மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி 4
இனி இவள் ….
கார்த்தால எழுந்து சுசீந்தரம் கிளம்பறோம்.கட்டிண்டு வந்த இட்லி புளியோதரையை கொஞ்சம் ஸமெல் வந்தாலும் (மூணாம்நாள்)ஒரு வெட்டு வெட்டறோம். இவர் எனக்கு வேணாம்னு ஓட்டலுக்கு போயிடறார். பெருமாளும் இருக்கற கோயில தானேன்னு அக்காவும் வரா…
வழியில ஸ்ரீமத் துவாரகை கிருஷ்ணன் கோயில்ன்னு ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. உடனே, ஸ்டாப்! ஸ்டாப்!ன்னு சொல்லி அந்த கோவிலுக்கு போனோம். அது ஒண்ணும் பெரிய கோவில் இல்ல. இருந்தாலு,ம் அதன் அழகு நிச்சயம் அனைவரையும் ஈர்க்கும். ஏன்னா இந்த கோவிலின் ஒருபுறம் பழையாறும், ஒருபுறம் வயல்வெளிகள் என இயற்கை எழில்சூழ மன அமைதி தரும் விதத்தில் இத்திருக்கோவில் இருக்கிறதுதான் காரணம். இந்தக்கோவிலின் அமைப்பானது கருவறை, அர்த்த மண்டபம், அந்தராளம், முக மண்டபம், சுற்றாரை மண்டபம், கோவிலை சுற்றிப் பெரிய மதில்கள் என அமைந்துள்ளது. இக்கோவில் கருவறை சிறியது. மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை ஆழ்வார் என்றும் எம்பெருமான்ன்னும் சொல்றாங்க.
கோயில் கருவறை அருகே உள்ள பாறையில் காணப்படும் 1239ம் ஆண்டு கல்வெட்டில், “இக்கோயிலில் வடதிருவிதாங்கூரை சேர்ந்த வேதவிற்பன்னரான ஸ்ரீகோவிந்த ப்ரஞ்படரார் ஸ்ரீகான ராமபகவான் என்ற ஞானி இருந்தார். இவரிடம் மாணவர்கள் வேதம் பயின்றனார் அவர்களும் இக்கோயில் அருகில் தங்கியிருந்தனர்.” என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், 13ம் நூற்றாண்டில் இது வேதபாடசாலையாக இருந்திருப்பதை அறியமுடிகிறது. ஆனால், இக்காலத்தில் இது வழிபாட்டு கோயிலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் சில மாணவர்கள் வேதம் கற்றுள்ளார்கள். இவர்கள் கோவிலருகே தங்கி படித்து இருந்துள்ளனர். இவர்களின் மூன்று நேரச் சாப்பாட்டுக்கான செலவைச் சுசீந்திரம் கோவில் மகாசபை கவனித்துக்கொண்டது. இந்த துவாரகை கோவில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்கு அடங்கியே இருந்துள்ளது.
பண்டைய குமரிமாவட்டப் பகுதிகளில் இருக்கும் பார்த்திபசேகரபுரம், கோதைநல்லூர், கன்னியாகுமரி போன்று மாணவர்களுக்கு வேதம் கற்பித்த மையமாக துவாரகை கிருஷ்ணன் கோவில் இருந்துள்ளது. காலை 6 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, அபிஷேகம், 10 மணி பூஜை. மாலை 5 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, 8 மணி பூஜையின் பிறகு, திருநடை அடைக்க படுகிறது.. இக்கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடுவாங்களாம். புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று துவாரகை கிருஷ்ணனை வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். பக்தர்கள் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் மும்மூர்த்திகளை தரிசித்துவிட்டு கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கிழக்கு பார்த்து இருக்கும் துவாரகை கிருஷ்ணனையும் தரிசிக்காமல் இருப்பதில்லை.நாங்களும் அதேபோல் தரிசனம் முடித்துவிட்டு அருகில் இருக்கும் தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு சென்றோம்.
இனி இவர் …..
சுசீந்திரம் பற்றி கேட்டோம்னா சுசீ+இந்திரம் என்று பிரித்து இந்திரன் அகலிகை மீது ஆசைப்பட்டு அதன்மூலம் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் இப்பெயர் வந்தது என்கிறார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை எங்கும் இல்லை. பழைய பாடல்களில்கூட அதுபற்றிய குறிப்புகள் இருக்கிறதா என்றுத்தெரியவில்லை. அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். ருத்திரன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார் என்றும் சொல்லப் படுவதுண்டு.
கோவில் வளாகங்களை நல்ல சுத்தமாகவும் வச்சிருக்காங்க. மேலும் இந்த கோவிலின் ஸ்தல வரலாற்றை பற்றி என்ன சொல்லுறாங்கன்னா அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசுயாவுடன் இத்தலத்தில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசுயா தன் கணவர்மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவரைப்போல பெண்கள் தங்கள் கணவருடன் நடந்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அவர்கள் விசித்திர வேண்டுகோளை ஏற்று அவர்களை குழந்தையாக்கி பின் உணவுக்கொடுத்தார் என்று சொல்லப்பட்டதிலும் சில திரிபுகள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது பின்னர் அனுசுயாவின் கற்பின் மாண்பினை உலகுக்கு அறிவுறுத்தி முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசுயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர் என்பது வரலாறு. சுசீந்திரத்திற்கு பக்கத்தில் ஆசிரமம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. இது அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தங்கியதால் அந்த இடம், "ஆசிரமம்' என்று அழைக்கப்பட்டு இப்பொழுது ஆஸ்ராமம் என திரிந்து அழைக்கப்படுகிறது.
கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, முத்தொழில் புரியும் மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம்.என்பதால் தம்பதி சகிதமாக வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
திருக்கோவிலானது இந்திரன் இங்கு வந்து புனிதம் அடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் எனப் பெயர் பெற்றது என்று அழைக்கப்பட்டாலும் "சுசி" என்றால் புனிதம் (சுத்தம்) இந்திரன் சுத்தம் அடைந்த இடம் என்பதால் (சுசி + இந்திரன்) சுசீந்திரம் எனப்பெயர் வந்தது. என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் .சொல்லுகிறார்கள்,சிலரோ ஸ்ரீஇந்திரம் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
ஆனா, ஆய்வாளர்கள் சொல்வது எவ்வளவு சரி, எவ்வளவு தவறு என ஒரு சின்ன குறிப்பு மூலம் நாம தெரிஞ்சுக்கலாம். பொதுவா கோவில்களை பற்றியெல்லாம் அப்ப ஆராய்ச்சிக்கட்டுரைலாம் நேரம்போகாத சில வெள்ளைக்கார அதிகாரிகளின் கற்பனைபடியே நடந்தது. ஒரு வெள்ளைக்காரர் செய்த ஆய்வில் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது இந்த கோவிலின் ஒரு சிற்பத்தை பார்த்துவிட்டு அவர்மேற்கொண்ட குறிப்பு ”ஐரோப்பாவில் அமேசான் என்ற வீரப்பெண்கள் இருந்தார்கள். அவர்கள் வில் நாணை இழுத்து அம்புபூட்டும் வசதிக்காக தங்கள் ஒருமார்பை வளரவிடாமல் செய்வார்கள். இதை மேற்கோள் காட்டி ஓர் ஐரோப்பியர் இந்தியக்கோயிலில் ஒரு சிற்பத்தைப் பார்த்து ‘ஓ இங்கும் அமேசான் இருந்திருக்கின்றார்கள் என்று ஆராய்ச்சியை சமர்ப்பித்தார். அதைப்படித்த இந்த அறிஞர்கள் தலையில் அடித்து அய்யோ சாமி ‘ அது அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்’ என்றனராம். இந்த தகவல் எதற்காக என்றால் திருநெல்வேலி மாவட்டத்தை பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு பிரிட்டிஷ்காரன் ஆராய்ச்சி குறிப்பையே பெரியதாக சொல்வர். இப்பொழுது அதில் இருக்கிற தவறுகளுக்கே ஒரு ஆராய்ச்சி நடக்கிறதாம். இந்தமாதிரி ஆய்வுகளினால்தான் நிறைய தவறான இடைச்சொருகல்கள் வந்துவிட்டன.
இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்த சாம பூஜை செய்த பூஜாரி அடுத்தநாள் பூஜைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் ஒருமுறை மாலையில் செய்த அலங்காரங்களை எல்லாம் கலைத்து புதிய பூக்களை கொண்டு இந்திரன் இராத்திரி அங்கிருக்கும் மூலவருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மாலையில் பூஜை செய்தவர் அடுத்த நாள் காலை எல்லாம் மாறி இருந்ததை வெளியில் சொன்னாராம். அதிலிருந்து மலையில் பூஜை செய்த பூஜாரிகள் அடுத்தநாள் பூஜைக்கு அனுமதிப்பதில்லை. அதேபோல் முன்பு கடுமையான நியதிகள் கடைபிடிக்கப்பட்டன. பூஜை செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நம்பூதிரி குடும்பத்தில் உள்ளவர்களாகவும் அவர்கள் பிரம்மச்சாரிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அவர்களது வாரிசாக அவருடைய சகோதரியின் மூத்தமகன் அந்த பணியை செய்யவேண்டும் என்பது திருவிதாங்கூர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நியதி
படங்கள் 1)துவாரகை கிருஷ்ணன் கோயில்2)தாணுமாலயன் கோயில் கோபுரம்3,4)கோயில் பிராகாரம்...
தொடரும்




No comments:
Post a Comment