Sunday, July 12, 2020

ஐயாறில் உறையும் என் அப்பன் (1 of 2)

55. ஐயாறில் உறையும் என் அப்பன் (1 of 2) (சிசீ6) #ganeshamarkalam

என் நண்பனின் பிள்ளைக்கு கல்யாணம். ரெம்ப நாளாப் பாத்திண்டிருந்தான். கடைசீப் பையன். செல்லம். 2 பொண்களுக்கு அப்பரம் பொறந்தவன். 37 இல்லை 38 ஆகியிருக்கும். “நேரில் அழைக்க முடியலைடா, நிச்சயம் வந்துடு. மன்னி, குழந்தைகளையும் கூட்டிண்டு. திருவையாத்தில் பொண்ணாத்துலேயே வச்சு பண்ரம்”.

திருவையாறுன்னதும் சொல்லொண்ணா கிளுகிளுப்பு ஏற்பட்டது வாஸ்த்தவம். “ரெம்ப வேண்டப்பட்டவா ஒரு 50பேரை அழைச்சிருக்கேன். பாவாசுவாமி அக்ரஹாரத்தில் 4 வீடு வாடகைக்கு எடுத்து வரவாளை தங்க ஏற்பாடு செஞ்சிருக்கா. நீ என்னோட இருந்துக்கலாம். நாம சேர்ந்து ஸ்பெண்ட் பண்ணின நாட்களை திரும்ப அனுபவிக்கலாம், மிஸ் பண்ணிடாதே! அக்கம் பக்கத்தில் கோவிலுக்குப் போக வேன் சொல்லியாச்சு.”

கடைசீயா திருவையாறு எப்ப போனது? லக்ஷ்மியை கேட்டேன். ஏன்னா அவ இல்லாம எங்கேயும் போனதில்லை. உடனே ஆபீஸ் வேலையாப் போனா கூடவே கூட்டிண்டு போயிடுவேளான்னு கேக்கப் பிடாது. அந்த மாதிரி கேக்க வேற கதைகள் வரும். இதில் வேண்டாம் கேட்டேளா! “எட்டு வருஷமாச்சு. தஞ்சாவூர்லேந்து கும்பகோணம் போரச்சே இப்படிக்கா போயிட்டு போலாம்னு நீங்கதான் காரை திருப்பினேள்”. நன்னா ஞாபகம் வந்தது. “இப்ப போவம். ராமபத்ரன் போன் செஞ்சர். அவாத்து மாமி அப்பரமா கூப்பிடுவாளாம். சரிதானே?” “இந்த மாதீரி சாத்வீகமா கிராமங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு மிஸ் செஞ்சுடாம போணம்”. கோயமுத்தூர்காரி. திருவயாத்தை கிராமம்னு சொல்லிட்டா. அந்தூர் காரா காதில் விழுந்தா இந்த கவுண்ட-பிராம்ணச்சியை கிழிச்சுக் கோத்துடுவா. சின்ன ஊர். கிராமம் இல்லை. அந்தக் காலத்துலேயே பல இடங்களுக்கு செல்ல திருவையாறு முக்கியமான க்ராஸ் ரோடா இருந்திருக்கு.

மாப்பிள்ளை அழைப்பன்னைக்கு கார்த்தாலே 5:30கு சென்னைலேந்து கிளம்பியாச்சு. பெரம்பலூர் அரியலூர் போய் போலாம். அதில் ஒரு சௌக்கர்யம், முக்காவாசி தூரம் ஹைவே. வேகமா ட்ரைவ் செய்யலாம். ஆனா டோல் கட்டணும். கும்மோணம் போயும் போலாம். கும்மோணம்-திருவையாறு ரோட் சகிக்காது, குண்டும் குழியுமா. ஆனா ஊர்களும் வயல்களுமாய் ரம்யமா போகும் பிரயாணம். பாத்தேன். நேர உளுந்தூர்பேட்டை, அங்கேந்து விருத்தாச்சலம் அப்பரம் கும்பகோணம். பைபாசை கட் செஞ்சுண்டு ஊருக்குள்ள நுழைஞ்சு சுவாமிமலை ரோட்டை பிடிச்சாச்சு. அதுக்கப்புரம் விந்தி விந்தி நடக்கராப்போல் ட்ரேஃபிக்.

சுவாமிமலை போய்ச் சேரரச்சே மணி 1030. கோவில் தொறந்திருக்கும் ஏறிப் பாத்துடலாம்னு. கூட்டமே இல்லை. திவ்யமான தரிசனம். மலைமேல் நின்னுண்டு, இந்த சுத்து வட்டாரத்தில்தான் எத்தனை கோவில்னு நினைச்சுண்டேன். “லக்ஷ்மி உனக்கு தெரியுமோ, திருவையாறு போரத்துக்குள் முக்கியமான ஒரு இடத்தை கடப்பம்னு?”: “கபிஸ்தலமா?” “இல்லை”. “சந்திர தோஷ பரிஹார ஸ்தலம் திங்களூரா?” “அதுவுமில்லை”. “சரி நீங்களே சொல்லிடுங்கோ. பெரீய சஸ்பென்ஸ்!” “இச்சாங்குடி. திருவையாத்துக்கு 5கிமீ மின்னாடி”. “அங்கே என்ன விசேஷம்?” “மஹாபெரியவாளோட தாயாருக்கு சொந்த ஊர். அவர் வாழ்ந்த வீட்டை அப்படியே மஹாபெரியவாளுக்கு கோவிலா அங்கே. ரெம்ப பேருக்கு தெரியாது”. “நாமளூம் போலாமா?” “நிச்சயமா, கல்யாணம் முடிஞ்சு திரும்பி வரப்போ போலாம்”.

அந்த 22 கிமீ கடக்க 45 நிமி ஆச்சு. வலதுபக்கம் ஊர்களும், பச்சப்பசேல்னு வயலும். இடதுபக்கம் பெரீய மண்மேடு கூடவே வந்தது. அந்தண்டை காவிரி. பேசிண்டே வந்ததில் சட்டுன்னு ஊர் வந்துடுத்து. தியகராஜர் சமாதிக்கு போர பாதைய தாண்டிட்டேன். பின்னாடி ஒண்ணும் பஸ் வரலையேன்னு பாத்துண்டு ரிவெர்ஸ் பண்ணி எதுத்தாப்போல் திரும்பினா பாவாசுவாமி அக்ரஹாரம். அனுமார்கோவில் பின்னாடி வீட்டில்தான் கல்யாணம். போய் இறங்கரச்சே மணி 12. எதுத்தாதுலேந்து ஓடி வந்து கட்டிண்டான் நண்பன். பாத்து 20 வருஷமாச்சு.

“சுந்தரேஸா எப்படீடா இருக்கே?” “பத்தூ, நீ எப்படி இருக்கே? காத்திண்டிருந்ததுக்கு திருவயாத்துப் பொண்ணாவே திகைஞ்சது நல்ல விஷயம்பா. உன் புள்ளை அதிர்ஷ்டக்காரன்”. நாங்க இறுக்க அணைச்சுப் பிடிச்சிண்டு விடாம மூச்சுத் திணறிண்டு குசலம் விசாரிச்சுப்பதை பாத்த லக்ஷ்மி தன் பங்குக்கு பத்து ஆத்துக்காரிய கட்டிக்க பாத்தா. அவளோ கையப் பிடிச்சு ஃபார்மலா குலுக்கிட்டு “உள்ளே வாங்கோ”ன்னு அழைச்சிண்டு போயாச்சு. நாங்க அப்படியே திண்ணையில் உக்காந்தம். சாய்ஞ்சுக்க வாகா சிமென்டுலேயே தலைகாணி மாதிரி கட்டி. உள்ளே ஒரு ரூமில் 300 மட்டைதேங்காய் அடுக்கி, இந்தண்டை கட்டில். “நீயும் மன்னியும் இங்கே தங்கிக்கலாம்”. பூரான் தேளெல்லாம் சஞ்சாரம் செய்யும் இடம்.

“ரெடியாகிண்டு வா, சாப்டலாம்”. லக்ஷ்மீ ‘பாத்ரூம் எங்கே’ன்னா, காமிச்சேன். மிதத்தை. “அச்சச்சோ”. “பயப்படாதே, கதவு வச்ச பாத்ரூம் அந்தண்டை இருக்கு. ஆண்களெல்லாம் மித்தத்துலே கிணத்துலேந்து இறைச்சு குளிச்சுப்பா. கிணத்தில் தரை மட்டத்துக்கு நீர். 100 மீட்டரில் காவேரி ஓடரதே, அதான். “சமையளுல்லில் மித்தம் உண்டு. சின்னதா. போய்ப் பார்.” போனாள். ரெண்டு ஆள் சமைச்சிண்டிருக்கா. இந்தாத்தில் மாப்பிள்ளையாத்து மனுஷா தங்கராளோன்னோ. “என்ன மாமி, நீங்கதான் சென்னைலேந்து காரில் வந்தேளா?” “ஆமாம்”. “வீடு சுத்திப் பாக்கரேளா?” “ஆமாம்”. மித்தத்துக்கு பக்கத்தில் சுவத்தில் ஓட்டை. “அது எதுக்கு?” “அந்தண்டை கிணத்தில் நீர் இறைச்சு அதாலே ஊத்தினா இங்கே அண்டா நிரம்பிடும். சாதாரண நாட்களில் ஆத்து பொம்மனாட்டிகள் இங்கேயே குளிப்பா. அங்கேந்து ஊத்தினா இங்கே அறுவி மாதிரி தலையை அலசிக்கலாம்”.

சாப்டூட்டு எழுந்துக்க இன்னும் பத்துக்கு சொந்தக்காரால்லாம் வரா. ஒவ்வொருத்தருக்கா சாப்பிட ஏதாவது தந்து, எங்களையும் இன்னும் பிறரையும் அறிமுகப்படுத்தி “வாங்கோ என் மாட்டுப்பொண்ண பாத்துட்டு வரலாம்.” மாமி பெண்டுகளை அழைச்சிண்டு கிளம்பிட்டா. ஏன் மாமாக்களேல்லாம் பாக்கப் பிடாதோ? இவா அந்தண்டை போக, ஒரு பெரீய தாம்பாளத்தில் இலை போட்டு மூடி சாயங்கால டிப்பன் வரது. பக்கோடா, பஜ்ஜீ, ஆமை வடைன்னு. பின்னாடியே பெரீய ஜக்கில் காபி. நாம பின்னாடி தோட்டத்தை பாக்கலாம்னு காலார கிளம்பியாச்சு.

தென்னையும், பாக்கும், ஆங்காங்கே மாம்பழமும், பலாவுமா. ஒரு இடத்தில் நெறுக்கமா நிறைய வாழை மரங்கள் தாரோட. கொல்லைக் கோடீலே வாய்க்கா. நீர் நிரம்பித்தான். அதில் மோட்டர் போட்டு தோட்டத்துக்கு பாய்ச்சிக்கலாம். சொன்னாப்போல் பைப் போரது. வீட்டுச் சொந்தக்காரா யாரோ! கல்யாணத்துக்கு வாடகைக்கு தந்தாளேன்னு யோசிச்சிண்டே பத்துகிட்டே கேட்டேன். “இதோ இவராம்தான் நாம இருப்பது.” ஒரு மாமாவ அறிமுகம் செய்யரான். “எங்காமும் கல்யாணக் களை கட்டட்டும்னு பேஷா 4நா தங்கிக்கோங்கோன்னு சும்மாவே புழங்கத் தந்துட்டர்”. இப்படியும் மனுஷாளான்னு பட்டது.

மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பிக்க 7ஆகிடும். நாம ஐயாரப்பனை தரிசிச்சுட்டு வந்துட்டா என்னனு படவே லக்ஷ்மியத் தெடினா காணம். இன்னும் கல்யாண வீட்டுலேந்து வரலை. போய் அழைச்சிண்டு கிளம்புவமான்னு யோசிச்சிண்டே வாசலுக்கு வரேன், எதுத்தாப்போல் ஒரு மாமி ஒல்லியா, குள்ளமா, மாநிரம், சிடுக்கு மாதிரி பதவிசா நீலக் கலரில் ஜரிகை நிறைய இல்லாத மடிசார் கட்டிண்டு சின்ன வயசுதான், தாலியும், கருகமணி கோத்த மாலையுமா, காதில் ஜிமிக்கி ஆடிண்டு சிரிச்ச முகமா கார்லேந்து இறங்கரா. பத்து ஓடி வரான். யார் வந்தாலும் ஓடி வரவன், இந்த மாமிக்கு ஒரு ஒலிம்பிக்கே ஓடிக் காமிக்க “வாம்மா பாரதி!” நெறுங்கிய சொந்தமா இருந்தே ஆணம். “மாப்பிள்ளை வரலையா? குழந்தை எங்கே?” சடசடன்னு கேள்வியா கேக்க, “சுரேஷ் இருக்கான்.” பின்னாடியே வந்த குழந்தையை காமிக்க, பத்து அவனை தூக்கிக்க எல்லாம் நடந்தது. சுரேஷ் நன்னா விபூதி குழைச்சு இட்டுண்டு. பளிச் குழந்தை. நன்னா வளர்த்திருக்கான்னு பாத்ததும் சட்டுன்னு சொல்லிடலாம். “அவரால் லீவெடுக்க முடியலை. என்னை அவசியம் போய்ட்டு குழந்தைக்கும் ஐயாரப்பனை காமிச்சுக்கொடுன்னு சொன்னர்”.

“சுந்தரேஸா இந்த பாரதி யார்னு தெரியுமோ? அத்தை பொண். மும்பையில் கதாகாலக்ஷேபம் பண்ரா. திவ்யமா புராணங்களை எல்லாருக்கும் புரியரா மாதிரி சொல்லுவள். இவளண்டை பெசிண்டிருந்தா நேரம் போவதே தெரியாது”. சொன்னவன் என்னைப் பத்தியும் சொல்லி, “இவனண்டை ஜாக்கிரதையா இரு. நிறைய கேள்வி கேப்பான். பதில் தெரிஞ்சு வச்சிண்டே”. என்ன நினைச்சாளோ. “நான் இந்தூர்காரிதான். இந்தூரப் பத்தி என்ன வேணாக் கேளுங்கோ. மும்பைக்கு வந்தா எங்காத்துக்கு அவசியம் வரணும். சத்சங்க் செஞ்ச கேஸட் இருக்கு. விருப்பப் பட்டா சொல்லுங்கோ அனுப்பி வைக்கரேன். என்னை முஹூர்த்தம் முடிஞ்சு நலங்கின்போது சத் விஷயங்களை பெசச் சொல்லியிருக்கா. என்னத்தை பத்தி பெசலாம்னு ஐடியா தாங்கோ மாமா.” சுவாதீனமா சொல்லிட்டு உள்ளே போனா.

இவனுக்கு அத்தை போண் மேல் அலாதி பிரியம்னு தெரியும். ஒரு காலத்தில் ஒண்ணா திருவையாத்தில் வாசம் செஞ்ச உறவுகள் திரும்பவும் சந்திச்சுக்க தன் பிள்ளை கல்யாணம் உதவணும்னு. இந்தூர்லேயே பெண் கிடெச்சிருக்கு.

கோவிலுக்கு கிளம்பிட்டேன். பாவாசுவாமி அக்ரஹாரத்துலேந்து நேர நடந்துபோனா அம்பாள் சன்னிதி. அது வழியாத்தான் எப்பவும் நுழையர வழக்கம். அம்பாளப் பாத்துட்டு ஈஸ்வரனை. அங்கேந்து திருக்குளம், ஆட்கொண்டார். சொல்லிண்டே லக்ஷ்மியோட நடந்து போனா “மாமா! மொள்ளப் போங்கோ!” பின்னாடி குரல். பெரம்பலூர் ரோட்டைக் கிராஸ் செய்யாம நின்னு திரும்பிப் பாக்கரேன் பாரதி. கையில் சுரேஷை பிடிச்சிண்டு. “என்னம்மா நீயும் கோவிலுக்கா?” “ஆமாம் மாமா. காபி டிப்பன்னு எடுத்துண்டு வந்தா. எங்கூருக்கு வந்ததும் மொதல்ல தர்மசம்வர்த்தினி தாயார சேவிக்காம வாயில் சொட்டு ஜலம் படக்கூடாதுன்னு வந்துட்டேன். நீங்க போரதைப் பாத்துட்டு எங்கூர் கோவிலை சுத்திக் காமிக்க விடுவேள்கிர நம்பிக்கையில் கூப்டுட்டேன், தப்புன்னா கோவிச்சுக்காதீங்கோ”.

லக்ஷ்மி அதுக்கு “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. கோவிலுக்கு கூட்டமா போனா ரெம்ப விசேஷம்னு சொல்லுவா. ‘கோவிலுக்குப் போரேன் வரேளா’ன்னு அத்தில் இருப்பவாளை கூப்பிட்டுக்கணுமாம், அப்படியே அக்ரஹாரத்தில் கூட வசிப்பவா காதில் விழராப்போல் கூப்டுண்டே கோவிலுக்குப் போனாத்தான் ஸ்ரேஷ்டம்னு எங்க தாத்தா சொல்வர். கல்யாண வீட்டில் எத்தனை பேருக்கு கோவில் இன்டெரெஸ்ட் இருக்கும்னு தெரியாதே, அதான் தனியா கிளம்பினம். நீ வந்ததில் சந்தோஷம்தான். உங்கூரப் பத்தி சொல்லு”.

“நிறைய பெசலாம் மாமி. இன்னும் ரெண்டுநா சேர்ந்துதானே இருப்பம். ஒரு கேள்வி கேப்பேன். பதில் சொல்லணும்”. “அதுக்கென்ன கேளு”. “நான் இப்ப எங்கூருக்கு வந்தா எல்லாத்துக்கும் முன்னாடி தர்மசம்வர்த்தினி தாயாரை சேவிக்கணும்னு சொன்னேனே! நீங்க யாரும் இதென்ன சிவன் கோவிலில் வைஷ்ணவா தாயார்னு கேக்கலை?” லக்ஷ்மிக்கு பக்குன்னுது. “ஏன்னா உங்களுக்கு தெரியுமோ? அம்பாளை தாயார்னு சொல்ரா!”

“ஆமாம். பாரதியே சொல்லுவள் கேளு”. அழகான பதில் கிடெச்சது. அதுக்குள்ளே அம்பாள் சன்னிதிக்கே வந்தாச்சு. பாரதி சொன்னதை நினைச்சிண்டே தாயாரை சேவிச்சம்.

நைட் மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்சு தடபுடலான சாப்பாடு. எல்லாம் நம்மூர் சமாச்சாரம் மட்டுமே. விருந்துதான் ஆனா கன்னா பின்னான்னு வடக்கத்தி, சைனீஸெல்லாம் வைக்கலை. பத்துவப் பத்தித் தெரியும். பிடாதுன்னு சொல்லியிருப்பான். அதெல்லாம் வைதீகமா நடக்கும் கல்யாணங்களில் சேர்த்துக்கப் பிடாதும்பான். இன்னொண்ணும் பொண்ணாத்துக்காராளுக்கு வீண் சிலவு தரப்பிடாதுன்னு நல்லெண்ணமும் கூட. அதெல்லாம் சமைக்க தஞ்சாவூர்லேந்து ஆள் வரணும். இந்தூர் பிராம்ணாளுக்கே முன்னுரிமை தந்து. சம்பந்தி கபிஸ்த்தலம் போர வழீலே நிலம் வச்சிருக்கர் அதில் விளைவதை பயன்படுத்திக்கணும், அங்கே வேலை பாக்கரவாளை கூப்பிட்டு கவுரவம் செய்யணும்னெல்லாம் இவன் சார்பிலும் கண்டிஷன்ஸ் வச்சிருப்பான். சமுத்து நண்பன்.

ராத்திரி தூக்கம் வரலை. அம்பாள் தாயராகவும் ஆன விஷயத்தை பாரதி சொன்னது மனசில் அலை மோதிண்டு. இவளண்டை இன்னும் பேச்சுக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சேன் (நாளை நிறைவடையும்)

No comments:

Post a Comment