56. ஐயாறில் உறையும் என் அப்பன் (2 of 2) (சிசீ6) #ganeshamarkalam
அம்பாளே தாயாருமா? அதுக்கு பாரதி கொடுத்த விளக்கம் என்ன?
“அம்பாள் உருவத்தை பாத்தா அப்படீயே திருப்பதி வெங்கடாசலபதி வடிவைக் காணலாம். திருமலா வெங்கடேசனில் அறம் வளர்த்த நாயகி நிதர்ஸனம். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலில் மட்டுமே நடக்கும் மஹாலக்ஷ்மி புறப்பாடு - அம்பாள் ஸ்தலத்துக்கு வந்ததும் தீபம் காட்டுவா. அம்பாள் ஸ்வரூபமா இருக்கும் பெருமாளை பாக்க வருவதா ஐதீகம். “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே”னு திருமுறை. தேவியே மஹாவிஷ்ணு அம்சம். அதனால்தான் அக்கம் பக்கத்தில் தனியா பெருமாள் கோவில் கிடையாது. வாங்கோ உள்ளே குருக்களை காமிக்க சொல்ரேன்.”
தீபம் காமிக்கரச்சே மேல் திருக் கைகளில் சங்கு சக்ரம் போல் அம்பாள் பிடிச்சிண்டிருப்பதை பாத்தம். குருக்கள் இன்னும் ஒண்ணு சொன்னர். மஹாவிஷ்ணுவுக்கு குருவா இந்தூர் தக்ஷிணாமூர்த்தி வேதபாடம் நடத்தினாராம். ஐயாறப்பன் சன்னிதி கிட்டே கையில் வேதக்கட்டுக்களோட இருப்பர். அவர் பாத்ததுக்கு கிட்டே ஆமையும் பாருங்கோ.
சாயங்காலத்தில் நிறைய முடியலை, முக்கிய சன்னிதி பாத்துட்டு ஆட்கொண்டாரையும் தரிசனம். லக்ஷ்மி குங்கிலியம் போட்டா. குளக்கரையில் உக்காரலாம்னா ஏகாந்தமா இருக்க்கவே கொஞ்சம் பயமாவும் இருந்தது. “பயப்படேண்டாம், எங்கூர், இருட்டித்துனா கிளம்பிடலாம். நாளைக்கு முஹூர்த்தத்துக்கு மின்னாடி வந்தா எல்லாக் கோவிலையும் பாக்கலாம், வடகயிலாயம், தக்ஷிண் கயிலாயம்.” அடுக்கிண்டே போரா. “திருவையாறப் பத்தி சொல்ரேன்னியே, எப்ப சொல்லுவாய்?”
“சரிதம் சொல்லவா, புராணமா, வேதம் ஆகமம் விளக்கினதை சொல்லவா, கல்வெட்டில் இருப்பது போதுமா, திருமுறையில் சொல்லப்பட்டதா, இலக்கியம் பெசும் திருவையாறு தெரிஞ்சுக்கணுமா? திருவையாறு ஸ்தலப் பெருமை சொல்ல ஆரம்பிச்சா முடிக்க ஒரு வாரமாகும்” பாரதி முகத்தில் அவாவூர் பெருமை கொப்பளிச்சது. காலக்ஷேபம் வேற பண்ராளோனோ! வார்த்தை எதுகை மோனையோட. லக்ஷ்மி சித்தே ஆடித்தான் போனா. “எது முக்கியமா தெரிஞ்சிண்டு ஸ்தல பெருமையை, இத்தனை தூரம் வந்ததுக்கு புரிஞ்சிண்டு பிரார்த்தனை பண்னிக்கணுமோ அத சொல்லிடும்மா.”
“மாமா, அப்பர் கண்ட கைலாசம் இதுதான். பாக்கணும்னு கிளம்பினவரை, வயோதிகத்தில் அவ்ளோ தூரம் ஏன் போராய்னும் பக்தனை பக்கத்துலேயே வச்சுக்க நடத்திய திருவிளையாடல். வருஷா வருஷம் கயிலாய காட்சி உத்ஸவம் உண்டு. கயிலாயத்தில் ரிஷப வாகனத்தில் ஈஸ்வரனையும் அம்பாளையும் பாத்த புண்யம் காவேரிக் கரையிலேயே கிட்டிடும். எல்லா சன்னிதிக்கு நாளைக்கு அழைச்சிண்டு போரேன். இன்னொண்ணு தெரியுமா?” “சொன்னாத்தானே!”
“எமபயம் போக்கும் ஊர் இது. திருக்கடவூரில் மார்கண்டேயரை காப்பாத்த ஈஸ்வரன் ஓடோடி வந்து எமனை தடுத்தாட்கொண்ட கதை தெரிஞ்சிருக்கும். இங்கேயும் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவனை எமனிடமிருந்து காப்பாத்த ஈஸ்வரன் தன் தென்வாயில் காப்பானான ஆட்கொண்டார அனுப்பி காப்பாத்தித் தந்தாரென கதை. இங்கேயும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தியெல்லாம் செஞ்சுக்கலாம். எல்லாரும் திருக்கடையூரில் போய் விழேண்டாம்”. இது தெரியாத விஷயமாச்சே! தெரிஞ்சவாளுக்கு சொல்லலாமே!” “ஆமாம் மாமி!” இப்படீப் பெசிண்டிருந்துட்டு மாப்பிள்ளை அழைப்புக்கு வந்துட்டம். பெருமாளே உமையவள் ரூபத்தில்! ஹரியும் சிவனும் ஒண்ணு என்பதை அடுத்த லெவலுக்கு கொண்டுபோன அற்புதம். அப்பரம் நிம்மதியா தூக்கம் வந்தது.
ஆனா பாருங்கோ எழுந்துண்டதும் கல்யாணக் காரியங்களில் பிளான் செஞ்ச கோவில் ட்ரிப் விட்டுப் போச்சு. பாரதி இங்கேயும் அங்கேயுமா வளைய வந்திண்டு உபசரணை செஞ்சிண்டிருந்தவள் நடூலே சுரேஷை என்னண்டை உக்காரச் சொல்லீட்டு “இவனை சித்தே பாத்துக்கோங்கோ மாமா, நிச்சயமா நாளைக்கு கார்த்தாலே கோவில் போவம்.” பத்து சில பொறுப்புகள் தந்துட்டானாம். பர பரன்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டு பாரதி செஞ்சது திவ்யமா இருக்கவே நானும் சுரேஷ் கையப் பிடிச்சிண்டு அவனோட பேசிண்டு.
குழந்தை ஸ்லோகமெல்லாம் சொல்லி இம்ப்ரெஸ் செய்யவே நேரம் போனதே தெரியலை. முஹூர்த்தம் ஆனதும் விருந்து. நேத்து ராத்ரிய விட சுவைகூட, சாப்டதும் அசதி. லக்ஷ்மி, பத்து, பாரதி, வீட்டை புழங்கிக்க தந்த மாமா, அவாத்து மனுஷான்னு சின்னதா ஒரு குழு ஃபார்ம் ஆகி கொட்டாவியோட கப்ஷப். நடூலே தாம்பாளத்தில் வெத்திலை சீவல். சுண்ணாம்பு.
பாரதி காதண்டை வந்து “ஸாயங்காலம் என்ன டாபிக் பேசட்டும்? நீங்க சஜெஸ்சனே தரலையே?” “ஆமாம், மறந்துட்டேன். வந்திருக்கவா எத்தனை உள்ளூர், எத்தனை வெளியூர் தெரியுமா?” “வெளியூர்தான் மிகும்.” அப்ப திருவையாறு பெயர்க் காரணம் பத்தி பேசலாமே. அழகா 30நிமிஷத்துக்கு. பெரீய சொற்பொழிவுன்னா கல்யாணத்தில் சோபிக்காது. தெரியாத விஷயம் நிறைய இருக்கே, அதைச் சொல்லு. கேக்கரவா எல்லாரும் கோவிலுக்குப் போகாம அவாவா வந்த ஊருக்கு திரும்பப் பிடாது. அப்படி பெசினா உனக்கும் புண்யம்.”
என் முகத்தையே பாத்தவள், “அந்த டாபிக்கை 30நிமிஷம் எப்படி?” “ஏன் பெயர் காரணம் தெரியுமோன்னோ? உள்ளூர் காரீன்னு பீத்திண்டாய்?” “அதெல்லாம் தெரியும், ஜமாய்ச்சுடலாம். ஆனா மாமா எனகென்னமோ நீங்க எல்லாம் தெரிஞ்சிண்டே போட்டு வாங்கரேள்னு.” அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா, தெரிஞ்சாலும் உன் ஸ்டைலில் சொல்ராயே அது இனிமையா இருக்கு. சத் விஷயங்கள யார் சொல்லிக் கேட்டாலும் உயர்வு. நீ ஜமாய், நானும் கேட்டுப்பேன்”
பத்து சம்பந்திப் பேரண்டை போய் தன் அத்தைபொண் காலக்ஷேபம் நடத்துவா, நலங்கு முடிஞ்சதும் வச்சுக்கலாமா மின்னாடியா? அவாத்தில், “பொண்ணை தாரை வாத்து தந்தாச்சு, இனிமேல் எதுவானாலும் நீங்க முடிவெடுங்கோ. தம்பதிகள் சின்னஞ்சிருசுகள் இல்லை, ஷார்ட் எண்ட் ஸ்வீட்டா நலங்கு முடிச்சுடுவம். அப்பரம் உங்காத்து மாமி பெசட்டும்”. “மாமி இல்லை, என் அத்தை பொண், மாமின்னு நீங்க கூப்டதா தெரிஞ்சா கோவிச்சுப்பள்.” சம்பந்தி மாமா விளையாட்டா கன்னத்தில் போட்டுக்கரர். “மன்னிச்சுடுங்கோ! தினத்தந்தி மாதிரி செய்திய முன்கூட்டியே சொன்னேன். இன்னும் 5 வருஷமானா மாமிதானே!” நினைச்சுக்கரேன் சாந்தி முஹூர்த்தம் ஆரவரைக்கும் புள்ளையாத்துக்காரா 2வயசு பாலகனானாலும் பகைச்சுக்கப் பிடாதே!
நலங்கு பாக்கரச்சே கஷ்டமா இருந்தது. பையனுக்கு 38. பொண் 34. இப்ப மும்பை பாரதியோட டெர்ன். பிள்ளையார் ஸ்துதி ஒண்ணு கணீர்னு இவளும் சுரேஷும் சேர்ந்தே பாடினது எல்லார் கவனமும் வந்து புகுந்துட்டது. “திருவையாறு தலத்தின் பெயர் காரணம் எத்தனை பெருக்குத் தெரியும்?” கனமான கேள்வியோட ஆரம்பிக்கரா. ஒரு மாமி கையத் தூக்கினா. தெரியுமாம். சரியாச் சொல்லீட்டா இங்கேயே சொற்பொழிவு குளோஸ்! “எல்லாருக்கும் சொல்லுங்கோ!” “இது தெரியாதாக்கும்? திரு+ஐந்து+ஆறு. காவிரி, அதன் கிளை ஆறுகள் குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு செல்வதால் திருவையாறு.” “அது தஞ்சாவூர்லேந்து வரப்போ. அரியலூர்லேந்தோ, கும்மோணத்துலேந்தொ வந்தா வேற பேரா?” பதில் சொன்ன மாமி சளைக்கலை. சோழ சாம்ராஜியம் தஞ்சாவூரில் இருந்தது. அவா வச்ச பேர் அப்படித்தான் இருக்கும்.” பாரதி கண்ணில் பளபளப்பு!
“இப்படித்தான் மேலெழுந்தவாரியா பிடிச்சுண்டுட்ரோம். இந்த காரணம் அத்தனை பொருத்தமா வேற இருக்கே! ஆனா எதையும் சித்தே தீர ஆராய்ஞ்சு பாத்தா உண்மையான பெயர் காரணம் தெரியும். ஈஸ்வரன் தனக்கே பூஜை செஞ்சுண்ட இடம். அப்படீன்னா ஏதோ சூட்சுமம் இருக்கணும். அதுக்கு நான் ஒருகதை சொல்லணும். சுசரிதன் கதை”. எல்லாரும் காதை தீட்டிக்கரா.
“சிலாத முனிவர் மகப்பேறு கேட்டு வர ஆசீர்வதித்த ஐயாறப்பன் ‘புத்திரகாமேஷ்டி யாகம் செய், பூமிக்கடீலே பொட்டியில் புதல்வன் கிடைப்பான், ஆனா 16 வருஷமே ஆயுள்’னு சொல்ல, யாகம் செஞ்சதும் பெட்டிக்குள் 3 கண்களுடன் சந்திரனை முடியில் தரித்த பாலகன். ‘திரும்பவும் மூடித்திற’னு அசரீரி. அப்போ நம்மைபோல் பாலகன். அவனை சுசரிதன்னு பேர் வைக்கரா. அவன் வளர்ந்ததும் 16 வயசுக்குமேலும் தீர்க ஆயிளுடன் இருக்கணும்னு நீருக்குள் நின்னுண்டு பலவருஷம் தவமிருக்க மீன்கள் சதையை உண்ண வெறும் எலும்பாப் போகிரான் மைந்தன். அவனை எமனிடமிருந்து ஆட்கொண்டாரை அனுப்பி சிவன் காப்பாதிடரார். எலும்பாப் போனவனை உயிர்பிக்க கங்கை நீர், மேகநீர், பீரம்மனின் கமண்டல நீர், உமையவளின் தாய்ப் பால், இடபதேவரின் வாய்நுறை நீர் இவற்றை அபிஷேகிக்க சுசரிதன் பொலிவுடன் ஆகிரார். அவரே நந்திகேசர். இவருக்குத்தான் திருமழப்பாடியில் சுயுஷாவுடன் திருமணம் ஐயாறப்பனே நடத்திவைக்க இப்பவும் சப்தஸ்தான உத்சவம் வருஷா வருஷம் பிரபலம். இந்த ஐந்து நீர்கள்தான் ஐயாறு, அதனால் ஐயாறப்பன், அதுவே திருவையாறு.”
“ஆகா!” கைதட்டல் ஆச்சு. என் பக்கத்தில் உக்காந்திண்டிருந்த லக்ஷ்மியோ தொறந்தாவாய மூடாமா பாரதியவே பாத்திண்டு. “உங்க ஃப்ரெண்ட் ஆத்து மனுஷா எல்லாரும் சமுத்தா பெசரா பாருங்கோ. எத்தனை விஷயம் தெரிஞ்சிருக்கு”. ஆனா பாரதி என்ன செஞ்சான்னா, என்னை கைகாட்டி, “மாமாதான் என்னை இந்த டாபிக்கில் பெசச் சொல்லி ஐடியா தந்தர். திருவையாத்து பெயர் காரணம் தெரிஞ்சிண்டாலே பொதும் முக்திக்கு அது வழி காமிச்சுடும்னு. என்ன மாமா நான் சொன்ன விளக்கம் சரிதானே?” “ரெம்பவே சரீம்மா. ஆனா இன்னும் சிலதை சொல்லி எல்லாருக்கும் இதைவிய இன்னொரு பெரீய விஷயம் புரியவைப்பாய்னு நினைச்சேன்.” “இன்னுமா? தெரியலையே, நீங்களே எல்லாருக்கும் சொல்லுங்கோ மாமா.”
பக்கத்தில் லக்ஷ்மியப் பாக்கரேன். அதைப் பாத்துட்ட பத்து, “பயப்படாதேடா, மன்னி கோவிச்சுக்க மாட்டா. நீயும் பேசலாம். எல்லாரும் ஆவலா கேப்போம்.” எழுந்து நின்னுண்டு நமஸ்காரம் சொல்லீட்டு தொண்டைய க்ளியர் செஞ்சுக்கரேன்.
“பாரதி சொல்லாம விட்டூட்டதை மட்டும் சொல்ரேன். மொதல்ல மாமி ஐயாறு எதெதுன்னு சொன்னதும் கரெக்ட், சுசீதரனை உயிர்பிக்க ஈஸ்வரன் வரவழைச்சதா பாரதி சொன்ன நீராறுகளும் கரெக்ட்தான். முன்னது ஜியோக்ரஃபி, ரெண்டாவது புராணம். இப்ப இதுக்கும் மேலே ஆழமான உட்கருத்து இந்தூர் பேரிலேயே! ஆன்மிக பெயர் காரணம். அத சொல்லியே ஆணம்.” ஒரு பாஸ். இதெல்லாம் சபையில் தேவை. ஆர்வத்தை தூண்ட. பக்கத்தில் இருந்த பாரதியக் காணம். தேடினா எதுக்கால ஜமுக்காளத்தில் உக்காந்திருக்கா. மடீலே சுரேஷை வச்சிண்டு.
“எமபயம் போக்கும் ஸ்தலம். மறுபிரவியிலிருந்து காப்பாத்துவர் ஐயாறப்பனும் தர்ம சம்வர்தினி தாயாரும். அதுக்கு அர்த்தம்தான் ஊர் பேர்லேயே இருக்கு. பிறவிச் சுழல்லேந்து காப்பாத்துன்னு இங்கே வந்து வேண்டிண்டா உடனே நடக்கும். வை=வையகம், ஆறு என்றால் விடுபட்டுப் போகும் வழி, மார்க்கம். ‘முன்னையாறு முயன்று எழுவீர் எலாம், பின்னையாறு பிரி எனும் பேதைகாள், மன்னையாறு மருவிய மாதவன், தன்னையாறு தொழத் தவமாகுமே திருவையாறு” அப்பர் பாடினது. சுசிதரனை உயிர்பித்த சூர்ய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறும் நந்திவாய்த் துறை என்ற ஐந்தும் கலப்பதினால் பஞ்சநதம், பஞ்சநதீஸ்வரர். நதீன்னா ஆறுன்னு நினைப்பம். தப்பில்லை”. அர்த்தமே வேற.”
“பஞ்சநதம்னா அஞானஸ்தானம், புருவத்துக்கு மத்தியில். இங்கே 5 நதிகள் வந்து சேரணுமாம். அப்பத்தான் யோகசித்தி கிட்டும். கங்கை ஸகஸ்ராரதள கமலம். அம்ருததாரை. சூர்ய புஷ்கரணி பிங்கலை, சந்த்ரபுஷ்கரணி இடகலை. கௌரி முலைப்பாலாறு சுத்தமான வாக்கு. ரிஷப நதி ஜீவன். இதயெல்லாம் வச்சு சுசிரதனுக்கு தீர்காயுஸா? கிடையாது முக்தீன்ன தந்துட்டர்! ஈஸ்வரன் பஞ்சபூதங்களின் வடிவம். அவனை அடைய நாம ஐம்புலங்களை அடக்கிக்கணும்னு 5 வகை முக்திக்கு வழி காமிச்சுத் தர திரு+வையாறில் என் ஐயாறப்பன்”.
கல்யாணத்தன்னைக்கு மறுநா நாங்க கோவிலுக்குப் போனம். சாவகாஸமா எல்லா இடங்களையும் பாத்துண்டே ஆட்கொண்டார் சன்னிதி கடைசீயா. “மாமா, நேத்து அசத்திப்புட்டேள். உங்க பெர்மிஷனோட என் கதைகளில் நீங்க தந்த விளக்கத்தையும் யூஸ் செஞ்சுக்கவா?” “பேஷா! காபிரைட் என்னுதில்லை. திருமூலர். நந்திகெசரோட சிஷ்யர்.”
வரப்போ கார் டிக்கிய தொறந்து பத்தூ என்னமோ செய்யரான். கட்டிச்சாதக் கூடை எங்க ரெண்டு பெருக்கும் வச்சாரது. காரை ஸ்டார்ட் செஞ்சதும் பாரதி கேக்கரா. “மாமா, உங்களை சந்திச்சதில் ரெம்ப சந்தோஷம். உங்களுக்கு சொந்த ஊர் எது? தெரிஞ்சுக்கலாமா?”
“அங்கேதானே நின்னு பேசிண்டிருக்கம்!” லக்ஷ்மியே பதில் சொல்லி கண்ணடிக்க பாரதிக்கு முகம் என்னவோ போலாச்சு.
No comments:
Post a Comment