Sunday, July 12, 2020

சமையல் குறிப்பு

அனைவருக்கும் வணக்கம். நான் சுபஸ்ரீஸ்ரீராம் துபாய்ல இருக்கேன். 

போன வருடம் தீபாவளி மலர்ல துபாய்ல உள்ள சிவன் கோவிலைப்பற்றி எழுதியிருந்தேன். 

இதைத் தவிர ஒரு சிறுகதையும் எழுதியிருந்தேன். 

அதே கதையை இங்கு பதிவு செய்கின்றேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும். 😊

 கதையின் தலைப்பு:- 
👇👇👇👇👇

 "சமையல்  குறிப்பு" 

எழுதியது
சுபஸ்ரீ ஸ்ரீராம்.

சூடா..... டிபன் ரெடியா என்று கத்திக்கொண்டே வந்தான்,  பாலு... அப்பொழுது மணி சரியாக காலை 7.30 😜 ஸ்டார்ட் ஆகிடுச்சு.

நான் எப்பவோ ரெடி பண்ணிட்டேன்.. நீங்க தான் குளிச்சு வர்றதுக்கு லேட் பண்ணிட்டீங்க..

சரி சரி சீக்கிரம் தட்டுல டிபனைப் போடு...
தட்டில் விழுந்தது ரெண்டு ரோஸ்ட் பண்ண ப்ரட் ஸ்லைஸ்..  அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,  என்னது இது?.

சூடா, நீ எத்தனை மணிக்கு எழுந்திருச்ச?..

நானா, 4.50 எழுந்திருச்சேன். ஆமா ஏன் கேட்கறீங்க பாலு..
இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சு இந்த ப்ரட்டுதான் செய்ய முடிஞ்சதா?..

இல்லைங்க,இன்னிக்கு காலைல ரோஜா டீவில ஒரு புது டிஷ்  போட்டாங்க.. அதைப் பார்த்து நோட்டுல எழுதி, முடிச்சுட்டு வந்தா மணி 6.10. சரி குளிச்சுட்டு சமைக்கலாம்னு போனேன். அதுக்குள்ள எங்க அத்தைப் பொண்ணு கால் பண்ணா. அவளுக்கு சமையல்ல ஒரு டவுட்டு . அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..

மத்தியானமாவது ஒழுங்கா சமைச்சு வைன்னு, ப்ரட்டை ரொம்பக் கோவமாக கடித்துக்கொண்டே  கிளம்பினான்.
அவன் அந்தப் பக்கம் போனதும், சூடா என்ன செஞ்சு பாலுவை அசத்தலாம்னு யோசிக்க ஆரம்பித்தாள்..

சூடாமணி, பாலாமணிக்கு திருமணம் ஆகி 5 மாதம் தான் ஆகிறது.. பாலு ஒரு பிஸினெஸ் மேன்..
 அவள் அவங்க வீட்டுக்கு ஓரே பெண். ரொம்பச் செல்லமாக வளர்ந்தவள் ..

அவன் ஒரு சாப்பாட்டு ப்ரியன் மட்டுமல்ல, நன்கு சமைக்கத் தெரிந்தவன்.. அதனால அவன் திருமணத்தில் சூடாமணிக்குப் போட்ட ஒரே கண்டிஷன் நல்லா சமைக்கணும். இந்த 5 மாதத்தில் அவள் சமையல் குறிப்பு எழுதி வெச்ச டயரி மட்டும் மூன்று தேறும்..

எல்லா டயரியையும் ஒரு புரட்டு புரட்டினாள். பின்னர் வாட்ஸ் அப்ல வந்த சமையல் வீடியோ, யு ட்யூப் என ஒவ்வொன்னாக பார்த்தாள்.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து சமையக்கட்டுக்குப் போனாள். ஒரு முக்கால் மணி நேரத்தில் சமைத்து முடித்துவிட்டாள்..

அவள் ஹாலுக்கு வரவும், காலிங்க் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது... கதவைத் திறந்தாள்.. பாலு நின்றுக் கொண்டிருந்தான்.

உடனே சூடா, சமையலறைக்குப் போய் தான் செஞ்ச ஐட்டத்தை எடுத்துக்கொண்டு டைனிங்க் டேபிளுக்கு வந்தா..

என்ன சூடா இன்னிக்கு ஒரே கமகமன்னு வாசனையா இருக்கு என்று சொன்னவுடனே அவ முகத்தில க்ரீம் போடாமையே பளிச்சுன்னு ஃப்ளாஷ் அடிச்சது..

ஆமாங்க. நீங்க சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. அவள் செய்த ஐட்டத்தைத் தட்டில போட்டாள். அவன் ஒரு வாய் வைச்சவுடன், இது என்ன ப்ரியாணி வாசனை வருதுன்னு கேட்டான்..

ஆமாங்க “புடலங்காய் ப்ரியாணி”.. அதைக் கேட்டவுடன் தொண்டையில அடுத்த வாய் சாப்பாடு இறங்கலை..
என்ன சொல்ற சூடா...

எல்லாரும் ப்ரியாணின்னா, கேரட்,பீன்ஸ்,உருளை, காலிஃப்ளவர், பட்டாணி இப்படித்தான் போடுவாங்க.. ஆனா நான் வித்தியாசமா ஏதாவது போடலாம்னு நினைச்சேங்க.. அப்பத் தான் எனக்கு ஞாபகம் வந்தது.. முந்தா நாள் ரோஜா டிவியில புடலங்காய் நரம்புக்கு நல்லது.. சுகருக்கு நல்லது. வாரத்தில நாளு நாள் எந்த விதத்திலாவது சேருங்க சொன்னாங்க... நமக்கு சுகர் இல்ல தான். இருந்தாலும் முன்னெச்சரிகை நடவடிக்கையா வராம இருக்க இப்படி ஒரு புடலங்காய் ப்ரியாணி செஞ்சேன்...

நீ செஞ்ச  ப்ரியாணில புடலங்காய எங்க இருக்குன்னு போலீஸை  க் கூப்பிட்டுத் தான் தேடச் சொல்லணும்.. ஒரே கொழ கொழன்னு பொங்கல் மாதிரி, உன் ப்ரியாணி இருக்கு.. 

ஐய்யோ  பாலு ஃப்யூஷன்ல முதல்ல பண்ணும் போது கொஞ்சம் சொதப்பத் தான் செய்யும். 😜 அதுக்காக சாப்பிடாம இருந்துடாதீங்க..

ம்க்கும். அவனவன் கஷ்டப்படறதே இந்த ஒரு ஜான் வயித்துக்குத் தான்.. உன் வியாக்னம் எல்லாம் உன்னோட இருக்கட்டும்.. நீயே இந்தப் புடலங்காய சாப்பிடு.. நான் வெளிய போய் சாப்பிட்டுக்கறேன் என்று வேகமாக சேரை விட்டு எழுந்த போது,  பாலு போன் அலறியது... ஹலோ அம்மா பேசறேண்டா.. நல்லா இருக்கையா?.. அவ எப்படி இருக்கா?.. சாப்டையா?.. இன்னிக்கு என்ன சமையல், என அவன் அம்மா அடுக்கடுக்காக கேள்வியைக் கேட்கலானாள்..

அதற்குள் சூடா, ரெண்டு கையும் கூப்பிக்கொண்டு, இன்னிக்கு புடலங்காய் ப்ரியாணின்னு சொல்லாதீங்கன்னு ஆக்‌ஷனில் சொன்னாள்.. இன்னிக்கு மாங்காய் பலாக்கொட்டை சாம்பார், வெண்டைக்காய் ஃப்ரைம்மா.

ஆஹா சூப்பர் டா. நான் இன்னிக்கு சாயங்காலம் அங்க வர்றேன் டா. என்னைய ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு போனை அவன் அம்மா கட் பண்ணிட்டா... பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு, யாரோ ஒரு பெரியவர் அனுபவிச்சு எழுதிருக்கணும்.. அது இன்னிக்கு எனக்கு பலிச்சுடுச்சு என்று அவளைப் பார்த்து சொன்னான்..

ஐய்யோ,  இவ சமைக்கறதைப் பார்த்தா  எங்க அம்மா, என்ன சொல்லுவாங்களோன்னு மனசில அசைப்போட்டுக்கொண்டே தூங்கி விட்டான்..

அவளுக்கு மனசில பயம் கவ்விக்கொண்டது... எத்தனை நாள் அவங்க தங்குவாங்கன்னு தெரியாதே.. நான் இப்படி தினமும் புதுசு புதுசா ட்ரை பண்றதெல்லாம் முடியாதே என்று யோசித்தாள்.. சாயங்காலம்  சரியாக 5.30 மணிக்கு, அவன் அம்மாவுடன் வந்தான்..

வாங்க அத்தை வாங்க .. நல்லா இருக்கீங்களா?.. மாமா எப்படி இருக்காங்க.. எல்லாரும் நல்லா இருக்கோம் மா..
ஆஹா சூடாமணி இவ்வளவு அருமையா வீட்டை சுத்தமா வெச்சுருக்க.. சூப்பர்னு அத்தை சொன்னாள்..
உடனே பாலு, ம்க்கும் எல்லாத்துக்கும் வேலையாட்கள் போட்டா வீடு சுத்தமாத்தான் இருக்கும்னு மனசில நினைத்தான்..

இருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு வந்தாள்.. அத்தை ராத்திரிக்கு உங்களுக்கு என்ன டிபன் செய்யட்டும்  அவனுக்கு  மதியம் பார்த்த ப்ரியாணி மனக்கண்ணில் வந்தது. உடனே, சூடா உனக்கு இன்னிக்கு ரெஸ்ட். நைட் வெளிய போய் சாப்பிடுவோம்..

அவன் அம்மா, டேய் எதுக்கு வெளிய போணும். அவளே ஏதாவது சிம்பிளா செய்யட்டும். அவனுக்கு பக்குனு இருந்தது.. இல்லம்மா, அவளுக்கும் தினமும் சமைச்சு சமைச்சு போரடிச்சிருக்கும். நாம இன்னிக்கு ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்..

சரிடா அப்புறம் உன் இஷ்டம்னு அவன் அம்மா சொல்லிட்டாள்..

மறு நாள் சூடா 5 மணிக்கே எழுந்து சமைக்க ஆரம்பிச்சுட்டா.. சரியாக ஏழு மணிக்கு அவன் அம்மா எழுந்து ஹாலுக்கு வந்தாள்.. சூடா, சூடாக  டீ போட்டு எடுத்து வந்தாள்.. அவன் அம்மா ஒரு வாய்க் குடித்தவுடன், என்னது ஒரே காரமா இருக்கு?..

இஞ்சி டீ அத்தை..

எவ்வளவு இஞ்சி போட்ட?.. ஒரு 3 இஞ்ச் அளவு போட்டேன்.. மூணு பேருக்கு இவ்வளவு இஞ்சியா போடுவ..
அன்னிக்கு ஒரு டிவியில 8 பேரு குடிக்கறதுக்கு அளவு சொன்னாங்க.. அதான் அத்தை..
அவன் அம்மா ஒரு பார்வைப் பார்த்து விட்டு டீயைக் குடிக்காமலேயே வைத்துவிட்டாள்.. சூடாவிற்கு போன் வந்தது..

எதிரில் உள்ள டீப்பாயில டயரி இருந்தது.. அவள் அந்தப் பக்கம் போனவுடன், அவன் அம்மா, என்னடா இது.. பிஸினஸ் டயரி எல்லாம் இப்படி எல்லாருக்கும் தெரியும் படி வைக்கற. உள்ள பீரோல எங்கையாவது வைடா..

அம்மா, அது ஒன்னு தான் குறைச்சல்.. அது  அவ எழுதின சமையல் குறிப்பும்மா.

என்னது?..

ஆமாம்மா. ஊர்ல, உலகத்தில யாரெல்லாம் சமைக்கறாங்களோ அதையெல்லாம் எழுதி வைப்பா. 

உன்னைய ஸ்டேஷன்ல பார்த்தப்பவே, ஏன் இப்படி பாலு மெலிஞ்சுக்கடக்கறன்னு எனக்கு அப்பவே தோணிச்சு டா.. இவ டீயைப் பார்த்தே, சமைக்கிற அழகைக் கண்டுபிடிச்சிட்டேன்.... எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். நேத்திக்கு யாரு சமைச்சா சொல்லுடா.. அது ஒரு பெருங்கதை அப்புறம் சொல்றேன்..

சூடாவிற்கு அத்தை இருக்கிற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக இருந்தது.. இந்த ஒருவாரத்தில் அவள் சமையல் குறிப்பு எழுதவுமில்லை.. அதைப் பார்த்து சமைக்கவும் இல்லை.. எல்லா நேரமும் பாலு அம்மா செய்வாங்க.. இவ அவங்களுக்கு உதவி செய்வா...

இப்படியே ஒரு வாரம் கழிந்தது.. ஒரு நாள் காலைல  அவளும், அத்தையும் ரோஜா டீவி பார்த்துக்கொண்டு இருந்தாங்க.. அப்ப நிகழ்ச்சி தொகுத்து வழங்கறவர் ஒரு போட்டி அறிவித்தார்.. அதாவது,   யார் அதிகமா ”சமையல் குறிப்பு” எழுதி வெச்சுருக்காங்களோ அவங்க வீட்டுக்கு எங்க டீம் வந்து செக் பண்ணுவாங்க.. அவங்களுக்கு  ஒரு கிச்சன் செட் பரிசளிக்கப்படும். கலந்துக்கணும்னு ஆசைப் படறவங்க இந்த நம்பருக்கு மிஸ்கால் கொடுங்கன்னு தெரிவிச்சாங்க. சூடாமணிக்கு தலைக் கால் புரியலை.. அத்தை எனக்கு தான் கிச்சன் செட் நிச்சயம் கிடைக்கும் என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

அதெப்படி இவ்வளவு கன்ஃபாமா சொல்ற..

அத்தை எல்லாரும், வாட்ஸ் அப், மொபைல்னு ரெக்கார்ட் பண்ணிப்பாங்க.. ஆனா நான் மட்டும் தான் கைப்பட எழுதி வெச்சுருக்கேன்...

அது சரி, அதிலேர்ந்து  எதையாவது சமைச்சுக்கொடுன்னு சொல்லமாட்டாங்க தானே?.. என்று அத்தைக் கேட்டவுடன் முகம் சூடாவிற்கு சுருங்கி விட்டது..

அந்த நாளும் வந்தது..  ஹாலில் பாலுவின் அம்மா உட்கார்ந்திருந்தாள்.. டீவி நிலையத்தில் இருந்து ஆட்கள்  வந்திருந்தார்கள்.

சூடா,பால் என்று அவன் அம்மா கத்தினாள்..

என்னங்க. நாங்க உள்ள இப்பத் தான் வந்திருக்கோம். அதுக்குள்ள சூடா பால்னு சொல்றீங்கன்னு ஒரு டெக்னீஷியன் கேட்டார்.

ஐய்யோ தம்பி என் மகன், மருமகளைக் கூப்பிட்டேன்னு சொன்னாங்க..

அதற்குள் அவங்க இருவரும் வந்தவுடன்,நடுவர் சூடாவின் புத்தகக் குறிப்புகளைப் கேட்டார்...  அவள் எழுதிய சமையல் குறிப்பைப் பார்த்து அசந்துவிட்டார். நாங்க பல வீட்டுக்குப் போனோம்.. அதில் சில குறிப்புகள் மட்டும் தான் எழுதியிருந்தாங்க. ஆனா நீங்க எவ்வளவு குறிப்பு எழுதியிருக்கீங்க.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. நீங்க தான் இந்த பரிசை தட்டிட்டுப் போகப்போறீங்கன்னு சொன்னவுடன், அவள் மாமியார் சார் நானும் போட்டியில கலந்துக்கறேன் என்னையும் கொஞ்சம் பாருங்கன்னு சொன்னார்..

உடனே நடுவர் சரிம்மா, எங்க புத்தகம்னு கேட்டவுடனே, வாசலில் ஆட்டோவிலிருந்து 75 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான பாட்டி வந்தாள்.. ஐய்யோ சரசு

என்ன அத்தை,  வரத்துக்கு இவ்வளவு நேரமா?.

இல்லடி குணா, கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. 

சார், இவங்க என் அத்தை.  இவங்க தான் என்னோட சமையல் குறிப்பு .   நான் இன்னிக்கு பாரம்பரிய சமையல், பத்திய சமையல், பலகாரம் எல்லாம் இவங்கக்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன். இன்னிக்கு நம்ம ஊர்ல நாம உபயோகிச்ச அரிசியை ஒவ்வொன்னா கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கறோம். அது போல இந்த மாதிரி பெரியவங்க செஞ்ச பலகாரம், சமையலை தொலைக்காம இருக்கணும்னா, மொதல்ல இவங்களுக்குத் தான் நன்றி பாராட்டி பரிசு கொடுக்கணும்..

சார் சமையல் என்பது  நாம கைப்பட எழுதறது இல்லை சார். நம்ம கைப்பக்குவத்தில தான் இருக்கு... நீங்க அத்தையை என்ன வேணா கேளுங்க .. அப்படி அழகா குறிப்பு சொல்லுவாங்க...

நடுவர் அசந்து போய், பாட்டிக்கு பரிசைக்கொடுத்து, பாரம்பரிய சமையலை செய்வதற்காக டீவி நிகழ்ச்சிக்கு புக் பண்ணிட்டார்..

சூடா இனிமே எதுவும் எழுதமாட்டாள்..   பாலுவுக்கு ஒரே சந்தோஷம்.😍

No comments:

Post a Comment