Sunday, July 12, 2020

குளியல்.

குளியல்.....

மதியம் திடீரேன மழை வரவும், சரளா வீட்டு வேலைகள் முடித்து சாப்பிட்டவுடன் குழந்தையை தூங்க பண்ணி தானும் கொஞ்சம் கண்ணசரலாம் என்று அப்போதுதான் படுத்தவள் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். 

கஷ்டப்பட்டு துவைத்து காய வைத்த துணிகள் நனைவதற்குள் அதை எடுத்து , மழை சாரல் அடித்து ஈரமான வாசல் வராண்டாவில் ஜன்னலை சார்த்தி பாதி நனந்த துணிகளை உள்ளே உள்ள கொடியில் போட்டு அப்பாடா என்று மறுபடி படுத்தாள். குழந்தை தூங்கி கொண்டு இருந்த படுக்கையை தற்செயலாக பார்த்தால் குழந்தையை காணோம்.

அரக்க பரக்க  மறுபடி எழுந்து ஆகாஷ் குட்டி என்று குரல் கொடுத்துக்கொண்டே வீடு முழுவதும் தேடினாள். மனதில் லேசாக திக்கென்றது. கதவை திறந்து போட்டு விட்டு மொட்டை மாடிக்கு துணி எடுக்க போனோமே என்று தோன்றியதும் கை கொஞ்சம் உதறியது. மறுபடி ஆவேசமாய் ரூமில் ஹாலில் கதவு பின்னாடி என்று தேடியவள் 
பின் பக்க கதவு திறந்திருப்பதை பார்த்தாள்.

பின்பக்கம் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டு வென்னீர் பாய்லர் , மாமியார் காலத்து பித்தளை பாத்திரங்கள் போட்டு வைத்திருப்பார்கள்.ஷீட் அங்கங்கே உடைந்து ஓட்டை.மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வரும். குழந்தை அந்த பித்தளை பாத்திரத்தில் பாத் டப்பில் போல உட்கார்ந்து கொண்டு ஓட்டை ஷீட் வழியே வந்த மழை தண்ணீரில் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தது. மனதின் படபடப்பு நீங்கி குழந்தையை வாரி எடுத்தவளுக்கு அழுவதா  சிரிப்பதா ,கோபப்படுவதா என்று தெரியவில்லை . 

அழும் குழந்தையை சமாமானப்படுத்தி தலையை துவட்டி கொஞ்சி நெஞ்சோடு அணத்தவளுக்கு கடும் கோடையில் வந்த அந்த கோடை மழை தனக்கு ஏதோ பாடம் கற்று தந்தது போல் உணர்ந்தாள்.இனி பின் பக்க கதவை ஞாபகமாக தாளிட வேண்டும்.கதவை திறந்து போட்டு விட்டு மாடிக்கு  ஓட கூடாது. குழந்தை என்ற பெரும் செல்வத்தை அது வளர்ந்து முடிக்கும் வரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவளுல் ஆழமாக பதிந்தது.

No comments:

Post a Comment