மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி 2
(2011 ஏப்ரல் மாசம்)இனி இவள் பார்வையில்...இவர் அக்கா அத்திம்பேரோட மலை நாட்டு திவ்ய தேசம் போய்ட்டு வந்துட்டார். என் அக்கா தூத்துக்குடில இருந்தா..அங்கேர்ந்து அவளையும் எங்க அப்பாவையும் அழைச்சிண்டு போறதா ப்ளான்...திருச்சீலேர்ந்து எங்க அப்பாவை அழைச்சிண்டு தூத்துக்குடி அக்காவாத்துக்கு போனோம். அத்திம்பேர்க்கு ஸ்பிக்ல வேலைங்கறதால ஸ்பிக் குவாட்டர்ஸ்ல இருந்தா...அவர்க்கு லீவு கிடைக்காததால நாங்க மட்டும் இவர் வழக்கப்படி கேரளா மேப் மற்றும் திவ்யதேச புத்தகம் துணையோட கிளம்பினோம்
மலை நாட்டுக்கோயில்கள் 13 ல திருவண் பதிசாரம் மற்றும் திருவட்டாறு தமிழக எல்லையில் என்பதால் முதலில் அவற்றை தரிசித்து பின் திருவனந்தபுரம் போவதாக ப்ளான். மீதி 13 தலங்களும் கேரளாவின் தென்கோடியில் திருவனந்த புரமும் வட கோடியில் திரு நாவாயும் மற்றும் இடையில் செங்கனூரை சுற்றி ஐந்து கோயில்களும் குருவாயூர் அருகில் ஒன்று என பிரிந்து இருக்கிறது. எனவே திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே பயணம் போய்க்கொண்டே தரிசனம் பண்ணலாம்னு திட்டம் போடறார்.
கேரள விஜயம் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் போன்று அதற்க்கென்று நிறைய முன்னேற்பாடுகள் தேவை. அங்கு வழக்கமா கிடைக்கும் கொட்டை அரிசியை சமாளிக்கணும் கையில் விரலுடன் சேர்த்து எப்பொழுதும் குடையும் இருக்க வேண்டும். முக்கியமாக அதிகாலை எழுந்திருக்க பழக்க வேண்டும் ஏனென்றால் அங்குள்ள அநேக கோவில்களை நான்கு மணிக்குத் திறந்து சீக்கிரமே நடை சார்த்தி , உம்மாச்சியை தட்டி தாச்சி தூங்க வைத்து விடுவார்கள்.
அக்காவும் நானும் முதல் இரண்டு நாள் சமாளிக்க இட்லி புளியோதரை தயிர்சாதம் பார்சல் கட்டிக்கொண்டோம். தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி பஸ் பிடித்து போய் சேரந்தோம்...அப்பா வழில சாப்பிட அல்வா நொறுக்குத்தீனி வாங்கிண்டார்.திரு நெல்வேலிலேர்ந்து நாங்கு நேரி (வானமாமலை)போய் சேர்ந்தோம். அப்பா அங்க இருக்கற பொம்னாட்டி சிற்பங்கள் பக்கத்துல போஸ் கொடுத்து போட்டோ எடுத்துண்டார்..
(வானமாமலை,திருக்குறுங்குடி இரண்டும் திவ்யதேசம்னாலும் பாண்டிய நாட்டு பட்டியல்ல வரதால அந்த கட்டுரைல விரிவா எழுதறோம் )
அன்னிக்கு பெருமாள் தேர். திவ்யமா சேவிச்சோம் அப்பா பைனாகுலர்ல பார்த்து சேவிச்சார். அப்பா ஒரு திருமண் சாத்திண்டிருந்த மாமாகிட்ட தனக்கு தெரிஞ்ச வயசான ஒருத்தர் பேரைச்சொல்லி விஜாரிச்சார். அவர் திருநாடு போய்ச்சேர்ந்து விட்டதாகவும் லக்கேஜை வச்சிட்டு போங்கோண்ணு சொன்னார். சுடச்சுட பொங்கல் தந்தார். சாப்ட்டுட்டு கோயில் உள்ள போனோம்.
திருப்பணி நடந்துண்டிருந்ததால பெருமாள பாலாலயத்துலே ஏளப்பண்ணி இருந்தா...தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்தோம்.
அடுத்து ஆட்டோல 200/- கொடுத்து திருக்குறுங்குடி பெருமாள சேவிச்சோம். அக்ரஹாரத்துல ஒருத்தர் ஆத்துல உக்காந்து எடுத்துண்டு வந்ததை காலி பண்ணோம்
அங்கேர்ந்து மலை நம்பியை பார்க்க ஜீப்ல போலாம்கறா அக்கா அத்திம்பேர்..இவர் ஜீப்காரன் கொள்ளையா காசு கேப்பன்னுட்டு ராத்திரிக்குள்ள நாகர் கோயில் போகணும் வேண்டாம்கறார். எப்படியோ சமாதானப்படுத்தி ஜீப்ல ஏறிண்டு மூஞ்சிய தூக்கிண்டு வரார். பயங்கரமான பயணமா இருந்தது. அவர் பேச்சை கேட்டுருக்கலாமோன்னு. தூக்கி தூக்கி போட்டுண்டு கருங்கல்லுல கன்னா பின்னான்னு ஏறி மலை நம்புய தரிசனம் பண்றோம். குரங்கெல்லாம் வழில அருவில குளிச்சுண்டு இருக்கறத போட்டோ எடுக்கறோம். அடிவாரம் அதே ஜீப் அதே குதியல்.
பஸ் ஸ்டாப்ல அத்திம்பேர் எங்களை கன்னியாகுமரி பஸ்ல ஏத்தி (அவர் ஆபிசில் வேலை இருப்பதால் மலை நாடு வரலை) வழில எங்கெயோ எறங்கி ஆட்டோ பிடிச்சி திருவண் பதி சாரம் போகணும்கறார். பஸ்ல ஏறினதுமே அவர் எறங்க சொன்ன எடம் மறந்துடுத்து. அதுக்கென்ன கண்டக்டருக்கு தெரியாதான்னு இவர் புக்ல போட்ட பேரை திருவண் பதி சாரம் நாலு டிக்கெட்ங்கறார். அந்த மாதிரி ஊரே கெடையாது வள்ளியூர்ல எறங்கி விஜாரிங்கங்ண்ணு சொல்லி எறக்கி உட்டுடறார்.
இதென்னடா மொத திருப்பதியே தகறாறு பண்றதேன்னு இவர் வள்ளியூர்ல யாராரையோ விஜாரிச்சு புத்தகத்த காட்டினதுல ஒத்தர் மட்டும் திருப்பதிசாரமாங்கறார். அடக்கடவுளே ஆழ்வார் பாடினதுல ‘வண்’ முறையா பேரை சுருக்கிட்டாங்க போலன்னு அதேதான்ங்கறோம். அவர் மறுபடியும் ஒரு பஸ்ல ஏத்தி அனுப்றார்
நம்மாழ்வார் பாசுரம் !
வண் பரிசாரத்திருந்த திருவாழ்மார்பனை.... பாடறார்! ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் மார்புக்கு உடையவன்! நெஞ்சாங்கூட்டில் வச்சுருக்கான்னு சொன்னது ரொம்பச் சரி! புராணப்பெயர் வண்பரிசாரம். மரியாதைக்குரிய திரு சேர்த்து திருவண் பரிசாரம் ஆச்சு. காலப்போக்கிலோ என்னவோ.... திருப்பதிசாரம் ஆகிப்போச்சே!
படங்கள்(வானமாமலை தேர் ,மலை நம்பி ,திருக்குறுங்குடி சிற்பங்கள்,)
தொடரும்





No comments:
Post a Comment