Sunday, July 12, 2020

திரு மாங்கல்யம் தந்த மகான்

திரு மாங்கல்யம் தந்த மகான்"

திருடனிடம் பறி கொடுத்த மாங்கல்யம்-பெரியவா ஆசியால் வேறொன்று கிடைத்த சம்பவம்.

ஆசிபெற்ற அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை. ஜகன் மாதாவாக காட்சி கொடுத்தார்.

  
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

உத்தராயண புண்யகாலம் நாலுநாளில் வருகிறது. என்ற நல்ல சமயத்தில், மகா வேதனையைத் தரும் அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.

காஞ்சிபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி. 'டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று போய்க்கொண்டிருந்தபோது, பட்டப் பகல் வேளையில்,நட்ட நடுத்தெருவில் அது நடந்துவிட்டது.

கழுத்தில் ஏதோ உரசினாற்போலிருந்தது, சரஸ்வதி அம்மாளுக்கு. 'என்ன,இப்படி?' என்று எண்ணி கையால் கழுத்தைத் தடவிப் பார்த்தபோது.

திடுக்!...

மஞ்சள் சரட்டில் கோர்த்திருந்த திருமாங்கல்யம் பறிபோயிருந்தது.

ஒட்டி உரசினாற்போல், சைக்கிளில் வேகமாகச் சென்று மறைந்து போனானே,பாவி!. அவன் வேலையாகத் தான் இருக்கும்.

வீட்டுக்கு வந்து பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும்  பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக்கொண்டாகிவிட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில் கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம்---என்பதெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாத செயல்திட்டம்.

எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும்.

மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதலாக இருந்தது. முகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மங்களகரமான அந்த நேரத்தில், 'என் திருமாங்கல்யம் திருடு போய்விட்டது' என்று சொல்வது அநாகரிகம்.

ஓரமாக நின்றுகொண்டிருந்தாள் அம்மாள். பெரியவா கண்களுக்கு ஓர் எறும்பு ஊர்வது கூடப் பட்டுவிடும்!

சேவையாளர் ஸ்ரீகண்டனிடம், 'அவள் என்னமோ சொல்றா..கேளு' என்று ஆக்ஞை.

ஸ்ரீகண்டனிடம், நடந்தவற்றை, கண்களில் நீர் ததும்பக் கொட்டித் தீர்த்துவிட்டாள்,சரஸ்வதி.

செய்தி, பெரியவா திருச்செவிகளை எட்டிவிட்டது.

சரஸ்வதி அம்மாள் நின்றுகொண்டேயிருந்தாள். பிரசாதம் வாங்கிக் கொள்ளணுமே!

ஐந்து நிமிஷமாயிற்று.

பெரியவாள் தொட்டுக் கொடுப்பதற்காகப் பிரசாதத் தட்டை நீட்டினார், ஸ்ரீகண்டன்.

"..எடுத்துக்கோ..!"

பார்த்தாள்...மஞ்சள் சரட்டில் கோர்த்த திருமாங்கல்யம், குங்குமம்,விபூதி,அட்சதை,புஷ்பம்..

அம்மாளுக்குப் பரவசம். எப்படிக் கட்டிக்கிறது.?"-பெரியவாளிடம் கேள்வி!

"கனுப்பொங்கல் அன்னிக்கு, மஞ்சள் தீத்திண்ட பிறகு"--பெரியவா.

அதன்படியே செய்து, தரிசனத்துக்குப் போனாள் அம்மாள்.

வெறுங்கையுடன் போகலாமா? நூறு கிராம் டயமண்டு கல்கண்டு வாங்கிக்கொண்டு போனாள்.

நமஸ்காரம். கல்கண்டு சமர்ப்பணம்.

"திருமாங்கல்யம் கட்டிண்டுட்டேன்.."--அம்மாள்.

கல்கண்டுத் தட்டை அருகில் இழுத்து, ஒரு டயமண்டை வாயில் போட்டுக் கொண்டார்கள,பெரியவா.

"எல்ல்லாருக்கும் கொடு, திருமாங்கல்ய தாரணம் ஆனவுடன் ஸ்வீட் கொடுக்கணுமில்லையா?"-பெரியவா.

சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை.ஜகன் மாதாவாகாக் காட்சி கொடுத்தார்.
Thanks: Varagooran Narayanan FB

No comments:

Post a Comment