Thursday, April 4, 2019

பெரியவா சரணம்

பெரியவா சரணம்

ஜே. டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர் பெரியவா தரிசனத்திற்காக வந்தார்.

பெரியவா தரிசனமும் கிடைத்தது."பெரியவா சிரிக்கும் போது, குழந்தை கிறிஸ்து சிரிப்பது போலிருக்கிறது! மானுடத்தை விஞ்சிய ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது......." என எண்ணிக் கொண்டார்.

பிறகு, பெரியவாவிடம் ஒரு கேள்வி கேட்டார், "சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில், எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய காலகட்டத்தில் அழுத்தமாக விளக்கிக் கூறி, மக்கள் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?"

பெரியவா நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். திடீரென்று பதில் வெளிப்பட்டது.

"பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப் பத்து சதவீத மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும் சத்தியமும்,நேர்மையும் இருந்தன.

"கடன் கொடுத்தல், பண்டமாற்று முதலியன கூட, சொற்களின் அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால், பாவம் வந்து சேரும். நமது சந்ததியினர் துன்பப் படுவார்கள் என்ற பயம் இருந்தது. "

" இப்போது, அதெல்லாம் பேச்சு, வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள். அந்த உரிமையைக் கொடுக்கும் முன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான் என்று எண்ணிப் பார்க்க வில்லை. கல்வி அறிவில்லாத, ஏழையான ஒருவனுக்கு இவ்வளவு முக்கியமான உரிமை கிடைத்தால் என்ன செய்வான்?....... என்ன செய்வானோ அதுவே நடந்தது! வாக்குரிமை விலை பேசப்பட்டது. இது, முதலாவது வீழ்ச்சி. . "

மேலும் தொடர்ந்தார் ,

அடுத்து, புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட பொது நல விரோதச் செயல்கள் . போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்..... அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலைவரை போய் விடுகிறது.வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது.'எது வாழ்க்கைக்குத் தேவை? எது சுகபோகம்? " என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும் அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத் தன்மை வந்து விடுகிறது.

" எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால்,சுக போகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள், நேர்மையைக் கைவிடுகிறார்கள்! "

" வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே இரண்டு முக்கியத் தேவைகள்........ .. "

அரைமணி நேரம் வெள்ளம் போல கொட்டித் தீர்த்து விட்டார் பெரியவா.

ஐரோப்பியர்,, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திக்குமுக்காடினார்.

ஐரோப்பியரின் கேள்வி, இன்றைக்கும் பொருந்தக் கூடியது தான்...

பெரியவா பதில், என்றைக்கும் பொருத்தமானது தான்!.....