறுகாயும் விடுவித்துக்கொண்டு சின்னதாக இன்ஜெக்ஷன் வையல் அளவிருந்த பாட்டிலிலிருந்து நெய்யும் எடுத்துக்கொண்டு "சொல்லுங்கள், நம்ப முடிகிறதா?"

"இல்லை" என்றேன்.

"எங்கள் வெற்றிக்குக் காரணம் என்னவென்று சொல்லட்டுமா?"

நான் வேண்டாம் என்றாலும் சொல்லத்தான் போகிறான். எனவே, "சொல்லுங்கள்" என்றேன். "நம்பிக்கை! கணவன் மனைவி மேல், மனைவி கணவன் மேல் ! விசுவாசம் ! இது இருந்துவிட்டால் மற்றதெல்லாம் ஒரு பொருட்டல்ல. இப்போது நான் வெளியூர் வந்திருக்கிறேன் அல்லவா? என் மனைவி டிரஸ் பண்ணிக் கொள்ள மாட்டாள். அன்னிய புருஷர்களுடன் பேசமாட்டாள். என் அப்பாவிடம் கூட - தொன்னூறு வயசு - முகத்தைக் காட்டமாட்டாள். இத்தனைக்கும் உறவுதான்! இப்படியல்லவா இருக்க வேண்டும் மனைவி ! இவளை விட்டுப் புரிவதில் எனக்கு வருத்தம் இருப்பது நியாயம்தானே? பெண்ணுரிமை என்கிறார்களே, என் மனைவியை நான் எப்படிக் கூப்பிடுவேன் தெரியுமா?"

நான் எப்படி என்று கேட்பதற்கு அவன் காத்திருக்கவில்லை.

"பாகவான் என்று. பாகவான் என்றால் பங்காளி, வாழ்வின் சுகதுக்கங்களில் பங்காளி என்று அர்த்தம்"

"பொயட்டிக்" என்றேன்.

"கூட்டுக குடும்பம் சிதையாமல் கணவன் மேல் மனைவிக்கும், மனைவி மேல் கணவனுக்கும் விசுவாசம் இருந்தால் உலகத்தில் பிரச்சனைகளே கிடையாது" என்றான்.

"என் கடையிலே எத்தனை பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை எரித்துப் பார்க்கமாட்டேன். தேவையில்லை. மனைவி வீட்டில் இருக்கும்போது இதெல்லாம் எதற்குச் சொல்லுங்கள். என்ன சொல்லுகிறீர்கள்?"

வாழ்க்கை என்பது அத்தனை எளிதாக இருந்தால் பரவாயில்லை என்று சொல்லத் தோன்றியது. அந்த மனைவி எப்பேற்பட்ட இந்திய பெண், தாய்க்குலத்தின் தங்கப் பிரதிநிதி, கணவன் இல்லையெனில் மையிட்டு எழுதாத, மலரிட்டு முடியாத மனைவி, அவள் பெருமையைப் பிரயாணம் முழுவதும் பேசிக்கொண்டிருந்த கணவன் ! இம்மாதிரி ம்யூஸியம் பிறவிகளும் இருப்பதைக் கண்டு எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.

கல்கத்தா விமான நிலையத்துக்கு வந்து இரங்கி லக்கேஜ் கிளியர் பண்ணிக்கொண்டு அவனிடம் கடைசி முறையாக விடைபெற்றபோது "யூ ஆர் லக்கி" என்றேன்.

கடைசிமுறை என்றா சொன்னேன்?

கெஸ்ட்ஹவுஸில் பெட்டி படுக்கையைப் போட்டபோது பசித்தது. இருட்டியிருந்தது. பார்க் ஸ்ட்ரீட்டில் ஒரு ரெஸ்டாரண்டில் போய் தந்தூரி ரொட்டியும் சப்ஜியும் கட்டித் தயிரும் சாப்பிட்டுவிட்டு, நியான்களின் ஊடே நடந்தபோது சந்தின் இறுதியில் ரிக் ஷாக்காரன் பின்னால் முணுமுணுத்துக் கொண்டே வந்தான். கிட்டத்திலேயே நிறையப் பெண்கள், பற்பல மாநிலங்களிலிருந்து என்னுடைய சந்தோஷத்துக்காக காத்துக்கொண்டு இருப்பதாக. பார்க் ஸ்ட்ரீட் விளிம்புவரைகூட இந்த வியாபாரம் வந்துவிட்ட கல்கத்தாவின் முன்னேற்றத்தை வியந்து விரைவாக நடக்க, என்னை மெதுவாக 'பாஜு பாஜு' என்று கடந்து சென்ற ரிக்ஷாவில் ஒரு பெண்ணின் தோளின்மேல் கைபோட்டுக் கொண்டு, மணிக்கட்டில் மல்லிகை மாலையும் மற்றொரு கையில் ஃபில்டர் சிகரெட்டுமாகச் சென்றவனை உற்றுப்பார்த்ததில்....சேட் !

நம்ப முடியவில்லை! பெங்கால் காட்டன் ஸாரிகளின் மொத்த விலை கேட்கிறான் போலும் அந்தப் பெண்ணிடம் !

வாழைக்காய் சிப்ஸ்

வாழைக்காய் சிப்ஸ்   

தேவையான பொருள்கள்    

வாழைக்காய் - ஒன்று, மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி, 

உப்பு - தேவைக்கு, கரம் மசாலாத் தூள் - அரை மேசைக்கரண்டி, மல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி, எண்ணெய் - பொரிக்க         

 *செய்முறை*            

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். வாழைக்காயின் தோலை சீவி வைக்கவும்.இரண்டாக நறுக்கி 5 நிமிடம் வேக வைக்கவும்.மெல்லியதாக, வட்ட வட்டமாக நறுக்கி தூள் வகைகளை சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும்.மிகவும் ருசியான க்ரிஸ்பி சிப்ஸ் ரெடி. 

சாம்பார் சாதத்திற்கு பொருத்தமான டிஷ்.

🪷🪷🪷

கேரளா பருப்பு பாயசம்

 ஓணம் ஸ்பெஷல்

 கேரளா பருப்பு பாயசம்

 தேவையான* *பொருட்கள் :

பொருள் - அளவு
கடலைப்பருப்பு 1 கப்
வெல்லம்1 கப்
தேங்காய் பால்2 கப்
பால்1 கப்
முந்திரி20
சுக்கு பொடி 1 சிட்டிகை
நெய்தேவையான அளவு
தண்ணீர்தேவையான அளவு

 *செய்முறை :* 

  முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரையும் வரை நன்கு சூடேற்றி, பின் அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 

  கடைசியில் பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பாயசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும், பின் முந்திரியைத் தூவினால்,

 ஓணம் ஸ்பெஷலான கேரளா பருப்பு பாயசம் தயார்

🪷🪷🪷

அடை பிரதமன்

அடை பிரதமன்  

 *தேவையான* *பொருள்கள்*         

அடை - ஒரு கப், ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால்), முதல் தேங்காய் பால் - ஒரு கப், 

இரண்டாம் தேங்காய் பால் - ஒரு கப், மூன்றாம் தேங்காய் பால் - 2 கப், 

வெல்லம் - 2 கப், முந்திரி - 15, 

தேங்காய் பத்தை - 2, சுக்கு பொடி - அரை தேக்கரண்டி, 

உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - 2 மேசைக்கரண்டி, ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி          

 *செய்முறை*            

அடை மற்றும் ஜவ்வரிசியை வேக வைத்து எடுத்து வைக்கவும். தேங்காய் துருவி மூன்று பாலையும் எடுத்து வைக்கவும். வெல்லத்தை சுடு நீர் கொண்டு கரைத்து கசடு இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.

சிறிதளவு நெய் விட்டு முந்திரி மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காயை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அடை மற்றும் ஜவ்வரிசி சேர்த்து வேக விடவும்.

இந்த கலவை குறைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது மீதமுள்ள நெய் சேர்க்கவும்.இப்பொழுது மூன்றாம் பால் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.பால் நன்கு கொதித்து சுண்டியதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

 இப்பொழுது இரண்டாம் பால் சேர்க்கவும்.இரண்டாம் பால் சுண்டியதும் முதல் பால் சேர்க்கவும். கொதிக்க விடக்கூடாது. அடுப்பை அணைத்து முந்திரி தேங்காய் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து பரிமாறவும். அப்பளத்துடன் சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும். சூடாகவோ அல்லது ஆறிய பின்னரும் சாப்பிடலாம்.

இது கேரளாவில் மிகவும் பிரபலம். ஓணம் சத்யாவில் இதற்கு கண்டிப்பாக இடம் உண்டு. உருளியில் செய்தால் சுவை கூடும்.

🪷🪷🪷

அவியல்

 🌺( *அவியல்)*        

 *தேவையான* *பொருள்கள்*         

தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 3/4 கப், காய்கறிக்கலவை - 2 1/2 கப், (பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய்,, அவரைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, புடலங்காய்,, பட்டாணி), பச்சை மிளகாய் - 3 (அ) 4, உப்பு - தேவையான அளவு, 

தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி, 

கடுகு - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - 3 கொத்து          

 *செய்முறை*            

பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை ஒரே அளவான சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயையும், பச்சை மிளகாயும் சிறிது தயிர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

காய்கறிகளை தேவையான தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு வடிகட்டவும்.வெந்த காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கேஸில் வைத்துக் கொதிக்க விடவும்.

கீழே இறக்கி அதில் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தயிரை கீழே இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும். கொதிக்கும் போது சேர்த்தால் நீர்த்து விடும். மேலே 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி, மேலும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

 கறிவேப்பிலையை சேர்த்து அவியலை நன்கு கலக்கவும்.புளியோதரை, தேங்காய் சாதம் போன்ற பிசைந்த சாத வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

காய்கறிகளை குக்கரிலும் வேக விடலாம். வெயிட்டைப் போட்டு 2 சத்தம் விட்டால் போதும்.

🪷🪷🪷

Saturday, August 12, 2023

சாஃப்ட் சப்பாத்தி

 *சாஃப்ட் சப்பாத்தி வேணுமா ? ஃபாலோ பண்ணுங்க இந்த பன்ச் ( பாஞ்ச் )  ரகசியத்தை* 👇

உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி மிகவும் கடினமாக இருப்பதற்கு நீங்கள் சப்பாத்தி செய்யும் போது செய்யும் சில தவறுகள்தான் காரணம். 

மென்மையான சப்பாத்தி செய்வதற்கு தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன என்று சொல்கிறேன்👇

 *சரியான மாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?* 👇

சப்பாத்தி பொதுவாக கோதுமை மாவு கொண்டு தயாரிக் கப்படுகிறது. 

ஆனால் அனைத்து கோதுமை மாவும் ஒரே மாதிரி யானதாக இருக்காது. 

கோதுமை மாவின் தரம் அதன் பிராண்டுகளை பொறுத்து மாறு படும். 

எனவே சப்பாத்தி செய்வதற்கு தரமான கோதுமை மாவை வாங்க வேண்டும்.

குளிர்ந்த நீர்

நீங்கள் குளிர்ந்த நீரைப் பயன் படுத்தினால், உங்கள் சப்பாத்தி கடினமாக இருக்கும். 

மிருதுவான சப்பாத்தி வேண்டு மென்றால், எப்போதும் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன் படுத்துங்கள்.

 *மாவு பிசைதல்* 👇

சப்பாத்தி தயாரிப்பதில் மாவு பிசைவது மிகவும் முக்கியமான நிலையாகும். 

மாவை கெட்டியாக பிசைந்தால் சப்பாத்தி தடிமனாக இருக்கும். மென்மையான சப்பாத்தி வேண்டு மெனில் மாவை மென்மையான பிசையவும். 

குறிப்பாக மாவு மிகவும் ஈரமாக இருக்கக்கூடாது.

 *உடனடியாக செய்யக்கூடாது* 

சப்பாத்தி செய்யும் போது பெரும் பாலான மக்கள் செய்யும் தவறு மாவு பிசைந்தவுடனேயே அதனை சமைப்பது தான். அவ்வாறு செய்தால் சப்பாத்தி மிகவும் தடிமனாக வரும். 

சப்பாத்தி சுடுவதற்கு முன் குறைந்தது 20 நிமிடங்களுக்கு மாவை மூடி வைக்கவும்

எண்ணெய் சேர்க்காமல் இருப்பது

நீங்கள் மென்மையான சப்பாத்திகளை விரும்பினால், மாவு பிசையும் போது சப்பாத்தியில் சமையல் எண்ணெய் சேர்க்க மறந்து விடாதீர்கள். 

மாவை மென்மை யாக்க பிசையும் போது சிறிது எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். மேலும், சிறிது பால் அல்லது கிரீம் சேர்த்து மாவு பிசைவது சப்பாத்தியை மேலும் மென்மையாக்கும்.

சமமாக உருட்ட வேண்டும்

இதுவும் பெரும் பாலான மக்கள் செய்யும் ஒரு தவறாகும். 

நீங்கள் சப்பாத்தியை சமமாக உருட்ட வில்லை என்றால், சில பகுதிகள் மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும். உங்கள் மாவு மிகவும் ஈரமாக இருந்தால், உருட்டும் போது அதிக மாவு சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், 

இதனால் உங்கள் சப்பாத்திகள் கடினமானதாக மாறலாம். கூடுதலாக சப்பாத்தியை உருட்டும்போது கொஞ்சம் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

நெருப்பின் அளவு

உங்கள் தோசைக் கல் மிகவும் சூடாக இருந்தால், உங்கள் சப்பாத்தி நன்றாக வேகும் முன்னரே கருகிவிடும். 

மேலும், நெருப்பு போதுமான அளவு சூடாக இல்லா விட்டால், உங்கள் சப்பாத்திகள் அதிக நேரம் சூடாக இருக்கும், இதனால் சப்பாத்தி கடின மானதாக மாறும்.

Monday, July 17, 2023

ஒத்தமாட்டு வண்டியும் ஒசரமான அய்யாவும்

 ஒத்தமாட்டு வண்டியும் ஒசரமான அய்யாவும்

( சிறுகதை)

அந்த அய்யாவுக்கு வலது கைன்னா அது அந்த ஒத்தமாட்டுவண்டிதான். அவரோட வயித்துப் பொழைப்புக்கான தொழில் மண்பாண்டம் செய்யிறது. அதுக்குத்தேவையான மணல் களிமண் வண்டல் எல்லாம் பக்கத்துல இருக்குற வைகை ஆத்துல இருந்து எடுத்துவரவும் அப்புறம் அதைச் சட்டி பானை குழுதானி தொட்டின்னு செஞ்சு கொண்டு போய் நாயத்துக்கெழமச் சந்தைஅப்புறம் செடிகள் வைக்கத் தொட்டிகேக்குறவுகளுக்கு டிராவல் பங்களா  ஓட்டல் மாதிரி எடங்களுக்குக் கொண்டுபோறதுக்கு அதுதான் ஒதவனும்,

என்னாதான் அந்த வண்டில பூட்டுற மாடு களனித்தண்ணி குடிச்சாலும் சரக்கு ஏத்திட்டுப் போனா பஸ்டாண்டு பக்கத்துல இருக்குற சீனி டீக்கடையில இவர் சாயாக்குடிக்கும்போது அதுக்கும் ரெண்டு வாழப்பழம் வாங்கித்தரணும்

ஆத்துக்கு மண் எடுக்கப்போனா அங்க இருக்குற விருமாண்டி டீக்கடையில் இதே சம்பவம் தொடரும். இல்லைன்னா மாடு அந்த எடத்தைவிட்டு இஞ்ச் நகராது. வாழப்பழத்தை வாங்கிக் கொடுத்து திண்ணுட்டுத்தான் நகரும் பெருசா அதை ஓட்டவேண்டியதில்ல மேற்காலபோனா ஆத்துக்கு மண் எடுக்கன்னு தெரியும் நேரா அங்கபோய் நின்னுடும்

கிழக்கால போனா சந்தைக்கி அங்கபோய் நின்னுடும் என்னா ரயில்வே பாலம் மில்கேட்டுக்குப் பக்கத்துல இருக்கு அதுல கீழ எறங்கி வண்டி மேல ஏறனும் அப்ப அவரும் சேந்து வண்டிய இழுப்பாரு

இதுதவிற அவரோட பிள்ளைகளுக்குக் கலியாணம் பண்ணுனப்ப சாமான் சட்டெல்லாம் ஏத்திட்டுப்போனது இந்த ஒத்த மாட்டு வண்டிதான். வண்டி அவரோட தம்பி வைச்சிருந்தாலும் அவர் ஓட்ட மாட்டார் எல்லாம் இவருதான்.  அவரோட மகளுகல பக்க்த்து ஊருகலான சாமனத்தம் அப்புறம் மேலக்கால்ல தான் கட்டிக் குடுத்துருந்தாரு அதுரெண்டும்தான் இந்த வண்டிக்கான எல்லை

சித்திரத்திருவிழா அப்ப எல்லாம் வண்டில தான் கோரிப்பாளையம் மடத்துக்குப் போறது வண்டில சின்னஞ்சிறு பிள்ளைக அப்புறம் வயசான கிழவிக எல்லாம் வைக்கோலை அதில் போட்டு ஏறி ஒக்காந்துக்கிருங்கள் இவரு நடந்தே வண்டிகூடப்போவாரு. திருவிழாவில நெறையா வாழப்பழம் சூரை போடுவாங்க அதெல்லாம் அந்த மாட்டுக்குத்தான்.

மேற்கால மேலக்கால் கிழக்கால சாமணத்தம்  இதைத்தாண்டி வண்டி போகாது. இப்புடித்தான் அவரோட கடைசி மகனுக்குக்கு தன்னோட மகவழிப்பேத்தியக் கல்யாணம் செய்ய பேசி முடிச்சிருந்தாரு. இது எல்லாருக்கும் தெரியும் ஆனா சின்னப்புள்ளைகளுக்குத் தெரியாதில்ல பேரப்புள்ளைக கிழவிக எல்லாத்தையும் ஒருநா க் காலையில 4 மணிக்கு வண்டி கட்டி ஏத்துனாரு அப்பவே சொல்லிட்டாரு திரும்பி வர ராத்திரி ஆனாலும் ஆயிறும்னு

அதுனால பிள்ளைக எல்லாம் ஒரே குசி ரொம்பதூரம் வண்டில போகப்போறம்னு ஏறுச்சுக. ஆனா வண்டி கீழவாசல் தாண்டி சாமநத்தம் ரோட்டில திரும்புனவன்ன சந்தேகம் வந்திச்சி  அப்ப ஒருத்தர் சொன்னாரு ”வண்டி ஒருவேளை ராமேஸ்வரம் போகுதோ”னு அப்ப அய்யா சொன்னாரு “ இது ஊர் எல்லையத்தாண்டவே விடிஞ்சிரும் இதுல ராமேஸ்வரமாவது போறதாவது எல்லாம் நம்ம கடைசிப்பய கலியாணம்தான் அதுவும் சாமநத்தம் தான் நு சொன்ன வன்ன எல்லாருக்கும் சப்புன்னு ஆயிப்போச்சு

அன்னிக்கி அங்கபோய் கலியாணம் முடிச்சி சீர் செனத்தியோட வண்டி திரும்ப வந்துச்சு.

அந்தக்காலத்துல வண்டிமாடு வைச்சிருகுறது இப்ப கார் வைச்சிருக்குற மாதிரி ஒரு கெளரவம்.

அந்த மாட்டுக்கு லாடம் அடிக்கிறப்ப மாத்திரம் அதைப்பாக்க சகிக்காது. அப்ப அய்யா பக்கத்துல இருந்து மொகத்தைத் தடவிக்கொடுப்பாரு “ கொஞ்சம்தான் இதோ முடிஞ்சிரும்  அவ்வளவுதான்”ன்னு ஆறுதல் சொல்லுவாரு

அதேமாதிரி வண்டிக்கு மசகு செய்ய வைக்கோலைப்போட்டு கருக்கி அதுல வெளக்கெண்ணையக் கலந்து மசகு செஞ்சி சக்கரத்துல அச்சுல தடவுவாறு மாட்டுக்குக் கஸ்டம் குடுக்கக்கூடாதுன்றதுக்காக

ராத்திரிகள்ல பயணம் போனா வண்டில லாந்தர் லைட்டு கட்டிட்டுப்போகனும் இல்லைன்னா போலீஸ்காரன் வழிமறிப்பாங்க அதுக்குன்னே சந்தையில மண்ணெண்ணை விளைக்கு வாங்கி கட்டிவைச்சிருந்தாரு

மாட்டுப்பொங்கலுக்கு மாட்டுக்கு கொம்புக்கும் வண்டிக்கும் கலர் எல்லாம் அடிச்சி அழகு பாப்பாரு. அன்னிக்கி மாட்டுக்கே கொண்டாட்டமாத்தான் இருக்கும்  கழுத்தில சலங்கையெல்லாம் கட்டி மாலை போட்டு ஜல் ஜல் நு ஓடும் அப்பெயெல்லாம் வண்டிக்கு பேட்ஜ் வாங்கி அடிக்கனும்  இன்னாரு வண்டின்றதுக்கு அதுதான் அடையாளம். வண்டிக்கு நம்பர் ரெஜிஸ்ட்ரேசன்லாம் கெடையாதுல்ல

ஒருதடவ வண்டில லாரி ஒன்னு மோதிடுச்சு வண்டிச் சக்கரம் முறிஞ்சிபோச்சு கொண்டுபோன மண்பாண்டங்கள் எல்லாம் ஒடைஞ்சி போச்சு. அந்த லாரிக்காரன் நிக்காமப்போயிட்டான். என்னா பண்ணுறதுன்னு தெரியல ஆனா மாட்டுக்கு ஒன்னும் ஆகல. அப்ப அவர் போய் போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளெயிண்ட் குடுக்கச் சொன்னாங்க ஆனா எழுதப்படிக்கதெரியாத அவருக்குப் போலீஸ் ஸ்டேசன்னா ஒரே பயம் அதுனால போகல. அவரோட மகன் அவரைக் கூப்புட்டுப்போய் புகார் குடுத்தாரு. அப்ப போலீஸ்ல கேட்டாங்க ”லாரி இடிச்சிருச்சுன்னு சொல்றீங்களே அந்த லாரிக்கு அடையாளம் எதுனாச்சும் சொல்லமுடியுமான்னு ” கேட்டாங்க

இவரு யோசிச்சிப்பாத்ததுல ஒன்னும் தெரியல  லாரிக்கு மஞ்சள் கலர் அடிச்சிருந்தது ஞாவகம் வந்துச்சு. ரொம்ப யோசிச்சிப்பாத்ததுல லாரி பின்னாடி ஒரு கட்சிக்கொடியும் அதன் தலைவர் படமும் இருந்தது நெனப்புக்கு வர அதை அவங்க கிட்டச்சொன்னாரு. சரி பாக்கலாம்னு சொல்லிட்டாங்க

ஆனா கொஞ்சநாள் கழிச்சி அதே லாரி வண்டிக்கு எதுத்தாப்புல வர மாடு மிரண்டு படுத்துருச்சு. லாரி வெலகிப்போகமுடியல இவர் லாரிக்குப்பின்னாடி போய் பாத்தா அதே அடையாளம் இருந்துச்சு. ஒடனே சத்தம் போட்டு கூட்டத்தைக்கூட்டிட்டாரு.  அப்புறமா போலீஸ்காரங்க வந்து பேச்சுவாரத்தை நடத்தி அவருக்குப் பணம் வாங்கிக்கொடுத்தாங்க அந்த அளவுக்கு மாடும் வண்டியும் அவரோட ஒட்டுதலோட இருந்துச்சு

கொஞ்ச வருசங்கள்ல வாங்கிவைச்சி ஓட்டுன மாட்டுக்கு வயசாயிருச்சு அதால வண்டி இழுக்க முடியல ஒருநாள் காலையில மாட்டுத்தொட்டில  செத்து விழுந்து கெடந்துச்சு. அதுக்கு மாலை யெல்லாம் போட்டு அதக்கொண்டு போய் ஆத்தோரத்துல அடக்கம் பண்ணி பாலெல்லாம் ஊத்துனாரு அய்யா. அன்னிக்கிப் பூராம் சாப்பிடல அவரு

அதுக்கப்புறம் ஒரு மாட்ட வாங்கி வண்டில பூட்டினாரு. ஆனா அது அடங்காத மாடு சண்டித்தனம் பண்ணும் ஒழுங்கா வண்டிய இழுக்காது திடீருண்ணு படுத்துரும் அப்ப வண்டில இருந்த மண்பாண்டங்கள் எல்லாம் ஒடைஞ்சி போயிருச்சு.  அந்த மாட்ட வித்துட்டு வேற மாடு வாங்கினாலும் சரிவரல மொதல்ல இருந்த அந்த மாடு மாதிரி திரும்ப அவருக்கு அமையவே இல்ல.  அவருக்கும் முடியாமப் போச்சு.

அந்த அய்யாவுக்கு அப்புறம் வண்டிமாடும் இல்லை. சைக்கிள் அப்புறமா சின்ன சின்ன லாரி எல்லாம் வந்தாச்சு. ரோடும் வண்டிமாட்டுக்கு ஒத்துவரல

இப்ப சமீபத்துல பைக்குல அவரோட பேரன் போனப்பத்தான் பாத்தான் எண்ணி அரைமணி இல்ல முக்காமணி நேரத்துல சாமணத்தம் போயாச்சு. அந்த தூரத்தத் தான் அப்ப மூணுமணிநேரத்துல போயிருக்கோம்னு நெனைக்கும்போது சிரிப்பு வந்துச்சு

ஆனா பைக்குல போகும்போது பேசமுடியல வண்டில கதைபேசிக்கிட்டு கேலியும் கிண்டலுமா போன பயணங்கள் தந்த சந்தோசத்தை இப்ப பைக்கும் காரும் தர முடியல.

அதை நெனைக்கும்போது வருத்தமாத்தேன் இருக்கு. என்னா பண்ண காலம் வேகமா எல்லாத்தையும் மாத்துது மனுசங்களையும் தான்

அ.முத்துவிஜயன்