மதுசூதன் மீட்ஸ் சுபா (சிறுகதைகள் சீ2 – 16)
#ganeshamarkalam
ந்யூயார்க் போனதும்தான் தெரிஞ்சது நம்பளை இந்த அமேரிக்காக்காரன் நன்னாவே ஏமாத்தியிருக்கான்னு. டைம்ஸ் ஸ்கொயர் சதுரமாவேயில்லை. மாடிஸன் ஸ்கொயர் கார்டெனில் கார்டனே இல்லை. இன்னும் எத்தனை இருக்கோ!
நான் எப்படியாவது யூஎஸ் வந்து செட்டில் ஆகிடணும்னு பகீரதப் ப்ரயத்தனம் செஞ்சு இங்கே வந்து சேர்ந்தாச்சு. நார்த் கரோலினா யுனிவெர்சிடியில் பிஎச்டி படிக்க சீட் கிடெச்சு ஸ்காலர்ஷிப்பும் வாங்கிட்டேன். லண்டன் வந்து அங்கேந்து ந்யூயார்க் ஜான் எஃப் கென்னடி ஏர்போர்டில் இறங்கச்சே ஏதோ வேர கிரகத்துக்கு வந்துட்டாப்புலே ஃபீல் ஆச்சு.
யுனிவெர்சிடியில் வெளீலே டாக்ஸி கிடைக்கும் உங்க ஹோட்டலுக்கு போயிடுங்கோ, சனி ஞாயர் ஊரைச் சுத்திப்பாத்துட்டு ராத்திரி ட்ரைனைப்பிடிச்சா திங்கட்கிழமை சேபல் ஹில் வந்துடலாம், ஹாஸ்டலில் தங்கி உங்க வேலைகளை ஆரம்பிக்கலாம்னு. இப்போ பெரீய ஆப்பிளை பாக்க எனக்கு ஒண்ணரை நாள் கிடெச்சிருக்கு. ஆனால் கையில் இருக்கர காசை கவனமா சிலவு செய்யணும்.
வரப்போவே ஒரு சில முக்கியமான இடங்களை மட்டும் பாத்துடணும், மத்ததை கொஞ்சம் இவா நாட்டில் தங்கிண்டு பழகினப்புரம், இல்லைன்னா இங்கே வராமலா போயிடுவோம், அப்போ பாத்துக்கலாம்னு நினெச்சு வச்சிருந்தேன். அதில் டைம்ஸ் ஸ்கொயர் டாப்லே. லிபெர்டி ஸ்டேசூ ரெண்டாவது. மேப்பை பாத்தா இது ஒரு கோடி, அது இன்னொரு கோடி. நமக்குத்தான் டயம் கிடெக்கே நடந்தே ஊரைப்பாக்கலாம்னு ஹோட்டலில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டு பையை தோளில் மாட்டிண்டு கிளம்பியாச்சு. ஜாகை 6த் அவென்யூவில். கையில் மாப் சகிதம்.
மணி காலை 8. சரி நேரா சென்ட்ரல் பார்க். எத்தனை சினிமாவில் பாத்திருக்கோம்? பார்க்கில் கொஞ்சநாழி உலாத்திட்டுப்பார்த்தா பசிக்க ஆரம்பிச்சுடுத்து. சூடான நாய்தான் எங்கே பார்த்தாலும் விக்கரான். பாத்துக்கலாம்னு அருகே இருந்த பிரசித்தி பெற்ற ஆப்பிள் ஸ்டோரில் க்யூவில் நின்னு நுழஞ்சேன். படீலே இறங்கி பள்ளத்தில் போனால் ஆப்பிளின் லேடஸ்ட் ப்ராடக்ட்ஸ் பழக வச்சிருக்கா. யானை விலை.
வெளீலே வந்து அங்கேந்து டைம்ஸ் ஸ்குயர்.
எக்ஸ் வடிவத்தில் ப்ராட்வேயும் 7த் அவென்யூவும் கிராஸ் செய்யர இடத்தை அந்தப்பேர் வச்சு கூப்பிடரா. பகல்லேயே நியான், எல்சிடி டிஸ்ப்ளே ஜகஜ்ஜோதியா. அங்கேயும் இங்கேயும் பிக்கு பிடிச்சாப்புலே என்ன செய்யரதுன்னு தெரியாம சித்தே நாழி நின்னிண்டிருந்துட்டு – இதுக்கா இத்தனை மவுசுன்னு மனசுக்குள் சொல்லிட்டு அங்கேந்து நடையை கட்டினேன்.
5 மைல் தூரம். லிபெர்டி சிலை பாக்க போட்டில் போகணுமாம்.
வேண்டாம்னு கரையிலேந்தே தூரக்க தெரியற அவளைப்பாத்துட்டு என்ன செய்யலாம் பசிக்கு ஏதாவது சாப்பிடணுமேன்னு யோசிச்சேன். அப்புரம்தான் தெரிஞ்சது லெக்ஸிங்க்டன் அவென்யூவில் சரவணபவன் இருக்கு அங்கே போயிக்கலாம்னு வழி பாத்துண்டேன். அங்கே போனால் கண்ணாடி வழியா சிலர் தட்டில் ஃபுல் மீல்ஸ் சாப்டுண்டு இருகறதைப்பாத்து நாக்கில் ஜலம் ஊர ஆரம்பிச்சது. உள்ளே போனால் முழுச்சாப்பாடு 8 டாலராம். அப்பளம் ஊறுகாயோட. அன்லிமிடெட். அன்னைத் தேதிக்கு நம்ம காசில் 480ரூ. சரிதான். இப்படி யோசிச்சிண்டு நடந்துண்டே போனால் மயக்கம் வரும்னுட்டு உள்ளே போய் சாப்பிட்டேன்.
சுமாராய் சமைச்சிருந்தான். அம்மா சமையலைப்பத்தி இங்கே வந்துட்டு நினைச்சுக்கூட பாக்ககூடாதுன்னு கொட்டிண்டு மீண்டும் நடை.
கிட்டக்கேயே எம்பயர் ஸ்டேட் பில்டிங்க். போரவழீலே வலதுகைப் பக்கம் சீயர்ஸ் டவரும் இன்னும் பல மோவாய தூக்கிப்பாக்கரா மாதிரி நிறைய. அந்த ESBக்கு மேலே ஏறிப்பாக்கலாமாம். 45 டாலர்னான். பெரீய வரிசை நின்னுண்டிருக்கு. மேல் தளத்துலேந்து பாத்தா எல்லாமே தெரியுமாம். அப்புரம் பாத்துக்கலாம்னு அப்படியே நேர 5த் அவன்யூவில் வந்தால் செயின்ட் பேட்ரிக் கதீட்ரல் வந்தது. உலகில் உள்ள 4 பெரீய தேவாலயங்களில் ஒன்று. அழகா இருந்தது. சிலர் கதவைத்தொறந்துண்டு உள்ளே போனா. படிக்கட்டில் பல டூரிஸ்டுகள் உக்காந்துண்டு, இளைப்பாரிண்டு.
நான் மதுசூதன். உள்ளே போனால் தீட்டாகுமா? அப்படியே ஆனாலும் தீட்டு அவாளூக்கா எனக்கா? அமேரிக்காவில் வாழ்ந்து காட்டிடணும்னு வந்துட்டு இது என்ன பிற்போக்கான சிந்தனை? வீசா நேர்காணலில் சில பதில்களை ஜம்பமான்னா சொன்னோம்? இன்னும் நம்பூர் சாப்பாடு கிடைக்காதான்னு கிளம்பினத்துலேந்து 15 மைல் நடந்தாச்சு. இன்னும் போர இடத்தில் ஹாஸ்டலில் தங்கி என்னத்தையெல்லாம் சந்திக்க, ஏத்துக்க வேண்டியிருக்குமோ? இப்படிப்பட்ட சிந்தனை எல்லாத்தையும் விட்டுடனும்னும் உலகக்குடிமகனா வாழ்ந்து காட்டிடணும்னு நினெச்சுக்கரேன்.
எல்லாரையும் போல உள்ளே போய் சித்த நாழி மாஸ் நடக்கறதை பார்த்துண்டிருந்துட்டு அப்படியே வெளீல வந்து நானும் படீலே உக்காந்துக்கரேன். உக்காந்தப்புரம்தான் கால் வலிக்கராப்புலே பட்டது.
அப்போதான் அவளைப்பாத்தேன்.
ரெண்டு படி கீழே வலது பக்கம் 8 அடி தள்ளி, ஜீன்ஸ், டிஷெர்ட் தலையை சுத்தி ஒரு துப்பட்டா. மெல்லிய தேகம், ஆனால் பெண் என்று பறைசாத்திண்டு உடல்வாகு. முகம் தெரியலை அந்தப்பக்கம் திரும்பிண்டு. காலில் சீப்பான செருப்பு, மாநிறம், என்னைவிட சில வருடங்கள் அதிக வயசு. எது எப்படி இருந்தாலும் நம்மூர்காரின்னு முதுகில் எழுதி ஒட்டிண்டிருக்கா மாதிரி பட்டது.
போய்ப் பெசலாமா? புதுசா வெளிநாட்டுக்கு போனவா எல்லாருக்கும் நம்மூர்காரான்னு தோணித்துன்னா பேசணும்னு தோணுமே? அப்படித்தான் எனக்கும் தோணித்து. இதே பொண்ணை நம்மூரில் பார்த்தா கவனிக்காம போயிடுவோம். இங்கே 13500 கிமீ தள்ளி ஆர்வம் தளும்பறது ஆச்சர்யமா இருக்கு. அதிலேயும் பெண்ஜாதி. சரிதான் இன்னைக்கு நடந்தது போதும், சித்தே நாழி உக்காந்துட்டு ஹோட்டலில் போய் இருந்துட்டு டைம்ஸ் ஸ்குயர் பய் நைட் பாக்கப் போயிடணும். “இன்னிப்போது போச்சுடா நாராயணா”ன்னு யோசிக்கரேன்.
ராத்திரி சாப்பாட்டுக்கு இன்னும் யோசிக்கலை.
எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டு படி கீழே போய் அந்தப் பொண் கண்ணில் படராமாதிரி உகாந்துக்கரேன்.
அப்போ ரோடில் அதிநீளமான கார் ஒண்ணு போரது, எல்லாரும் அதை பாக்கரா. ஸ்ட்றெச் லிமௌசீனாம். வந்துண்டே இருக்கு, போயிண்டே இருக்கு. அதைப்பாத்துண்டே திரும்பினவன் என் கிட்டக்க அவள் வந்து உக்காந்துண்டதையும் என்னை “ஆர் யூ ஃப்ரம் இண்டியா”ன்னு கேட்டதையும் கவனிக்கலை.
யதேச்சயா திரும்பினப்போ அவளை கிட்டக்கே திடீர்னு பாத்தது பக்குன்னுது. திரும்பவும் அதையே கேட்டதும் “அமாம், உங்களை அப்போவே பார்த்தேன், நீங்களும் இந்தியாவா”ன்னு கேக்கரேன். “ஆமாம் இங்கே படிக்க வந்தேன், முடிச்சாச்சு. வேலை தேடிண்டிருக்கேன். வர்க் பெர்மிட் வைடிங்க்”. நான் என்னைப்பத்தி, “வந்தது இன்னைக்குத்தான், இனிமேல்தான் அமேரிக்க வாழ்க்கை”ன்னு சொல்லிட்டு எங்கே போகப்போரேன்னும் சொல்ரேன்.
அவள் பெயர் சுபா. நான் என்னை மதுசூதன்னு சொல்லிண்டேன். இங்கே வாழ்க்கை எப்படீன்னு கேட்டேன்.
“நாம நினைக்கரா மாதிரி இருக்காது”ன்னா. “அப்படீன்னா?” “நாம வேணும்கிறது கிடைக்காது, ஆனால் மத்தது நிறைய இருக்கு அதை பிடிக்கப் பழகிக்கணும்.” “பொறந்த நாட்டை விட்டுட்டு வந்து வேர தேசத்தில் அப்படித்தானே இருக்கும்”னு சொல்ரேன். “அது சரிதான், ஆனால் நான் சொல்ல வந்தது வேர, இப்போ புரியாது, வாழ்ந்து பாத்தால்தான் தெரியும்”னுட்டா. “சரி நீங்க ந்யூயார்கில்தான் வாசமா?” “ஆமாம், இப்போதைக்கு ஒரு தோழனுடன் தங்கியிருக்கேன், என்னோட படிச்சவன், வேலை கிடச்சதும் தனியாப் போயிடுவேன்.”
“இங்கே எல்லோரும் என்னத்தை சாப்பிடுவா, எல்லாம் யானை விலை விக்கரதே”ன்னு சொல்ரேன். அதுக்கு “ப்ரெட், பழங்கள் யோகர்டுன்னு சாப்பிடு, வாரத்துக்கு ஏதாவது ஒருநாள் நல்ல ரெஸ்டொரன்டில் இந்தூர் அல்லது நம்மூர் சாப்பாடு. அப்புரம் திரும்பவும் ப்ரெட்தான் கட்டுப்படி ஆகும். பஸ், மெட்ரோ அப்படீன்னு போகப்பழகிக்கணும். டாக்ஸி ரொம்ப முடியலைன்னாதான். வீட்டோட, ஹாஸ்டலோட இருக்கறது பெட்டர். வீக்கெண்டில் எங்கேயாவது பட்ஜெட் சுற்றுலா போலாம்.”
சரிதான் நான் நினெச்சாப்புலேயேதான் போகும் போலன்னு பட்டது. என்னவோ தோண “இந்தியாவில் உனக்கு யார் இருக்கா? அடிக்கடி போவியா”ன்னு அடுத்து.
“வயசான அம்மா அப்பா இருக்கா. நான் ஒரே பொண். இங்கே வந்துடணும்னு ஆடம் பிடிச்சு வந்தாச்சு. வந்து 6 வருஷம், திரும்பப் போகவேயில்லை. போகணும்னு தோணலை. அப்பப்போ போனில் பெசரதோட சரி. கல்யாணம் செஞ்சுக்கோ, திரும்பி வந்துடுங்கிரா. இஷ்டமில்லை. இங்கே இருந்தா நம்மளோட இயல்பு வாழ்க்கை மாறிடும், சிந்தனை, அபிலாஷைகள் புறண்டு படுத்துக்கும். திருப்பி விடறது முடியாம போயிடும். என்னத்தை சாதிச்சோம்னு கவலை கவ்விக்கும். அதே சமயத்தில் இங்கேந்து கிளம்பி திரும்பவும் அங்கே போனா பிரயோஜப்படாம போயிடுவோமோன்னு சந்தேகம் வரும். வந்து சேர்ந்த பத்தே நாளில் நிச்சயமா இங்கே ஏன் வந்தோம்னு தினம் தினம் தோணும், ஆனால் இங்கேயே இருப்போம்.” முடிக்கரா.
எனக்கு மனசை என்னவோ செஞ்சது. ஆர்வமும் துள்ளலுமா வந்தவன் முதல் நாளே உலகின் மிகப்பெரீய நகரத்தில் எல்லொரும் ஒருதடவையாவது போய் பாத்துடமாட்டோமான்னு ஏங்கற ந்யூயார்க் தெருவில் நம்மூர்காரி வந்து இப்படி பயமுருத்தராளே, பேசாம 7ஆவது படீலேயே உக்காந்திண்டிருக்கணும், இல்லை எழுந்து போயிருக்கணுமோன்னு தோணித்து.
“நாளைக்கு என்ன ப்ரொக்ராம்?” கேட்டுண்டே சுபா எழுந்துக்கரா. அப்போதான் பாக்கரேன் அவள் போட்டிருந்த உடையும் அவள் நிறமும், மொத்த உருவமும் அந்த இடத்துக்கு பொருந்தாம பட்டது, நானும் அப்படித்தான் இருக்கேனோ? “நாளைக்கு இன்னும் கொஞ்சம் ஸைட் சீயிங்க். சாயங்காலம் ட்ரைன் பிடிக்கணும்”னேன்.
“நான் இங்கேதான் 10 மணிக்குமேல் உக்காந்திருப்பேன், சாயங்காலம் 6 வரைக்கும். இன்னும் பேசணும்னா இங்கே வந்துடு”ன்னுட்டு என் பதிலுக்கு காத்திண்டிருக்காம போயிட்டா.

No comments:
Post a Comment