Tuesday, April 9, 2019

""பண மூட்டை பத்திரமாக இருக்கா?""

கடவுளின் குரல்" - தொகுப்பு: ஆர்.என்.ஆர்.
10 /04 /2019  குமுதம் இதழிலிருந்து...

""பண மூட்டை பத்திரமாக இருக்கா?""

கிருஷ்ணா நதிக்கரையில் மகாபெரியவா முகாமிட்டிருந்த காலம் அது.  அந்த நதியில் தொடர்ந்து ஒரு மண்டலம் ஸ்நானம் செய்யத் தீர்மானித்தார், மகாபெரியவர்.

அதன்படி, தினமும் அதிகாலையிலேயே புனித நீராடப் புறப்பட்டுவிடுவார், புண்ணியன்.  அவரோடு வேத விற்பன்னரான சாஸ்திரி ஒருவரும் கூடவே செல்வார்.

மகான் புனித நீராடிவிட்டுக் கரை ஏறும் சமயத்தில் சில பக்தர்கள், அவரது திருவடியில் காசு, பணத்தைக் கொட்டிவிட்டு கும்பிட முயற்சித்தபோது, சட்டென்று அவர்களைத் தடுத்த சாஸ்திரிகள், ஒரு பெரிய மூங்கில்தட்டை எடுத்து நீட்டி, காசை அதில் போட்டுவிட்டு, பெரியவாளை தள்ளியிருந்து கும்பிடச் சொன்னார்.

நாற்பத்து எட்டாவது நாள்.  வழக்கம்போல நீராடிவிட்டுக் கரை ஏறிய மகான், சாஸ்திரிகளைப் பார்த்தார். "இன்றோடு மண்டல ஸ்நானம் முடிவடைகிறதே...இத்தனை நாட்களாக வசூல் செய்தாயே அந்தப் பண மூட்டை பத்திரமாக இருக்கா?" என்று கேட்டார்.

அப்படியே நடுங்கிப் போனார், சாஸ்திரிகள்.  "பெரியவா...நான் யார்கிட்டேயும் பணம் வசூலெல்லாம் பண்ணலை...அவா கொண்டுவந்து உங்க முன்னால கொட்டினத்தை அப்படியே தட்டுல வாங்கினேன்..அவ்வளவுதான்.  அதை ஸ்ரீமடத்துல ஒப்படைக்கத்தான் கணக்குப் போட்டு மூட்டையா கட்டி பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன்...!" தழுதழுப்பாகச் சொன்னார்.

"பதட்டப்படாதே...உனக்காக வசூல் பண்ணிண்டேங்கற அர்த்தத்துல நானும் சொல்லலை.  ஆனா, அந்தப் பணத்தை நீ மடத்துக்குத் தரவேண்டாம்!" சொன்னார், மகாபெரியவர். 

"அப்படின்னா, யாருக்காவது தானமா குடுத்துடட்டுமா?" கேட்டார், சாஸ்திரி.

"வேண்டாம்..அதைக் குடுத்தவங்க, பாவம் தொலையுதுன்னு நினைச்சுத்தானே கொடுத்திருக்காங்க...பணத்தை தானமா தந்துடலாம்.  அந்தப் பாவத்தை என்ன பண்ணுவே?" மகாபெரியவா கேட்க, குழம்பித் தவித்தார் சாஸ்திரிகள்.

"பெரியவா..நான் இப்படி தர்மசங்கடத்துல மாட்டிக்கிட்டேனே..என்னை முதல் நாளே நீங்க தடுத்திருக்கலாமே... எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியலையே...தழுதழுத்தார் சாஸ்திரிகள்.

"சரி, சரி..பயப்படாதே...போ..போய், யாகம், ஹோமம் எல்லாம் செய்யற கனபாடிகள் யாரிடமாவது மொத்தப் பணத்தையும் கொடு.  இந்தக் காசுல ஹோம திரவியங்கள் (யாகப் பொருட்கள்) வாங்கிப் பயன்படுத்தச் சொல்.  அக்னியில் சேர்ற எதுவும் பாவக் கணக்குல வராது.  அதனால உனக்கும் பாவம் இல்லை.  பணத்தை கொட்டினவர்களோட பாவமும் போயிடும்!"

மகாபெரியவா சொல்ல, அப்படியே செய்து முடித்தார், சாஸ்திரிகள்.  அதன் பிறகு வந்து வணங்கியவரை கை உயர்த்தி ஆசிர்வதித்தார், மகான்.

"உன்னை ஆரம்பத்துலேயே தடுத்திருக்கலாம்.  ஆனா,  நீ என் உத்தரவைக்  கேட்டுண்டா மூங்கில் தட்டுல கலெக்ஷன் பண்ணினே...இல்லையே..! அதான், நான் எதுவுமே சொல்லலை...! ஆனா, இன்னிக்கு நீ கிருஷ்ணாவுல நீராடற சமயத்துல "ஆசார்யாளோட நீராடினதால நம்ம பாவங்களும் கரைஞ்சிருக்கும்னு மனசுக்குள்ளே நினைச்சே பாரு...அந்த நம்பிக்கை வீண் போயிடக் கூடாதுன்னுதான் இந்த ஏற்பாட்டைச் சொன்னேன்!" அருள் ததும்பச் சொன்னார், ஆச்சார்யா.  மனதாரத் தன்னை நம்பியவர்களை ஒருபோதும் அந்த மகான் கைவிட்டதில்லை என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏

விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்"

விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்"

(ஒரு நாய் கல்லடியிலிருந்து தப்பிக்க பெரியவா செய்த உபாயம்)

தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு நதியில் நீராடிவிட்டு அதன் கரையில் அமர்ந்து கொண்டு,ஜபம் - தியானம் செய்து கொண்டிருந்தார்கள் பெரியவாள். தண்டம் அருகிலேயே ஒரு பீடத்தின் மீது    வைக்கப்பட்டிருந்தது.

ஆள் அரவம் இல்லாத இடம்.

தொண்டர்கள் கவனம் திசை திரும்பியிருந்தபோது ஒரு நாய் வந்து தண்டத்தை முகர்ந்து பார்த்து விட்டு அப்பால் போய்விட்டது.

சிஷ்யர்கள் பதறிப் போய் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்தார்கள் நாயை அடிப்பதற்காக.

பெரியவா,'வேண்டாம்' என்று சைகை காட்டினார்கள். "இது நம்ம அஜாக்கிரதையால் ஏற்பட்டது/ நாய் என்ன தப்பு பண்ணினது?
முகர்ந்து பார்ப்பது அதன் ஸ்வபாவம், நானே இந்த தண்டத்தை மாற்ற வேண்டுமென்றிருந்தேன் விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்"

(ஆதி சங்கரருக்கு காசியில் நான்கு வேதங்களையும் நான்கு நாய் வடிவங்களாகச் செய்து,அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டு விசுவநாதரே சண்டாள உருவத்தில் வந்து தரிசனம் கொடுத்ததைத் தான் மகாப் பெரியவாள் இப்படிக் குறிப்பிட்டார்கள்,)

வேறு தண்டம் மாற்றியாகி விட்டது.

"இதில் என்ன அதிசயம்?"என்று நமக்குத் தோன்றும் இந்த நிகழ்ச்சியில் ஒரு புதுமை இருக்கிறது.

பொதுவாக,உபயோகத்திலுள்ள தண்டம் முறிந்து போனால் தான் வேறு தண்டம் மாற்றிக் கொள்வது என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம்.

ஆனால் இப்போது, தண்டம் முறிந்து போய் விடவில்லையே? ஆற்று நீரில் அமுக்கி புனிதப் படுத்தியிருக்கலாமே?.

பெரியவா, 'உடனேயே தண்டத்தை மாற்ற வேண்டும்' என்று ஏன் திருவுள்ளம் கொண்டார்கள்?.

சில நாட்களுக்குப் பிறகு பெரியவாளே அந்த ரகசியத்தை பேச்சு வாக்கில் சிஷ்யர்களிடம் கூறினார்கள்.

"அன்னிக்கு அந்த நாய் எவ்வளவு விரட்டியும் ஓடிப் போகாமல், அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.தண்டத்தை மாற்றுகிற சாக்கில் நான் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். நான் உடனே எழுந்து போயிருந்தால் நீங்கள் எல்லோரும் அதை
ஹிம்ஸை செய்திருப்பீர்கள். பாவம் அது எதற்காககல்லடி படணும்! அதனாலே தான் உங்களை யெல்லாம் கட்டுப்பாட்டிலே வைக்கிறதுக்காக அங்கேயே உட்கார்ந்துட்டேன்!...."

அந்த ஜீவனுக்கு அந்த நாய்ப் பிறவி தான் கடைசி ஜென்மமாக இருந்திருக்க வேண்டும்.

பெரியவாளின் பரிபூரண கடாட்சம் ஏற்பட்டபின் 'புனரபி ஜனனம்' கிடையாது

உங்கள் தாயை நினைத்து..♥♥♥♪♥♥♥

காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது

அப்போது  அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...  

சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..♥♥♥♪♥♥♥

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம் 

பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.  

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 

ஜீவதோர்  வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்  
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

 “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே. 

4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 

5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\

8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 
.
10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'

12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 

14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 

15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 

16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

 மஹா பூதாந்தரங்கஸ்தோ
மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ
தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

Got the above from one of my friends FB . Wanted to share.

உறவுகளுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

உறவுகளுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

அப்பா - பிதா பிது:
அம்மா - மாதா - மாது:
அண்ணா - ஜேஷ்ட ப்ராதா
மன்னி - ஜேஷ்ட ப்ராத்ரு பத்நி
தம்பி - கனிஷ்ட ப்ராதா
தம்பி மனைவி - கனிஷ்ட ப்ராத்ரு பத்நி
அக்கா - ஜேஷ்ட பஹிநி
அக்கா கணவர் - ஜேஷ்ட பஹிநியா: பதி:
தங்கை - கனிஷ்ட பஹிநி
தங்கை கணவர் - கனிஷ்ட பஹிநியா: பதி:
பிள்ளை - புத்ர:, குமார:, சுத:
பெண் - துஹிதா, குமாரியா:, புத்ரி
முதல் ஆண் குழந்தை - ஸீமந்த புத்ரன் 
முதல் பெண் குழந்தை - ஸீமந்த புத்ரி
முதல் பையன் - ஜேஷ்ட குமாரன்
இரண்டாவது - த்விதீய குமாரன்
மூன்றாவது - த்ருதீய குமாரன்
கடைசி / சின்னவன் - கனிஷ்ட குமாரன்
மாப்பிள்ளை - ஜாமாது:
மாட்டுப்பெண் - ஸ்நுஷாயா:
மாமியார் - ஶ;வஶ;ரூ
மாமனார் - ஶ;வஶுர:
பிள்ளை வயிற்றுப் பேரன் - பௌத்திரன்
பிள்ளை வழி பேத்தி - பௌத்திரி
பெண் வயிற்றுப் பேரன் - தௌஹித்திரள்
பெண் வியிற்றுப் பேத்தி - தௌஹித்ரி.
பீமலாபுரம் ந.சீதாராமன்,
வீரப்பெருமாநல்லூர்.

வாரணாசியில் இட்லி சாம்பார்!

வாரணாசியில் இட்லி சாம்பார்!

வாரணாசியில் இட்லி சாம்பார்!

ஒரு பழைய திரைப்படத்தில் எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்:

“அவனவன் நீராவியில கப்பல் விடுறான், ரயில் விடுறான். நீங்க இட்லி, புட்டு விடுறீங்களாடா? விடுங்கடா!!!!!!”

யார்தான் என்னதான் கலாய்த்தாலும் இட்லி சாம்பாருக்கு இணை ஏதும் கிடையாது. சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்கள். அதன் அருமை தெரியும்.

தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இந்த இட்லி & சாம்பார்!

யாருக்குக் கொடுப்பது என்பது தெரியாததால் அதற்கு இன்றுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை!

எங்கே சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் கெடுதி செய்யாத உணவு இந்த இட்லி சாம்பார்! வயிற்றிற்கு ஆதரவான உணவு. வயது முதிந்தோர்க்கும், நோயில் படுத்திருப்போர்க்கும் அதன் அருமை சற்றுக் கூடுதலாகத் தெரியும்!

சரி, வாரணாசியில் இட்லி சாம்பாருக்கு என்ன செய்வது?

அதைச் சொல்லத்தான் இன்றையப் பதிவு. தொடர்ந்து படியுங்கள்
--------------------------------------------------------------------------------------------------
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P) 
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. 

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள் வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். 

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater  உண்டு 
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு   கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2. 
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணி வரைஇட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரணசியில் மட்டும்தான் இந்த வசதி உள்ளதா?

இல்லை. அலகாபாத், அயோத்தியா, கயா, நாசிக் ஆகிய 4 ஸ்தலங்களிலும் இந்த வசதி உள்ளது.

அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம்

அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.

மிகக்குறைந்த கட்டணத்தில் இங்கே தங்கிக் கொள்ளலாம் மூன்று வேளையும் தமிழ்நாட்டு உணவு சாப்பிடலாம் 

இதற்கு ஒரே ஒரு தகுதிதான் இருக்கவேண்டும் அந்தத் தகுதி தமிழர்களாக இருக்கவேண்டும் என்பதுதான்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக் கோட்டை செட்டியார் என்றழைக்கப்படும் வணிக சமூகத்தினர் ஆன்மீகத்திற்கு செய்துவரும் பணி மகத்தானதாகும்.

அப்படிப்பட்ட பணிகளில் ஒன்றாக வட மாநிலங்களுக்கு யாத்திரை செல்லும் தமிழர்கள் மொழி தெரியாத தேசத்தில் உணவிற்கும் தங்குவதற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல சத்திரங்களை கட்டிவைத்துள்ளனர்.

காசி,அலகபாத்,அயோத்தி,கயா ஆகிய இடங்களில் கட்டி வைத்துள்ள சத்திரங்கள் அதில் முக்கியமானவை.காசியி்ல் உள்ள சத்திரத்தில் இடம் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இருந்து பெரும்பாலோர் அங்கு செல்கின்றனர் காரணம் அந்த அளவிற்கு அங்கு சேவை வழங்கப்படுகிறது.

அலகபாத் சத்திரத்திலும் அப்படியே அங்கு கும்பமேளா நடந்த சமயத்தில் தமிழர்கள் பலர் சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் சிரமமில்லாமல் இருந்தனர் என்றால் அதற்கு இந்த சத்திரம்தான் காரணம்.

தலைமைச் சங்கத்தில் இருந்து நியமிக்கப்பட்ட நாகப்பன்-சாரதா ஆகிய வயதான தம்பதியினர்தான் இந்த சத்திரத்தின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்.

எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர்கள் இங்கு வந்து பல வருடங்களாகிவிட்டபடியால் இந்தியும் நன்கு பேசுகின்றனர்.இதன் காரணமாக உள்ளூர் மக்களையும் வாகன ஒட்டிகளையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இது இங்கு செல்லக்கூடிய தமிழர்கள் திரிவேணி சங்கமத்தில் குளிக்க, பூஜை செய்ய, உள்ளுரை சுற்றிப்பார்க்க சரியாக ஆட்களை கொடுத்து வழிகாட்டுகின்றனர்.

இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து சப்பாத்தி சாப்பிட்டு நொந்து வந்தவர்கள் இ்ங்கு சுடச்சுட சாதம் சாம்பார் ரசம் காய்கறி இட்லி வடை கிடைத்ததும் ஒரு கட்டு கட்டுகிறார்கள்,தங்கியிருக்கும் நாட்களில் சாப்பாடு போடுவது மட்டுமின்றி ஊர் திரும்பும் போது ரயில் பயணத்தில் தேவைப்படக்கூடிய சாப்பாட்டையும் பார்சலாக கொடுக்கின்றனர்.

அலகபாத் ரயில் நிலையத்தில் இறங்கி ‛நாட்கோட் சத்தர்' என்றால் போதும் ஆட்டோக்காரர்கள் கொண்டுபோய் இறக்கிவிடுவர் அவ்வளவுதுாரத்திற்கு சத்திரம் பிரபலம்.

இந்த விடுமுறைக்கு அலகபாத் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சத்திரத்தி்ல் தங்கி செல்வது உங்கள் பர்ஸ்க்கும் உடம்புக்கு நல்லது.அலகபாத் நாட்டுக்கோட்டை நகர சத்திரத்திற்கான போன் எண்: 0532-2501275. வயதானவர் என்பதால் மெதுவாகத்தான் பேசுவார், போனை எடுக்காவிட்டால் வந்தவர்களுக்கு உதவ வெளியில் போயிருக்கிறார் என்று அர்த்தம்.

மொந்தன் வாழைக்காயிருக்கபயமேன்!!!????

எத்தனை அடைப்பு இருநந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்கபயமேன்!!!????

ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.நானும் உங்களைப்போல் இதய நோயாளிதான். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் யோகேஸ்வர் காய்றி வைத்யசாலை வைத்தியர் DrB.R.ARUNKUMAR ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்கிறேன் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில் 

வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக்காயின்  மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின் நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913 மிகி பொட்டாசியம் அதீதத மென்பதால் கெட்ட கொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6, B12 உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.

மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது. தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும்வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.

Kidney Failure : கத்திரிக்காய்
Paralysis : கொத்தவரங்காய்
Insomnia : புடலங்காய்
Hernia : அரசாணிக்காய்
Cholesterol : கோவைக்காய்
Asthma : முருங்கைக்காய் 
Diabetes : பீர்கங்காய்
Arthritis : தேங்காய்
Thyroid : எலுமிச்சை
High BP : வெண்டைக்காய்
Heart Failure : வாழைக்காய்
Cancer : வெண்பூசணிக்காய்

உணவு பழக்கம் பழமொழி வடிவில்🎀

💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
💎சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்
💎வாழை வாழ வைக்கும்
💎அவசர சோறு ஆபத்து
💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை
💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
💎சித்தம் தெளிய வில்வம்
💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு
💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
💎வாத நோய் தடுக்க அரைக் கீரை
💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
💎பருமன் குறைய முட்டைக்கோஸ்
💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

*🎀நலம் உடன் வாழ்வோம்...*VEGETABLECLINIC.COM

ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம்

ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!

உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும். அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய வேண்டும். ரயிலில் போனால் அங்கிருந்து திருமலைக்குப் பஸ் பிடித்துப் போகவேண்டும் என மலைக்க வைக்கும் பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்க சரி அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என தள்ளிப்போடும் சம்பவமும் நடக்கும்.

இதற்கெல்லாம் சிம்பிளாக ஒரு தீர்வைத் தருகிறது இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) 12 பேர் சேர்ந்தாகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம்.

சிம்பிள்..IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம் என்று சொன்னவுடன் அடுத்தது புக்கிங் ஃபார்மாலிட்டிஸ் இருக்கும்.

ஒருவருக்கு 1550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். குளிர்சாதன வசதி கொண்ட ஒரு டெம்போ டிராவலர் உங்கள் 12 பேரையும் ஏற்றிக்கொண்டு உதாரணத்திற்கு சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால் ஆந்திர எல்லையில் சுமார் 7 மணிக்கு ஒரு சின்ன பிரேக். அதில் டீயோ, காஃபியோ குடித்துவிட்டு வேனில் ஏறி உட்கார்ந்தால் போதும் சரியாக 8.30 மணிக்கு கீழ் திருப்பதியில் ஒரு ஓட்டலில் காலை தரமான உணவு. இட்லி, குட்டி கல்தோசை, பொங்கல், வடை என ருசியான உணவு.
அதையடுத்து மலைக்கு அழைத்துச்செல்லும் IRCTC சுமார் 11 மணிக்கு எல்லாம் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பும். அளவான கூட்டமாக இருந்தால் 1 மணிக்கெல்லாம் தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாக கீழ்த் திருப்பதி வந்தபின் அதே ஓட்டலில் மதிய உணவு. 

முடி காணிக்கை செலுத்தவும் IRCTC பணியாளர்களே நேரடியாக அழைத்துச்சென்று காணிக்கை செலுத்த விரைந்து ஏற்பாடுகள் செய்கின்றனர். முடித்தவுடன் அடுத்ததாக அலர்மேலு மங்காபுரம். அங்கு தரிசனம் முடித்தவுடன் புறப்பட்டால் 7 அல்லது 7.30 மணிக்கு உங்களை சென்னையில் இறக்கி விட்டுவிடுவார்கள்.

காலை உணவு, மதிய உணவு, 300 ரூபாய் தரிசன கட்டணம் ஆகியவையும் 1550க்குள் அடங்கும்.மேலும், தரிசன கட்டணத்துக்கு உண்டான லட்டுக்களுக்காக நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை IRCTC பணியாளர்கள் அதை வாங்கி வைத்திருந்து தரிசனம் முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். . சரி தரிசனம் முடிய நேரம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே தேவையில்லை. தரிசனம் முடியும்வரை அந்த வேன் காத்திருந்து சென்னையில் இறக்கிவிடும்வரை IRCTC உங்களுடனே பயணிக்கிறது.

பாதுகாப்பான பயணம், சிக்கனம், டென்சன் இல்லாத ஒரு திருப்(ப)தி டிரிப் என அசத்துகிறது IRCTC.

இதுபற்றிய விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஐஆர்டிசியின் ரவீந்திரன் திருப்பதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த சுற்றுலாத்தலத்திற்கும் இதே போல சிறப்பு ஏற்பாடுகளை செய்து தர IRCTC காத்திருப்பதாகக் கூறினார்...!!

🌼 தகவலை படித்தேன். நல்ல பதிவு. பயன்பெற வாழ்த்துக்களுடன் பகிர்ந்துள்ளேன். நன்றி.

சகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்?

ஓம் நமோ நாராயணாயா நமஹ 🌺
 சகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்? 

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வத்தைத் திரும்பக் கூறினான். அது முடிந்ததும் இப்போது விஷ்ணு என்று மெல்லச் சொல்கையில் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி அவனுக்கு அசதியாக இருக்கும். மறுநாள் பார்க்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே நல்ல வேத வித்துக்களாக வளர்ந்தனர். இந்தப் பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம், புகழ், மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நல்ல வேத வித்துக்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எண்ணினார். அந்த பிராமணர் அதிர்ஷ்டவசமாக வசிஷ்ட முனிவரை சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூற வசிஷ்டர், உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் புரிந்தததினால்தான். மனதாலும், உடலாலும், ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாஸு தேவனை மட்டுமே இது குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் வேறு எதுவும் தேவையில்லை. பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம், புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது. வேத வியாசர் மேற்கூறிய கதையைத் தன் கொள்ளுத்தாத்தாவான வசிஷ்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதை மனதில் கொண்டே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார்.
   🌹சர்வம் விஷ்ணு மயம்🌹

Thursday, April 4, 2019

சாப்பிட்டவுடன் ஏன் தூங்கக்கூடாது?

சாப்பிட்டவுடன் ஏன் தூங்கக்கூடாது?

சாப்பிட்டவுடன் தூங்ககூடாது என நம் பெரியவர்கள் கண்டிப்பதை கேட்டுள்ளோம். இது அறிவியல் ரீதியில் உண்மைதான்.

சாப்பிட்டவுடன் உணவில் இருக்கும் கார்ப் 15வது நிமிடம் முதல் வயிற்றில் உடைபட்டு நம் இரத்தத்தில் க்ளுகோஸ் ஆக கலக்கதுவங்குகிறது. இதனால் ரத்தசர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். இன்சுலின் சுரந்து க்ளுகோஸ் டிரைகிளிசரைடு ஆக மாற்றபட்டு நம் வயிற்றில் கொழுப்பாக சேமிக்கபடும். இது எல்லாம் நடந்து முடிய 2 மணிநேரம் ஆகிவிடும்.

சாப்பிட்டவுடன் நீங்கள் எழுந்து நின்றாலே உங்கள் உடல் நீங்கள் உட்கார்ந்திருப்பதை விட இரு மடங்கு கலோரிகளை எரிக்க ஆரம்பித்துவிடும். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கையில் கூட நம் உடல் கலோரிகளை எரித்தபடிதான் இருக்கும். இதை ரெஸ்டிங் மெடபாலிசம் என்பார்கள். எழுந்து நின்றால் இரு மடங்கு அதிக கலோரிகள். மெதுவாக நடக்க ஆரம்பித்தால் 3 மடங்கு அதிக கலோரிகள் எரிக்கபடும்.

சாப்பிட்டவுடன் கடுமையான உடல்பயிற்சிகள் செய்யகூடாது. ஆனால் மெதுவான ஒரு வாக் போய் வரலாம். அதிக நேரம் வேண்டியதில்லை. அரைமணிநேரம் போனால் போதும். ஜாக்கிங் போல வேகமாக ஓடவேண்டாம். சிரமமான உடல்பயிற்சிகள் வேண்டாம். பார்க்கில் நாயை கூட்டிக்கொண்டு வாக் போவது போல ஜாலியான ஒரு ஸ்ட்ரோல் போதும்.

இதன் விளைவுகள் என்ன?

ரத்தத்தில் சேரும் க்ளுகோஸ் எனெர்ஜி தேவைகளுக்காக எரிக்கபட்டுவிடும். அது உங்கள் க்ளுகோஸ் அளவுகளை ஏற்றாது. டிரைகிள்சரைடு அளவுகளையும் ஏற்றாது. வயிற்றில் தொப்பை அளவுகள் இதனால் கூடாது.

க்ளுகோஸ் கொழுப்பாக மாறி நேராக இதயத்துக்கு சென்றபின்னர்தான் தொப்பையில் சேரும். அப்போது சில சமயம் எல்.டி.எல் இதயத்தில் தங்கிவிடும். அந்த ஆபத்தும் இதில் பெருமளவு குறைகிறது

சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்குபின் எடுக்கவேண்டிய இன்சுலின்/மாத்திரை அளவும் குறையும்.

ஆய்வு ஒன்றில் உணவுக்கு பின் நடப்பதால் டிரைகிளிசரிடு அளவுகள் என்ன ஆகிறது என ஆராய்ந்தார்கள்.

ஒரு குழுவுக்கு உணவுக்கு முன் 110 ஆக இருந்த டிரைகிளிசரைடு உணவுக்கு பின் 172 ஆனது. அவர்கள் உடல்பயிற்சி எதுவும் செய்யவில்லை.

உணவுக்கு பின் உடல்பயிற்சி செய்த குழுவுக்கு 110 ஆக இருந்த டிரைகிளிசரைடு 131 ஆக மட்டுமே அதிகரித்தது.

டிஸ்கிகள்: முன்னெச்சரிக்கைகள்

ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னும் 15 - 30 நிமிடம் மெதுநடை நடப்பது நல்லது

அதற்காக உணவுக்கு பின் மரதான் ஓடவேண்டாம். :-). கடுமையான பயிற்சிகளை செய்ய உணவுக்கு பின் 1 மணிநேரமாவது ஆகியிருப்பது அவசியம்

நடக்கமுடியவில்லை என்றால் எழுந்தாவது நில்லுங்கள். வீடு கூட்டி பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, அட்லீஸ்ட் குறைந்த பட்சம் சாப்பிட்ட தட்டையாவது கழுவி வைப்பது மாதிரியான வேலைகளை செய்தால் வீட்டில் நடக்கும் லட்சார்ச்சனை அளவுகள் குறைவதுடன் டிரைகிளிசரைடு, க்ளுகோஸ் அளவுகளு குறையும்.

டயபடிக்குகளும் இதை செய்யலாம். ஆனால் சர்க்கரை அளவுகள் 200- 300 எனும் அளவுக்கு அதிகரித்தால் இன்சுலின் போட்டுக்கொண்டு வெகு மிதமாக நடக்கவும்.

இரவு உணவுக்கு பின் மெதுநடை நடப்பதால் அடுத்த 24 மணிநேரத்துக்கு சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆனால் சில கடுமையான சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் க்ளுகோஸ் எரிந்து காலையில் ஹைப்போகிளைசெமியா ஆகிவிடும் அபாயமும் உண்டு.

ஒரு கல்யாணக் கதை இன்றைய நிலை !

ஒரு கல்யாணக் கதை இன்றைய நிலை !

கல்யாண ரிசப்ஷனிற்கு வருகிறார் அந்த முதியவர்.  ‘யாராவது தம்மை வரவேற்பர்களா என்று அவர் எதிர்பார்க்க,    வரவேற்க யாரும்  இல்லை..! அவருக்குத் தெரிந்த முகமாய் யாரும் இல்லை..  அலங்க மலங்க விழித்துக்  கொண்டு அங்குமிங்கும் பார்க்கிறார்..!

நல்ல உடையணிந்து பாங்காக இருக்கும் ஒரு பெண்மணி அவர் அருகில் வந்து, கையை கூப்பி வணங்கி, “வாங்க..! இந்தாங்க வெல்கம் ஜூஸ்..!"

தன்னையும் ஒருவர் கண்டுகொண்டதில் 'அப்பாடா..’ என்று பெருமூச்சு விட்ட அந்த முதியவர்  : “நல்லதும்மா.. சிவசுப்ரமணியம் எங்க கானோம்...?”

அவருக்கும் grooming  நடக்குது.. கொஞ்சம் லேட்டாவுது.. நீங்க இங்க உட்காருங்க..” 

“சிவசு என் பால்ய சினேகிதன்..! திருத்துறைப்பூண்டில அவன் என்னோட பக்கத்து வீடு..  நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலு..! ஒண்ணா கிட்டிப்புள் விளையாடினவங்க..!"

"ஹவ் நைஸ்...”

அவங்க அப்புறம் சென்னைக்கு வந்துட்டாங்க.. 25 வருஷம் ஆயிடுச்சு..!"

25 வருஷம் கழிச்சும் மறக்காம ஃப்ரென்டொட பொண்ணு கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க.. மகிழ்ச்சி..”

“சிவசு  மனைவி எங்க..? அவங்களை பாத்துடறேன்.." 

"அதோ அவுங்க ஃப்ரென்ட்ஸோட குத்து டான்ஸ் ஆடிட்ருக்காங்க பாருங்க..!"

"அய்யய்யோ..! இப்ப என்ன பண்றது..?  பொண்ணு மாப்பிள்ளையப் பாத்துட முடியுமா..?”  

“அந்த Qல நிக்கணும் சார்...!”

வெகு நேரம் Qவில் நின்று அவர் பார்த்து விட்டு வந்தவுடன், அந்தப் பெண்மணி: “சார்... டைனிங் ஹால் இப்படி போகணும்...”

“இல்லம்மா நான் புறப்படறேன்.. Qல நின்னதுல கால் ரொம்ப வலிக்குது.... சிவசுவ பாக்கவே முடியிலயேன்னு கஷ்டமா இருக்கு.. சிவசு பொண்ணுக்கு என்னைத் தெரியவே தெரியாதம்மா..?“

“பரவாயில்ல  சார்..!  அதுக்குத் தான் வீடியோ எடுக்குறாங்க.. நீங்க கல்யாணத்துக்கு வந்தது மகிழ்ச்சி..  இந்தாங்க கிஃப்ட்.."

“சரிம்மா..  ஆமா, நீங்க சிவசுக்கு  என்ன வேணும்..?”

“நான் அவருக்கு ஒண்ணும் வேணாமே..?"

“ஓ.. மன்னிக்கணும்.. நீங்க மாப்பிள்ள சைடா..?”

“இல்லயே சார்.. நான் யார் சைடும் இல்லையே..? ஏன் கேக்கறீங்க..?”

“அன்பா உபசரிச்சீங்களேன்னு கேட்டேன்மா.....”

“நாங்க event management கம்பெனி சேந்தவங்க சார்...! இது எங்க வேலையாச்சே.. செஞ்சு தானே ஆகணும்..?”

கிராமத்திலிருந்து வந்த அந்த முதியவர்  திரும்பிப் போய்க் கொண்டே மனசுக்குள் :“சிவசு எதுக்கு என்ன கூப்பிட்டான்..? நான் எதுக்கு வந்தேன்..?  யாரோ முன்ன பின்ன தெரியாத இந்த பொண்ணு கிட்ட பேசிட்டுப் போறதுக்கா..?"

பகிர்வு

கல்யாண சமையல் ஸாதம் [தயிர் ஸாதமும், ஸ-பரிவாரமும்]

கல்யாண சமையல்  ஸாதம்
[தயிர் ஸாதமும், ஸ-பரிவாரமும்] 

தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தயிரிற் சிறந்த ஊணுமில்லை. 

எப்பிடி? 

வயத்தைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன வயத்தை சரி பண்ண, தயிரை [மோரை] அடிச்சுக்க முடியாது. 

கோவில்கள்ள தயிர் ஸாதத்தை ஒரு தொன்னைலேயோ, கையிலயோ குடுப்பா. கோவில் ப்ரஸாதத்துக்குன்னு தனி டேஸ்ட், வாசனை இருக்கும். 

பசுந்தயிர் ஒரு நல்ல வாசனையோட, லைட்டா புளிப்போட இருக்கும். 

“முட்டாளுக்கு மூணு வேளையும் தயிர் ஸாதம்”ன்னு ஒரு வாசகம் உண்டு. ஆனா, எப்பவும்போல நாம அதோட அர்த்தத்தை தலைகீழாவே புரிஞ்சுப்போம். 

ஏதோ ஒரு ஜன்மால நிச்சயம் வௌவாலாப் பொறந்திருப்போமோ என்னவோ? 

அடி முட்டாளா இருக்கறவனைக்கூட தயிர் ஸாதம் மேதாவியா ஆக்கிடும்ங்கறதுதான் சரி. 
ஏன்னா...அதோட சத்து அப்படி!

தயிர் ஸாதம் கலக்கறதுக்கு, சாதத்தை கொஞ்சம் குழைவா வடிக்கணும். எப்பவும் விடறதை விட கூட ரெண்டு டம்ப்ளர் ஜலத்தை விட்டு வடிக்கணும். 

ஸாதம் ஆறதுக்குள்ள, ஜிலுஜிலுன்னு கொஞ்சம் பச்சை மிளகா, இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும். 

இப்போ ஸாதம் ரெடியானதும், கொஞ்சம் வெண்ணெய் [கொலஸ்ட்ரால் !!ன்னு யாரும் பேசக்கூடாது!] பகவான் க்ருஷ்ணனை நெனைச்சுண்டு பண்ணினா, எதுவும் ஒண்ணும் பண்ணாது. 

வெண்ணெயை ஒரு ஸ்பூன் அந்த சுடற ஸாதத்துக்குள்ள போட்டு, உப்பு [பெருங்காயம் optional] போட்டு, மசியப் பெசியணும். வெண்ணெய் போடறதால, தயிர் ஸாதம் வெள்ளைக் கலரா, வெழுமூண [சரவணபவன் மாதிரி] இருக்கும்.

ஓகே..... 

இப்போ ஸாதம் ஓரளவு ஆறினதும், கெட்டித் தயிரை அதோட தலைல விட்டு, கரண்டியால ஜோரா மசிச்சு கலக்கணும். வெண்ணை போட்டதுனால, தயிருக்கு தன்னோட மனுஷாளைப் பாத்த சந்தோஷத்துல ஜோரா ரெண்டும் ஒண்ணா சேர்ந்துண்டு, தயிர்சாதம் இப்போ... வெண்ணைக்கட்டியா இருக்கும். 

இப்போதான் மிளகா, இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி entry! 

நன்னா ஆறின சாதத்துலதான் போடணும். இல்லாட்டா, பச்சைக் கலர், லேஸா ப்ரௌன் கலரா மாறிடும். 

Now, ஒரு கரண்டியில நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, [மிளகா வத்தல் optional] தாளிச்சு, அழகா ப்ரௌன் கலருக்கு உளுந்து மாறினதும், தயிர்சாதத்துல போடணும். 

கரண்டியில சாதத்தை எடுத்து விட்டா, அப்டி வழியணும்! 

இனிமேத்தான் ஜொள்ளோட லெவல் ஜாஸ்தியாகும். Sometimes, overflow ஆகலாம்! 

இதுக்குத் தொட்டுக்க என்ன?

வெறும் இஞ்சியை பொடியா நறுக்கி, உப்பு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடலாம்;
இலுப்பைச்சட்டியை வெச்சு, மொறு மொறுன்னு கொஞ்சம் மோர்மிளகாய் நன்னாக் கறுப்பா வறுத்துக்கலாம்;

மோர்மிளகாய்ல, அது வெள்ளையா [வறுக்கும் முன்] இருக்கறப்போ பளபளன்னு, மொழுக்குனு இருந்தா, அந்த மிளகாய் பயங்கர காரமா இருக்கும். 

மணத்தக்காளி வத்தலை வறுத்து தயிர்சாதத்தோட சாப்பிட்டா, ஒவ்வொரு வாய்க்கும் அட்லீஸ்ட் அஞ்சாறு வத்தலாவது அகப்படும். அதுனால, நம்ம நாக்கும் மூக்கும் நம்மளை வாழ்க வாழ்கன்னு வாழ்த்தும்.

அடுத்தது, வேப்பிலைக்கட்டி. [நில்கிரிஸ்ல கிடைக்கறது] வேப்பிலைக்கட்டியைக் கண்டு பிடிச்சவாளுக்கு ஒரு ஷொட்டு ! மாவிலைக்கட்டி, ஆலிலைக்கட்டின்னு இல்லாம, வேப்பிலைக்கட்டின்னு பேரை வெச்சாலும், எலுமிச்சை, நாரத்தை இலையில பண்ற இந்த ஐட்டத்துக்கு ஒரு ஜே! [நல்லவேளை நெஜமாவே வேப்பிலையை இடிச்சு பண்ணலை]

கார்த்தல பண்ணின வத்தக்குழம்பு, கீரை மிஞ்சியிருந்தா! ரெண்டையும் ஒண்ணாக் கலந்து ஜோரா கொதிக்க வெச்சுக்கணும். க்ரீம் பிஸ்கட் நடுவுல ஒரு குழிக்குள்ள க்ரீம் இருக்கறாமாதிரி, தயிர் ஸாதக்குழிக்குள்ள இந்த ப்ரௌன் கலர் குழம்பு இருக்கும். ஆஹா! என்ன lovely, colourful combination !! 

ஒண்ணுமே தொட்டுக்க இல்லைன்னா, don't worry! இட்லி மிளகாய்ப்பொடியை கலந்து சாப்பிட்டுப் பாருங்கோ! 

சாதத்துல மோரை நிறைய விட்டு, கரைச்சாப்பல சாப்பிடும் போதும், மிளகாய்ப்பொடி ஜோரா இருக்கும்.

அப்பறம் மாவடுவும், மாவடு ஜலமும்! 

கேரளா டைப்புல காரமா, கெட்டியா மாவடு [Thangam மாவடு] இருந்தா, அதோட ஜலத்தை அப்பிடி ஸைடுல விட்டுண்டு தோச்சுண்டு சாப்பிட்டா, மூக்குலயும் taste buds வந்தா மாதிரி இருக்கும். 

மாகாளிக்கிழங்குன்னு நீளநீளமா ஒரு கிழங்கு. அதை தோல் சீவி, பொடிப்பொடியா நறுக்கி, மோர்ல உப்பு காரம் போட்டு ஊறவெச்சு இருப்பா. 

சிலபேருக்கு அந்த வாசனை பிடிக்காது. பிடிச்சவாளுக்கு மாகாளிக்கிழங்கு ஆஹா, ஓஹோதான்!

எலுமிச்சங்கா, கிடாரங்கா, நெல்லிக்கா, ஆவக்காய் ஊறுகாய் இதெல்லாம் தயிர்சாதத்துக்கு நாலு தூண்கள்! 

பச்சைப்பசேல்ன்னு வாழை இலைல வெள்ளைவெளேர்ன்னு வெண்ணைக்கட்டியா தயிர்சாதம் ! என்ன அழகு!

உடம்பு சரியில்லியா? காய்ச்சல் இருந்தாலும், ஜில்லுனு இல்லாம, அம்ஸமா ஒரு தயிர் சாதத்தோட காய்ஞ்ச நார்த்தங்கா இருந்தா போறும்! பரம ஔஷதம்!

Afterall ஒரு தயிர்சாதத்துக்கு இத்தனை buildup-பான்னு சிலபேருக்கு தோணும். ஆனா, அதோட அருமை தெரிஞ்சவாளுக்குத்தான் இது புரியும். 

அந்தக் காலத்ல வாழை இலைல எல்லாத்தையும் வரிசையா பரிமாறி, ஸாதம் போட்டு, நெய் விடற மட்டும், எதையும் சாப்பிட மாட்டா. அப்புறம் பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு சாப்பிடுவா. இதுல ஒரு advantage என்னன்னா, colourful-ஆ எல்லா ஐட்டங்களையும் ஒரு நோட்டம் விட்டுண்டு, ஒவ்வொண்ணா, நிதானமா, உப்பு, புளிப்பு, தித்திப்பு, உரைப்புன்னு எல்லா டேஸ்டுலையும் சாப்பிட ஹேதுவா இருந்தது.  

அப்போல்லாம், பணம்னு பெருஸா இல்லாட்டாலும், சிம்பிளான சமையலானாலும், சாப்பிடறதை ஒரு கலையாவே ரசிச்சு ருசிச்சு follow பண்ணியிருக்கா. 

இப்போ?.....

எக்கச்சக்க பணம். 

அது மட்டுந்தான் இருக்கு. 

உக்காந்து ஒரு வாய் சாப்பிட சரியான நேரமும் இல்லை; 

வக்கணையா சமைச்சுப் போட ஆளுமில்லை...

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?

⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...

👉அனைவருக்கும் பகிருங்கள். இது போல பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.