Tuesday, February 4, 2020

ஆதிசேஷனின் அவதாரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"ஆதிசேஷனின் அவதாரம்...."

தொண்டனூர் ஆலயத்தில்.... ஸ்ரீ நரசிம்மர் சன்னதியில் அவர்கள் கூடியிருந்தார்கள்..... பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒருபுறம்..... ராமாநுஜரும் அவரது சீடர்களும் ஒரு புறம்....வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒருபுறம்..... மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவரது பரிவாரங்களும் ஒரு புறம்....

"பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா? சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.

"கண்டிப்பாக... எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்" என்றார்கள் சமணர்கள்.

" சொல்கிறேன்.... நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்" என்றார் ராமாநுஜர் .

திரையின் ஒருபுறம் ராமாநுஜர் இருக்க.... மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்....

"யார் முதல் வினாவை கேட்கப் போவது.... அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா...?

"அதெல்லாம் கிடையாது.... அனைவரும் கேட்போம்.... ஒரே சமயத்தில் கேட்போம்.... ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா.... அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும்.... அது எங்களுக்கு திருப்தியாக இருக்க வேண்டும்.... "

பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்....? என்றார் மன்னர்

"அவருக்கு சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே.....? அதெல்லாம் அவரால் முடியும்.... வாதத்தைத் தொடங்கலாமா...?

சரி என்றார் உடையவர்

திரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார்....கண்களை மூடினார்...."ஓம் நமோ நாராயணாய.... "

காற்றும்.... கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது.... பஞ்ச பூதங்களும் அதனுள் ஒடுங்கின.... தேவர்களும், சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள் .... அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்டச் சீற்றத்தின் ஒலி.... சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது.... ஆபூர்வமாக.... அந்த ஒலிக்கு மணம் இருந்தது... அதைச் செவிகள் உணர்ந்தன.... அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது.... அது அசைந்தது.... அசையாமலும் இருந்தது....தோன்றிய பேரோளியின் நடு நெற்றியிலிருந்து... அந்த ஒலி வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.... சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது.... பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரவென இருபுறமும் பெருகி சஹஸ்ரமானது..... அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன....

"ம்..... ஆரம்பியுங்கள்" சீற்றத்தின் ஒலிசொற்களாக உருக்கொண்டன.

"நாராயணா....நாராயணா.... என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள்....கணப்பொழுதில் அவர்களுக்குப் புரிந்து விட்டது....சப்த ரிதிகளுள் ஒருவரான காஸ்யபர்..அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும், அக்னியையும் பெற்றார்...திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார்.... வினதாவுக்கு கருடனைப் பெற்றார்... முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார்.... கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.

ஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும்தேகமும், கூர் விழிகளும்... த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன் ... ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார்.... கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார்....கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்த போது.... புளிய மரமாக முன்தோன்றி... அவர் தங்க நிழல் அமைத்தார்...." பொலிக...பொலிக...." என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்ட போது ...."இதோ புறப்பட்டு விட்டேன்" என்று "ராமாநுஜராக வந்துதித்தார்....

"ஆஹா.... எப்பேர்ப்பட்ட தருணம்.... உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.... அவர்களுக்கு இது புரியாது.... அவர்களால் உணர முடியாது.... திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது....எனக் கூட அறியாமாட்டார்கள்.... எழுந்து நிறைந்த பேரோளியைக் காண முடியாமல் கணப்பொழுது கண்ணை மூடிக் கொண்டவர்கள்.... ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில்..., மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா.... சந்தேகம் தான்..." முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்... .

மறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் ஆதிசேஷ அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.... என்ன நடக்கிறதென்று மன்னருக்குப் புரியவில்லை.... ஒரு திரை அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார்.... ஒரே ஒருவர் தான் அங்கே இருப்பது.... சந்தேகமில்லை.... வெளிப்பட்டு வருவது ஒரு குரல் தான்.... ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன....? மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார்..... பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கு பதில்கள் முடிந்தன.

திகைத்துப் போனார்கள் சமணர்கள்."உடையவரே... நாங்கள் தோற்றோம்....கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை.... உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி... எழுந்து வெளியே வாருங்கள்.... " என்று கரம் கூப்பி நின்றார்கள்..

சில விநாடிகள் பெரும் நிசப்தம்..... திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார்..... திரை அசைந்தது.... அதை விலக்கி ராமாநுஜர் வெளியே வந்தார்.... தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும்  அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களை ஏற்று வைணவராயினார்கள்.


"உய்ய ஒர்வழி உடையவர் திருவடி"

"எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

அடியேன்

வகுளாபரணராமாநுஜதாசன்🙏🙏🙏

எல்லாம் மஹாப்பெரியவாள்


வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்தபொழுது அந்த மஹான் இரண்டு வெளிநாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை.

அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே தெரியாது. நான் மிகவும் பொறுமை இழந்துவிட்டேன். வழக்கம்போல் அப்பொழுதே மாலை 5 மணியாகி விட்டது. பெரியவாள் தரிசனத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீகாமாட்சி கோவிலுக்கு போய்விட்டு பிறகு பஸ் பிடித்து விழுப்புரம் திரும்ப வேண்டும். என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை.

அப்பொழுது அங்கு வந்த ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரிகளை சந்தித்துப் பேசினேன். ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள் கடந்த 60 ஆண்டுகளாக மஹாபெரியவாளிடம் சேவை செய்து வருபவர். அவருக்கு பெரியவாளைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது. அவரை மஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் உள்ள அனைவரையும் அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடக் கூடாது. அவரை ப்ரம்மஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருந்தார்கள்.

‘இப்படி வருகின்ற வெளிநாட்டுக்காரர்களை பெரியவாள் வேறு ஒரு நேரத்தில் அழைத்து பேசக் கூடாதா? என்னைப் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணியாக காத்துக் கொண்டிருக்கிறோமே! எப்பொழுது நாங்கள் ஊர் திரும்புவது’ என்று அவரிடம் நான் குறைபட்டுக் கொண்டிருந்தேன். ப்ரம்மஸ்ரீ அவர்கள் என்னை பார்த்து ‘நீங்கள் ஒரு மணி நேரமாகத்தானே வெயிட் பண்ணுகிறீர்கள். அந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் பெரியவாளிடம் பேச கடந்த மூன்று நாட்களாக காத்துக் கொண்டிருந்துவிட்டு இன்றுதான் அதுவும் இப்பொழுதுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்கள்.

‘அவர்கள் யார்? அவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக காத்திருக்கிறார்கள்? ஸ்ரீமடத்தில் நீங்கள் அவர்களுக்கு மஹாபெரியவாளின் தரிசனத்திற்கு ஏன் ஏற்பாடுகள் செய்யவில்லை’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டேன். அதற்கு அவர் நிதானமாக சொன்ன விஷயம் இதுதான். அவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் நம்முடைய வேதசாஸ்திரம் மற்றும் வேதாந்தம் பற்றி படித்து டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றிருக்கிறார்கள். அவர்கள் படித்தது போதுமா இல்லை இன்னும் படிக்க வேண்டுமா என்ற சந்தேகத்தை அவர்களுடைய பேராசிரியரிடம் அங்கு கேட்டார்களாம். அதற்கு அந்த அமெரிக்கர் இவர்களை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிப் பெரியவரை சந்தித்து உங்கள் சந்தேகங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஒருவரால்தான் உங்கள் சந்தேகங்களை தீர்க்க முடியும் என்று இங்கு அனுப்பிவிட்டாராம்.

அவர்கள் 3 நாட்களுக்கு முன்னால் அவர்களுடைய இந்த பெரிய சந்தேகத்தை மஹாபெரியவாளிடம் கேட்டார்களாம். அந்த மஹான் அதற்கு அவர்களை கூர்ந்து பார்த்து “Just Wait” (கொஞ்சம் பொறுங்கள்) என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம். பிறகு அந்த இரண்டு ஜெர்மனியப் பெண்களும் பெரியவாளின் அருகில் உள்ள மேடையில் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். மஹாபெரியவாளோ அந்த திக்குகூட திரும்பவே இல்லையாம்.

வெகுநேரம் கழித்தும் பெரியவாள் அவர்களை அழைக்கவே இல்லையாம். ஸ்ரீமடத்தில் இருந்தவர்கள் அந்த பெண்களை சந்தித்து ‘நாங்கள் வேண்டுமானால் ஸ்வாமிகளிடம் போய் ஞாபக படுத்துகிறோம். ஒருவேளை அவர் மறந்து விட்டார்களோ தெரியவில்லை’ என்று கேட்டார்களாம்.

“No, No” என்ற அந்த இரு பெண்களும் படபடப்போடு துடித்தார்களாம். தயவுசெய்து அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். எங்களை எப்பொழுது கூப்பிட வேண்டும் என்று அவருக்குத் தெரியும். “His Holiness is a great Saint“ (அந்த மஹாப்பெரியவாள் ஒரு புனிதமான, பெரிய சன்யாசி) அவராக எங்களை அழைக்கும் வரையில் நாங்கள் இங்கேயே தங்கி தியானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீமடத்திலேயே தங்கி பழம்-பால் மட்டும் சாப்பிட்டுவிட்டு தியானமே செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் மஹாப்பெரியவாள் அவர்களை அழைத்துவரச் செய்து போதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மணிக்குள் இப்படி சலித்துக் கொள்கிறீர்களே, அவர்கள் ஒரு சிறிய குறையைகூடச் சொல்லாமல் எவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் தெரியுமா என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். யாரோ என்னை ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு வருஷங்களாக மஹாப்பெரியவாளுடன் இருந்துவிட்டு இப்படி கேவலமாக நடந்து கொண்டேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். அந்த ஈஸ்வரனை புரிந்துகொள்ள நான் இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுக்க வேண்டுமோ தெரியவில்லையே என்று ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.

அப்பொழுது மஹாப்பெரியவாள் சட்டென்று எங்கள் பக்கம் வந்து தரிசனம் தந்தார்கள். அந்த மஹானை தரிசித்து நான் செய்த தவறுக்காக அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவசரமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அந்த இரண்டு ஜெர்மனிய பெண்களை சந்தித்து பேசினேன். அப்பொழுது அவர்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது. மஹாப்பெரியவாள் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த பொழுதே அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்ததை நாங்கள் பார்த்தோம்.

‘தயவுசெய்து மன்னியுங்கள். நீங்கள் இருவரும் வந்த காரணத்தை நாங்கள் அறிந்துகொண்டோம். நீங்கள் என்ன கேட்டீர்கள், அந்த மஹாஸ்வாமிகள் என்ன கூறினார்? உங்கள் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கொஞ்சநேரம் பேசவேயில்லை. அவர்கள் இந்த உலகத்திற்கு வருவதற்கே கொஞ்சம் நேரமாகிவிட்டது.

‘ஐயா! நாங்கள் இப்பொழுது ஆனந்த வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி எங்கள் சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்று தெரியவில்லை. அந்த மஹா ஸ்வாமிகளை உணரத்தான் முடியுமே தவிர அவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க எங்களுக்கு தெரியவில்லை. இந்த ஸ்வாமிகளை சந்திக்காமல் இவ்வளவு நாட்களை வீணே கழித்து விட்டோமே என்று வருத்தப்படுகிறோம்.

நாங்கள் இத்தனை வருடங்கள் வேதாந்தங்களைப் பற்றியும் சாஸ்திரங்களைப் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து வந்தோம். ஆனால் இன்றுதான் எங்கள் ஜென்மா ஆனந்தம் அடைந்தது. இங்கே வருவதற்கு முன்னால், இந்த மஹானை தரிசித்து அருளுரை பெறுவதற்கு முன்னால் நாங்கள் இருவரும் எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இந்த பெரியவாளை தரிசித்த பிறகு நாங்கள் இன்னும் எங்கள் படிப்பை ஆரம்பிக்கவேயில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம்.

(Before meeting His Holiness Sankaracharriar, we thought that we finished reading everthing. But after this meeting with His Holiness, we have come to a conclusion that we have not yet started the subject at all. He is really very great) என்று அனுபவித்து சொன்னார்கள்.

நம் ஸ்வாமிகளைப் பற்றி அன்னிய நாட்டவர்கள் சொன்னால்தான் நமக்கே அந்தப் பெரியவாளின் அருமையே புரிகிறது. அந்த வெளிநாட்டு பெண்களுக்கு இருந்த பொறுமை நம்மவர்களுக்க வருமா? நிச்சயமாக எனக்கு வராது. தாங்கள் இதுவரை கற்றதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தன்னை தாழ்த்திக்கொண்டு சொல்லக்கூடிய பக்குவம் நமக்கு வருமா? அல்லது அவர்களை போல் மூன்று நாட்கள் காத்திருந்து அதுவும் மஹாப்பெரியவாளின் உத்திரவு வரும்வரை நாம் காத்து கொண்டிருப்போமா?

ஆகவே என்னைவிட மஹாப்பெரியவாளை அந்த வெளிநாட்டவர்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறார்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பிலேயே! நமக்கும் அப்படி ஒரு உன்னதமான குணம் வர வேண்டுமானால் ‘கொஞ்சம் பொறுங்கள்’ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்." -

திருவரங்கம்...."எம்பெருமான் திருவாசல்...."

"எம்பெருமான் திருவாசல்...."

திருவரங்கம்....

அமைதி.......

உடையவர்  திருக்கண்களை மூடி வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார்.... கந்தாடையாண்டான் காத்திருந்தார்.....மடத்தில் இருந்த சீடர்கள்.... உடையவர் என்ன சொல்லப் போகிறார்..... என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள்.... "ஸ்ரீபெரும்புதூர் "அவர் அவதரித்த மண்.... அந்த திருத்தலத்தில் உடையவரின் திருமேனித் திரு ஒன்று நிறுவ நினைப்பது நியாயமே..... பதிமூன்று ஆண்டுகாலம் திருப்பாதம் பதித்து விட்டு திரும்பிய திருநாராயணபுரத்துக்கு தனது திருமேனித் திருவை செய்து வைத்துக் கொள்ள அனுமதித்தவர்.... இதற்கு எதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்....?

யாருக்கும் புரியவில்லை.... நெடுநேரம் கழித்து ராமானுஜர் திருக்கண்களைத் திறந்தார்...."சரி ஆண்டான்.... உமது விருப்பப்படியே நடக்கட்டும் " என்றார்....

சட்டென்று அங்கே மகிழ்ச்சிப் பெருக்கு நிறைந்து பரவியது....தாமதமின்றி வல்லுனரான சிற்பி ஒருவர் வரவழைக்கப்பட்டார் .... உடையவரை நேருக்கு நேர் தரிசித்து அமர்ந்து வரைந்து எடுத்துச் சென்று அவரது திருத்தோற்றத்தை அச்சில் வார்த்துக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்....

"ஸ்வாமி... தங்கள் திருமேனி.... எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்" கந்தாடையாண்டான் முன்னால் வந்து திருவை ராமானுஜர் முன் நிறுத்தினார்.... அவர் திருமுகத்தில் புன்னகை விரிந்தது.....

"அடடே.... அப்படியே எம்மை ஒத்திருக்கிறதே....."

"அப்படியானல்... இதை ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளப்பண்ணலாம் அல்லவா ....?"

"ஒரு நிமிடம்.... அதை இப்படிக் கொடு...." உடையவர் கரம் நீட்ட.... கந்தாடையாண்டான்அத் திருவை( சிலை) அவர் அருகே எடுத்து வந்து நீட்டினார்....

ராமானுஜர் அதை வாங்கி அப்படியே தன் திருமார்போடு அணைத்துக் கொண்டார்...."

"ஸ்வாமிக்கு திரு அவ்வளவு பிடித்துவிட்டது போலும்...." என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்த போது உடையவர்.... அவர்கள் அறியாத வேறொரு செயலில் ஈடுபட்டிருந்தார்....

" காலக்கணக்கற்று.... பாற்கடலில் எம்பெருமானை தாங்கி நிற்கும் சக்தி.... (ஆதிசேஷன்) ஞானக் கிடங்காக சேகரித்த பெரும் சக்தி..... கருணைக் கடலாக ஊற்றெடுத்த சக்தி.... தவம்.... ஒழுக்கம்... சீலம் காத்து ஐம்பெரும் ஆச்சார்யர்களின் திருவடி நிழலில் தங்கிப் பயின்ற பெரும் பாடங்களின் மூலாதார சக்தி.... தானே ஆசார்யராகி... ஜகதாசார்யர் என்று வழங்கப்பட்டதன் பிண்ணனியில் இயங்கிய பரம்பொருளின் அருளாசி வடிவச் சக்தி.... அனைத்தையும் திரட்டி அந்தத் திருவுக்குள் செலுத்தினார்.... தன்மானசீகத்தில் அரங்கனை நெக்குருகி வேண்டிக் கொண்டு.... திருவை கந்தாடை யாண்டானிடம் நீட்டினார்....

"ஆண்டான்.... இனி இது மக்களுடையது.... இதில் யாம் இருக்கிறோம்.... இதன் வடிவில் என்றும் அவர்களோடு இருப்போம்"

"தானுகந்த திருமேனி " என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள்.... உடையவரே அத் திருவை பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார்...." தை மாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்" என்றார்...

" அப்படியே ஸ்வாமி...." என்று திருவை வாங்கிக் கொண்டு கந்தாடையாண்டான் புறப்பட்டார்.....

ஒரு பெரும் வட்டம் சுற்றி வந்து நின்றாற்போல் இருந்தது ராமானுஜருக்கு.... நூற்றி இருபது வருட தேகயாத்திரை என்பது சிறிதல்ல....தேகமும்.... உள்ளமும் சலிக்காது ஒத்துழைக்காமல் இது சாத்தியமும் அல்ல.... ஒரு பிரமாண்ட கனவும் அதன் புனிதமும்.... மேலான மனிதகுலநேயமும் அதைச் சாத்தியமாக்கியது ....

சரணகதியே சர்வரோக நிவாரணி என்று அவர் முன்வைத்த தீர்வும்.... பேதமற்ற பேருலகு சார்ந்த பெரும் கனவும் மக்களைக் கவர்ந்தன.... தன்னலமற்ற சேவையில் விளைவது வைணவம்.... பேதம் காணாத விரிந்த மனமே அதன் அடையாளம்.... இங்கு வாழும் தேக யாத்திரையிலும் சரி ....தேகம் துறந்த ஆத்மயாத்திரையின் இறுதியில் அடையும் இடமானாலும் சரி....ஒளி பொருந்தியதாக ...... திருப்தி தருவதாக..... ( வாழும் போதும்.... வாழ்க்கைக்குப் பின்னும்) அர்த்தம் மிக்கதாக அமைய.... எளிய உபாயம் "சரணாகதி " என்ற குழப்பமற்ற வழி காட்ட லே அவர் வாழ்வின் சாரம்சமானது.....

போதுமே.....?இனியும் சுமந்து கிடக்க வேண்டாமே.... என்று அவருக்குத் தோன்றியது.... ஒரு கணம் தான்.... சட்டென்று அவர் திருமேனி நடுங்கித் தளர்ந்து போனது..... அது தை மாதம்..... அன்று பூச நட்சத்திரம்....

புரிந்துவிட்டது..... ஸ்ரீபெரும்புதூரில் அவரது சக்தி வடிவ திரு மேனித்திரு பிரதிஷ்டை நடந்து கொண்டிருந்தது..... மானசீகத்தில் அதை உணர்ந்த உடையவர்.... உடனே கிளம்பி கோயிலுக்குப் போனார்....

காஞ்சியை விட்டு வந்த நாளாகக் காத்து நிற்கும் கரிய பெருங் கடவுள்.... கண்ணழகன்..... கமல இதழழகன் .... அரவணைத்துக் காக்கும் கரத்தழகன்..... ஜீவநதியெனப் பொங்கும் கருணை குணத்தழகன்.... என்றும் பெரியவன்.... அனைத்திலும் பெரியவன்.....

சன்னதிக்குச் சென்று கரம் கூப்பி நின்றார்...." பெருமானே..... போது மே....?

என்ன கேட்டாலும் அடுத்தகணம் பதிலளிக்கும் அரங்கப் பெருமான் அன்று அமைதியாக இருந்தார்....

"கடமைப்பட்ட அனைத்தையும் செய்திருக்கிறேன்..... வைணவ தருமம் தழைக்கப் பொருத்தமான எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்திருக்கிறேன்.... அந்த தலைமுறை காலாகாலத்துக்கும் தொடரும்.... திருக்கோயில் நடைமுறைகள் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறேன்.... இதுவும் தழைக்கும்.... வைணவத் தல ஆக்கிரமிப்புகள் இனி இராது.... அப்படியே நிகழுமானால் தட்டிக் கேட்கவும் ... தடுத்துப் போரடவும்.... எதிர்வரும் தலைமுறை தயாராக இருக்கும்.... அதற்கான சித்தாந்த பலத்தை அளித்து.... ஆத்ம நிவேதன உபாயங்களைச் சொல்லித் தந்திருக்கிறேன்.....

இப்போதும் அரங்கன் அமைதியாகவே இருந்தார்.....

"எம்பெருமானே... தோள் துவண்டு யாம்... உம்மிடம் வந்து நிற்கவில்லை.... சுமக்க ஏராளமான தோள்கள் காத்திருக்கிறபோது ... விட்டுத் தந்து அழகு பார்க்க நினைக்கிறேன்.... கூரே சருக்கு கேட்டதும் கொடுத்தாயே...? அந்த பாக்கியம் அடியேனுக்கில்லையா... 

இப்போது.... அவன் குறிப்பால் உணர்த்தினான்...."சரி.... இன்னும் ஏழு தினங்கள் "

கரம் குவித்து.... வணங்கி விடைபெற்றார் ராமாநுஜர்.... மடத்துக்கு திரும்பும்போது மிகுந்த உற்சாகமாக இருந்தார்.... இன்னும் ஏழு தினங்களையும் அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும்....." எம்பெருமான் திருவாசல் திறந்து விடுவான்"

தேசமெங்கும் பரவியிருக்கும் தமது சீடர்கள் அனைவரையும் திருவரங்கம் வரச் சொல்லி செய்தி அனுப்பினார் .....

"உய்ய ஒரே வழி உடையவர் திருவடி"

ஸ்ரீவைஷ்ணவம் ஓரு அற்புதம்

ஸ்ரீவைஷ்ணவம் ஓரு அற்புதம் 

என்னபெயர் சொல்லி இறைவனை அழைத்தாலும், முக்தி வேண்டுவோர்க்கு, அவன் திருவடிகளே சாஸ்வதம் 

பாண்டிய மன்னர் வல்லபதேவன் ஒருநாள் இரவு நகர சோதனைக்காக புறப்பட்டார். ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவரை எழுப்பிய மன்னர், 'நீர் யார்?' எனக் கேட்டார். 
''மன்னா! நான் ஒரு வழிப்போக்கன். 

கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, இப்போது சேதுக்கரையில் நீராடச் செல்கிறேன். இன்றிரவு இங்கு தங்கி யிருக்கிறேன்'' என்றார்.
''பக்தரான நீங்கள் ஏதாவது பயனுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார் மன்னர்.
ஸ்லோகம் ஒன்றை சொல்லி அதற்கான பொருளையும் கூறினார் முதியவர். 

“இரவுக்கு தேவையானதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் தேட வேண்டும். அதைப் போல மறுமைக்கு (அடுத்த பிறவி) வேண்டியதை இம்மையில் (இப்பிறவி) தேட வேண்டும்'' என்றார்.
முதியவரை வணங்கிய மன்னர் அங்கிருந்து நகர்ந்தார். 

மனதிற்குள், “முதியவர் கூறியதில் மறுமைக்கு வேண்டியதை இதுவரை யோசிக்கவில்லையே'' என வருந்தினார் மன்னர்.
மறுநாள் காலையில் குலகுருவான செல்வ நம்பியை அழைத்தார்.
“மறுமையில் இன்பம் அடைய என்ன வழி?” எனக் கேட்டார். 
“மன்னா! கல்வியில் சிறந்த பண்டிதர்களை ஒன்று கூட்டினால் விடை கிடைக்கும்'' என்றார் செல்வநம்பி. 
அதன்படி பண்டி தர்களுக்கு போட்டியும், பரிசும் அறிவிக்கப்பட்டது. சரியான விடை அளிப்போருக்கு சன்மானமாக அரண்மனை வாசலில் மூங்கில் குச்சி நாட்டப்பட்டு, அதன் உச்சியில், பொற்கிழி கட்டவும் உத்தர விடப்பட்டது. 

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றினார். மன்னரின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். 
'யாமே பரம்பொருள்! எம்மை வழிபட்டால் மறுமை இன்பம் கிடைக்கும்' என்ற உண்மையை நிலைநாட்ட உத்தரவிட்டார்.
ஆழ்வாரும் 'நாராயணனே பரம்பொருள்' என்பதை வேதத்தின் அடிப்படையில் மன்னரிடம் நிரூபித்தார். அப்போது மூங்கில் கழி தானாக வளைந்து நின்றது. பொற்கிழியைப் பெற்ற ஆழ்வார் மகிழ்ந்தார். அப்போது கருடவாகனத்தில் காட்சியளித்தார் பெருமாள். ஆனந்தக்களிப்பில் 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரம் பாடி மகிழ்ந்தார் பெரியவாழ்வார்.

வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது

"வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது எனக்கு அந்தத் தகுதி இல்லை"-அலறிய பெண்மணி

"பூஜையிலும் கலந்துக்கலாம் உன்னோட   ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்"--பெரியவா

(பலமுறை வெவ்வேறு ஆசிரியர்களால் போஸ்ட் செய்யப்பட்ட அற்புத கட்டுரை)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

.நன்றி- குமுதம் லைஃப்

(31-05-2017 தேதியிட்ட-இதழ்)

கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு முன்னால ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஸ்ரீமடத்துல, சுவாசினிபூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா. பரமாசார்யா முன்னிலைல நடக்கற பூஜைங்கறதால எல்லாவிஷயங்களையும் பார்த்துப் பார்த்து செஞ்சுண்டு இருந்தா. எல்லாரும் பரபரப்பா இயங்கிண்டு இருந்தஅந்த சமயத்துல ஒரே ஒரு பொம்மனாட்டி மட்டும் ரொம்பவே சோர்வா, அசிரத்தையா இருக்கிறமாதிரி நின்னுண்டு  இருந்தா,

முப்பது முப்பத்தஞ்சு வயசுதான் இருக்கும் அவளுக்கு. அம்பது அறுபது வயசுக்காராளே சுறுசுறுப்பா இயங்கிண்டு இருக்கறச்சே,அவ அப்படி நின்னது பலருக்கும் ஒரு மாதிரி இருந்தது. சிலர் அவளைப் பார்த்துட்டு, " அதோ அவளைப்  பாரு...பூ இல்லாம பொட்டும் வச்சுக்காம..இவளை எல்லாம்யார் இங்கே வரச் சொன்னா?" அப்படின்னு முணங்கினா. சிலர், அவளுக்குத் தர பூவும் பொட்டும் எடுத்துண்டு போனா,ஆனா,அவ அதை கவனிக்காத மாதிரி நாசூக்கா நகர்ந்துண்டா.

பூஜைக்கான ஏற்பாடுகளைவிட அவளைப் பத்தின பேச்சே கொஞ்சம் அதிகமா இருந்த சமயத்துல அங்கே வந்தார் பரமாசார்யா. கூட்டம் மொத்தமும் சட்டுனு அமைதியாச்சு.  அருள்ததும்ப வந்து உட்கார்ந்த ஆசார்யா, சுத்துமுத்தும் ஒருதரம் பார்த்துட்டு, அந்தப் பொம்பளையைக் கூப்பிடச் சொன்னார்.

பவ்யமா வந்து அவர் முன்னால் நின்னா அந்தப் பொம்பளை, "சுவாசினி பூஜை நடக்கற இடத்துல நீ மட்டும் இப்படி மூளி நெத்தியோட இருக்கலாமோ? இந்தா இதை இட்டுக்கோ!" கை நிறைய குங்குமத்தை எடுத்து நீட்டினார் பரமாசார்யா.

"வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது!" என்று அலறி சொன்னவ அதுக்கான காரணத்தையும்  சொல்ல ஆரம்பிச்சா

,"என்னோட ஆத்துக்காரர் இந்திய ராணுவத்துல இருந்தார். ஆறுமாசத்துக்கு முன்னால எனக்கு மிலிட்டரிலேர்ந்து ஒரு கடுதாசி வந்தது. பார்டர்ல நடந்த ஒரு சண்டைல அவர் செத்துப் போயிட்டார்னும், எதிரிகள்கிட்டே சிக்கிண்டுட்ட  அவரோட உடல்கூட கிடைக்கலைன்னும் அதுல எழுதி இருந்தா!

எனக்கு லோகமே இருண்டுடுத்து.இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு அவருக்கு செய்ய வேண்டிய கர்மாவையெல்லாம் செஞ்சுண்டேன். அவரோட ஆன்மா சாந்தி அடைய, நான் இன்னும் அவருக்குச் செய்யவேண்டிய கர்மா என்னன்னு உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கதான் இங்கே வந்தேன் இங்கே வந்தப்புறம்தான் இப்படி ஒரு பூஜை நடக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. இந்த சமயத்துல நான் இங்கே இருக்கிறது  தப்புதான் .மன்னிச்சுடுங்கோ. நான் இன்னொரு நாள் வந்து கேட்டுக்கிறேன்" கைகூப்பி நமஸ்காரம் பண்ணினா.

சட்டுன்னு சிலவிநாடி கண்ணை மூடிண்டார் பெரியவா. அதுக்கு அர்த்தம் தெரியாம, அங்கே இருந்த பலரும் அவமேல பரிதாபப்பட, மெதுவா நடந்து வெளில போகத்தயாரானா, அந்தப் பெண்மணி.

"ஒன்னை யாரு போகச் சொன்னா? நீ இங்கே தாராளமா  இருக்கலாம். பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட  ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்" பெரியவா குரல் கேட்டு சட்டுன்னு திரும்பி வந்தவகிட்டே நிறைய   குங்குமத்தை எடுத்துக் குடுத்தார் பரமாசார்யா

கை நடுங்க, உடல் சிலிர்க்க,கண்ணுல ஜலம் முட்டிண்டு வழிய, பெருமூச்சு வாங்க அதை வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டா அந்தப் பெண்மணி. மகாபெரியவாளே அப்படிச் சொன்னதுக்கு அப்புறம் அங்கே மறுவார்த்தை எழுமா? எல்லாருமா அந்தப் பெண்ணிற்கு மஞ்சள், குங்குமம், புடைவை, ரவிக்கைத் துணி,திருமாங்கல்யச் சரடு,புஷ்பம்னு  எல்லாம் தந்து பூஜையிலும் கலந்துக்க வைச்சா.

அடுத்த வெள்ளிக்கிழமை மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தா, அதே பெண்மணி.

"பெரியவா...ஒரேடியா போய்ட்டார்னு நாங்க எல்லாரும் நினைச்சுண்டு இருந்த என்னோட ஆத்துக்காரர் உங்க ஆசிர்வாதத்துல, இதோ உசுரோட வந்துட்டார். இந்தியாவோட பார்டர்ல காவலுக்கு இருந்த  இவர்.எதிரிகளோட நடந்த சண்டைல குண்டடிபட்டு விழுந்துட்டாராம்.இவர் செத்துட்டதா நினைச்சு, இழுத்துண்டு போய் எங்கேயோ மலைமேல் வீசிட்டுப் போயிட்டாளாம் எதிரிகள். நம்ம நாட்டு வீரர்கள் ஒரு வாரம் தேடி  அலைஞ்சுட்டு ,உடலும் கிடைக்காததால இறந்துட்டதா தகவல் சொல்லிட்டா.

ஆனா, மலைமேல கிடந்த இவரோட உடல்ல கொஞ்சநஞ்சம் உசுரு ஒட்டிண்டு இருந்திருக்கு. யாரோ மலைஜாதிக்காரர் பார்த்துட்டு ஏதோதோ வைத்தியம் பண்ணி பொழைக்க  வைச்சிருக்கா .விழிச்சு எழுந்ததும்,அவாளுக்கு நன்றி சொல்லிட்டு எப்படியோ தடுமாறி தத்தளிச்சு ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டார்.

அன்னிக்கு எனக்குக் குங்குமத்தைக் குடுத்த நீங்கதான் மலைவாசி ரூபத்தில இருந்து இவரை காப்பாத்தியிருக்கேள்" தழுதழுப்பா சொன்னா. ஆத்துக்காரரோட சேர்ந்து ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

மென்மையா புன்னகைச்ச ஆசார்யா, "மலைவாசின்னா யாரு? சதா மலைவாஸம் பண்ற அந்தப் பரமேஸ்வரன்தான். மலைவாசி. அவன்தான் உன் ஆத்துக்காரரை காப்பாத்தியிருக்கான்.அதனால இனிமே உங்களுக்கு எந்தக்கொறையும் வராது. க்ஷேமமா இருங்கோ!" கை நிறைய குங்குமத்தைக் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

சந்தோஷமா வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டு,  ஆனந்தமா புறப்பட்டா அந்தத் தம்பதி.

ஆன்மீக வழியில்

பி சரவணன் சண்முகவள்ளி

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்:

1.  ஆண்டாள் : திருப்பாவை : 489
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

திருப்பள்ளியெழுச்சி பாடுதல்

2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய், 
 மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி, 
 எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும், 
 அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.

துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல்

3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருவிளக்கு ஏற்றுதல்:

4. பொய்கையாழ்வார் : 2082
வையம் தகளியா வார்கடலே நெய்யாக, 
 வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய 
 சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, 
 இடராழி நீங்குகவே என்று

5. பூதத்தாழ்வார் :  2182
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, 
 இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி 
 ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு 
 ஞானத் தமிழ்புரிந்த நான்

விளக்கு ஒளியில் பெருமாளை சேவித்தல்:

6. பேயாழ்வார் :  2282
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் 
 அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் 
 பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று

திருமஞ்சனம்  செய்வித்தல்:

7. திருமங்கையாழ்வார்: திருக்குறுந்தாண்டகம்: 2046
முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து,
அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு,
என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும்,
அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே.

மாலை சூட்டுதல்:

8. திருமங்கையாழ்வார்: திருக்குறுந்தாண்டகம்: 2047
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம்
தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க்
கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும்,
தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே!

தூபம் காட்டுதல்:

9. நம்மாழ்வார்: திருவிருத்தம் : 2498
சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே.

கண்டு அருளப்பண்ணுதல்:

10. ஆண்டாள் : நாச்சியார் திருமொழி : 593
இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே

ஒரு சில போற்றும் பாசுரங்கள்:

11. பெரியாழ்வார் : திருப்பல்லாண்டு : 1 & 2
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் 
 மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு.  
 அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு 
 வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு 
 வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு 
 படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே
12. திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி  : 956
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம், 
 நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும், 
 வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும், 
 நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
13. மதுரகவியாழ்வார் : கண்ணி நுண்சிறுத்தாம்பு  : 937
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் 
 பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில், 
 நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால், 
 அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.
14. திருப்பாணாழ்வார்: திருவரங்கம்: 931
பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன் 
 வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான், 
 கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்,திரு 
 வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.
15. திருமங்கையாழ்வார்: திருவிடந்தை 1108
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த 
 அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால், 
 குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த 
 இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே
16. திருமங்கையாழ்வார்: திருவெள்ளறை: 1369
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே!
17.  பெரியாழ்வார்:  திருவரங்கம்: 420
தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்*
சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்*
பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.
18. குலசேகர ஆழ்வார் : திருவேங்கடம் : 685
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
19. திருமங்கையாழ்வார்: சிங்கவேள்குன்றம்: 1008
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன் 
 பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம், 
 பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச் 
 செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
20. திருமங்கையாழ்வார்: திருபுள்ளம்பூதங்குடி: 1356
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே,
21. திருமங்கையாழ்வார்: திருக்கோவலூர்: 1146
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற, 
 காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை, 
 சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை, 
 தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
22. திருமங்கையாழ்வார்: திருவேங்கடம் : 1046
வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய், 
 நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ., 
 சிந்தாமணியே திருவேங்கடம்மேய 
 எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே.
23. திருமங்கையாழ்வார்: திருவள்ளூர் : 1066
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.
24. நம்மாழ்வார்  : திருமாலிருஞ்சோலை: 3129
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய், 
 தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, 
 மழுங்காத ஞானமே படையாக, மலருலகில் 
 தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
25. நம்மாழ்வார் : திருவேங்கடம் : 3129
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
 நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
 நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
 புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
26. நம்மாழ்வார்: திருக்குடந்தை : 3427
வாரா வருவாய் வருமென் மாயா. மாயா மூர்த்தியாய், 
 ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், 
 தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய். திருக்குடந்தை 
 ஊராய்.உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
27. நம்மாழ்வார்  : திருவிண்ணகர்: 3481
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
 பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
 மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
 தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே
28. திருமங்கையாழ்வார் : திருவாலி : 1188
வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என் 
 சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே, 
 அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும் 
 செந்தழல் புரையும் திருவாலி யம்மானே
29. நம்மாழ்வார்  : திருவனந்தபுரம்: 3911
மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே
30. திருமங்கையாழ்வார்: திருஇந்தளுர் : 1335
முன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற*
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!
31. திருமங்கையாழ்வார்: திருவல்லிக் கேணி 1074
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும் 
 இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை, 
 குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால, 
 இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே
32. குலசேகர ஆழ்வார் : தில்லை திருச்சித்ரகூடம்: 747
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*
33. நம்மாழ்வார்: சிரீவர மங்கலநகர் : 3409
கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட.எங் கார்முகில் வண்ணா, 
 பொருளல் லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய், 
 தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு, 
 அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே
34. திருமங்கையாழ்வார்: திருகடல்மல்லை : 1551
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க, 
 உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா, 
 கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே, 
 வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே
35. திருமங்கையாழ்வார்: திருநறையூர் : 1543
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர் 
 மான மழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும் 
 தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம் 
 நானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே
36. திருமங்கையாழ்வார்: தேரழுந்தூர்  : 1601
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று 
 பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை, 
 அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர் 
 நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே
37. நம்மாழ்வார்: திருக்குறுங்குடி : 3005
செல்வநாரண னென்றசொல்கேட்டலும், 
 மல்கும்கண்பனி நாடுவன்மாயமே, 
 அல்லும்நன்பகலு மிடைவீடின்றி, 
 நல்கியென்னை விடான்நம்பி நம்பியே
38. திருமங்கையாழ்வார்: திருக்கண்ணபுரம் : 1732
வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, 
 எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ 
 கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த 
 மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே
39. திருமழிசையாழ்வார் : 2440
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக் 
 கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை 
 கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி 
 ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்
40. திருமழிசையாழ்வார் : 2388
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் 
 நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக 
 நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே 
 நீயென்னை யன்றி யிலை
41. திருமங்கையாழ்வார் : திருவெள்ளக்குளம் : 1308
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியே னிடரைக் களையாயே.
42. திருமங்கையாழ்வார்: திருநாகை : 1761
வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!
43. நம்மாழ்வார் : திருக்கோளூர் : 3517
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
44. திருமங்கையாழ்வார்: செம்பொன்செய் கோயில்  : 1276
களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.
45. நம்மாழ்வார் : திருவண்பரிசாரம்: : 3699
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற்கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே.
46. நம்மாழ்வார் : திருவேங்கடம் : 3556
அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே.
47. ஆண்டாள் : திருப்பாவை : 502
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
 பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
 பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
 குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
 இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
 எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
 உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
 மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
48. திருமங்கையாழ்வார் தனியன்
மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று,
கோலிப் பதிவிருந்த கொற்றவனே, -- வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையை,
துணித்தருள வேணும் துணிந்து
49. இராமாநுச நூற்றந்தாதி :
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே
மாலை விளக்கேற்றுதல்:

50. பெரியாழ்வார்: 200

இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.

தாலாட்டு பாடுதல்:

51. குலசேகர ஆழ்வார் : 728
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ

திருப்பள்ளி கொண்டபின்

52. பெரியாழ்வார் : 451
உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்

கோயில் பதாகை [கோயில் ஒன்று பெருமாள் இரண்டு]

>> கோயில் ஒன்று பெருமாள் இரண்டு <<

சென்னை ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில் ‘கோயில் பதாகை’ என்கிற ஊர் இருக்கிறது. இந்த ஊர்க் கோயிலின் விசேஷம், ஒரே கோயிலில் இரு பெருமாள்கள் அருள் புரிய, இரு கருடன்களும் இருக்கின்றன. ஒன்று நின்ற நிலையிலும், மற்றொன்று அமர்ந்த நிலையிலும் மிக அழகாகத் தோற்றமளிக்கின்றன.

கருடன் இருக்கும் காரணத்தினால் தோஷ நிவர்த்தி என்று பலர் இங்கு வருகின்றனர். வியாழக்கிழமையன்று கருடனுக்குத் திருமஞ்சனமும் அர்ச்சனையும் செய்யப்படுகின்றன. அந்தச் சமயம் கருடனுக்குப் பச்சை நிற வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

இந்தக் கோயில் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். இங்கு இருக்கும் பெருமாள்களில் ஒருவர் வைகுண்டநாதனாகவும் மற்றொருவர் சுந்தரராஜனாகவும் அருள் பாலிக்கிறார்கள். இரண்டு மூர்த்தங்களும் வெவ்வேறு திருவடிவம் பெற்று வித்தியாசமாக இருக்கின்றன. பார்க்கப் பார்க்க தெய்வீக அலை அடிப்பதை உணர முடிகிறது.

கொடி மரம் கிழக்கே பார்த்து இருக்கிறது. அந்த இடத்தில் பலிபீடமும் கருடனும் இருக்க, பிருகு மகரிஷி ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜர் சன்னிதியைப் பார்த்துக் கைகூப்பித் தொழுது நிற்கிறார். சுந்தரராஜர் பெயருக்கேற்றபடி அழகோ அழகு! அவரது வலப் பக்கத்தில் தேவி சுந்தரவல்லி அமர்ந்திருக்கிறார்.

மேற்குப் பகுதியில் வைகுண்டப் பெருமாள் அமர்ந்திருக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்து அருள் புரிகின்றனர். பெருமாள் கையில் சக்கரமும் உள்ளது. அருகே, உப்பிலியப்பன் கோயில் போல் மார்க்கேண்டய மகரிஷி வணங்கிய நிலையில் உள்ளார். எதிரில் கருடனும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயிலில் பிருகு மகரிஷியும் மார்க்கண்டேய ரிஷியும் இருக்கும் காரணம் என்ன?
ஒரு சமயம் இந்த இரு ரிஷிகளும் தங்களுக்கு சாயுஜ்ய பதவி வேண்டித் திருமாலை நோக்கி தவமிருந்தனர். அவர்கள் தவமிருந்த இடம் ஸ்வேத வனம் – அதாவது முல்லைக்காடு. அங்கு மிக அழகான ஐரமத புஷ்கரணி ஓடிக் கொண்டிருக்க, பிருகு மகரிஷி நதியின் கிழக்குப் புறமும் மார்க்கண்டேய மகரிஷி மேற்குப் புறமும் அமர்ந்து தவம் புரிந்தனர். முதலில், காலை பிரும்மமுகூர்த்த நேரத்தில் மார்க்கண்டேயருக்குத் திருமால் வைகுண்டநாதனாக ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சக்கரத்துடன் காட்சியளித்தார்.

மாலை நேரம் பிரதோஷ வேளையில் பிருகு முனிவருக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜப் பெருமாளாகக் காட்சி கொடுத்தார். முனிவர்களுக்கு மிகுந்த பூரிப்பு! அவர்கள் விஸ்வகர்மாவை சோமச்சந்த விமானத்துடன் கூடிய ஒரு கோயிலை அமைக்கும்படி வேண்டினார்கள். அதன்படி அமைந்தது இந்த ஆலயம். 

இந்தக் கோயில் பல்லவர் காலத்தில் தொண்டைமானால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. ஆனாலும் சோழர் காலத்தில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கின்றனர். இரு ரிஷிகளுக்கும் சாயுஜ்ஜய பதம் கிடைத்ததால் இந்த இடத்திற்குப் ‘பதாகை’ என்கிற பெயர் வந்ததாம்.

இங்கு வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்குத் திருமஞ்சனம் விசேஷமாக நடக்கிறது.

பௌர்ணமியிலும் விசேஷப் பூஜை நடத்தப்படுகிறது. அமாவாசையன்று பெருமாள்கள் இருவரையும் வழிபட்டால் வேண்டியது நடந்துவிடுமாம். தொடர்ந்து 4 அல்லது 6 அமாவாசை வந்து மக்கள் வழிபடுகிறார்கள்.

இந்தக் கோயிலுக்கு ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 61 – பி எண்ணுள்ள பேருந்து ‘கோயில் பதாகை’ வழியே சென்று கோயிலுக்கு அருகாமையிலேயே கொண்டு விடுகிறது. தவிர, ஷேர் ஆட்டோக்களும் ஓடுகின்றன. சென்னைக்கு வருபவர்கள் இந்த அதிசயக் கோயிலைப் பார்த்து அருள் பெற்றுச் செல்லலாம்!