நம்ம சந்த்ரமௌளீஶ்வரருக்கு வேணாம்!
சென்னையில் மிக ப்ரபலமான ஹோட்டல் நடத்தும் ஒருவர், ஶ்ரீமடத்தில் ரொம்ப பக்தி உள்ளவர். பொது வாழ்விலும் மிகச் சிறந்த பேர் பெற்றவர். லக்ஷக்கணக்கில் ஸொத்து.
1958-ல் பெரியவா சென்னையில் முகாம்.
இந்த ஹோட்டல் முதலாளி பெரியவாளிடம் வரும்போதெல்லாம் மறக்காமல் ஒரு ப்ரார்த்தனையை வாய்விட்டு சொல்வார்...
" பெரியவாளுக்கு பாதபூஜை பண்றதுக்கு, அடியேனுக்கு பெரியவா.... அனுக்ரஹம் பண்ணணும்"
"அப்றம் பாக்கலாம்"
எத்தனை முறையானாலும், இதுதான் பெரியவாளின் பதிலாக இருந்தது.
ஸம்மதமும் இல்லை, மறுப்பும் இல்லை.
இதை பற்றித் தெரிந்த ஒரு பாரிஷதர், அந்த ஹோட்டல்காரருக்காக பெரியவாளிடம் பரிந்தார்..
"பெரியவா.....அவர் ரொம்ப நல்லவர்.... நெறைய தான தர்மம் பண்றவர். மடத்துக்கும் நெறைய பண்றார். கொழந்த குட்டி இல்ல.... அவருக்கு........"
"ஸெரி.... இப்போ அதுக்கென்ன?..."
"இல்ல..... ரொம்ப நாளா பெரியவாளுக்கு பாதபூஜை பண்ணணுன்னு கேட்டுண்டே இருக்காரேன்னு...."
பெரியவா ஶாந்தமாக பதில் சொன்னார்
"பாரு..... அவன் நல்லவன், தர்மஶீலன், பக்தன்...ங்கறது எனக்கு தெரியும். நா... அவனப் பத்தி யார்கிட்டயாவது தூஷிச்சு இருக்கேனா?"
"இல்ல பெரியவா... மடத்துக்கு ஏதாவது பண்ணனும்னு ஆசைப் படறார். அவரோட பெரிய அரண்மனை மாதிரி இருக்கற பங்களாவையே மடத்துக்கு எழுதி வெக்கறேங்கறார்...!"
"அதத்தான் ஏன்?...ங்கறேன்! அவன் தர்மஶீலன்..ன்னு சொல்றேள். நெறைய கோவில்களுக்கு, தன்னால முடிஞ்சதை, நெறைய செய்யட்டுமே! நா... வேணான்னு சொல்லலியே! மடத்துக்கு குடுத்தாலும் அதே தர்ம கார்யங்களுக்குத்தானே செலவாகப் போறது? அந்த தர்மத்தை.... அவனே டைரக்டாப் பண்ணலாமே?........"
பெரியவா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து விட்டு, ஒரு மஹா ஸத்யோபதேஸத்தை, அந்த ஹோட்டல் முதலாளியை முன்னிட்டு, அத்தனை பேருக்குமாக ப்ரகடனமாக கூறினார்.
"அதோட, அவன் ப்ராஹ்மணன். வேதபாராயணம் பண்ண வேண்டியவன்! வேதத்தால மட்டுமே ஜீவனம் பண்ண வேண்டியவன்..! ஆனா... அன்னத்தை வித்துண்டிருக்கான்.! மஹாபாபம்! இவனோட ஸொத்தெல்லாம் அன்ன விக்ரியத்தால ஸம்பாதிச்சதுதானே?......
அந்தப் பணம் 'நம்ம சந்த்ரமௌலீஶ்வரருக்கு' வேணாம்! அப்டிப்பட்ட பணம் தேவையா?ன்னு சொல்லுங்கோ....."
ஒருத்தருக்கும் பேச வாய் எழவில்லை.
எப்படி பேசுவார்கள்?
ஸத்யந்தானே!
ஆனாலும் ஹோட்டல் முதலாளி, விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்ததால், ஒருநாள் ஸமஷ்டி பிக்ஷை நடந்தபோது, அவரும் அதில் பங்கு பெறும் பாக்யம் பெற்றார்.
தவறானாலும், அவரும் தன் குழந்தை என்ற வாத்ஸல்யத்தால் இந்த அனுக்ரஹம்........
சேத்துப்பட்டில் அவருடைய பங்களாவை, அவருடைய காலத்துக்கப்புறம் ஶ்ரீ மடத்துக்குப் போய்ச் சேரவேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.
ஆனால் ஸ்ரீமடம் நிர்வாகப் பொறுப்பில் நம் பெரியவா இருந்த காலம் வரை, அந்த மாபெரும் மாளிகை ஶ்ரீமடத்துக்கு ஸொந்தமாகவில்லை.
லக்ஷங்களால் மட்டுமில்லை, கோடி கோடியாக கொட்டினாலும், ஸத்யமும், தர்மமுமில்லாத விஷயம் எதுவும் தர்மஸம்வர்த்தனியான நம் பெரியவாளிடம் செல்லாது.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களுக்கு ஸமர்ப்பணம்