Sunday, July 12, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 3

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி 3

இனி இவர் ….
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில். இந்த கோவில் நாகர்கோவிலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பி 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த பழையாற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது. 

திருவாழ்மார்பன் பெயர்காரணம் 

இந்த கோவிலில் திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பன் அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் வந்தது எப்படி? 

நரசிம்மர் இரணியரை வதம் செய்த பின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம் அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியன் மகனான பிரகலாதன் நரசிம்மனை துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக் கொண்டார். அந்த கோலத்தில் குடிகொண்டது தான் இந்த கோவில் என்கிறார்கள். லட்சுமியை மார்பிலே இருத்திக் கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய லக்குமி தன் பதியாகிய விஷ்ணுவை சார்ந்து இவ்வூரில் தங்கியதால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப்பட்டது. இறைவியாக கமலவல்லி நாச்சியார் உள்ளார்.
சுவாமிக்கு வழிபாடு நைவேத்யங்களில் அரவணை, பால்பாயாசம், பொங்கல், புளியோதரை, அப்பம் குறிப்பிடத்தக்கவை. பஞ்சகவ்ய தீர்த்தம் பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற துலாபார நேர்ச்சை செலுத்துகிறார்கள். நிஷ்டான பூஜை வழிபாட்டிலும் பங்கேற்கிறார்கள். 

அமர்ந்த கோலத்தில் மூலவர்
கோவிலில் உள்ள மூலவர் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். மூலவர் உயரம் 7 அடி உயரம். நான்கு கரங்கள், பின் கைகள் சங்கு, சக்கரம் ஏந்தியவை. முன் இரண்டும் அபய வரத, முத்திரை காட்டுபவை. கழுத்தில் லெட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம் காணப்படுகிறது. மூலவர் கடுசர்க்கரை படிமம். அதாவது கடுகு, சர்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் அபிஷேகம் கிடையாது. மூலவரின் பின் சுவரில் அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி, கவுதமர் ஆகிய ரிஷிகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். 

கோவில் முன் வாசலை அடுத்து இருப்பது கிழக்கு பிரகாரம். இது மகா மண்டபம் என அழைக்கப்படுகிறது. இம்மண்டப வேலை திருவிதாங்கூர் அரசரான ஸ்ரீமூலம் திருநாள் காலத்தில் (1931-1948) முடிந்தது. இந்த மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 40 அடி உயரமுள்ள இக்கொடிமரம் செம்புத்தகடு வேயப்பட்டது. இதன் உச்சியில் தங்கமுலாம் பூசப்பட்ட கருடனின் விக்ரகம் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் லட்சுமி தீர்த்தம். விமானம் இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினை சேர்ந்தது. 

திருப்பதிசாரம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோயில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும்நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும்.

திருப்பதிசாரம் கோவிலுக்கு செல்ல நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரெயிலில் வருபவர்கள் அங்கிருந்தே கோவிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியும் உள்ளது. இல்லாவிட்டால் அண்ணா பஸ்நிலையம் வந்து பஸ்சில் சென்று திருவாழ்மார்பனை தரிசிக்கலாம். 

கோவில் போன்: 04652- 282495.

இனி அவள் பார்வையில்..
பெருமாள் சேவை திவ்யமா கெடச்சது. ஆனாலும் கூட்டமே இல்ல. கருட சேவையில் உற்சவர் கண் கொள்ளாக்காட்சி. அப்பாவோட நின்னு போட்டோ எடுத்துண்டோம்.. பட்டாச்சார் விளக்குக்கு போட எண்ணை வாங்கி தரச்சொல்றார். முடிஞ்சதை கொடுத்துட்டு உலகத்துக்கே படியளக்கற பகவானோட நெலமையையும் கைங்கர்யம் செய்யறவாளோட நெலமையையும் நெனச்சா வருத்தமா இருக்கு. 

ராத்திரி நாகர் கோயில்ல ஒரு லாட்ஜ்ல தங்க எடம் கெடைக்கறது. இவர் பக்கத்துல நாகராஜா கோயிலுக்கு போலாம்னு கூப்பிடறார். அக்காவும் நானும் பெருமாள் யாத்திரைன்னா பெருமாளத்தான் சேவிக்கனும் நாங்க வரலேன்னுடறோம். இவர் கோச்சுண்டு எனக்கு எல்லா ஸ்வாமியும் ஒன்னுன்னு தனியா போறேன்னு போறார்.. 

  நாகராஜா கோயில்                 
இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.  இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம்  தருவதாக கருதப்படுகிறது.  இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.  இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.  இந்த  தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.   கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.  வயல் இருந்த இடம் என்பதால்  எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.  இந்த நீருடன் சேர்ந்த மணலையே,  கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த மணலானது ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல்  ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.  இந்த தலத்தில் உள்ள  துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.  அதனால் அன்னை "தீர்த்த துர்க்கை"  என்று அழைக்கப்படுகிறாள்.

உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம்'' என்று கூறியதால் இன்றும் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டு உள்ளது.

நாகர் கோயில் 
இருக்குமிடம் : கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ.
கோயில்முகவரி:அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்,
நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி எண் : 04652-232420
படங்கள் திருப்பதி சாரம் கோயில் ,கருட சேவை,நாகராஜா கோயில்



படங்கள் திருப்பதி சாரம் கோயில் ,கருட சேவை,நாகராஜா கோயில்

No comments:

Post a Comment