குப்பை மனசு (மனதை தொட்டுவிடும் கதை – 64)
#ganeshamarkalam
நாங்க இந்தூருக்கு வந்து 10 வருஷம் ஆச்சு.
இந்தூருன்னா எந்தூருன்னு சிலர் கேப்பேள். அதையும் சொல்லிடரேன். கோயம்புத்தூர். நிறைய பேர் கோயம்புத்தூருக்கு வந்து வருஷம் ஆகியிருக்கலாம். எங்ககிட்டே என்ன விசேஷம்? நாங்க இதுவரை 15 வேலைக்காரி மாத்திட்டோம். அதான் வித்யாஸம். வேர யாரும் இப்படி செஞ்சிருக்க மாட்டா. உங்க போனிலேயே கால்குலேடர் இருக்குமே? 8 மாசத்துக்குள் ஒருத்தி.
அப்படீன்னா யாரும் நிலெச்சு இருப்பதில்லையா? அப்படி என்ன செய்யரேள் அவா ஓடிப்போர மாதிரி? இல்லை அப்படி என்ன அவா செஞ்சுபிட்ரா நீங்க அவாளை அனுப்பிடரேள்னும் கேக்கலாம்.
இதே கேள்வியைத்தான் நானும் ஆத்துக்காரிகிட்டே கேட்டேன். “நீங்க அவசியம் தெரிஞ்சுக்கணுமா”ன்னு கேட்டா. “அமாம், இது உன் நிர்வாகம், நான் தலையிட விரும்பலை. ஆனால் அடிக்கடி ஆத்துக்குள் புது மனுஷா புழங்கரது அவ்வளவு நன்னாயில்லை, ஒருத்தரைப்போல் ஒருத்தர் இருப்பதில்லை, நம்பிக்கை வர சமயத்தில் நீ ஆளை மாத்தராய், அதுவும் இல்லாம ஆள் மாறும்போது சம்பளம் இப்படி அப்படீன்னு கூடிட்ரது, அதை நான்தானே சமாளிக்கணும்? அதான்”ன்னேன். அப்புரம் விலாவாரியா சொல்ரா.
“ஒத்தி பாத்திரம் தேய்ச்சுட்டு அப்படியே சபீனா பவுடரை சரியா அலம்பாமா திட்டு திட்டா வச்சுட்டு போயிடரா, வாணலீலே அப்ளம் பொரிச்சா பாத்திரப்பௌடர் வாசனை திவ்யமா வரது. இன்னோருத்தி துணியை உதராம அப்படியே உணத்திட்டு போயிடரா, அது சுருங்கி காஞ்சு அப்புரம் அயர்ன்காரனுக்கும் காசு அழவேண்டியிருக்கு, ஒத்தி படுக்கைக்கு அடீலே நன்னா கையை வீசி பெருக்கரது இல்லை. இன்னொருத்திக்கு வேலைக்கு சேர்ந்தப்புரம் சில மாதங்களில் முழியே மாறிடுத்து, அம்மா இந்த புடவை எவ்வளவுக்கு வாங்கினீங்க, இந்த சொஃபா பழசாச்சே விக்கப்போரீங்களான்னு குடஞ்சு எடுக்கரா. அதான் எனக்கு பிடிக்கலைன்னா போகச்சொல்லிடரேன்”.
எனெக்கென்னமோ சரியாப்பட்டது. ஆனால் அவ்வளவு சரியாவும் படலை.
யாரையாவது வேலைக்கு வச்சா, இந்தாத்து பழக்க வழக்கங்களை சொல்லி அப்புரம் சின்ன தவறுகள் ஏற்பட்டா திருத்திக்கிரா மாதிரி அவளோட பேசி நம்மாத்து மனுஷா மாதிரி நடத்தவேண்டாமோ? ஆத்தில் விசேஷம்னா அவளையும் நம்மாத்து மனுஷியா பாவிச்சு செய்யவேண்டியதை செஞ்சாத்தான் லாயல்டி இருக்கும்? அடிக்கடி மாறிண்டிருந்தா புதுசா யாரொ தினம் தினம் நம்மாத்தில் நடமாட்ரா, அவா நமக்கு சிஷுருஸை செய்யரத்துக்கு பதிலா நாமன்னா அவாளுக்கு பயந்து நடந்துக்க வேண்டியிருக்கு? இதை எப்படி இவளுக்கு புரிய வைக்கரது?
அன்னைக்கு அப்படித்தான், வச்ச இடத்தில் என் பர்ஸை காணோம். முதலில் நாம எங்கே வச்சிருப்போம்னு யோசிக்கரத்துக்கு முன்னாடி புது வேலைக்காரி எடுத்திருப்பாளோன்னுதான் யோசிக்கத்தோணரது. அது முட்டாத்தனமான யோசனைன்னு பர்ஸ் வேஷ்டிக்கடீலே கிடெச்சதும் புரியும், மனசை ஆசுவாசப்படுத்திண்டு போரத்துக்கு முன்னாடியே அடுத்த வேலைக்காரி. இது எங்கே போய் முடியுமோ?
காந்தம்மான்னு ஒருத்தி. அட்டைக்கருப்பு. ஆனா சுத்தமா, குளிச்சுட்டுதான் வருவா. நெத்தி நிறைய பொட்டு, இவளைவிட பெரீஸா குங்குமப்பொட்டு வச்சிண்டது குன்னக்குடிதான். ஒருநாள் இப்படித்தான் எங்கப்பா முகநூலில் ஏதொ மனதை தொட்டுவிட்ட சிறுகதை படிச்சிண்டே அதில் போட்டிருக்கிர ஜோக்கை பாத்து சத்தமா சிரிச்சு முடிச்சிட்டு முகத்தில் ஹாஸ்யம் தவழ உக்காந்திருக்கர், இவள், கூட்டிபெருக்கரச்சே இவரை கவனிச்சுட்டு (ஃபோனை கீழே வச்சுட்டர்), பெரிய ஐயருக்கு நட்டு கழண்டுடுத்துன்னு நினெச்சாளாம். தானாவே சிரிக்கரார், தனக்குத்தானே பேசிக்கரார்னு காது மூக்கு வச்சு அக்கம் பக்கத்தில் சொல்லி அது மெல்ல எல்லாராத்துக்கும் பரவி அப்புரமா கடைஸீயா என் ஆத்துக்காரி காதை எட்டித்து.
படுத்துக்க போரச்சே எங்கிட்டேயே, “உங்க அப்பாவை கவனிக்கரேளா இல்லையா? அவருக்கு உடம்புக்கு ஏதாவது இருக்கப்போரது, செக்கப்புக்கு அழைச்சிண்டு போயிட்டு வாங்கோ”ன்னு ஆலோசனை சொல்ரா. “முடிஞ்சா ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டையும் பாருங்கோ”ன்னு வேர. விஷயம் என்னன்னு தெரியாம அப்பா பத்தின கவலையில் சரியா தூங்கலை. கார்த்தால் எழுந்ததும் மெல்ல அப்பாகிட்டே போய் அவருக்கு மனம் புண்படாத மாதிரி “அப்பா, எப்படி இருக்கேள், வேளாவேளைக்கு சாபிடரேளா, பிபி மாத்திரை எடுத்துக்கரேளா”ங்கிரேன். அவர் “ஒண்ணும் இல்லைடா ஏன் கேக்கிராய்”கிரார். ரெண்டு நாளைக்கு அப்புரம் விவரம் தெரிஞ்சுது. இவ நம்மாத்து மேட்டரை வெளீலே சொல்லிட்டான்னு அவளை தூக்கிட்டா.
அம்ஸா ஈச்சநாரிலேந்து வந்தா. கார்த்தாலே வந்தாள்னா, 8 வீடு பாத்துட்டு திரும்பப்போவா. நல்ல குணம். அவ வந்து சில வாரம் ஆனதுமே இவள் குணத்துக்கும் வேலை செய்யர பாங்குக்கும் இவள் நிலெச்சு நிப்பான்னு என் மனசில் தோணித்து. அப்போ நான் என்ன செஞ்சிருக்கணும்? சும்மா கம்முன்னு இருந்திருக்கணும். “ஏண்டி பர்வதம், அம்ஸாவை யார் உனக்கு அறிமுகப்படித்தினா”ன்னு கேட்டேன். அவள் சொன்னாள். பக்கத்தாத்தில் கேஸ் போட வந்தவன் சொல்லி காந்திபுரத்தில் இவள் வேலைசெஞ்சிண்டிருக்கிர ஆத்தில் போனில் ரெஃபெரென்ஸ் வாங்கிண்டு அவளை பிடிச்சாளாம். “ஏன் கேக்கரேள், இதுக்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா”ன்னு வேர. “இல்லை, இவள் என்னமோ நன்னா பாந்தமா ஆத்துக்காரியத்தையெல்லாம் செய்யராபுலே இருக்கே இவள் நிலச்சு நிப்பான்னு தோண்ரது”ன்னேன். அதான் நான் செஞ்ச தப்பு. அடுத்த ரெண்டே வாரத்தில் அவளும் ஜூட். ஒருமாசத்துக்கு வச்சிருந்த சர்ஃபை 12 நாளில் தீத்துட்டாளாம். “சர்ஃப் விக்கர விலையில் இவளை வச்சிண்டா எங்காத்துக்காரர் போண்டியாயுடுவார்னு சொல்லி அனுப்பிச்சேன்”னுட்டா.
என்மேலே எவ்வளவு அக்கரை இவளுக்குன்னு நினெச்சிண்டேன்.
இப்படி சொல்லிண்டே போகலாம். வேலைக்காரியை வேலைலேந்து தூக்கரத்துக்குன்னே முதலில் வேலையில் அமர்த்துவா போல இருக்கு. அனால் என் ஆத்துக்காரியையும் பாராட்டியே ஆகணும். இதுநாள் வரைக்கும் ஒரே காரணத்துக்காக ரெண்டுபேரை நிருத்தியதில்லை. சில அபூர்வமான காரணங்கள் இவள் சொல்ரதை நீங்க தெரிஞ்சிண்டேள்னா உங்களுக்கும் இப்படி செய்யணும்னா உதவியா இருக்கும். இது தவிர உங்ககிட்டே நல்ல இன்னொவேடிவ் காரணங்கள் இருந்தா என் ஆத்துக்காரிகிட்டே ஷேர் பண்ணுங்கொ. சந்தோஷப்படுவா.
ஒருத்தி என் வெள்ளை சட்டையை துவைக்கரச்சே “ஐயா சட்டைப்பைகிட்டே சிவப்பா ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது உங்களோடதாம்மா”ன்னு காமிச்சாளாம். அவள் பேர் ஞாபகம் இல்லை, ரொம்பநாளைக்கு முன்னாடி நடந்தது. இதில் மேட்டர் என்னன்னா என் பொண்டாட்டி ஸ்டிக்கர் பொட்டு யூஸ் பண்ண மாட்டா. என்னை கேட்டிருந்தால் அது ஸ்டிக்கர் பொட்டே இல்லைன்னு சாதிச்சிருப்பேன்.
ஒருத்தி, கனகாம்பரம்னு ஞாபகம், உக்கடத்தில் வீடு, மாப் கட்டையை ரெண்டுவாட்டி உடைச்சுட்டா. இவள் அழுத்தி துடைக்கரதில்லைன்னு சண்டை போட்டான்னு தெரியும். அடுத்த வாரமே இது உடெஞ்சுது. கமலா விளக்குமாத்தை தொலைச்சிடுவா. இவதான் (என் ஆத்துக்காரி) தேடிக்கொடுக்கணும். “இன்னும் எத்தனை வீட்டுக்கு போகணும் சீக்கிரம்”னு கமலா அவசரப்படுத்துவா. ரெண்டுபேருக்குமே ஒத்துப்போகலை.
எனக்கு தேன்மொழியை அனுப்பின காரணம் நல்ல காரணமா பட்டது. அவளுக்கு இவ சேர்ந்த புதுசுலேயே ஆத்தில் மீந்ததை பாத்திரத்தில் ஊத்தி கொடுப்பா. “நிறைய பண்டங்கள், காய்கறி போட்டு பண்ணினதுடீ, தூக்கிகொட்ரத்துக்கு மனசு வரலை, நீ எடுத்திண்டு போய் சாப்பிடுவாயா”ன்னு பணிவும் அடக்கமுமாய் விசாரிச்சுட்டு கொடுப்பா. எல்லாம் நன்னாதான் போயிண்டிருந்தது. சில மாசம் கழிச்சு அவ ரோடு கோடிக்கு போனதும் அதை ஓரமா கொட்டிட்டு போரதை இவளே பாத்துட்டா.
நாங்கெல்லாம் இவ சமையலை வாயை மூடிண்டு சாபிடரச்சே வேலைக்காரிக்கு இவ்ளோ தினாவெட்டு ஆகாதுன்னு நான் நினெச்சிண்டேன். நன்னா வேணும், வேலை போச்சு. ஆனா அவள் கவலைப்பட்டதா தெரியலை. ஒருதடவை மார்கெட்டில் தேன்மொழியை பாத்தேன். “என்ன ஐயரே உடம்புக்கு ஒண்ணுமில்லாம இருக்கீங்களா”ன்னு கண்ணை சிமிட்டிண்டே கேட்டா. நான் பர்வதத்துகிட்டே சொல்லலை.
அன்னைக்கு பர்வதம் ஆத்தில் ரொம்பவே அஜிடேடடா இருந்தா. பட படன்னு கோவம், எதுகெடுத்தாலும் எரிச்சல் பட்டுண்டு, அப்பா ஏதோ மாத்திரை போட்டுக்கணும்னு வெநீர் கேக்கரார் இவள் கண்டுக்கவேயில்லை, அப்புரம் கொண்டுவந்து கொடுக்கரா. விசாரிக்கலாமேன்னு அடுக்களைக்கு போரேன். “என்னம்மா, உடம்பு கிடம்பு சரியில்லையா, வேணும்னா இன்னைக்கு அன்னபூர்ணாவுலேந்து வரவழைக்கலாமா, சமைக்க வேண்டாம், என்ன பண்ரது”ன்னு ஆசையா கேட்டதும், “ஒண்ணுமில்லை. இன்னைக்கு வேலைக்காரி வரமாட்டா, எல்லா வேலையும் போட்டது போட்டபடி கிடக்கு அதான் கொஞ்சம் படபடன்னு வரது”ங்கிரா.
எனக்கு அதிர்ச்சியா இருக்கு. சரஸ்வதிக்கு என்ன ஆச்சு. வந்து 6 மாசம்தானே ஆரது? துவைக்கரேன்னு புதுப்புடவையை கிழிச்சுட்டாளாம். அதான் கிழிஞ்சுடுத்தே எனக்கு கொடுத்துடுங்கோன்னு கேட்டாளாம். அவளையும் நிருத்தியாச்சு! அதுசரின்னு வந்துட்டேன். அது எப்படி இவளுக்கு அமையர வேலைக்காரிகள் மட்டும் இப்படீன்னு தோணித்து.
மறுநாள் அப்பா மருதமலை கோவிலுக்கு போயிருக்கார். நான் ஆபீஸ்லேந்து சீக்கிரமா எப்போவும் இல்லாம 4 மணிக்கே திரும்ப வரேன். வாசல் வெராண்டாவில் பெஞ்சில் உக்காந்துண்டு ஷூவை கழட்டலாம்னு. உள்ளெ பர்வதமும் இன்னும் யாரோ ரெண்டு பேரோட பேஸிண்டிருக்கா. என்னை அறியாம காது அங்கே நீளரது. இவ அவாகிட்டே யாராவது நல்ல வேலைக்காரி கிடைப்பாளான்னு விசாரிக்கரா. அதுக்கு ஒரு மாமி “எங்காத்து தனத்தை கூப்பிட்டுக்கோ அவ பாவம் இன்னொரு வீடு பிடிச்சுக்கொடுன்னு சொல்லிண்டிருந்தா. நன்னா செய்வா, காபி கேட்டுவாங்கி குடிப்பா. வேர ஒண்ணும் கெட்ட பழக்கம் இல்லை. உனக்கு சரீன்னா அனுப்பரேன், சம்பளம் நீயே பேசிக்கோ”ன்னு ஆஃபர் பண்ரா.
இன்னொருத்தி ஏண்டி வேலைக்காரிகளை மாத்திண்டே இருக்காய். நாங்கெல்லாம், 10 வருஷமாச்சு அதேபொண்ணுதான் இன்னும் செஞ்சிண்டிருக்கா. உனக்கு அப்படி என்ன பிராம்ளம்”னு நான் கேட்டா மாதிரியே. இப்போ இவ என்ன சொல்லுவான்னும் எனக்கும் தெரியும். இருந்தாலும் காது கொடுத்து கேட்டேன்.
“வந்த புதுசில் குஸும்னு ஒரு வடகத்திக்காரி வேலை செஞ்சா. ரொம்பநாளைக்கு முன்னாடி இங்கே குடிபெயர்ந்து தமிழ் கத்துண்டு. எனெக்கென்னமோ அவ ட்ரெஸ் சென்ஸ் ரொம்பவே நன்னாயிருக்குன்னு தோணும். அவள் ஆத்துக்கு நடந்து வரச்சே யாரோ சேல்ஸ் கேர்ள் வராப்புலே இருக்கும். கொஞ்சநாழி அவ வேலை செய்யரதை பாத்துண்டு இருந்தால் ஏதோ கண்காட்சிக்கு போயிட்டு ஆசை தீர சுத்திப்பாத்துட்டு சந்தோஷமா ஆத்துக்கு திரும்பி வந்தாப்புலே இருக்கும். சரி, சுத்த பத்தமா இருக்காளே இவதான் சரின்னு வச்சிண்டேன். ஆனா எங்காத்தில் இவர் சனி ஞாயிரு ஆத்தில் இருகச்சே அவ குனிஞ்சு நிமிர்ந்து வீட்டை கூட்டிப்பெருக்கி துடைக்கரச்சே நாற்காலியில் காலைதூக்கி மேலே வச்சிண்டு (அவளுக்கு ஒத்தாஸையா இருக்காராம்) அவளையே உத்துப்பாத்துண்டு, “இங்கே விட்டுட்டாய், அங்கே இன்னும் அழுத்தி”ன்னு டபுள் மீனிங்க்லே பேசிண்டு - வீட்டுக்குப்பை நன்னா போயிடும் ஆனா மனசெல்லாம் குப்பையாயிடும். அப்போ கல்யாணம் ஆகி 5 வருஷம், கோயம்புத்தூருக்கு மாத்தல் வாங்கிண்டு வந்த சமயம். எனக்கு மனசு கேக்கலைடீ. ஒரு டபராவைக்காணோம்னு காரணம் காட்டி அனுப்பிச்சுட்டேன். அப்புரம் யார் வேலைக்காரி இருந்தாலும் இவர் என்ன செய்யரார்ன்னு பாத்துண்டே இருக்க வேண்டியிருக்கு. வெளிக்கு வாசலுக்கு போகமுடியலை. அதான் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் மாத்திடுவேன்”கிரா.
எனக்கு பகீர்னுது. இவ மனசில்தான் எவ்வளவு குப்பை? குஸும் விஷயத்தில் எங்கிட்டே கேட்டிருந்தா ஒன்ணுமில்லைன்னு சொல்லியிருப்பேனே? அப்படியே என் மேல கடுகத்தனை கூட நம்பிக்கை இல்லைன்னா இத்தனை வேலைக்காரிகளை மாத்தினதுக்கு இந்த ஒரு ஆம்படையான மாத்தியிருக்கலாமேன்னு தோணிடுத்து!
சொல்லிடணும்.
No comments:
Post a Comment