Sunday, July 12, 2020

கவிதாயினியின் காதல்

கவிதாயினியின் காதல் (சிறுகதைகள் சீ2 – 09)
#ganeshamarkalam

சிலருக்கு கோர்வையா கதைசொல்ல வரும். சிலருக்கு அருமையா கவிதை எழுத. ரெண்டு திறமையும் இருந்தால்? ஸ்ரீ அப்படித்தான். நான் ஸ்ரீயை எப்போ முதல் முதல்ல சந்திச்சேன்? சொல்ரேன்.

அவதார் ரிலீஸ் ஆகி பிரபலமாகிடுத்துன்னும் நாம போய் பாக்கலைன்னா நம்பளை யாரும் மதிக்கமாட்டான்னு ஒரு பயம் வந்தது. ஃபோரம் மாலில் போய்ப்பாத்துடலாம்னு போயிட்டேன். படமும் பாத்தாச்சு. வெளீலெ வந்து எஸ்கலேடரில் இறங்கினப்புரமும் அந்த படத்தின் பிரமிப்பு அகலலை. எதுத்தாப்புலே வரவா எல்லாம் 15அடி உயரமா தெரிஞ்சா. மாலில் ஏகப்பட்ட கூட்டம். திரும்பிப்போய் தனியா என் பேச்சலர் அப்பார்ட்மென்டில் படுத்துண்டு கிடக்கத்தானேப்போரோம், இங்கேயே கொஞ்சநாழி சுத்திண்டிருந்துட்டு போனா என்னன்னு தோணித்து.

பேச்சலர்னு காதில் விழுந்ததோ? நான் பேச்சலர் இல்லை, கல்யாணம் ஆச்சு, பிரமோஷனில் இங்கே வந்துருக்கேன். சென்னையில் என் பொண்ணுக்குக் கைக்குழந்தை, அதுக்கு ஒத்தாசையா ஆத்துக்காரி அங்கேயே தங்கி சிசுருஷை பண்ரேன்னு. நான் இங்கே கைச்சமையல். ஒரு பெட்ரூம் செட் ப்ரிகேட் கார்டனியாவில். இப்போ சினிமா பாத்ததும் பசிச்சது. சரின்னு மெக்டொனால்ட்ஸ் போலாம்னு ஆசை. 

ஆர்டர் கொடுத்து லைனில் நின்னு வாங்கிண்டு திரும்பரச்சே பாத்தா உக்கார இடமே இல்லை. ஒரு கார்ணரில் ரெண்டு சீட் டேபிளில் ஒண்ணு காலி. இன்னொண்ணில் ஒரு பெண்மணி, தனியா, இப்போதான் சாப்பிட ஆரம்பிச்சிருக்கா. வேர வழியில்லை, “நானும் சேர்ந்துக்கலாமா”ன்னு கேட்டதுக்கு, வாய் நிறைய பர்கரை வச்சிண்டு தலையை ஆட்டினாள். அதை சம்மதம்னு புரிஞ்சிண்டேன்.

அவ்வளவு கிட்டக்க ஒரு முன்னப்பின்ன தெரியாத பெண்மணியோட ரொம்பநாளாச்சு. கிட்டக்கன்னா ஒண்ணரை அடி. பாக்க அழகாத்தான் இருந்தா. இனம் புரிஞ்சுக்க முடியாத ஒரு வசீகரம். அது அந்த பெரீய ஆழம் காணமுடியாத கண்ணிலேந்தா, இல்லை சாப்பிட்டு அடுத்த வாய்க்காக சுழியும் உதடுகளிலிருந்தான்னு புரிஞ்சுக்கரத்துக்குள்ள அவள் போட்டிருந்த துப்பட்டா தோளிலேந்து நழுவ இவளிடம் ஆண்களை ஆகர்ஷிக்க பல ஆயுதங்கள் வச்சிருக்கான்னு அப்பட்டமா தெரிஞ்சது. 

தாத்தா ஆகிட்ட வயசில் இப்படியெல்லாம் மனசை அலய விடப்பிடாதுதான். சரின்னுட்டு நான் என் பிளேட்டை கவனிக்க ஆரம்பிச்சேன். 3 மணிநேரம் தியேட்டரில் இருந்துட்டு வந்ததில் கண் சித்த சிவ சிவன்னு, இமைகளை இன்னும் வெளிச்சத்துக்கு பயந்து இடுக்கிண்டு நானும் என் பசியை போக்கிக்க ரெண்டு ரெண்டா ஃபிங்கர் சிப்ஸை சாஸில் முக்கி முழுசா உள்ளே தள்ளிக்கரதை அவளும் சுவாரஸ்யமா ரசிக்க ஆரம்பிச்சா.

என்ன தோணித்தோ, “ஐ ஏம் ஸ்ரீ”ன்னு கையை டக்குன்னு நீட்டிட்டா! திடுக்கிட்ட நான் இப்படி ஒரு நீண்ட அழகான விரல்களை பிடிச்சுக்கலைன்னா அப்புரம் காலம்பூரா மனசு கஷ்டப்படும்னு தெரிஞ்சு “மி, சந்தோஷ்”னு பிடிச்சிண்டேன். விடரத்துக்கு கொஞ்சம் நாழி ஆச்சு. அப்புரம் ஏன் விட்டோம்னு பட்டது. மெல்ல அங்கே அனாவசியத்துக்கு வந்திருந்த கூட்டத்தை பத்தி பேசினோம். 

“இந்தமாதிரி சந்திப்பு நேரும்போது சுத்துவட்டாரத்தில் யாரும் கண்ணில் தென்படக்கூடாது”ன்னு நான் சொல்ல, நான் சொன்னதில் அர்த்தத்தை கற்பனை செஞ்சு பாத்துட்டு அவளும் “நீங்க சொல்ரது சரி, கற்பனைகளை முடக்கும் கூட்டம் பாத்தால் நானும் காத தூரம் போவேன்”கிரா. அதுக்கு நான் “காத தூரம் போங்கள், ஆனால் காதை கொடுத்துவிட்டுப் போங்கள், நல்ல பல கதைகள் பேச என்னிடம் ஆசை இருக்கு, மெல்லச் சொல்லவேண்டிய கதைகள், சத்தமிட்டால் பலருக்கும் தெரிஞ்சிடும்”னு பதில்.

இதெல்லாம் எப்படி எனக்கு கோர்வையா சொல்ல வந்ததுன்னு தெரியலை. ஒரே சமயத்தில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து “நீங்கள் கவிதை எழுதுவேளா”ன்னு. ஓரே கேள்வி ரெண்டு பக்கத்திலேந்து வந்து மோதி உடைந்து விழுவதை பார்த்து அவள் சிரிக்கரா.

நான் முந்திக்கரேன்: “எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம், நீங்க சொன்ன அதே காத தூரம், ஆனால் மனதில் ஆசை, காதல் வரும்போல இருகச்சே கவிதை வரலாம், நீங்கள்?” அவள் “நான் தமிழில் கவிதை எழுதுவேன். அப்பப்போ. பத்திரிகைகளிலும் வந்திருக்கு”. “அப்படியா எந்தப்பத்திரிகை?” “ஆனந்தவிகடன்”. “அப்படியா? நான் பாத்ததேயில்லையேன்னு சொல்ல அவள் நான் என் பெயரில் எழுதமாட்டேன், புனைப்பெயரில் “ஏழுத்தாணி” என்று. ஸ்ரீ என்ற அழகான பெயரை மறைச்சு ஏதோ ஆணியாம்! குத்துமோ? அப்போது நான் படிச்சது ஞாபகத்தில் வந்தது. “ஆமாம் படித்திருக்கிரேன். ரொம்ப நன்னா இருந்தது”. 

உண்மை என்னன்னா புனைப்பேயரைப்பாத்த ஞாபகம் வந்ததே தவிர கவிதை எதுவும் வரலை.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்”னு கேக்க என்னைபத்தி சொன்னேன், நான் இருக்குமிடத்தையும். அவளோ மனையரசி, முன்பு வேலையில் இருந்ததையும் திருமணத்திற்கு பிறகு வீட்டோட தங்கியாச்சுன்னும், கணவர் பியிஎல்லில் இருப்பதாயும் தங்கியிருப்பது இந்திரா நகர்னும் சொன்னா. அதுக்குள்ள வாங்கிண்டு வந்த விஷயங்கள் தீர்ந்ததாலும் உக்கார சிலர் இடம் தேடுவதால் நாங்கள் எழுந்துக்கொள்வது நல்லதுன்னு எழுந்து வேளீயே வந்தோம். 

போரச்சே “என் கவிதைக்கு சாமர்த்தியம் இருந்தால் நம்மை மீண்டும் சந்திக்க வைக்கும்”னு சொல்லிட்டு கிளம்பினாள். நானும் தான். எங்கள் முதல் சந்திப்பிலேயே ஏதாவது விவகாரமா நடக்கும்னு நீங்க நினெச்சு அதை கதை போரபோக்கில் எடுத்து விடுவேன்னு நினெச்சிருந்தேள்னா அது உங்க பேராசை. சொல்ல மறந்துட்டேன் “ஐ ஏம் ஹாப்பிலி மெரீடாக்கும்”.

வீட்டுக்கு வந்தவன் சும்மான்னா இருக்கணும்? அதான் இல்லை. தனியா இருக்கிர கல்யாணமான ஆண்கள் இப்படி ஒண்ணு நடந்தால் என்ன செய்வாளோ அதைத்தான் நானும் செஞ்சேன். நெட்டில் “ஸ்ரீ”, “எழுத்தாணி”, “ஆனந்தவிகடன் சொல்வனம்” என்று தேட ஆரம்பிச்சேன். என்னை அறியாமல் இந்த பெண்ணிடம் என்னை கொஞ்சமா தொலைச்சிருக்கேனோ!

10 நிமிஷத்தில் ஸ்ரீயோட ஒரு ப்ளாக் ஆம்பட்டது. அதில் இவள் எழுதிய ஒரு நூறுகவிதையாவது இருக்கும். பல சிறுகதைகளும். எல்லாம் தேதிவாரியா 2013இல்லேந்து மாசம் ஒரு 15 அல்லது 20 கவிதைகள். சில ரெண்டே வரி, சில முழுப்பக்கமும். அழகான தமிழில். மழை பத்தி ஒண்ணு, சிலந்தி பத்தியும். எப்படி வாழ்க்கையை மழையில் நனைஞ்சு வர குதூகலத்தோட அனுபவிக்கமுடியும்னு முதலாவது, எப்படி திருமணம் என்கிர வேண்டாத ஒரு பந்தத்தில் சிலந்தி வலையில் சிக்கிண்ட பெண் கதறுவதுபோல ரெண்டாமது. ரெண்டுக்கும் அத்தனை கான்ட்ராஸ்ட், ஒரே மனுஷியா ரெண்டையும் எழுதினான்னு ஆச்சர்யம். இப்படி சந்தோஷமாய், விரக்தியா, ரெண்டுக்கும் இடைப்பட்டதாய், அலைமோதுகிர உணர்வுகளை தமிழில் கலந்து படிக்கரவா நெஞ்சில் தைக்கராமாதிரி பக்கம் பக்கமா. சரிதான் நிச்சயமாவே நமக்கு ஒரு கவிதாயினியின் நட்பு கிடெச்சதுன்னு சந்தோஷப்பட்டுண்டேன்

 பலதரப்பட்ட கவிதைகள். எல்லாத்துலேயும் இழையோடும் அதீத சோகம். தாங்கமுடியாத பிரிவும், பெண்களுக்கே வரும் விரக தாபங்களும் ஒருத்தரை வாட்டி வதைச்சுதுன்னா எப்படி இருக்கும்? அப்படி வாட்டமடைஞ்சவா எதையும் மறக்க முடியாம, மறைக்கவும் முடியாம அதை, அந்த உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால்தான் ஜன்மம் சாபல்யம் அடையும்னு கவிதை எழுத ஆரம்பிச்சா? எழுத எழுத இன்னும் மனசு கனத்துப்போய் அந்த பாரத்தை இறக்கிடலாம்னு முடியாமப்போக இன்னும் கவிதை எழுதினா? அதுதான் நான் மீட் பன்ணின ஸ்ரீயோன்னு தோணித்து. என்னை அறியாம 2 மணிநேரம் அவள் கவிதைகளில் திளைத்திருக்கேன்னு கதவை யாரோ தட்டரச்சேதான் தெரிஞ்சது. 

நீங்க உடனே ஸ்ரீதான் என் அட்ரெஸ் கண்டுபிடிச்சு என்னைப்பாக்க வந்துட்டா இப்போ கதை குஜாலாவா மாறப்போரதுன்னு நினைக்கவேண்டாம். அபார்ட்மென்ட்டில் செர்வீஸ் சார்ஜ் வாங்கிக்க வந்திருக்கான். சப்புன்னு ஆயிடுத்தோ! எனக்கும்தான்!

மறுநாள் ஆபீஸில் உக்காந்திருகச்சே இவள் மொபைல் நம்பர் கண்டுபிடிக்கணும்னு மனசில் வைராக்கியம் வந்துடுத்து. எனக்குத் தெரிஞ்ச நண்பன் ஒருத்தன் இந்திரா நகரில் இருக்கான் அவனிடம் இந்த பொறுப்பை தந்தேன். அவன் தமிழ் சங்கத்தில், தமிழ் இலக்கிய மன்றங்களிலெல்லாம் ஆக்டிவ். ரெண்டு நாள் கொடுன்னான். மத்தாநாளே “வாய்லா”ன்னு கத்திண்டெ என் காபினுக்குள் வந்தான். ஒரு நம்பரைத் தந்து, போனில் முகநூலில் ஒரு போடோவையும் காட்டினான். அவளேதான். “எப்படீடா”ன்னு நான் வியக்க, அதுக்கு அவன் “எங்கிட்டே சொல்லிட்டாயோன்னோ, செஞ்சுகாமிச்சாத்தான் நான்”னு சொல்லிட்டு “யு ஓவ் மி ஒண்” அப்படீனுட்டு போரான். படவா பிரதிஉபகாரமா என்ன கேப்பானோ? 

“ஒருநாள் உன் அப்பார்ட்மென்டை எனக்கு கொடுத்துடு, என் கெர்ல் ஃப்ரெண்டோட இருக்கணும்னு கேப்பான்”னு தெரியும். எமகாதகன்.

இப்போ நம்பர் இருக்கே! சாயங்காலம் 5 மணிக்கு ஜிம்மில் உக்காந்துண்டு அதை டயல் செஞ்சு காதில் வச்சுக்கரேன். “ஸ்ரீ ஹியர்”னு அதே குரல். “நான் சந்தோஷ் ஞாபகம் இருக்கா?” “இல்லாமலா. எப்படியிருக்கேள், என் நம்பர் எப்படி?” தயங்குகிராள். நான் நடந்ததை அப்படியே ஒப்புவிக்கரேன். அவள் ப்ளாக் படிச்சதிலேந்து நம்பரும் முகநூல் படம் வரைக்கும். அவளுக்கு என்னை மெச்சறதா இல்லை திட்டறதான்னு முடிவெடுக்கரத்துக்குள்ள அவள் கவிதைகளைபத்தி என் விமர்சனங்களை எடுத்து அடுக்க ஆரம்பிக்கரேன், அன்னைக்கு தடுமாறினாப்புலே இல்லாமல் கவிதையின் தலைப்பு, அப்புரம் அதில் என்னைக்கவர்ந்த வரிகள் அப்புரம் அது என்னை என்ன செய்தது, ஏன் எனக்குப்பிடிச்சது அல்லது பிடிக்கலைன்னு சொல்ல அவள் வியந்து போனாள். 

கொஞ்சநாழி கேட்டிண்டிருந்துட்டு சரி எனக்குப்போகணும், என் கணவர் வீட்டிற்கு வர நேரம் நெறுங்கிவிட்டது, நாம் மீண்டும் பேசுவோம், முடிந்தால் சந்திக்கலாம்”னு வைக்கிராள்.  நிச்சயமா என் நம்பரை சேவ் செய்துகொள்வாள். எந்த கவிதாயினிக்கும் தன் கவிதைகளை பூஜிக்கும் ஆண்மகனை பிடிச்சு வச்சுக்க பிடிக்கும். முடிந்தால் அரவணைச்சுக்க.

அடுத்தவாரம் வீக்கெண்டில் சென்னைக்கு போலாம்னு பிளான். பேரனைப்பாக்கணும். இன்னைக்கும் சனிக்கிழமை, நான் எப்பவும்போல ஊர் சுத்தக்கிளம்பியாச்சு. அதே ஃபோரம் மாலில். இந்தத்தடவை வேற எங்கேயாவது சாப்பிடலாம்னு கீழ்தளத்தில் இருக்கும் கபே காபிடே உள்ளே நுழையரேன், ஆச்சர்யம்னா ஆச்சர்யம் ஸ்ரீ அங்கே ஒரு ஆண்மகனுடன். 

அவளோத்த வயசு, கொஞ்சம் கூட இருக்கலாம். நாம இப்போ வந்திருக்கரதை காண்பிச்சுக்க வேண்டாம்னு எனக்கு என்னவேணும்னு சொல்லிட்டு நிக்கரேன். அப்போ என்னை கவனிச்சுட்ட அவள் மெல்ல முகத்தை அந்தப்பக்கம் திருப்புவதை நான் கவனிக்கலை. என் தட்டை எடுத்துண்டு திரும்பரச்சே அவள் இருக்கும் டேபிளைத் தாண்டிப் போகணும்.. அப்போ அவள் நிமிர்ந்து பாக்க, நான் அவளை நேரே பாத்துட்டதால் சிரிக்க, இவளும் சிரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட, அதை கவனுச்சுட்ட கூட இருந்த அன்பர் அவள்கிட்டே இவன் யார் என்று கேட்க இவள் எழூந்து எனக்கு குட்மார்னிங்க் சொல்லி என்னை கூப்பிட்டு அறிமுகப்படுத்த அவன் இவளது கணவன் என்று தெரிஞ்சண்டேன். அப்போ ஏதாவது சொல்லணும்னு தோணவே “சார் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, உங்கள் மனைவி மிக அழகா உணர்வு பூர்வமா தமிழில் கவிதை எழுதுரா, மிகப்பெரீய கவிதாயினியா வருவா என் வாழ்துக்கள்”னு சொல்லிட்டு போரேன்.

அங்கே அவர்கள் இருவரும் காரசாரமா பேசிக்கொள்வதையும் சட்டுன்னு சாப்டுட்டு எழுந்துபோவதையும் பாத்தேன்
ரெண்டுநாட்கள் கழிச்சு, திங்கட்கிழமை பகல் 11 இருக்கும் ஸ்ரீகிட்டேந்து போன். அச்சச்சோ. அன்னைக்கு பாத்துட்டு வந்ததையே மறந்துட்டோமே, இன்னைக்கு லன்ச் சாப்பிட வரேளானனு கூப்பிட்டால் போகமுடியாதே, மீட்டிங்க் இருக்கேன்னு மனசு அடிச்சுக்கரது.

அனால் ஸ்ரீயின் குரல் முதல் வார்த்தையிலேந்தே தழுதழுக்கிரது. “ஏன் அப்படிச் செஞ்சீர்கள்”னு ஆரம்பிக்கரா. அழராப்போலா பட்டது. நான் என்ன செஞ்சேன்? “என் ஆத்துக்காரருக்கு நான் கவிதை எழுதறது தெரியாது. எல்லாத்தையும் எங்கே காமின்னு பாத்து படிச்சு சண்டை வந்துடுத்துன்”னு அழரா. “ஏன் கவிதை அழகா இருந்ததே, அதுவும் உங்கள் காதலன்மேல், ஆண்கள்பால் இருக்கும் ஆசைகளை, நிராசைகளை, விட்டுப்போன மறந்துபோன அனுபவங்களை அழகா சொல்லியிருக்கிரீர்கள், அது அவருக்கு பிடிக்கலையா?” ஆமாம். இதெல்லாத்தையும் நிறுத்திடுன்னு சொல்லிட்டு அடிக்கவே கிளம்பிட்டர்”னா. 

“அதெல்லாம் இவரை நினெச்சு எழுதலை, நான் ஆசையா கல்யாணம் செஞ்சுக்கணும்னு இருந்தவனைப்பத்தி எழுதினது. இவரோட நடந்தது எனக்கு கட்டாயக் கல்யாணம். இந்தக் கவிதைகள்தான் எனக்கு வடிகால், இனிமேல் என்னை எங்கேயாவது பாத்தா பாக்காதமாதிரி போயிடுங்கோ, நீங்க கூப்பிடாதீங்கோ. நானே அப்புரம் பெசரேன்”னு வச்சுட்டாள்.

என் மனசு புரண்டே போனது.

No comments:

Post a Comment